பாடங்கள் பலவிதம் - ’நம் தோழி’ கட்டுரை


சென்னைக்கு விரைந்தோடிக் கொண்டிருக்கும் பகல் நேரத்து வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ். மதியத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பொழுது. வெயில் அதன் உக்கிரத்தை சன்னல் வழிக்காற்றில் கலந்து புகுத்திக் கொண்டே இருக்கிறது. படுக்கை வசதிதான் என்றாலும் படுக்கவும் முடியாமல், அமரவும் முடியாமல் தடுமாற வைக்கும் பகல் நேரத்துப் பயணம்.

எதிர் வரிசையில் ஒரு தம்பதியும் அவர்களின் மகளும். குழந்தைக்கு நான் அல்லது ஐந்து வயது இருக்கும். அப்பாவிடம் எதைக் கேட்டாலும் ஆங்கிலத்திலேயே கேட்கிறது. நிச்சயமாக ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிள்ளையாக இருக்க வேண்டும்.  ”நீ என்ன இங்க்லீஷ்காரன் வீட்டு புள்ளையா, தமிழ்ல கேக்கமாட்டியா!?” என்பதை அந்தத் தந்தை எத்தனையாவது முறையாக சொல்கிறார் என்பது கணக்கில் இல்லை. அந்தக் குழந்தையின் அம்மாவும் அவ்வப்போது கவனத்தை ஈர்க்கிறார். மகள் என்ன கேட்டாலும் அதற்கு நிதானமாக பதில் சொல்கிறார். அடிக்கடி வாரி வாரி முத்தமிடுகிறார். அந்தக் குழந்தை அம்மாவைச் சார்ந்ததாகவே இருக்கிறது. எப்போதெல்லாம் அப்பாவிடம் செல்கிறதோ அங்கு ஒரு உரசல் உருவாகிறது.

என் அருகிலிருந்த நடுத்தர வயது அம்மா ஒருவர், தான் மதிய உணவு எடுத்துக்கொள்ளும்போது உடன் வைத்திருந்த நொறுக்குத்தீனியிலிருந்து கொஞ்சம் எடுத்து அந்தக் குழந்தையிடம் வற்புறுத்திக் கொடுக்கிறார். அது ஒரு கார வகை. குழந்தை வாங்க மறுக்கிறது. அன்பால் அந்த அம்மா வற்புறுத்துகிறார். குழந்தையின் அம்மாவைப் பார்க்க, அம்மா தலையாட்ட, குழந்தை அதை வாங்கி அம்மாவிடம் கொடுத்துவிடுகிறது. பொதுவாக இந்த வயதுள்ள குழந்தைகள் சாக்லெட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை விரும்பும், மதிக்கும். அந்தக் கார வகையை சாப்பிடாது எனத் தீர்க்கமாக நம்புகிறேன்.

குழந்தையின் அம்மா அந்தக் குழந்தையிடம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவேயில்லை. இருக்கையில் அருகே இருந்த ஒரு வார இதழின் மேல் வைத்துவிட்டு வழக்கம்போல் மகளிடம் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் வருகிறார். சற்று நேரத்திற்குப் பிறகுதான் கவனித்தேன். வார இதழின் மேல் வைத்த காரத்தின் அளவு சற்று குறைந்திருந்தது. அதன்பின் அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். குழந்தையோடு விளையாடியபடியே அந்தக் காரத்திலிருந்து மிகச்சிறிய அளவை எடுத்து அவ்வப்போது குழந்தைக்கு ஊட்டுகிறார், விளையாட்டு, அரட்டை சுவாரசியத்தில் குழந்தையும் அதை சாப்பிடுகிறது. 

ங்கரநேத்ராலயா மருத்துவமனையின் காத்திருப்பு பகுதி. நான் அமர்ந்திருக்கும் வரிசைக்கு முன் வரிசையிலும், பின் வரிசையிலும் நாற்காலிகள். நெரிசல் ஏதுமில்லை. சொற்பமான மனிதர்கள். எவரையும் கவனிக்கும் எண்ணமற்று, ஏதோ சிந்தனைகள் மனதில் கூடுகட்ட கை பேசியில் கண்களை ஓட்டிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பொருள் ’சொத்’ என விழும் ஓசை கேட்கிறது. சற்றே பார்வையை விரிக்கிறேன். ஒரு ஸ்லைஸ் குளிர்பான ப்ளாஸ்டிக் பாட்டில் கிடக்கிறது. மீண்டும் கைபேசியில் ஆழ்கிறேன்.

’சப்’பென ஒரு அறை விழும் சப்தம் கேட்கிறது. அது மிகக் கனமான சப்தம். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன். முன் வரிசையில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்கிறாள். மிக அழகான குழந்தை. பார்க்கும் எவருக்கும் அவள் தேவைதையென்றே மனதில் பதிகிற மாதிரியான ஒரு அழகிய குழந்தை. நான்கு வயதுக்குள் இருக்கலாம். அந்தக் குழந்தையின் காலடியில் அந்த ப்ளாஸ்டிக் ஸ்லைஸ் பாட்டில் கிடக்கிறது. அருகில் கம்பீரமான உருவமாய் ஒரு ஆண் நிற்கிறார். வயது முப்பதுகளில் இருக்கலாம். அந்தக் குழந்தையின் அப்பாவாக இருக்கலாம் எனப் புரிகிறது. நிமிர்ந்து பார்க்கிறேன். குழந்தையை எரித்துவிடுவது போல் பார்க்கிறார். மிகத் தீர்க்கமான அதே நேரம் சலனமற்ற பார்வையோடு கண் சிமிட்டாமல் அந்தக் குழந்தை அப்பாவையே பார்க்கிறது. பார்வையில் அடர்த்தியானதொரு அமைதி. அடிவிழுந்த சப்தத்தில் நான் திடுக்கிட்டிருந்தேன். அடிவாங்கிய சுவடு ஏதுமின்றி தன் தந்தையை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறது குழந்தை. ஒரேயொரு முறை கண் சிமிட்டுகிறது. நாக்கை மடித்து விரலால் சாடை காட்டுகிறார். மெல்லக் குனிந்து கீழே கிடந்த பாட்டிலை எடுத்து நிமிர்ந்து நெஞ்சோடு கட்டிக் கொள்கிறது.

விழுந்த அறை அசாதாரணமானது. குழந்தையின் மீது விழுந்த அறை என்மீது விழுந்திருந்தால் என்ன நடந்திருக்குமென ஒரு கணம் கற்பனை செய்கிறேன். அடித்த அந்த ஆள் ஒரு எதிரியாய் எனக்குள் உருவகமெடுக்கிறார். அந்தக் குழந்தையின் அமைதியும் உறுதியும் என்னை உலுக்குகிறது. என்னால் அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை.

திடமாய் நின்று அந்த அப்பாவையே பார்த்தபடி இருந்தாள். அந்த அமைதியும், திடமும், கூரிய பார்வையும் வேறொன்றைச் சொல்கிறதாய் எனக்குப் படுகிறது. அப்பா எனும் ஆதிக்கத்தின் மீது, அப்பா எனும் வலிமையின் மீது, அப்பா எனும் திடகாத்திரத்தின் மீது, அப்பா எனும் அதிகாரத்தின் மீது, அப்பா எனும் பிம்பத்தின் மீது, அப்பா எனும் கண்டிப்பின் மீது, அப்பா எனும் அவசரத்தின் மீது, அமைதியாய், மிக அமைதியாய், நுணுக்கமாய், கூர்மையாய் அந்தக் குழந்தை விடும் சவாலாகவே அது எனக்குத் தோன்றியது.

மீண்டும் நான் கவனத்தை என் வசதிக்குத் திருப்பிக் கொள்கிறேன். சில நிமிடங்கள் கழித்து அந்தக் குழந்தையைப் பார்த்தபோது ஆச்சரியத்தில் உறைந்து போகிறேன். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தன் அப்பாவின் மடியில் மண்டியிட்டபடி அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறது. இது கனவா, நனவா என ஒரு நடுக்கம் எனக்கு உள்ளுக்குள் வருகிறது. அந்தச் சம்பவத்தை ஒரு நிலைத்தகவலாக என் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிகிறேன் 

"எச்சூஸ்மீ தகப்பா.... ஒரு ஸ்லைஸ் பாட்டில கீழ போட்டதுக்கு 'சப்பு'னு அறையறதுக்குப் பேரு வீரம் இல்ல.... உங்கிட்ட அடிவாங்கிட்டு அழாம அமைதியா இருந்துட்டு, அஞ்சு நிமிசம் கழிச்சு 'அப்பா'னு மடில வந்து உக்காந்தனே... அதுக்குப் பேருதான் வீரம்!' 

மீபத்திய பத்தாண்டுகள் நமக்கிடையே விதைத்திருக்கும் மாற்றங்களும் அவசரங்களும் மிக சிக்கலானவை. 1980களில் பதின் வயதில் இருந்த ஒருவர், 2010களில் பதின் வயதில் இருக்கும் ஒரு பிள்ளையை அன்றைய தம்மோடு பொருத்திப் பார்ப்பதில்தான் பல சிக்கல்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே வளர்வதற்கான காரணமாய் இருக்கின்றன.

1980களில் ஊரில் ஒரு தொலைக்காட்சி இருந்தாலே மிகப் பெரிய விசயம். தொலைபேசி என்பதும் மிகப்பெரியதொரு கனவு. புல்லட்டும் யெஸ்டியும்தான் அன்றைய வாகனங்கள். ஓரிரு வானொலி நிலையங்கள்தான் குடும்பத்தின் பொழுதுபோக்கு. எப்போதாவது அருகாமையிலிருக்கும் திரையரங்கள் படம் மாற்றி இன்றே கடைசி ஒட்டுவார்கள். ஆனால் இன்று வீடுதோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் அதில் நூற்றுக்கணக்கான சானல்கள். ஆட்கள்தோறும் கைபேசி, அதில் ஒற்றைச் சொடுக்கில் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவரை எட்டிவிடமுடிகிறது. சாலைகளுக்குச் சற்றும் பொருந்தாத வேகத்தில் விரையும் இரு சக்கர வாகனங்கள்.

தம் பிள்ளைகள் வாழும் பதின்பருவ வாழ்க்கையென்பது தாம் வாழ்ந்த பதின் பருவ வாழ்க்கைக்கு இணையானது அல்ல என்பதைப் புரிந்து கொள்வதுதான் இன்றைய பெற்றோரின் அவசியமான, அவசரமான தேவை.

வாழ்க்கையில் சூழல்களைத் தவிர ஆகச்சிறந்த பாடங்களும், மனிதர்களைவிட ஆகச்சிறந்த போதனையாளர்களும் இல்லை. அதிலும் குழந்தைகள் அற்புதமான ஒரு பாடம் சொல்லிகள்.

ஒரு பயணத்தில் ஒரு தாய்மை தன் போக்கில் கற்றுக் கொடுக்கும் பாடமும், ஒரு காத்திருப்பு அறையில் ஒரு குழந்தை தன் இயல்பில் கற்றுக் கொடுக்கும் பாடமும், சற்றே மனது திறந்து கவனித்தால் எத்தனை இதமாய் நமக்குள் பதிகிறது.

எத்தனை எத்தனை பாடங்கள் கற்றுக்கொண்டாலும், வாழ்க்கைச் சக்கரத்தின் வேகமும் அவசரமும் நம்மை ஏதாவது ஒரு கீழ்மைக்குள் இழுத்துக் கொண்டு சொருகிவிடுவதை மறுப்பதற்குமில்லை. ஒவ்வொரு தந்தையும், ஒவ்வொரு தாயும் பிள்ளைகளிடம் பாடம் கற்றுகொள்ள ஆயிரமாயிரம் இருக்கின்றன. 

பிள்ளைகள் தாயிடம் கொஞ்சம் தந்தைமையை எதிர்பார்ப்பதைவிட, தந்தையிடம் கொஞ்சம் கூடுதலாய் தாய்மையை எதிர்பார்க்கிறார்கள் என்பது நிதர்னமான உண்மை! காரணம் தந்தை மனதிலும் மாரிலும் சுமப்பவராய் இருந்தாலும், தாய் என்பவள் தன் கருவிலும் கனவிலும் சுமந்தவளாக இருக்கிறாள். 

தாயுமானவர்களாக இருக்கப் பழ வேண்டியது தந்தைகளின் தேவையாக இருக்கிறது.


-


“நம் தோழி” மார்ச் இதழில் வெளியான கட்டுரை

-
சிங்கப்பூர் பயணம் - 8இந்தப் பயணத்தில் இரண்டு நாட்களை மிகப் பயனுள்ள, நம்பிக்கையுள்ள நாட்களாக மாற்றிய பெருமை ஏ.பி.ராமன் அவர்களையே சாரும். திங்கட்கிழமை நூலகம் அழைத்துச்சென்றது போல, செவ்வாய்க்கிழமை திரு.மு.ஹரிகிருஷ்ணன் அவர்களோடு மிகுந்த ஆக்கப்பூர்வமான சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திக் கொடுத்தார். உதவினார் என்றெல்லாம் ஒற்றை வார்த்தையில் அவர் உதவியை கடந்துபோய்விட முடியாது. அதற்கு முந்தைய வாரம்தான் அவரின் ஈரோடு வருகையில் பிரமித்திருந்தேன். அதுகுறித்து எழுதியிருந்ததில் இருந்த பிரமிப்பு வெறும் உணர்வுப்பூர்வமான எழுத்தல்ல, அத்தனையும் நிதர்சனம் என்பதைத்தான் அவரின் அந்த இரண்டு நாட்கள் சந்திப்புகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டேன். இரண்டு நாளும் நாங்கள் அவர் சந்திக்கலாம் எனச்சொன்ன இடத்தை அடையும் முன்பே வந்திருந்து காத்திருந்தார். தம் வயதைச் சற்றும் பொருட்படுத்தாது, நடை, கார் என உடன் பயணித்து மிகவும் உதவியாக இருந்த அன்பிற்கினிய ஏ.பி.ராமன் அவர்களின் அன்பும் நட்பும் கிடைத்தது பெரும் வரமென்றே சொல்வேன். 


ஒரு உணவு வேளைக்கு சந்திக்கவேண்டும் என இரண்டு நாட்களாய் முயற்சித்த தாம் சண்முகத்தோடு செவ்வாய் மதிய உணவிற்கு நான், ஏ.பி.ராமன் மற்றும் அனிதா கலந்து கொண்டோம். அமைதியான சூழலில், சுவையான ஒரு விருந்தோடு அழகியதொரு உரையாடலோடு அந்த மதியம் கரைந்தது. அதற்குமுன் அதிகப் பரிட்சயம் இல்லாமல் இருந்திருந்தாலும்கூட, ஓரிரு சந்திப்புகளில் உள்ளத்திற்கு மிக நெருக்கமாக மாறிவிட முடியும் என்பதை இந்தமுறை உணர்த்திவர்கள் முக்கியமானவர்கள் தாம் சண்முகம், ஹாஜா மொய்தீன் மற்றும் அமல் ஆனந்த். தாம் சண்முகத்தோடு காலம் காலமாக பழகிய உணர்வை ஒவ்வொரு முறை உரையாடும்போது உணர முடிகின்றது. 

 

மூன்று நாட்களாய் விரும்பி வீட்டுக்கு அழைத்தும் அமல்ஆனந்தைச் சந்திக்க முடியாமல் போனதில் ஒரு கட்டத்தில் குற்ற உணர்ச்சியே வந்துவிட்டது. செவ்வாய்க்கிழமை நானாக தொடர்புகொண்டு எப்படியாவது எங்காவது சந்தித்துவிடலாம் எனச் சொல்ல, மாலை விமான நிலையம் ஒன்றாகச் செல்வோம் எனக்கூறி நான் இருக்கும் இடத்தின் எதிர் துருவத்தில் இருந்து, தேடிவந்து, விமானநிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த பை எடைப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி நிறைய நிறையப் பேசி உற்ற தோழனாய் உடனிருந்த உதவி அமல் ஆனந்த் அன்பையும் நட்பையும் என்னவென்று சொல்ல.வலைப்பக்கத்திலிருந்து ஒரு நண்பனாக, மனதுக்கு மிக நெருக்கமான ஒரு தோழனாக இருக்கும் கண்ணன் இந்தப் பயணத்திலும் பெரிதும் உடனிருந்தார். மிக உரிமையாய்ப் பேசும் நட்புகளில் கண்ணனும் ஒருவர். பிப்ரவரியில் அவர் ஊருக்கு வந்தபோது பலமுறை சந்திக்கத் திட்டமிட்டும் முடியாமல் போனதை இந்த நான்கு நாட்களில் நிரப்பிக்கொள்ள முடிந்தது.

தன் பெரும்பான்மையான நேரத்தை ஒதுக்கி மூன்று நாட்கள் சிங்கப்பூரின் திசைகள் தோறும் அழைத்துச் சென்ற கடலூரன் ஹாஜா மொய்தீன் அவர்களின் அன்பும் பிரியமும் அவ்வளவு எளிதாக வார்த்தைகளில் வடித்திட முடியாதது. சில விசயங்களை அவர் எடுத்துரைக்கும் விதம் அலாதியானது. நான் பழகிய வரையில் ஹாஜாவிடம் குறிப்பாக சிங்கப்பூர் வாழ்க்கை குறித்தும், பொதுவாகவும் எழுதவும் நிறைய உள்ளன. மிக நெருக்கமான பிரியமான இன்னொரு தம்பி வெற்றிக் கதிரவன். 2010ல் நான் வவுனியா சென்றது குறித்து எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு தானும் யாழ்ப்பாணம் போகவேண்டுமென என்னிடம் விசாரித்ததில் தொடங்கியது நெருக்கமான நட்பு. ஊர் திரும்ப விமான நிலையத்தில் காத்திருக்கும்போது, அழைத்து “அண்ணே பக்கத்துலதான் இருக்கேன். கிளம்புறவரை நான் கூட இருக்கிறேன்” என்று உடனிருந்து விடை கொடுத்த பிரியம் மறக்கவியலாத ஒன்று.

உட்லாண்ட் நூலகத்தில் சந்தித்த என் பள்ளித்தோழனின், கல்லூரித் தோழனாய் இருந்து எனக்கும் நட்பான பி.பி.ராஜ்ஜை மீண்டும் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த அன்புத் தம்பி தளபதி முஸ்தபாவை இரண்டு மூன்று முறை முயற்சித்தும் சந்திக்க இயலாமல் போனதிலும் வருத்தமே. பாரதி இளங்கோவனோடு பேசும் வாய்ப்பு கூட அமையாத சூழலும் சற்று வருத்தமே.

இறுதியாக…

எங்களின் நட்பு எப்படி உருவானது என்பதிலெல்லாம் பெரிய சுவாரஸ்யமில்லை. ஃபேஸ்புக்கில் எதற்கோ, எப்படியோ ஒரு காலகட்டத்தில் எங்களில் யாரோ கொடுத்த நட்பு அழைப்பில்தான் அந்த நட்பு பூத்திருக்க வேண்டும். ஆனாலும் காலம் எங்களை விசித்திரமான ஒரு நட்புக்குள் பூட்டிவைத்தது. என்னைக் குறித்து அவரும், அவரைக் குறித்து நானும் எங்கும் புகார் வாசித்திருக்கவே மாட்டோம். ஆனால் எங்களுக்குள் ’நீ அப்படி, நீ இப்படி’ என ஆயிரமாயிரம் புகார்கள் அவ்வப்போது உருவாகும். ஒரே நாளில் நான்கைந்து முறைகள்கூட பேசியதுண்டு. தொடர்ந்து ஒரு மாதம்கூட ஒற்றை வார்த்தை பேசும் அவசியமற்று இருந்ததும் உண்டு. ஆழக் கிடக்கும் கிழங்கில் ஒரு சொட்டு நீர் விழுந்தால் கூட முளைத்து மண்ணைத் துளைத்து செழித்து நிற்கும் கோரைப்புல் போல் எங்களுக்கிடையே கிடக்கும் நீண்ட நாட்களின் மௌனத்தை உடைக்க எப்போதாவது ஒளிரும் அல்லது ஒலிக்கும் “எப்படியிருக்கே” என்ற ஒற்றைச் சொல் போதும்.

வாசகர் வட்ட விழாவில் வெளியிடப்பட்ட நான்கு புத்தகங்களை அச்சிடும் பணியை அவர்தான் உறுதிகூறி பொறுப்பெடுத்துக்கொண்டார். உண்மையில் குறைந்த கால அவகாசம் மிகுந்த நெருக்கடியைக் கொடுத்ததால், மிகக் கடினமாய் உழைக்க வேண்டியிருந்தது. புத்தகங்களுக்கானவற்றை அனுப்பும் முழுப்பொறுப்பும், பிழை திருத்த ஏற்பாடு செய்து அனுப்பும் பொறுப்பும் அவரைச் சார்ந்ததாயிருந்தது. கிட்டத்தட்ட ஏழெட்டு நாட்கள் மிகச் சவாலானவை. மிகக்கடுமையானவை. தாங்க முடியாத அயர்ச்சியைக் கொடுத்தவை. எனக்கு அது ஆண்டாண்டு காலமாய்ச் செய்த தொழில். அவருக்கோ தம் நண்பனை நம்பி, அங்கிருக்கும் நட்புகளுக்கு உறுதிகொடுத்துவிட்டு அந்த வார்த்தையைக் காப்பாற்ற போராடிய போராட்டம். வேலைப்பளுவில், இயலாமையில், அயர்ச்சியில், ஏதேதோ பிரச்சனைகளால் என சில நாட்களில் நான் காட்டிய கோபம் மிக உக்கிரமானவை, கோபமூட்டக்கூடியவை. அப்படியான தருணங்களில் நான் காட்டிய கோபத்தையும் பொறுமையாய்க் கடந்து செயலை செவ்வனே முடிக்கச் செய்ததில் முழுக்க முழுக்க அவரின் பங்கே முக்கியமானது.

இந்த முறை பயணத்தில் ஐந்து நாட்கள் அவர்கள் வீட்டில் கழிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவரின் அம்மாவும் என்னோடுதான் வந்திருந்தார். பொதுவாக எந்த நட்பிலும் நெகிழ்ச்சியைக் கடந்து நிதர்சனத்தை உணர தொடர்ந்து 2 நாட்கள் ஒன்றாகப் பயணித்தாலோ, இருந்தாலோ ஏதாவது ஒரு புள்ளியில் சிக்கல் உணரும் சாத்தியங்களுண்டு என்பார்கள். ஆனாலும் நான் அங்கிருந்த ஐந்து நாட்களில் துளியும் அன்னியத்தன்மை உணராமல், மிக இயல்பாக இருக்கும் சூழலை அமைத்துக் கொடுத்ததில், அவரின் கணவர் மோகன், குழந்தை சங்கீத் மற்றும் அம்மா சிவாச்சலம் ஆகியோரின் அன்பு மனங்களாலாயே சாத்தியமானது. ஒரு சாதரணமான நட்பை குடும்ப நட்பாக தகவமைத்து எளிமையாக, மிக அக்கறையாக, அன்பாக நடத்தும் மோகன் அவர்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரியவர். அவரின் அம்மாவிற்கும் என்னுடைய அம்மாவிற்கும் சமவயது. ஒரு மகனைப் போல நடத்தும் அன்பும், ஒரு தோழனைப் போல் நடத்தும் பக்குவமும் அவரிடம் ஒருங்கே இருப்பது ஆச்சரியமான ஒன்று. இலக்கியம் முதல் இன்றைய நிகழ்கால நடப்புகள் வரை அவரால் மிக இயல்பாக ஒன்றி உரையாடிக் கொண்டே இருக்க முடிகிறது. 


அந்த அழகிய குடும்பத்தின் சுதந்திரம், தனிமையில் சற்றே தியாகம் செய்து அன்பில் ஐந்து நாட்கள் என்னையும் அடைகாத்து வைத்திருந்தார்கள். அந்த ஐந்து நாட்களின் அன்பும் பிரியமும் குறித்தே தனித்து ஒரு கட்டுரையே கூட எழுதலாம். இப்போதும்கூட ஊர் திரும்பி ஒரு மாத காலத்தில் இரண்டு முறை மட்டுமே பேசியிருக்கிறேன். அதுவும்கூட அவர் அம்மா இந்தியா திரும்புதவற்கான விமான பயணச்சீட்டு குறித்ததாக என்றே நியாபகம். ஆனாலும் குறையொன்றுமில்லை!

இதுவரையிலும் அவர் எனக்குறிப்பிட்டது, மனது முழுக்க நெகிழ்வோடும், பிரியமாகவும், பெருமையாகவும் உணரும் நட்பு ”அனிதா ராஜ்”. இதுவரைச் சொன்னதாக நினைவில்லை, ஆனாலும் இந்தப் பயணம் குறித்த நினைவுகளை எழுத்தில் நிறைவு செய்யும்போது, அவரிடம் சொல்ல என்னிடம் எளிமையான சில சொற்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன… அவை “எல்லாத்துக்கும் நெகிழ்வான நன்றியும், நிறைவான அன்பும் அனிதா!”

-

தொடர்புடைய பதிவுகள்...
சிங்கப்பூர் பயணம் - 1
 
சிங்கப்பூர் பயணம் - 2

சிங்கப்பூர் பயணம் - 3

சிங்கப்பூர் பயணம் - 4

சிங்கப்பூர் பயணம் - 5

கீச்சுகள் தொகுப்பு - 56"நம்பிக்கைக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் இடையே நிகழும் உக்கிரமான போர்தான்" மனிதன் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை!எவர் குறித்தும் அச்சமின்றி, அங்கு இருப்பதே சிங்கப்பூரின் அடையாளம் என்றால் அது மிகையாகாது.

-

தேவதைகள் தேவதைகளாகத் தெரிய இது தேவலோகம் இல்லையென்பதால் தேவதைகள் மகள் வடிவில் மடி சேர்கிறார்கள் இப் பூவுலகில்!விதிக்கப்படும் மௌனம் கொண்டுவரும் அமைதியும் சில நேரங்களில் நன்றாகத்தான் உள்ளது!

-

சுயநலத்திற்கு வாய்ப்பற்ற தருணங்களில் சிறிது பொதுநலமும் பேணப்படுகிறது!

-

விதவிதமாய் ஃபேஸ்புக்கில்காலை வணக்கம்சொல்ற மனிதர்கள் குறித்து இது வரைக்கும் யாரும் ஆராய்ச்சி செய்து Ph.D வாங்க முயற்சி செய்யலையா?

-

பார்வையாளர்கள் மட்டுமல்ல, Twitter, FB மக்களும் எதைப் பேசவேண்டும் என்பதில் தொடர்ந்து வெற்றியடைகிறார்கள் டிவி (வி)வாத தயாரிப்பாளர்கள்!

-

பகல் முழுக்க சண்டையிடும் அம்மாவும் மகளும், அதிகாலைக் குளிரில் படுக்கையில் பாசமாய்ப் பிணைந்து கிடக்கையில் தோன்றுகிறது.....

-

"கைப்புள்ள கவனமா இருந்துக்கோ, சரி தப்புனு ஒருத்தருக்கு சப்போர்ட் பண்ணி சப்பாணி ஆயிடாதே!"

-

வீடென்பது சுவர்களும், உறவுகளும், பொருட்களும் மட்டுமேயிருக்கும் இடமன்று. இன்னும் ஏதோ ஒன்று கூடுதலாய் இருக்கும் இடம்!

-

அரசியல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்பவர்களுக்கான அரசியலை, யாரோ ஒருவன் 'அவர்களுக்கு எதிராகவே' செய்து கொண்டிருக்கிறான். #மீள்

-

வாழ்க்கையெனும் ஒற்றைச் சொல்லுக்கு இன்னுமொரு அர்த்தம் இருக்கின்றதென விரல் பிடித்துச் சொல்லித்தரும் தோழமையும் ஒரு ஆசான் தான்!

-

படுக்கை வசதியுள்ள ரயில் பெட்டியில் பகல் நேரத்து பயணிகள் காட்டும் வித்தைகளென்பது எழுதித்தீராதொரு இலக்கியம்

-

தலைக்கு மேலே வெள்ளம் போனால், சாணென்ன முழமென்னஎனச் சொன்னவர் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தவராகவும் இருக்கலாம்!

-

ஒரு காலத்தில் ரூ.25-க்கு சோறு தின்ன ஹோட்டலில், இப்போது காபி 25 ரூபாய் என்கிறார்கள்! நாம் வளர்ந்ததைவிட, வேகமாய் பணம் தேய்ந்திருக்கிறது!

-