வலிப்பதுமில்லை, தாழ்வதுமில்லை

கடற்கரை மணல் மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு, காற்றை ஆரத்தழுவிக் கொண்டிருக்கும் முன்னிரவு கரையும் நேரம். அக்கம்பக்கத்து மனிதர்கள் பிள்ளை குட்டிகளோடு மணலில் படுத்துறங்க குழுவாக கால்புதைய நடந்து கொண்டிருந்தார்கள். ஏதாவது கொறிக்க வேண்டுமே என்ற நிர்பந்தம் எங்கள் மூவருக்கும் தோன்றிய நேரத்தில், சுண்டல் பெட்டியோடு ஒரு சிறுவன் நெருங்கி வந்தான். 

”கண்ணு, சுண்டல் குட்றா” என நண்பர் கேட்டார்…

முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாத அந்தச் சிறுவன் பெட்டியை கீழே வைத்துவிட்டு, காகிதத்தை எடுத்து கரண்டியில் அள்ளிவைக்கத்  துவங்கினான்.

”எவ்வளவுப்பா”

”அஞ்சு ரூவாண்ணே”

”சரி ரெண்டு பொட்டலம் கொடு”

நண்பர்கள் ஆளுக்கொன்றாக கையில் ஏந்திக்கொள்ள நானும் எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தேன். எந்தச் சுவையும் அதில் இருக்கவில்லை. ஏதோ கொறிக்க வேண்டும் என்ற எண்ண நிர்பந்தம் மட்டுமே வாயில் மென்று கரைக்கச்சொன்னது. சுண்டல் கொடுத்தவன் நகரவில்லை. எங்கள் அருகிலேயே நின்று கொண்டிருந்தான்.

கடலுக்கு மேல் புறமாய், நகரை நோக்கி ஒரு விமானம் ஊர்ந்து கொண்டிருந்தது. விமானத்தைச் சுற்றிய விளக்குகள் வித்தியாமான வெளிச்சம் பரப்பின, விமானப் புழக்கம் இல்லாத நாங்கள் ஒருவரையொருவர் விமானத்தைப் பார்க்கச்சொன்னோம். புத்திசாலி(!) நண்பர் மட்டும் அது மலேசியன் விமானம் என்று “அடேய் நீ புத்திசாலிடா செல்லம்” என அவரை ஓட்டுவதற்கு அவரே வழிவகை செய்து கொடுத்தார்!

சுண்டல் சிறுவனும் அவனுக்கு தெரிந்த இன்னொரு விமானத்தைச் எங்களுக்குச் சுட்டிக்காட்டினான். அதுவரை அவனிடம் பேசாமல் இருந்த எங்களுக்கும் அவனுக்கும் இடையே இருந்த திரை அகன்றது. நண்பர் கொஞ்சம் மாங்காய்த் துருவல் போடு என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

அவன் வியாபாரம் பற்றிய பேச்சு திரும்பியது. அடுத்தடுத்து அவன் சொல்வதும் நாங்கள் கேட்பதும் என ஆரோக்கியமான ஒரு உறவு தொடங்கியது. தேனியைச் சார்ந்த அந்தச் சிறுவனின் பெயர் விஷ்ணு. இங்கு யாரோ சுண்டல் முதலாளி வீட்டில் தங்கி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். அவர்கள் தங்கவைத்து சோறு போடுவதற்காக இவன் தினமும் காலையில் காபி விற்பதும், மாலையில் சுண்டல் விற்பதும் என வேலை செய்து வருகிறான். காலையில் கொடுத்து அனுப்பும் காபியை 300 ரூபாய்க்கும், மாலையில் கொடுத்து விடும் சுண்டலை 700 ரூபாய்க்கும் விற்க வேண்டும். அப்படிச் விற்பனை செய்ய தினமும் 50 ரூபாய் சம்பளம். அதற்கு மேல் விற்றால் வரும் காசை அவனே எடுத்துக்கொள்ளலாம். குறைவான தொகைக்கு விற்றால் திட்டு விழும். உணவு தங்குமிடம் இலவசம். ஊரில் கூலி வேலை செய்யும் அம்மா மட்டும் அப்பா இல்லை, பள்ளியில் படிக்கும் தங்கை.

உடன் வந்திருந்த ஒரு நண்பர் சுண்டலுக்கு கொடுத்தது போக, கூடுதலாய் சில பத்து ரூபாய் நோட்டுகளை அவன் மறுத்த போதிலும் திணித்து பள்ளி நோட்டுகள் வாங்க வைத்துக்கொள்ளச் சொன்னார்.

பகலில் பள்ளி செல்வதும், காலையில் கடற்கரையில் காபி விற்பதும், நள்ளிரவு வரை சுண்டல் விற்பதும் என அவனுக்கு, அவன் வாழ்க்கையை வாழ நேரம் இல்லை என்பதும், அவனுக்கே உரிய பிள்ளைப்பிராயம் கடற்கரைக் காற்றில் கரைந்து போகிறது என்பதும் புரிந்தது. விளையாடித் தீர்க்க வேண்டிய மாலைப்பொழுதில், கற்கக்கூடாத வயதில், கற்கக் கூடாத பாடங்களையும், கடற்கரை அவனுக்குள் கற்றுத் திணிப்பதை, அவன் பேச்சில் உணர முடிந்தது.
தினமும் சம்பளமாகக் கிடைக்கும் 50 ரூபாயை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவும், அவ்வப்போது விற்பனையில் அதிகமாகக் கிடைக்கும்  தொகையை வைத்து சீட்டுப் போட்டு வருவதாகவும் சொன்னான். அதே சமயம் கடற்கரையில் சிலர் மிரட்டிப் பணத்தை பிடுங்குவது குறித்தும், தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள் குறித்தும் வேறு பட்ட மனநிலைகளோடு பேசிக்கொண்டிருந்தான்.

போகிற போக்கில் பேச்சு வாக்கில் ”எப்படியாச்சும் பத்தாவது முடிச்சுட்டா போதும்ணா” என்றான்.

பணம் கொடுத்த நண்பர் நிமிர்ந்து உட்கார்ந்து, தெம்பாக சொன்னார் “டேய் விஷ்ணு, படிப்பு ஒரு மேட்டர் இல்லடா, பத்தாவது படிச்சவங்க கூட இன்னிக்கு இந்தியா ஃபுல்லா யேவாரம் பண்றாங்க. ஜெயிக்க ஒரு லட்சியம் இருந்தா போதும், ஜெயிச்சுடலாம்டா” என்றார்.

“ஆமாண்ணே, பத்தாவது முடிச்சு எப்படியாச்சும் பால்டெக்னிக் காலேஜ் போகனும்ணே. அதுக்கப்புறம் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கி, கொஞ்ச நாள் டிரைவரா வேலைபார்த்துட்டு கொஞ்சம் காசு சேர்த்து, லோன் போட்டு ஒரு கார் வாங்கி ஓட்டனும்ணே, அதுதான் என்னோட ஆசை” என்றான்.

அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த, என் இன்னொரு நண்பர் தனது சட்டைப் பையிலிருந்து, சில நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவன் கால்சட்டைப் பையில் திணித்தார். அவன் தடுமாறி எவ்வளவோ மறுத்தான்.  

“டேய் நீ சொன்ன உன்னோட லட்சியத்துக்கும், உன்னோட தன்னம்பிக்கைக்கும்தான் இந்தக் காசு, படிக்கிற நோட்டுப் புஸ்தகத்துக்கு வெச்சுக்கோ, உன்னோட அண்ணன் தர்றதா நினைச்சு வெச்சுக்கோ” என்று அவன் மறுக்க மறுக்கத் திணித்தார். தனது முகவரி அட்டையைக் கொடுத்து 10ம் வகுப்பு முடித்தவுடன் கட்டாயம் அழைக்கச்சொன்னார். அதுவரை படிப்பு தொடர்பாக எதாவது உதவி தேவை என்றாலும் அழைக்கச்சொன்னார்.

இருள் கவிழ்ந்த அந்தக் கடற்கரைப் பகுதியில் எதோ வெளிச்சம் பரவியிருப்பது போல், மனதுக்குத் தோன்றியது. அவனுக்குள் தகதகக்கும் அக்னிக் குஞ்சு அவன் லட்சியத்தை நோக்கி நகர்த்தும் என்ற நம்பிக்கையை ஊட்டியது! நேரம் எங்களை அங்கிருந்து நகர்த்தியது, ஆனாலும் அவன் குறித்த பேச்சு நீண்ட நேரம் எங்களிடம் உயிர் வாழ்ந்தது.

நம் அக்கம்பக்கத்தில், முன்னும் புறமும் ஆங்காங்கே சிலபல விஷ்ணுகள் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண  பார்வையை கொஞ்சம் கூர்மையாக்குவதும், விசாலமாக்குவதும் தேவைப்படுகிறது. எல்லோருக்கும் எல்லா நேரமும் காசு மட்டுமே தேவைப்படுவதில்லை. பல நேரங்களில் ஏதோ ஒரு அடையாள நம்பிக்கையும், ஆறுதலாய் சில வார்த்தைகளும், மெலிதான தட்டிக் கொடுத்தல்களும் அவசியம் தேவைப்படுகிறது! முடிந்தவரை தட்டிக்கொடுப்போம், தட்டிக்கொடுக்கும் கைகள் வலிப்பதுமில்லை, தாழ்வதுமில்லை.

-0-


ஒற்றைப்புள்ளியில் கடக்கும் ஊர்திகள்

பின்னோக்கும் கண்ணாடி வழியே
நான் கண்ட அந்தச் சவஊர்தி
வெள்ளை உடலில் சிவப்பு வரிகளோடு
மெதுவாய்க் கடக்கிறது என்னை…

எத்தனை உடல்களைச் சுமந்திருக்கும்
எனும் வெற்றுப் பிரமிப்போடு
கடக்கும் வண்டியின் திரையில்லா
சன்னல் கண்ணாடியினூடே நோக்குகிறேன்

பசியோடு உணவெடுக்கச் செல்லும்
ஒரு பாம்பாய் வாகனத்தோடு
ஊர்கிறது தூக்குப்படுக்கை…

மரணவாசத்தை மறக்கடித்து
என்னுள் கொஞ்சமாய்ப் படிகிறது
பக்கவாட்டில் பிய்ந்து தொங்கும்
மாலையிலிருக்கும் எஞ்சிய பூவின் வாசம்…

எதிர் திசையிலிருந்து ஓங்கார ஊளையுடன்
எவரையோ சுமந்து கொண்டு
தலையில் நெருப்புக்குழல் சுழல
பறக்கிறது ஒரு அவசர ஊர்தி

ஒற்றைப்புள்ளியில் மிகச்சரியாய் கடக்கும்
அவசர ஊர்தியை அயர்ச்சியாய் நோக்கி
சலிப்போடும் பெருமூச்சோடும்
கொஞ்சம் பின்தங்கிக் கடக்கிறது சவஊர்தி
தனக்கான இரைதேடும் வேட்கையோடு !!

-0-

கிழியா மௌனங்கள்


ஒவ்வொரு முறையும்
நீ அடைகாக்கும்
மௌனங்களைக் களவாட
கள்ளச்சாவிகளை தயாரிக்கிறேன்
கவிதைகளின் வாயிலாக!

-0-
உன் மௌனக்குளத்தில் நானும்
என் மௌனக்குளத்தில் நீயும்
மாறிமாறி வார்த்தைக் கல் வீசுகிறோம்…
நகரும் அலைகளில் மிதப்பது
என்னவோ நாமேதான்!

-0-
வார்த்தைகளைக் கொன்று
மௌனக்கோட்டை கட்டுகிறாய்
ஒற்றை வார்த்தை அம்பில்
துளிர்க்கிறது ஒருநூறு வார்த்தைகள்
சரிகிறது கோட்டை
தொலைகிறது மௌனம்

-0-


உன் மௌனத்தை தின்று பசியாறி
கொஞ்சம் வார்த்தைகளைச் சுமந்து வா
என்னைத் தின்னும் மௌனத்திலிருந்து
என்னைக் கொஞ்சம் மீட்க!

-0-

என்ன சொல்லி வாழ்த்த ஈரோடு ஆட்சியரை?

மதியம் இரண்டு மணியளவில் நண்பரின் கைபேசியில் இருந்து அந்தக் குறுந்தகவல் வந்தது. வழமையாய் குறுந்தகவல் அனுப்பாத நண்பரிடமிருந்து குறுந்தகவலா என்ற ஆச்சரியத்தோடு திறந்து பார்க்க ”ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது மகள் கோபிகாவை குமலன்குட்டை அரசு ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பில் இணைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைவதாக”க் கூறியது அச்செய்தி.


வாசித்து முடிக்கும் போதே, உள்ளுக்குள் ஒரு வெப்பம் பூத்தது. எதையும் நம்பமுடியாத ஒரு சூழலுக்கு ஆட்பட்டேன். அவரிடம் அழைத்து செய்தி உண்மைதானா எனக் கேட்டபோது, அவருக்கு வந்த குறுந்தகவலை எனக்கு அனுப்பியதாகச் சொன்னார். மனசு பரபரத்தது. இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியம் மனதுக்குள் கிடந்து தவித்தது. 


குமலன் குட்டை அருகே தமிழக அதிரடிப்படையில் பணியாற்றும் நண்பனை அழைத்து பள்ளியில் விசாரித்து தகவல் கொடு என்றேன். எதேச்சையா ஃபேஸ்புக்கில் அரட்டையில் சிக்கிய நண்பர் அல்போன்ஸ் சேவியரை பள்ளிக்குச் சென்று கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். எனக்கே வியப்பாக இருந்தது எனக்குள் ஏன் இத்தனை அலைச்சல் என்று.

 

நண்பன் சிரிப்போடு அழைத்தான் செய்தி உறுதிதான் என்று, அடுத்த சிறிது நேரத்தில் சேவியர் அழைத்தார். ”உண்மைதான், படம் கூட எடுத்துள்ளேன் சிறிது நேரத்தில் அனுப்புகிறேன்” என்று. மனதுக்குள் ஒரு வெப்ப உருண்டை ஓடிக்கொண்டேயிருந்தது. வாழ்க்கை குறித்து நாம் கட்டமைத்து வரும் மாயைகள், அதன் மேல் பூசி வரும் வர்ணங்கள் குறித்து மிகப் பெரிய அயர்ச்சி தோன்றியது.


கிராமத்திலிருந்து நகரத்துக்கு நகர்ந்து வந்ததில், தொழிற்சூழல் ஒரு காரணமாய் இருந்தாலும் மகளின் கல்வி என்ற மாயைதான் மிகப் பெரிய காரணமாக முன்வைக்கப்பட்டது. குழந்தை வளரத் துவங்கியதும், எந்தப் பள்ளியில் சேர்த்துறீங்க என்ற இலவசக் கேள்விகளும், இந்தப் பள்ளியில் சேர்த்துங்க என்ற இலவச அறிவுரையும் பெரும்பாலும் கிராமத்தான்களை நகருக்கு நகர்த்தி வருகிறது என்பது என் அனுபவமும் கூட. தனியார் மெட்ரிக் பள்ளிதான் சிறப்பு என்ற நடுத்தரச் சிந்தனை எனக்குள்ளும் ஆழ வேரூண்டப்பட்டுள்ளதை உணரமுற்படும் போது, வெட்கம் பிடுங்கித் தின்கின்றது. மூனரை வயதில் பிள்ளைகளை பள்ளியில் திணித்து, அதைப்படி இதைப்படி என்ற திணிப்புகளில் அந்தக்குழந்தை தனது குழந்தைத்தன்மையை தொலைப்பதை எதிர்த்ததில் பலமுறை இல்லத்தில் யுத்தமும் நிகழ்ந்தேறியிருக்கிறது. எழுத்துக்குக்கும், சிந்தனைக்கும், எனக்கும் இருக்கும் இடைவெளிகள் கண்ணா மூச்சியாடிக் கொண்டிருப்பதை கனத்த வெட்கத்தில் மனது அமிழ்ந்து கிடக்கிறது. 


மாவட்ட ஆட்சியரின் மகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டது குறித்த குறுந்தகவலை நண்பர்களுக்கு, அனுப்புவதிலும், அது குறித்து சமூக வலைத்தளங்களிலும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்தாலும், அந்த செய்தி கிடைப்பதற்கு சிறிது நேரம் முன்புதான் மூன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகளின் பள்ளிக்கட்டணத்தை வங்கியில் செலுத்தி தந்தை கடமையாற்ற சிரமப்பட்டது குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தது. 


அடுத்த சிறிது நேரத்தில் ஆட்சியர் மகளைப் பள்ளியில் சேர்ப்பித்தது குறித்து செய்திகள் பரவலாகத் தொடங்கின. செய்தி இணையங்கள், தொலைக்காட்சிகள் என கவனம் பெறத் துவங்கின. அதன் மூலமும், நேரில் முயற்சித்ததிலும் அறிந்த செய்திகள் மிகச் சுவாரசியம் மிகுந்தது. 

நேற்று அரசு ஆணையின்படி பள்ளி திறந்து, வழக்கம் போல் பணியாற்றிக்கொண்டிருந்த குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர்  திரு. ஆனந்தகுமார் IAS வந்ததைக் கண்டு தலைமையாசிரியை திருமதி ராணி, உட்பட ஆசிரியைகள் திடீர் சோதனைக்கு வந்திருப்பதாக நினைத்திருக்கிறார்கள். ஆனால் தனது மனைவி, மகளோடு வந்த அவர், தனது மகள் கோபிகாவை இரண்டாம் வகுப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாற்றுச் சான்றிதழ் அளித்து கேட்டிருக்கிறார். 

 

இன்ப அதிர்ச்சியில் உறைந்த தலைமையாசிரியை, ஆட்சியர் அவர்களை தனது இருக்கையில் அமர வேண்டிருக்கிறார். அதை மறுத்த ஆட்சியர் சேர்க்கைக்கு காத்திருக்கும் பெற்றோருக்கான பலகையில் அமர்ந்து, படிவத்தைப் பூர்த்தி செய்து தனது மகளை சேர்த்திருக்கிறார்.  கோபிகா இதற்கு முன் தருமபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்திருக்கிறார். முதல் நாள் வண்ண உடையில் வந்த தனது மகளுக்கு சீருடை கிடைக்குமா எனக் கேட்டதற்கு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் சீருடை தருவதாக தலைமையாசிரியை கூற சத்துணவுப் பட்டியலிலும் தமது குழந்தையை இணைக்க வேண்டியிருக்கிறார். மகளின் சேர்க்கை குறித்து கருத்துக் கேட்ட செய்தியாளர்களிடம் இது தனது தனிப்பட்ட விசயம் எனவும் கூறியிருக்கிறார் ஆட்சியர். 

 

 

ஆட்சியரின் மனைவி ஸ்ரீவித்யா அவர்கள் மருத்துராக அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். ஆட்சியர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் 36 வயதான  கால்நடை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்குழுவில் தேர்வு பெற்றவர். முதன் முறையாக தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டு, சமீபத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டவர். ஒரு கிராமப் பின்னணியைச் சார்ந்தவர், கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர் என்பது மகிழ்ச்சிக்குரியது.  


மதியத்தில் மனதில் வெதுவெதுப்பாய் குடிபுகுந்த அந்தக் குழந்தையின் சேர்க்கை, இரவு முழுதும் ஒரு மாதிரி தூக்கத்தில் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. அதிகமுறை விழித்த இரவாகக் கூட இருந்தது. பல இடங்களில் எதையும் செய்யத்துணியாமல் மாற்றம் மாற்றம் எனவிரும்பும் மனது குறித்து குறுகுறுத்தது. கல்வி எனும் காரணத்தை முன்னிறுத்தி என் மகளை நகரக் கூண்டுக்குள் அடைத்து ஒரு கூட்டுக்குடும்ப அற்புதத்திலிருந்து வெளியேறிய வலி கடுமை காட்டியது. பகட்டுச் சூழலில் நாமே வழிய சிக்க வைத்த குழந்தைகளின் வாழ்வை அதிலிருந்து இனி மீட்க முடியுமா என்ற கேள்வி மனதுக்குள் இருளை விதைத்தது.


கடனை வாங்கியாவது ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் சேர்க்கும், எதற்கும் அடிமைப்பட்ட புத்திஜீவிகள் நிறைந்திருக்கும் உலகத்தில், நன்கு கற்றறிந்த தம்பதி தங்களது மகளை தமிழ்வழியில், தங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அரசுப் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் இணைக்க முனைந்ததை வெறும் எளிமை என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் முதல் எழுத்தாகவே தோன்றுகிறது.


சமீப ஆண்டுகளில் தமிழ் சமூகத்தை அடிமைப்படுத்தியுள்ள ஆங்கிலக் கல்வி மோகத்தை சற்றே தணிக்கவும், பல அழுத்தங்களுக்கிடையே, மிகச் சிரமப்பட்டு தனியார் ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களின் பிடியில் அடிபட்டுக் கிடக்கும் பெற்றோர்களின் அழுத்தங்களை விடுவிக்க இது ஒரு சிறு திறவுகோலாக இருக்கும். திணறித் திணறி கட்டணம் கட்டி, சீருடை வாங்கி, காலணிக்குள் கால் திணித்து, பலமடங்கு விலை கொடுத்து புத்தகம் வாங்கி, வாகனத்தில் அனுப்ப கையசைக்கும், நடுத்தர மற்றும் அதற்கும் கீழான வர்க்க மனிதர்கள் தங்களுக்குள் பூட்டியிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைக்க இது ஒரு சுத்தியலாக இருக்கலாம், இருக்கும். ”போங்காடா நீங்களும் உங்க…….” என உடைபட்டு, ”ஆட்சியரே தன்மகளை அரசுப் பள்ளியில் இணைக்கும் போது எனக்கு மட்டும் என்ன” என வெளியே வர ஏதுவாக இருக்க இது ஒரு தூண்டுகோலாக இருக்கலாம்.


ஆட்சியர் தனது மகளை அரசுப் பள்ளியில் இணைத்தது தனது தனிப்பட்ட சுதந்திரம் எனக் கூறிய பின்னர் அதுகுறித்து எந்த விமர்சனத்தையும் வைப்பது மூர்க்கத்தனமானது. அதே சமயம் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது.


ஈரோடு மாற்றங்களின் பிறப்பிடமாக பல நேரங்களில் இருந்திருக்கிறது. அது போன்றதொரு மாற்றத்தை குமலன்குட்டை ஊராட்சிய ஒன்றியத் துவக்கப்பள்ளியில், அழுத்தம் நிறைந்த தேவையான பொழுதில் மிகச் சிறந்த ஒரு இளைஞர் ஏற்படுத்திக் காட்டியிருக்கிறார். இந்த மாற்றத்தின் வெளிச்சம் ஒட்டு மொத்தமாக கல்வி மேல் இருக்கும் மாயையைக் கழுவித் துடைக்க உதவும் என்று பெரிதும் நம்புகிறேன்.


மதிப்பிற்குரிய இளைஞரை எங்கள் ஆட்சியராகப் பெற்றதில் பெருமகிழ்வெய்துகிறேன். அவரின் அற்புதமான உதாரணச் செயலுக்கு வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.

-0-

இலங்கையின் படுகொலைக் களம்

இலங்கை இனப்படுகொலையின் வலிமிகு காட்சிகளை சேனல்-4  வெளியிட்டுள்ளது.
-0-

குளிச்சுப்பாருங்க!

தென்மேற்கு பருவமழை துவங்கியதாக அறிவிப்புகள் வந்த போதிலும், அதைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், எங்கள் பகுதியை மட்டும் வஞ்சித்து வரும் மேகக்கூட்டம், வெயிற்காலம் முடிந்தும் அடித்து வீழ்த்தும் வெயில் என ஈரோடு இன்னும் கசகசத்தே கிடக்கிறது. இந்நிலையில் நண்பர் சேது, தங்கள் குடும்பம் சார்பில் ஏற்பாடு செய்த கிடா வெட்டு விருந்துக்கு வேலூருக்கு அழைத்தார். பதிவுலக நண்பர்களோடு ஆசனூர் வந்ததிலிருந்து, எங்களோடு அவரும் ஒரு அங்கமாக மாறிவிட அழைப்பு எல்லோருக்கும் பொதுவானதாக மாறியது.

கிராமத்துச் சாலை

இடையார் வாய்க்கால் மேலே

செமக் கட்டு!

நண்பர்களோடு


நான், ஆரூரன், கார்த்தி, ஜாபர், பைஜு, சரவணன் என, வழக்கம் போல் பத்து மணிக்கு கிளம்பத் திட்டமிட்டு வழக்கம் போல் பதினொரு மணிக்குக் கிளம்பினோம். தடபுடலான விருந்தில் தாகம்(!), பசியடங்கி திரும்பும் வழியில் ஜாபரின் அன்பு நச்சரிப்பில் ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்குச் சென்றோம்.

காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து, ஆற்றின் கிழக்குப் பகுதியில் இருக்கும் பல ஊர்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் செலுத்தப்படுகிறது. ராஜ வாய்க்கால், கொமராபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால் என வேலூர் பகுதிகள் செழித்து வளர இந்த வாய்க்கால்களே காரணம்.

தென்னையும் கரும்பும்!

வெயிலோடு விளையாடி!

ஆட்டம் போடும் ஜாபர், சரவணன்

சரவணனும், நானும்


சரியான மாலை வெயில், தகதகக்கும் தண்ணீர், சலசலத்து ஓடும் நீரின் வெள்ளை நுரை என அடுத்த சில நிமிடங்களில் எல்லோரையும் நீருக்குள் தாவிக்குதிக்க வைத்தது. தடுப்பணையில் நிறுவப்பட்டுள்ள மதகுகளின் வழியே பீறிட்டு வரும் நீர், அருவியின் தாக்கத்தை உடலில் செலுத்துகிறது. ஓடிய நீரில் விளைந்து கிடக்கும் பாசியில் வழுக்கி விழுந்து, நீரில் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டு, சிரித்தவாறு எழுந்து வருவதும் கூட ஒரு இடைவிடாத விளையாட்டாகவே இருக்கிறது. வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிகிறது வயது கூடிப்போனதும், விழுந்ததில் பிறந்து வளர்ந்திருக்கும் வலியும்.

அணைத்தடுப்பில் வழியும் நீரோடு விழும் மீன்கள், விழுந்த வேகத்தில், சரியும் நீரிற்கு எதிராக ஆள் உயரத்திற்கு குதிக்கும் உற்சாகத்தை அலுப்புத் தீர ரசித்துக் கொண்டேயிருக்கலாம். சுற்றிலும் நுரை பொங்க புதிதாய் விழும் நீர், உடல் வெப்பத்தைக் கரைத்து குளிர்ச்சி புகுத்தும் ஓடும் நீரின் வேகம் என அனுபவித்து ரசிக்க அழகியதொரு இடம்.

பைஜு, ஜாபர்

மதகு அருவிகள்

தடுப்பணையில் தாவி வழியும் நீர்

நீல்வானமும்,  நீர் ஓட்டமும்


அதே சமயம், பாதுகாப்பான ஒரு சுற்றுலாத்தளம் என்றும் சொல்லமுடியவில்லை. தண்ணீரோடு(!) தண்ணீருக்கு வந்து தலையெழுத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் தண்ணீருக்குள் உடைந்த கண்ணாடித் துண்டுகள் ரத்தக் காவு வாங்குவதையும் மறுக்கமுடிவதில்லை.

வரும் சீசனுக்கு குழுமம் சார்பில் குற்றாலம் போயே தீரவேண்டும் எனச் சொன்ன நண்பரும் கூட, குற்றாலம் போறதுக்குப் பதிலா இன்னொரு தடவை இங்கேயே வந்து குளிச்சுக்கலாம்பா என்றார்.

-0-

நான் யாருன்னு நெனைச்சிக்கிட்டானாம்

காலை அலுலகம் அருகில் நெருங்கும்போது, அலுவலக வாசலையொட்டிய சாலையில் ஏதோ மிகப்பெரிய மாறுதலை உணர முடிந்தது. வழக்கத்தை விட வெட்டவெளியாக, கூடுதல் வெளிச்சமாக இருப்பது போல் தோன்றியது. என்னவாக இருக்கும் என யோசித்தாலும் ஒன்றும் புரிபடவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பரோடு சாலையைக் கடக்கும்போது, ”என்னவோ வித்தியாசம் தெரியது என்னாச்சு” எனக்கேட்டபோது அவர் சொல்லித்தான் உணரமுடிந்தது. எதிர்புறம் இருக்கும் அரசு அலுவலக வளாகத்திற்குள், வளாகச் சுவரையோட்டி இரண்டு பக்கமும் இருந்த மரங்களில் உள் பக்கம் இருந்த மரம் அடியோடு விழுந்திருந்தது. பின்னரவில் அடித்த மழையும் புரட்டியெடுத்த காற்றும் அந்த மரத்தை அடியோடு வீழ்த்திப்போயிருந்தது புரிந்தது.

யாராவது விதை போட்டோ, அல்லது பறவையிட்ட எச்சத்தில் வீழ்ந்து தப்பிப் பிழைத்தோ செடியாய் முளைத்து, வளர்ந்து நிமிர்ந்து கிளைபரப்பிய மரத்தின் வாழ்க்கை ஒற்றைக் காற்றில் முடிந்துபோனதை நினைக்கும் போது, கூடுதல் சங்கடமாய் இருந்தது. சுவர்களின் இருபக்கமும் இணையாய் இரண்டு மரங்கள் இருந்ததால் இரண்டின் கிளைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து பரந்துபட்டு நிழலைக் கொட்டியதில் அங்கிருந்தது இரண்டு மரங்களா என்பது கூட பத்து ஆண்டுகளுக்கு மேல் அதே பகுதியில் புழங்கிய எனக்கே நினைவில் பதியவில்லை. இரண்டு மரங்களும் இணைந்து பரந்து வஞ்சனையில்லாமல் வழங்கிய நிழல், இப்போது ஒற்றை மரத்தின் கிளைகளில் கசியும் சூரியக் கதிர்களில் நீர்த்துப் போய்க் கிடந்தது.நீர்த்துக் கிடக்கும் நிழலை அடர்த்தியாக்க, இன்னொரு விதை செடியாக முளைத்து, மரமாக நின்று, கிளைகள் பரப்பி…. ம்ம்ம்ம்… நடக்கலாம், நடவாமலும் போகலாம். எனினும் ஒவ்வொரு நிகழ்வும் பக்கம் பக்கமாய் ஒரு பாடத்தை கிறுக்கிச்செல்கிறது. வாசிக்க மனமுள்ளவர்களுக்கு அது ஒரு அழகிய பாடம், வெறுமென புரட்டிப்பார்ப்பவர்களுக்கு அது சில பக்கங்கள். 

ஒரு செடியோ, மரமோ, கோட்டையோ, ஆட்சியோ, வாழ்க்கையோ… வேர்விட்டு கிளைபரப்பி திடகாத்திரமாய் நிற்பது என்பது ஓரிரு நிமிடங்களிலோ, ஓரிரு மணிகளிலோ நிகழ்ந்து விடுவதில்லை, ஆனால் அது சரிந்து போக ஒற்றை நிமிடமோ, ஓரிரு மணிகளோ அல்லது ஓரிரு நாட்களோ போதுமானதாகவே இருக்கிறது.

உதாரணங்களை அடுக்கினால், இதுவரை நாம் கண்ட அத்தனை முறிவுகளும், விபத்துகளும், கொலைகளும், சரிவுகளும், வீழ்ச்சிகளும், அழிவுகளும் வரிசை கட்டி நிற்கும். எதுவும் என்னை அசைக்கமுடியாது என்று நீண்ட நெடுங்காலம் வறட்டு நம்பிக்கைகளை ஒற்றை நிகழ்வுகள் அடித்து நகர்த்திப் போனதும் வரலாறுகளில் பதிவாகித்தானே இருக்கின்றன.
தொடர் வெயிலைப் புரட்டிப்போடும் ஒற்றைப் பெரு மழையாகட்டும், பதவியேற்கச் சென்ற அமைச்சரின் எதிர்கால வரலாற்றை விநாடியில் முறித்துப் போட்ட விபத்தாகட்டும், இலவசங்களால், பணத்தால் அடுத்ததும் ஆட்சியென கட்டமைத்த மாயைகளை வீழ்த்திய ஒரு பகல் பொழுது வாக்குப் பதிவாகட்டும், திட்டமிடலில் உலகின் மிகப்பெரிய சூத்திரதாரி என உலகமே வியந்தவனை ஒரு முக்கால் நேர மணி இரவில் வீழ்த்திய யுக்தியாகட்டும்….. எல்லாம் சட்டென நிகழ்ந்து நின்று நிதானிப்பதற்குள் கடந்து போய், எல்லாவற்றையும் வீழ்த்தும் வல்லமை இன்னொன்றுக்கு இருக்கிறது என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றது.

குறுக்கும் நெடுக்கும் கோடுகளாய் ஓடும் சிந்தனைகளை இறுகப் பிடித்து, அடுக்கடுக்காய் மனதில் படியவைத்து, நிதானமாய் அதை அசைபோட்டு, அடர்மௌனம் சூழ அமைதியாக, உள்மனது இறுகிக் குழையும் தருணத்தில், அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் உதவியால் தனக்குள் இருக்கும் இன்னொருவனைக் கண்டறிந்த புத்திசாலி “டேய்… எவனும் என்ன ஒரு மசிரும் புடுங்க முடியாதுடா, நான் யாருன்னு நெனைச்சிக்கிட்டானாம்” என ஓங்காரமாய்க் குரல் கொடுத்துக்கொண்டே தள்ளாடி என் கண்களிலும், காதுகளிலும் நிரம்பியவன் மெதுவாய்க் கரையத் தொடங்கினான்

---------------------------------------

பொறுப்பி: சிறகு இதழில் வெளி வந்த கட்டுரை. சிறகு ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள்

-0-

சிகரெட் வாசம்

ஊரில் இருக்கும் மகளிடமிருந்து அடுத்தடுத்த அழைப்புகள், தன் பள்ளிக்குச் சென்று அவளுடைய சீருடைகளை வாங்கிவருமாறு. அன்று தாமதமாய் மூன்றரை மணிக்கு மேல் சாப்பிடப் போனவன், சாப்பிடாமல் கூட சீருடைக்கான காகிதத்தை எடுத்துக்கொண்டு பெருந்துறை சாலையில் இணைய குமலன்குட்டை செல்லும் வீதியில் வாகனத்தை விரட்டினேன். 

அது கொஞ்சம் குறுகலான வீதி. அந்த வீதியில்தான் அதிரடிப்படை முகாம் காவல்துறைக் கண்காணிப்பாளரின் அலுவலகம் இருக்கிறது. என்னோடு ஐந்தாம் வகுப்புவரை படித்த நண்பன் அங்குதான் பணியாற்றுகிறான். ஒவ்வொரு முறை அந்த வீதியைக் கடக்கும் போது அனிச்சையாய் அந்த அலுவலகத்தை ஒவ்வொருமுறையும் அவன் நினைவோடு பார்ப்பதுண்டு.

இன்றைக்கு அந்த வீதியில் நுழையும் போதே, அலுவலகத்தின் முன்புற வீதியையொட்டி மறுபுறம் இருக்கும் திட்டில் யாரோ உட்காந்திருப்பதைப் பார்த்தேன். தொலைவிலிருந்து பார்க்கும் போதே அவனாக இருக்குமோ எனத்தோன்றியது. அவன்தான். மிக அருகில் வண்டியை நிறுத்தினேன். சிகரெட் வாசம் அடர்த்தியாய் அடித்தது. அலைபேசியில் இறுக்கமான முகத்துடன் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான். சட்டென எழுந்தவன் தன் கவனத்தை முழுக்க முழுக்க போனில் ’ம்’ கொட்டுவதிலேயே செலுத்தியவனாய் எனது இடது கை மணிக்கட்டு அருகே அழுத்தமாகப் பிடித்தான். சில நொடிகள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாய் பார்த்துக்கொண்டோம். என்னைப் பிடித்திருந்த இறுக்கத்தில் இத்தனை வருடமாய் அடைகாக்கும் நட்பின் வெதுவெதுப்பு எனக்குள் ஊடுருவியது போல் உணர்ந்தேன். அவன் கவனம் அந்த அலைபேசி உரையாடலில் இருந்து மீளவில்லை.

”டேய்….. இங்கேதானே இருப்பே”

ஆமாம் எனத்தலையசைத்தான்

”உடனே போய்ட்டு வந்துடுறேன்” என வார்த்தையாலும், சைகையாலும் சொல்லியவாறு கிளம்ப யத்தனித்தேன்.

சரி என தலையை ஆட்டி விட்டு கையை எடுத்தவன், தொடர்ந்து ’ம்’ என போனில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

ஆழ்ந்து இறுக்கமாய்க் கிடந்த அந்த போனில் இருந்து அவனைப் பிரிக்க நானும், என்னுடைய அவசரத்தைத் தாமதிக்க அவனும் விரும்பவில்லை என்பதாக தோன்றியது. சட்டென அவனைப் பார்த்ததும், அவன் இறுக என் கை பற்றியதுமே அப்போதைக்கு மிக நிறைவாக இருந்தது.

பெருந்துறை சாலை இணைப்புக்கு வந்தடையும் வரை என்னோடு அந்த சிகரெட் வாசம் உடன் வருவது போல் உணர்ந்தேன். சட்டென இடது கை மணிக்கட்டை நுகர்ந்து பார்த்தேன். வழக்கமாய் பிடிக்காத சிகரெட் நாற்றம், அப்போது கொஞ்சம் பிடித்த வாசமாகவே இருந்தது. பள்ளிக்கூடத்தை அடையும் வரை வழியெங்கும் மனது அவனையே சுமந்தது. மிக மெதுவாய்ச் சுழலும் ஒரு காற்றாடி போல் மனதுக்குள் கிறுகிறுப்பாய் அவன் குறித்த சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தன. 

அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம், தவிர்க்க இயலாமல் அவன் கையைப் பார்ப்பதுண்டு. பார்க்க அடர்த்தியான காரணமுண்டு. மூன்றாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன், அவன் கையில் நீளமாக பிளேடால் கிழித்துவிட்டேன். பென்சில் சீவிக்கொண்டிருக்கும் போது நடந்ததாக நினைவு, எப்படி நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. முழங்கைக்கு கீழே மூன்று அங்குலம் நீளம் இருக்கும்., உள்பக்கமாக, தையல் இட்ட தடிப்பு போல் இன்றும் நீண்டு கருத்துக்கிடக்கும் அதன் தழும்பு.

அப்போது அவன் அம்மாயி வீட்டில் வளர்ந்தான். கிழித்த அன்று மாலையே அவனை இழுத்துக்கொண்டு அவன் அம்மாயி எங்கள் வாசலில் நின்றது. என்னனென்னவோ கேள்விகள் திட்டுகள். காலம் கரைந்ததில் அவை எல்லாம் மறந்து போய்விட்டன. மறக்காமல் இருப்பது, அந்தக் காயத்திற்கு அவன் என்னைத் திட்டாதது, குறை சொல்லாதது, பகைக்காதது. அடுத்த நாளில் இருந்து எனக்கு அவனைச் சந்திக்க கூச்சமாயிருந்தது, ஆனால் அவன் மிக இயல்பாக என்னோடு பழகியது இப்போதும் பசுமையாய் நினைவிலிருக்கிறது. நினைவுகளை அலைந்து, சீவி வகிடெடுத்து பூச்சூடி முடிக்கும் போது, பள்ளியை எட்டியிருந்தேன். 

சீருடை வாங்கி, பள்ளித் திறப்பு எப்போது எனக் கேட்டு, பசியோடு வீட்டுக்குத்திரும்பி, மாடியேறி, முகம் கழுவ குழாய் திறந்து குனிந்து கைகளில் தண்ணீர் ஏந்தும் போதுதான் மணிக்கட்டு கண்ணில்பட அவன் நினைவுக்குள் குப்பென பூத்தான், ஏதோ சிந்தனையில் வேறு வீதிவழியாக வீடு வந்தடைந்ததை நினைத்து மெலிதாய் வெட்கம் சூழ்ந்தது. முகத்தில் தண்ணீரை அறைந்துவிட்டு கையைத் திருப்பி முகர்ந்து பார்த்தேன் சிகரெட் வாசம் ஏதும் அங்கில்லை!

அதன் பின் வந்த சில நாட்களுக்கு, இடதுகை மணிக்கட்டைப் பார்க்கும் போதும், சிகரெட் புகை வாசம் எங்கிருந்தாவது பரவி நுகரும் போது அவன் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை

-0-

கீச்சுகள் – 3எதிரி என்று சொல்லி உதவாதவன் எதிரி. நான் இருக்கேன் என்று சொல்லி முதுகில் குத்துபவன் துரோகி!

-0-
விபத்துகளும் கொலைகளும் காலம் காலமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. பெரிய தலைகள் பலியாகும் போது மட்டும் அவற்றுக்கு நிறைய வர்ணம் பூசப்படுகிறது

-0-

பரபரப்பான செய்திகள் எல்லாமே முதல் முறைதான் பரபரப்பாக இருக்கின்றன

-0-

வாசலாய் இருக்கும் மொட்டைமாடியில் விழுந்து துள்ளி விழும் மழைத்துளிஎல்லாவற்றையும் விட அழகாய் இருக்கு

-0-

கடைக்காரருக்கு விற்பனை பெருகுகிறது. நம்பி வாங்குபவருக்கு சுமைஏறுகிறது # அட்சய திருதியை

-0-

இந்த ஆண்டும்வழக்கம்போல் மாணவிகள்அதிக தேர்ச்சி - வழக்கமானசெய்தி # தியாகிகளை கௌரவிக்காத உலகம்யா இது!

-0-

டாஸ்மாக் சந்து சண்டைகள் மண்டை உடையும் போதோ, மட்டையாகும்போதோ முடிந்துவிடுகிறது # வேடிக்கை

-0-

கேள்விக்கு உட்படுத்தாமல், புனிதப்படுத்தும் எல்லாமே மூடத்தனமாகிறது

-0-

கேள்விக்கு, எதிர் கேள்வியை பதிலாக்குவது புத்திசாலித்தனமா!?

-0-

ஒரிஜினல்களை அருகில் வைத்துக்கொண்டு டுப்ளிகேட்களை வடிவமைக்கும்போது ஒரிஜினல்களை விட நேர்த்தியாக, தெளிவாக அமைந்துவிடுகிறது பலநேரங்களில்!!!

-0-

ஒரு விடியலில் உலகின் அத்தனை கைபேசிகளும் உயிர் விட்டுவிடக்கூடாதா!!!? # பேராசை!

-0-

ஹீரோ () ஹீரோவின் தம்பி இண்டர்வியூக்கள் போகும்போது ஒரு போன்வரும். திறமையிருந்தும்(!) வேலை வேறு ஒருத்தருக்குப்போகும் # 1980’s cinemas

-0-

ஆண் நுளம்பு (கொசு) நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான் – (நன்றி பழமைபேசி)
# கல்யாணம் ஆனவங்க அத்தனை பேரும் இத ஒத்துக்குறீங்க தானே!? :)))

-0-

தங்களை அறிவாளிகளென அறிவாளிகள் காட்டிக்கொள்ளாத போதும்கூட, அவர்களை அறிவாளிகள் என அடையாளம் காண்பதும் கூடஅறிவாளித்தனம்தானே # முடியலத்துவம்!

-0-

அடி அடின்னு செமத்தியா அடிச்சு வெச்சுட்டு ஆணியப் புடுங்குன்னு சொன்னா ராம்ஜெத்மலானி மட்டும் எப்படி புடுங்குவாரு?

-0-

துரோகிகளுக்கு எப்போதும் பகைவனிடம் மாலை மரியாதை கிடைக்கும் தற்காலிகமாக -

-0-

காலச்சக்கரம் தட்டாமாலை சுற்றியதில் தவறவிட்ட சில நட்புகளைஇணையம் மீட்டுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

-0-

புத்தாண்டு நள்ளிரவில் வாழ்த்துச் சொன்ன உற்சாகத்தில், எத்தனை சதவிகிதம் ஆண்டின் மையத்துக்கு அருகாமை நாட்களில் மிச்சமிருக்கிறது!?

-0-

வெள்ளவேட்டி தோள்ல பை - கைரேகை பார்க்கலாமா சார்னு தெனம் ஒரு ஆள் எட்டிப்பார்க்குறான். அதுல யாரோ ஒருத்தனுக்கு நேரம் சரியில்லனு நினைக்கிறேன்!

-0-

பூட்டிய கதவை உடைத்துக் கொள்ளை - செய்தி
# வெண்ண, பூட்டாத கதவை யாராச்சும் உடைப்பாங்களாய்யா!?

-0-

காலை 9 மணிக்கு எந்த வீதியில் பார்த்தாலும் வாசலில் இரண்டுபெண்களாவது பாதிமுகம் நுரைபடிய, பரபரவென பல் தேய்த்துக்கொண்டுநிற்கிறார்கள்!

-0-

ஊழல் பெருகிய அளவிற்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு பெருகாவிடினும், முனகல், புலம்பல், குமுறல் பெருகிவிட்டது # எங்கே செல்லும் இந்தப்பாதை!?

-0-

சில நேரங்களில் அதீத விருப்பு, பல நேரங்களில் அதீத விரக்தி # வாழ்க்கை!

-0-

4 வருடம் காதலித்து நேற்றுதான் காதலைச் சொன்னாராம், அந்தப்பொண்ணு இன்னும் 5 வருசம் வெயிட் பண்ணச் சொல்லுச்சாம் #சன்மியூசிக் காதல் அற்புதங்கள்

-0-

எதற்கும் எதிர்ப்பே வரக்கூடாது என நினைப்பதுதான் கதாநாயகத்தனமோ!?


-0-

சில அழைப்புகளை எடுக்கும் போது, ஏதோ சிலவற்றை அவர்கள்கேட்டுவிடக்கூடாதே என்று நினைத்துக்கொண்டே எடுக்கிறோம்

-0-


பொறுப்பி: அவ்வப்போது ட்விட்டரில்கிறுக்கியகீச்சுகள்’. அங்கேயே படித்து நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும் வழக்கம்போல் சின்ன எழுத்துல போட்டுடுவோம்)

-0-