சுவாசிக்கும் முறையே மருந்து - சித்தர்கள் மரபு

ஈரோட்டில் பசுமை பாரதம் சார்பில் ‘சித்தர்கள் மரபு’ எனும் தலைப்பில் அன்பிற்கினிய கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் இன்று உரை நிகழ்த்தினார். காலை 10 மணிக்கு எளிமையாய் துவங்கிய உரை மாலை 4.15 மணிக்கு நிறைவடைந்தது.

சித்தர்கள் குறித்து எந்தவிதமான அறிதலும், புரிதலும், நோக்கமும் இல்லாமல்... ஆறுமுகத் தமிழன் அவர்களைச் சந்திக்க வேண்டும், உரையைக் கேட்கவேண்டும், ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுள்ளிட்ட எளிய நோக்கங்கள் மட்டுமே எனக்கு.

காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரையிலான இதுபோன்ற உரை அல்லது பயிலரங்குகளில்... சில பல ஆண்டுகளாக பலரை இப்படி அமர்த்தி பாடாய்ப்படுத்தும் நிலையில் இருக்கும் நான், இப்படி அமர்ந்து குறைந்தது 15 வருடங்கள் இருக்கும். ஆக, என்னால் நாள் முழுக்க சுணங்காமல் உட்கார முடியுமா என்பதே எனக்கான உளப்போராட்டம். எந்தச் சுணக்கமும் தடுமாற்றமும் உருவாகாத வண்ணம் தன் உரை முழுக்க அமர வைத்த ஆறுமுகத் தமிழன் அவர்களுக்கு பாராட்டுகள் என்பதைவிட பெருமை மிகு நன்றிகள்.



உரை கேட்கும்போது குறிப்பெடுத்துக்கொள்ளும் முகமாய், அதை ‘ஈரோடு வாசல்’ வாட்சப் குழுமத்தில் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பை கீழே பகிர்கிறேன்.

  1. சித்தர் பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டவை சுவாரஸ்யமானது                       
  2. தன்னையறிதல் என்பது எல்லைகளை அறிதல்                       
  3. மனம் என்பது சட்டி போல்.... எதைப்போட்டாலும் வாங்கி வைத்துக்கொள்ளும்                       
  4. புத்தி classify செய்வது                       
  5. முடிவெடுப்பது அகங்காரத்தின் உதவியோடு                       
  6. முடிவெடுத்து சேகரிப்பது சித்தம்                       
  7. தன்னையறிந்தொழுகுபவர் தன்னை மறைப்பர். இயல்புகளை display செய்யமாட்டார்கள்                       
  8. தாழ இருங்கள்.. தன்னை மறையுங்கள்                       
  9. வெளியில் இருப்பதுதான் உள்ளே இருக்கிறது.. உள்ளே இருப்பதுதான் வெளியே இருக்கிறது                       
  10. மனத்தைக் கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறு மூக்கிலேயே இருக்கிறது - மூச்சு                       
  11. பரபரப்பாக இருக்கும் போது, உடல் சூடாக இருக்கும்போது மூச்சு வலது பக்கம் ஓடும். குளிர்ந்திருக்கும்போது இடது பக்கம்.                      
  12. மூச்சு நம் கட்டுப்பாட்டில்                       
  13. நம்பிக்கையின் ஆற்றலில் பல்வேறு காரியங்கள் நடக்கும்                      
  14. சுவாசிக்கும் முறையே மருந்து                       
  15. பசித்திரு - விழித்திரு – தனித்திரு : உணவு - உறக்கம் - உறவு குறை               
  16. சித்தர்கள் எப்போதும் ஒரே கருதுகோளைக் கொண்டிருக்க வேண்டியதில்லை                       
  17. எங்கு நிறுவனமயமாகிறதோ அங்கு ஊழல் தொடங்கும்                       
  18. சித்தர்கள் தனித்தனி ஆட்கள். குழு ஆகவில்லை                       
  19. தனி ஆளாய் உரத்த குரலில் பேசலாம்... அமைப்பில் இருந்தால் சமரசங்கள் கூடும்
  20. சித்தர்கள் தனி ஆட்கள்... சுதந்திரமான கருத்து இருந்தது                       
  21. அமைப்பு இல்லாததால் பொது கருத்து கிடையாது                       
  22. அமைப்பு இருந்தும் தனித்தனி கருத்து கொண்டிருந்தோர் காங்கிரஸ் மட்டுமே!
  23. இது முறை, இது மரபு என fix ஆகாதே - சித்தர்கள்                       
  24. நிலா என விரல் சுட்டினால் நிலாவைப் பார். விரல் நகத்தில் இருக்கும் அழுக்கை பார்க்காதே                       
  25. நிறுவனங்கள் உங்கள் சுதந்திரத்தை அடமானம் வைக்கச்சொல்லும்                        
  26. தமிழர் மரபில் ஆசனங்கள் பிரதானமில்லை                       
  27. ஆசனத்தின் நோக்கம் உடம்பை சரி செய்து மூச்சை எளிதாக்குவதே                    
  28. பித்தளையை ஆடகமாக செய்தல் - பித்தலாட்டம்                      
  29. செத்தால் தெரியும் : அருமை / நாற்றம்                       
  30. பட்டுத்துணிக்கு தீட்டு கிடையாது                        
  31. அளவியல் ரீதியாக (logical) கடவுளை நிரூபிக்க முடியாது                       
  32. ஆப்பிரிகனின் கிருஸ்து கருப்பாகத்தானே இருக்க வேண்டும்                       
  33. கருத்து என்பதற்கு கருதுபவனும், கருதும் பொருளும் போதும்                       
  34. சடங்குகள் வியாபாரத்தை நோக்கி நகர்த்தும்                       
  35. சித்தர் வழியில் வரும் ஒரே பெண் ஔவையார்                       
  36. பட்டினத்தார், ஔவையார் தலா மூன்று பேரின் தொகுப்பு                       
  37. ஒற்றைக் கடவுளை வழிபடும் மரபு வைதீகத்தில் இல்லை                       
  38. உடன்பாட்டு மரபு, மறுப்பு மரபு                       
  39. அனுபவித்து, துய்த்து பின் கடந்து போ                       
  40. சித்தர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் இல்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தி சித்தர் பட்டியலில் இணைக்கலாம்                       
  41. சித்தர் மரபில் குரு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் குருவின் கருத்து தன் கருத்தாய் தொடர வேண்டியதில்லை                       
  42. நெற்றிக்கு நடுவே உற்று உற்றுப் பார்க்க தெளியும் - திருமந்திரம்                       
  43. இன்னொருவர் இருந்தால்தான் அடையாளம் சொல்ல பெயர் தேவை. யாருமே இல்லாவிடில் தனித்திருக்க ஒருவனுக்கு பெயர் எதற்கு                       
  44. நிறுவனமயமாகாததால் சித்தர்கள் காணாமல் போனார்கள்....
  45. நிறுவனமானாலும் நீர்த்துப் போகும்                       
  46. காலக்கணிதம்... செய்ய வேண்டிய காலத்தைக் குறிக்கவே                       
  47. காலக் கணிதம் ஜோசியத்திற்கானதில்லை. சித்தர்கள் ஜோதிடத்தை போற்றவில்லை                       
  48. சித்தர்கள் பெண்களை இழிவு செய்யவில்லை
  49. சித்தர்கள் சாதாரணமான சனங்களின் மத்தியில் வாழ்ந்தவனே                       
  50. ஊழ் – வினை : வினை என்பது நீங்கள் செய்ததையொட்டி விளைவது. ஊழ் என்பது நாம் எதும் செய்யாமலே விளைவது.


பொறுப்பி : இவை உரையில் பகிர்ந்துகொண்டவை அல்லது அப்போது நான் புரிந்துகொண்டவை. மேலதிக விபரங்கள், விவாதங்களுக்கு அவரை அணுகுவதே நலம்.

வேடிக்கை




மேசை மேல் இருக்கும்
சிங்கத்தின் பிடறியில்
ஒரு கேசம் பழுத்திருக்கிறது
தெரிந்தோ தெரியாமலோ
கண்டுகொண்ட தினத்திலிருந்து
அது நரைத்து வெளுக்கும் கணத்திற்காக
கவலையேந்திக் காத்திருக்கிறேன்
மௌனக் கர்ஜனையோடு
என் கவலையை வேடிக்கை பார்க்கிறது
சிங்கம்!

உடல் நேசக்காரனின் ஒப்புதல் வாக்குமூலம்

டல் குறித்து பேச விழையும் போது ஆரோக்கியமும், நோய்மையும் மாறி மாறி மனதில் அறையத் தொடங்கிவிடுகின்றது. உடல் ஆரோக்கியம் மட்டுமே உணர்வுகள், மனநிலை, செயல்பாடுகள், பேச்சு, நினைப்பு என எல்லா மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதிகமாக நாம் துவண்டுபோவதும் கூட நோய்மை சூழும் கணங்களில்தான். வாழ்வின் ஆகப்பெரும் சாபம் என்பது நோய்மையாகத்தான் இருக்க முடியும். நோய்மையாக உணரும் எல்லாத் தருணங்களிலும் நம்மை ஆழ்த்தியிருப்பது நோயாக இருப்பதில்லை என்பதுதான் உடல் எனும் பேரதிசயத்தில் இருக்கும் இருக்கும் உண்மை.

உலகின் பேரதிசயங்களின் பட்டியலில் உடலையும் சேர்த்துவிடுவதுதான் நியாயமான தேர்வாக இருக்கும். உடல் என்பது இரத்தமும், சதையும், எலும்புமான தொகுப்பாய் தன் மேல் தோல் போர்த்திய ஒன்றாகத் தோற்றமளித்தாலும். உள்ளுக்குள் புதைந்திருக்கும் பேரதிசயங்கள் உணரும் தருணம் வியப்பு மிகுந்தது. தெரிந்தோ தெரியாமலோ வெளியில் தோற்றமளிக்கும் உடல் அமைப்பிற்கு நாம் தரும் கவனம், உள்ளுக்குள் தரப்படுவதில்லை.

சமீபத்தில் ஒரு நாள் மூச்சை இழுக்கும் போதும் வெளிவிடும் போதும், தும்மும் போதும் வலது புற மார்பிலும், அதற்கு நேர் பின்னே முதுகிலும் சுருக்கெனத் தைக்கும் வலியை உணர்ந்தேன். அந்த வலி ஒருவேளை இடது புறமாக இருந்திருந்தால் நிலவரம் கலவரம் ஆகியிருந்திருக்கும். ஏற்கனவே நீண்ட கால சளித் தொந்தரவு இருந்ததால், வலியை சுவாசம் தொடர்புடையது என நானே கருதிக்கொண்டேன். இருக்கவே இருக்கிறது கூகுள். வலி அறிகுறிகளைக் குறிப்பிட்டுத் தேடியதில், கூகுள் நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் அல்லது கட்டி ஏதேனும் ஏற்பட்டிருக்காலம் என்பவையே கூகுள் அளித்த விடைகள். தொற்று, கட்டி, நுரையீரல் தொடர்பானவற்றில் சற்றே கற்பனையைத் தெளித்துவிட்டால் உணர்வுப்பூர்வமான ஒரு யோக நிலையை எய்துவிட முடியும். மெல்ல மேக மூட்டம் சூழ்ந்துவிடும். எதுவும் மெதுவாகச் செல்வதாக தோற்றமளிக்கும். அமைதி கூடிப்போகும், அனைவரிடமும் அன்பு செலுத்தும் பாங்கு வாய்க்கும். வாழ்வே மாயம் பாடல் மனதிற்குள் ஹம்மிங் ஆகும்.

கற்பனைகளை உதறி நுரையீரல் சிறப்பு மருத்துவரிடம் நேரம் பெற்று, சந்தித்து அறிகுறிகளெல்லாம் சொல்லி மனக்கோட்டைக்கு என்ன வர்ணம் பூசுவார் என ஆவலோடு காத்திருக்க, எக்ஸ்ரே, ஈசிஜி, ப்ளெட் டெஸ்ட் எடுத்துவிட்டு, நுரையீரல் குறித்து எதுவுமே பேசாமல், நீங்கள் அமர்ந்திருக்கும், அடிக்கடி நிற்கும் நிலைகளால் இப்படி வலி ஏற்பட்டிருக்கலாம். சரியாகிவிடும், ரொம்பவும் தொந்தரவு இருந்தால், தேவைப்படும் எனின் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரை அணுகுமாறு சொல்லி அனுப்பிவிட்டார்.

அவ்வப்போது உரையாடும் மருத்துவரை அழைத்து வலி, கூகுள் தேடல், சிறப்பு மருத்துவர், பல்பு ஆகிய கதைகளைக் கூறினேன். கடைசியா ஒரு கேள்வி கேட்டுக்கிறேன் என இடைமறிக்காமல் எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, இறுதியாக அந்த இடத்தில்தான் நுரையீரல் இருக்கிறதென யார் சொன்னது!?” எனக் கேட்டார். அவர் கேட்ட தொணியே கழுவி ஊத்துவதன் ஒருவகையெனப் புரிந்துவிட்டதால், அதையும் கூகுளிலேயே கண்டெடுத்தது குறித்து மூச்சு விடவில்லை. அறியாமை ஒரு பாவம் என்றால் அரைகுறையாய் அறிந்துகொண்டிருப்பது பெரும்பாவம். அரைகுறை அறிதலை வைத்துக் கொண்டு, உடல் தொடர்பாக நாம் உருவாக்கிக்கொள்ளும் கற்பனைத் திறனுக்குத்தான் முதன்முதலில் வைத்தியம் பார்க்க வேண்டும் என்பது இங்கிருக்கும் எண்ணற்றவர்களின் அனுபவத் தெளிவு.

ஒன்னரை வருடங்களுக்கு முன்பு ஒருமுறை மூளை, உடல் மீது வைத்திருக்கும் பெருங்காதலை உணரும் சூழல் வாய்த்தது.  இலங்கையில் பதினோரு நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு வீட்டையடைகிறேன். பயணத்தில் பலவித உணவுகள் கிடைத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல், நாவில் உறைந்து கிடக்கும் வீட்டுச் சாப்பாட்டின் ருசி அலைக்கழிக்கவே செய்யும். வீட்டில் நிறைய உண்டு, நிறைவாய் உறங்கி விழித்ததிலிருந்து, இடது பக்க அடி வயிற்றில் ஏதோ ஒரு இம்சை மின்னல் தொடங்கியிருந்தது.
சுளுக்கிக் கொண்டது போல் இனம் புரியா வலி. வலி மின்னல் போல் உயிரெங்கும் சுழற்றியடிக்கிறது. அவசரத்திற்கு மருத்துவத்தோடு தொடர்பில் இருக்கும் நண்பர்களிடம் விசாரித்தேன். சிறுநீரகக்கல், குடல் இறக்கம், நோய்த்தொற்று என ஒவ்வொருவரின் சந்தேகமும் கூடுதல் அச்சத்தைப் புகட்டின. எப்படியோ அந்த நாளைக் கடந்திருந்தேன். மின்னல் போல் வலி வெட்டி வெட்டி இழுத்தபடியே இருந்தது. தொடர்ந்து எல்லா நேரமும் இருக்கும் வலியல்ல. விட்டுவிட்டு தாக்கும் வித்தியாசமான வலி.

இரவுக் குளியலில், இடது கையை, வலது கையால் தேய்க்கும்போதுதான் வலியையும் வலியின்மையும் பிரித்தறிந்தேன். ஆராய்ந்தபோது இடது மணிக்கட்டு அருகே, கடிகாரம் கட்டும் இடத்தைத் தொட்டால் மட்டுமே வலித்தது. தொட்டால் என்பதில் அந்த இடத்தில் நீர், காற்று, வெப்பம், முழுக்கை சட்டைத் துணி, கடிகாரம், போர்வை, கைக்குட்டை நுனி உரசல் என எது உணரப்பட்டாலும் வயிற்றில் வலி மின்னலடித்தது. ஆராய்ச்சியின் விளைவாய் மனது கொஞ்சம் தெளிவடைந்தது. மருத்துவ நண்பரிடம் சென்றேன். வயிற்றில் இருக்கும் வலியை மட்டும் சொன்னேன். அதையொட்டிய கேள்விகளுக்குள் அவரால் கண்டறிய முடியவில்லை. கையில் ஒரு புள்ளியைத் தொட்டால் மட்டும் வலி தெறிப்பதைத் தெரிவித்தேன். என்ன நடந்தது என்றார்.

சில வாரங்கள் முன்புதான் புதிய கைக்கடிகாரம் வாங்கியிருந்தேன். சற்று தளர்வாக இருந்த அந்தக் கடிகாரத்தின் டயல் பகுதி மணிக்கட்டின்  வெளிப்புறத்தில் தங்கிவிடும். இலங்கைப் பயணத்தின் கடைசி நாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிய இடை நிற்காக நீள் இரவுப் பயணம். மட்டக்களப்பில் வண்டியின் பின் இருக்கையில் படுத்தவன் ஏழெட்டு மணி நேரங்களுக்குப் பிறகு கொழும்பில் தான் விழித்திருந்தேன். தளர்வாய் இருந்த கடிகாரத்தின் டயல் மணிக்கட்டின் பக்கவாட்டில் அந்தப் பயணம் முழுக்க அழுந்தியிருந்திருக்க வேண்டும் என்பதைக் கூறியவுடன், அந்த பாதிக்கப்பட்ட பகுதியை மிகச் சரியாக கண்டு பிடித்து வட்டமிட்டார். அந்த இடத்தில் வட்டமிட்டால் வலியை வட்டமாக உணர்ந்தேன். மேலிருந்து, குறுக்கே, கீழிருந்து என எவ்விதம் கோடு இழுக்கிறோமோ, அதேபோல் வலியும் உணர்ந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியம்தான். இதற்கொன்றும் வைத்தியம் தேவையில்லை சரியாகிவிடும் என்றார். ஆச்சரியத்தோடும், வியப்போடும், கேள்விகளோடும் அவரை ஏறிட்டேன்.

குறிப்பிட்ட அந்த இடத்தில் டயல் பகுதி மணிக்கணக்கில் அழுந்தியதால் அந்த இடத்தின் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். ஆகவே மூளை அந்த இடத்தில் மீண்டும் எதுவும் படாமல் இருக்கவேண்டுமென வயிற்றுக்குள் ஒரு மாய வலியை உணர்த்தி எச்சரிக்கை செய்கிறது. வலி உணரப்படும் இடத்தில் எதும் பிரச்சனையில்லை, சில நாட்களில்  வலி இல்லாது போய்விடும்  கவலைப்படாது போகலாம் என அறிவுறுத்தினார். அவ்விதமே சரியாகிப்போனது.

ஒருவேளை அந்த மணிக்கட்டுப் பகுதியைத் தீண்டினால்தான் வலி வருகிறது என்பதை நான் கண்டறியாமல் போயிருந்திருந்தால், பெரிய அளவிலான சோதனைகள் செய்திருக்க வேண்டியதை மறுப்பதற்கில்லை. எதுவென்றே கண்டுபிடிக்கப்படாமல் எப்படியோ சரியாகிவிட்டது என்றும் ஒரு கட்டத்தில் நிறைவடைந்திருக்கும் சாத்தியமுமுண்டு.

அடிவயிற்றில் வலித்த அந்த பொய் மின்னல் வலியை மூளை இதயம் இருக்கும் இடத்தில் வழங்காமல் இருந்து ஆசிர்வதித்தற்காக கோடானு கோடி நன்றிகளைச் சொல்லுங்கள் என அந்த மருத்துவர் சொன்னபோது கற்பனைகளின் விபரீதம் மின்னல் போல் வெட்டி மறைந்தது.


ட்டுவதை ஒரு விழியென வகைப்படுத்தினால், ஈட்டியதை அல்லது இருப்பதை தக்கவைத்தல் மறு விழியென வகைப்படுத்தலாம். இங்கே ஈட்டுவதிலும், தக்க வைத்தலிலும் சிலருக்கு பொருள் முதன்மைப்படும், சிலருக்கு பெயர், புகழ் இன்னும் சிலருக்கு உடல் நலம் முதன்மைப் படும். பொருள், புகழ், பெயரில் பெரும்பாலும் புறக்காரணிகள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் உடல் நலத்தில் உட்காரணிகளும், தனிப்பட்ட செயல்பாடுகளுமே ஆதிக்கம் செலுத்தும்.

எதுவுமே நன்றாக இருக்கும்வரை, நமக்கு இடைஞ்சலோ, இழப்புகளோ தராதவரை அதனுடைய நலம், பாதுகாப்பு குறித்து அச்சமும் கவனமும் கொள்வதில்லை. அதற்கான காரணம்அதுதான் நல்லாருக்கே!” என்பதுதான். நம் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு கருவிக்கும், நம் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கும் இது சாலப் பொருந்தும்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் படைக்கப்பட்ட காரணமும், அவற்றை மூளை இயக்கும் விதமும் எத்தனை அழகிய வியப்பென்பது அதை உற்று நோக்குவோருக்கு மட்டுமே புரியும். அந்தப் புரிதல் ஏற்படும்போது நமக்காக இயங்கும் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயல்போடு, கொடூரமான சிரமங்கள் தராமல் கையாளும் நிதானமும் பக்குவமும் வந்துவிடும்.

புகைத்தல், மது, உறக்கம் தொலைத்தல், அதிகமாக உண்ணுதல், பொருந்தா உணவுகளை உண்ணுதல் உள்ளிட்ட ஒவ்வாத செயல்கள் மூலம் உடலின் பல அங்கங்களை, உறுப்புகளை வதைப்போரிடம் உங்களுக்காக உழைக்கும் உறுப்புகளுக்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” எனும் வினாவைத் தொடுத்தால் என்ன பதில் தருவார்கள்?.

-

நம்தோழி ஜூன் இதழில் வெளியான கட்டுரை
.