சிணுங்கும் அலைபேசியை செல்லமாய் எடுத்தணைக்க யாரோ ஏதோ எதற்கோ பேச தாமரை இலை தழுவும் நீராய் ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக அதிசயமாய் மிளிர்கிறது அவள் பெயர்
அமிர்தச் சுவை தேடி அள்ளி காது மடல் கவ்வ கசப்பாய் விழுகிறது வார்த்தை
”அடடே, உனக்கு வந்திடுச்சா மாத்தி பண்ணிட்டேனா” துடிதுடிக்கத் துண்டிக்கிறான் இணைப்பை கூடவே நம்பிக்கை நரம்பையும்
அவள்
சிணுங்கும் இதயத்தை செல்லமாய் தட்டி அமைதிப்படுத்தி நின்று, நிதானமிழந்து அவன் எண் ஒத்தி ஏதோ இணைப்பில் இருக்கும் அவனைத் தொடமுடியாமல் துவண்டு இன்னொரு முயற்சியில் இணையும் இணைப்பில்
வருகின்ற 01.08.2010 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா வளாகத்தில் உள்ள கங்கா அரங்கில் பதிவர். ஆரூரன் விசுவநாதன் அவர்களின் அருட்சுடர் பதிப்பகம் வெளியிட்டுள்ள பதிவர். பழமைபேசி அவர்களின் ஊர்ப்பழமை புத்தக அறிமுக விழாவில் பதிவர்கள் காசி ஆறுமுகம், பழமைபேசி, வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் காந்தி, நான், ஆரூரன் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
மாலை 3 மணிக்கு பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் கலந்துரையாட அரங்கம் நம் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம். அனைத்து பதிவுலக நண்பர்களையும் 01.08.2010 ஞாயிறு மாலை 3 மணிக்கு சந்திக்கவும், ஊர்ப் பழமை அறிமுக விழாவில் கலந்து கொள்ளவும் அன்போடு அழைக்கிறேன்.
(படம் சரியாகத் தெரியவில்லை என்பதற்காக நீங்கள் நிதானத்தில் இல்லை என்று குறை சொல்ல மாட்டேன்... (இஃகிஃகி) ஒன்னு படத்தை அழுத்தி பெரிதாக்கி படிங்க, இல்லாட்டி சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க, அப்படியும் படிக்க முடியலனா.. பாவம் போஸ்டர்னு மன்னிச்சு விட்ருங்க)
சில பருப்புகள்.... ஸ்ஸ்ஸ்ஸாரி....... பொறுப்பிகள்:
1. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போஸ்டரை அடையாளம் காட்டி இரவு ஒரு மணிக்கு படம் எடுக்க வைத்த பதிவர் ஆருரன் அவர்களுக்கே இது சமர்ப்பணம்.
2. அருமை, மிக அருமை மற்றும் சிரிப்பான் போட்டு பின்னூட்டம் வந்தால், பின்னூட்ட அடிமைகள் மறுவாழ்வு விழா வாசன் பார்வை அமைப்பு (!!!) மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
3. தள்ளாடாமல் மிக அருமையாக போட்டோ எடுத்துள்ளதாக பாராட்டி(!!!) பின்னூட்டாதிக்க தாக்குதல் நடத்தினால் உங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்யப்படும்.
4. ஒரு மணி வரைக்கு என்ன பண்ணுனீங்கனு வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தம் ஜெய்ய்ய்ய்ய்ப்படும்... ஜாரி
_______________________
உறக்கம் தேடும் இரவுகளில் நெரிசல் இல்லாப் பயணங்களை விரும்பினாலும், உறங்கிப் பழகா பகற்பொழுது பயணங்களில் ஒருவித சுவாரசியத்தை தொடர்ந்து தக்கவைப்பவர்கள், புதிது புதிதாய், தவிர்க்க முடியாமல் நாம் சந்திக்கும் மனிதர்களே.
சில நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தைத் தருவது எதிர்பார்த்த நபர்களை சந்திக்க முடியாமல் போவது, அதேபோல் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விதவிதமாய்த் தருவது எதிர்பாராத நபர்களை பொருந்தாத தருணங்களில் சந்திப்பது.
நம்மைச் சுற்றி மனிதர்களாக குவிந்து கிடக்கும் தேசத்தில், நம்மை எத்தனை பேருக்குத் தெரியும், நமக்கு எத்தனை பேரை நேரிடையாக அடையாளம் தெரியும்?/ எங்கும் மனிதர்களாகத்தானே வியாபித்துக் கிடக்கின்றனர். ஆனாலும் அதில் எத்தனை சதவிகிதம் நமக்கு அவர்களையும், அவர்களுக்கு நம்மையும் பரிச்சயம் இருக்கின்றது. நம் வீட்டின் அருகில் இருப்பவர்கள், வீதியின் முதல் திருப்பம் திரும்பும் வரையில் இருக்கும் வீடுகளில் அதிகப் படியாக வீதியில் புழங்கும் நபர்கள் மட்டுமே. அதைத் தாண்டி பெரிய வீதிக்கோ, முக்கிய சாலைக்கோ வரும் போது, அதில் இருப்பவர்களில் பெரும்பாலும் நாம் முன்பின் அறியாத நபர்களாக இருக்கின்றனர்.
தொடர்ந்து மனிதர்களைச் சந்திப்பது, மனிதர்களே இல்லாத நிசப்த தனிமை இதில் எது சுகம்? தெரிந்தவர்களைச் சந்திப்பதைக் காட்டிலும், காணும் இடம்தோறும் பல மடங்கு தெரியாத நபர்களையே புதிதாக சந்தித்துக் கொண்டேயிருக்கின்றோம். முன்பின் பார்த்திராத ஒரு மனிதரை புதிதாய் பார்க்கும் சுவாரசியத்திற்கு இணை ஏது?
நீண்ட காலமாய் நேரம் வாய்க்கும் போதெல்லாம் அலுவலக வாசலில் நின்று வேகமாய் இயங்கும் சாலையில் பார்வையை ஏதோவொரு சுவாரசியம் தேடி மிதக்க விட்டுப்பார்ப்பதுண்டு. காலை நேரத்தில் கடக்கும் பல ஆயிரம்பேரில் ஓரிரண்டு பேர் மட்டும் ஏற்கனவே அறிந்த முகங்களாய்த் தோன்றும், அது தவிர்த்த நேரங்களில் புதிய புதிய முகங்கள் கண்களுக்குள் கலந்து.... கலைந்து போகின்றன. அதில் ஒரு முகம் போல் இன்னொரு முகம் இருப்பதில்லை என்பது சுவாரசியமான ஆச்சரியம், அதிகபட்சம் முக்கால் சதுர அடிக்குள் அடங்கிப் போகும் முகத்திற்குள் எத்தனையெத்தனை வகைகள், வடிவங்கள்.
நெட்டையோ குட்டையோ, பருமனோ ஒல்லியோ, சிவப்போ கருப்போ பார்க்கும் விநாடியே கண்கள் அந்த நபரிடம் இருக்கும் குறிப்பிட்ட சிலவற்றை திருடி மூளைக்கு கடத்தி, அதனடிப்படையில் மனதிற்குள் ”இவர் இப்படிப் பட்டவராக இருக்கலாம்” என வேகவேகமாய் ஒரு ஓவியம் படியும். சில நேரம் மிகத் தெளிவாக, சில சமயம் கலங்கலாக.
முடி, காது, மூக்கு, கண்ணாடி, நரை, கன்னக் கதுப்பு, கழுத்து, பருத்த-வதங்கிய வயிறு, கைக்கடிகாரம், செல்போன், உடையணிந்த விதம், வெட்டப்பட்ட(படாத) நகம், காலுக்கு பொருந்தாத செருப்பு என எதையாவது மனதிற்குள் பதித்து அதையொட்டி ஒரு கணக்கு உள்ளுக்குள் மிக மிக வேகமாக எழுதப்பட்டு, பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலே அழிந்து போகும். ஆனாலும், அந்தக் கண நேர சுவாரசியம் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும்.
மனிதர்களே இல்லாத நாட்களும், வீதிகளும், சாலைகளும், பயணங்களும் சிறிது நேரம் மனதிற்குள் அமைதியை பரவச் செய்யலாம். ஆனால் அந்த அமைதி கெட்டிப்படும் நேரத்தில், அமைதி அளித்த சுகம் நீர்த்துப்போய், மனிதர்களைச் சந்திக்காத தனிமை ஒருவித வெற்றிடத்தை மனதிற்குள் கருவாக்கும். அந்த வெற்றிடம் கனமாக உருவெடுக்கும், அந்தக் கனமான தனிமை ஏதோ ஒரு இனம் புரியா பயத்தை மனதிற்குள் தோற்றுவிக்கும்.
எதன் பொருட்டேனும் அவ்வப்போது துளிர்க்கும் சுவாரசியமே மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறது.
மனசை கலங்கடிக்கும் பாடலோடு துவங்குகிறது பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் இயக்கிய ”என்று தணியும்” என்ற ஆவணப்படம்…
மூன்று வருடங்களுக்கும் மேலாக என் கணினியில் ஒரு மூலையில் சேமிக்கப்பட்டுக் கிடக்கும் இந்தப் படம் பார்க்கும் போதெல்லாம் கண்ணீரை சுரக்கவைப்பதையும், இயலாமையை தூண்டி விடுவதையும், நாள் முழுதும் சோகத்தை மென்று தின்ன வைப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகளை காவு கொடுத்த இரண்டாம் ஆண்டு நினைவுநாள் சோகத்தை முழுக்க முழுக்க உள்வாங்கி, கல்வியென்ற பெயரில் மிக நேர்த்தியாக 94 குழந்தைகளை கொலை செய்ததை மிக அழுத்தமாக பதிவுசெய்கிறது படம்.
இன்றோடு சுமார் 2191 நாட்களைக் கடந்துவிட்டோம், இந்த தேசத்தில் நீதி எப்போதுமே தாமத்தித்துத்தான் கிடைக்கும் அல்லது கிடைக்காமலும் போகும் என்பதை அரசு, நீதி இயந்திரங்கள் மீண்டும் நிரூபித்து வருகிறது.
63 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், பல கல்வியாளர்கள் கல்வி எவ்வளவு மோசமான ஒரு வியாபாரப் பொருளாக போய்விட்டது என்பதையும், இலவசமாக கல்வியை கொடுக்க வேண்டிய ஒரு அரசு எவ்வளவு மூடத்தனத்தையும், முட்டாள் தனத்தையும் கல்வி அமைப்புகள் மேல் திணித்துள்ளது என்பதையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
கும்பகோணத்தில் எரிந்தவுடன், கூரைகளை பிரிக்கச் சொல்லி ஆணையிட்டார்கள், பள்ளி வாகனம் பள்ளத்தில் விழுந்தவுடன் வாகனத்தை தணிக்கை செய்யச் சொன்னார்கள். ஒரு பெரும் சோகத்தை அமுக்கிவிட பெரிதாய் ஒரு பரபரப்பை மட்டும் கிளப்புவதை அரசாங்கம், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மிக மிக நேர்த்தியாக, கவனமாக செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.
மூன்றாவது தூண் எனும் ஊடகங்கள், வெறும் வெற்று பரபரப்பை கிளப்பி, மக்களை அப்போது மட்டும் பார்க்கவைத்துவிட்டு போவதும் வழக்கமாகப்போய்விட்ட ஒரு ஜனநாயக(!) நாட்டில்தான் நாமும் என்னென்னவோ நம்பிக்கைகளை தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
படத்தில் ஒரு இடத்தில் பேசும் சினிமா இயக்குனர் சந்தானபாரதி, தாங்கள் கும்பகோணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, அங்கு திரளாக கூடிய பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வந்த நடிகர்களை தொட்டுப்பார்க்க, ரசிக்க, கையெழுத்து வாங்க துடித்ததை வேதனையோடு கூறினார்.
தமிழனனின் ரசிப்புத்தன்மையும் கூட வக்கிரமாக மாறிவருவதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும், அதே சமயம் சீருடையாய் கருப்பு வண்ண உடையோடு, கண்ணில் குளிர் கண்ணாடியோடு, ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கொரு முறை பெரும் சோகங்கள் நிகழும் போதெல்லாம், அஞ்சலி, மறியல், உண்ணாவிரதம் இன்னபிற விசயங்களைச் செய்து நாள் முழுக்க தொலைக்காட்சிகளில் நேரலையில் வந்து கொண்டாடி விட்டுப்போவதைத் தாண்டி அவர்களும் தங்கள் கையில் இருக்கும் சக்தி வாய்ந்த ரசிகர்கள் கூட்டங்கள் மூலம் ஒன்றையும் கிழித்துவிடவில்லை.
படம் முழுதும் ஆக்கப்பூர்வமாக பேசியிருக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரமாகிவிட்ட கல்வியை விலாவாரியாக பிரித்து மேய்கிறார்கள் கேள்விகளால் துளைக்கிறார்கள், விடைமட்டும் கிணற்றில் போட்ட கல்லாய் மௌனித்துக் கிடக்கிறது.
பள்ளியில் ஒரு குழந்தைக்கு ஒன்பது சதுர அடி இடம் குறைந்தது இருக்க வேண்டும் என்பது சட்டம், நம்மில் எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும். குழந்தைகளை பெற்று சீராட்டி வளர்க்கும் நம்மில் எத்தனை பேருக்கு குழந்தைகள் அதிக நேரம் கழிக்கும் பள்ளியின் சுகாதாரம், அங்கு இருக்கும் வசதி குறித்து கேட்டுத்தெளிய ஆர்வம் இருக்கிறது அல்லது ஆர்வம் இருப்பின் பள்ளிகள் அனுமதிக்கின்றன.
சமீபத்தில் அரசாங்கம் கொண்டுவந்த கட்டணக்குறைப்பு முறையை அமுல்படுத்தா பள்ளிகளுக்கு எதிராக குரல் கொடுக்க எத்தனை சதவிகிதம் பெற்றோருக்கும் பொறுமையும் துணிவும் இருக்கின்றது, அல்லது வாங்கும் கட்டணத்திற்கேற்ப வசதி செய்து கொடுக்க பள்ளியை வலியுறுத்த எத்தனை பேருக்கு உரிமை இருக்கின்றது.
எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள, எது வந்தாலும் தாங்கிக்கொண்டு மௌனியாக இருக்க மிக எளிதாக பழக்கப்பட்டு வருகிறோம். வசதியான இடங்களில் மதுக்கடைகளை நிறுவிக்கொண்ட நமக்கு பள்ளிகள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே கிடைக்கின்றன. மது தேசிய உடமையானதைப் பற்றியும், கல்வி முழுக்க முழுக்க வியாபாரமானதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலை கொள்ள பொறுமையில்லை யாருக்கும்.
தனக்கு நடந்தால் அது பெரும் சோகம், மற்றவர்களுக்கு நடந்தால் அது ஒரு சம்பவம் என்ற நம் மனநிலை, தொடர்ந்து எத்தனை சோகம் நிகழ்ந்தாலும் அதை சிறிது காலத்தில் மறக்கடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
சாலைச் சந்திப்புகளில் கோட்டைத் தாண்டி நிற்கும் நடுத்தரவர்கத்திற்கு உடனுக்குடன் தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டும் இறையாண்மை மிகுந்த இந்தத் திருநாட்டில், மனிதன் இழைத்த குற்றங்களில் நிகழும் மரணங்களெனும் கொலைகளுக்கு நீதி நீர்த்துப் போய்விடுவதை, அநீதி இழைக்கப்பட்டவர்களைத் தாண்டி யாரும் கேட்கத் தயாரில்லை.
கருகிப்போனது சில ஆண்டுகள் வளர்ந்த குழந்தைகள் மட்டுமா? பல தலைமுறைகளின் ஒட்டுமொத்த கனவும், வரலாறும் தானே?
அலட்சியத்தின்பால் கொலையுண்டு போன பிஞ்சுக்களின் ஆத்மா, நீதி கிடைக்காமல் சாந்தியடைந்துவிடுமா என்ன? தங்களைப் போன்று படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக இருக்க தங்கள் மரணங்களை ஒரு எச்சரிக்கையாகவே விட்டுவிட்டு போயிருக்கும் அந்த ஆத்மாக்கள் வணக்கத்திற்குரிய காவல் தெய்வங்களாகவே கருதப்படவேண்டும்.
என்று தணியும்… 94 நான்கு குடும்பங்களில் கொதிப்போடு எரியும் இயலாமைத் தீ?
என்று தணியும்… கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் போக்கு?
என்று தணியும்… நீதியின் தாமதப் பசி?
என்று தணியும்… காசுக்காக எதையும் ஆராயாமல் அனுமதித்து விட்டு, மற்றவர்கள் மேல் பழிசுமத்தும் பல அரசு அதிகாரிகளின் பணவெறி?
காலம் பலவற்றை கரைத்துப் போகும், சிலவற்றை அடர்த்தியாக்கிப் போகும். கும்பகோணம் விபத்தின் சோகம் அதில் தொடர்பில்லாத எல்லோருக்குள்ளும் கிட்டத்தட்ட கரைந்தே போய்விட்டது, ஆனால் அதே காலம் நீதி கிடைக்காமல் அலையும் அந்த பெற்றோர்களின் மனதில் இயலாமையையும் சேர்த்து சோகத்தை அடர்த்தியாக்கிக் கொண்டுதானே இருக்கின்றது?
என்றுதான் தணியும் இந்தச் சோகம்?
பொறுப்பி:தலைப்பு, பாடல் மற்றும் சில கருத்துகள் பாரதிகிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் வந்த என்று தணியும் ஆவணப்படத்தில் எடுக்கப்பட்டது.
பொறந்த ஏழாம் நாள் மூனுநாள் கூலிக்கு வாங்கினது கருவாச்சி கருப்புன்னா கருப்பு தொட்டா ஒட்டிக்கிற மாதிரி பாட்டில் பாலும், பச்சப்புல்லும், நெறையப் பாசமும் கொழுகொழுன்னு ஊர் கண்ணு ஒன்னாப் பட
ஒரு காலத்தில் நாம் பயன்படுத்திய, மை நிரப்பி எழுதும் பேனாக்களை நினைவிருக்கிறதா? இப்போதும் யாராவது மைப் பேனாவை உபயோகப்படுத்துவதுண்டா? அப்படியிருந்தாலும் மிகமிகச் சொற்பமாகவே இருக்கும்.
மைப் பேனாவை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் இருந்த கவனம், தற்போது பயன்படுத்தும் பேனாக்களிடம் இருக்கிறதா?. அந்தப் பேனாக்களை பாதுகாக்கவேண்டும் என்று இருந்த உணர்வு இப்போது உபயோகப்படுத்தும் பேனாக்களிடம் ஏன் இல்லாமல் போய்விட்டது. எதன் பொருட்டு, அதற்கான பொறுமையும் அவசியமும் இல்லாமல் போனது.
சமீப காலங்களில் எதை அதிகம் தொலைத்தீர்கள் என்று கேட்டால் அதிகப் படியான பதில் பேனா என்று வரலாம், அதுவும் குறைந்த காலத்தில். (ஹி..ஹி.. எங்கள மாதிரி யூத்துங்க ’முடி’ என்று கூடச் சொல்வோம்)
கால ஓட்டத்தின் வளர்ச்சியில், காலம்காலமாய் பயன்படுத்தி, இன்று அற்றுப்போனதில் மை பேனாவும் ஒன்று. காரணம் மிகக் குறைந்த விலைக்கு விதவிதமாய் வந்த பேனாக்கள் மை பேனாக்களை ஒட்டு மொத்தமாக கபளீகரம் செய்துவிட்டது. மிக எளிதாக அந்நியப்படுத்தப்பட்டு விட்டது.
மை வார்த்து எழுதும் பேனா மட்டும் அந்நியப்பட்டு போகவில்லை, பேனாவை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் செத்துப் போனது. போனால் போகட்டும் புதிதாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனோநிலையை ”யூஸ் அண்ட் த்ரோ” பாலிசி மிக அழுத்தமாக நம்முள் புகுத்திவிட்டது. வியாபாரத்திற்கான மிக அற்புதக்(!!!) கண்டுபிடிப்பு, அதே சமயம் வாழ்க்கைத் தத்துவத்திற்கான மிகக் கொடிய விஷமே இந்த ”பயன்படுத்து, முடிந்தவுடன் தூக்கியெறி”எனும் ”யூஸ் அன்ட் த்ரோ”.
அடடா, எத்தனையெத்தனை பொருட்கள் நம்மோடு கலந்து கிடக்கிறது, மிக அழகாய், மிக எளிதாய், மிக சல்லிசாய். நம்மோடு கலந்திருந்து என்ன பயன் நம் நேசிப்பு அற்றுத் தானே நம்மோடு அந்தப் பொருட்கள் இருக்கின்றன.
இன்று நம் குழந்தைகள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பாதுகாப்பாய் வைத்து பராமரித்துக் காக்கவேண்டும் என்பது போல் எத்தனை பொருட்களை அடையாளம் காட்ட முடிகிறது. தண்ணீர்க் குடுவை, விருந்துகளில் சாப்பிடும் தட்டு, எங்கும் பருகும் குளிர்பான குடுவைகள், வாங்கிவரும் பொருட்களின் பெட்டிகள், எழுதும் பேனாக்கள், சூடும் அலங்காரப் பொருட்கள், இன்னபிற என, எல்லாமே அழகாய், கவர்ச்சியாய் இருக்கிறது. கிடைத்ததை பயன்படுத்து, பயன் முடிந்த பின் எளிதாய் தூக்கியெறிந்துவிட்டு விட்டு புதிதாய்க் கைக்கொள், இதைத்தானே நடைமுறைப் படுத்திவருகிறோம். ஒன்றை தற்காத்து பாதுகாத்து பராமரித்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கவும், அந்தப் பொருளை நேசிக்க வைக்கும் ஒன்றையும் நம் குழந்தைகளிடம் கடத்த முடியவில்லையே. குழந்தைகளிடம் கடத்தும் முன் நம்மிடமே அற்றுப் போய்விட்டதை அறிவோமா?
பெரும்பாலான சாலைகளின் திருப்பங்களைக் கவனித்துப் பாருங்கள், குப்பைகள் குவிந்ந்ந்ந்ந்ந்து கிடக்கின்றன. அதில் கிடப்படவை பெரும்பாலும் ”யூஸ் அன்ட் த்ரோ” வகைகளே. வீடுகளிலும் சரி, அலுவலங்களிலும் சரி நம் குப்பைத் தொட்டிகள் வழக்கத்திற்கும் மாறாக வேகமாய் நிரம்பி வருகின்றன.
தவிர்க்க முடியாமல் நாம் சிக்கிக்கொண்ட இந்த ’யூஸ் அன் த்ரோ’ உயிரில்லா பொருட்களோடு மட்டுமேயாவது நிற்குமா?. உயிரும் உணர்வும் கொண்ட சக மனிதர்களின் உறவோடு, உணர்வுகளோடு பரவாமல் இருக்குமா?.
ஆனாலும் சக மனிதர்களோ, பொருளோ சட்டென அணைப்பதும், அதே வேகத்தில் புறந்தள்ளுவதும் மிக மிக இயல்பாக நம்மிடம் ஆழ வேறூன்றி வருவதை மறுக்க முடியவில்லை.
இனிய நண்பர் வலைப் பதிவர் பழமைபேசி (எ) மௌன.மணிவாசகம் அவர்களின் ஊர்ப்பழமை, பள்ளயம், நனவுகள் ஆகிய வலைப்பதிவு தொகுப்புகள் ஊர்ப்பழமை என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
பிஞ்சாய் பிரபஞ்சம் தொட்டு வளரத் துவங்கிய நாள் தொட்டு ”எங்க அம்மானு சொல்லு, அப்பானு சொல்லு, அக்கானு சொல்லு” என மொழி தாய்ப்பாலோடு புகட்டப்பட்டது. குடும்பத்தில் அனைவரும் காலம் காலமாய் வழிவழியாய் பேசும் தமிழ் மொழியே தாய்மொழி என உணர்த்தப்பட்டது, வயது கூடக்கூட இதற்கு இதுதான் வார்த்தை என புரிய ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தது, கூடவே பேச்சு வழக்கில் இருந்த வார்த்தைகளை தட்டிச் சீர்படுத்தி இது தான் முறையான வார்த்தை என அடையாளம் காட்டியது.
அதே காலகட்டத்தில் பள்ளியில் கூடுதல் மொழியாக ஆங்கிலம் போதிக்கப்பட்டது. முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தை ஆண்டிருந்தாலும், அது பெரும்பான்மையான குடும்பங்களில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாத மொழி. ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருந்தாலும், கட்டாயத்தின் பேரில் கற்பிக்கப்பட, கற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்பந்தத்தில், சிலருக்கு எளிதாக கைவந்தது, பலருக்கு அதுவே பள்ளியைவிட்டு ஓட வைத்தது. முதல் தலைமுறையாக மாற்று மொழி கற்போருக்கு அது மிகக்கடினமான ஒரு தண்டனையாகவே இருந்தது.
என்னதான் மற்ற மொழி கற்றாலும் சிந்திப்பது என் அம்மா அமுதோடு ஊட்டிய தாய்மொழியான தமிழ் மொழியிலேயே என இருந்தது. எந்த மாற்று மொழி வார்த்தையை வாசித்தாலும், அது தமிழாக மொழி மாற்றம் அடைந்து எண்ணத்தில் புகுந்தது. திரும்ப ஆங்கிலத்தில் பேச வேண்டிவந்தாலும், பேச வேண்டிய வார்த்தை எண்ணத்தில் தாய் மொழியிலேயே உருவாகி உள்ளுக்குள்ளே மொழி மாற்றமடைந்து, ஆங்கில வார்த்தையாக பிரசவம் அடைந்தது.
இது தாய்மொழியில் சிந்திக்கும் அனைவருக்கும் பொது. எதன் பொருட்டோ காலப்போக்கில் தாய்மொழிக்கான அங்கீகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் துணிந்தோம், ஆக்கிரமித்த ஆங்கிலம் இந்த தேசத்தில் எந்த மொழியை விடவும் தமிழை அதிகம் கபளீகரம் செய்தது மறுக்க முடியாத உண்மை.
சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற அளவில் தாய்மொழி புறந்தள்ளப்பட்டு வரும் அவலமும் மறுக்கமுடியாத ஒன்று. பொருளாதாரம், வளர்ச்சி, அறிவு, அறிவியல், மருத்துவம் என்பது போல் ஏதோ ஒன்றின் பொருட்டு ஆங்கிலத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, தாய்மொழியான தமிழை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு கட்டிப்போட்டதாகவே உணர்கின்றேன். பச்சையாகச் சொன்னால், தமிழகம் தவிர்த்து வேறு பகுதிகளில், வேறு தேசங்களில் வாழும் தமிழர்களிடம் வாழும் தமிழ்கூட தமிழகத்தில் வாழும்(!!!) தமிழர்களிடம் இருக்கிறதா என்பதே ஐயமாக இருக்கின்றது.
அறிவை விருத்தி செய்ய வேண்டிய பள்ளிகளில் முதலில் தாய்மொழியை இழந்தோம். தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், இன்று தனியார் பள்ளிகள் என்பதாக மாறிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியையே முழுக்கக் கொண்டு, தமிழ் தவிர்த்த பிற மொழியை இரண்டாம் மொழியை எடுக்கலாம் என்ற நிலையை அரசாங்கம் அனுமதித்த போது தமிழ் மொழி தாறுமாறாக கிழித்து வீசியெறியப்பட்டது. அப்படி வீசியெறியப்பட்டு சீரழிக்கப்பட்ட மொழி, அதன் பின் அரசாங்கம் என்ன வெற்றுச் சட்டம் போட்டாலும் அரியனை ஏற முடியாமல் தவிக்கின்றது.
இன்றைய குழந்தைகளை பள்ளிகளும், வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளுமே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது. வீடுகளில் மற்றவர்களுடன் கலந்து பேசுவதை தொலைக்காட்சிப் பெட்டிகள் மௌனிக்கச் செய்துவிட, பள்ளிகள் கட்டாயம் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்த, வேறு வழியில்லாமல், தாய்மொழியை விட்டு விரும்பியோ, விரும்பாமலோ ஆங்கில மொழியிலேயே சிந்திக்க நிர்பந்திக்கப்படும் அவல நிலைக்கு நாமே ஆளாக்கிய குற்றவாளிகளாக மாறிவிட்டோம். ”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது என்பது தான் இன்றைய தமிழனின் நாகரிகமாக அடையாளப் படுத்தும் போது வேதனையோடுதான் மனதிற்குள் புழுங்க வேண்டி வருகிறது. இந்த பைத்தியகாரத்தனமான நாகரிக முகமூடிகளை பிய்த்தெறிந்து வெளிவர வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திற்கு தமிழ் மொழியும், இனமும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.
வழிவழியாய் வந்த தாய்மொழியைப் படிப்படியாய் இழக்கும் சமூகம், கொஞ்சம் கொஞ்சமாய் தன் அடையாளத்தையும் இழக்கவே செய்யும். மொழியை வளர்க்க மறக்கும் மனிதன் தன் இனத்தை விட்டு படிப்படியாக விலகவே செய்வான். ஒன்றுபட்டிருந்த இனம் காலப்போக்கில் சிதறுண்டு போகும். காலப்போக்கில் தன் இனம் அழிவது குறித்து கவலைகளற்று போகும் சூழ்நிலை வந்துவிடும்.
சமீபத்தில் இந்த தமிழ் இனத்தை அழித்தொழித்த ஒரு கொடும் செயலில், ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒற்றை இலக்க சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே வலி கொண்டது, கிளர்ந்தெழுந்தது, கதறி அழுதது. அந்த வலிக்கும், கிளர்ச்சிக்கும், அழுகைக்கும் அடிப்படையாக இருந்தது அவனும், நானும் தமிழன் என்ற ஒரே பற்றுக்கோடுதான். மொழியை இழந்தவன் இந்த பற்றுக்கோடு பற்றிய அக்கறை அற்றவனாக மாறி, இனத்திலிருந்து தனிமைப் பட்டுப்போவான்.
ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், விருந்தோம்பலையும் ஆதிகாலம் முதலே கற்றுக்கொடுத்து வந்த மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழ் இனம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி வழி வந்த நாம், மிக அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டியது, நம் பிள்ளைகளுக்கு தாய் மொழி தமிழ் மேல் சிதறாத ஆர்வத்தை தூண்டுவது. அதுவே மொழியை, மொழி சார்ந்தவனை, இனத்தை காப்பாற்றும். இனம் வாழ, நாம் வாழ செந்தமிழை வாழவைப்போம், அதற்காகச் செயல்படுவோம்.
ம்ம்ம் இதுகூடத் தெரியாதாப்பா!?.... அரிசிய குக்கர்ல போட்டா சாப்பாடு வரும்.
செரி.... அப்போ அரிசி எங்கிருந்து வருது...!!??
அய்யோ... கடையில் இருந்து அரிசி வருதுப்ப்பா...!!!???
அட, செரி.... கடைக்கு எங்கிருந்து வருது...!!!???
அடப் போங்கப்பா... போர் அடிக்குது...
என்று ஓடும் மகளிடம் நான் சொல்ல, அவள் கேட்க பொறுமையில்லாத ஒரு கதை கண்ணாடியில் படியும் ஈரப்பதமாய் படிந்து கிடக்கிறது.
_________________________________
மண் வாசனை மனதும் முழுதும் படிய, இழந்து போன சின்னச் சின்ன சந்தோசங்களை, எப்போதாவது நினைவு படுத்திப் பார்ப்பது சந்தோசத்தை கொடுக்கும் அளவிற்கு, ஏக்கத்தையும் விதைத்து விட்டுத்தான் போகின்றது. எனக்கு வாய்த்தது, இன்றிருக்கும் எத்தனை பேருக்கு பரிட்சயம் என்பது தெரியவில்லை...
வசதிகள் அதிகம் இல்லாத கிராமத்து வாழ்க்கை, தொலைக்காட்சி மனிதனை கொள்ளையடிக்காத காலம், சிறகுகளை சிறையிலடைக்காத பருவம்... விளையாடுவதற்கு விவசாய நிலமே களமாய் இருந்த நாட்கள் அவை.
விவசாயத்தில் அதிகம் ஆர்வம் ஊட்டுவது நெல் நடவுதான். நெல் நடவுக்கான தயாரிப்பே நயமானதொரு அனுபவம். மேட்டூர் அணையில் அந்த வருடம் தண்ணீர் திறப்பை உறுதி செய்த பிறகே, அதற்கான ஆயத்தங்கள் தயாராகும்.
நடவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த நிலத்தில், வசதியான ஒரு வயல் நாற்று விடுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும். நாற்று வயலின் (நாத்து பட்டறை) வரப்புகள் முதலில் மேம்படுத்துப்படும். உறுதியான வரப்புகளை உருவாக்கிய பிறகு, தண்ணீர் நிரப்பப்படும், தண்ணீர் நிரப்ப ஆரம்பிக்கும் போதுதான் அந்த வயலுக்குள் எங்கெங்கு எலி பொந்துகள் (வங்கு) இருக்கிறதென்பது தெரியும். தண்ணீர் உள்ளே புக அங்கங்கேயிருந்து எலிகள் தத்தித் தாவி ஓடும், அப்படி ஓடும் எலிகளை துரத்தித் துரத்தி அடிப்பதும், நாய்கள் ஓடிப்பிடிப்பதும் இயல்பாக நடக்கும்.
வயலில் நன்றாக நீர் ஊறிய பிறகு, வயல் முழுதும் நீர் தேக்கி ஏர் கொண்டு இரண்டு மூன்று முறை சேறு குழையக் குழைய சேற்று உழவு ஓட்டப்படும். அதன் பின் பனைமரத்து பட்டை கொண்டு மிக நேர்த்தியாக சிறிதும் மேடு பள்ளம் இல்லாமல் சேற்று வயல் சமன் (நிரவுதல்) படுத்தப்படும்.
அதன் பின் தண்ணீரைத் தேக்கி, சேறு முழுதும் படிந்த பின், வயலில் தண்ணீர் தெளிந்து கண்ணாடி போல் தெளிவாக இருக்கும் நிலையில், அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப, சாணியில் பிள்ளையார் வைத்து, பூஜை செய்து ஏற்கனவே மூட்டையோடு தண்ணீரில் நனைத்து வைக்கப்பட்ட (ஊறல்) பதமாக இருக்கும் விதை நெல்லை ஒரு நேர்த்தியோடு மிகச் சமமாக பட்டறை முழுதும் படியும் வண்ணம் தூவப்படும். விதை நெல் சேற்றில் படிந்து மூழ்கியபின், அடுத்த நாள் தேக்கி வைத்த நீர் முழுதும் வடிக்கப்படும்.
ஈரத்தில் உறங்கும் நெல் சுள்ளென சூரிய ஒளி பட விழித்தெழுந்து தன் இதழ் உடைத்து புதிதாய் ஒரு உயிராய் பிறப்பெடுக்கும். அதன் பின்வரும் நாட்களில் திட்டுத்திட்டாய் இளம் பச்சையாய் முளைக்கும் பயிர், அடுத்த வாரங்களில் அடர்த்தியாய், மிக நெருக்கமாய் பச்சைபசேலென ஆடையுடுத்தி மிக அழகாய் வளர ஆரம்பிக்கும்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின், நாற்று நடுவதற்காக மற்ற வயல்களில் நீர் நிரப்பி, எலிகளை விரட்டி அடித்து, ஏர் (அ) ட்ராக்டர் கொண்டு சேற்று வயலாடி, அதை நிரவி, வரப்புகளை செதுக்கி, சேறு பூசி வயல்கள் தயார்படுத்தப்படும். இந்தக் காலகட்டத்தில் சேற்றில் விளையாடும் சுகம் இருக்கே, அடடா, அதை விவரிக்க வார்த்தைகளை யாரிடமிருந்து கடன் வாங்குவதெனத் தெரியவில்லை.
நாற்றங்காலில் (பட்டறை) நீர் நிரப்பி, வேர் அறுந்து போகாமல் பிடுங்கி, கத்தைகளாகக் கட்டி (புடுங்கி கத்தை கட்டறான்னு கிராமச் சொலவாடை உண்டு). வரப்பு வழியே கைகளுக்கு பத்து பதினைந்து என எடுத்துச் சென்று ஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளிகளில் சமன் படுத்தப்பட்ட சேற்று வயலில் வீசி எறிய, நடவு ஆட்கள் ஒரு ஓரமாக பின்பக்கமாக நகரும் வகையில் பயிர்களை நடத் துவங்குவர். பெரும்பாலும் நடவு ஆட்கள் என்பது அக்கம் பக்கம் வயலுக்கு சொந்தகாரர்களாகவே இருப்பார்கள். பத்து இருபது தோட்டக்காரர்கள் சேர்ந்து ஒவ்வொருத்தர் வயலாக தினம் நடவு என ஒன்றிணைந்து மிக எளிதாக நடவு செய்வதாக நினைவு.
காலையில் சேற்று வயலாகக் கிடந்த பூமி, மாலையில் நடவு ஆட்கள் மேலே ஏறும் போது, குறிப்பிட்ட இடைவெளியில் பயிர்கள் என இளம்பச்சை நிறத்தில் கனத்த மௌனத்தோடு புகுந்த வீட்டு மருகளாய் தன் வேர் ஊன்ற மண்ணோடு உறவு கொண்டிருக்கும் அழகான தருணம் அது.
அடுத்த ஓரிரு நாட்களில் வயலில் இருந்த நீர் வற்ற சூரிய ஒளியின் காதலில் வேர் ஆழப் பிடித்து, கொஞ்சமாக கரும்பச்சைக்கு மாற ஆரம்பிக்கும். அதன் பின் சீரான இடைவெளியில் நீர் பாய்ச்சுவதும், உரம் போடுவதும், களை பிடுங்குவதும் என சில மாதங்களில் நெல் கதிர் விட (இதை பூட்டை என்பர்) ஆரம்பிக்கும.
முதலில் கதிர் விடும் நெல்லுக்குள் இருக்கும் அரிசி (பால் பிடித்தல்) மிக மென்மையான பால் போன்று திடதிரவ வடிவில் இருக்கும். அப்படியே கதிர் பறித்து வாயில் மென்றால், மெலிதான ஒரு இனிப்பு வாசத்தோடு வாய் மணக்கும்.
ஒரு நெல்லில் பிறந்த ஒரு பயிர் பலநூறு நெல் மணிகளோடு, தன் வாழ்நாள் சாதனையாக தலையில் நெற்கதிரை கிரீடமாகச் சூடி காற்றுக்கேற்ப சரசரவென அழகாய் அசைந்தாடும். அடுத்த சில நாட்களில் பயிர்கள் தன் பச்சை நிறத்தைத் துறந்து, விளைந்ததற்கு அடையாளமாய் தங்க நிறமாக மாறும், கூடவே நெல் மணிகளும் தங்க நிறத்திற்கு மாறி தன்னை அறுத்தெடுக்க ஆணையிடும்.
நெல் நடவைவிட மிகச் சுவாரசியமானது அறுவடைக்காலம். அறுவடைக்கென சில பிரசித்தி பெற்ற குழுக்கள் இருக்கும். அவர்கள் குத்தகையா ஒரு தொகை பேசி, அநேகமாக (அது நெல்லாகத்தான் இருக்கும்) தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி காயவைத்திருக்கும் வயலில் அறுவடையை ஆரம்பிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதி நெல் அடிக்க பயன்படுத்து களமாக தீர்மானிக்கப்பட்டு, பயிர்கள் நிலத்தோடு ஒட்ட அறுக்கப்பட்டு, தட்டுப் பலகை கொண்டு தட்டி, ஒரு களமாக மாற்றப்படும்.
வயல்களில் மாலை வரை நடக்கும் அறுவடையை முடித்து, அறுத்த பயிர்களை கத்தைகளாகக் கட்டி, பயிரை ஒட்ட அறுத்த அந்தக் களத்தின் ஒரு பகுதியில் அடுக்குவர். அப்படி அடுக்குவதை நெல் போர் எனச் சொல்வது வழக்கம். அடுக்கப்பட்ட நெல் கத்தைகளைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏறி உச்சியில் உருண்டு பொரண்டு, கீழே குதிக்கும் போது அப்பாவோ, தாத்தாவோ குச்சியை வைத்துக் கொண்டு அடித்து விரட்ட தயாராக நிற்பார்கள். அப்போது ஏன் அடிக்கிறார்கள் எனத் தெரியாது. இரவு நெருங்க உடம்பில் ஆங்காங்கே அரிக்கத் துவங்கும், அரிப்புக்கு காரணம் நெல் போரில் விளையாடிய போது, உடம்பில் படிந்த முழங்குதான் காரணம் எனும் போது ஒரு தீர்மானம் வரும், அடுத்து முறை இது போல் விளையாடக்கூடாது என. ஆனால் அந்த தீர்மானம் அடுத்த சில நாட்களில் மறந்து போவதுதான் மிகப் பெரிய மாயவித்தை.
அடுத்தது, நெற்பயிரிலிருந்து நெல்லை உதிர்த்துவது. இது இரண்டு கட்டமாக நடக்கும். பயிர்களை அடிப்பதற்கு ஏற்ற கல் ஒன்றை சமமாக நிறுவி, நெல் போரைப் பிரித்து, கத்தைகளை களைத்து, நெல்பயிரில் திரித்த கயிற்றில் (பிரி) பிடித்து கல்லில் அடிக்க கிட்டத்தட்ட அத்தனை நெல்மணிகளும் சிதறிக் கொட்டும். களத்தின் மறுபகுதியில் அடித்தும் விழாமல் ஒட்டியிருக்கும் நெல்லை உதிர்த்துவதற்காக, தாம்பு கட்டப்படும். அடித்த பயிர்களை பெரிய வட்டமாக போட்டு அதன் மேல் மாடுகளை ஒன்றோடு ஒன்று பிணைத்து சுத்தி வரச் செய்வர். அடித்த போதும் உதிராத நெற்கள் மாடு மிதிக்கும் போது உதிரும் என்பதற்காக.
”மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று
ஆனை கட்டிப் போரடித்த கூட்டம்”
இப்படி மாடுகளை விட்டு ஓட்டுவதை தாம்பு கட்டுதல் என்பர், தாம்பு கட்ட உழவு, கறவைக்கான எருதுகள், மாடுகள் பயன் படுத்தப்படப் மாட்டது. இதெற்கென மலைகளில் மேயும் ஒரு வகையான மலை மாடுகளை அணிஅணியாக வைத்திருப்பர். இவைகள் பெரும்பாலும் நெல் அறுவடைக் காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஒருவகையாக, அடித்து சேகரித்த நெல், தாம்புக்களத்தில் சேர்ந்த நெல் என அனைத்தையும் சேர்த்து, காற்று வீசும் திசையில் வீசி தூற்றி, குப்பைகளை நீக்கி மூட்டையில் அடைக்கப்படும்.
அதன் பின், நெல்லை ஊறவைத்து, வேக வைத்து (வேக வைக்காமல் அரைப்பது பச்சரிசி) காயவைத்து ஆலைகளில் கொண்டு அரைத்து, நெல்லின் புறத்தோலை தவிடாக்கி, தனியே சேரும் அரிசிதான் கடைக்கு வருகிறது என்ற கதையைக் கேட்கவும், சொல்லவும் தேவையான பொறுமையை நகர அவசரத்திலும், தொலைக்காட்சியிலும் தொலைத்துவிட்டோமா.
நடவும் அறுவடையும் சார்ந்த வாழ்வு, மிகப் பெரியதொரு வாழ்க்கைப் பாடம். சிறுவயதில் விளையாட்டாக கவனித்து ரசித்து அனுபவித்த அந்த விவசாய வாழ்க்கை, தட்டில் (வட்டிலில்) விழும் சாதத்தை (சோற்றை) பிசையும் போதெல்லாம் சுகமாய், ஒரு பழம் கனவாய் மார்கழி முன் இரவில் படியும் பனித்துளியாய் கொஞ்சம் ஈரத்தோடு கனத்துக் கொண்டிருக்கிறது.