தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்
ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில், எனக்கு அடுத்தடுத்துப் பல அனுபவங்கள் அமைந்தன. ஆனால், அதிலிருந்த சுவாரஸ்யம் அனைத்தும் ஒரே மையப்புள்ளியைக் கொண்ட அனுபவங்கள் என்பதுதான்.
அந்தத் தினத்திலிருந்து, இரண்டு வாரம் கழித்து, “90% கோபம் கம்மி பண்ணிவிட்டேன்” என்று அந்தத் தம்பி அனுப்பிய வாட்சப் தகவல் இப்போதும் மனதிற்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது.
90% கோபத்தைக் குறைப்பது அத்தனை எளிதா என்ன? அது அத்தனை எளிதில் வசப்படாத ஒன்றுதான். கோபம் கணிசமாகக் குறைந்திருக்கலாம். கோபம் வரும் தருணங்களில் எங்களின் உரையாடல் நினைவில் வந்து போயிருக்கலாம்.
அந்த உரையாடல் அன்று வாய்த்ததற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு.
சரி... அன்று நடந்தது என்ன...!?
01
அதுவொரு செவ்வாய்க்கிழமை. காலை ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தேன். அன்று அந்த நிகழ்ச்சியில் பேசுவது தவிர்த்து, வேறு எந்தத் திட்டமிடலும் முந்தைய இரவு வரை இருக்கவில்லை.
முந்தைய இரவு, ஒருவர் தொடர்பு கொண்டு, 'நாளைக் காலை நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சிறிது நேரம் உரையாட முடியுமா?' எனக் கேட்டார். நாங்கள் அவ்வப்போது ஃபோனில் உரையாடிக் கொள்கிறவர்கள்தான். நேரில் என்றதும் குடும்ப விசயம் குறித்து இருக்கலாம் எனக் கருதினேன். குடும்ப விசயம் குறித்து நேரில் ஒருமுறையும், ஃபோனில் சில முறையும் உரையாடியிருக்கின்றேன். சந்திக்கலாம் என ஒப்புதல் தெரிவித்தேன்.
அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வந்துவிட்டார். நிறைவடையும் வரை காத்திருந்தார். நிகழ்விலிருந்து விடைபெற்ற பிறகு, இடம் தேர்ந்து அவருடன் உரையாடல் தொடங்கினேன். கருதியதுபோல் குடும்ப விசயம்தான். எளிய குடும்ப சிக்கல். ஆனால் முடிச்சு இறுகிக் கொண்டேயிருக்கின்றது. அவர் தனியே நின்று அனைத்தையும் அமைதிப்படுத்தி, சரி செய்துவிட முயற்சி செய்கிறார். ஆனால் அவர் மட்டுமே தனித்து எதுவும் செய்ய முடியாது. அதனால் எப்படி சரி செய்வது என்பதில் பெரும் குழப்பம். காரணம், சரி செய்ய வேண்டியதில் இவருடைய பங்கு குறைவானது. சிக்கலை இறுக்கிக்கொண்டே செல்லும் மற்றவர்கள்தான் அதனை சரி செய்ய வேண்டும்.
முன்பே அது பற்றி நாங்கள் பேசியிருக்கின்றோம். அவர் தீர்வு காண விரும்பினாலும், அவரிடம் மட்டுமே பேசுவதால், எதுவும் நகராது. தொடர்புடையவர்களில் ஒருவரிடம் பேசுவதுதான் முக்கியத் தேவை. ஆனால் அவர்கள் உடன்பட மாட்டார்கள். அனைவருக்குமே தாம் செய்வதுதான் சரியென்றிருக்கலாம் அல்லது தாம் ஒரு சிக்கலில் உள்ளோம், அதற்கான தீர்வை தாம்தான் தேட வேண்டும் எனும் தெளிவில்லாமல் இருக்கலாம்.
நீண்ட நேரம் அந்த உரையாடலை எடுத்துச் செல்லத் தேவை இருக்கவில்லை. ”உங்க வருத்தம், வலி புரியுது. ஆனா, நீங்க மட்டுமே சொல்யூசன் உருவாக்க முடியாது. அவங்களும் உடன்படனும். அவங்கள்ல யாராவது ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்க. அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க. அவங்களாகவே ஆதரவோ அல்லது ஆலோசனையோ தேடும் ஒரு புள்ளி இருக்கும், அதை அவங்க அடையும்போது, ஜஸ்ட் நீங்க தோளைத் தொட்டால் போதும், சரினு சொல்லிடுவாங்க. வரட்டும் பேசிப் பார்ப்போம். எது தேவையோ, யாரிடம் சரி வருமோ, அதற்கு ஏற்பாடு செய்வோம்!” என்று உறுதியளித்தேன்.
அவர் எவ்வளவு தூரம் மனதளவில் திருப்தி அடைந்தார் எனத் தெரியவில்லை. ஆனால் சில தீர்வுகளுக்கு அதிக தொலைவு பயணிக்க வேண்டும், சில தீர்வுகளுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும். சில தீர்வுகளுக்கு அதீத சகிப்புத்தன்மை வேண்டும்.
02
நண்பரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தருணத்தில் அவர் எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்குத் தகுந்த ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர் நினைவில் கொண்டிருந்தாலும், அவருடைய அன்றாட வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்.
அவரின் தொடர் ஓட்டத்தில் ஒரு சவால் வந்தது. ஒரு சாதாரண சம்பவம், சரியாகக் கையாளத் தவறியதால், மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டேயிருந்தது. தவறியது எந்தவிதத்திலும் குறைபாடு அல்ல. அப்போது அதுதான் சாத்தியப்பட்டிருக்கும். அது சிக்கலாக மாறி, நாட்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, பல மாதங்களாக நீடித்தது. ஒவ்வொரு சந்திப்பிலும் உரையாடலிலும் அதனைச் சரி செய்ய வலியுறுத்தினேன். முடிந்தவரை தொடர்ந்து என் கவனத்தையும், அக்கறையையும் செலுத்திக் கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கும் எல்லைகள் இருந்தன. எல்லைக்கு மறுபக்கமிருந்து கொடுக்கப்பட்டவை பல நேரங்களில் அவ்வளவாகப் பலன் தராது.
பெரும்பாலும் பொருளாதார இழப்புகளை, நெருக்கடிகளை நாம் பேசும் அளவிற்கு, மனதளவிலான நெருக்கடிகளை, இழப்புகளைப் பேசுவதில்லை. நாட்கள் நகர நகர அவருக்கு மன நெருக்கடி கூடிக்கொண்டேயிருந்தது. அந்த நெருக்கடிகள் அவருக்கு வந்திருக்கக் கூடாதவைதான். ஆனாலும், வரத்தான் செய்யும். அதற்கு சில காரணங்கள் இயல்பாக அமைந்துவிடும். அவர் எடுத்த சில முடிவுகள் எனக்கு ஒப்புதல் இல்லாததாக இருந்தன. எதையும் பூசி மெழுகாமல் முடிந்தவரை என்னுடைய கருத்துகளை நேரடியாகத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன். அதுவே அந்த நட்பிற்கு நான் செய்யும் அறம். ஒவ்வொரு முடிவும் தெரிவிக்கப்படும்போது, ‘அடடா! கொஞ்சம் முன்ன சொல்லியிருந்திருந்தா வேற மாதிரி சொல்லியிருக்கலாமே எனத் தோன்றும். அதையும் தெரிவிக்கத் தவறவில்லை. ஆனாலும் உணர்ச்சிகள் ஆளும் களம் இப்படித்தான் இருக்கும்.
ஒருகட்டத்தில், எல்லாவற்றையும் சமன் செய்யும், சரி செய்யும் ஒரு புள்ளி வந்தது. அப்படியொரு தருணம் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என மனதார விரும்பியிருந்தேன். மிக முக்கியமான முடிவினை அவர் எடுக்க வேண்டிய தருணம். என் கவனத்திற்கு வந்தவுடன், தகுந்த ஆலோசனையோடுதான் முடிவெடுக்க வேண்டுமென ஒரு உளவியலாளரைப் பரிந்துரை செய்தேன். தேவைப்பட்டால் நானும் உடன் வருவதாகத் தெரிவித்தேன். அந்தச் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஆலோசனை நேரம்.
உளவியலாளரின் ஆலோசனை மிகச் சரியாக அமைந்தது. அவருக்கு பல்வேறு கோணங்களில் நிறைய தெளிவு கிட்டியது. கடந்த காலத்தின் பிழைகளுக்குக் காரணங்கள் புரிந்தன. எடுக்க வேண்டிய முடிவிற்கு நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்தது.
திரும்ப வரும் வழியில் காஃபி குடிப்பதற்காக ஒரு உணவகத்தில் நண்பர் வண்டியை நிறுத்தினார். அந்தச் சாலை வழியே நூற்றுக்கணக்கான முறை சென்று வந்திருந்தாலும், நான் அப்படி குறிப்பாக அந்த உணவகத்தில் நிறுத்தியதில்லை. சிற்றுண்டி, காஃபி என உரையாடல் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படும்போது, உணவகத்தின் முன்பிருந்த விளக்குத் தூணை படம் எடுத்து வாட்சப் ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தேன்.
03
அந்தப் படத்தை வைத்து யாரும் அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பார்கள் என நான் கருதவில்லை. அதை ஒரு தம்பி கண்டுபிடித்தார். உணவகத்தின் பெயரைச் சுட்டி அதுதானே எனக் கேட்டார். நான்கு மாவட்டங்கள் தள்ளி இருக்கும் அவர், ஒரு ட்ராவலர் என்பதால் பெரிய ஆச்சரியம் எழவில்லை. ஆனாலும் கண்டுபிடித்ததைப் பாராட்டினேன். அதிலிருந்து உரையாடல் தொடங்கியது.
உடனே அந்த உணவகத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். பல மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பின்னிரவுப் பொழுதில் சாப்பிடச் சென்றிருக்கிறார். ஒரு மேசையில் அமர, பரிமாறுகிறவர் அவரை இடம் மாறி அமரச் சொல்லிவிட்டு குடும்பமாக வந்தவர்களை அந்த மேசையில் அமர வைத்திருக்கிறார். சொன்ன விதமும் சரியானதாக இருக்கவில்லை. அதனால் அந்த உணவகம் குறித்து கூகுள் ரிவியூவில் ஒற்றை நட்சத்திரம் அளித்து, புகாரினைப் பதிவு செய்திருக்கிறார்.
அவர் அதைச் சொன்னபோது என் மனம் கனிந்திருந்தது. ’தம்பி அந்தப் பணியாளார் செய்தது தவறுதான். சில நெடுஞ்சாலை உணவகங்களில் இப்படியான சேவைக் குறைபாடு இருக்கின்றதுதான். அதை இன்னொரு கோணத்தில் பார்த்திருந்தால் உன்னால் கடந்து வந்திருக்க முடியும். அந்த நபர் அன்று எத்தனையாவது மணி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தாரோ தெரியாது. அவருக்கென்று எதுவும் இலக்கு இருக்கின்றதா என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் சுமந்து கொண்டிருக்காதே. சுமப்பதற்காக நீயாக சில வழிகளை உருவாக்கிக் கொள்ளாதே!’ என்பது போல் தெரிவித்தேன். அவர் ஒற்றை நட்சத்திரம் அளித்ததைத் தவறு என்று சொல்லவில்லை.
சில நிமிடங்களில் அந்த ஒற்றை நட்சத்திர கருத்துப் பகிர்வை அழித்துவிட்டதாகத் தெரிவித்தார். உரையாடல் தொடர்ந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் அதுவரை எங்கெல்லாம் ஒற்றை ஸ்டார் கருத்து / புகார் பதிந்திருந்தாரோ அத்தனையையும் அழித்துவிட்டேன் என்றார். இப்போது நான் என்னவெல்லாம் சொன்னேன் என்பது முழுமையாக நினைவில் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவர் மனதை நெகிழ்த்தும்விதமாக ஏதோ சொல்லியிருக்கின்றேன்.
இரண்டு வாரங்கள் கழித்து, அவராகவே 90% கோபத்தைக் குறைத்துவிட்டேன் என்றார். உண்மையில் அது அத்தனை எளிதல்ல என்றாலும், பல தருணங்களில் அவர் முயற்சி வெற்றி கண்டிருக்கலாம்.
குறை காணும் இடத்திலெல்லாம் ஒற்றை நட்சத்திரம் இட்டு புகார் அல்லது குறையைப் பதிவு செய்வது தவறொன்றுமில்லை. சேவைக் குறைபாடுகளைக் கண்டாலும், தம் கருத்தினைப் பதிவு செய்யாமல் ஒதுங்க வேண்டியதில்லை. ஆனால், நான் பகிர்ந்த படத்தை அவர் அடையாளம் கண்டதும் அவருக்கு என்னிடம் பகிரத் தோன்றியது, அந்த புகார் தவிர வேறெதுவும் இல்லை என்பதுதான் எனக்கு அப்போது முதன்மையாகப்பட்டது.
அதே நாளில் மேலும் இரண்டு பேருக்காக தனித்தனியே ஃபோனில் காலையும், மாலையும் உளவியல் தொடர்பாக மட்டுமே உரையாடியிருந்தேன். இருவருமே இளம் வயது. நன்கு வாழ வேண்டிய வயது. அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் அவர்களுக்கு வந்திருக்கக்கூடாது. மீள்வதற்கு மிகப் பெரும் பிரயத்தனம் தேவை.
நாள் முழுக்க சந்தித்த, உரையாடிய, உடன் பயணித்த அவர்கள் குறித்து நிறைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் வாழ்வில் மனச் சமநிலையுடன் இருப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தியிருந்தனர். அந்தத் தருணத்தில்தான் இந்தத் தம்பி ஒற்றை நட்சத்திரத்தோடு என்னிடம் வந்தார். அந்த உரையாடலும் தொடங்கியது.
உடனே, அதிலிருந்து அவரை வெளியேற்றுவது எனக்கு முதன்மையாகப்பட்டது. அப்படி தோன்றியதற்கு அன்றைய தினம் அடுத்தடுத்து நிகழ்ந்த செயல்களும் காரணமாக இருக்கலாம். எனக்குள் மன நலனும், மனிதமும் முதன்மையாக நின்றன. எதன் நிமித்தமாகவும் மனதிற்குள் கடுமைகளைச் சேர்த்து சுமப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.
இரண்டு வார காலத்தில் அவர் கோபத்தைக் குறைத்தது அவருடைய சுய விருப்பம், திறனில் பேரில் நிகழ்ந்திருக்கலாம். அதற்கு என் சொற்கள் மட்டுமே காரணம் எனக் கருதவில்லை. அடுத்த நாளே தெரிவித்திருந்தால் இந்தளவு அதனைப் பொருட்படுத்தியிருப்பேனா எனத் தெரியவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து எனும் போது அவர் எடுத்த முடிவு செயல்பட்டிருக்கின்றது எனப் புரிந்துகொண்டேன். ’90% கோவம் கம்மி பண்ணிவிட்டேன்' எனப் பகிர்ந்ததும் 90% இல்லாவிட்டாலும் குறிப்பிட்டதொரு சதவிகிதம் இருக்குமென மகிழ்ச்சியாக இருந்தது.
மனம் நெகிழ்ந்திருக்கும்போது, மனம் நிறைவாக இருக்கும்போது சொற்களும் நிறைவாகவும், நெகிழ்வாகவுமே வெளிப்படும். அந்த இளகிய சொற்கள் ஒருவேளை 10% நோக்கம் மட்டுமே கொண்டிருந்தாலும், 90% பலனைத் தரும் என்பதை அன்று புரிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment