வாழ்வதற்காகவே பிறந்த மனிதர்களுக்கு வாழ்வதில்
இருக்கும் முக்கியமான சிக்கலே, சக மனிதர்களைக் கையாள்வதுதான். மனித இனம் தோன்றி ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்பும்கூட மனிதர்களுக்கு
மனிதர்களைக் கையாள்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியவதில்லை.
உலகில் பல நூறு கோடி மக்கள் இருந்தாலும்
அவர்களில் இயற்கை புரிந்திருக்கும் மாயம் வியப்பிற்குரியது. இரட்டைப்
பிறவிகளாகப் பிறந்தவர்களில்கூட பெற்றோர்களே கண்டுபிடித்துவிட முடியாத அளவிற்கு
உடலமைப்பில் அரிதாக ஒற்றுமை கொண்டவர்களைக்கூட கண்டுவிடலாம். ஆனால்
கருவிழிப் பதிவு மற்றும் கைரேகை ஒத்திருக்கும் மனிதர்களை இயற்கை படைக்காதது போலவே,
ஒத்த மனம் வாய்த்தவர்களும் படைக்கப்படவேயில்லை.
‘அவர்கள் நம்மைப் போல் இருந்தால் நன்றாக இருக்குமே!’ என்பதில்தான் அத்தனை சிக்கல்களும் உருவாகின்றன எனத் தெரிந்தாலும்
அப்படியான ஒரு எதிர்பார்ப்பை நாம் வைத்திருப்பதுதான் பல துன்பங்களுக்கும் காரணமாய்
இருக்கின்றது.
இரவு பத்தரை மணி நாகர்கோவில் செல்லும்
ரயில். என்னுடைய முன்பதிவு படுக்கை எண் 39, அதாவது பக்கவாட்டில்
கீழ் படுக்கை. நான் மதுரையில் இரவு 2 மணிக்கு இறங்க
வேண்டியவன்.
என்னருகில் வந்த ஒரு பெண் ”அண்ணா
என்னோடது 38, அப்பர் பெர்த், நீங்க
எடுத்துக்குங்க. நான் இத எடுத்துக்குறேன்” என்றார்
”நான் மதுரைல 2 மணிக்கு
இறங்கனும். இன்னும் மூன்றரை மணி நேரம் தாங்க இருக்கு. அங்கே
படுத்தா தூங்கிடுவேனே”
”நான் அதுவரைக்கும் முழிச்சிருந்து உங்கள
எழுப்பியுடறேன்”
“நீங்க எங்க போகனும்?”
“நாகர்கோயில்”
“நாகர்கோயில் காலை 6 மணிக்கு
மேலதானே போவும். ஏன் எனக்காக முழிச்சிருந்து சிரமப்படுறீங்க.
உங்க பர்த்ல படுத்து ட்ரெய்ன் நிக்கிற வரைக்கும் கஷ்டப்படாமல் தூங்கலாமே”
“ப்ளீஸ்ங்ண்ணா... இந்த பெர்த் கொஞ்சம் கொடுங்களேன்”
உதவி கேட்கும்போது வெளிப்படும் அதீத அசட்டுச் சிரிப்பும் கெஞ்சலும்.
அந்தக் கெஞ்சல் என்னைக் கொஞ்சம் திடுக்கிட
வைத்தது. சரியென்று
ஒப்புக்கொண்டு படுக்கை விரிப்போடு மேலே ஏற யத்தனிக்கும்போது கவனித்தேன், படுக்கை முனையில் ஒரு மை துடைத்த துணி கிடந்தது. யோசனையோடு எட்டிப்பார்க்க,
அந்தப் படுக்கை முழுதும் கருப்பாக மையால் மெழுகிவிட்டது போல்
இருந்தது. கையால் தொட்டுப்பார்க்கவே பிசுபிசுத்தது.
கீழே இறங்கி “பர்த் முழுக்க மை பூசின மாதிரி
அழுக்கா இருக்குங்க”
“அப்ப என்ன பண்ண.... தொடைக்க முடியாதா?” என்றார்
”ரொம்ப அழுக்கா இருக்கு. யாரோ தொடைச்சிட்டுத்தான்
துணிய போட்டிருக்காங்க”
“அப்ப என்ன பண்ண?”
“டிடிஈ வரும்போது அவர்கிட்டச் சொல்லுங்க. வேற
மாத்தித் தருவார்”
அதைப் படம் எடுத்து இரயில்வே மந்திரிக்கு ட்விட்டரில் இணைக்கலாமா
எனத் தோன்றியது... சரி டிடிஈ வரட்டும் என நானும் காத்திருந்தேன். ரயில்
புறப்பட்டும் அரை மணி நேரமாகியும் டிடிஈ வரவில்லை. அந்தப் பெண் எனக்கான
படுக்கையில் ஒரு பக்கம் முழுதும் நிரம்பி அமர்ந்திருந்தார். என் உரிமை குறித்து
கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மற்ற படுக்கைகளில்
இருந்தவர்கள் உறங்கத் துவங்கியிருந்தனர். நான் மதுரையில் 2
மணிக்கு இறங்கி பேருந்தில் தொடரவேண்டிய பயணம் என்பதால், இந்த மூன்று மணி நேரத் தூக்கம் அவசியம் என மூளைக்குள் ஒலித்துக்
கொண்டேயிருந்தது.
தன் பயணச்சீட்டை ஆராய்ந்து கொண்டிருந்தவர் என்னை
நோக்கி
”உங்க சீட் நெம்பர் என்ன!?” என்றவரின்
குரலில் சற்று அதிகாரமும், பரவசமும் இருந்தது.
“39”
“இங்க பாருங்க... என்னோடதுதான்
39. நீங்க உங்க சீட்டுக்கு போங்க” என பயணச்சீட்டை
நீட்டிபடி சட்டென எழுந்து நின்று என்னை வெளியேற்றும் மனநிலையில் இருந்தார்
பக்கவாட்டில் கீழ் படுக்கை, அது 39 என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தேன்.
ஒருவேளை RACஆக இருக்கலாமோ என்ற சந்தேகம்
வந்தது. பதிவு செய்யும்போது படுக்கை வசதி கிட்டியது
நினைவிற்கு வந்தது. நிதானமாக அவர் பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு...
”எப்படிங்க.... உதவியா
கேட்டப்ப ஒரு மொகமும், இப்ப ஒரு மொகமும் காட்ட முடியுது”
என்றேன்
“அதெல்லாம் ஒன்னுமில்ல... உங்க
சீட் எதுவோ அதுக்குப் போங்க” என்றார்
”நான் போறது இருக்கட்டும்... டிக்கெட்ல
இருக்கிற இந்த 39 உங்க
வயசா இல்ல பர்த் நெம்பரானு விவரம் தெரிஞ்சவங்க யாரும் இருந்தா கேட்டுட்டு வந்து
அதிகாரம் செய்ங்க, அதன்பிறகு நான் என்ன செய்யனும்னு
யோசிக்கிறேன்” என்றபடி என் படுக்கையை நான் எடுத்துக் கொண்டேன்.
சில நிமிடங்களுக்குள் அந்தப் பெண் தன் முகத்தை
மாற்றியமைத்த விதம் கடும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. உதவியாகக் கேட்ட தருணத்தில்
கொண்டிருந்த முகபாவனையும், பயணச்சீட்டில் இருந்த வயதையும்,
படுக்கை எண்ணையும் குழப்பிக்கொண்டு அதிகாரமாய் உரிமை கோர முயன்ற
தருணத்தில் காட்டிய முகபாவனைக்கும் இடையே இருந்த வித்தியாசம்... இது எல்லோருக்கும் கை வந்துவிடும் கலை அல்ல. அதற்கென்ற
சிறப்பு வடிவம் பெற்றவர்களுக்கு மட்டுமே உரித்தானது எனச் சொல்லலாம். அப்படியான தருணங்களில் இதுவும் மனிதர்களின் இயல்பு எனப் புரிந்துகொள்ள
முடிகின்றது.
அந்தப் பெண் சட்டென அதிகாரத்தையும், உரிமையையும்
செலுத்த முயன்றபோது, நான் சற்று நிதானமாக இருந்ததும் கூட ஒருவகையில்
ஆச்சரியம்தான். நிதானம் தவறியிருந்தால் என் பதில் எவ்விதமாக
இருந்திருக்கும் என யோசிக்கையில், கடினமான சில சொற்கள்
மனதிற்குள் நீந்தத் துவங்கின. அந்தச் சொற்களை மனதில் உலவ விட
அது தடித்து வலிமை மிகு சொற்களாக மாறத்துவங்கின. அந்தப் பெண்
மேல் அதுவரையிலும் இல்லாத ஒரு கோபமான அல்லது வெறுப்பான மனநிலை மெல்ல
படரத்தொடங்கியது.
அன்றாடம் இதுபோன்ற சூழல்களில் எவ்வளவுதான் நிதானம்
கடைபிடித்தாலும் அல்லது கடைபிடிப்பதுபோல் பாவனைகள் செய்து பழகிப்போயிருந்தாலும், சிற்சில வன்மங்கள்
மனதிற்குள் குடியேறுவதைத் தவிர்க்க முடிவதில்லை. அப்படிக் குடியேறும் சமயங்களில்
அது வன்மம்தான் என இனம் கண்டுவிட்டால், சற்றுக் கூடுதல்
பிரயத்தனமெடுத்து உதறித்தள்ளிவிட முடிகிறது. அப்படியும் உதறமுடியாமல்
சேர்ந்திருப்பவைகளை அகற்றுவதற்கு இரவின் நீள் உறக்கம் மிகச்சிறந்த வழி. ஆழ்ந்த உறக்கத்தின் பின்னே பல நேரங்களில் ’உறக்கத்திற்கு
முன்பு மனதை எது ஆட்சி செய்தது?’ என்பதைக்கூட
நினைவடுக்கிலிருந்து தேடித்தான் எடுக்க வேண்டும்.
அப்படியும் உறக்கத்தில் கரைக்க முடியாத வன்மம் இருந்தால், அதைக் கரைக்க எளிதாக பிறிதொரு
வழியிருக்கிறதென நண்பர் ஒருவர் அடிக்கடி பின்வரும் யோசனையைச் சொல்வார்.
விடியற்பொழுதிலும் ஏதேனும் வன்மம் மனதிற்குள் தங்கியிருந்தால்
பெரிதாக ஒன்றும் கவலைப்படாதீர்கள். அப்படி மனதிற்குள் இருப்பதை உணர்ந்திருப்பதே நல்லதொரு
சமிஞ்சைதான். உள்ளுக்குள் ஒட்டியிருக்கும் வன்மம் கவலை கொள்ளுமளவிற்கு
ஆபத்தானதில்லை. எழுந்தவுடன் நிதானமாக பல் துலக்கி, முகம் கழுவி, போதுமான அளவு தண்ணீர் பருகிவிட்டு,
உடலை சில உடற்பயிற்சிகள் செய்து மெல்ல இலகுவாக்குங்கள். நடப்பதற்குத் தோதான காலணியை அணிந்துகொள்ளுங்கள். வீட்டைவிட்டு வெளியே வீதிக்கு
வாருங்கள். ஏதுவான ஏதேனும் ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து நடக்கத்
துவங்குகள். அருகிலிருக்கும் மரத்திலிருந்து ஏதேனும் பறவைகள்
சப்தமிடுவதை விரும்பி உள்வாங்குங்கள். நடையின் வேகத்தில்
திடமும், ஆற்றலும் கூட்டுங்கள். அப்படி
நடக்கையில் எப்போது சுவாசம் உள் மற்றும் வெளியே நிகழ்கிறதெனக் கவனியுங்கள்.
மெல்ல நடையிலிருந்து ஓட்டத்திற்கு மாறிப் பாருங்கள். மிதமான வேகத்தில் தொடர்ந்து
ஓடுங்கள், முடிகின்ற வரையில் ஓடுங்கள், முடியாவிட்டாலும் முடியுமென ஓடுங்கள். உடல், மனம்
இதில் இரண்டும் ஒருசேர ஒத்துழைப்பை நிறுத்தம் வரையில் ஓடுங்கள். ஓய்ந்து நிற்கையில், நீங்கள் எதிர்பாராத மற்றும் நம்ப
முடியாத அளவிற்கு வியர்த்துப் பொங்கத் துவங்கும். இப்போது
சொல்லுங்கள் அந்த வியர்வையில் கரையாத முந்தைய தினத்து வன்மம் ஏது!?
உண்மையில் இன்னொருவர் மேல் நாம் செலுத்த அல்லது கொள்ள விரும்பும்
கோபம் மற்றும் வன்மத்தை,
விரும்பிய வண்ணம் அவர்கள் மேல் செலுத்திவிடுவதைவிட நமக்குள் அதிகமாகச்
சுமப்பதுதான் நிகழ்கிறது. அந்த வன்மமும், கோபமும் எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கும் அக்னி. சில
சூழல்களில் அது கதகதப்பாகவும், தீர்மானத்தை நோக்கி
நகர்த்துவதாகவும், வேண்டியதாகவும்கூட இருக்கலாம். ஆனால் தொடர்ந்து அது சுடர்விட்டபடியிருப்பது நம்மை எரித்து
அடங்குவதற்குத்தான்.
‘எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்’ என்ற சமாதானம்
எத்தனை அழகியது அல்லது எளியது.
மனம் பத்திரம்.
-
செப்டம்பர் நம்தோழி இதழில் வெளியான கட்டுரை