Iratta - மலையாளம் (Spoiler Alert)
Mar 7, 2023
யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி - Iratta
Iratta - மலையாளம் (Spoiler Alert)
Feb 15, 2023
'நான் இருக்கேன் என்னை நம்புங்க’ எனும் அஸ்திரங்கள்
வங்கியில் ஒரு வேலையாகக் காத்திருந்தேன். எனக்கும் அடுத்த இருக்கையில் ஓர் இளம் தம்பதி. நடப்பு வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் நகைக்கடன் பெறுவது தொடர்பாக அந்த தனியார் வங்கி ஊழியருடன் உரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
நகைக்கடனுக்கு வட்டி எவ்வளவு என மனைவி கேட்டபோது 9.25% எனச்
சொல்கிறார் ஊழியர். உடனே IOBயில் எவ்வளவு எனக் கேட்க,
அந்த ஊழியர், வங்கி அதிகாரியை அழைக்கிறார்.
வந்தவர் ”IOBல சரியாத் தெரியல, அநேகமா 8.9%ஆக இருக்கலாம். இப்ப ரெப்போ ஏத்தினதால அங்கே கூடியிருக்கும், எங்க பேங்க்ல மாறல” என்கிறார். கூடுதலாக “அது கவர்மெண்ட் பேங்க், சர்வீஸ் எப்படியிருக்கும்னு
உங்களுக்கே தெரியும்!” என்கிறார்.
”அங்கேயும் நெட்பேங்கிங் ப்ளஸ் எல்லா சர்வீஸும் இருக்கே” என அந்தப் பெண் கேட்க, வங்கி அதிகாரி ஒருமாதிரியாக
சமாளிக்கிறார். மீண்டும் அந்தப் பணியாளருடன் அவர்கள் தொடர்கின்றனர்.
ஊழியர் 'வெல்த் அக்கவுண்ட்' என்று
விளக்கிக் கொண்டிருக்கிறார். கணவர் ஒற்றைக்காலில் நின்றபடி இங்கு கவனம்
செலுத்தாமலேயே இருக்க, மனைவியுடன் மட்டுமே உரையாடல்
மேற்கொண்டிருந்தார்.
சில நிமிடங்களுக்குள் என்ன வேலை பார்க்கிறீங்க? எங்கே,
WFHல் இருக்கும் சாதக, பாதகம் குறித்தெல்லாம்
உரையாடலை நகர்த்தி, அந்தப் பெண்ணை அடிக்கடி சிரிக்க வைத்து,
இடையிடையே 'வெல்த் அக்கவுண்ட்' குறித்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்.
ஒருகட்டத்திற்குப் பிறகு ஏதோவொரு சமரசத்திற்கு அவர்கள்
வந்தததுபோல் தோன்றியது. கடைசியாக அவர் “நான் இருக்கேன் மேடம்....
நான் எல்லாம் பார்த்துக்குறேன்... என்னை நம்புங்க... ஒரு கவலையும் வேண்டாம்!”
எனும் அஸ்திரத்தைப் பயன்படுத்தியபோதுதான், அந்தப்
பணியாளரை உற்றுப்பார்த்தேன். பார்த்த கணத்தில் என்னையுமறியாமல் சிரிப்பு
கொப்பளித்துக் கொண்டு வந்தது.
பொதுவிடத்தில், நமக்குத்
தொடர்பில்லாதவற்றில் அப்படியான சிரிப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்தான்.
ஆனாலும் அந்த ஊழியர் பயன்படுத்திய அந்த அஸ்திரம் செய்த பாவம் அது. என்னுடைய
சிரிப்பைக் கவனித்துவிட்ட அவர் என்னை நோக்கி புருவத்தை உயர்த்தியபடி ”சார்” என்றார்.
“ஒண்ணுமில்ல!” என்றேன்
“இல்ல சார் பரவாயில்ல சொல்லுங்க!”
“நீங்க தல ஃபேனா, தளபதி ஃபேனா!?”
“ஏன் சார்... திடீர்னு கேக்குறீங்க... தளபதி ஃபேன்”
“அப்படியா.... வாரிசு பார்த்திருப்பீங்க.... எதுக்கும் நேரம்
கிடைக்கும்போது துணிவு ஒருமுறை பார்த்துடுங்க!”
அவர் முகத்தில் குழப்ப ரேகை ஓட ஆரம்பித்தது.
’நான் இருக்கேன்... என்னை நம்புங்க!' எனக் காலம்
காலமாய் வங்கி, இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் வாக்குறுதி
கொடுத்தவர்களெல்லாம் சடசடவென நினைவுக்கும் வந்து போனார்கள்.
Jan 22, 2023
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்
Mukundan Unni Associates - மலையாளம்
Jan 9, 2023
உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்
ஒரு புத்தகம் இப்படியும் செய்யுமா என்ற பிரமிப்பின் உணர்வால் உந்தப்பட்டு இதனை எழுதுகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் எழுத்துடன் பயணிப்பதால், அதனால் பயன் பெற்றதால், பண்பட்டு வருவதால், புத்தகம் கிடைத்தபோதே "திரையெனும் திணை" மிகுந்த ஆவலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வாசிப்பின் ஊடேயும் வாசிப்பின் முடிவிலும் இப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எனவே இதை அனுபவப் பகிர்வு என்பதையும் தாண்டி "நன்றி” செலுத்தும் முகமாக எடுத்துக் கொள்ளவும்.
உங்கள் புத்தகம் என்ற உற்சாகத்துடன் வாசிக்க துவங்கினேன். சில பக்கங்கள் கடந்த நிலையில், அலையடிக்கும் கடல் போல மனம் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிட்டது . கிளம்பிய எண்ணங்களை எங்காவது கொட்ட வேண்டும் எனத்தோன்றியது. எழுதத் துவங்கினால், பல பக்கங்கள் நீளும்.
நினைவு அடுக்குகளில் மறைந்தவை, மறைத்தவை, உறைந்தவை என எல்லாவற்றையும் என் முன்னே இழுத்து விட்டது இந்தக் கட்டுரைகள்.
மிகவும் அசௌகரியமாக உள்ளது. புதைக்கப்பட்ட நினைவுகள் மீண்டால் வரக்கூடிய திணறலை என்ன செய்வது எனத் தெரியாமல் உங்களிடம் இறக்கி வைக்கிறேன். என் வார்த்தைகள் பல பக்கங்கள் நீளலாம். உங்கள் நேரத்தை விரயம் செய்கிறேனோ என்ற எண்ணம் என்னை தடுக்கவும் செய்கிறது. அதைப் புறந்தள்ளி, இளைப்பாற இடம் தேடி வேறு வழியின்றி தொடர்கிறேன்
’வேட்கையோடு விளையாடு’ வாசிப்பின் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்றால், ’திரையெனும் திணை’ - உணர்தலின் அடுத்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது. வேட்கையோடு விளையாடு சுயநேசிப்பை சொல்லிக் கொடுத்தது. அதற்குண்டான வழியில் பயணிக்கும்போது, சுய நேசிப்பிற்கு சுய மன்னிப்பு தேவை என்று நான் புரிந்து வைத்திருந்தேன். இதனைப் புரட்டி போட்டுள்ளது ’திரையெனும் திணை’.
பதிமூன்று ஆண்டுகளாக உள்ளே வதைத்துக் கொண்டிருந்த ஒரு குற்ற உணர்ச்சி - என்னில் சூழ் கொண்ட ஒரு ஜீவனை கருவிலேயே அழித்தது. அந்த நினைவு வரும்போதெல்லாம் பிறக்காத அந்த குழந்தைக்காக அழாமல் இருக்க முடியாது. கணவரும் நானும் இணைத்து எடுத்த முடிவெனினும், அவரது காரணம் வேறு, எனது காரணம் வேறு. இருப்பினும் நான் மறுத்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருப்பார் என்ற குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது. ’வினாக்களற்ற விடைகள்’ வாசிக்கும்போது நினைவூட்டப்பட்ட அந்தக் குற்ற உணர்ச்சி மீண்டும் அழச்செய்தது. ஆனால் இதுவே அந்தச் சம்பவத்திற்காக, நான் சிந்தும் கடைசிக் கண்ணீராய் இருக்கும் என்பதை கட்டுரையின் முடிவில் உணர்ந்தேன்.
’நியாயமான காரணங்களால் தன் கனவில் உறுதியாக நிற்கும் ஒரு பெண் தன் கருவை கலைக்க விரும்பினால் அது அவரின் உரிமை’ - இந்தத் தவறுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று நான் என்றோ என்னுள்ளே பதிய வைத்திருந்ததை, நடந்த சம்பவத்தில தவறு எதுவுமில்லை என்று உணர வைத்தது மேற்குறிப்பிட்ட வரிகள். எப்போதாவது கீறி ரணப்படுத்தும் அந்த கூர்நினைவினை வேருடன் பிடுங்கி தூர வீசி விட்டேன் .
இத்தனை ஆண்டுகளாக என்னை நானே மன்னிக்க முடியாத ஒரு நிகழ்வு - குற்றமே இல்லை - என்பதை உணர்ந்த அந்த நொடியினை எப்படி எழுத்தில் சொல்வதென்று தெரியவில்லை.
அதே கட்டுரையில், ’அரை நூற்றாண்டுக்கு முன்பாக இயற்றப்பட்ட சட்டத்தை அப்படியே வைத்து கொண்டு மௌனம் காத்திருக்கிறோம்’ - சட்டக்கல்லாரி பாடத்திலும் சட்டசபையிலும் வைக்க வேண்டிய ‘Subject’.
ஒரு கட்டுரை மட்டுமில்லை, பல கட்டுரைகள் அதனதன் போக்கில், எனது புரிதலின் அடிப்படையில் ஒவ்வொரு வகையில் என்னைச் சுத்திகரித்துள்ளன.
’குடும்பம் விரும்புவதையே அந்த வீட்டுக்கு வந்த மருமகளும் விரும்ப வேண்டும் என்பதை ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக உணர்த்தி வெகு காலம் ஆகிவிட்டது’ - என் இருபதுகளும் இந்த வரியில்தான் ஆரம்பித்தது. அப்போது ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு முகத்தினை வைத்துக்கொண்டதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றது. ஒருகட்டத்தில் நிஜ முகமே மறந்தும் போனது. காலமும், சூழலும், கிடைத்த வாய்ப்பும், எடுத்த முயற்சிகளும் பலவற்றை மாற்றியது என்னளவில் வரமே.
நினைவு வரத்துவங்கிய பால்ய காலத்தில் தாத்தா பாட்டி வீட்டில் சில ஆண்டுகள் வளர்ந்தேன். என் தாத்தாவின் குரலைவிட பாட்டியின் குரலே எப்போதும் சத்தம் அதிகமாயிருக்கும். பாட்டி வைத்ததுதான் சட்டம். அந்தப் பாட்டியின் மகனான என் அப்பா - நல்ல 'அப்பா' மட்டும்தான். அப்பா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் அம்மாவுக்கு தந்த தழும்புகளை நினைவுபடுத்தினால், உள்ளே கசியும் ரத்தத்தின் வாசம் இப்போதும் நாசியை நெருடும்.
எப்போதும் தன் அம்மா, அப்பாவிடம் கையில் கிடைத்ததில் அடி வாங்கி அலறுவதை பார்த்து வளர்ந்த என் கணவரிடம் அதன் சாயல் எப்போதும் வந்ததில்லை.
பாட்டி, அம்மா, மாமியார், நான் இன்னும் நெருக்கத்தில் உள்ள பல 'மருமகள்'களை நினைவுக்குக் கொண்டுவந்து அலசுகிறேன். என் கதை இப்போது நன்றாகத்தானே போய்க்கொண்டுள்ளது, எதற்கு இந்த வீண் ஆராய்ச்சி எனத் தோன்றலாம் .
என் மகனும் சில வருடங்களில் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை துணையாய் மாறுவான். ஒரு அம்மாவாக ஒரு பெண்ணாக ‘சக மனுஷியின் உரிமையை’ இப்போதிருந்தே அவனுள் பதிய வைக்க வேண்டும். ’The Great Indian Kitchen’ பார்க்கும்போது தோன்றாத இந்த எண்ணத்தை, ’அவர்களுக்கு பெயர்கள் தேவையா?’ ஆழமாக விதைத்துள்ளது.
ஆண் குழந்தைக்கு ஒரு அம்மா எப்படி இதையெல்லாம் புரிய வைக்க முடியும் என்று எனக்கிருந்த பெரும் சவாலிற்கு கண்டிப்பாக இப்புத்தகம் துணை நிற்கும் .
திரைப்படங்கள் 'பாடம்' என்றால், அந்த திரைப்படத்தின் மைய கருத்தை நுணுக்கமாக மனதிற்கு கடத்தும் உங்கள் கட்டுரைகளே எனக்கு ’ஆசான்’.
’உறவுகள் இணைந்திருக்க ஆயிரம் நேச இழைகளை நெய்தாலும், விலகி இருக்க ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆயிரமாயிரம் காரணங்கள், நிலைப்பாடுகள் உண்டு’ - இந்த வரிகளைக் கட்டுரையிலிருந்து தனித்து எடுத்து சிந்திக்கிறேன். சங்கடமும் சச்சரவும் உள்ள இடங்களில் பொருத்திப் பார்க்கிறேன். பக்கமும் தூரமுமாய், ஒட்டியும் ஒட்டாமலுமாய் உள்ள உறவுகளின் நிலையினைப் புரிய வைத்த வரிகள். எதிர் தரப்பின் நியாயங்களும், அவர்தம் சூழல்களும் இப்போது விளங்குகிறது. மனதால் விலகி இருந்தாலும் அந்த உறவுகளின் மேல் புதிதாய் பிரியம் மலர்கிறது.
முப்பதுகளின் பிற்பகுதியில் கணவரை இழந்த அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க நினைத்த ஒரு மகளின் முகம் மனதை நிறைத்து விழிகளில் நீர் திரையிட வைத்தது - துணை நலம் சேறல்.
வெளிநாட்டிலிருந்து அழைத்த குடும்ப உறவு, சாணம் கொண்டு வாசல் மெழுகியது, பலகாரம், அன்றைய உணவுப்பட்டியல் என சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கேட்டு தெரிந்து கொண்டார். எப்போது பேசினாலும் அவர் அப்படித்தான். அவரது விசாரணை அவ்வப்போது சலிப்பளிக்கும். அந்தச் சமயம் என் மனநிலையை பொறுத்து அந்த விசாரணைகளை அக்கறை அல்லது அதிகாரம் என்று எதோ ஒரு பட்டியலில் சேர்த்து விடுவேன். ஆனால் அவருடன் பேசி முடித்த சில மணி நேரங்களில் இந்தக் கட்டுரையை வாசிக்க வைத்ததுதான் காலத்தின் கணக்கோ என்னவோ?
’குடும்பத்தை விட்டு விட்டு தனித்து போவோருக்கு தம்மையும் அறியாமல் ஒரு பதட்டம் இதயத் துடிப்பினூடே கலந்திருக்கும். அதை அவ்வளவு எளிதில் தணித்து விட முடியாது. அதை எந்தக் கருவி கொண்டும் அளக்கவும் முடியாது’ - இந்த வரிகளை வாசித்து முடிக்கவும், அத்தனை விசாரணைகளுக்கும் பின்னாலிருந்தது ’எது’ என்று தெளிந்தது. மனதின் ஒரு ஓரத்தில் இருந்த எண்ணக் கசடை துவைத்து காயப்போட்டது ’Pathemari’ குறித்து பேசும் ’துவைக்காத சட்டை’.
இதே கட்டுரையில் ’அப்பா எனும் வாசனையை...’ இந்த வார்த்தைகளை விட்டு நகர முடியவில்லை. ஏனெனில் என் அலமாரியில் யாருக்கும் தெரியாமல் அப்பாவின் வாசத்தை ஒளித்து வைத்துள்ளேன்.
பிரிவின் வாதைக்கு விலையேது? பிரிவை நினைத்து எத்தனை அழுதாலும் , எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வற்றாதுபோல. பிரிந்தாலும் அவர்கள் மேல் கொண்ட பிரியம் ஊறி கொண்டே இருப்பதாலோ என்னவோ.
’PAD MAN’ திரைப்படத்தைச் சொல்லும் கட்டுரையில், ஒரு தலைமையாசிரியரின் அணுகுமுறையை குறிப்பிடும் போது - ’அந்த மொழி சரி, தவறு என்று பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது’ - இந்த ஒரு வரி அந்த தலைமை ஆசிரியரின் மேல் எந்த நிழலும் விழாமல் நிதானிக்க வைக்கிறது. ஒரு இடம் நோக்கி பயணிக்கையில் வழியில் காணும் ஒரு மலையின் அழகோ, ஆற்றின் போக்கோ சில வினாடிகள் நின்று கவனித்து ஒரு உற்சாகத்தை கொடுத்து, சரி கிளம்பு என்று வழியனுப்பும். சேர வேண்டிய இடம் சேர்ந்த பின்னும்கூட இடையில் கிடைத்த அனுபவம் இனித்துக்கொண்டே இருக்கும். அதுபோலவே இந்த கட்டுரை கூட்டிச் செல்லும் இடம் வேறெனினும் இந்த வரியும் நினைவில் ஊறிக்கொண்டே இருக்கும். பார்த்த மாத்திரத்தில் யாரையும் எடை போடும் புத்தியை நிச்சயம் நிதானிக்க வைக்கும் .
நீர்ஜா திரைப்படத்தின் கட்டுரை 2018-ல் கொடுத்த தாக்கமும் அதை தொடர்ந்த உரையாடல்களும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது இருந்த புரிதலின் அடிப்படையில் - தனவேல் முருகனின் பெற்றோரையும், நீர்ஜாவின் தாயையும் , என் அம்மாவையும் ஒரே புள்ளியில் நிறுத்தியது அந்த கட்டுரை. இப்போது வாசிக்கையில் எந்த வரி அந்த வேலையை செய்ததோ, அது என்னை பார்த்து கண் சிமிட்டியது. ’அந்த கட்டுரையை வாசித்துணர்ந்த அன்றைய தினத்தில் அம்மாவிற்கு மீண்டும் ஒருமுறை நான் மகளாக பிறந்தேன்’ என்றால் அது மிகையாகாது. அன்றிலிருந்து எங்களுக்குள் ‘மாறாததும் மாற்ற முடியாததும்’ என்றிருந்த எல்லாமே திருத்தி எழுதப்பட்டு வருகிறது .
ஓட்டமுறி வெளிச்சம் திரைப்படம் - கொடூரத்தின் வலியை உயிரில் ஊடுருவ செய்கிறது உங்கள் வார்த்தைகளின் வலிமை - மிகுந்த சிரமத்துடன் அயர்ச்சியுடனும் வாசித்து முடித்தேன். அந்த படத்தை பார்க்கவே முடியாது என்ற முடிவுக்கு வரச் செய்துள்ளது கட்டுரை .
இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் சிலிர்த்ததை , சிலாகித்ததை, கரைத்ததை, கரைந்ததை எனச் சொல்லிக் கொண்டே போகலாம் .
’முனைகளிடையே நிகழும் அதிர்வு’, ’காடுகொல்லி’ - எங்கிருந்துதான் வார்த்தைகள் வசப்படுகின்றதோ?!
கடந்த 15 நாட்களாக இப்புத்தகத்துடன் பயணிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நான் உணர்த்ததில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல முற்பட்டேன். இத்தனை நீண்ட பதிவாக அமையும் என எதிர்பார்க்கவில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கட்டுரைகளை என்னால் 100% முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. மீள் வாசிப்பு செய்து, திரைப்படத்தை பார்த்து, மீண்டும் வாசிக்கும்போது வசப்படும்.
எல்லோரிடமும் உறங்கி கொண்டிருக்கும் ரகசியங்கள் ஏராளம்.
’மூன்றாம் நபருக்கு தெரிந்த ரகசியம் வெளியில் வராமல் போவதில்லை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அந்தப் பயத்திலேயே இரண்டாம் நபருக்குகூட தெரியாமல் புதைத்து கொண்டவை நிறையவே .
ஆழ்மன ரகசியங்களை கண்ணீரில் கரைந்து கொண்டே காகிதத்தில் எழுதி நெருப்பிலிடும் ஒரு பயிற்சி முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதன் பிறகு மனம் மிகவும் இலேசாகி விடும் என்பார்கள்.
அப்படி ஒரு ’மகத்தான’ அனுபவமாகவே இப்புத்தகம் அமைந்தது.
மனதின் பாரம் குறைந்துள்ளது .
’திரையெனும் திணை’ என்று எப்படி உங்கள் எண்ணத்தில் உதித்ததோ தெரியவில்லை - இந்த புத்தகத்திலேயே சில நாட்கள் வாழ்ந்திருந்தேன் என்றுதான் குறிப்பிட வேண்டும் .
#திரையெனும்திணை - உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்.
‘கண்ணாடியில் முகம் பார்க்கும் போது சற்று உற்றுப் பார்த்தால், அவர்கள் அங்கு பிரதிபலிக்கலாம்’ என்று முடியும் ஒரு கட்டுரை .
உங்கள் எழுத்தைவிட அகம் காட்டும் கண்ணாடி வேறில்லை.
*
திரையெனும் திணை பெற்றிருக்கும் மிகக் கனமானதொரு அங்கீகாரம்!
Jul 15, 2022
அவர்களுக்கான சொற்கள் கிடைக்கும்போது
நிகழ்வு 1:
Jul 9, 2022
அன்பின் நிமித்தமாய்
அடுத்தடுத்த நிகழ்வுகளில் ஒரு பள்ளி மாணவி மற்றும் ஒரு கல்லூரி மாணவி ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை 2018 மார்ச் மாதம் ஃபேஸ்புக்கில் சிறிய பகிர்வுகளாக எழுதியிருந்தேன். அந்தச் சூழலில்தான் 'புதிய தலைமுறை கல்வி’ வார இதழ் ஆசிரியர் அண்ணன் பெ. கருணாகரன் அழைத்தார்.
Jul 28, 2021
குழந்தைகளுக்கு ரசிகர்கள் தேவையில்லை
குழந்தையின் திறமையும் பெற்றவர்களின் ஆசையும் இணையும் இடம் மிக முக்கியமானது. எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படலாம். ஆனால் யார் வாயிலாக ஆசையை நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியம்.
தமிழக செய்தித் தொலைக்காட்சியின் செய்தி வடிவத்தைப் பகடி செய்து சமீபத்தில் குழந்தையொன்று நடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. செய்தி வாசிப்பாளர், செய்தி ஆசிரியர், நிருபர், களத்தில் இருக்கும் விவசாயி என அனைத்துப் பாத்திரங்களும் கச்சிதம். வசனங்களைப் பயன்படுத்திய விதமும் பெரும் வியப்பளித்தது. யார் இந்தக் குழந்தைகள் எனத் தேடியபோதுதான் மிகப் பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆண், பெண் என அனைத்துப் பாத்திரங்களிலும் நடித்திருந்தது கோவையைச் சார்ந்த ஏழு வயது குழந்தை
தொடர்ந்து தேடும்போது இணையத்தில் மேலும்
சில காணொலிகள் கிடைத்தன. சில நிமிடங்கள் பார்த்தேன், அந்த நிகழ்ச்சிபோல மற்றவை ஒட்டவில்லை. அதே சமயம் லேசாக ஏதோ ஒன்று மனதில்
உறுத்தத் தொடங்கியது. முதலில் பார்த்த செய்தி நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த ‘சரண்யா - தன்ராஜ்’ பாத்திரங்கள் மனதில்
பதிந்துவிட்டன. ஏதோ ஒரு ஃபேஸ்புக் பதிவில் இட்ட பின்னூட்டத்தில்கூட அந்தப்
பாத்திரங்களை வைத்துப் பகடியாக நானும் பதிவிட்ட நினைவிருக்கின்றது. அடுத்த சில
நாட்களில் இணையத்தில் அந்தக் குழந்தையிடம் எடுக்கப்பட்ட பேட்டிகள் அடுத்தடுத்து
வந்தன. சரி என்னதான் நடக்கிறது என ஒரு பேட்டியை எட்டிப் பார்த்தேன்.
பேட்டி எடுப்பவர் ”மீடியால இருக்கக்கூடிய
எங்கள, நியூஸ் ரீடர்ஸ, ரிப்போர்டர்ஸ
எல்லாம் பயங்கரமா கலாய்ச்சிருக்கீங்க, என்ன வெங்காயத்துக்கு
அங்க இருக்கீங்கனெல்லாம் கேக்குறீங்க... எப்படியிருந்தது!?” எனக்
கேட்கிறார்.
அதற்கு ரித்விக், “எங்கப்பாதான் அதெல்லாம்
சொல்லிக் கொடுத்தாரு... நா என்ன பண்றது? அவரு சொல்றதத்தான்
நா கேக்கணும்” என்று அளித்த பதில் சுருக்கென்று தைத்தது.
“நா என்ன பண்றது? அவரு சொல்றதத்தான் நா
கேக்கணும்” என்னும் வரியை எத்தனை பேரால் எளிதாகக் கடந்து போக
முடிந்தது என்று தெரியவில்லை. ஒரு ஃப்ளோல குழந்தை சொல்லிடுச்சு, அதை பெருசா எடுத்துக்கலாமா எனவும் தோன்றலாம். உண்மையில் என்னால் எளிதாக
எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக அவருடைய அப்பா, அம்மா
மிரட்டி, வற்புறுத்தி திணிக்கிறார்கள் என்றும் நான்
கருதவில்லை. குழந்தையிடம் இயல்பாக ஒரு திறமை வெளிப்படும்போது, பெற்றவர்கள் அதை வெளிப்படுத்த ஆசைப்படுவதில் என்ன தப்பு, அதை ஊக்குவிப்பதுதானே பெற்றோரின் கடமை என்று பலருக்கும் தோன்றலாம்.
திறமையும் ஆசையும் இணையும் இடம்
குழந்தையின் திறமையும் பெற்றவர்களின் ஆசையும் இணையும் இடம் மிக
முக்கியமானது. எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படலாம். ஆனால் யார் வாயிலாக ஆசையை
நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியம். தான் என்ன செய்கிறோம், அடுத்து
இது எதை நோக்கிப் போகும், இதன் விளைவுகள் என்ன
என்பதையெல்லாம் உணரத் தெரியாத குழந்தையின் வாயிலாக, குழந்தை
அறிந்தோ அறியாமலோ ஆர்வம் காட்டுகிறது என்பதைக் காரணம் காட்டி, தம் ஆசையை நிறைவேற்றுவதென்பதைப் பேராசையாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
உண்மையில் அந்த காணொலி மிகப் பெரும்பாலானோருக்குப்
பிடித்திருக்கிறது. குழந்தைகள் இதுபோல் நடிக்கும், பேசும்
நிகழ்ச்சிகள் யாருக்குத்தான் பிடிப்பதில்லை? அதை ரசிப்பதும்
பகிர்வதும் இயல்பாக நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் கண்ணில் படும்
எல்லாவற்றையும் ரசிப்பேன், அதிலென்ன தவறு என்பது சரியானதா!?
நம்மிடம் இருப்பதெல்லாம் உணர்ச்சிகளும் நிலைப்பாடுகளும்தான். இது
என்னை ஆச்சரியப்படுத்துகிறது, மகிழ்வூட்டுகிறது எனும்
உணர்ச்சிகள்; பிடிச்சிருக்கு, பிடிக்கல
எனும் நிலைப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பார்க்கிறோமே. இது சரியா, தவறா, தேவையா, இல்லையா எனும்
அடிப்படையில் நோக்க நாம் அவ்வளவாகப் பழகியிருக்கவில்லை.
பொதுவாகவே குழந்தைகள் பேசுவது எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்யும்.
ஈர்க்கும் அனைத்துமே சரியானவைதானா? குழந்தைகள் என்ன
பேசுகிறார்கள்? அவர்களாகப் பேசுகிறார்களா அல்லது அவர்கள் பேச
வைக்கப்படுகிறார்களா? என்பது முக்கியமானது. பசங்க-2 படத்தில் “பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்ல,
கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்க” என நடிகர்
சூர்யா சொல்வது எத்தனை கனமான உண்மை.
ரித்விக் எனும் குழந்தை மிக அழகாகப் பேசுகிறது, நடிக்கிறது. மறுக்கவில்லை. ஆனால் அந்தக் குழந்தை தானாகப் பேசவில்லை,
நடிக்கவில்லை. பேச வைக்கப்படுகிறது, நடிக்க
வைக்கப்படுகிறது. இதைப் படிக்கும்போது “இதென்ன லாஜிக் இங்கு
திரையில் எல்லோரும்தான் பேச வைக்கப்படுகிறார்கள், நடிக்க
வைக்கப்படுகிறார்கள், அதுபோல்தான் இந்தக் குழந்தையும் இது
என்ன புதுசா? இதை ஏன் இவ்வளவு தூரம் பேச வேண்டும்?” எனும் அலுப்போ கோபமோ வரலாம்.
முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டியது குழந்தையின் வயது. இப்ப
எல்லாக் குழந்தைகளும்தான் டிவி பார்த்துட்டு எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள்
எனும் வாதம் முன் வைக்கப்படலாம். அது குழந்தைகளின் பிழை அல்ல. ஒட்டுமொத்தமாக நம்
படைப்புகளில், ஒளிபரப்புகளில், வகைப்படுத்தப்படாத
அமைப்பிலும் அதைப் பார்க்கும் நம்மிடமும் நெறி இல்லாததன் பிழை. அந்தப் பிழைகளின்
விளைவை உதாரணமாகக் கொண்டு மேலும் ஒரு பிழையை சொல்லிக் கொடுத்து சொல்லிக்
கொடுத்துச் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?
குழந்தைகள் உலக சாதனைகள் புரிவதில்லையா? இதோ
ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உலகின் அனைத்து நாடுகளின் பெயர்களைச் சொல்லி உலக சாதனை
புரிந்திருக்கிறதே! இரண்டரை வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறோமே,
வீட்டுக்கு வரும் உறவினர்கள் முன்னிலையில் ஆடச் சொல்கிறோமே, பள்ளியில் மாறுவேடப் போட்டிக்கு அனுப்புகின்றோமே எனும் கேள்விகள் நிறைய
உண்டு.
ஒன்றரை வயதுக் குழந்தை எல்லா நாடுகளின் பெயர்களையும் அடையாளம்
காட்டுகிறது எனும் பெருமையின் பின்னால் தினசரி அதற்கு சுமார் 45 நிமிடங்கள் தொடர் பயிற்சியளிக்கப்பட்டது குறித்து என்றேனும் கவலைப்படத்
தெரியுமா நமக்கு? சரி அந்தச் சாதனை அதன் வாழ்நாளில் என்னென்ன
விளைவுகளை ஏற்படுத்தும்? அப்படி ஏற்படுத்தியது குறித்த
உதாரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?
குழந்தைக்கு சாய்ஸ் இருக்கிறதா?
இரண்டரை வயது பள்ளிப் படிப்பு என்பது நம்மைப் போன்ற வளரும் நாடுகள்
ஏற்படுத்திக் கொண்ட சாபம். எல்லோரும் உடன்பட்டிருக்கும் கொடுஞ்சாபம். இங்கு
வாழ்க்கை என்பது பந்தயம் என்றே எல்லா மட்டங்களிலும் புகுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் மாறுவேடப்போட்டி என்பது பெரும்பாலும் குழந்தையின் சாய்ஸ்
கிடையாது. கல்வி நிறுவனங்களின் தேவை, பெற்றோர்களின்
தீர்மானம். பல நாட்களாகப் பயிற்சியில் பிழிந்தெடுக்கப்பட்டு, ஆண்டு விழாவில் யாரோ ஒரு சிறப்பு விருந்தினரை வரவேற்க, கூட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் சில நொடிகள் மட்டும் அணிய மிகச் சிரமமாக
இருக்கும் ஆடையில் நடனமாடுகையில், நேரம் கருதி உடனடியாக
மேடையை விட்டு இறக்கப்பட்டு, ஓரமாக விடப்பட்ட குழந்தைகளின்
மனதுடன் யாரும் எப்போதாவது உரையாடியதுண்டா? அதற்கு எங்கே
நமக்கு நேரம்? அடுத்ததை ரசிக்கக் காத்திருந்திருப்போம்.
அழும் குழந்தையை அமைதிப்படுத்த ஒரு சாக்லெட் அல்லது அதட்டல் போதும் நமக்கு.
வெளிப்புறத்தில் விளையாட்டுக்கு மாறும் குழந்தைகளின் ஆழ்மனதில் பெய்யும் பீலிகள்
சால மிகுத்து ஏற்படும் முறிவுகள் எத்தனை கொடியது என்று அறிந்திருக்கிறோமா? அந்த முறிவுகளை அவர்களும் நாமும் உணரும்போது வேறொரு உலகத்தில் இருப்போம்.
வலி மட்டும் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
அப்ப, குழந்தை நட்சத்திரங்களாக
திரைப்படங்களில் நடிப்பதில்லையா? கமல், சிம்பு, ஷாலினி, ஷாம்லி
ஆகியோர் அப்படி வந்தவர்கள்தானே?
ஒரு குழந்தைக்கு நடிப்பு வருகின்றதே எனும் காரணத்தால் மட்டுமே
திரைப்படத்தில் தோன்றிவிடுவதில்லை. அந்தத் திரைப்படத்தில் குழந்தையொன்று தேவை
என்பதன் பொருட்டே பயன்படுத்தப்பட்டனர். அப்படிப் பயன்படுத்தப்பட்டவர்களில் மிகப்
பெரும்பாலானோர் ஓரிரு படங்களோடு தம் வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். தொடர்ந்து
நடித்தவர்களில் ஷாலினி, ஷாம்லி ஆகியோரும் ஒரு கட்டத்திற்குப்
பிறகு தொடரவில்லை. குழந்தைகளாக வந்தபோது அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்ற புரிதல்
இருந்திருக்காது. புரிதல் வந்தபிறகு இருவரும் மிகச் சில படங்களோடு
நிறுத்திக்கொண்டனர். அப்படி நிறுத்தியதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது காரணமாக
இருக்க முடியாது.
தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் கமல், சிம்பு
ஆகியோர் தம் குழந்தைப் பருவத்தில் தாமாக நடித்தனரா அல்லது நடிக்க வைக்கப்பட்டனரா?
அப்படி நடித்ததன் அல்லது நடிக்க வைக்கப்பட்டதன் பொருட்டு அவர்கள்
பெற்றதும் இழந்ததும் என்ன என்பது எங்கும் பேசப்பட்டிருக்கிறதா? பெற்றவைகள்கூட ஒருவேளை பேசப்பட்டிருக்கலாம். இழந்தவை குறித்து அவரவர் உள்
மனம் தவிர வேறு யாரும் கவலை கொள்ளும் நிலையில் இங்கில்லை. இப்படியான திறமைகளை
வெளிப்படுத்தி வெளிச்சத்திற்கு வந்த சிலரின் பட்டியல் உதாரணமாக வைத்திருப்போரிடம்
கேட்க வேண்டிய எளிய கேள்வி இருக்கின்றது, கமல், சிம்பு, ஷாலினி, ஷாம்லி
ஆகியோர் காலத்தில் அவர்களைப் போலவே நடித்த மற்ற குழந்தைகள் என்னவானார்கள், ஏன் தொடரவில்லை அல்லது வெளிச்சத்திற்கு வரவில்லை என்பது உள்ளிட்ட தரவுகள்
ஏதேனும் இருக்கிறதா? அப்படி வந்து போன குழந்தைகள் அடைந்ததும்
இழந்ததும் யாவை எனும் பட்டியலும் இருக்கிறதா?
அந்தந்த வயதில் கட்டாயம் ஒரு குழந்தை இழக்கக் கூடாது அல்லது அந்தக்
குழந்தைக்கு மறுக்கப்படக் கூடாது என்கின்ற பட்டியல் நம்மிடம் உண்டா? நியாயமாக அந்தந்த வயதில் கிடைக்க வேண்டிய ஒன்றை இழந்ததால், கிடைக்க வேண்டாத ஒன்றைப் பெற்றதால் அந்தக் குழந்தையின் ஆழ்மனதில்
நிகழ்ந்தவை என்ன, ஏற்பட்ட காயங்கள் மறைந்துவிட்டனவா அல்லது
காயங்களாகவோ, தழும்புகளாகவோ நீடிக்கின்றனவா எனும் ஆய்வு
ஒருபோதும் இங்கு நிகழ்ந்ததில்லை. அந்த அறியாமையின் காரணமாக மட்டுமே, குழந்தை ஆசைப்படுது, அதற்கு ஒரு வாய்ப்பை
உருவாக்கித் தருகிறோம் எனும் சமாதானங்களோடும் பெருமைகளோடும், கைதட்டி மகிழ்ந்து தப்பித்துக்கொள்கிறோம்.
அப்ப குழந்தைகளின் திறமைகளை என்ன செய்வது? வெளிப்படுத்தாமல்
போனால் திறமைகள் வீணாகிவிடும்தானே? குழந்தை மேதைகள் உலகில்
இருக்கின்றனர்தானே? குழந்தைகளின் திறன் மீதான அக்கறை
பெற்றவர்களைவிட வேறு யாருக்கு இருந்துவிட முடியும்?
குழந்தை மேதைகள் என்பது ஓர் அதிசயம். அவர்களாக யார் தூண்டுதலும்
இல்லாமல் தன்போக்கில் சிலவற்றைச் செய்வார்கள். அவர்களை ஒருவேளை தடுத்தாலும் விடாது
செய்ய முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களால் அதனைச் செய்யாமல் இருக்க
முடியாது. அவர்களுக்கு ஒன்றரை வயதுக் குழந்தைக்கு முக்கால் மணி நேரம்
பயிற்சியளிப்பதுபோல் தொடர் பயிற்சி தேவையில்லை. திறமை என்பது ஆர்வம், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் கண்டறித்து தொடர்ந்து அதைக்
கூர்மைப்படுத்துவது. அந்தக் கூர்மைப்படுத்தல் என்பது தொடர் பயிற்சியால் நிகழும்.
தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், இதனால் ஏற்படும் விளைவு என்ன என்பதுள்ளிட்ட எதுவும் உணரப்படாமல் பயிற்சியளித்து
மிளிரச் செய்யப்படும் திறமைகளுக்கு குழந்தை பலி கொடுப்பது தன் குழந்தைத் தன்மையை!
அந்த இழப்பே பல நிலைகளில் அவர்களுக்குப் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன
என நான் அஞ்சுகிறேன்.
குழந்தைகள் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறை மதிப்பு மிகுந்ததுதான்.
மறுக்கவில்லை. அந்த அக்கறையில் அறியாமையோ கூடுதல் ஆர்வமோ கலக்காது என்பதற்கு
ஏதேனும் உத்தரவாதம் உண்டா? அப்படியான சூழலில் யார்
வேண்டுமானாலும் அவர்களைச் சரிப்படுத்த, நெறிப்படுத்த
முயலலாம். உதாரணத்திற்கு உறவுகளில் இப்படித்தான் செய்கிறார்கள், விளம்பரத்தில் காட்டினார்கள் என்று குழந்தை நன்றாக இருக்க வேண்டுமே எனும்
எண்ணத்தில் சாப்பிடுவதற்காக அதையும், இதையும் ஊட்டி
செரிமானம் ஆகாமல் மருத்துவமனைக்கு போனவர்களைக் கேட்டுப்பாருங்கள். மருத்துவர்
நெறிப்படுத்தியிருப்பார், சரிப்படுத்தியிருப்பார்.
இதுபோல் முன்பெல்லாம் நடந்தபோது யாரும் குரல் கொடுக்கவில்லை,
இப்போது மட்டும் இத்தனை பதற்றம் தேவையா என்னும் கேள்வி எழலாம்.
ஒருகாலத்தில் இதுதான் நடைமுறை என்று சொல்லப்பட்ட, நம்பவைக்கப்பட்டவை
பின்னர் தவறானதாகத் தோன்றி நாம் மாற்றியதில்லையா? அறிவு
விசாலமாகும்போது, காலத்திற்கு ஏற்ப நாம் மாறுவதுதானே மனித
அறம்.
பொதுவாக நமக்கு குழந்தைகளின் செயல்பாடுகள் ஒன்று சிலிர்ப்பைத் தரும்
அல்லது சிரிப்பைத் தரும். நம் போன்ற ரசிகர்களின் தேவை அவ்வளவுதான். குழந்தைகளுக்கு
உண்மையில் ரசிகர்கள் தேவையில்லை. ஆகவே அவர்களை சிலிர்க்க, சிரிக்க
வைக்க எதனையும் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் ஒருபோதும் குழந்தைகள் இல்லை.
அவர்களுக்குத் தேவை அந்தந்த வயதில் அவர்களிடம் இயல்பாக இருக்கும் குழந்தைத்தன்மையை
அனுமதிப்பதும் அரவணைப்பும் மட்டுமே!
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...




