கர்வம் எனும் வெங்காயம்

தொலைவிலுள்ள மனிதர்களை கவல் தொழில்நுட்ப யுகம் மிக எளிதாய் அருகில் நகர்த்துவதற்கு நிகராக, ஒரே வீட்டிற்குள் இருக்கும் மனிதர்களையும் தொலைவில் நிறுத்தி வேடிக்கை பார்க்கச் செய்திருக்கிறது. இதுகுறித்த பேச்சுகள், விவாதங்கள்கூட திகட்ட ஆரம்பித்து, தேய்வழக்காக மாறிக் கொண்டிருக்கிறதென்றே கருதுகிறேன். இவை யாவற்றையும் கடந்து, இந்த மனித சமூகம் உறவுகள் மேல் கொண்டிருக்கும் ப்ரியம் வெவ்வேறு பரிணாமங்களை அடைவதையும் மறுக்க முடியாது.

தம் பிள்ளைகள் மீது அதீதக் கவனமும், பிரியமும் பகிரும் பெற்றோர்களின் தலைமுறைக் காலம்என்று இந்தத் தலைமுறையை அழைக்கலாம். எப்போது இருந்ததையும்விட பிள்ளைகளுக்காக கூடுதல் திட்டமிடல், கூடுதலாய் வளைந்து கொடுத்தல், அவர்களுக்காக செயற்கரிய தியாகங்களை மேற்கொள்ளல் என நெகிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். தம் ஊரில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் பெற்றோர்கள் கூட, பிள்ளைகளின் பள்ளி மேல்நிலைக் கல்வி இறுதியாண்டிற்கு, எல்லாவற்றையும் சமரசம் செய்து கொண்டு பிள்ளைகளின் வசதிக்காக, பள்ளிகளுக்கு அருகில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வெறுமைகளையும் தனிமைகளையும் மென்று தின்றபடி நாட்களைக் கடத்துவதை ஆங்காங்கே காண முடிகிறது. இதுபோல் ஆயிரமாயிரம் வடிவங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக தம்மை வளைத்து நெளித்து இணங்கிப் போவதை பேரன்பின் ஒரு வடிவமாகவும், கடமையின் அடையாளமாகவும்

இம்மாதிரியான செயல்கள் குறித்த ஒரு விவாதம் வந்தபோது, ’இந்தக் காலப் பெற்றோர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாக இதைச் செய்கிறார்கள்என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ’பிள்ளைகள் மீதான அதீதப் பிரியம்எதிர்காலத்திற்கான தங்களுக்கான உறுதிப்படுத்தல்என்பதைவிட சக உயிர்களின் மீது கருணையும் பிரியமும் பாவிக்க முற்படும் மனிதர்களின் ஒரு மொழியாகவே என்னால் பார்க்க முடிகிறது.

தம் வாழ்நாள் முழுதும் உடனிருக்க உறவுகள் தேடும் முரண்கள் நிறைந்த ஒரே உயிரினம் மனிதனாகத்தான் இருக்க வேண்டும். ’மனித உறவுகள் போல் விந்தையான வடிவம் கொண்ட ஓர் உறவு இந்த உலகில் வேறெங்கும் இருந்துவிட முடியாதுஎன்ற எண்ணம் எப்போதும் எனக்குள் எழுவதுண்டு. வெவ்வேறு பெயர்களில், பதங்களில் உறவுகள் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருப்பதை இடைவிடாது விரும்பவே செய்கிறார்கள். அவ் உறவுகளிலிருந்தே தனக்கு மகிழ்ச்சி தருவதாக கருதுகின்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களிலிருந்து பேரன்பையும் மகிழ்ச்சியையும் ஈட்டிவிட முனைகின்றனர். அதற்கான பிரயத்தனங்களாய் சில தருணங்களில் நிகழ்த்தும் குளறுபடிகளே மிகப்பெரிய காயத்தையும் வடுக்களையும் அதே மனிதர்களின் மத்தியில் விட்டுச் செல்கின்றன.

கோபங்களைக் கொட்டுவதற்காகவே சில உறவுகளை உடன் வைத்திருக்கிறோமா!?’ எனும் சந்தேகம் அவ்வப்போது தோன்றுவதுண்டு. ந்த உறவுகளுக்குள் நிகழும் உரசல்களுக்குக் கூட தொனி மாற்றி வீசும் ஓரிரு சொற்களும், வாசகங்களுமே காரணமாய் அமைவதைப் பலரும் உணர்ந்திருப்போம். இதில் மிகப் பெரிய சிக்கல், அதைத் தாமதமாக உணர்வதுதான். பயன்படுத்துவது ஒரு வாசகமாக இருந்தால், அதற்கு ஒரே அர்த்தம்தான் இருக்குமென்றில்லை. சொல்லும் நபர்களுக்கும், சூழலுக்கும் ஏற்ப, அதுவே வேறுவேறு அர்த்தங்களைப் பெற்றுவிடுவதை முறுக்க முடியாது.

“உடம்புக்கு எப்படி இருக்கு?” என ஒருவர் மற்றொருவரைப் பார்த்துக் கேட்கும் கேள்விக்கு நேரிடையாக அர்த்தம் தேடினால், அதுவொரு நலம் விசாரிப்புஎன்பது மட்டுமே. அதே வாசகம் சில பல சூழல்களில், அதை வெளிப்படுத்தும், குரல்கள் மற்றும் நபர்களினால் வேறு வம்புக்குரிய அர்த்தம் தரும் சாத்தியம் உண்டு. ஒருவருக்கொருவர் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும்போது ஒருவரை உடல்ரீதியாக எச்சரிக்கும் ஒரு வம்பு வழக்காகவும் அந்த “உடம்புக்கு எப்படி இருக்கு?” என்பதைக் கருதலாம். இதுபோல் நாம் மிக இயல்பாக பாவிக்கும் பல சொற்களை சொற்றொடர்களை நபர்களுக்கும் சூழலுக்கும் ஏற்ப வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் வேறு தொணி அதில் இருப்பதை நாம் அறிந்தே பயன்படுத்துகிறோம், பல நேரங்களில் அது தெரியாமலே பயன்படுத்துகிறோம்.

வேறொரு தொனியில் அதை நாம் பாவிப்பது நமக்குத் தெரிந்து அவர்களுக்குத் தெரியாதபோதும், நாம் வெகு இயல்பாகச் சொல்வதில் வேறு ஒரு தொனி இருப்பதாக அவர்கள் நினைக்கும்போதும் வீணான பதட்டங்கள் அங்கு உருவாகவே செய்கின்றன. அதிலிருந்துதான் மனதிற்குள் சில முடிச்சுகள் விழுகின்றன. இயல்பாய் இருந்திருக்க வேண்டிய அன்பு, பிரியம், புரிதல், விட்டுக்கொடுத்தல் எல்லாமே அந்த முடிச்சுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன.

எப்போதுமே முடிச்சிடுவது வெகு எளிது. சில நேரங்களில் நாம் எதோ ஒன்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது, இயல்பான நிகழ்வுகளில் தாமாகவே முடிச்சுகள் விழ வாய்ப்புண்டு. அந்த முடிச்சுகளுக்கு நாம் காரணமே இல்லாதது போலவும் தோன்றும். ஆயினும் முடிச்சுகள் விழுந்தபிறகே நமக்குத் தெரியும்.

நாம் உறவுகளுக்குள் இப்படியான முடிச்சுகள் இடுவதைப் போன்றே, ’ஏன், எதனால், எப்படிஎன எதையும் தீர்மானிக்க முடியாத சிக்கல்கள், இணக்கங்கள் மனித உறவுகளுக்குள் உருவாகுவதை நிறையக் காண முடியும்.ம்பதுகளின் தொடக்கத்திலிருக்கும் அந்த தாயை, ஒரு மருத்துவமனைக் காத்திருப்பில் சந்திக்க நேர்ந்தது. அவர் வாழ்ந்த அனுபவங்களோடு ஒப்பிட்டால் சட்டென வயதானவர்எனச் சொல்லிவிடலாம். ஆனால் ஐம்பதின் தொடக்கம் என்பது முதுமை எனச் சொல்லிவிட முடியாது. இன்னும் வாழ்வில் எழுதப்பட வேண்டிய அத்தியாயங்கள் இருக்கின்றன என்பதை அவரும் அவரோடு இருக்கும் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.

கண்ணீரின் காய்ந்த தடங்களை ஈரமாக்கவே நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கும் விழிகளோடு தனியே காத்திருந்தவரைப் பார்க்கவே கனத்தது. வேறொன்றுமில்லை, ஏதேதோ பெயர் புரியாத விளங்கங்களோடு சொல்லப்பட்டதின் சுருக்கம் என்னவென்றால், அவரின் இரண்டு சிறுநீரங்களும் பாதிக்கப்பட்டதால், உடனடியாக மாற்றுச் சிறுநீரகம் பொருத்தியாக வேண்டிய நிலை.

தம் உடல்நிலை குறித்தும், உடனடியாக சிறுநீரகம் மாற்ற வேண்டியது குறித்தும் சொல்லிவிட்டு, பேச்சைத் தொடர முடியாமல் மௌனமாகப் பொங்க ஆரம்பித்தார். ’சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கலாஎனக் கேட்டபோது இல்லையென மறுத்துவிட்டு, ”கெடைக்காம இருந்தாக்கூட நிம்மதியா இருக்கும்... கெடைக்கிறதுதான் நிம்மதியைத் தொலைக்குதுஎன்றார்.

தேவைகளுக்கும் இங்கு சாத்தியப்படும் உடல் உறுப்பு தானங்களுக்கும் இடையே மிகுந்த இடைவெளி ருக்கும் சூழலில், பிள்ளைகள் இருவரும் அம்மாவின் உயிர் காக்க தங்கள் உயிரிலிருந்து பங்கு கொடுக்க முன் வருகிறார்கள். அதிலும் பிள்ளைகளிடம் நீ நான் எனக் கடும்போட்டி. அதற்கேற்ப இருவருக்கும் இடையே சோதனை முடிவுகளும் சரி சமமாய் அமைகின்றன.

அதுதான் பிள்ளைங்க தர்றாங்களே...அதும் அவங்களே நீ நான்னு போட்டியும் போடுறாங்களே!?” என்ற சமாதானத்தால் அவரை எள்ளளவும் அசைக்க முடியவில்லை. “உங்க குழந்தை தன்னோட ஒடம்புல இருந்து ஒரு உறுப்பை உங்களுக்கு எடுத்துக் கொடுக்கிறதை, உங்களால் ஏத்துக்க முடியுமா!?” என்ற எதிர்க்கேள்வித் தாக்குதலில் நிலை குலைந்து போனேன்.

பெற்றோர்களைப் பொறுத்த அளவில் இந்த அன்பென்பது ஒருவழிப்பாதைதான். தாம் மட்டும் பிள்ளைகளுக்காக உயிரைக் கொடுக்கவும் பிரியப்படலாம். ஆனால் தனக்காக பிள்ளைகள் ஒருபோதும் இப்படியான தியாகங்கள் செய்ய முன்வருவதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

அம்மாக்களின் தொப்புள் கொடி அறுப்பட்டதிலிருந்து, பிள்ளைகள் தங்களுக்கென வழங்கப்பட்டதொரு தனி வாழ்க்கைக்குள் புகுந்து கொள்கின்றனர். அவர்களின் அப்போதைய மனநிலைப்படி, பெற்றோர் என்பது உறவின் ஒரு அங்கம். மிக முக்கியமான அங்கம் என்றும் கூடச் சொல்லலாம். ஆனால் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் என்பது வெறும் உறவு மட்டுமல்ல. தம் உயிரின் பாதி. அந்த உயிரிலிருந்து கொஞ்சம் உயிரை தான் பெற்றுக்கொள்வதைவிட வலி மிகுந்ததாக வேறு எதையும் அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.

அதற்கு மாற்றாக ஒவ்வொரு பெற்றோரும் ஏங்குவது அதீதமான பிரியத்தையும் பேரன்பையும் மட்டுமே. அது எவ்விதத்தில் கிடைத்தாலும் அதை ருசித்து, அந்த ருசிக்கு நிகராய் தானும் தன்னை அமைத்துக் கொள்வதில் நிறைவினை உணர்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தாம் இயல்பிலேயே கொண்டிருக்கும் கர்வத்தை, பிள்ளை உறவுகளோடு பிணையும் போது ஒதுக்கிவிடவே முற்படுகிறார்கள். இப்படியான மனிதக் கர்வத்தை வெங்காயத்தோடு ஒப்பிடப் பிடிக்கிறதுசிலர் அக்கர்வத்தை உரித்துப் பார்க்கத் துணிகிறார்கள். அதனால் சில வேளைகளில் கண்களில் கலக்கம் உண்டாவதுண்டு. ஆனால் உரித்துப் பார்த்தால் தம்முள் ஒன்றுமே மிஞ்சியிருக்காது என்பதை உணர்த்த, கர்வம் ஒருபோதும் தவறுவதில்லை.

-

நம்தோழி மார்ச் இதழில் வெளியான கட்டுரை