மனிதத்திலிருந்து சற்றே மாறி

காலை 7.30 மணி அழுக்கடைந்த நகரப்பேருந்தின் ஜன்னல் ஓரம் கை முட்டியில் அழுக்குப் படாமல் சிறிது ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறேன். நகரப் பேருந்து என்பதால் மனிதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது, ஆனாலும் நடத்துனர் முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருந்தார்.
மனிதர்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும்பாலும் அந்த நடத்துனர் அவர்களை மனிதர்களாக பார்க்கவில்லையென்றே தோன்றியது. "ஏ... ஏறி வா, ஏறி வா, ஏறி வா!!!, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம் எறங்கு" என்று அனிச்சையாய் வார்த்தைகள் கோப நெருப்பை எச்சிலாய் மனிதர்களின் மனதில் உமிழ்ந்து கொண்டிருந்தது. அதை உள்வாங்கி உணரும் நிலையில் பயணிகள் என அழைக்கப்படும் மனிதர்கள் இல்லை.....

மூலப்பட்டறை அருகே குறுக‌லான‌ திருப்ப‌த்தில் இருக்கும் நிறுத்த‌த்தில், சிறிது தூரம் தள்ளி பேருந்து நிற்கிற‌து. ந‌ட‌த்துன‌ர் யாரையோ திட்டுவ‌துபோல் தெரிகிற‌து, எதையோ எடுத்து படிக்க‌ட்டு வ‌ழியே வீசுகிறார், ஒரு திடுக்கிட‌லோடும், கொஞ்ச‌ம் ஆர்வ‌த்தோடும் சன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன். நான்கு முனைக‌ளும் இழுத்து மைய‌த்தில் முடிச்சு போட‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌ழைய‌ துணிமூட்டை விழுந்த‌ வேக‌த்தில் லேசாய் அதிர்கிற‌து. சில‌ நொடிகளில் ஒரு நைந்துபோன‌ கிழ‌வி இற‌ங்குவ‌து தெரிகிற‌து. நகரும் பேருந்தின் பக்கவாட்டில், அவசரமாய், தள்ளாடிக்கொண்டு, துணி மூட்டையை நோக்கி குனியும் கூன்விழுந்த முதுகு தெரிகிறது. ஏனோ என்னுடைய‌ பாட்டி நினைவுக்கு வ‌ருகிறார், அந்த‌ ந‌ட‌த்துன‌ரின் தாயோ, பாட்டியோ அந்த கிழ‌‌வியின் வ‌ய‌தொட்டி இருக்க‌ வேண்டும் என ம‌ன‌ம் நினைக்கிற‌து.

சற்று நேரத்தில், ஈரோடு பேருந்து நிலையத்தை அடைந்து, நவீன கட்டண கழிப்பிட அறைக்கு அருகில் நிற்கிறது. உள்ளிருந்த பயணிகளை துப்பிவிட்டு, புதிதாய் மனிதர்களை நிரப்பிக்கொண்டிருந்தது பேருந்து. மனிதர்களை பயணிகளாக்குவதற்கு "பார்க், ஸ்டேசன், நால்ரோடு" என நடத்துனர் கூவி அழைத்துக் கொண்டிருந்தார் ....

நவீன கட்டண கழிப்பிட அறை நகரத்தின் சாட்சியமாகவும், நரகத்தின் ஒரு முன் மாதிரியாகவும் அழுக்கும், துர்நாற்றமும் தன் அடையாளமாக கொண்டு நிற்கிறது. கொஞ்சம் நீளமாக இருக்கும் அறைக்கு, இரண்டு நுழைவாயில்கள், ஒருபுறம் ஆண் படமும், இன்னொரு புறம் பெண் படமும் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டு கதவுகளுக்கும் இடையே இருக்கு மைய இடைவெளியில் ஒரு தகர நாற்காலியும், தகர மேசையும், மேசை மேல் விரித்துப்போட பட்ட பழைய செய்திதாளும், அடுக்கி வைக்கப்பட்ட சில்லறை காசுகளும் தெரிகிறது.


நவீன கட்டண கழிப்பிடப்பிடத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய அழுக்கோடு ஓட்டை விழுந்த பனியனோடு இருந்த கழிப்பிடப் பொறுப்பாளார், கழிப்பிடத்திற்கு வந்த வாடிக்கையாள‌னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அநேகமாக சில்லறை குறித்த சண்டையாக இருக்கலாம் என மனதுக்குப்பட்டது. பேருந்து மெல்ல நகரத்துவங்கியது...

மனிதர்களால் காலை நேரத்திலும் கூட கோபங்களையும், சண்டைகளையும் தவிர்க்க முடிவதில்லை. மனிதனுக்கு மனிதனோடு என்றும் சண்டை வருவதில்லை. மனிதன் நடத்துனராகவும், மனிதன் பயணியாகவும் அடையாளம் மாறும்போது கோபம் எளிதாக வருகிறது. மனிதன் கழிப்பிட பொறுப்பாளனாகவும், மனிதன் வாடிக்கையாளனாகவும் அடையாளம் மாறும் போது சண்டை எளிதாக வருகிறது.

ம‌னித‌னாக‌ இருக்கும் வ‌ரை சுக‌மே.... கனவுகளின்றி ஆழ்ந்து தூங்கும் போது ம‌னித‌னாகவே இருக்கிறோம், அதுதான் நிஜ‌முகமும் கூட‌.

விழித்த‌து முத‌ல்......
க‌ண‌வனாக‌, மனைவியாக, த‌ந்தையாக‌, தாயாக, ப‌ய‌ணியாக‌, நிர்வாகியாக‌, ந‌ண்பனாக‌, த‌லைவ‌னாக‌, தொண்டனாக...... என‌ நிஜ‌முக‌த்தின் மேல் வ‌ர்ண‌ங்களும், வ‌டிவங்க‌ளும் புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது ம‌னித‌ன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான். 

________________________________________________________

ஓர் இரவும் ஒற்றை நொடியும்

நெகிழ்ந்து நெடுநேரம் மனம் பகிர்ந்து
நேர்த்தியாய் விரல்கள் பிரித்து
தூக்கத்தூளியில் நான் துவழ தூங்காமனம்
தேடியது நமக்கான வார்த்தைகளை

தென்பட்ட வார்த்தைகளை தேர்ந்து
அழகாய்க் கோர்க்க அடம்பிடித்து
இடம் வலமாய் மாறி அமர்ந்து
விடியவிடிய விளையாடியது

விடியல் எழுப்ப வேகமாய்த் தேடினேன்
விளையாடிய வார்த்தைகளை
கரைந்து போய் காலியாக இருந்தது
கருக்கொண்ட நமக்கான வார்த்தைகள்

எழுத மறந்த ஏட்டைத் திறந்தேன்
என்னிடம் களவுபோன வார்த்தைகள்
வர்ணம் பூசி, உன் வாசம் தாங்கி
இறைந்து கிடந்தது உன் பெயரோடு

அழகுக்கொடியாய் பிணைந்து கிடந்ததை
அள்ளியெடுத்து ஆசையாய் அணைத்தேன்
மூச்சுமுட்ட முகர்ந்து பார்த்தேன்
ஒருகணம் தொட்டது உயிரின் நுனியை

பனித்துளிக்குள் அடைபட்ட குளிர்
பட்டென சிறையுடைத்த சிதறலாய்
நீ என்னிடமும், நான் உன்னிடமும்
சுகமாய் பிறந்தோம் ஒற்றை நொடியில்

______________________________

படிமங்கள்
நினைவுச் சின்னம்
அழகாய் வர்ணத்தில் நிரப்பினாலும்
ஆண்டுகள் பலநூறு நகர்ந்தாலும்
ஆயிரமாயிரம் பேர் படம் பிடித்தாலும்கூட
ஆழ்ந்து நுகரும் போது அடிக்கிறது
வீழ்த்திய தலைகளில்
வழிந்த இரத்தக்கவிச்சை

@@@@@@@குச்சி ஐஸ்
குளிர்ச்சியில் மறத்த நாக்கில்
வருடும் சேமியாவோடு
கூசும் பல்லை இறுகக்கடித்து
குழையும் நாக்கை சுழற்றி
இன்சுவை வழியும் புறங்கையில்
தேடுகிறேன் கரைந்த என்னை

@@@@@@@
 


பரிணாமம்
வசிப்பிடத்தை பறித்து
பசியாற்றிய பழமரத்தை தகர்த்து
வாகாய் ஒரு கொட்டில் அமைத்து
டீ, வடை, போண்டா என வருவோர்
பசியாற்றி வயிறு வளர்த்தான்
பறிகொடுத்தவனை பிச்சைக்காரனாக்கி
_____________________________________

சாபம்

பழுப்பேறிய
வெள்ளை வேட்டி
சாயம் போன
கசங்கிய சட்டை
தடித்த முண்டாசு
நரைத்த முள்தாடி
பளபளக்கும்
நகரத்து சந்திப்புகளில்
தட்டுத் தடுமாறும்
கிராமத்தானை
”சாவு கிராக்கி”
என கடக்கும்
நகத்தில் அழுக்குச்சேரா
நகரத்தானின்
அடுத்த வேளை
சோற்றிலாவது
அந்தச் சாவுகிராக்கி
சிந்திய வியர்வையின்
உப்பு கொஞ்சம்
கரிக்கட்டும்!


_______________________

அடிப்படை மனித நேயமில்லா பதிவர் டோண்டு

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட செயலை கேள்விப்பட்ட போது திராணியற்ற தமிழ்சமுதாயத்தில் நானும் ஒருவன் என்று நினைக்க வேதனையாக இருந்தது. அந்த வேதனையை பதிவாக எழுதி ஒன்றும் கிழிக்கமுடியாது என்ற ஆதங்கத்தில் அடர்த்தியான மனதோடு இருந்த நேரத்தில் பதிவர் பட்டாபட்டியின் டுகை மூலம் பதிவர் டோண்டுவின் இடுகையை படிக்க நேர்ந்தது.
இதுவரை, ஒரு பதிவரின் இடுகை பிடிக்கவில்லையென்னும் போது விலகிச் செல்லும் மனோநிலை இங்கு வரவில்லை. டோண்டு பதித்துள்ள விசமத்தனம் படிக்கும் குமட்டிக்கொண்டு வந்தது. இவ்வளவு வக்கிரத்தோடு ஒரு மனிதன் தன் எழுத்தை கடை பரப்ப முடியுமா என்று.


விடுதலைப் புலி பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மையாரை தமிழகத்துள் வரவிடாது பிளேனிலேயே திருப்பி அனுப்பிய விவகாரம் இங்கு பல எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்.

வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது. முதலில் அதைப் பார்ப்போம்.

அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்.

அய்யா மனசாட்சியே இல்லையா? மனநலம் குன்றிய பக்கவாதம் பாதித்த, அந்த மூதாட்டியை வைத்து எப்படி பிரஸ் மீட் வைக்க முடியும். அப்படி பிரஸ் மீட்டு புலி ஆதரவாளர்கள் ஒன்னும் வக்கிர புத்தி கொண்டவர்கள் இல்லை.

இப்படியெல்லாம் உங்களைப்போல் படித்த ஒரு மனிதனால் எப்படி யோசிக்க முடிகிறது


தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.

மிக மிக அசிங்கமான கற்பனை. உங்க பாழாப்போன கற்பனைக்கு அளவேயில்லையா?
இதுவரை அந்த அம்மா, அப்படி அழுததாகவோ, பேட்டி அளித்ததாகவோ யாரும் கேள்விப்பட்டதுண்டா?இதை விட அந்தத் தாயை ஒரு மனிதனால் இழிவு படுத்த முடியாது


பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்.

அடப்பாவிகளா, சிகிச்சைக்கு வந்த ஒரு மூதாட்டியை இங்கு பாதுகாத்து கிழிக்க என்ன இருக்கிறது. லட்சக்கணக்கான மக்களை நச்சுக்குண்டு வீசிக் கொன்ற ராஜபக்சேவின் குடும்பம் சாமி கும்பிடனு டூர் வந்த போது, கொடுத்த பாதுகாப்புக்கு செலவு பண்ணுனது யார் ஊட்டு அப்பன் காசு. அன்னிக்கு நம்ம அரசாங்கம் செலவு பண்ணினப்போ இனிச்சுதோ?

ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.

வந்தாரை வாழவைத்த இந்த புண்ணிய தேசத்தில் ஒரு கிழவியை வைத்திருக்க வக்கில்லாமல், வெளியே அனுப்ப முழி வேற பிதுங்கித் தொலையனுமா?

எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்.

நமக்குன்னா? டோண்டுவை வாசிக்கும் பாலோயர்களுக்கா?


நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள்.

பாவம் இந்த சி.பி.ஐக்காரங்க. டோண்டு சார்.... பிரபாகரன் செத்து எரிச்ச எவிடன்ஸ கொஞ்சம் சி.பி.ஐ கிட்ட சீக்கிரம் குடுங்களேன்


இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.
அப்படி ஒன்னு நடந்தா, அதுக்கு யாராவது உண்டி குலுக்குனா நீங்க காசு போடவேணாம்


நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை.

உதவின்னு கேட்டு வந்த வயதான மூதாட்டிய திருப்பி அனுப்பினதால இந்த  நாடு சுபிட்சம் அடைஞ்சிருச்சுங்களா?


ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

இது உங்க கண்டுபி்டிப்புங்களா? இல்ல மத்திய அரசு உங்கள கலந்துக்கிட்டு இந்த முடிவ எடுத்தாங்களா? மலேசியாவுல விசா குடுக்குறப்போ உங்கள கேக்காம கொடுத்துட்டாங்களா?


மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.

என்ன என்ன்ன்ன்ன்ன அசாம்பாவிதம் நடந்துடும்?

வெறுமனே சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்.

என்ன ஒரு வக்கிரமான சந்தோசம்.

ஒரு தமிழச்சி என்ற உணர்வு வேண்டாம், ஒரு பெண் என்ற இரக்கம் வேண்டாம். பாவம் தன் கடைசி காலத்தில் இருக்கும் ஒரு வயதான நோயாளி என்ற குறைந்த பட்ச இரக்கம் கூட இல்லையா உங்களிடம்

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்க்க்க்கும் இந்த பாசாங்கு எதுக்கு. குறைந்த பட்ச மனித நேயம் இல்லாத உங்களுக்கு அன்புடன் வார்த்தை மட்டும் எப்படி இனிக்குதோ?


நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது.
உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் படட்டும்.... அதுதான் மட்டறுத்த 91 பின்னூட்டங்களிலேயே தெரிகிறதே.... உங்களைத் தவிர அங்கு பின்னூட்டம் இட்ட அத்தனை பேரும் குற்ற உணர்ச்சி கொண்டவர்கள்தான்.


நான் ஒன்றும் இங்கே பாப்புலாரிடி காண்டஸ்டுக்கு எல்லாம் வரவில்லை.
என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.
அது சரி... உங்கள இத்தன நாள் படிச்சவங்களோட குற்றம்தான் அது.

------------------------------------------

சமீபத்தில் 1000 இடுகை எழுதியதாக அறிவித்த டோண்டு அவர்களின், இந்த இடுகையைப் படித்த போது அவரின் எழுத்தில் இருந்த வக்கிரம் குமட்டலை ஏற்படுத்தியது. தனக்கு எழுதத் தெரியும், தான் எழுதினால் வாசிக்க ஆள் இருக்கிறது என்ற தலைக்கனம் கொடுத்ததுதான் இது போன்ற மனிதநேயம் இல்லாத ஒரு இடுகைய எழுத தூண்டியிருக்கிறது.


நான் இந்த இடுகையை இடும் போது தமிழ்மணத்தில் அவர் இடுகைக்கு கிடைத்த ஓட்டு 7/45... அந்த 38 பேரின் கோபமும், 95% சதவிதத்திற்கு மேல் கண்டித்து வந்திருந்த பின்னூட்டங்களும், சில எதிர் இடுகைகளும் டோண்டு அவர்களுக்கு அவர் செய்த தவறை முகத்தில் அடித்தாற் போல் உணர்த்தும், ஆனால் உணர்வாரா?

அடிப்படை மனித நேயத்தை அடகு வைத்து விளம்பரம் தேடிய, மனித நேயமற்ற டோண்டு அவர்களுக்கு எதிரான என் கடும் கண்டனங்களை மனது முழுக்க அறுவெறுப்போடு பதிவு செய்கிறேன்.
____________________________________

நறுக்குன்னு நாலு வார்த்த

ரூ.100 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்!: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

அதுதான் மணல அள்ளியே, அங்கங்கே அணை தோண்டியாச்சே, அப்புறம் எதுக்குங்க புதுசா!?

                                                 ^^^^^^^^^^^^ 

பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது ஏன்?: பார்லி.யில் தி.மு.க. கேள்வி

அட... இந்த மெத்தட் நல்லாயிருக்கே!

                                                 ^^^^^^^^^^^^ 

'பார்வதி அம்மையார்'-அதிமுக மெளனம் ஏன்?: வீரமணி

ஆமா.... நீங்க மவுண்ட் ரோடுல நின்னு மறியல் பண்ணிணீங்களோ!!?

                                                 ^^^^^^^^^^^^ 

பார்வதி அம்மாள்'-விவாதத்தை தவிர்த்த அதிமுக!

அட.. அடுத்த எலக்‌ஷன் வர்றப்போ பேசிக்கிலாம்னு, அந்தம்மா வழக்கம் போல லீவு உட்டுறுப்பாங்க....

                                                 ^^^^^^^^^^^^

பிரபாகரனின் தாயார் விசயத்தில் - கருணாநிதி சொல்வது நம்பக் கூடியதாக இல்லை : விஜயகாந்த்

கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...............டன் நாலு நாளா, பேரரசு கூட சூட்டிங் போயிட்டீங்களா!!!??

                                                 ^^^^^^^^^^^^ 

பிரபாகரன் தாயாரின் சிகிச்சைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் : கருணாநிதி அறிவிப்பு

அய்யா... புறா எதுனாச்சும் வேணும்ங்ளா...

                                                 ^^^^^^^^^^^^

சேலம் மாநகராட்சியில் கிடா வெட்டி பரிகார பூஜை!

கிடாவுக்கு கெட்ட நேரம் போல.... வாழ்க நாத்திகம்

                                                 ^^^^^^^^^^^^ 

ஐ.பி.எல்.: குற்றவாளிகள் தப்ப முடியாது!: அரசு உறுதி

அட... பாத்து வெட்ட வேண்டியத வெட்டுங்க... அதுதான் டைம் குடுத்துருக்காங்கள்ள

                                                 ^^^^^^^^^^^^ 

தோண்ட தோண்ட ஊழல்: வெளுக்கிறது ஐ.பி.எல்., முகம்

புல்டோசர் வச்சு தோண்டி, 501 சோப்பு போட்டு வெளுக்கறாங்களோ என்னவோ!!??

                                                 ^^^^^^^^^^^^ 

சட்டசபையில் பாத்ரூமில் சிக்கிக்கொண்டேன் - அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு

இது ஆளுங்கட்சியின் சதின்னு சொல்லி ஒரு போராட்டத்த நடத்துங்க

                                                 ^^^^^^^^^^^^ 

செம்மொழி மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டு, தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடலை ஒளி, ஒலிபரப்ப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அட.... பாட்டு போடூவீங்க....... சரி ஒலி, ஒளி பரப்ப கரண்ட் வுடுவீங்களா!!??

                                                 ^^^^^^^^^^^^

தி எட்ஜ் ஆப் ஹெவன் (The Edge Of Heaven) – விமர்சனம்


ஓய்வூதியம் பெறும் அலி, பேராசிரியரான அவர் மகன் நெஜத் இருவரும், ஜெர்மனியில் வாழும் துருக்கியர்கள். அம்மா இல்லாத நெஜத்தை தாயும் தந்தையுமாக வளர்த்து ஆளாக்குகிறார் அலி. அன்பான வாழ்வு வாழும் அப்பாவும் மகனும், ஒன்றாய் குதிரை பந்தயத்தில் வென்று, அதை கொண்டாடுகின்றனர்.

வயதானலும்(!!!) காமம் அலியை விபசார விடுதிக்கு அழைத்துச் செல்கிறது. யெட்டர் என்ற துருக்கிய விபசாரியைச் சந்திக்கிறார், அடுத்த முறையும் அவளையே நாடுகிறார். ஓய்வூதியம், சொந்த வீடு, சேர்த்துவைத்த சொத்து என்ற பட்டியலின் அடிப்படையில் அவளை தன்னோடு மட்டும் படுக்க விலை பேசுகிறார்.

துருக்கிய பெண்ணான யெட்டர் விபச்சாரியாக இருப்பதைப் பார்த்த இரண்டு துருக்கியர்கள், ஒரு துருக்கியப் பெண், அதுவும் முஸ்லீம், விபசாரம் செய்யலாமா என்று மிரட்ட, சூழ்நிலை யெட்டரை அலியை நாடவைக்கிறது. யெட்டரை அலி வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அதை நெஜத் மிக இயல்பாக எடுத்துக்கொள்கிறார். இரவு நல்ல போதையில் இருக்கும் அலிக்கு மாரடைப்பு வருகிறது. மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும் வழியில் நெஜத்துக்கு யெட்டரின் வாழ்க்கை பற்றி அறிய நேர்கிறது, தனக்கு ஒரு மகள் அயிட்டன் துருக்கியில் இருப்பதாகவும், தான் இங்கு காலணி கடையில் வேலை செய்வதாக பொய் சொல்லியிருப்பதாகவும் கூறுகிறார்.

இருவருக்கும் இடையில் ஒரு இனம் புரியாத அன்பும், பரிவும் இழையோடும் வேளையில், அலி வீடு திரும்புகிறார். யெட்டர் நெஜத்துக்கும் இடையே உறவு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வர, நெஜத்தைக் கேட்க, நெஜத்  கோபத்தோடு வீட்டை விட்டுக் வெளியேற, யெட்டர் மறுத்துத் திட்ட, அதேநிலையில் தன்னுடன் உறவு கொள்ள அழைக்கிறார் மிஞ்சிய குடிபோதையில் இருக்கும் அந்த கிழட்டு மனிதன். யெட்டர் மறுக்க, அலிக்கு கோபம் பொங்குகிறது, யெட்டரை அடிக்க,  கீழே விழுந்து யெட்டர் இறந்து போகிறார். அலி சிறைக்குச் செல்ல, நெஜத் ஒரு கொலைகாரன் தந்தையாக இருக்க முடியாது என்று யெட்டரின் மகள் அயிட்டனைத் தேடி துருக்கி செல்கிறார்.

அதேசமயம் துருக்கியில் படிக்கும் கம்யூனிஸ்ட் கொள்கைவாதியான அயிட்டன், ஒரு போராட்டத்தில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு போலிஸ்காரரை அடிக்க, அந்த போலிஸ்காரரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அயிட்டன் தப்பியோடும் போது, தன்னுடைய மொபைல் போனை தவறவிட, அதிலிருக்கு எண்களை வைத்து, அவளுடைய போராட்ட கால நண்பர்களை போலிஸ் கைது செய்கிறது. துப்பாக்கியை ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒளித்துவைத்துவிட்டு ஒரு வழியாக மாற்றுப் பெயரில் அயிட்டன் தன் தாய் இருக்கும் ஜெர்மனிக்கு தப்பி வந்து, இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்து, அங்கிருக்கும் எல்லாக் காலணிக் கடைகளிலும் தன் தாயைத் தேடி,  அதில் தோல்வியடைந்து, இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்துச் சமாளிக்க, குறைந்த விலையில் உணவு கிடைக்கும் பல்கழைக் கழக உணவு விடுதியில் உணவு உண்டு, அங்கிருக்கும் ஒரு வகுப்பறையில் தூங்குகிறார். அந்த வகுப்பறையில் தான் நெஜத் பேராசிரியராக வகுப்பெடுக்கிறார். இதெல்லாம் யெட்டர் அலி வீட்டில் வசிக்கும் நேரத்தில் நடக்கிறது. 

இந்நிலையில் ஜெர்மன் மாணவி லோட்டோ, அயிட்டனைச் சந்திக்கிறார். அயிட்டனின் நிலையறிந்து அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். லோட்டோவின் தாயாருக்கு ஜெர்மனி அல்லாத பெண்ணை தன் வீட்டில் வைத்திருக்க விருப்பமில்லை. லோட்டோவும், அயிட்டனும் ஒரு நடனத்திற்குச் செல்ல, போதையில் இருவரும் நெருங்கி ஆட, இருவருக்குள்ளும் ஒரு பால் ஈர்ப்பு காதல் மொட்டாக உடைகிறது.

அடுத்த நாள் ஒருங்கிணைந்த ஐரோப்பியம், துருக்கி பற்றி விவாதிக்கும் போது அயிட்டனுக்கும், லோட்டோவின் தாயாருக்கு விவாதம் முற்ற, அயிட்டன் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வருகிறது. லோட்டோவும், அயிட்டனும் காரில் கிளம்பிச் செல்லும் போது, பக்க வாட்டில் கடந்து செல்லும் பேருந்தில் மருத்துவமனையில் அலியை விட்டுவிட்டு திரும்பும் நெஜத்தும், யெட்டரும் பயணிக்கின்றனர்.


காரில் செல்லும் லோட்டோ, அயிட்டனை எதேச்சையாக போலிஸ் நிறுத்தி விசாரிக்க, அனுமதியில்லாமல் ஜெர்மனியில தங்கிய அயிட்டன் மாட்டிக்கொள்ள, அவர் துருக்கிக்கு நாடு கடத்தப் பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். அயிட்டனைக் காப்பாற்ற தன் தாயிடம் சண்டையிட்டு லோட்டோ துருக்கிக்கு பயணமாகிறார்.

அயிட்டனைத் தேடி துருக்கி வந்த நெஜத், அயிட்டனின் புகைப்படம் இல்லாததால், யெட்டரின் படத்தை போஸ்டராக ஒட்டி விளம்பரப்படுத்துகிறார். பலன் ஏதும் இல்லாமல் சோர்ந்து போய், துருக்கியிலேயே தங்க முடிவு செய்கிறார். அங்கு இருக்கும் ஒரு புத்தகக் கடையை விலைக்கு வாங்கி நடத்தியும் வருகிறார்.
 
எதேச்சையாக நெஜத் நடத்தும் புத்தகக் கடைக்கு வரும் லோட்டோ, அங்கு அயிட்டனைக் காப்பாற்ற துருக்கியின் சட்டப் புத்தகத்தை மாலை கடை மூடும் வரை படிக்கிறார். கடை மூடும் போது தங்க இடம் இல்லாத, லோட்டோவுக்கு உதவ நெஜத் முன்வருகிறார். தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் குறைந்த வாடகைக்கு தங்க அனுமதிக்கிறார்.

துருக்கிப் போலிஸ் அயிட்டனிடம் அந்த துப்பாக்கி குறித்து விசாரித்து வருகிறது. பல சிரமங்களுக்கு இடையில் அயிட்டனை லோட்டோ சிறையில் சந்திக்க, அயிட்டன் தான் துப்பாக்கியை ஒளித்து வைத்த இடம் பற்றிய குறிப்பை, வரைபடத்தைக் கொடுக்கிறார். லோட்டோ தன் தாயாரிடம் அயிட்டனைக் காப்பாற்ற பணம் தேவையென்று கேட்டு போனில் சண்டையிடுகிறார்.

ஒரு வழியாக லோட்டோ அயிட்டன் ஒளித்து வைத்த துப்பாக்கியை எடுத்து கைப் பையில் வைத்துக் கொண்டு வரும்வழியில், சிறுவர்களின் கும்பல் அந்தப் பையை திருடிக்கொண்டு ஓட, இவர் துரத்த ஒரு கட்டத்தில் அந்த துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் ஒரு சிறுவன் மிரட்ட, அது வெடிக்க லோட்டோ இறந்து போகிறார்.

லோட்டோ இறந்தைக் கேட்டு அதிர்ச்சியடையும் லோட்டோவின் தாய், தன் மகளின் கனவை நிறைவேற்ற துருக்கிக்கு வந்து அயிட்டனைக் காப்பாற்ற முயல்கிறார். லோட்டோ வசிக்க வீடு தந்த நெஜத்தைச் சந்திக்க அழைக்கிறார். சிற்றுண்டி சாலையில் சந்திக்கும் லோட்டோவின் அம்மாவை நெஜத் அடையாளம் காணும் போது, லோட்டோவின் அம்மா என்னை எப்படி எளிதாக அடையாளம் கண்டாய் எனக் கேட்க, நெஜத் சொல்கிறார் “இங்கு இருப்பவரில் நீங்கள்தான் அதிக கவலையோடு இருந்தீர்கள்என்று.

அயிட்டனைச் சந்தித்து, பல போராட்டங்களுக்குப் பிறகு அயிட்டனை சிறையிலிருந்து மீட்கிறார். வெளியில் வந்த அயிட்டன் நெஜத்தின் புத்தகக் கடைக்கு வருகிறார், அதற்குச் சற்று முன்தான், அயிட்டனைக் கண்டுபிடிக்க முடியாத அயற்சியில் அயிட்டனின் அம்மா யெட்டர் குறித்த விளம்பரப் போஸ்டரை நெஜத் எடுத்து விடுகிறார்.

இதே நிலையில் நெஜத்துக்கு தன் தந்தை அலி விடுதலையாகி கிராமத்தில் இருப்பதாக தகவல் வருகிறது, கடையை லோட்டோவின் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, தன் தந்தையை பார்க்க ஜெர்மனிக்கு கிளம்புகிறார். கிராமத்தை நோக்கிய பயணத்தில் நெஜத்தின் காரில், வழியும் மனதை உருக்கும் இசை, நம்மையும் இம்சிக்கிறது. கிராமத்தில் அலி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இடத்தை நெஜத் அடைந்து ஆற்றோர மணலில் உட்கார படம் நிறைவடைகிறது.


யெட்டரை ஆள நினைத்த அலி, அயிட்டனை வாழவைக்க நினைத்த யெட்டர், யெட்டரைத் தேடி வந்த அயிட்டன், அயிட்டனைத் தேடிச் சென்ற நெஜத், அயிட்டனை மீட்கச் சென்ற லோட்டோ என ஒவ்வொரு நிலையிலும் எதன் பொருட்டோ மனிதர்கள் சூழ்நிலையின் முன் தோற்றுக் கொண்டே இருக்கின்றனர்.

உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறதென்றாலும், தேடிய மனிதர்கள் சில அடி தொலைவில் இருந்தாலும் வாழ்க்கை அவர்களைப் பிரித்துப்போடுகிறது.

மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன என்பதை போகிற போக்கில் இந்தப் படம் எளிமையாக பதித்து விட்டுப்போகின்றது

2007ல் வெளிவந்து சிறந்த திரைக்கதைக்கான கேன்ஸ் விருது பெற்ற, இந்தப் படத்தை பாதிக் அகின் (Fatih Akin) என்ற ஜெர்மன் துருக்கிய இயக்கியிருக்கிறார். அயிட்டனாக நடித்திருக்கும் Nurgul Yesilcay-ன் நடிப்பு மிக நேர்த்தியான ஒன்று. 

___________________________________________________________

மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா

மதியமே, சிறப்பு விருந்தினரான நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எத்தனை மணிக்கு வருவார் என்று விசாரித்தபோது, தவிர்க்க இயலாத தன் சொந்த அலுவல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். எப்படியும் வந்து விடுவார் என்ற தகவல் மிகப் பெரிய பீதியை கிளப்பியது. ஆனாலும் கடைசியாக 7.45 மணிக்கு நாமக்கல் வந்து சேர்ந்து, ஒரு வழியாக ஈரோடு கிளம்பிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சியான செய்தியோடு, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவக்கி விட்டோம்.சட்டை அணியும் பழக்கமில்லாததால் வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்து வெற்று மேலோடு வந்திருந்த பெரியவர் திரு. அய்யாசாமி அரங்கத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தினார். உடன் மகள் வயிற்றுப் பேரனை அழைத்து வந்திருந்தார்.


திரு. நாகராஜன் தன் மனைவி திருமதி. பிரேமா மற்றும் பேரனுடன் வருகை புரிந்தார்.
ஆட்சியர் வருகை தாமதமானதையடுத்து, வந்திருந்த மரங்களின் நாயகர்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்தி அந்த நேரத்தை மிக உபயோகமாக பயன்படுத்திக் கொண்டோம்.
குறிப்பாக திரு. அய்யாசாமி சொன்ன தகவல் மரம் வளர்த்த செடியாக நட்டு வளர்ப்பதைவிட, விதையாக ஊன்றி விட்டால், அது செடியாக முளைத்து வந்த பின் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய வேலை இல்லை என்ற தகவல் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

எந்த மரம் சிறந்தது என்ற கேள்விக்கு திரு. நாகராஜன் புங்கை மரம்தான் சிறந்தது, அதுதான் அதிகப்படியான ஆக்சிஜனைத் தருகிறது என்றார்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தன் உறுதியை விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டுவருவதாகக் கூறும் போது கூட்டத்திலிருந்தோர் மனமெல்லாம் சிலிர்த்தது. தான் மரம் நடப்போகும் சமயங்களில், அந்த இடங்களுக்கே உணவு, தண்ணீர் யார் மூலமாவது கொடுத்து அனுப்பும் மனைவியைப் பெற்றது வரம் என்று நெகிழ்ச்சியோடு திரு. நாகராஜன் பகிர்ந்து கொண்டார்.

மிக நீண்ட பயணத்திற்கு பிறகு கொஞ்சம் களைப்போடு வந்தாலும் கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் மிக உற்சாகமாகவே இருந்தார். மரங்களின் நாயகர்கள் இருவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார், கூடவே மிக எழுச்சியாக உரை நிகழ்த்தத் தொடங்கினார்.

பயணக் களைப்பாக இருப்பதால் ஒரு பதினைந்து நிமிடத்தில் முடித்து விடுவாரோ என்ற பயத்தை தவிடு பொடியாக்கி முப்பது நிமிடங்களுக்கு மேலாக உரை நிகழ்த்தி அசத்தினார். உரை முழுதும் சிறிதும் விழாவுக்கு தொடர்பானதை விட்டு விலகாமல்,முழுக்க முழுக்க மரங்களின் பிதாக்களை பாராட்டி கௌரவிப்பதையும், மரங்கள் வளப்பது குறித்த தனது அனுபவத்தையும்,அரிமா சங்கம் மரம் நடுவதை தனது இலக்காக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் திரும்பத் திரும்ப மிக எழுச்சியோடு எடுத்துக் கூறினார்.


அதன் தொடர்ச்சியாக மரங்களின் பிதாக்களான திரு. நாகராஜன் மற்றும் திரு. அய்யாசாமி ஆகியோருக்கு திரு. சகாயம் அவர்கள் மூலம் நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
  அடுத்து கடந்த மாதத்தில் கண் தானம் அளித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரு. சகாயம் சான்றிதழ் வழங்கினார்.


இந்த நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான பெருமை மிகு விழாவில் பதிவுலக நண்பர்கள் கேபிள் சங்கர், பாலாசி, அகல்விளக்கு ராஜா, காலப்பயணி வசந்த்குமார் மற்றும் திருப்பூர் பதிவர் நிகழ்காலத்தில் சிவா தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


மிகச் சிறந்த மனிதர்களான திரு. சகாயம் ஐ.ஏ.எஸ், திரு. அய்யாசாமி, திரு. நாகராஜன் ஆகிய மூன்று பேரை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி மகத்தான விழா எடுத்த, என்னுடைய ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.

வாழ்நாளில் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருவிதமாக கழிந்திருக்கின்றன. வீணாக கழிந்த பொழுதுகளும் உண்டு, பொன்னான காரியங்களை, நினைவுகளை பதித்து விட்டுப் போன பொழுதுகளும் உண்டு. நேற்றைய பொழுது என் வாழ்நாளில், ஒரு மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திப்போன பொழுது. எல்லாம் நிறைவடைந்து படுக்கையில் சாய்ந்த போது, நீண்ட நேரம் பிடித்தது மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து உறக்கத்தை கைக்கொள்ள.
திரு சகாயம் I.A.S. அவர்களின் பாராட்டுரை

Get this widget

Track details
eSnips Social DNA

கோடியில் இருவர் - பாராட்டு விழா

நான் சார்ந்திருக்கும்
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
சார்பில் 15.04.2010 வியாழன் இரவு 8.00  மணிக்கு
ஈரோடு சிவில் இன்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங்கில்
மரம் வளர்ப்பதை வேள்வியாகக் கொண்ட
 திரு. அய்யாசாமி
மற்றும்
  

திரு. நாகராஜன்
ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்கள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும்

அரிமா. தூ.சு.மணியன்
பட்டயத் தலைவர், நாமக்கல் அரிமா சங்கம்
வாழ்த்துரை வழங்கவும் இசைந்துள்ளனர்.பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றேன். கலந்து கொள்ள விரும்புவோர் தயவுசெய்து என்னுடைய அலைபேசி எண்ணில் (98427-86026) தகவல் தெரிவித்துவிட்டு வருகை தர அன்புடன் வேண்டுகிறேன்.


_______________________________

ஒரு தீ பூக்குதே


கதவோரம் வீசிய செய்தித்தாளாய்
தூக்கம் வடிந்து பூவாய் மலர்ந்து

வேலை இயந்திர வாசிப்பில் வதங்கி
பூசிய பவுடர் கலைந்து கரைந்து

பசி கொஞ்சும் களைத்த முகத்தோடு
உண்ட சோம்பலில் கொஞ்சம் அமிழ்ந்து

உதித்த வியர்வைத்துளி உறைந்து
சூடிய மல்லிகையாய் சற்றே வாடி

மெலிதாய் கண் சொருகி சோம்பலாய்
மதிய உணவுக்குப் பின் சோர்ந்து

மஞ்சள் வெயிலில் மினுமினுத்து
சன்னலோர பயணத்தில் தூங்கி வழிந்து

என்னதான் பொழுது புரட்டிப்போட்டும்
புரளாமல் தளராமல் பூத்துக்குலுங்கி
கடக்கையில் கசியும் காதலில்
எல்லாச் சோர்வையும் எரிக்க
புதிதாய் ஒரு தீ பூக்குதே!
_____________________________

அடர்த்தியாய்.....

பேசும் மௌனம் 
விடிந்தது கல்யாண வீடு
அடுக்கும் நாற்காலிகளில்
கனமாய் உட்கார்ந்திருந்தது
பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்


காயும் நிழல்
கொதிக்கும் வெயிலில்
குதித்தோடும் குழந்தைகள்
சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்
தேங்கிக் கிடக்கிறது நிழலாய்.....


முரண்
பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்


எச்சில் வாசம்
பிதுங்கி வழியும் பேருந்தில்
மடிமேல் இருத்தி பின் பறித்துச்சென்ற
மழலை வழியவிட்ட எச்சில்
பயணிக்கிறது காயாமலே

____________________________________

கோடியில் இருவர்

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.
மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

கோடியில் ஓருவர் 1
ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரேஎன்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்கஎன்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார். 

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து,  முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது  ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.
ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.
பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.
ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.
காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

கோடியில் ஒருவர் 2
சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்களஅய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!...

“இந்த மரம் வளர்த்துறாரே என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்

ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.
எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்கஎன்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம் என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.

இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.

ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.


முதல் கட்டமாக அவர்களை நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வரும் ஏப்ரல் 15ம் தேதி என் மனம் கவர்ந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை சிறப்பு விருந்தினராக வைத்து ஒரு பாராட்டு விழாவை நடத்த இருக்கிறது. அடுத்து, வரும் ஜூலை மாதம் பதவியேற்கும் எங்கள் அரிமா சங்க புதிய தலைவர் அரிமா. வீ.குருசாமி (94429-83559) அவர்கள், வரும் ஆண்டில் மரக்கன்றுகள் நடுவதை முக்கியத் திட்டமாக மனதில் வைத்துள்ளார். மழைக்காலத்தை மிகச் சரியாக பயன்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.
__________________________________________________