Showing posts with label ஈரோடு. Show all posts
Showing posts with label ஈரோடு. Show all posts

Oct 24, 2013

அது போதும்!



மழை கொட்டித் தீர்த்த விடியல் கொள்ளை அழகு. விடிவதற்கு முன்பே தெருவிளக்கு வெளிச்சத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் தண்ணீரைத் தாண்டி காலை நடைக்காகச் செல்வதில் அலாதி சுகம். வழக்கமான நேரம்தான், வழக்கமான வீதிதான், வழக்கமான நடைதான். எனினும் அதிகாலை நடையின்போது வீதிகள் காட்டும் முகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமானது.

வீதித் திருப்பத்தில் இருக்கும் மரமல்லி மரத்தைப் பார்த்தபோது, முந்தைய சந்திப்பில் சிதறிக் கிடந்திருக்கும் பவழமல்லியைப் பார்க்கத் தவறியது நினைவுக்கு வந்தது. மல்லி எங்கு கிடந்தாலும் தன் வாசத்தின் மூலம் தான் அங்கேயிருக்கிறேன் எனச் சொல்லி விடுகிறது.

ஒவ்வொரு காலையிலும் மரமல்லி கொத்துக்கொத்தாய் உதிர்ந்து கிடக்கும். தூரத்திலிருந்து பார்க்கும்போதே, சோடியம் விளக்கு வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு கிடக்கும். பெருக்கப்படாத மரத்தடியில் தினமும் விழும் பூக்கள் குப்பையாய் தேங்கிக்கிடக்க, அதன்மேல் வெள்ளையாய் உதிர்ந்து கிடக்கும் மல்லி என்னை அள்ளிக்கொள் என்றழைக்க, ஒருபோதும் தவறுவதில்லை. என்றைக்காவது சட்டெனக் குனிந்து ஒன்றோ இரண்டோ பூ எடுத்து, நாசியருகே வைத்து மூச்சைஆழ்ந்து இழுப்பதுண்டு. வேகமாய் மூச்சை இழுக்கையில் பெரிதாகப் பூவின் வாசத்தை உணர்ந்துவிட முடிவதில்லை. இயல்பான சுவாசத்தின்போது பூ கசியவிடும் வாசனையே இயல்பாய் ஒரு சுகந்தத்தை தருகின்றது. கடக்கும் கால்களும், வாகனச் சக்கரங்களும் கருணையின்றி மலர்மேல் கடந்து போவதை பலமுறை காண்பதுண்டு. குறைந்த பட்சம், அந்த மரத்தைக் கடக்கையில் எந்தப் பூவையும் மிதித்துவிடாமல் ஒதுங்கிச் செல்வது மட்டுமே, என்னால் சாத்தியமாகிறது.




ஒன்று மிக மிகச் சொற்பமாய் மட்டுமே மரமல்லி உதிர்ந்துகிடந்தன. ஓரளவு தெளிவாயிருந்த மரத்தடியில், இரவு பெய்த மழைத் தண்ணீர் ஓடிய தாரைகள் தெரிந்தன. எத்தனை பூக்கள் என எண்ணிவிடும் அளவுக்கே கிடந்தன. மரமல்லிக்கு எதும் சீசன் இருக்குமோ, இனி உதிர்வது குறையுமோ என்ற சந்தேகம் எழுந்தது. அநேகமாய் இரவு அடித்த மழையில் பூக்கள் கொட்டி அடித்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். அதனால் இப்போது கொஞ்சம் பூக்களே உதிர்ந்திருக்கலாம் எனத் தோன்றியது.

மரத்தை அண்ணாந்து பார்த்தேன். சோடியம் விளக்கு வெளிச்சம் இலையில் பட்டு மின்னிக் கொண்டிருந்தது. அவ்வளவாய் பூக்கள் கண்ணில் படவில்லை. மரத்தைப் பிடித்து உலுக்கிப் பார்க்கலாமா எனத் தோன்றியது. உலுக்குதல் எளிதல்ல என மரத்தின் பருமன் சொன்னது. மரத்தைவிட்டு தேவையான தூரம் கடந்திருந்தேன்.

வெள்ளை ஷூ அணிந்து கதர் வேட்டி சட்டையில் திடகாத்திரமாய் வழக்கமாய்  நடக்கும் அந்தப் பெரியவர் எதிரில் வந்து கொண்டிருந்தார். எவரையும் அண்ணாந்து பார்த்துப் பேசவைக்கும் உயரம் கொண்ட அவருக்கு வயது 70 க்குமேலும், எடை 90 கிலோவிற்கு மேலும் இருக்கலாம். மார்பை நிமிர்த்தியவாறு சீரான வேகத்தில் தொய்வின்றி நடக்கும் அவரைக் காணும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நொடிப்பொழுதேனும் கொஞ்சம் விரைப்பாய் நடை போடவைக்கும்.

டவர் லைன் தாண்டும்போது பாலு எதிரில் வந்தார். நீண்ட கால நண்பர். அந்த நீள வீதியில் மட்டுமே திரும்பத் திரும்ப நடப்பவர். ஒவ்வொரு முறையும் எதிர் திசையில் மட்டுமே அவரைக் காண்பதுண்டு. அவர் என்னை ஒதுங்கியோ, நான் அவரை ஒதுங்கியோ அல்லது முன்பின் என ஒரே திசையிலோ நாங்கள் ஒருபோதும் நடந்ததில்லை. தினமும் எதிரெதிரே சந்தித்தாலும் பேசிக்கொள்வதில்லை. கொஞ்சம் தூரத்திலேயே ஒருவரை ஒருவர் கவனித்து விடுவோம். 10 அடி தூரத்தில் இருக்கையில் பெரிய புன்னகையோடு வணக்கம் சொல்லும் பாவனையில் கை உயர்த்திக் கொண்டே இருவருமே கடந்து விடுவதுண்டு.  சொற்கள் தேவைப்படாத சிநேகத் தருணங்கள் ஒருவித அழகு.

தார் சாலையில் மழைபெய்த ஈரம் மட்டுமிருந்தது. பாதளச்சாக்கடைக்கு தோண்டிய, இன்னும் தார் ஊற்றப்படாத வீதிகளில் மட்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படித் தேங்கிக்கிடந்த நீரில் பாட்டி ஒருவர் என்னவோ செய்து கொண்டிருந்தார். தெரு விளக்கு வெளிச்சம் அவர் மீது விழுந்து மொத்தமாய் கொண்டிருந்தது. செம்புலப் பெயல் நீர் தகதகதத்தது. ஒரு பெரிய கேரி பேக்கில் நீரை அள்ளிக் கொண்டிருந்தார். தண்ணீரில் மீன் பிடிக்கிறாரோ எனத் தோன்றியது. நேத்து பெய்த மழையில் எப்படி மீன் இருக்கும் என்றது புத்தி. அகலமான துண்டு அல்லது வேட்டி கொண்டு வாய்க்காலில் மீன் பிடித்த காலமும், பெரிய ஜவுக்காயிதத்தில் தண்ணீரை அள்ளி மீன் கிடைக்குமா எனத் தேடிய நாட்களும் நினைவில் வந்தது.

மலையாளிகள் இருவர் வழக்கம்போல் மலையாளத் தமிழில் உரக்கப் பேசிக்கொண்டே கடந்தார்கள். ஏன் இவர்கள் இருவரும் மலையாளத்தில் பேசிக்கொள்ளாமல் தமிழில் பேசிக்கொள்கிறார்கள் எனப் புரியவில்லை.

நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர் பைக்கில் நின்றவாறு, வாசல் கேட்டின் உள்பக்கம் நின்றிருந்த அவர் வயதொத்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். காலை 5 மணிக்கு சாவகாசமான சாயங்கால அரட்டைபோல் அமைந்த அந்தக் காட்சி ஆச்சரியமாய் இருந்தது.

ஒரு வீட்டின் முன்பிருக்கும் செடியில் காவி வேட்டிக்காரர் பூ பறித்துக்கொண்டிருந்து தெரிந்தது. சில வாரங்களுக்குமுன் ஒரு மாலைப் பொழுதில் காலனி பூங்காவில் பெருசுகள் மத்தியில் கொஞ்சம் அதிகாரத் தோரணையோடு பேசிக்கொண்டிருந்தார். புல்வெளியில் ஓடும் குழந்தைகளை அங்கிருந்தே விரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொழுதில் தினமும் எதாவது ஒரு வீட்டு செடிகளிலிருந்து சில பூக்களைப் பறித்து தான் வைத்திருக்கும் கேரி பேக்கில் சேகரித்துக் கொண்டேயிருப்பார்.

வீதிகளைக் கடந்து அந்த முக்கிய சாலையில் இணையும்பொழுது, இருவர் சரசரவென என்னை முந்திக்கொண்டு நடந்தனர். அதில் ஒருவர் எதாவது சிக்னலில் தென்படும் போக்குவரத்துக் காவலர். ஏட்டு மட்டத்தில் இருக்கவேண்டும். இன்னும் ஏட்டாக இருப்பாரா அல்லது எஸ்.எஸ்.ஐ நிலைக்கு உயர்ந்திருப்பாரா என நினைக்கையிலேயே அவர்களுக்கும் எனக்குமிடையேயிருந்த இடைவெளி வளர்கிறது. 



’எப்படி அவர்கள் மட்டும் இத்தனை வேகமாய் நடக்க முடிகிறது, நம்மால் முடியாதா?’ என நானும் நடையை எட்டிப்போடுகிறேன். வேகம் கூடியும் இடைவெளி சுருங்கவேயில்லை. வியர்வை புதிதாய்க் கிளைவிடுகிறது. மூக்கில் சுவாசித்தது போதாமல் வாயாலும் சுவாசிக்க வேண்டியிருப்பதை உணர்கிறேன். மூச்சுக்காற்றில் அணிந்திருந்த கண்ணாடியில் ஆவி படர்வது தெரிகிறது. புழக்கப்பட்ட வார்த்தைகளில் சொல்லவேண்டும் நுரை தள்ளிக்கொண்டிருந்த நிலையை உணரத் துவங்கினேன். ’இது தேவையா!?’யென என்னையே கேட்டேன். ”தேவையில்லை”யென என்னிடமே சொன்னேன். இயல்புக்கு வந்தேன். ஆனாலும் இப்போது வேகம் கூடியிருந்தது. வலது பக்க வீதியில் நுழைகிறேன்

முதல் வீடு காவல்துறை கண்காணிப்பாளர் வீடு. கேட் ஓரம் சென்ட்ரி நின்று கொண்டிருக்கிறார். நிற்கும் துப்பாக்கியை ஒரு கையில் பிடித்தவாறு, மறு கையில் மலரொன்றை முகத்தருகே சுழற்றிக்கொண்டிருக்கிறார். அது நந்தியாவட்டை பூவாகயிருக்கலாம். எப்போதோ நந்தியா வட்டை பூவைப் பறித்து அப்பா கண் இமைகளில் அமுக்கி, இது கண்ணுக்கு குளிர்ச்சி எனச்சொன்னது நினைவுக்கு வருகிறது. கையில் கேமரா இருந்திருக்கலாம் எனத்தோன்றியது. மாவட்ட ஆட்சியர் வீட்டு வாசலோரம் ஒருவர் உதிர்ந்துகிடந்த பூக்களைக் கூட்டி சாக்கடையில் தள்ளிக்கொண்டிருக்கிறார். ஆட்சியரின் கேம்ப் ஆபீஸ் வருகிறது. கடந்த ஆண்டு நண்பர் ஆல்பர்ட்டோடு ஆட்சியரை இந்தக் கேம்ப் ஆபிஸில் சந்தித்துப்பேசியது நினைவுக்கு வருகிறது. வளாகத்திற்குள் அவர் வாக்கிங் போய்க்கொண்டிருப்பாரா என எட்டிப்பார்க்கிறேன். உள்ளே அவரின் வெள்ளை ஸ்கார்பியோ நடுச்சாம மழை நீர்த்துளிகளோடு மின்னுகிறது. காரின் மேற்பகுதி முழுதும் மேலேயிருந்து உதிர்ந்திருக்கும் மரமல்லிப் பூக்களால் போர்த்தப்பட்டிருக்கிறது. ’வெள்ளை பூக்கள் போர்த்திய வெள்ளைக்கார்’ என்றொரு வரி மனதில் முளைக்கிறது.

இரண்டாம் திருப்பத்தில் மீண்டும் ஒரு மரமல்லி மரம். ஓரமாய் கொஞ்சம் இடம்விட்டு தெரு முழுக்க பூக்கள் விழுந்து கிடக்கின்றன.  இங்கு மட்டும் எப்படி இத்தனை பூக்களென நினைத்துக்கொண்டே கடக்கிறேன்.

காலை நடை துவங்கிய நாள் தொட்டே முந்தைய நாள் பயணப்பட்ட தடத்தில் முடிந்தவரை செல்லக்கூடாது என்பது தீர்மானம். திருப்பங்களில் மனம் எங்கே திரும்ப பணிக்கிறதோ அதன் வழியில் நீள்வதே அன்றைய பாதை. கிட்டத்தட்ட எல்லா நாளும் ஆறுமணிக்குள் வீடு திரும்பி ஏகாந்தமாய் முதல் மாடியில் இருக்கும் வீட்டு வாசலில் வியர்வையோடு அமர்ந்து வீசும் தென்றலில் உலரும் போதையின் மீது பெருங்காதல்.

வீதியோர அரளிச்செடியில் ஒரு பெண் பூ பறித்துக் கொண்டிருக்கிறார். இருளும் விளக்கொளியும் கலந்த ஒய்யார வெளிச்சத்தினடியில் குழந்தையொன்று நின்று கொண்டிருக்கிறது. ’இவ்வளவு சீக்கிரத்தில் குழந்தை முழிச்சிக்குதே’ ஆச்சரியம் சூழ்கிறது. வீட்டில் மகள் இந்த நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள். பள்ளி நாட்களில் அவளை எழுப்ப குறைந்தபட்சம் அரைமணி நேரப் போராட்டம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சின்னப்பிஞ்சு இத்தனை காலையில் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறதே என நினைத்துக்கொண்டே, குழந்தையைப் பார்த்து பெரிதாய் புன்னகைக்கிறேன். என்னைப் பார்த்து தலையை ஆட்டியவாறே இதுவரை கண்ட அனைத்துப் பூக்களையும் ஒன்றாய்க் கோர்த்த அளவில் புன்னகையொன்றை வீசுகிறது. மெல்லிய மின்சாரம் பாய்ந்ததுபோல் உற்சாகம் தோன்றுகிறது. வேகத்தைக் குறைத்து ’வா’ என சாடைகாட்டியபடி கடக்கிறேன். ’மாட்டேன்’ என இடவலமாய் தலையசைத்துச் சிரிக்கிறது. சில அடிகள் கடந்திருப்பேன், குழந்தை பின்னால் ஓடிவருகிறது என்ற உணர்வு தோன்ற திரும்பிப் பார்க்கிறேன். பின் தொடர்ந்து ஓடிவந்துகொண்டிருந்தது. நின்று ’வா’வென கை நீட்டுகிறேன். வந்த வேகத்தில் என் கையில் தட்டிவிட்டு தன் அம்மாவை நோக்கி ஓடுகிறது. அந்த பெண் முகத்தை அப்போதுதான் பார்க்கிறேன் முகமெங்கும் மலர்ச்சியாய் தன்னை நோக்கி ஓடிவரும் பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அந்த மழலை கொடுத்த புன்னகைப் பரிசும், உற்சாகமும் அந்த தினத்திற்கு ரொம்பவே போதுமெனத் தோன்றுகிறது.


-

Aug 2, 2012

வாருங்கள் வாசிக்கலாம்! - ஆனந்த(என்) விகடன் கட்டுரை

வாழ்க்கையில் கிடைத்த அற்புதமான வரங்களில் வாசிப்புப் பழக்கமும் ஒன்று. நல்ல வாசிப்பு என்பது சுவாசம் போன்றது. நல்ல வாசிப்பு ஒருவனை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கும். நமக்குள் அழுந்திக்கிடக்கும் நம்மை, நாம் அறியாமலே மீட்டு எடுக்கும் வல்லமை வாசிப்புக்கு உண்டு. 


ஈரோடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கொங்குமண்டல மக்களின் வாசிப்புப் பசி தீர்க்கவந்த அட்சயப் பாத்திரம் “ஈரோடு புத்தகத் திருவிழா”. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண மண்டபத்தில் பல சிரமங்களுக்கு இடையே சிறிய அளவில் துவக்கப்பட்ட இந்த விழா வருடந்தோறும் வளர்ந்து, இன்று ஈரோட்டின் அடையாளங்களில் ஒன்றாகி இருக்கிறது.

விவசாயமும், நெசவும் ஆக்கிரமித்துக்கிடந்த கொங்கு மண்ணின் மக்கள் மனதில் புத்தகத்தை விதைத்து, வாசிப்புப் பழக்கத்தை நெசவு செய்த பெருமை மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பின் தலைவர் ஸ்டாலின் குணசேகரனையே சாரும்.

இதோ இந்த ஆண்டும் மக்கள் சிந்தனைப் பேரவையால் நடத்தப்படும் “ஈரோடு புத்தகத்திருவிழா” இந்த வருடம் ஆகஸ்ட் 3 முதல் 14 வரை ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடக்கிறது இந்த விழா.

விழாவின் ஹைலைட்ஸ் இதோ….
  • அனுமதி இலவசம்.
  • புத்தக அரங்குகளைத் தவிர்த்து வேறு அரங்குகளை அனுமதிக்காதது.
  • 250 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு பாராட்டிச் சான்றிதழ் வழங்குவது.
  • 10,000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குபவர்களுக்கு அலமாரி இலவசம்.
  • குழந்தைகளுக்கு உண்டியல் கொடுத்து, உண்டியலில் சேரும் காசை புத்தகத் திருவிழாவில் உடைத்து அதில் இருக்கும் தொகைக்கு புத்தகம் வாங்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் உண்டு.
  • தினமும் மாலையில் அரங்கத்தில் உள்ள மேடையில் பலதரப்பட்ட ஆளுமைகளின் சிறப்பு உரை உண்டு.

ஒவ்வொரு தீக்குச்சியின் முனையில் இருக்கும் சிறு மருந்துக்குள் பொதிந்து கிடக்கும் நெருப்பின் ஆற்றலும் வலிமையும், அதைப் பயன்படுத்தாதவரை புரியாது. ஒரு புத்தகத்திற்குள் பொதிந்து கிடக்கும் அறிவையும், உணர்வையும் வாசித்தால் மட்டும்தானே புரியும். வாருங்கள் வாசிக்கலாம்.

-0-

நன்றி : ஆனந்த விகடன்

May 9, 2012

பயணச் சலனங்கள்

ஈரோட்டிலிருந்து எப்போது ரயிலுக்கு கிளம்பினாலும் ஒரு பெரிய அஜாக்கிரதை மனதிற்குள்ளே இருப்பது வழக்கமாகிவிட்டது. வாகனத்தில் கிளம்பினால் 3 நிமிடங்கள், நடந்து சென்றால் 10 நிமிடங்கள் தொலைவில் ரயில் நிலையம் என்பதால், எப்போதுமே வேலையே இல்லாவிடினும் கடைசி நிமிடங்களில் கிளம்பி, சென்றடையும்போது கொஞ்சம் ’திக் திக்’ எனச் செல்வது கிட்டத்தட்ட ஒரு வியாதி போல் மனதிற்குள் படிந்துவிட்டது.



அன்றைக்கு, இரவு ஒரு மணிக்கு ரயில். மிகத் சாவகாசமாக இணையத்தில் பொழுதை ஓட்டிவிட்டு, புறப்படும் முன் ஃபேஸ்புக்கில் ”கடைசி நிமிசத்துல 'திக் திக்'னு ரயிலைப் பிடிக்கிறவங்களுக்காகவேதான் ரயிலு அப்பப்போ லேட்டா வருது போல!” என்றொரு நிலைச்செய்தியை போட்டுவிட்டு, பொடிநடையாக நடக்கத் துவங்கினேன்.

மூன்றாவது நடைமேடையில் ரயில் இருப்பதாக அறிவிப்பு தெரிவித்தது. ரயில் நிலைய படியேறும்போது மணி பார்த்தேன் 12.57. 1 மணி வண்டிக்கு எப்படி ’கிண்’னுனு நிக்கிறோம்ல என எனக்கு நானே மதப்பாய் நினைத்தபடி வண்டியை நெருங்க, மனதுக்குள் ஒரு மின்னல் அடித்தது. பயணச்சீட்டு எந்தப் பையிலும் இல்லையென்று. ஒருவிநாடி குப்பென வியர்த்தது. பரபரப்பாய் உடையில் இருந்த 5 பைகளிலும், உடன் இருந்த பையின் பக்க உறைகளிலும் தேடத்தேட தெளிவானேன் பயணச்சீட்டு இல்லவே இல்லையென்று. நேரத்தைப் பார்த்தேன் 1 மணி.

பயணத்தை ரத்து செய்துவிட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தேன், இருந்தாலும் முயற்சிப்போம் என்று அருகில் தென்பட்ட பயணச்சீட்டு பரிசோதகரிடம்

“சார், தட்கால் டிக்கெட், ஈ-டிக்கெட், ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வராம விட்டுட்டேன், என்ன சார் பண்ணனும்” என்று கேட்டபோதே… கடைசியாக ஃபேஸ்புக்கில் போட்ட நிலைச்செய்தி வந்து மனதுக்குள் பல்லிளித்தது.

“எந்தக் கோச்”

“அது தெரிலையேங் சார், பெர்த் நெம்பர் 8, தட்கால்ல தான் போட்டேன், ஒரிஜினல் ஐடி ப்ரூஃப் வேணும்னா இருக்கு” புதிய அனுபவம், என் குரலில் நம்பிக்கை கரைந்துகொண்டிருந்தது

“கோச் சொல்லுங்க, ஒரிஜினல் ப்ரூப் இருந்தா, ஃப்ட்டீ ரூபிஸ் பே பண்ணிட்டா ட்ராவல் பண்ணிக்கலாம்” என்றார்

பதிவு பெட்டிகளில் இடம் கிடைக்குமா என கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

கிளம்பும்முன் ரயில் வருகை நிலவரம் குறித்து தேடியதில் வரவேண்டிய நேரத்திற்கு 3 நிமிடங்கள் முன்பாக வந்து 23 நிமிடங்கள் தாமதமாகக் கிளம்புவதாகப் போட்டிருந்தது ஒரேயொரு சிறிய ஆறுதலாக இருந்தது.

”எஸ்-2னு நினைக்கிறேன் சார்”

“இது எஸ்-4, எஸ் 2க்கு வேற டீடீ, அங்கே கேட்டுப்பாருங்க”

“சார் எஸ்-4 ல, எட்டாம் நெம்பரானு பாருங்க”

தேடினார், வேறு பெயர் இருந்தது.

பயணச்சீட்டு பதிவுசெய்தவுடன், குறுந்தகவல் வந்தது, மின் மடல் வந்தது எல்லாம் நினைவிற்கு வந்தது. பிரதியெடுத்துவிட்ட தைரியத்தில் எல்லாவற்றையும் அழித்ததும் கடுப்பாய் நினைவிற்கு வந்தது.
அலைபேசியில் இணையத்தை உசுப்பினேன். மின்மடல் உள்பெட்டியில் மடல் ஏதுமில்லை. அழித்த மடல்களைத் திறக்க முயற்சித்தேன் ”போடா வெண்ணை”யென அது திறப்பதற்கான அறிகுறியையே காட்டவில்லை.

உடனே வெளியே ஓடிப்போய், ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்று, கணினியை இயக்கி, பிரதியெடுத்து… நினைக்கும் போதே ”அது வேலைக்கு ஆவாது” எனத் தோன்றியது.

S3, S2, S1 என வரிசையாகச் சென்றேன். கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தன. பரிசோதகர் இருப்பதற்கான சுவடே தெரியவில்லை. எதிலுமே கதவோரம் ஓட்டப்பட்டிருக்கும் பெயர் பட்டியலையும் காணோம்.

ஆபத்பாந்தவன், எங்கள் ஆசான் பாலா அண்ணன் நினைவுக்கு வந்தார். அலைபேசியில் அழைத்தேன். 

”அண்ணா, தட்கால் டிக்கெட், டிக்கெட்ட விட்டுட்டு வந்துட்டேன், என்ன பண்றது”

”டிக்கெட் இல்லனா சிரமமுங்ளே, டீடீ ஒத்துக்கிட்டா ஒன்னும் பிரச்சனையில்ல”

“அது ஓகேண்ணா, ஆனா கோச் எதுனும் தெரியலையே”

“எஸ்எம்எஸ் வந்திருக்குமே அதைக் காட்டுங்க போறும்”

“அதையும் அழிச்சுத் தொலைச்சுட்டேண்ணா”

நிச்சயமாக கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். ஆனால் எனக்குத்தான் காதில் விழவில்லை.

“அண்ணா ஒன்னு பண்றீங்களா, என்னோட IRCTC அக்கவுண்ட ஓப்பன் பண்ணுங்க, அதில இருக்கும் பார்த்துச் சொல்றீங்ளா?”

“ம்ம்ம்… யூசர் நேம், பாஸ்வேடு சொல்லுங்க”

சொன்னேன்

“இருங்க, ஓப்பன் ஆகலையே”

இணையப்பக்கம் திறக்க வேண்டுமேயென்று ’இல்லையெனக் கூறும் கடவுளைக்கூட வேண்டத்தோன்றியது’

“ம்ம்ம்ம்…. ஓப்பன் ஆயிடுச்சு, திரும்பவும் பாஸ்வேடு கேக்குது, சொல்லுங்க’

சொன்னேன்

பரபரவென பெட்டி, PNR எண் எல்லாம் வாசித்தார்

பேனாவை எடுத்து உள்ளங்கையில் பெரிதாக குறித்துக்கொண்டேன். உடனே குறுந்தகவலாகவும் அனுப்பிவைத்தார்

படபடப்பெல்லாம் நீங்கி, எப்படியோ சிக்கலைத் தீர்த்துட்டோம்ல என்ற மதப்பு வந்து தொலைக்கத்தான் செய்தது.

S4ல் நின்றிருந்த அந்த பரிசோதகரையே அணுகி “சார் எஸ்-5 டீடீ எங்கேயிருக்காரு”

”அதுக்கும் நான்தான்” என்றவாறு பட்டியலைப் புரட்டினார்

“எட்டாம் நெம்பர் பர்த் சார்”

”ம்ம்ம்ம்.. ஒரிஜினல் ஐடி குடுங்க”

கொடுத்தேன்

”சரி போங்க” என என் உறுப்பினர் உரிமைத்தை திருப்பியளித்தார்

மீண்டும் ஃபேஸ்புக்கில் போட்ட நிலைச்செய்தி நினைவுக்கு வந்தது. அலைபேசியை இயக்கி, அந்த நிலைச்செய்தியைப் பார்த்தேன், சில Like-களும், மறுமொழிகளும் விழுந்திருந்தன. ஏதோ இனம்புரியா வெட்கம் கவ்வியது.

”ம்ம்ம்ம்… இந்தப் பொழப்புக்கு…” என ஏதோ மனதில் ஓடியது.

நடந்த கூத்தை எப்படி எழுத்தாக்கலாம் என மனசு அசைபோடத்துவங்கியது.


-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-


மதிய வெய்யிலின் உக்கிரம் அந்த ரயில் பெட்டிக்குள்ளும் புழுக்கமாய் தூறிக் கொண்டேயிருந்தது. எல்லா இருக்கைகளும் பிதுங்கி வழிந்தன. நான் 30ம் எண் இருக்கையில் சன்னலோரம். 32ல் மட்டும் அவ்வப்போது மாறிமாறி அமர்ந்துகொண்டேயிருந்தனர்.

திருச்சியிலிருந்து கிளம்புகையில், 31ம் எண் இருக்கையைச் சுட்டி ஒருவர் வந்து கேட்டார்

“சார் ஆள் வருதா”

மெல்ல புன்னகைத்தவாறு இடவலமாய் தலையாட்டினேன். தன்னை வாகாக சொருகிக்கொண்டார். அதுவரை இருந்த வசதிகள் சட்டெனப் பறிக்கப்பட்டதுபோல் தோன்றியது.

ரயில் நகரத் துவங்க, கையிலிருந்த நிழற்படக்கருவியால் சன்னல் வழியே காட்சிகளைச் சுட்டுக்கொண்டிருந்தேன். வண்டி வேகம் பிடிக்க, நேராக நிமிர்ந்து அமர்ந்தவாறு வலதுபக்கம் பார்த்தேன். முன் இருக்கையில் இணைக்கப்பட்ட பலகைமேல் வைத்தவாறு குமுதம் ரிப்போர்ட்டர் படித்துக்கொண்டிருந்தார்.

அவர் பக்கத்தைப் புரட்ட “ஆன்லைன் ஆப்பு” பக்கத்தில் நித்தியானாந்தா பல்லிளித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அட இன்னைக்கு வெள்ளிக்கிழமையா என நாள் நினைவுக்கு வந்தது. நான் எழுதிய கீச்சு (ட்வீட்) எதும் வந்திருக்கிறதா என்று ஓரக்கண்ணால், கொஞ்சம் பார்வையக் குவித்துப் பார்த்தேன்.



ஈரோடு கதிர் என்ற பெயர் ஓரிடத்திலும், கதிர் என்ற பெயர் இரண்டு இடத்திலும் தென்பட்டது. இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

அவர் அடுத்த பக்கத்திற்கு திருப்ப முயல, நான் அமைதியாகவே இருந்திருக்கலாம். ஆனால் இருக்கவில்லை

“சார் அந்த பக்கத்தக் கொஞ்சம் குடுங்க, ஒரு போட்டோ எடுத்துக்குறேன்” என்றேன்

அதை அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பேயில்லை

கொஞ்சம் திடுக்கிடலோடு “ஏன்.. எதுக்கு எடுக்றீங்க”

“இல்ல சும்மாதாங்க, அந்தப் பக்கம் மட்டும் ஒரு ஸ்னேப் எடுத்துக்கிறேன்” நிழற்படக்கருவியைக் கைக்கு கொண்டுவந்தேன்

“அதுல என்ன இருக்கு, ஏன் எடுக்னும்ங்றீங்க”

பந்தாவா, தன்னடக்கமா, கர்வமா, கூச்சமா என்றெல்லாம் தெரியவில்லை, ஆனாலும் ஏதோ ஒரு உணர்வு முகத்திலாட, ”அந்த மூனு ட்விட்டும் என்னோடதுங்க” என்றேன்

இன்னும் கொஞ்சம் அவர் அதிர்ச்சியானதுபோல் தெரிந்தது

“எந்த மூனுங்க, எது சொல்றீங்க” என்றார்

ஈரோடு கதிர் என்ற பெயரோடு இருந்ததைச் சுட்டிக்காட்டினேன்

”நீங்கதான் ஈரோடு கதிரா!?” என்றார்

முகத்தில் பல்பு எரிய, மேலும் கீழும் தலையாட்டினேன்

“பொய் சொல்லாதீங்க, ஏற்கனவே ஈரோடு கதிர்னு இதுல வந்ததப் படிச்சிருக்கேன்”

எரிந்த பல்பு பொசுக்கென புகைந்து போக, உணர்வுகள் நீர்த்த வெளுத்த முகத்தை, ஏதுமில்லாததுபோல் காட்டிக்கொண்டே தலையசைத்தேன்

”கீழ கதிர்னு இருக்கிறதும் நீங்கதானா?”

தலையசைத்தேன்

“நீங்க, எந்த ஊரூ ஈரோடா!?”

ஆமெனத் தலையசைத்தேன்.

”பத்திரிக்கைல வேல பாக்குறீங்ளா”

இல்லையென்பதாய் தலையசைத்தேன்

”யோவ் வாயத்தெறந்து பேசுய்யா” என நிச்சயம் மனதில் நினைத்திருப்பார்

”நிஜமாவே நீங்க எழுதினதா இது?” என்றவாறு சந்தேகமாக புத்தகத்தை என் பக்கம் தள்ளினார்

பக்கத்தை படமாகச் சுட்டுக் கொண்டு, புத்தகத்தை அவர் பக்கம் நகர்த்தினேன்.

”இந்தமாதிரி நீங்க எழுதி அனுப்புவீங்ளா?” என்றார்

”இல்லைங்க, அவங்களா எடுத்துப் போட்டுக்குவாங்க” என்றேன்

இன்னும் சந்தேக நிழல் அவர் முகத்தில் படிந்திருந்தது

அலைபேசியை இயக்கி twitter பக்கத்தைச் சொடுக்கி, ”வீரபாகு – கணபதி அய்யர் பேக்கரி” கீச்சு எப்போது வந்ததென்று தேடினேன். ஒருவழியாகச் சிக்கியது. அலைபேசியை அவர் பக்கம் காண்பித்தவாறு

“நான் இணையத்தில இப்படி எழுதுறதை, அவங்க எடுத்து வெளியிடுவாங்க” என்றேன்

அலைபேசியை வாங்கிப் படித்துவிட்டு, அதிலிருக்கும் பெயரையும் முனுமுனுத்துவிட்டு, கொஞ்சம் வெட்கத்தில் வழிந்தவாறு திருப்பிக்கொடுத்தார்.

பொசுங்கிய பல்பு என் முகத்தில் பளிச்சென எரிவது போலவும், அவர் முகத்தில் இருள் கவ்வுவது போலவும் ஏதோ தோன்றியது.

மெல்ல ஒருமுறை எழுந்து அமர்ந்தார், சில அங்குலம் இடைவெளி கிடைத்தது போன்று ஒரு மாய நினைப்புத் தோன்றியது.

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...