தினுசு தினுசா


வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள அந்தத் திரையரங்க வாசலில், வழக்கத்திற்கு மாறாய் சாலையை அடைத்துக் கொண்டு சலசலப்பாய் மக்கள் கூட்டம், இத்தனைக்கும் அது திரைப்படம் விடும் நேரம்கூட இல்லை, அத்தனை பேரும் மிக சுவாரசியமாக திரையரங்க வாசலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுச் சுவர் உயரம் குறைவாக கட்டப்பட்டிருந்த, திரையரங்கு வாசலில் இரு நபர்கள் கூச்சலோடு தாக்கிக் கொண்டிருப்பதுவும், அவர்களைச் சுற்றி சிலர் விலக்க முற்படுவதும் தெரிந்தது. அந்த நேரம் திரையரங்கு வாசற்படியிலிருந்து இறங்கி வந்த உயரமான, வெள்ளை சட்டை மனிதர் ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே, என்ன ஏது என்று கேட்காமலேயே, வந்த வேகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருந்த ஒரு ஆளை ஓங்கி உதைத்தார். சில அடி தூரம் தள்ளி விழுந்தவனை, சட்டென நெருங்கி காலால் உதைக்க ஆரம்பித்தார்.

கீழே கிடந்த ஆள், உதைப்பவரை தடுக்க முயலாமல், திரும்ப திரும்ப ஏதோ பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. பேசுவியாடா ...@#$%என தொடர்ந்து உதைத்துக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் தடுமாறி அருகில் நின்ற இரண்டு சக்கர வாகனத்தைப் பிடித்து எழுந்து நின்றவனை, அந்த வெள்ளை சட்டை மனிதன் பொம்பள மேல கை வப்பையாடாஎன சப்சப்சப் என கன்னத்தில் தொடர்ந்து அறைந்து கொண்டேயிருந்தார். அடி வாங்கிய ஆள் விழுந்த அடிகளைப் பற்றி சற்றும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. முதலில் அவனை அடித்த ஆளைச் சுட்டிக் காட்டி என்னவோ சொல்லிக் கொண்டேயிருந்தான்.

டேய், கயித்த எட்றா, போலிச கூப்ட்றா என வெள்ளைச் சட்டை ஆள் கட்டளை போட, ஒரு ஆள் சைக்கிளை எடுத்துக் கொண்டு மிக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு ஓடினார், அதற்குள் கயிறு வந்தது இரண்டு பேர் பிடித்து நுழைவுச்சீட்டு அறைக் கம்பியில் கட்டினர். இதற்குள் தனது இடுப்பு பெல்ட் உருவியிருந்த வெள்ளைச் சட்டை, பெல்டில் விளாசத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்த காவல் நிலையத்தின் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பைக்கில் வந்திறங்கி, திரையரங்கு வாசலைப் பார்த்துக் கொண்டே, செல்போனை எடுத்து ஏட்டய்யா, கணபதியையும், முருகேசையும் வரச்சொல்லுங்கஎன்று பேசிக்கொண்டே உள்ள சென்றவரிடம், வெள்ளைச் சட்டை மனிதர் பாருங்க மேடம், பொம்பளை மேல கை வக்கிறானுங்க எனச் சொல்லும் போதே, அவரிடம் இருந்த பெல்ட்டை வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் ஓங்கி விலாசு விலாசினார். அடுத்த அடிக்கு பெல்ட் ஓங்கும் போதோ, யார் அந்தப் பொம்பள எனக் கேட்க, அது வரை அடி வாங்கிக் கொண்டிருந்தவன் மலர்ச்சியாய் சப்தமாய்ச் சொன்னான் “அதக் கேளுங்கம்மா மொதல்ல

அவுங்க உள்ள இருக்காங்க, இவரு அவங்க வீட்டுக்காரர்என முதன் முதலில் சண்டை போட்டுக் கொண்டிருந்த ஆளை வெள்ளைச் சட்டை கைகாட்ட, அந்த ஆள் பம்மினார்... சப் இன்ஸ்பெக்டர் ஓங்கிய பெல்ட்டை அடிக்காமல் கீழே இறக்கிகொண்டே ‘என்ன நடந்துச்சுஎன்றார்.

அம்மா, அதக்கேளுங்க முதல்ல, அடுத்து அந்த ஆள் அந்தப் பொம்பளையோட புருசன்தான்னு சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்என்றான் தெனவட்டாக.

இதுவரை தடுக்கக்கூட முயலாமல் அடிவாங்கியவன், இத்தனை தெம்பாக, தெனவட்டாக பேசுகிறான், என ஆச்சரியப்படும் போதே இரண்டு போலீஸ்காரர்கள் வண்டியில் வந்திறங்கினர்

யேய், என்ன சொல்றே என சப்-இன்ஸ்பெக்டர் கேட்க

வேணாங்ம்மா, அடிச்சவன ஒழுங்கா டிக்கெட் காச திருப்பி கொடுக்கச் சொல்லுங்க, அப்புறம் அடிச்சதுக்கு ஒடம்பு வலி போக மருந்து சாப்பிட காசு கொடுக்கச் சொல்லுங்க நான் போயிடறேன், இல்லாட்டி இத நிக்கிறானே அவனுக்குத்தான் ரொம்ப பிரச்சனை ஆகும் என கெத்தாகச் சொல்ல, புருசன் எனக் கை காட்டப்பட்ட அந்தஆள் வெளியே இருக்கும் கூட்டத்தோடு கலக்க முற்பட “இங்க வாய்யா என ஒரு போலிஸ்காரர் நகர்த்தி வர, அந்த ஆள் என்னென்னவோ உளறினார், இதற்குள் யாரோ அடிவாங்கியவன் கயிற்றை அவிழ்த்துவிட

“ஏய் உன்னாலதான் இத்தனையும் மரியாதை காசு குடு என அந்த புருசனிடம் அதிகாரமாய் காசு கேட்க, அந்த ஆள் பணத்தை எடுத்து நீட்ட, சப் இன்ஸ்பெக்டர் ஒரு மாதிரி முழிக்கும் போதே, இதெல்லாம் ஒன்னுமில்லீங்கம்மா, நீங்க போகச் சொன்னா இப்படியே ஓடிருவனுங் என்றான்.

சப் இன்ஸ்பெக்டர் என்ன பண்ணலாம் என வெள்ளைச் சட்டை ஆளை ஏறிட்டுப் பார்த்துக் கேட்க, வுட்டுத் தொலைக்கலாம்ங்மா, என்ன கருமாந்திரம்னு தெரியல

செரி நீ போ, அந்த திடீர் கதாநாயகனை (!!!) அனுப்பிவிட்டு, வெள்ளைச் சட்டையை நோக்கி என்னவோ திட்டினார், “இல்லீங்மா, கவனமா பார்த்துக்கிறம்ங்க, இனிமே இப்படி நடக்காதுங்மாஎன என்னவோ பவ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“செரி முருகேஷ் கிளம்புங்க என்று போலீஸ்காரரிடம் சொல்லிக்கொண்டே தன் வண்டியை எடுக்க, சாலையில் அடைபட்டிருந்த கூட்டம் களைய ஆரம்பித்தது.

அடி பின்னி எடுத்த வெள்ளைச் சட்டை, என்ன ஏதென்று கேட்காமல் வந்த வேகத்தில் பெல்ட்டால் விளாசிய சப் இன்ஸ்பெக்டர், பணம் கொடுத்த ஆள், அலட்டிக்காமல் அடிவாங்கியதோடு போலிஸ் முன்னாலேயே வசூல் செய்து போன ஆள் என சில நிமிடங்களுக்குள் எத்தனை வகையான மனிதர்கள், தினுசு தினுசா திரிவாங்களோ.

அடிச்ச ஆளுக்கே கை வலிக்குமே, அடிவாங்கினவன் நிலை... ம்ம்ம், நாமதான் கவலைப்படனும் போல இருக்கு என நினைக்கும் போதே,  அந்த ஆளோ எதுவும் அலட்டிக்கொள்ளாமல், இன்னொரு ஆளின் தோளிள் கை போட்டுக் கொண்டே, டேய் மாப்ள, நாமெல்லாம் யாரு, இதெல்லாம் அரசியல்ல சகஜம்டா, ம்ம்ம்... சொல்லு சரக்கு என்ன வாங்கலாம், இந்நேரத்துக்கு எங்கடா கெடைக்கும் என அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

கிளம்பும் போது, எதேச்சையாக அந்த திரையரங்கில் என்ன படம் என போஸ்டரை பார்த்தேன், சுறா நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது. அடித்தவன், அடிவாங்கியவன், பணம் கொடுத்த புருசன் எல்லோருமே, இது வரைக்கும் நடந்ததற்கெல்லாம் ரொம்பவும் வொர்த் தானோ என ஒரு விநாடி மனதுக்குள் பிளாஷ் அடித்தது.

________________________________

தமிழ் இணைய மாநாடு - நமது வலைப்பதிவர்கள்..

அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு
 


பார்வையாளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள உணவரங்கங்கள்


பதிவுலக நண்பர்கள்
சஞ்சய், தமிழ்மணம் காசி ஆறுமுகம்


ஓசை செல்லா, நான், காசி ஆறுமுகம்
 


இணைய மாநாட்டில் காசி ஆறுமுகம்

இணைய மாநாட்டில் நா.கணேசன்

முரசொலி மாறன் அரங்கு முகப்பு

 பதிவுலக நண்பர்கள்
 

  பதிவர், கவிஞர் திலகபாமா

திருவள்ளுவர் (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க)

சுமார் மூன்று கி.மீ தூரத்திற்கு நகரமுடியா வண்ணம் மக்கள் வெள்ளம்எதையும் பொருட்படுத்தாமல்
மக்கள் சுகாதாரத்திற்காக உழைத்து துவளும் கால்கள்

ஹி..ஹி...எங்க ஊரு வண்டியாம் 
(இங்க ஒருமுறைகூட பார்த்ததில்லை)


குறிப்பு:

தமிழக அரசுடன் இணைந்து உத்தமம் அமைப்பு நடத்தும் தமிழிணைய மாநாட்டில் வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன். முதலில் 25ம் தேதி என கூறப்பட்டது, பின்னர் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 24ம் தேதி மாநாட்டிற்குச் சென்றபோது, நிகழ்வை நடத்தி வரும் உத்தமம் அமைப்பாளர்கள் இடையே இருந்து வரும் கடும் குழப்பங்களால் பெரும்பாலான பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை, இந்நிலையில் அங்கு வந்த அமைச்சர் திருமதி. பூங்கோதை அவர்கள், இதையறிந்து வலைப்பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் நேரம் ஒதுக்க உத்தமம் அமைப்பு முன் வந்தது. எனக்கான நேரம் 26ம் தேதிக்கு ஒதுக்கப் படுவதாக அறிந்தேன். 26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால், நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________________

காவல்


கடவுளை முன்னிறுத்தி...

விதை விதைத்தான்
அறுவடை செய்தான்

அருள்வாக்கு சொன்னான்
ஆன்மீகத்தை விற்றான்

கம்பெனி ஆரம்பித்தான்
காதுகுத்திக் கெடாவெட்டினான்

பூசாரியாய் குறி சொன்னான்
சாதியாய் பிரிந்து நின்றான்

எதிரிக்கு சாபம் கொடுத்தான்
திருடனை மிரட்டினான்

குடம் குடமாய் பால் ஊற்றினான்
குடும்பமாய் மொட்டை போட்டான்

வேண்டுதல்கள் வைத்தான்
உண்டியலில் கொட்டினான்கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்

_____________________________

விஷம் சிந்தும் நாக்கு

எதேச்சையாக தொலைக்காட்சியைப் பார்த்தேன், விஜய் தொலைக்காட்சியின் சினிமாவுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியை நீயா...நானா? கோபிநாத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நாடோடிகள் படத்தில் கதாநாயகன் சசிக்குமாருக்கு தங்கையாக நடித்த அபிநயா சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மேடையில் நின்று கொண்டிருந்தார், படம் பார்க்கும் போதே கேள்விப்பட்டிருந்தேன், அவர் காது கேளாத, வாய் பேசமுடியாதவர் என்று. படம் பார்க்கும் போது அப்படியெதுவுமே தெரியாது, மிக நேர்த்தியாகவே நடித்திருந்திருப்பார். நாடோடிகள் படம் மனதிற்கு நினைவு வரும் போதெல்லாம் இந்தப் பெண் பாத்திரமும் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாத ஒன்று.

அந்தப் பெண் விருது பெறுவதை பார்க்கும் போது  மிக மகிழ்ச்சியாக இருந்தது, அவருக்கு மிகப் பொருத்தமான, அவசியமான விருதும் கூட, அபினயாவின் தந்தை மேடைக்கு அழைக்கப்பட்டார், விருதோடு அந்தப் பெண் தந்தையை கட்டிக் கொண்டது. மகள் சார்பில் தந்தை பேசும் போது, தன் மகள் இந்த விநாடி என்ன மாதிரி உணர்ந்து கொண்டிருப்பாள் என்பதை தெரிவித்து, இது தங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்றார். இந்தப் பெண் இங்கு நிற்க இயக்குனர் சமுத்திரக்கனி, இயக்குனர் / நடிகர் சசிகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கதிர் மூவரும்தான் காரணம் என கண்கலங்கிச் சொன்னார்.

கோபிநாத் இயக்குனர் சமுத்திரக்கனீயிடம் ஏதோ கேட்க அவர் “அபிநயாவை என் மகள் போல் பார்த்துக் கொண்டேன், அவளுடைய தந்தை கண் கலங்கி விட்டார், நான் கண் கலங்காமல் இருக்கிறேன் அவ்வளவுதான்” என்றார்.

இந்நிலையில் அபிநயாவின் வேண்டுகோளையடுத்து நடிகர் சசிக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கதிர் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

கோபிநாத் தன் கேள்விக்கணையை(!) சசிகுமாரிடம் வீசினார். ”இந்தப் பெண் உங்களோடு நடித்த போது உங்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லையா” என்பது போல்...

சசிகுமார் “என்னுடைய தங்கையாக சிறப்பாக நடித்தார், அதனால் என்னுடைய அடுத்த படத்தில் அபிநயாவை கதாநாயகியா நடிக்கவைக்கிறேன்” என்ற போது அரங்கமே அதிர்ந்தது...

அந்த நேரத்தில் மிக சப்தமாக, அழுத்தமாக கோபிநாத் கேட்டார் “எந்த நம்பிக்கையில்”.

மிக நிச்சயமாக இதை சசிக்குமார் எதிர்பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். சட்டென தடுமாறினார் சசிக்குமார், குரல் மிக மென்மையாக வந்தது “ம்ம். கடவுள் மேல் பாரத்தைப் போட்டு” என்றார்

ஏற்கனவே அந்தப் பெண் அபிநயா தனக்கு உள்ள உடல் குறைபாட்டைத் தாண்டி, தன்னுடைய திறமையை, மிக அழகாக நடிப்பின் மூலம் நாடோடிகள் படம் மூலம் நிரூபித்துள்ளார். அதில் முழு திருப்தியும் அடைந்த பின்பே சசிக்குமார் தன்னுடைய அடுத்த படத்திற்கு அதே பெண்ணை கதாநாயகியாக்கியுள்ளார். இந்த நிலையில் கோபிநாத் கேட்ட ”எந்த நம்பிக்கையில்” என்ற கேள்விக்கு யார் என்ன பதில் சொன்னால், கோபிநாத்திற்கு நம்பிக்கைக்கான நியாயம் கிடைக்கும்.

பல ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் அரங்கில், ஒளிபரப்பை லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஒரு விழாவில் தன் குறையை நிறையாக மாற்றி சாதித்திருக்கும் ஒரு திறமைசாலிப் பெண்ணை அடித்து நொறுக்கி அவமானப் படுத்தும் விதமாகவே ”எந்த நம்பிக்கையில் வாய் பேச முடியாத பெண்ணை கதாநாயாகியாக்கினீர்கள்” என்ற உள்ளடக்கதோடு ஒரு வெற்றி பெற்ற இயக்குனரைப் பார்த்து கேட்கும் மன வக்கிரம் எங்கிருந்து வருகிறது இந்த கோபிநாத் போன்றவர்களுக்கு.

உதாரணத்திற்கு இதே கோபிநாத்திற்கு வாய் பேசமுடியாத ஒரு மகள் இருந்து, அந்தப் பெண்ணிற்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்து, இது போல் மேடையேறியிருந்தால், ”எந்த நம்பிக்கையில்” என்ற இதே கேள்வி கோபிநாத்திற்கு வருமா.

கேள்விகள் கேட்பது மட்டுமே புத்திசாலித்தனம் என்ற மூடத்தனம் கோபிநாத்தின் மூளைக்குள் நிரம்பிவிட்டதோ? கேள்விகளை மடக்கி மடக்கி, கேட்டுக் கேட்டு ஒரு புற்று நோய் போல் கோபிநாத்தின் மனதிற்குள் கேள்விகள் வளர்ந்து விட்டது போலும். அந்த நோயின் நீட்சியாகவே விசமத்தனமான, விஷம் தோய்ந்த கேள்வி அவ்வளவு ஆங்காராமாய் கோபிநாத்திடம் இருந்து தெறித்திருக்கிறது. 

அதை நீக்காமல் ஒளிபரப்பிய விஜய் தொலைக்காட்சிக்கும் கண்டனங்கள்

யாகாவராயினும் நாகாக்க..... இனியாவது விஷத் துளிகள் கோபிநாத் நாவில் இருந்து தெறிக்காமல் இருக்கட்டும்.

நடிகை அபிநயாவின் காணொளி

___________________________________

வேறென்ன?


விடிய விடிய சேகரித்துப்
பாதுகாத்த கனவுப் பெட்டகம்
விடிந்ததும் காலியாக

*****

வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே

*****

எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு

*****

மலை உச்சியைப்
புணர்ந்து பிரியும்  மேகம்
விட்டுச் செல்கிறது குளிரை

*****

கடத்த முடியாத நினைவுகள்

வயது கூடக்கூட உறவுகள் மலர்வதும், உதிர்வதும் நிதர்சனம் என்றாலும், சில உறவுகள் மனதில் காலம் முழுதும் அழுத்தமாய் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு சில உறவுகளில் என்னுடைய பாட்டியும் ஒன்று.

பாட்டி என்பது எங்கள் பக்கத்தில் பழக்கமில்லாத வார்த்தை. எப்போதும் அழைப்பது ”ஆயா” என்றே, அறியாத பருவத்திலிருந்தே அதிகம் கோபித்துக் கொள்ளப் பழகியது ஆயாவிடம் தான். கோபம் வரும் நேரத்தில் மட்டும் கெழவி. ”கெழவ்வ்வ்வ்வி” என்ற வார்த்தையை பிரயோகிக்கும் போது, அத்தனை வன்மம் இருக்கும், அவமானத்தை அப்படியே அள்ளிக் கொட்டும் வெறியிருக்கும்.

அத்தனைக்கும் மேல் அனவிடமுடியாத ஒரு அன்பு நூல் இன்றுவரை ஆயாவை அந்த பழைய வாசத்தோடு மனதிற்குள் வாழவைத்துக் கொண்டேயிருக்கிறது. ஆயா கை பிடித்து இழுத்துச் சென்று காட்டிய உலகம் இன்றும் கூட அதே பசுமையோடு கொஞ்சம் சிதையாமல் மனதிற்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

எனக்கு விபரம் தெரியத் தொடங்கிய காலத்திற்கு முன்பே தாத்தா இறந்து போனார். அதனாலேயே வண்ணப் புடவையிலோ, நகை நட்டுப் போட்டோ ஒரு போதும் பார்த்ததில்லை. அன்று முதல் இன்று வரை ஆயாவை பார்ப்பது வெள்ளைப் புடவையில் தான்.

தன்னந்தனியாய் வெளியூர்களுக்கு பயணப் பட வீட்டில் அனுமதித்த வயது வரை, ஒவ்வொரு விடுமுறையும் கழிவது ஆயாவின் புண்ணியத்தில்தான்...

பள்ளி விடுமுறைக் காலங்கள் பெரிதும் ஆயாவின் சொந்தக்காரர்கள் வீடுகளில்தான் கழியும். ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு எங்களை அழைத்துச் செல்வது எழுதப்படாத ஒரு சட்டமும் கூட.

அப்படி ஊருக்கு அழைத்துச் செல்லும் போது, பஸ் ஸ்டேண்டில் பத்துப் பைசாவுக்கு பட்டாணி பொட்டலமும், அன்னாசிப் பழ கீற்றும், மாம்பழமும், பன்னும் வாங்கி பையில் வைத்துக் கொள்ளும். கடைக்காரர்களிடம் பேரம் நடத்தும் திறமையை இன்று நினைத்தாலும் பொறாமையாக இருக்கிறது.

அந்தப் பட்டாணியை பஸ்ஸில் செல்லும் வரை பத்திரப் படுத்தி, பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் சட்டைப் பையில் நிரப்பி, நடக்க ஆரம்பிக்கும். எங்கள் விடுமுறை சுற்றுலா தளத்திற்கு(!) பவானி-சேலம் மெயின் ரோட்டில் இருக்கும் செங்கமாமுனியப்பன் கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நாலு கி.மி. தூரம் வடக்கே நடக்க வேண்டும். அவ்வளது தூரம் நடப்பது ஒரு கொடுமையென்றால், அதைவிடக் கொடுமை வழி முழுதும், இருக்கும் வீடுகளிலிருந்து “என்ன ஊருக்கு போறாப்ள இருக்கு” என எட்டிப் பார்ப்பவர்களிடம் கதை பேசும் ஆயாவைக் கடத்துவதற்குள் படும் பாடுதான் அந்த காலத்தின் மிகப் பெரிய சோகம்.

இன்றும் கூட எங்காவது பட்டாணிக் கடலை வாசம் அடிக்கும் போது, ஆயா நிரப்பிய சட்டைப் பை நினைவுக்கு வந்து, இடது மார்பை என்னையறியாமலே கைவிரல்கள்  நீவிப்பார்த்து விட்டு வருகிறது.

இன்று அதே ஊர்களுக்கு சரக்கென்று போய், சரக்கென்று வாகனத்தில் திரும்புவதில் இருக்கும் வசதியை விட, கால் கடுக்க நடையாய் நடந்து, எதிர்பட்டவர்களிடமெல்லாம் முட்டி முடங்க அன்று நின்ற வலியே கூடுதல் சுகமாய்த் தோன்றுகிறது.

அடுத்து....

டிவி, போன் எல்லாம் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த காலம் அது. உலகத்தோடு கூடிய தொடர்பு முழுக்க முழுக்க வானொலியோடு மட்டும்தான்.

அதுவும், எங்கள் ரெடியோ மின்சாரத்தில் இயங்காதது. அப்பாவுக்கு சிமெண்ட் பேக்டரியில மாதாமாதம் கொடுக்கும் ரெண்டு பேட்டரி செல்களை வைத்து மட்டுமே கேட்கும் காலம்.

சினிமாவுக்கென்று பக்கத்து ஊரில் இருக்கும் ”கீற்றுக் கொட்டாய்” தியேட்டர்க்கு செல்வது என்பது வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே நடக்கும் மிகப் பெரிய காரியம்.

அதையெல்லாம் நிவர்த்தி செய்ய வைப்பது, பக்கத்து கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களும், அதையொட்டி திரை கட்டிப் போடப்பவும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்தியராஜ் படங்கள், கொடுமுடி சீன்செட்டிங் கம்பெனிக்காரர்கள் மேடை போட்டு அந்த ஊர் இளவட்டங்கள்(!) நடிக்க நடத்தப்படும் நாடகங்கள், இரவு முழுதும் நடக்கும் தெருக்கூத்துகள், காலப்போக்கில் டிவி டெக்கோடு கொண்டாடப்பட்ட திருவிழாக்கள்..

பக்கத்து ஊரில் சினிமா, ட்ராமா அல்லது கூத்து என்ற செய்தி வந்த தினத்திலிருந்து, அதைப் பார்க்க போவதற்கான, ஆயத்தத் திட்டங்கள் தீட்டப்படும். அழைத்துச் செல்ல ஆயாவை விட்டால் நாதியில்லை என்பதால் கூடுதலாய் சில கனஅடிகள் அன்பு வெள்ளம் கரைபுரளும்.

முடிவாய் நிகழ்ச்சியைப் பார்க்க போகும் தினத்தன்று உட்கார சாக்கு, போர்வை, பேட்டரி லைட், குச்சி என பயணம் துவங்கும், முக்கியமான காமடி, சினிமாவோ, ட்ராமாவோ, கூத்தோ ஆரம்பிக்கும் போது ஜாலியாக இருக்கும், ஆனால் எப்போது முடிந்தது, எப்படி வீடு திரும்பினேன் என்று இன்று வரை நினைவில்லை, (தூக்கத்தில் அம்புட்டு ஸ்ட்ராங்க்).

இன்றும் கூட ஏதாவது பயணத்தின் போது வழியில் நடக்கும் திருவிழாக்களில் நாடகமோ, வெகு அரிதாக கூத்தோ நடப்பதைக் காணுகையில் கை பிடித்து அழைத்துப் போன ஆயாவின் கைகளின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது.

இதையெல்லாம் எப்போதாவது நினைவு கூர்ந்து பேசுவதை, வாய்கொள்ளாச் சிரிப்போடு ரசித்து ரசித்து ”அப்புறம் சொல்லுங்கப்பா” ”அப்புறம் என்னனு சொல்லுங்காயா” என என்னிடமும், ஆயாவிடமும் கேட்கும் என் மகளிடம் நினைவில் கெட்டித்துக் கிடக்கும் பசுமையான நினைவுகளை அதன் சுவை மாறாமல் பகிர முடியாததொரு தலைமுறை(!) இடைவெளியில் வாழ்வதை நினைக்கும் போது மனது வெறுமையாவதைத் தவிர்க்க முடிவதில்லை....

_______________________________________________

மீண்டு வா பிரபா – கண்ணீர் அஞ்சலி


வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக, துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன.

நேற்று காலை இனிய நண்பன் வாழ்க்கை வாழ்வதற்கே பிரபாகரோடு வெப் கேம் வழியே சிரிக்கச் சிரிக்க பேசிக்கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வானம்பாடி பாலண்ணா கேட்டார் பிரபா பேசினாரா, தம்பிக்கு திடீர்னு உடம்பு சரியில்லையாம், மூளை ரத்தக் கசிவாம், இப்பவே கிளம்பி வர்றாராம்மனசு திக்கென்றது. சற்று முன் சிரிக்கச் சிரிக்கப் பேசிய பிரபா, உடனே சிங்கப்பூரில் கிளம்பி வருவதாகச் சொல்வது, ஏதோ மிகப் பெரிய விபரீதத்தை சொன்னது.

அதேசமயம் ஆத்தூரில் இருக்கும் எனது மாமாவை அழைத்து, பிரபா தம்பிக்கு உடம்பு சரியில்லையாம், எப்படி இருக்கார்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து பாலாண்ணாவோடு நள்ளிரவு வரை தொடர்பிலிருந்தேன். விமானத்தை விட்டு இறங்கி ஆட்டோ மூலம் சென்ட்ரலுக்கு வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார், சற்று நேரம் கழித்து மிக அவசரமாக வரச்சொல்றாங்களாம், அதனால அசோக் நகர்ல இறங்கி சேலம் பஸ் பிடிக்க முயற்சி செய்றாராம்என்றார். குடும்பத்தினர் அவசரமாக வரச்சொல்கிறார்கள் எனக் கேட்டபோது விபரீதம் கனக்கத் தொடங்கியது.

காலை எழுந்து பாலாண்ணாவிற்கு போன் அடிக்க, “பிரபா பஸ் எதுவும் கிடைக்காம, டேக்ஸி பிடிச்சு சென்னையிலிருந்து சேலம் வந்துட்டார், மருத்துவமனையில் காப்பாற்ற முடியாதுனு சொல்லிட்டாங்களாம்னச்சொல்ல, பிரபாவின் எண்ணைப் பெற்று தொடர்பு கொள்ள மறுமுனையில் பிரபாகர் கதறியழ,  ஆறுதல் சொல்ல வார்த்தைகளற்று வெறுமையாய் கிடந்தேன்.

பிரபாவின் பெரும்பாலா இடுகைகளில் அவருடை தம்பி நிறைந்திருப்பதை கவனித்திருக்கிறேன். பிரபாவோடு எப்போதும் பேசினாலும், ஊர் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் தம்பி திவாகர் என்பது கட்டாயம் வரும், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற நம்பிக்கை பிரபாகரின் மனதில் நிரம்பியிருப்பதை பேசும் ஒவ்வொரு முறையும் இனம் கண்டிருக்கிறேன். பிரபாகரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் சில சிரமங்களுக்கு, தம்பி திவாகர் தனக்கு பெரிதும் துணையாக, ஆறுதலாக இருந்து வருவதையும் அறிந்திருக்கிறேன்.

திவாகர்

கடந்த வாரம் ஊருக்கு வந்துவிட்டு பத்து நாட்கள் குடும்பத்தோடு இருந்து சென்ற பிரபாகருக்கு இந்த இழப்பு மிகக் கொடியது என்பதை முழுதாக உணரமுடிகிறது.
பிரபாகரின் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரின் ஈரத்தை, கலங்கித் தவிக்கும் மனதை, அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் வேதனையை, திவாகரை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் வேதனையை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றட்டும்.

மனம் முழுதும் வேதனையோடு, அமரர். திவாகரின் ஆத்மா சாந்தியடையவும், பிரபாகரின் மனது இழப்பிலிருந்து மீண்டு வரவும், மனது முழுதும் தேங்கி நிற்கும் கண்ணீரோடு எனது வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும் சமர்பிக்கிறேன்.

பிரபா.... நீ மீண்டு... வா.... நம்பிக்கையோடு காத்திருக்கும் குழந்தைகளுக்காகவேணும்...

வாழ்க்கை வாழ்வதற்கே

_________________________________________________________
மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடும் புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோடும், புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில்.

”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?

மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடும், வங்கி சேமிப்பு 7,172 ரூபாயும்

பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் இன்று தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார்.

அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு, பேருந்துகளில் திடீர் ஆய்வு என இவரைப் பற்றி அடிக்கடி படிக்கும் ஒவ்வொரு செய்தியும் மனதிற்குள் மிகப் பெரிய துள்ளலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஒரு உதாரண மாவட்ட ஆட்சித் தலைவரான இவர். விவசாயிகள் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் தங்கள் குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில் சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்து வைத்தால் என்ன என்று, ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார்.

வெப்படை அருகே ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதி தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அந்த ”ஜில்லாவின் கலெக்டர்” என அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்திருக்கும் செய்தி கேட்டும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறி அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்து அதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார்.

கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி ஊக்குவிக்கிறார்.

எல்லாவற்றிக்கும் மேலாக.. புவி வெப்பத்தை குறைக்க உலகளவில் அதிகாரம் வாய்த்தவர்கள் அலட்சியம் காட்டிய போதிலும், உலகத்திற்கே உதாரணமாக தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்த்த வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு செயல்பட்டு, இது வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், நாமக்கல் நகர அரிமா சங்கம் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில் கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.

கிராம குறை தீர் மன்றம், மாதிரி கிராமங்கள், கிராமத் தோப்பு, ஒரு கோடி மரம் நடும் திட்டம், மாவட்ட ஆட்சியரின் கடிதங்கள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப் பூர்வ இணையப் பக்கத்தில் இது குறித்து நிறைய செய்திகள் உள்ளன.

தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் பெருமையும் கொண்டவர்

வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.

_______________________________________

இந்தத் தளத்தையும் வாசித்துப் பாருங்கள். நன்றி  ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ

_______________________________________

பகிர்தல் (08.06.2010)


நெகிழ்ச்சி:

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை, ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு அந்த வழியே சென்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் IAS, தனது காரில் ஏற்றி காப்பாற்ற முயற்சித்த மனித நேயத்திற்கு கோடானுகோடி வணக்கங்கள். இந்த சம்பவத்தின் போது தமிழக அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் உடன் இருந்தாகவும் செய்தி.

ஆச்சர்யம்:

சென்னை அண்ணா பல்கலைக்கழக கேண்டீனில் காலை சிற்றுண்டி சாப்பிடப் போயிருந்தேன். உணவு வகைகள் மிகத் தரமாக இருந்தது. சில நிமிடங்களில் உணவு வகைகள் கிடைத்தது. மிக முக்கியமானது உணவுப் பண்டங்களின் விலைப் பட்டியல். உதாரணத்திற்கு இரண்டு பூரிகள் சேர்ந்து 7 ரூபாய், ஒரு முட்டைத் தோசை 9 ரூபாய், காபி 4.50 ரூபாய், இது போல் எல்லாமே ஆச்சரியப் படும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைவாக இருந்தது.

தற்காலிக அயர்ச்சி

தமிழ் வலையுலகத்தில் சண்டை சச்சரவு வரும் போதெல்லாம், வலையுலகத்தை விட்டு தற்காலிகமாக, நீண்ட காலமாக, குறுகிய காலமாக, ஐந்து மணி நேரத்துக்கு என சில படைப்பாளிகள், விடுப்பு எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ஒரு பிரச்சனையும், சிக்கலும் மனதிற்குள் படைப்பாக்கத்தை வீழ்த்திவிடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழ் வலையுலகைப் பொருத்த வரையில், வருங்காலத் தலைமுறை வாசிக்க, நாம் மிகப் பெரியதொரு வெற்றிடத்தை இன்னும் நிரப்பாமலே காலியாக வைத்திருக்கிறோம். வலைப்பக்கத்தில் எழுதுவது வெறுமனே மனதிற்குள் இருக்கும் விசயத்தை இறக்கிவைக்கும் ஒரு இடம் என்ற மனநிலையிருந்தால் அதை சற்றே மீட்டி இன்னும் அழுத்தமாக எதையேனும் பதிந்துவிட்டுப் போவதுதான் வருங்காலத்திற்கு நாம் செய்யும் நல்ல காரியம்

இன்னும் தமிழில் எழுத நிறையப் பேரை ஊக்குவிக்க வேண்டிய நிலை இருக்கும் கட்டத்தில், நன்றாக எழுதும் சிலரே தங்கள் படைப்பாக்கத்திற்கு சிறை போடுவது சற்றே அயர்ச்சியைத் தருகிறது.

 

காமெடி

சென்னையின் புறநகர்களை கடக்கும் போது கவனித்தது, பெரும்பாலான சுவர்களில் பிரபல(!!!) அரசியல் தலைவர்கள் வித்தியாசமான வேடங்களில் போஸ் கொடுப்பது. விவசாயி, இராணுவத் தளபதி, கம்பெனி எக்ஸ்கியூட்டிவ், அந்தக் கால ராஜா, கிரீடத்தோடு என பல வேடங்களில் திரும்பிய பக்கமெல்லாம் கோணல் மாணலாய் நின்று கொண்டிருந்தார்கள். கொடுமை பழைய விசயகாந்த் படத்தில் வரும் மெசின்கன் துப்பாக்கி பொம்மையை வைத்துக்கொண்டு ஒருவர் ”சுட்டுப்புடுவேன்” என்பது போல் போஸ் கொடுத்ததைப் பார்த்து நீண்ட தூரம் சிரித்துக் கொண்டே வந்தேன்.

____________________________________


அத்தனையும் உணர்கிறேனடி
மோக வெப்பத்தில் களைத்து
காதல் நிழலில் மடி சாய
பொட்டென விழும் தேன் துளியாய்
உதட்டில் படியும் உன் உதட்டுச் சுவை..

உயிரின் அறைகளை உயிர்ப்பித்து
உறங்கும் சோம்பலைச் சுழற்றி வீச
தடு நீவும் உன் விரல்களில் உதிரும்
தொட்டெடுத்துதொடுத்த மல்லிகை வாசம்...

பட்டென விரியும் பச்சை மார்பில்
நுனி நாவால் கவிதை எழுதி
எச்சில் கொண்டு எழுத்துப்பிழை
களையும் இலக்கியச் சுவை...

கலந்து களைத்து நிதானித்து நிறைந்து
வியர்வைத் துளி பூத்து நிற்கும்
காது மடலோரம் ஒட்டாத எழுத்துகளில்
ஒளிந்து கிடக்கும் உன்மத்த வார்த்தை...


வேடத்தையும் வெட்கத்தையும் களைந்து
மௌனம் தொலைத்து திமிறும் அன்பில்,
தினவெடுத்த காதலில் அகலவிரித்த கைகளால்
அள்ளி அணைக்க அத்தனையும் உணர்கிறேனடி

~