மலையாளக் கரையோரம் - 1

அவ்வப்போது பார்த்த சில மலையாள மொழிப்படங்கள் குறித்த சில வரிப் பதிவுகள். முழுமையான ஒரு பார்வையை, விமர்சனத்தை தவிர்த்து, அது குறித்து மேலெழும்பும் உச்சபட்ச உணர்வுகளை மட்டும் பதியனிடும் முயற்சி.

  



Trivandrum Lodge

பெண் ருசியை புத்தகங்களில் மட்டுமே அறிந்து, நிஜத்தில் ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்குபவனும்...

பிடிகளில் இருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக்கொள்ள விரும்பி விவாகரத்தோடு தோழியின் உதவியால் லாட்ஜில் புகும் நாவலாசிரியையும்...

பல்லாண்டுகளுக்கு முன் பிரிந்து அடுத்தடுத்த அறைகளிலிலேயே (முன்னால்) கணவன்-மனைவி என அறியாவண்ணம் வாழும் வயதான தம்பதிகளும்...

பலரோடு உடலைப் பகிர்ந்து அதன் மூலம் உருவாக்கி தாய் தந்த சொத்துக்களை, பலமடங்கு பெருக்கி பெரும் பணக்காரனாய் வாழும், மனைவியை இழந்த ஒரு இளம் தந்தையும்...

பள்ளிச் சிறுவனாய் வகுப்புத்தோழி மீது மையல்கொள்ளும் மாணவனும்...

என....”திருவேண்ட்ரம் லாட்ஜ்” எனும் பழைய லாட்ஜ் தொடர்புடைய பலதரப்பட்ட மனிதர்களின் சில நிகழ்வுகளையும், அந்த லாட்ஜ் முதலாளியின் வாழ்க்கையைச் சுற்றியும் நகரும் மென்மையான ஒரு கதை. நுணுக்கமான வசனங்களாலும் அற்புதமான ஜெயசூர்யாவின் நடிப்பாலும் படம் நம்மை உள்ளே கட்டியிழுத்து தன்னில் பொத்தி வைத்துக்கொள்கிறது.


-



-:( அன்னயும் ரஸூலும் ):-

வாடகை கார் ஓட்டுனருக்கும், துணிக்கடைப் பணிப்பெண்ணுக்கும் இடையே துளிர்க்கும் காதல்.... சூழ்நிலைகளின் நகர்வில் படும்பாடுதான் கதை.

நண்பர்களோடு உடனிருப்பதாலும், சாதாரணமாக உதவுவதாலும் வந்தமரும் சிக்கல் பருந்து கொத்தித் தின்கிறது ரஸூலின் காதலையும் வாழ்க்கையையும்!

ஒரு சாதாரணப் பெண்ணாக, எதுவும் தனித்து செயல்பட முடியாதவளாக இருக்கும் அன்னாவை சூழல் இழுத்துச்செல்கிறது அதன் எல்லா எல்லைகளுக்கும்.

ஒரு போதை வம்பிழுப்புச் சம்பவம் படம் நெடுக துன்பத்தைக் கூட்டிக்கொண்டே போவது யதார்த்தமும் கூட.

அன்னா கடைசியாக எடுக்கும் முடிவுக்கு முந்தைய காட்சியில், ”அன்னா நிலையில் யார் இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுக்கமுடியும்” என நம்மை முன்கூட்டியே தீர்மானிக்க வைக்கும் காட்சிதான் படத்தின் பலம் என்று நினைக்கிறேன்.

படம் இவ்வளவு நீளமா எனத் தோன்றும்போதே, மிகமிக இயல்பான காட்சிகளால் எதையும் புறந்தள்ளமுடியாதே என்றும் தோன்றவைக்கும் படம்.





Mumbai Police - மலையாளம்

குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டதாக அசிஸ்டெண்ட் கமிஷ்னர் பிருத்விராஜ் போனில் பேசியபடி வண்டி ஓட்டும் நொடியில் பயங்கரமான விபத்தில் சிக்குகிறார். மோசமாக அடிபட்டு 15 தினங்களுக்குப் பிறகு, பழையவற்றை மறந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பும் அவரிடமே குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணி மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது.

கமிஷ்னர் ரகுமான், துணை கமிஷனர்கள் பிருத்விராஜ், ஜெயசூர்யா என அதகளம் செய்துகொண்டிருக்கும் மூன்று நண்பர்களில், ஜெயசூர்யா குடியரசுத் தலைவர் விருது பெறும் விழாவில் சுட்டுக் கொல்லப்பட, குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பிருத்விராஜ்ஜிடம் வழங்கப்படுகிறது.

விபத்துக்கு முந்தைய காட்சிகள், விபத்துக்கு பிந்தைய காட்சிகள் என விறுவிறுப்பாகச் செல்கிறது படம். சற்றும் எதிர்பாராத அந்தக் ட்விஸ்ட் க்ளைமாக்ஸில் அதிராமல் இருக்க முடியாது.

படத்தை மீண்டும் ஓட்டி பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகளைக் காணும்போது, மனிதன் எத்தனை அற்புதமாய் அந்தப் பாத்திரத்தை செய்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. முதல்முறை பார்க்கும்போது பிருத்விராஜ் செய்திருக்கும் நுணுக்கங்களை மிக நிச்சயமாக உணர வாய்ப்பில்லை. குறிப்பாக ஜெயசூர்யா நேவி ஆபிசரைக் கைது செய்து வைத்திருக்கும் காட்சியில் போலிஸ் ஸ்டேசனுக்கு வரும் பிருத்வியின் நடை உட்பட...!
 

எல்லா நாட்களும் ஒன்றேயல்ல!


ஒரு நாளை எப்படி கடக்கலாம் அல்லது கடத்தலாம்? ரசித்துக் கடத்தலாம், ருசித்தும் கடத்தலாம். இறுக்கிப் பிடித்துக்கொள்ளலாம், பிடித்து கசக்கி எறியலாம், உதாசீனப்படுத்தி ஒதுங்கி நின்றுகொள்ளலாம். எல்லாம் நம் கையில்தான். இசைவாய் உடனிருக்கும் சூழலின் கையிலும் கூட

மற்ற தினங்களுக்கு இருக்கும் நிறத்தைவிட ஞாயிறுகளின் நிறம் சற்றும் சோபையானது. இன்னும் இலக்கியத்துவமாய்ச் சொல்லவேண்டுமெனில் அந்த சோபை கொஞ்சம் கவித்துனமானது. சில ஞாயிறுகளில் நான் வாசல் தாண்டி படியில்கூட கால் வைத்ததில்லை. சனி இரவு கூடடைந்து திங்கள் காலை வெளியேறும் போதுதான் உணர்வேன் கிட்டத்தட்ட 36 மணி நேரம் ஒரு 500-1000 சதுரடி பரப்புக்குள் மூழ்கிகிடந்ததை. மாறாக சில ஞாயிறுகளின் 24 மணி நேரத்தின் 90 சத நேரத்தை பரபரப்பு விழுங்குவதுண்டு.

விருப்பத்தின் பேரில் சட்டென மேற்கொள்ளும் ஞாயிறு பயணங்களுக்கு எப்போதும் கூடுதல் புத்துணர்வுண்டு. ஒரு பெருநகரத்தின் விடுமுறை பரபரப்புக்குள் குவியும் மக்கள் மத்தியில் ஒரு பொழுதைத் தொலைப்பது வரமென்றே சொல்வேன். ஞாயிறுகளில் வீதிகளில் எதையாவது வாங்க அலைபவர்களுக்கு, தேடுபவர்களுக்கு மற்ற நாட்களின் பரபரப்பு இருப்பதில்ல. திங்கட்கிழமை வீதிகளில் சுத்துபவர்களுக்கு அந்த வாரத்தின் துவக்கத்தில் சுத்துகிறோம் என்பதோடு அந்த வாரத்தை எதிர்கொள்ளும் கனம் இருக்கும். வாரத்தின் மத்தியில் சுற்றுபவர்களுக்கு கடந்த நாட்களுக்கு நிகராக மீதி நாட்கள் மிச்சம் இருக்கும் பொறுப்பு இருக்கும். வார இறுதி நாட்களில் சுற்றுபவர்களுக்கு தீரப்போகும் வாரத்தின் இறுதி சுமூகமாய் கடந்திடவேண்டும் என்ற பதைபதைப்பு இருக்கும். ஞாயிறுகளில் வீதிகளில் சுற்றுவோருக்கு அப்படி ஒரு கனம், பொறுப்பு, பதைபதைப்பு இருப்பதில்லை.

எத்தனையெத்தனை முகங்கள். எத்தனையெத்தனை குறிப்புகள். எத்தனையெத்தனை உணர்வுகள். எத்தனையெத்தனை இறுக்கங்கள். எத்தனையெத்தனை தளர்வுகள். உரக்க மலையாளத்தில்சம்சாரித்துக்கொண்டிருக்கும் ஒருவன் சமீபத்தில் பார்த்த மலையாளப் படத்தை நினைவூட்டுகிறான். நமக்கு தேவையே இல்லாத பொருளுக்கு அல்லது அவசியப்படாத ஒரு பொருளுக்கு சாலையோர வியாபாரி வலிய வந்து, சிறிது தூரம் துரத்தி வந்தும் விலை சொல்கிறான்.  தேவையோ இல்லையோ ஆனாலும் பேரம் பேசுதலில் ஒரு சுகம். 850 ரூபாய் விலை சொல்லும் பொருளை 150 ரூபாய்க்கு வாங்கும் சாத்தியங்கள் சாமார்த்தியம்தானா எனத் தெரியவில்லை.


ஸ்கூட்டரில் அப்பாவின் பின்இருக்கையில் பின்பக்கமாய்த் திரும்பி அவர் முதுகில் தன் முதுகை சாய்த்துக்கொண்டு தன்போக்கில் காற்றில் ஓவியம் வரையும் குழந்தை விரல்களில் பிகாசோவின் மிச்சம் கொஞ்சம் ஒட்டியிருக்கலாம்.

புதிதாய் நுழையும் வீதியில் தேநீரோ, சிற்றுண்டியோ, மதுபானமோ வரிசையாய் இருக்கும் கடைகளில் எதுவெனத் தீர்மானிப்பதில் சற்றேனும் ஊசலாடுகிறோம். கடைகளிலிருந்து வெளியேறும் ஒரு சைனீஷ் அல்லது திபெத்திய முகம், அந்தக் கடை குறித்து ஒரு கணம் அந்நியத்தன்மையை ஏற்படுத்தி மெல்ல சமநிலைக்கு நகர்த்துகிறது.

சுடச்சுட இனிப்பும் காரமும் புளிப்புமாய் பலகாரம் சுடும் கடையில் ஒவ்வொன்றாய் வாங்கி ஆளுக்கொரு கை என நட்புகளோடு பசியாறுகையில் தொலைந்த பால்யம் மீண்டு வந்து காலைக் கட்டிக்கொண்டு ஏக்கத்தோடு அண்ணாந்து பார்க்கத்தான் செய்கிறது.

கடந்துசெல்லும் இளவட்டங்கள் எவரெரையோ நினைவுக்குள் மீட்டி விடுகிறார்கள். விதவிதமான ஆடைகளில் இணையாய் நகரும் இருபாலின நட்புகள் துள்ளல் மிகுவொரு கவிதையை நினைவில் கசியவிடுகின்றனர். காலம் மாறிப்போச்சு, அதற்கேற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்த முற்போக்கை மெல்லத் திணிக்கிறார்கள். நாமும் மாறவேண்டும் என்பது அவர்களைப் போன்றேயல்ல, அதை எதிர்கொள்ளும், ஏற்கும் மனோபாவத்திற்கு.

வித்தியாசமாய் முடி வெட்டு, உடை எனக் கடந்து போகின்றவன் தன்னை மீண்டும் பார்க்க வைக்கிறான். தலைமுடிக்கு தங்கநிற வரிகளால் சாயம் பூசிக்கொண்டு, விழியகற்றாமல் ரசிக்க வைக்கும் அழகியதொரு ஆடையில்எங்கிருந்தோ வந்து திடீரென பார்வைகளில் விழுந்து கடந்து கரைந்து ஏதோ கடைக்குள் செல்பவள் மனதை வாரிச்சுருட்டிவா பின்னால்!’ என வெறித்தனமாய் இழுத்துச் செல்கிறாள். அம்மாவின் கை பிடித்துத் தொங்கிக் கொண்டே கேள்விகளால் துளைக்கும் குழந்தையின் பரபரப்பும், பதில் சொல்ல அலுக்கும் அம்மாவின் அயர்வும் கவிதைதானே!

மதுபானச் சாலையொன்றில் மிதமான இசையும், ஒளியும் எதிர்பார்க்க அதற்கு எதிராய் அமையும் தருணங்களில் மனதைஇப்படியில்லை அப்படி மாறிக்கோ!’ என மெல்ல மெல்ல பதப்படுத்த வேண்டியதாய் அமைகிறது. அதிரும் ஒலியும், மௌனமாய் ஓடும் தொலைக்காட்சியும், மேசையில் கேரம்போர்டு வைத்து விளையாடிக்கொண்டு ஆணும் பெண்ணுமாய்,  மிடறுகளாய் பியரைச் சுவைத்துக்கொண்டு அக்கம்பக்கம் பாராமல் தம் நிலை மறந்துகொண்டிருப்பதும் ஒரு தவம்தான். ருசிக்க மறுத்திருக்கும் மதுவும், நம்மைப் பார்த்து ரசித்துக்கொண்டே, என்னைக்கொஞ்சம் ருசியேனும் அழைப்புக்கு மறுப்புச்சொல்வதும் தவம்தான்.

எல்லாமும் கிடைப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் தரும் பேரங்காடியொன்றின் மூன்றாம் மாடியில் நின்றுகொண்டு மாடிவிட்டு மாடி நகரும் படிகளில் சேரும், கரையும் மனித அலைகளில் 99 சதத்திற்கு மேல் 30க்குச் சற்றே முன்னும் பின்னும் இருப்பதாகவேபடுகிறது.

ஒரு வீதியில் 250 ரூபாய்க்கு கிடைக்கும் மதுபானம், பிறிதொரு சாலையின் மூன்றாம் மாடிக் கடையில் 680 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் அந்தக் கடையின் புகைக்கும் பகுதி கண்ணாடிக்குள் ஒரே சிகரெட்டை மாற்றிமாற்றிப் புகைத்தலோடு, முத்தமும் மோகமும் பகிரும் திபெத்திய முகப் பெண்ணையும், அவளைவிட இரு மடங்கு உயரத்திலிருக்கும் தென்னிந்த தொப்பை ஆணையும் சற்றேனும் பட்டிக்காட்டான் முட்டாய்க் கடைய பார்த்த மாதிரி பார்க்கலாம். 250 ரூபாய் பானத்தை 150 ரூபாய்க்கு விற்கும் ஒரு மொத்தவிலைக் கடையில் ஒரு வார்த்தைகூடப் புரியாத மொழியில் 50 வயது ஆளோடு சண்டையிட்டு அடித்துக்கொண்டு கட்டிப் புரளும் ஒரு 20 வயது ஆளை சற்றே மிரட்சியுடன் கடக்கலாம். வேறு வேறு நிறங்களைக் கொண்டதுதான் இந்த உலகம்.

சிக்னலில் மெல்ல நெளியும் டாடா இண்டிகா காரின் இருக்கைக்குப்பின் பொருட்கள் வைக்கும் பகுதியில், ஒரே மட்டத்திலிருக்கும், நான்கைந்து வயது குழந்தைகளை நிறுத்தியபடி, நகர்வதை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. ”அடப்பாவிகளா இப்படியாடா குழந்தைகளை வச்சிருப்பீங்க!” என்ற அதிர்வுகளைப் போக்கும்வண்ணம் நம்மைப் பார்த்து கை அசைத்து டாட்டா சொல்லும் அந்த மலர்களுக்கும் நமக்கு எந்த ஜென்மத்து உறவோ தெரியவில்லை! அதுவும் வலது ஓரமாய் இருக்கும் அந்தப் பெண் குழந்தை கண்ணாடிக்குள்ளிருந்து காற்றில் வீசும் முத்தத்திற்கு இணையேது.

எல்லா நாட்களுக்கும் இருபத்தி நான்கு மணி நேரம்தான். இரவும் பகலும் தான். ஆனால் எல்லா நாட்களும் ஒன்றேயல்ல!


-



நகரத்துக் காக்கை







நகரத்தின் மையப்பரபரப்பில்
நாட்கள் பல கழித்து
கண்டேன் ஒரு காகத்தை
கசகசக்கும் மதியத்தில்!

சலசலப்புகளைப் புறந்தள்ளி
செத்துப்போன ஒரு எலியின்
உப்பிய வயிற்றை குறிவைத்து
கூர்அலகு பாய்ச்சிக் கொண்டிருந்தது!

உணவு கிடைத்தால்
உடனே கரைந்தழைக்கும் காக்கை
என எப்போதோ படித்தது
நினைவுக்குள் கொத்தியது

ஒற்றைக் காகமாய்
உண்டு கொண்டிருந்தது
கரையவுமில்லை
கத்தவுமில்லை

கரைந்தழைக்க நகரத்தில்
காக்கைகள் இல்லாமலுமிருக்கலாம்
கரைந்தழைக்கும் குணம்
நகரத்தில் கரைந்தும் போயிருக்கலாம்!

_

கல்கி (26.01.14) இதழில் வெளியான கவிதை.

நன்றி : கல்கி
 

ஆழ்ந்த நன்றிகள்… அடச்சே... ஆழ்ந்த இரங்கல்கள்!

இப்போது அந்தக் கொசு கடிப்பது நான்காவது முறையாக இருக்கலாம். அதுவும் முழங்கைப் பகுதியில். அரைக்கை சட்டையாக இருப்பதால், நாற்காலியில் ஊன்றியிருக்கும் முழங்கைப் பகுதி கொசுவுக்கு ஏதுவாகப் போய்விடுகிறது. சிலமுறை கையை எடுத்து மறு உள்ளங்கையில் வைத்து ’கும்மாயம் கும்மாயம்’ சுற்றுவதுபோல் தேய்த்துக்கொண்டேன். முதலில் கடித்தபோது பெரிதாக உரைக்கவில்லை. எந்தக் கடி அதிக எரிச்சலை உண்டாக்கியதெனத் தெரியவில்லை. கையைக் கொஞ்சம் சொறிந்துகொண்டேன். அருகில் கொசு பறப்பது தெரிந்தது. அடிக்கடி முளைக்கும் வன்மக் கொம்பு விர்ரென நீண்டது. கொசுவை கைகளால் அடித்து வீழ்த்துவதில் எப்போதும் ஒரு பெரு மிதப்பு உண்டு. அது என்ன வகையான உணர்வென்றெல்லாம் தெரியவில்லை. இரு கைகளையும் நீட்டி கொசுவை பின் தொடர்ந்து அடிக்க முயலும்போது தப்பித்துவிட்டது. சுவற்றில் ஒரு மூலைக்குச் சென்ற கொசு ஒரு மாதிரி தவிப்பது தெரிந்தது. உற்றுப் பார்க்க, சிலந்தி வலையில் சிக்கியிருப்பது புரிந்தது.



சில நூலிழைகள்தான். உற்றுப் பார்த்தால்தான், அங்கே வலையிருப்பதே தெரிகிறது. கொசுவின் விதி இன்றைக்கு சரியில்லையெனப் புரிந்தது. இறக்கைகள் சிக்கிக்கொண்டிருந்தன. வலையில் ஏற்பட்ட அதிர்வுகளைக் கண்ட ஒரு சிலந்தி ஒற்றை நூலிழை வழியே சரசரவென நெருங்கிக் கொண்டிருந்தது. கொசுவின் உடல் துடித்துக் கொண்டிருந்தது. சிலந்தியை நாங்கள் எட்டுக்கால் பூச்சி என்போம். எட்டுக்கால்கள் இருக்கிறதாவெனப் பார்த்தேன். ஆறு கால்கள்தான் இருந்தன. அப்போ இது ஆறுகால் பூச்சியா இருக்குமோ? அல்லது இரண்டு கால்கள் உடைந்து போயிருக்குமோ எனத் தோன்றியது. இடையில் கால்கள் உடைந்திருக்குமா அல்லது பிறப்பிலேயே ஆறு கால்களோடு மட்டும் பிறந்த மாற்றுத் திறனாளி சிலந்தியாக இருக்குமா? ஆறு கால்களோடும் அதன் வாழ்க்கை நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இன்றைக்கு அதற்கு பெரியதொரு தீனியும் தானே வந்து சிக்கிக் கொண்டிருக்கின்றது.

கொசுவை அடித்துவிட்டால் என்ன? வேணாம், எட்டுக்கால் பூச்சி என்ன செய்கிறதெனப் பார்க்கலாம். ஆரம்பித்தது கொசுவுக்கும் எட்டுக்கால் பூச்சிக்குமான போர். அந்த வலையின் மற்றொரு பகுதியில் ஒரு சிறிய சிலந்திக் குட்டி இருந்தது. அதை குட்டி எனச் சொல்லவேண்டுமா, குஞ்சு எனச் சொல்ல வேண்டுமா? அந்தக் குட்டிச் சிலந்தியோடு பெரிய சிலந்தியை ஒப்பிடுகையில், அது மினியேச்சர் போலவும், சிலந்தி ஒரு டைனோசர் போலவும் தோன்றியது.

எப்போதும் சிலந்தி வலை மீது சொல்ல முடியாத ஆச்சரியமுண்டு. இவ்வளவு சிறிய ஒரு சிலந்தி எப்படி அவ்வளவு நுண்ணிய வலையைப் பின்னுகிறது. அதன் கோடுகளும் கணக்கீடுகளும் எத்தனை அதிசயம் நிறைந்தவை. ஊர் உலகத்தின் குப்பைகளெல்லாம் காற்றின் வழியே கடந்து போகையில் படிந்து அது ஒட்டையாக மாறி, நமக்கு ஒவ்வாத ஒன்றாகவும், அதற்கு பயணப்பட பயன்படாததாகவும் ஆகிவிடும் அவலமும் உண்டு.

கவனம் கொசுவின் போராட்டம் மேலும், சிலந்தியின் தாக்குதல் மீதும் குவிந்தது. இதுநாள் வரை சிலந்திக்கு எப்படி இரை கிடைக்கிறதென்றெல்லாம் யோசித்ததில்லை. இப்படித்தான் வலிய சில இரைகள் சிக்கிக்கொள்ளுமோ? எவ்வளவு கஷ்டப்பட்டு வலையமைத்திருக்குமென்று ஒரு போதும் யோசிக்காமல், போகிற போக்கில் விரல் நுனியால், ஸ்கேல் துணை கொண்டு சில சமயங்களில் சீமாறு கொண்டு என எத்தனை எளிதில் கலைத்துவிடுகிறோம். என் வீடு, என் அறை, என் இடம் இங்கு உனக்கு கூடமைக்க என்ன உரிமையென எளிதில் நசுக்குகிறோம். இதே சமூகம் தான் ஊருக்குள் எப்போதாவது நலம் விசாரிக்க வரும் யானை, புலிக்கு இத்தனை கூப்பாடு போடுகின்றது.

சிலந்தி கால்களை நிலையாக வைத்துக்கொண்டு உடலை மட்டும் முன்னோக்கி வெடுக்கென நகர்த்தி, மிருகப் பாய்ச்சலாய் முத்தமிடுவது போல் கொசு மீது மோதிவிட்டு பின்வாங்கியது. அடுத்தடுத்து சமகால இடைவெளியில் மோதிக் கொண்டேயிருந்தது. அதே சமயம் நெருங்கிக்கொண்டும் இருந்தது. நூலை அறுத்து கொசுவை விடுவித்துவிடலாமா எனத் தோன்றியது. சற்றுமுன் கொசுவை அடித்துக்கொல்ல விரட்டியபோது இருந்த கடுப்பு, கோபம், வெறுப்பு இப்போதில்லை. விடுவிக்கும் அளவுக்கு கருணையும் சுரக்கவில்லை. கை முட்டியில் கொசுக் கடியின் உறுத்தல் மீண்டும் நினைவுக்கு வந்தது. இன்னொரு கை அந்த இடத்தை மெல்ல வருடிவிட்டது. கொசுவைக் காப்பாற்றிவிட்டால் சிலந்தியை பட்டினி போட்டதாகாதா என்ற வியாக்கியானம் வேறு தோன்றியது.

கொசுவை முழுதும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது சிலந்தி. மெல்ல மெல்ல கொசுவின் இறக்கைகள் தவிர்த்த உருவம் மறையத் தொடங்கியது. ஒரு நுண்ணோக்கி கையில் இருந்தால் நன்றாக பார்க்கலாம் என புத்தி நினைத்தது. அதே நேரத்தில் “சாகட்டும் கொசு, பாவம் கொசு, பசியாறட்டும் சிலந்தி” என மனம் சுழன்று சுழன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு கொலையை, ஒரு மரணத்தை, ஒரு பசியாறலை சலனமின்றி ரசிக்கும் மனநிலை வாய்த்திருப்பது என்ன வகையான நிலைப்பாடு எனப்புரியவில்லை.

அவ்வப்போது இப்படி ஒரு நிலைப்பாடு வருகின்றது. இதில் எது சரி, எது தவறெனத் தெரியவில்லை அல்லது தெளிவில்லை. தீர்மானிக்க இயலுவதுமில்லை.

எல்லோருக்கும் அவ்வப்போது ஒரு மனநிலை அமைகின்றது. அது நிலையாக நீடித்திருப்பதில்லை. நீடித்திருக்க வேண்டுமென என்ன நிர்பந்தம் அல்லது சட்டம். சூழல்கள் தீர்மானிக்கின்றன. சூழல் ஒரு பெருவெள்ளம்போல் அதன் போக்கில் மனநிலையை உருட்டிச் செல்கின்றது.

வேறென்ன…
முதல் பத்தியில் இருந்த மனநிலைக்குச் சென்று, சொல்ல இரண்டு வரிகள் உண்டு… அவை

* கொசுக்கு ஆழ்ந்த நன்றிகள்…. அடச்சே ஆழ்ந்த இரங்கல்கள்.

* சிலந்திக்கு ஆழ்ந்த நன்றிகள்!