Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Jul 15, 2022

அவர்களுக்கான சொற்கள் கிடைக்கும்போது

 நிகழ்வு 1:

பரந்து விரிந்த உள்ளரங்கம். அமர்ந்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரம் இருக்கும் என்கிறார்கள். அவர்களுக்கான மிக முக்கியமானதொரு நிகழ்வு. நிர்வாகத்தினருடன் அரங்கிற்குள் நுழைந்து நேராக மேடைக்குச் செல்கிறோம். அரங்கின் அருகே சென்றதிலிருந்தே உணர முடிந்தது, உள்ளுக்குள் அலையடித்துக் கொண்டிருந்த பேரிரைச்சலை.
மேடையில் அனைவரும் அமர்ந்ததும், நிகழ்வு துவங்குகின்றது. பேரிரைச்சல் அடங்கியபாடில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகின்றது. வாழ்த்து நிறைவடைந்ததும் இரைச்சல் தொடர்கின்றது. கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். இரைச்சல் மட்டுப்படவில்லை. குத்துவிளக்கு ஏற்றப்படும் நிகழ்வு. ‘ஓ’ எனும் கத்தலும், விசிலும் புதிதாக முளைக்கின்றன. கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி தலைமை உரையாற்றுகிறார். இரைச்சல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. கல்லூரி இயக்குனர் வாழ்த்துரை வழங்குகின்றார். அப்போதும் இரைச்சல் தொடர்ந்தது, அடுத்தது நான்தான் பேச வேண்டும், அதுவும் ஒரு மணி நேரம் குறிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வு 2 :
கிராமப்புறத்தில் இருக்கும் கல்லூரியின் முக்கியமான நிகழ்வு. நிகழ்வு துவங்கியதில் ஏகப்பட்ட தாமதம் ஏற்பட்டிருந்தது உண்மைதான். அமர வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மிகுந்த சலசலப்போடு அமர்ந்திருந்தனர். மாணவர்கள் இடைய பேராசிரியர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அவ்வப்போது சத்தம் போடாம இருங்க என மாணவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
எனினும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டேதான் இருந்தனர். மேடையில் பேசும் எவரையும் பொருட்படுத்தும் உடல்மொழி அவர்களிடம் தென்படவேயில்லை. நிர்வாகம் சார்ந்த பொறுப்பாளர்கள் பேசி, நான் பேச அழைக்கப்படுவதற்குள் அவர்கள் இன்னும் பொறுமை இழப்பார்கள் என்பதை உணர்ந்திருந்தேன்.
*
இங்கே பகிர்ந்தது இரண்டு உதாரணங்கள் மட்டுமே. ஆனால் சந்தித்தவைகள் ஏராளம். தொடர்ந்து எழுதினால் பட்டியல் வளர்ந்துகொண்டேயிருக்கும். அது மாணவர்கள் மீது பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தும். இடையிடையே மானே தேனே என்பதுபோல் இந்தக் காலத்துப் பசங்களே அப்படித்தான், இப்படித்தான் எனப் புகார்ப்பட்டியல் வாசித்தால், மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளையும் படித்ததில் ஏற்பட்டிருக்கும் எரிச்சலுக்கு கூடுதல் தீனியாக அமையும். கூடவே, நாம் படித்த காலத்தில் கடைப்பிடித்த(!) ஒழுக்கங்களை இணைத்தால் இன்னும் முழுமையான வாசிப்பு அனுபவம் கிட்டும்.
விதவிதமான மசாலா சேர்ப்பதுபோல், இன்றைய மாணவர்களுக்கு யாரையும் மதிக்கத் தெரியவில்லை, பொறுப்பு, பொறுமை கிடையாது, எதையும் கற்றுக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடையாது என்பதையும் இணைத்துக்கொள்ளலாம். இதன் நிமித்தமாக இவர்கள் உருப்படாத மலட்டுச் சமூகமாக மாறுவார்கள் என சபித்தல் எளிது. பொதுபுத்தியில் வாசிப்பவர்களுக்கு ஒருவகையில் அது வசதியானதும்கூட.
மாணவர்களின் நடவடிக்கையை, நான் ஒருபோதும் பிரச்சனையாக பார்ப்பதில்லை. காரணம், ‘மாணவர்கள் என்றால் அப்படி - இப்படித்தான் இருப்பார்கள்’ எனும் உள்ளார்ந்த புரிதல் மற்றும் ஒப்புக்கொள்ளல்.
இம்மாதிரியான நிகழ்வுகளில், மாணவர்கள் ‘இப்படித்தான் இருப்பார்கள்’ என முடிந்தவரை மனதை தயார்படுத்திச் சென்றிருந்தாலும்கூட, சில இடங்களில் இதெல்லாம் பத்தாது என்ற அளவிலும் இருக்கின்றார்கள். அதுவும் குறிப்பாக கோவிட் காலத்திற்குப் பிறகு, ஒரு அரங்கில் மாணவர்களை எதிர்கொள்வது எளிதானது அல்ல. அதற்காக அவர்களைச் சபிப்பது, இகழ்வது, நம்பிக்கை இழப்பது மட்டுமா தீர்வு?
பல ஆண்டுகளாக மாணவர்களோடு இணைந்து பயணிப்பதில் நான் ஓரளவு கற்றுக்கொண்டது, எந்தச் சூழலாக இருந்தாலும், அவர்களை அவர்களின் இயல்போடு ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப சொல்ல வந்ததை முடிந்தவரை கடந்த முயற்சிப்பதுதான்.
பொதுவாக அரங்கிற்குள் நுழைந்ததில் இருந்து, பேச அழைக்கப்படும் கணத்திற்குள் மனதிற்குள் நிகழ்வதெல்லாம், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் தயாரிப்பு தாண்டி, அந்தச் சூழலில் அவர்களைக் கையாளும் சொற்களுக்கான கூடுதல் தயார்படுத்தல் மட்டுமே.
அவர்களுக்கான சொற்கள் கிடைக்கும்போது, அவர்கள் நம் வசம் வந்துவிடுகின்றனர். இதைவிடவா குறைகூறுதலும் சபித்தலும் சுவாரஸ்யம் தந்துவிடப் போகின்றது..
- ஈரோடு கதிர்

Nov 12, 2014

சோப்புக் குமிழி மின்னும் தருணங்கள்

அன்றைய தினத்தை ஆர்வம் மிகுந்த தினமாகவும், அசமந்தமான நாளாகவும் எது மாற்றுமென உறுதியாகத் தீர்மானித்து எதிர்பார்த்துக் காத்திருக்க முடிவதில்லை. எதுவேண்டுமானாலும் நம்மை கவிழ்த்துப் போடலாம். நிமிர்த்தியும் உட்கார வைக்கலாம்.

பிரபு வந்து ”அண்ணா” என்றபடி எட்டிப்பார்த்த போது மூன்று பேர் புடை சூழ வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

”
வா பிரபு”

”பிசியாங்ண்ணா” ஏதோ சொல்ல வந்தவராய், உடன் மூவர் இருப்பதைக் கண்ட தயக்கத்தில் தடுமாறுவது தெரிந்தது.

“பிசியெல்லாம்ல்ல… ஏ….ம்பிரபு”

“ஒன்னுமில்லைங்ண்ணா… சும்மா வந்தேன் அப்படியே எட்டிப்பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்”

என்னவோ தயக்கம் நிலவிக்கொண்டிருந்தது. சில நொடிகள் புன்னகைத்தபடி நின்றுவிட்டு “செரீங்ண்ணா.. நான் அப்றம் வர்றேன்”

என்னவோ தயக்கம் தொணித்ததால் நானும் வற்புறுத்திக் கேட்கவில்லை. வெறுமனே என்று போகிறபோக்கில் வந்த வருகையாய்த் தோன்றவில்லை. அரைநிமிட இடைவெளியில் போன் ஒலித்தது. அதே பிரபு.

“ஏம் பிரபு…”

“ஒன்னுமில்லீங்ண்ணா,,,, ஒரு சின்ன உதவிங்க… நீங்க ஃப்ரீயாய்ட்டு சொல்லுங்க.. நா முன்னால இருக்கேன்”

ஐந்து நிமிடங்கள் கழித்து பிரபுவிற்கு அழைத்தேன்.

பிரபுவை இரண்டு வருடங்களாகத் தான் நட்பு. நான் சந்தித்த மிகச்சில அதிசுவாரஸ்யம் மிகுந்த நபர்களில் பிரபுவும் ஒன்று. எங்களிருவருக்கும் குறிப்பிடும்படியான வயது வித்தியாசம் இருக்கும். ஆனாலும் அந்த வயசு வித்தியாசத்தை ஒருபோதும் உணர்ந்திட முடியா சுவாரஸ்யங்கள் கொண்ட உரையாடல்தான் நிகழும்.

“அண்ணா… ஒரு சின்ன உதவிங்ண்ணா!”

“என்ன பிரபு?”

”ஒரு வாழ்த்து ஒன்னு வேணும்ங்ணா”

“வாழ்த்தா…. என்ன விஷேசம்?”

“ஃப்ரெண்டுக்கு கல்யாணம்ங்ண்ணா…. சும்மா ஒரு நாலு வரில வாழ்த்து வேணும்”

“ஆஹா… திடீர்னு கேட்டா என்னத்த எழுதுறது”

“எனக்கு எழுத வராதுங்ளே… உங்களுக்கு தோணுறத சும்மா நாலு வரி எழுதித்தாங்க”

”யேம்ப்பா…. இப்படி திடீர்னு கேட்டா…. ஒன்னுமே தோணலயே பிரபு….”

“ம்ம்ம்”

“என்ன செய்யப்போறே…. எதும் வாழ்த்து அட்டையா… டைப் பண்ணி எதும் தரணுமா!?”

“இல்லீங்ண்ணா… ஒரு சின்ன பேப்பர்ல எழுதித் தாங்க”

“அத என்ன பண்ணப்போறே?”

“அப்படியே கொண்ட்போயி குடுத்ருவனுங்”

எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒன்றுமே தோன்றவில்லை. முன்பு ஒரு காலத்தில், இதுபோல் ஓரிரு வரிகள் எழுதித்தரச் சொல்லி யாராவது கேட்பதுண்டு. யாரென்றே தெரியாத ஒருவரை என்னவென்று வாழ்த்துவதெனக் மனதில் குழப்பம் நிலவியது. புன்னகையோடும், கொஞ்சம் தவிப்போடும் எதிரில் எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் பிரபுவை என்ன சொல்லி சமாளிப்பதெனத் தெரியாமல் தடுமாறினேன்.

“யாருக்கு கல்யாணம்?”

“ஃப்ரெண்டுக்குங்ண்ணா… கொடுமுடில.. மத்யானம் ரிசப்சனுக்கு போகனும்ங்… அப்ப நீங்க கொடுக்கிறத கொடுத்துடுவேன்”

“என்னைத் தெரிஞ்ச ஃப்ரெண்டா?”

”இல்லீங்ண்ணா… என்னோட ஃப்ரெண்ட்ங்”

அதே ட்ரேட் மார்க் சிரிப்பு


“பையனா பொண்ணா…”

“பொண்ணுங்ண்ணா”

ஒரு துண்டுக் காகிதத்தில் எதாவது வாழ்த்து எழுதிப்பார்க்கலாமே எனத் துவங்குகிறேன். முகம் மங்கலாய்த் தெரிந்த ஒரு தம்பதி வாழ்க்கையின் அற்புதமான தமது தருணத்தில் மாலையும் கழுத்துமாய் மனதிற்குள் நிற்கிறார்கள். மாலையும் கழுத்துமாய் பளீரிடும் வெளிச்சமான மேடையில் வீற்றிருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் குறித்தும், அவர்களுக்கு காத்திருக்கும் பாதையின் சுவாரஸ்யங்களும் குறித்தும், ஒரு திருமணம் தரும் கனவுகள் குறித்தும் பலவாறு மனதில் ஓடுகிறது. மனமொன்றி, கனிந்து விரல் நுனி தழுவி காகிதத்தில் சொற்கள் சேருகின்றன. மடித்து மடித்து வார்த்தைகளைக் கோர்க்கிறேன். ஆறேழு வரிகள். எனக்கே கொஞ்சம் நிறைவாக இருக்கின்றது.

“போதுமா பாரு”

”போதும்ங்ண்ணா” முகம் மலர்கிறது

“இரு… ஒரு ஏ4 சீட்ல எழுதித் தர்றேன்”




வெள்ளைத்தாள் ஒன்று எடுத்து, சிவப்பு மை பேனாவால் எழுதத் துவங்குகிறேன். காகிதத்தில் இப்படி எழுதுதல் மறந்து பல ஆண்டுகளாகின்றன. அவ்வப்போது பில் போடுவது மட்டுமே அதிகபட்ச எழுத்து. மற்றபடி எல்லாமே கணினியில் தட்டச்சுவதுதான். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு இடது கையால் எழுதிப் பழகலாமே என வெட்டியாக முயற்சி செய்து பார்த்தேன். வலது கையால் எழுதினாலே ஒவ்வொரு முறையும் ஒரு வடிவத்தில் எழுத்து வருகிறதென்ற அவலத்தில் இடது கையால் இந்த விஷப்பரிட்சை தேவையா எனச்சொல்லி சோம்பேறித்தனத்தால் அதை முற்றிலும் கை விட்டேன்.

சுமார் இருபத்தைந்து சொற்கள் இருக்கும். இடைவெளி விட்டு மடித்து மடித்து எழுதியதில் முக்கால் பக்கம் வந்தது. காகிதத்தை மடித்துக்கொடுத்தேன்.

“கீழ உம் பேரும் எழுதிருட்டுமா?”

”
இல்லீங்ண்ணா… எதுமே போடாம இப்டியே குடுத்தர்றனுங்”

மதியம் அந்த வாழ்த்து அந்தத் தம்பதிகளை எட்டியிருக்கலாம். வாழ்த்து குறித்து எதாவது சொல்லியிருக்கலாம். தம்பதிகள் மகிழ்ச்சியெய்தியிருக்கலாம் அல்லது எந்த உணர்வுமற்றுக் கடந்தும் போயிருக்கலாம். அது அவர்களின் நட்பு பொறுத்தது. அவர்கள் வாசிக்கும் விதம், சூழல் பொறுத்தது.

என்னவாக இருந்தாலென்ன …  

அசமந்தமாக இருந்த முன் மதியப்பொழுதை ஒரு நிர்பந்தத்தை உருவாக்கி, யோசிக்க வைத்து, மனதிற்குள் ஒரு காட்சியை உருவாக்க வைத்து, முகம் தெரியா யாரையோ வாழ்த்த மனம் கனியச்செய்து சுவாரஸ்யமாய் மாற்றியதை நினைக்க நினைக்க இனிக்கிறது. மாலை முழுதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருக்கிறது. மழை நனைத்த காற்று பிரியமானதாய் இதமானதாய் இருக்கிறது. இன்னும் மகிழ்ச்சியாக இரு என ஏதோ ஒன்று உந்துகிறது.

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...