யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி - Iratta


Iratta - மலையாளம் (Spoiler Alert)
படம் பார்த்த பலருக்கும் இறுதிக்காட்சியின் அதிர்ச்சி மிகக் கனமானதாக இருப்பதாக உணர முடிகின்றது.
அது 'எது’ சார்ந்த அதிர்ச்சி என்பது குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
வழக்கமான மலையாள த்ரில்லர் வகை. DySP பிரமோத் - ASI வினோத் ஆகிய இரட்டையர் பாத்திரங்களிலும் ஜோஜு ஜார்ஜ் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்பதையெல்லாம் சொல்ல வேண்டிய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார்.
மாலினியாக வரும் அஞ்சலியின் மீள் வருகை, அஞ்சலிக்கு இனி வாய்ப்புகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையைத் தருகின்றது.
மற்றபடி த்ரில்லர்கள் முடிக்கும்போது அவ்வளாக தொடர்பில்லாத, எதிர்பாராத ஒன்றில் கொண்டு வந்து முடிப்பார்கள். இதில் சற்றும் எதிர்பாராவண்ணம் சுருக்கென தைக்கும் ஒரு புள்ளியில் முடித்திருக்கிறார்கள். அந்தப் புள்ளிதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது.

”நான் பேசி முடிக்கும்வரை போன் கட் பண்ணிடாதே, 17 வருசம் ஆகிடுச்சு. எல்லாத் தப்பும் என்னோடதுதான். அதோட கணக்குவழக்கு எதும் வச்சுக்கல. மகள டிவில பார்த்துட்டு இருக்கேன். கம்பீரமா இருக்கா. உங்க ரெண்டு பேரையும் பார்க்கனும். அவகிட்ட என்னைப் பத்தி சொல்லிவை. அவளோட அப்பன் உயிரோட இருக்கானு தெரியும் உரிமை அவளுக்கு உண்டு” என பிரிந்துசென்ற அதுவரை பேசாதிருந்த மனைவியிடம் வேண்டும் பிரமோத்துக்கும்...

ஒரு நாள்கூட முடிவடையாத நிலையில், மகளுடன் சந்திக்க வருகிறோம் எனச் சொல்லும் அதே மனைவிடம் “வர வேண்டாம். மகள்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவள் எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம். அவள் என்னோட முகத்தைப் பார்க்க வேண்டாம். இனி எப்பவும் என்னைக் கூப்பிட வேண்டாம்.” என உறுதியாக, இறுதியாகச் சொல்லும் பிரமோத்துக்கும்...

இடைப்பட்ட தருணத்தில் அறிய வந்ததுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

*

காவல் நிலையத்தில் உடன் பணிபுரியும் இரண்டு பேரின் வாழ்விலும் வினோத் செய்தது, செய்ய முனைந்தது மற்றும் பினீஸ் சொல்லும் அந்த லாட்ஜ் நிகழ்வு அனைத்தும் வழக்கமான சினிமா வில்லன் செய்வதுதானே!

வினோத் பிரமோத்தின் மனைவி மற்றும் கைக்குழந்தையாக இருக்கும் மகளை எந்த உணர்வுகளுமற்றவனாகச் சந்திக்கிறான். பிறகு பிரமோத்திடமே எள்ளி நகையாடுகிறான்

மாலினியின் பிரச்சனையில் அவள் ‘அழகான பெண்’ என்பதற்காகவே தானே வலிய வந்து உதவுகிறான். அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்து வரும் நோக்கம் மற்றும் அந்த முதல் ’முயற்சி’யையும் நாம் அறிந்தே இருக்கின்றோம்.

இவை யாவும் ‘வில்லன்’ எனப்படும் வினோத் மீது வெறுப்பை, கோபத்தை, எரிச்சலை உண்டாக்கவே செய்தன.

இதன்பிறகு, வரும் காட்சிகளில்...
மும்பையில் பிரமோத் மனைவி-மகளைச் சந்தித்துவிட்டு திரும்பும் முன், சந்திப்பில் குழந்தைக்கென்று சில பொருட்களை வாங்கித் தந்துவிட்டு வருகின்றான்.

அந்த முதல் ‘முயற்சி’யால் மிரண்டோடும் மாலினியை தேடி அழைத்து வருகிறான். வேறொரு முகம் காட்டுகிறான். அவள் வேலை செய்யும் அங்கன்வாடி வகுப்பறையைக் கூட்டிவிடுகிறான். புடவை வாங்கித் தருகிறான். நெகிழ் மனதோடு தம் வாழ்க்கை முழுவதும் அழுக்கு என ஒப்புதல் தருகிறான். முன்பாக ஒரு மான்டேஜ் பாடல் உண்டு.

இவைகளுக்குப் பிறகு, அதுவரை வினோத் மீதிருந்த வெறுப்பு, கோபம், எரிச்சல் தணியவே செய்கின்றன.

அவனை அவன் கீழ்மைகளோடு ஏற்க(!) மனம் துணிகின்ற தருணத்தில்தான், அந்த க்ளைமாக்ஸ்.
பொதுவாகவே, எந்தவொரு குற்றமும், யாருக்கோ எனும்போது ஒரு மாதிரியும், தன்னைச் சார்ந்தவர் எனும்போது வேறொரு மாதிரியும் வடிவம் பெற்றுவிடுகின்றது. அதுதான் வினோத்திற்கும்!

ஆனால், மூன்றாவது துப்பாக்கிக் குண்டில் அங்கே செத்தொழிவது வினோத்தாக இருந்தாலும், செத்தொழிய வேண்டியது, 'யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி!’ என்றிருக்கும் எல்லா மனநிலைகளும்தான்.

போதைப் பழக்கத்தால், பணி அழுத்தத்தால், மன உளைச்சலால் என ஏதோ ஒரு காரணம் சொல்லி முடித்துவைக்கப்படும் தற்கொலை வழக்குகளின் பின்னே உண்மையில் இருக்கும் காரணங்கள் யாரும் அறியாத, யாரும் தாங்கவியலாத அளவுக்கு கொடூரம் நிறைந்ததாகவும்கூட இருக்கலாம்.
*