ஒரு கணமும் உறையாப் பேனா மைச் சொட்டுகளும்








இரவு பகலாய் நெய்தலோ
எதுகை மோனைகள் கோர்த்தலோ
அடித்துச் சிதைத்துத் திருத்துதலோ
சல்லடை கொண்டு சலித்தலோ
அவசியமில்லை ஓர் கவிதை சமைக்க

ஆனந்தக் கண்ணீரை நினைவூட்டும்
இரு சொட்டுப்  பனித்துளிகள்

ஊளமூக்கைப்  புறங்கையால் துடைத்து
உதடுகளில் மீசை வரையும் மழலை

அம்மாவின் கழுத்து கவ்வி
தொட்டிலாடும் நாய்க்குட்டி

விரைந்து கடக்கும் யாரோ ஒருத்தி
விட்டுப்போன மல்லிகை வாசனை

அடிவயிறு தாங்கும் நிறைமாதக்
கர்ப்பிணியின் கைகளில் படியும் துடிப்பு

புல் வேர் கருகும் வெம்மைச்  செம்மண்
போர்த்தும் முதற் பெருமழை

தேர்நோம்பித் திருவிழாவில் பிள்ளையின்
தலைகோதும் பள்ளிப் பருவத் தோழி

கை குலுக்களில் சிகரெட் வாசனையை
பூசிப்போன விற்பனை பிரதிநிதி

நம்பிக்கையின் முனைகளை மட்டும்
சிதைத்த ஒரு சின்னத் துரோகம்

இதில் ஏதோ ஒரு கணமும்
உறையாப் பேனா மைச் சொட்டுகளும்
ஒரு வெற்றுத்தாளும் போதும்
ஒரு கவிதை சமைக்க
 
-

கோடானு கோடி நன்றிகளும்... கொஞ்சூண்டு அனுதாபமும்

பேட்டரி, UPS, வாட்டர் ஃபில்டர் இதையெல்லாம் சரி செய்வதற்கு நண்பர் ஒருவரின் நிறுவனத்திலிருந்துதான் வழக்கமாக ஆள் வருவார்கள்.

சமீபத்தில் ஒருமுறை UPSல் ஒரு பிரச்சனை என்று புகார் சொல்லி 21 போன் செய்த பிறகு, அதுவும் 3 நாட்கள் கழித்துதான் வந்து பார்த்தார்கள். அந்த சமயத்தில் வீட்டில் வாட்டர் ஃபில்டரில் பிரச்சனை இருந்தது நினைவிற்கு வந்து, UPS பார்த்தவரிடம்யாரையாச்சும் அனுப்புங்களேன் என ஒரு வார்த்தை சொல்லிவிட்டேன்.

வீட்டில் தினமும் இன்னும் ஆள் வரலைங்க என்ற புகார் வேறு. UPSக்கே 21 போன், தண்ணிக்கு 42 போனாச்சும் செய்யனுமே என தினமும் நினைத்துக்கொண்டே அவர்களையே அழைக்கலாமா அல்லது வேற யாரையாச்சும் அழைக்கலாமா எனத் தொடர்ந்த பட்டிமன்றம் தீர்ப்பு எட்டப்படாமலே மாதக்கணக்காகி ஓடிக்கொண்டேயிருக்கின்றது. தினமும் மனைவி என்னாச்சு என்று கேட்பதும், நான்சொல்லிட்டேன் வந்துடுவாங்கபோன் பண்ணினேன் போன் எடுக்கல, நேர்ல போனேன் கடை பூட்டியிருந்துச்சுஎன என் கற்பனைக் குதிரைக்கு வண்டி வண்டியாய் தீனிபோட்டேன்.

இன்றைக்கு திடிரென தெரியாத எண்ணில் இருந்து போன் வந்தது. எண்ணின் கடைசி இலக்கங்கள் கொஞ்சம் பழக்கப்பட்ட எண்.

சார்...  நா ”சூப்பர் ஃபாஸ்ட் ஏஜன்சி”லருந்து  (அதே நண்பரின் நிறுவன பெயர்) வந்துருக்கேன். வாட்டர் ஃபில்டர் கம்ப்ளெய்ண்டுனு போன் பண்ணுனீங்களாம் ஓனர் அனுப்புச்சாருங்க. வூட்டு முன்னாடி நிக்கிறேன் சார். கதவு சாத்தியிருக்கு. வூட்ல இருக்காங்ளா?” எனக் கேட்டார்.

என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். சுருக்கென வலித்தது. கொஞ்சம் மெல்லமாக கிள்ளித் தொலைத்திருக்கலாம்.

உடனே வீட்டுக்கு போன் அடித்து….

அம்மா தாயே... வராத மகராசன் வந்து வீட்டு வாசல்ல நிற்கிறார். ஃபில்டரை என்னது ஏதுனு பார்த்துக்குங்க

அட... நிஜமாலுமாங்க... எப்படியோ கஷ்டப்பட்டு ஆளை வரச் வெச்சுட்டீங்கமனைவியின் குரலில் மகிழ்ச்சி தெறித்தது.

சிறிது நேரம் கழித்து அழைத்த மனைவி

சரி பண்ணிட்டாங்க. ஆனா... போறப்போ, ”சுரேஷ் சார் வந்தா சொல்லிடுங்க மேடம். நிறையவாட்டி போன் பண்ணிட்டார்னு ஓனரே இன்னிக்கு என்னைப் போகச் சொன்னார்னுசொன்னாருங்க, உங்க பேரு அவிளுக்கு தெரியுந்தானே என்றார்.

ஆனாலும் மனைவின் குரலில் இருந்த மகிழ்ச்சி, இன்றைக்கு மதிய உணவின் ருசியிலும் இருக்கும் என்பதை மிகத் திடமாக நம்பிக்கொண்டிருக்கையில்ஒரு சிந்தனைக் கொம்பு முளைத்தது..

ஆமாயாரு அந்த சுரேஷா இருக்கும்…..

 
எப்படியோ….

முப்பது நாப்பது தடவை போன் பண்ணி, அவர்கள் வீட்டு ஃபில்டரை பழுதுபார்க்க ஆள் வரவைக்க முயன்ற அந்த அடையாளம் தெரியாத, அன்பிற்கும் பண்பிற்கும், கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் முன்னுதாரணமான அந்த சுரேஷ் அவர்களுக்கு

கோடானு கோடி நன்றிகளும்... கொஞ்சூண்டு அனுதாபமும்

-*-