நீண்ட நாட்களாக ஒரு கேமரா வாங்கனும் ஆசை. ஆசைப்பட்டதெல்லாம் செரி, ஆனா அதுக்கு காசு வேணுமேன்னு நானும் சும்மா இருந்தேன். அதுவும் வலையுலகத்துக்கு வந்தபிறகு ஆளாளுக்கு போட்டோ போடுறதப் பார்த்துட்டு செரி நாமளும் ஒரு கேமரா வாங்கிடாலாம்னு ஒரு நாள் பேச்சுவாக்குல, நண்பர்
சிங்கப்பூர் பிரபாகரிடம் “பிரபா ஒரு கேமரா வாங்கனும், ஏதாவது ஐடியா கொடுங்கன்னு கேட்டேன்”.
“பொறுங்க கதிர், நான் இங்கேயிருந்து உங்களுக்காக நல்லதா ஒன்னு வாங்கி அனுப்புறேன்”னு சொன்னார், கிட்டத்தட்ட நான் அத மறந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட நேரத்துல, (அட இப்போதான் மூனாவது டேர்ம் பீஸ் கட்டிமுடிச்சம்ல).
நான்கு நாட்களுக்கு முன் போன் செய்த பிரபாகர் ”கதிர் உங்களுக்காக ஒரு கேமரா வாங்கியிருக்கேன், பிரண்டுகிட்டே கொ்டுத்து அனுப்புறேன், சென்னையில
வானம்பாடி அய்யாகிட்ட கொடுக்கச் சொல்றேன், நீங்க கலக்ட் பண்ணிக்குங்க”.
”பிரபா அமௌண்ட் எங்க அனுப்பட்டும்”
“ஒரு பார்ட் பிரண்டோட அக்கவுண்ட் நெம்பர் தர்றேன் அதுல கட்டிடுங்க, மீதிய நான் உங்கள பாக்கும்போது கலக்ட் பண்ணிக்கிறேன்” என்றார்.
சரிடா... கைப்புள்ள பணத்த ரெடி பண்ணுன்னு ரெண்டு நாளா, என்னை நானே தயார் படுத்தும் போது... வானம்பாடிகிட்டே இருந்து ஒரு மெசேஜ் “மெயில் பாருங்கன்னு”
மெயில் பார்த்தா “சில்வர் கலரு ஜிங்குச்ச்சான்னு” கேமராவோட படத்தையும், அதோட விபரங்களையும் அனுப்பி.... சாமி சாமான் வந்துருச்சு... பணத்தை ரெடி பண்ணிக்கோங்க“ என்றிருந்தது.
இனி தவிர்க்க முடியாது, தப்பிக்க முடியாதுங்கிற நிலமையில “பிரபா, பாலாண்ணா கேமராவ வாங்கிட்டாராம், அக்கவுண்ட் நெம்பர் குடுக்கவே மாட்டேங்கிறீங்க(!!!!) கொடுத்தாத்தானே பணம் அனுப்ப முடியும், எப்படியாவது ஒன் வீக்ல அக்கவுண்ட குடுங்க பிரபா... அப்போதானே அமௌன்ட் ட்ரேன்ஸ்பர் பண்ணமுடியும்னு (எப்படியும் ஒருவாரம் கழிச்சுத்தான் அக்கவுண்ட் நம்பர் தருவாருன்னு (பிரபாகரை என்ன மாதிரி சோம்பேறின்னு நினைச்சு)) பந்தா காட்ட, இருங்க இப்போ அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் தர்றேன்னு சட்டுன்னு அனுப்பிட்டாரு.... அடக் கெரகமே ஜிமெய்ல் இவ்வ்வ்வளவு வே..க...மாவ்வ்...வா இருக்குது !!!... நாங்க டிசைன் பண்ணி புரூப் அனுப்பினா மட்டும் வரவேயில்லைனு பலதடவ பிரச்சனையாகும், ஆனா பாருங்க, நாம பணம் கட்டனும்னா மட்டும் பொசுக்குன்னு உடனே வந்துருது”.
பிரபாகர் சொன்ன கணக்குல பணத்த டிரான்ஸ்பர் பண்ணிட்டு, சதாவுக்கு லவ் லட்டர் கொடுத்துட்டு நெஞ்ச நிமுத்தி நடந்த அந்நியன் விக்ரம் மாதிரி தொப்பையோட உதவியால நெஞ்ச நிமுத்தி வானம்பாடிக்கு போன போட்டு ”அண்ணா, இன்னிக்கு வண்டியில கொடுத்து விட்டுறீங்களான்னு (அது ஒரு ரகசிய சர்வீஸ், ரயிலு வண்டி டிரைவர் மூலமா பண்ற வேலை) ஆசையாய் கேட்க!! (அதுதான் காசு அனுப்பிட்டம்ல... அனுப்பிட்டம்ல)
”இல்லீங்க, ஞாயித்துக்கிழமை வைஃபும், தம்பியும் ஒரு வேலையா ஈரோடு வர்றாங்க அவங்ககிட்ட கொடுத்துவிடறேன்” என்றார்.
அவரோட தம்பி ஒரு இன்ட்ரஸ்டிங் கேரக்டர், அவர சந்திக்கிறது ரொம்ப சந்தோசம் கூடுதலா
இதுக்குள்ள இந்த கேமரா வாங்குற மேட்டர வீட்ல ப(நொ)ந்தாவ சொல்லிருந்ததால ஸ்கூல்ல இருந்து வந்தவுடனே நாலு நாலா, பாப்பா போன் பண்ணிகேட்க... இன்னிக்கு வந்துடும்டா குட்டின்னு சமாளிச்ச சோகம் எனக்குத்தானே தெரியும்...
எப்படியும் ஞாயித்துக்கிழமைதான் கேமரா வரப்போகுது, நாமதான் அவசரப்பட்டு 48 மணிநேரம் முன்னாடி பணத்த அனுப்பிட்டோம்ங்கிற சோகத்த தணிக்க ”என்ஜாய்! நோ தங்கமணி” திட்டத்தின் கீழ்(!!!! 2 ம்ணி வரைக்கும்), ஞாயித்துக்கிழமை காலையில 9 மணி வரைக்கும் தூங்கிட்டு எந்திரிச்சு பார்த்தா ஏழெட்டு மிஸ்டு கால், திருப்பி யாருண்ணு கூப்பிட்டா, நம்ம வானம்பாடியோட தம்பி...
ஆஹா... கேமரா வந்துடுச்சேன்னு அரைத் தூக்கத்துலேயே ஆர்வமா பேசினா, நாங்க இப்போ வெளியில இருக்கிறோம், மத்தியானம் கூப்பிடறோம் நீங்க வந்து வாங்கிக்கங்கன்னு சொன்னார்....
புஸ்ஸ்ஸ்ஸுன்னு காத்துப்போன பலூனா... மத்தியானம் வரைக்கும் ஆபிஸ் வேல பார்த்துட்டு, மாமியார் வீட்ல காத்துகிட்டிருக்கிற கோழிக்கறியா இல்ல கேமாராவான்னு பட்டிமன்றம் நடத்தினதுல கோழிக்கறி ஜெயிக்க (அவங்க எப்படியும் நைட் ட்ரெயினுக்குத்தான் கிளம்புவாங்கங்கிற தைரியத்துல) அங்க எஸ்கேப் ஆகிட்டேன். அங்கபோனா இடுப்புல கைய வச்சிகிட்டு கேமராவ வரவேற்க எங்க பாப்பா தயாரா நின்னுக்கிட்டிருந்திச்சு...
”இல்லடா குட்டி, வீட்டுக்கு போகும் போது வாங்கிக்கலாம்”னு ஒரு வழியா சமாளிச்சு, நல்ல்ல்ல்ல்லா சாப்பிட்டுட்டு, அரைத் தூக்கத்துல் ஆழ்ந்திருக்கும்போது போன், ”நாங்க நைட் கிளம்பனும், அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஷாப்பிங் இருக்கு நீங்க எதுக்கும் கேமராவ ஆறரை மணிக்குள்ள வந்து வாங்கிக்கங்க”னு சொல்ல, அவசர அவசரமா தூங்கிக்கிட்டிருந்த பாப்பாவ தூக்கி வண்டியில போட்டுக்கிட்டு பாதியில வரும்போது “ஏம்பா.. என்ன தூக்கத்துலயே தூக்கிட்டுப் போறீங்கன்னு கேட்க”
”குட்டிம்மா கேமரா வாங்கப்போறோம்டா”னு சொல்ல.... ”ஹைய்யா”னு வண்டிக்குள்ளேயே பாப்பா குதிக்க ஆரம்பிச்சது..
வரும் வழியில் வீடு, ”சரி ரெண்டு பேரையும் வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் போய் கேமரா வாங்கிட்டு வர்றேன்”னு சொல்ல ”அதெல்லாம் முடியாது நானும் வருவேன்”னு பாப்பா அடம்பிடிக்க. காரிலேயெ ரெண்டு பேரையும் காத்திருக்கச் சொல்லிட்டு அவங்க தங்கியிருந்த அறைக்குப் போய் கேமராவா பாக்ஸை வாங்கிட்டு காருக்கு வந்து சேர
பரபரப்பா காத்துக்கிட்டிருந்தா பாப்பா... அவசர அவசரமா பாக்ஸ பிரிச்சு ஒவ்வொண்ணா எடுத்துச்சுச்சு... ”அப்பா என்னென்னமோ இருக்கு கேமராவ காணோம்”
“ஏய்... இருக்கும் குட்டி, நல்லாப் பாரு”
”அப்பா, சி.டி இருக்கு, என்னமோ புக் இருக்கு, ஒயரெல்லாம் இருக்கு.... ம்ம்ம்ம்.. இருங்க இன்னொன்னு இருக்கே... இதுதான் கேமராவா!!!??”
”என்னங்க இது, மைசூர் சேண்டல் சோப் சைஸ்ல இருக்கு கேமரா” பத்தாததுக்கு ஊட்டுக்காரம்மாவோட டயலாக்.... நாலுநாளா குளிக்க சோப்பு வாங்கி வைக்க துப்பு இல்ல, இதுல சோப்பு மாதிரியாம்....
”அப்பா... இதுதான் கேமராவா”
”ஆமாங்குட்டி”
”இது உங்களுக்கே ஓவராத் தெரியல, இந்த கேமராக்குத்தான் சிங்கப்பூர், பிளைட்டு, மெட்ராசு, ட்ரெய்ன்னு..... இத்தன நாளா இந்த பில்டப் உட்டீங்களா? இதுல..... என்ன தூக்கத்துல வேற தூக்கிட்டு வந்தீங்களாக்கும்,
டமால்னு வெடிச்சமாதிரி இருந்துச்சு... அட இப்போத்தானே டயர் மாத்தினோம்னு அவசரமா கார் டயர பார்த்தா அங்க ஒன்னுமே ஆகல, அப்புறம்தான் தெரிஞ்சுது என்னோட இடது பக்க நெஞ்சுல வந்த புகையும், கருகல் வாசமும்
பொறுப்பி: பிரபாகர், வானம்பாடி ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தா பொறுத்தருள்க. பிரபாகர் அனுப்பிய Panasonic DMC FS-42 கேமரா மிக சிறியதாக, அழகாக உள்ளது. படமும் தெளிவாக இருக்கிறது.
_____________________________________________________