எங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மகளிர் காவல் பிரிவினர், அதாவது கிரேட் 1, 2 காவலர்கள், எழுத்தர், தலைமைக் காவலர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள். ஒவ்வொரு வாரமும் இவர்களில் எல்லா நிலைகளிலும் இருந்து சுமார் நூறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டனர்.
அதற்காக ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் வகுப்பெடுக்க வருவது வழக்கம். அப்படி ஒரு புதன்கிழமை, காவலர் பயிற்சி கல்லூரி முதல்வரிடம் பயிற்சி அறையின் இருக்கைகளை வேறு மாதிரி அமைத்துத் தருமாறு கேட்டோம்.
அடுத்த சில நிமிடங்களில் காக்கி அரைக்கால் சட்டையும், வெள்ளை பனியனுமாய் சில இளைஞர்கள் தடதடத்து வந்தனர். பரபரவென நாற்காலிகளை அகற்றி, மற்றொரு அறையில் இருந்து வேறு விதமான நாற்காலிகளை போட்டு நாங்கள் கேட்ட மாதிரி அமைத்துக் கொடுத்தனர்.

அந்த இளைஞர்களில் ஒரு முகம் மிகப் பழகியதாக இருந்தது. ஒட்ட வெட்டப் பட்ட முடி, பனியன், அரைக்கால் சட்டை என சட்டென அடையாளம் தெரியவில்லை. நான் உற்றுப் பார்த்த போது என்னைப் பார்த்து புன்னகைத்தார் அவர், நானும் புன்னகைத்தேன்.
சற்று நெருங்கி வந்து “என்னடா... மாப்ள, தெரியலையா?” என்ற போது
தெரிந்து விட்டது அது... அவன்... குமணன். நன்கு பழக்கப்பட்ட நண்பன். ஆனால் பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்கும், அதே சமயம் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை.
“ஏய் குமணனா... என்னடா இங்க... ட்ரெயினிங்லே இருக்கியா?”
“எஸ்.ஐ ட்ரெயினிங்ல இருக்கேன்டா மாப்ள” என்றான்.
அந்த இருக்கைகளை எடுத்துப் போட்டவர்கள் அனைவரும் உதவி ஆய்வாளருக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருப்பவர்கள் என்பது அப்போதுதான் புரிந்தது,,
பரஸ்பரம் சிறிது நேரம் உரையாடி விட்டு கிளம்பும் போது உதிர்த்த வார்த்தைகள் தான் என்னவோ செய்தது.
“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்...
மிகக் கடுமையான காவல் அதிகாரிகளைப் பார்க்கும் போது, கேள்விப்படும் போது ஏனோ குமணன் என் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது.