அதுவொரு துண்டுக் காணொளிக்காட்சி. மங்கலாகத்தான் தெரிகின்றது. வெளிநாட்டு ரயில் நிலையம் ஒன்றில் ஆண் ஒருவர் கைபேசியில் பேசிக்
கொண்டிருக்கிறார். கோபத்திலோ, இயலாமையிலோ
கையில் இருக்கும் பையினை தூக்கி அடிக்கிறார். உச்சகட்டப்
பதட்டத்தில் இருக்கிறார் என அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அதைக் கவனித்தபடியே இருவர் கடந்து போகின்றனர். கோபத்தில்
மீண்டும் மீண்டும் கைபேசியில் கத்துவது புரிகிறது. கடந்துசென்ற
இருவரில் பெண்போல் தோற்றமளிப்பவர், கோபத்தில் பேசிக்கொண்டிருப்பவரையே
திரும்பிப் பார்த்தபடி தம் அருகில் இருப்பவரிடம் ஏதையோ சொல்லிக்கொண்டு செல்கிறார்.
ஒருகட்டத்தில் அவ்விருவரும் நின்று விடுகிறார்கள். இவர் கையில் இருந்த கைபேசியையும் தூக்கி வீசி சிதறடித்துவிட்டுக் குமைந்து
உட்கார்கிறார். அந்தப் பெண் அவரை நோக்கி நகர ஆரம்பிக்கிறார். கற்பனை செய்ய முடியாத வேகத்தில்
தண்டவாளத்தில் ரயில் சீறி வரவும், உட்கார்ந்திருந்த நபர்
ரயிலை நோக்கிப் பாய்கிறார். ஓடிவந்த அந்தப் பெண் அவர் ரயிலுக்குள்
விழுவதற்கும் முன்பாக இழுத்து வெளிப்புறமாகத் தள்ளிவிடுகிறார். ஒரு மைக்ரோ நொடிப் பொழுதுதான். மரணம் தோற்றுவிட்டது. உயிரும், மிச்சமிக்கும் வாழ்க்கையும் கிடைத்தற்கரிய
பரிசுபோல் அப்படியே கையில் மீந்து நிற்கின்றன. ஆமாம்,
இன்னொரு பிறப்பெடுத்தாகிவிட்டது.
இரண்டு வார காலத்திற்குள்
என்னிடம் நான்கு பேர்,
வாழ்வதன் மேல் கொண்ட அயர்ச்சியில், வாழ்க்கை தரும் மிரட்சியில்
குமைந்துபோய் தற்கொலை எண்ணம் தலை தூக்குவதாகச் சொல்லிவிட்டார்கள். நாற்பதுகளில் இருக்கும் ஓர் ஆண், முப்பதுகளில்
இருக்கும் இரண்டு பெண்கள் மற்றும் இருபது வயதை நெருங்கும் ஒரு மாணவன். அவர்களைச் சூழ்ந்த எண்ணத்தின்
பின்னால் வறுமையோ, பொருளாதார இழப்போ,
நோய்க் கொடுமையோ, உறவுகளின் அருகாமைக் குறைவோ இல்லை. அனைவருக்கும் குடும்ப, சமூகப் பிணைப்பு மிக பலமாகவே
உள்ளன.
முதல் மூவருக்கும் கல்வி
பயிலும் பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
நான்காமவரை நம்பி தாய், சகோதரி இருக்கிறார்கள். எல்லோருக்கும் பெருங்கடமைகள் கைகளில் கனத்துக் கிடக்கின்றன. ஏதோவொரு அற்பக் கணத்தில் இவர்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டால்
பிள்ளைகளின் வாழ்க்கை, குடும்பத்தின் எதிர்காலம் உள்ளிட்ட
அனைத்துமே சபிக்கப்பட்டதாகிவிடும். ஆனாலும் தயக்கமே இல்லாமல்,
ஒரு தேநீர் அருந்த விரும்புவதைச் சொல்வதுபோல், தம்மையே கொலை செய்வது குறித்து சலனமில்லாமல் மிக எளிதாகச் சொற்களை
உதிர்க்கிறார்கள். இவ்வாறாகச் சொல்லியவர்கள் நான்கு பேர்
எனில், உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பல்லாயிரங்களில்
இருக்கலாம். சுயமாய்த் தேடிக்கொள்ளும் வகையில் வாழ்க்கையும்
மரணங்களும் அத்தனை சல்லிசாகி விட்டனவா!?
இந்த வாழ்க்கையை
மிகக்கெட்டியாகப் பிடித்துக்கொள்ள என்னிடம் இருக்கும், எனக்கு மிகவும் பிடித்த தாரக
மந்திரம் “நமக்குக் கொடுக்கப்பட்டது ஒரே ஒரு வாழ்க்கை” என்பதுதான். என்னிடம் பழகுபவர்களிடம் பல்வேறு
தருணங்களில் இக்கூற்றினை மிகத்தாராளமாக மொழிகிறேன். அதைவிடவும்
அதிகமாக என்னிடமே நான் திரும்பத்திரும்ப மொழிகிறேன். இதுவே
பலநேரங்களில் என்னை இயக்கும் மந்திரச்சொல். இந்த வாழ்க்கை
எவ்விதமானதாக அமைந்திருந்தாலும் சரி, சுவாரஸ்யம், பூடகம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் நிறைந்ததே. மகிழ்ந்திருந்த
கணங்கள், நம்பிக்கை மிகுந்திருந்த தருணங்கள் நினைவில் தங்குவதைவிட, நீங்காமல் நிலைத்திருக்கும் வருந்திய கணங்கள், கலங்கிய
தருணங்கள் பல மடங்கு அதிகம்.
அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தில் நானும் அச்சமூட்டும் ஒரு காரணத்தோடுதான் காத்திருந்தேன். திருவிழாபோல் கூட்டம். கற்பனையே செய்திட முடியாத
அளவிற்கு இளைத்து ஒல்லியாய் இருந்த நோயாளி ஒருவரும் காத்திருக்கிறார். அவ்வளவு இளைத்திருக்கும்
ஒருவரை என் வாழ்நாளில் ஒருபோதும் பார்த்ததில்லை. சுருங்கி இறுகி ஒட்டியிருக்கும்
தோலிற்குள் எலும்பு நரம்புகள் தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியாது. அருகில் மனைவி, மகன் போல் தோற்றமளிக்கும்
இருவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் இன்னும் தங்கியிருக்கும் நம்பிக்கை குறித்தே
யோசிக்கத் துவங்குகிறேன். வாழ்வது குறித்த, வாழ வேண்டிய தேவை குறித்த நம்பிக்கைகளை எப்படியேனும் உணர்ந்துதான் ஆகவேண்டும். அப்படி உணர்வதால் பலன்கள் கிட்டுகிறதோ இல்லையோ, உணர
மறுப்பதாலோ, உணர மறப்பதாலோ ஒருபோதும் பலன்கள் உருவாக
சாத்தியமில்லை.
‘வாழத் தவிக்கிறேன், நாட்கள் இல்லை!’ என வாழ வேண்டிய வயதில் வாழ்வை
முடித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டவர்களை அறிந்ததுண்டா?
அப்படியாக புற்றுநோயால் வாழ்வை முடித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டவர் இருபத்தேழு வயதே
ஆன ஹோலிபட்சர் எனும் பெண். வாழ்ந்திட பெரிதும் ஏங்கும் அவரின்
கையில் மரணத்தைத் திணித்துவிட்டு காலம் நின்று விளையாடுகிறது. எந்த வகையிலும் தவிர்க்கமுடியாமல் எதிர்கொண்டேயாக வேண்டிய நிர்பந்தம்.
பணம், புகழ், அறிவியல்
என எதுகொண்டும் தவிர்க்க முடியாத திணிக்கப்பட்ட தீர்ப்பு. அந்தச்
சூழலிலும் வாழ்க்கையின் அழகியலை, அவசியத்தை அவர்
பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். அதைத்தான் எழுதியிருக்கிறார். அந்தக் கடைசி எழுத்தினைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம்
கொண்டாடும் அல்லது திண்டாடும் வாழ்க்கை குறித்தான வேறொரு வடிவத்தை, பிரமாண்டத்தைக் காட்டும் வல்லமை கொண்டது அந்தக் கடிதம். தெரிந்தோ தெரியாமலோ இந்த வாழ்க்கையின் அருமையை யாரோதான் மீண்டும்
மீண்டும் நமக்கு உணர்த்துகிறார்கள். நாமாக உணர்வதற்கு நமக்கு அறிவில்லை, தெளிவில்லை, நேரமில்லை இன்னும் சொல்லப்போனால் நிதானமில்லை.
உணர்தல் ஒரு வரம். தேடியடைய வேண்டிய வரம். எனினும் பெரும்பாலும் நமக்கு
வாய்ப்பதில்லை.
வாழ்க்கையை முடித்துக்கொள்ள ஏதோ
ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு,
அதுசார்ந்த குழப்பங்களை முன்பின்னாக வளர்த்துக்கொண்டு, முடித்துக்கொள்ள நினைப்பதாகச் சொன்னவர்களை உற்றுப் பார்க்கிறேன். அந்த ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு சிணுங்கிக் கொண்டு
நிற்பவர்களிடம் உரத்துச்சொல்ல ஆயிரமாயிரம் இருக்கின்றன என்னிடம். அவர்கள் தம் செவிகளை, விழிகளை, மனதை அடைத்து வைத்திருக்கும்வரை ஒரே ஒரு
சொல்கூட அவர்களைச் சென்றடைந்துவிட முடியாது..
தான் ஒரு தனித்த உயிர், பிறப்பு தன் கட்டுப்பாட்டில்
இல்லாமல் நிகழ்ந்ததுபோல், இறப்பு தானாக வந்து நிகழும்வரை
தனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறதென ஏற்க மறுப்பவர்களிடம் என்ன செய்வீர்கள்?.
உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கைரேகையும், கருவிழிப்பதிவும் வெவ்வேறாய் இருப்பது போலவே, ஒவ்வொருவரின்
வாழ்க்கைக்கும் தனித்த அளவீடுகள், காரணங்கள், இலக்குகள், கடமைகள் இருப்பதை உணர மறுப்பவர்களிடம்
என்ன சொல்வீர்கள்? “முட்டாளே!” எனும்
ஓங்காரமான குரலொன்றுதான் மூர்க்கமாய் வருகிறது. அந்தக்
குரலுக்குள் இருப்பது வெறும் கோபம் மட்டுமல்ல. ஸ்கேன்
மையத்தில் சுருங்கிக் கிடந்தவரின் தவிப்பு, தாங்கும்
குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு, வாழத்தவித்த ஹோலிபட்சரின்
ஏக்கம், ரயிலுக்குள் பாய்ந்தவனை சரியான நேரத்தில்
இழுத்தவரின் பேரன்பு உள்ளிட்ட கோடானு கோடிப் பேரின் வாழ்க்கைக்கான ஏக்கமும் பிணைந்தேயிருக்கின்றது.
இது என் வாழ்க்கை, நான் வாழ்வதற்கெனப் பிரத்யேகக்
காரணங்கள் உண்டு என நம்ப மறுப்பவர்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாக்
கோபமும், இயலாமையும் ஒன்றிணைந்து வருகின்றன. அவர்களின் நம்பிக்கையின்மையை, பிடிவாதத்தை
எதுகொண்டேனும் தூக்கி இந்த அண்டவெளிக்கும் வெளியில் வீசியெறிந்துவிட மனம்
துடிக்கின்றது. தன்னைக் கொல்வதற்கு ஒரேயொரு காரணத்தைச்
சொல்கிற எவரும், வாழ்க்கையைத் தொடர்ந்திடுவதற்கு ஒற்றைக்
காரணத்தைக்கூடச் சொல்ல மாட்டேன், தேட மாட்டேன் எனும் கொடும்
முரணை என்னவெனச் சொல்வீர்கள்?
வாழ்க்கையின் அருமையை
உணர்ந்துகொள்ள எல்லோருக்கும் சந்தர்ப்பம் அமைந்தே தீரவேண்டுமென்பதில்லை. நகரச்சாலையில் லாரி வந்து
கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் வரும் அவ்விரு
பெண்களும் எங்கிருந்து புறப்பட்டார்கள் எனத்தெரியவில்லை,
எந்தச் சிரமமுமின்றி, நேராக லாரியின் இடது பக்கவாட்டில் மோதி
மிகக் கச்சிதமாக பின் சக்கரத்திற்குள் விழுகிறார்கள். மோதியதை
உணர்ந்த கணத்தில் லாரி ஓட்டுனர் ப்ரேக் மேல் ஏறி நின்றிருக்க வேண்டும். விழுந்தவர்களின் மீது பின்சக்கரத்தின் முனை தொட்டும் தொடாமலும் லாரி
நின்று விடுகிறது. தப்பித்துவிட்டார்கள். அது வெறும் தப்பித்தலில்லை. வாழ்க்கை முழுதாய் இன்னொரு
முறை கிடைத்திருக்கின்றது. வெறும் இரண்டு நொடிப்பொழுது
போதும் அவ்விரு உயிர்களைப் பறிக்க, குடும்பங்களை
நிர்கதியாய்த் தவிக்கவிட. அதைவிட அப்படியொன்று நிகழாமல்
தடுக்க அதைவிடவும் மிகச் சிறிய ஒரு நொடிக்கும் குறைவான பொழுது போதுமானதாக
இருந்திருக்கின்றது. தன்னையே கொலை செய்வது குறித்த
சிந்தனையிலிருந்து வெளியேறுவதும்கூட பெரும் தப்பித்தல்தான்
இந்த வாழ்க்கையெனும் புதிரில்
மரணமென்பது பெரிய விடையாக இருக்கலாம்.
பெரிய விடைக்கு முன்பாக முக்கியமான விடையொன்று இருக்கின்றது. அந்த முக்கியமான விடை ”வாழ வேண்டுமெனும் வேட்கையே”.
நன்றி : விகடன்
நன்றி : விகடன்