இப்பவும் காக்கா கத்துதா?

உதிர்ந்து கொண்டே இருக்கிறது, உறவுகளுக்கிடையே பூசப்பட்டிருந்த பாச வர்ணம். அது ஒரு காலம், மோட்டார் ரூம் மேல் போடப்பட்டிருக்கும் டியூட் லைட் பைப் மேல் அவ்வப்போது அமரும் காகத்தில் ஏதோ ஒன்று கத்தினால் போதும், ”காக்கா கத்தியிருச்சு, ஒறம்பரை வருமாட்ருக்குதே” என யாராவது சொல்வது, பெரும்பாலும் நடந்தேறியிருக்கிறது. காகம் கரைந்து உறவினர் வரும் நாட்கள், காகத்தின் ஒரு வெற்றியாய் திரும்பத் திரும்பப் பேசப்படும். அப்படி காகம் கரைந்தும் உறவினர் எவரும் வராதது தோல்வியடைந்த நாட்களாகவே தோன்றும். காக்கைக்கு ஏற்பட்ட தோல்வி ஆச்சரியமாய் காக்கைக்கு ஒரு போதும் சோர்வைத் தந்துவிடுவதில்லை.

தொலைபேசி என்ற ஒரு கருமத்தை கண்டிராத நாட்கள் அவை. யார் எப்போது வருவார்களெனத் தெரியாத சுவாரசியம் நிறைந்த நாட்கள். காக்கை கரைந்த நாட்களில், கண்ணி வாய்க்கால் நிறுத்தத்திலிருந்து நீளும் தோட்டத்து வரப்புகளை அடிக்கடி கண்கள் சுகித்துக் கொண்டிருக்கும். காக்கைகள் வெற்றி பெறும் தினங்களில் வயல்வெளிகளில் இருக்கும் அம்மாவோ பாட்டியோ, ”அதா பாரு வர்றாங்க” எனும் குரலையொட்டி கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் உருவத்தை வைத்து வருவது ”இவுங்க” “இல்ல அவுங்க” என ஒரு வித பந்தய மனநிலை கோலோச்சும்.

பக்கத்துத் தோட்டத்து எல்லையோரம் இருக்கும் பள்ளத்து ஓரம் வரை ஓடிச்சென்று அழைத்து வர ஓடுவதில் போட்டியும் நிகழும். ஓடிச் சென்று பார்க்க, அவர்கள் வேறெங்கோ செல்பவர்களாய், உறவினர்களாய் இல்லாமல் போகும் கொடுமையும் நடக்கும். அந்த நேரத்தில் துளிர்க்கும் இயலாமை, கோபம், எரிச்சலை அப்படியே பள்ளத்தில் கரைத்து கருமாதி செய்துவிட்டுத்தான் வரவேண்டும்.

உறவினர்கள் வருகையில் குதூகலமூட்டுபவை அவர்கள் வாங்கிவரும் பலகாரமும் பன்னும், விதவிதமான தொனிகளில் இடைவிடாது விழும் அவர்கள் வீட்டுக் கதைகளும். வந்த எவரும் வந்த வேகத்தில் திரும்பியதாக நினைவில்லை. வந்த உறவு ஊருக்குத் திரும்பும் போது, கைகளில் திணிக்கப்படும் நாணயங்களில் உண்டியல்கள் அவ்வப்போது பசியாறும்.

கால ஓட்டத்தில் மோட்டார் சைக்கிள் பரவலான பிறகு, கண்ணி வாய்க்கால் பக்கம் இருந்த கண்கள், தெற்குப்புறமாய் இருக்கும் வண்டிப்பாதையில் பதிய ஆரம்பித்ததோடு காதுகளையும் தீட்டி காத்திருக்க வைத்தது. எப்போதாவது எழும்பும் வண்டியின் ”டுபு டுபு” சத்தத்திற்கேற்ப மனசு தடதடக்க ஆரம்பிக்கும். வண்டியில் வரும் உறவுக்காரர்களின் வருகையும் கூட எப்படியோ காகம் சொன்ன சோசியத்தின் பலனாகவே பலமுறை இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திற்கு சற்று முன்னர் உள்ளடங்கியிருந்த தோட்டத்திற்கும் தொலைபேசி இணைப்பு வந்ததன் தொடர்ச்சியாய், உறவினர் வருகையின் மேலிருந்த சுவாரசியமும் தொலை தூரத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டது. 

விஞ்ஞானம் எல்லாவற்றையும் தந்தது, அதையொட்டிய தேவைப் பிசாசு எல்லாவற்றையும் கலைத்து, பிரித்துப் போட்டது. வெட்டி விட்ட நொங்குக் குலை சிதறியோடுவது போல் குடும்பமும் திசைக்கொருவராய். ஏதோ ஒரு சமாதானம் எல்லாவற்றையும் அனுசரித்துக் கொண்டு பிரிந்து கிடக்க அனுமதிக்கிறது. ஒன்றா இரண்டா, கிட்டத்தட்ட உறவினர்களின் எல்லா வீடுகளிலும் இது போலவே எப்படியோ நடந்தது.

விருந்துகளுக்கு நேரில் போய் அழைக்கும் சாக்கில், உறவினர்கள் வீடுகளுக்கு அவசரகதியாய் ஒரு முறை சுற்றி வரும் முறையும் ”இனிமே நாங்களும் போன் போட்டு சொல்லிர்றோம், நீங்களும் போன் போட்டுச் சொல்லீருங்க, வந்து போயிக்கலாம்” என்ற ஒற்றைச் சமரசத்தில் குத்துயிரும் குலையுயிருமாய்.

காலம் கடந்த தலைமுறை உள்ளடங்கிய அதே கிராமத்தில், நடுத்தர வயதினர் அருகிலிருக்கும் சிறு நகரத்தில், இளம் தலைமுறையினர் பெரு நகரங்களில் என குடும்பமே உறவினர்களாய் சிதைந்து கிடக்கும் நவீன யுகத்தில், இனி குடும்பத்தை ஒன்றிணைக்கவே கத்திக் கத்தி ஓய்ந்து போக வேண்டியிருக்கும் காக்கை கூட்டங்கள்.

அவ்வப்போது உறவினன் போல் போகும் நான், ஏனோ இந்த முறை கவனித்தேன், அழகாய் சுத்தமாய் இருக்கிறது அதே இடத்தில் இடித்துக் கட்டப்பட்ட மோட்டார் ரூம், முன்பு போலவே டியூப் லைட் பைப்பும் இருக்கிறது. ”இப்பவும் காக்கா கத்துதா?” என்று நாக்கின் நுனி வரை வந்த கேள்வியை அப்படியே விழுங்கினேன்.

தோற்கடிப்பது மனிதர்கள்தான் எனத் தெரியாமல் தோற்றுப் போகும் காக்கைகள் பாவம் தானே!!??

-0-

என்னிடம் மிச்சமிருப்பது அன்பு தோய்த்த ஒற்றை நன்றி மட்டுமே

வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்கள் குழும உறுப்பினர்கள் மனதிற்குள் ஏற்படுத்திய உணர்வு இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தைக் கிளப்பியது. 

சங்கமம் 2010 நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்த முடிவு செய்த போது, சென்ற ஆண்டிலிருந்து வித்தியாசப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வித்தியாசமான உணவு, பெரிய அரங்கு, வந்து போக வாகனம், பதிவர்கள் அல்லாத சிறப்பு விருந்தினர்கள், காலை ஆரம்பித்து மாலை முடிப்பது என திட்டம் தீட்டியதில் ஒன்று புரிந்தது. சென்ற ஆண்டு செய்த செலவை விட நிச்சயம் மூன்று மடங்கு ஆகும் என்று. அதே நேரம் குழும உறுப்பினர்கள் சிலர் பெருந்தொகையளித்து உற்சாகப்படுத்தியதில், சிறப்பான விருந்து அதுவும் சமையல்காரர் வைத்து விருந்து தயாரிப்பது என முடிவானது. மறுபக்கம் நிகழ்ச்சி வடிவமைப்பு மற்றும் அதற்கான ஏற்புடைய ஆட்களை தேர்ந்தெடுத்து அழைப்பது என குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் பொறுப்பைத் திரும்ப திரும்ப நினைவூட்ட வேகமாக வேலைகள் நடக்க, ஒருவழியாய் 26.12.2010 இனிதாய் விடிந்தது. முதல் நாளே மதுரைப் பதிவர்கள் கும்க்கி, கா.பா, ஸ்ரீ, சிங்கைப் பதிவர் பிரபாகர் வருகை தர, சனிக்கிழமை இரவு உணவுடன் அரங்கில் நிகழ்ச்சிகள் தொடங்க ஆரம்பித்தது.


காலை 11 மணிக்கு மிகச் சரியாக ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் தவிர்க்க இயலாத காரணங்களால் சிறப்பு விருந்தினர்கள் சற்றே தாமதமாக வர சரியாக 40 நிமிடங்கள் கழித்து 11.40க்கு நிகழ்ச்சி தொடங்கியது.

பதிவர் ஆரூரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க, பதிவர் சிங்கை பிரபாகர் தமிழ் வணக்கம் வாசித்தார். அண்ணன் தாமோதர் சந்துரு வரவேற்புரை நிகழ்த்த, இரா.வசந்த்குமார் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். “சிறுகதைகளை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் பெருமாள் முருகன் பல எடுத்துக் காட்டுகளுடன் மிகச் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
சங்கவி எழுத்தாளர் பாமரன் அவர்களை அறிமுகப்படுத்த, “உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள்” என்ற தலைப்பில் தான் இணையத்திற்கு வந்ததுமுதல் சுவாரசியமான பல விசயங்களைப் பகிர்ந்து இணையத்தை எவ்வளவு தூரம் பயனுள்ளதாக உபயோகிக்க முடியும் என்பதை நகைச்சுவையோடு பகிர்ந்தார்.

அடுத்து கார்த்திகைப் பாண்டியன் தமிழ்ஸ்டுடியோ.காம் அருண் அவர்களை அறிமுகப்படுத்த, “குறும்படம் எடுக்கலாம் வாங்க” என்ற தலைப்பில், குறும்படம் எடுக்க விருப்பமுள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், அதற்கான பயிற்சி என தங்கள் அமைப்பு மூலம் இலவசமாக தருவது குறித்துப் பேசினார்.

பதிவர் ஸ்ரீதர் வழக்குரைஞர் சிதம்பரன்.கி அவர்களை அறிமுகப்படுத்த, “உலகத்திரைப்படங்கள்” குறித்த பார்வையை சிதம்பரன்.கி.அவர்கள் எளிமையாக எடுத்து வைத்தார்.


மதிய உணவு இடைவேளைக்குக் கலையும் முன்பாக, பதிவர்களுக்கிடையேயான அறிமுகத்தை நடத்தி உணவுக்கு அனுப்பப்பட்டனர்.

மிக நேர்த்தியான சைவ, அசைவ உணவு பரிமாறப்பட்டது. கொங்கு மண்டலத்திற்கே உரிய வகையிலான அசைவ வகைகளாக கோழிக்கறி, ஆட்டுக்கறி, தலை-குடல்க் கறி, தண்ணிக்குழம்பு என வித்தியாசமாக அளிக்கப்பட்டதை அனைவரும் விரும்பி உண்டனர். இதுபோல் உணவிடலாம் என ஆலோசனை கூறிய பதிவர் நந்து, அதற்கான அத்தனை பணிகளையும் முன்னின்று செய்த அண்ணன் தாமோதர் சந்துரு, சமையல்காரர் பரமன் ஆகியோரே மிக முக்கியக் காரணம்.

நேர்த்தியான நிறைவான உணவிற்குப் பிறகு, பதிவர்களின் பங்கேற்பு எப்படி இருக்குமோ என நினைத்ததை தவிடு பொடியாக்கியது, பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பு.

அகல்விளக்கு ராஜா, கருவாயன் (எ) சுரேஷ்பாபு அவர்களை அறிமுகம் செய்ய, “நேர்த்தியாக நிழற்படங்கள்” என்ற தலைப்பில் பல உதாரண படங்களுடன் எடுத்துச் சொல்லியது நிழற்படம் எடுக்க விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதிலும் சுரேஷ்பாபு இதுபோல் வகுப்பெடுக்க ஏறிய முதல் மேடை இது என்பது தான் ஆச்சரியமான விசயம்.

பதிவர் கணபதி ஓசை செல்லா அவர்களை அறிமுகப்படுத்த, வலைப்பதிவர்கள் இணையத்தை திறனுடன் பயன்படுத்துதல் குறித்தும், எழுத்து மட்டும் இல்லாமல் ஒலி, ஒளிப்பதிவு என எந்த ஊடகத்தையும் விட மிகவும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும் என்றதொரு மிகப் பயனுள்ள ஒரு உரையை ஓசை செல்லா நிகழ்த்தினார்.

கார்த்திகை பாண்டியன் கூழாங்கற்கள் லட்சுமணராஜாவை அறிமுகப்படுத்த, “நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்” என்ற தலைப்பில், நிழற்படங்களை வேறொரு கோணத்தில் எடுத்து, அதன் மூலம் ஒரு நிகழ்வை ஆவணப்படுத்துவது குறித்து இரண்டு வேறு விதமான ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தினார். ஒரு திருமணம் மற்றும் வேதாண்தா நிறுவனம் மூலம் சிதைந்து மாறி வரும் கிராமப் பகுதி என வினோத் அவர்களின் படங்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது மிகுந்த கைத்தட்டல்களைப் பெற்ற ஒரு படைப்பாக அமைந்தது.

ஏழு வித்தியாசமான தலைப்பில், ஒரு பதிவரை தன் எழுதும் இயல்பையொட்டி மிகச் சிறப்பாக பட்டைதீட்ட ஏழு சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சிந்தனையை, உழைப்பை நம் பதிவர்களுக்கா அளித்ததற்கு என்ன சொல்லி நன்றி பாராட்ட.

ஏழு நிகழ்வையும் மிகத் திருப்தியாக நடத்திய நிறைவோடு அனைவருக்கு நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்து, கலந்துரையாடலுக்காக சேர்தளம் அமைப்பிடம் மேடை ஒப்படைக்கப்பட்டது. பதிவர்கள் வெயிலான், சீனா, பரிசல், கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் தலைமையில் கடலையூர் செல்வம் ஒருங்கிணைக்க அனைவரும் பங்கேற்ற கலந்துரையாடலுக்குப் பின் எல்லோரும் பிரியா விடை பெற்றனர்.

இவ்வளவு பெரிய நிகழ்ச்சியின் வெற்றிக்குக் கலந்து கொண்ட ஒவ்வொரு பதிவரின் பங்கேற்புமே காரணம். அடுத்து, எண்ணத்தில் எழுந்த எல்லாவற்றையும் நிஜமாய் நிகழ்த்திட நேரம் காலம் பாராது உழைத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும்தான் காரணம். இதைச் செய்யலாம் என நினைத்துத் திரும்பும் அந்த வினாடி என்ன செய்ய வேண்டும்  எனத் தயாராக இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரின் வியர்வைத்துளியும் இந்த வெற்றியில் இருக்கிறது.

அமெரிக்காவிலிருந்தாலும் இது நம் குடும்ப விழா என தொடர்ந்து பேசி உற்சாகப்படுத்தி நிதியளித்த விவசாயி-இளா, அமரபாரதி, ஆப்ரிக்காவில் இருந்து இந்த ஆண்டும் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய தன் நண்பன் கென்னடி மூலம் ஏற்பாடு செய்து, தன்னுடைய பங்களிப்பாக நிதியளித்து தொடந்து உற்சாகப்படுத்தி வரும் சண்முகராஜ், சௌதியிலிர்ந்து கலந்து கொள்ள முடியாவிட்டாலும் குழுமத்திற்காக உதவும் மருத்துவர். ரோகிணி ஆகியோரின் உற்சாகமும், ஒத்துழைப்பும் எங்களை மிக வேகமாக இயங்க வைத்தது என்றால் மிகையில்லை.

கூடிக்கூடித் திட்டம் தீட்டி, ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்து, எல்லாப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு விழாவை வெற்றியடையச் செய்த அண்ணன் தாமோதர் சந்துரு, ஆரூரன், கார்த்திக், நந்து, வால்பையன், ஜாபர், பாலாசி, லவ்டேல் மேடி, சங்கவி, அகல்விளக்கு, வேலு, கணபதி, வசந்த், தாராபுரத்தான், விஸ்வநாதன் மற்றும் கலந்து கொள்ளமுடியாத சூழலிலும் தங்கள் ஆலோசனைகள் மூலம் உடனிருந்த இயற்கை ராஜி, நித்திலம் பவள சங்கரி என ஒவ்வொரு பதிவரும் எங்கள் குழுமத்திற்கு கிடைத்த மிக அரிய சொத்தே என்றே சொல்ல வேண்டும்.
நினைவுப் பரிசாக அனைவருக்கும் பதிவர் பழமைபேசியின் ஊர்ப்பழமை புத்தகம் அளிக்கப்பட்டது. அதை தங்கள் சார்பாக அன்பளிப்பாகக் கொடுத்த அருட்சுடர் பதிப்பக உரிமையாளர் பதிவர். ஆரூரன், பழமைபேசி ஆகியோருக்கு நன்றி.

சங்கமம் குறித்து இடுகை, இலச்சினை, சுட்டி என தங்கள் முகப்பில் வெளியிட்ட பதிவர்கள், தமிழ்மணம், தமிழ்வெளி, இண்ட்லி, சங்கமம் திரட்டிகளுக்கும் நன்றிகள்.

வாழ்க்கை முழுதும் இன்பம் துன்பமும் கலந்து வந்து கொண்டேயிருந்தாலும், அத்தனை துன்பங்களையும் போக்கும் விதமாய் அவ்வப்போது நம்மைச் சூழ்ந்து மகிழ்ச்சி சுழலில் மூழ்கடிக்கும் இன்பங்களே அத்தனை சோர்வுகளிலும் இருந்து நம்மை அடுத்த கட்டத்தை நோக்கி மிக வேகமாய், உத்வேகத்தோடு நகர்த்திப் போகின்றன. அந்த இனிய நிகழ்வுதான் இன்றைய வெற்றிகரமான சங்கமம் 2010. இந்த வெற்றிக்கு பலவகைகளில் உதவியவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை அன்பையும் தோய்த்து தருகிறேன்.
நன்றி என் இனிய நண்பர்களே, உங்களால் மிக இனிய ஒரு பொழுதை இன்று கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட பதிவுலக சொந்தங்கள் அனுபவித்துக் கடந்திருக்கின்றோம்.

-0-சிறகை விரிக்கும் சிறை


உயிர் பெறும் துப்பாக்கி
ஒரு போதும் அறிவதில்லை
உயிர் பறிக்கத்தான் என்பதை

-0-

பள்ளி மைதானங்கள்
பசியோடு தவிக்கின்றன
விடுமுறை நாட்களில்

-0-

மௌனம் சிறகு விரிக்கிறது
அடுத்தடுத்து சிறைப்படும்
வார்த்தைகளில்

-0-

நிகழ்காலக் குற்றங்கள்
விடுதலை அடைகின்றன
நாளைய பெருங்குற்றங்களில்

-0-

நம்பிக்கை நகர்த்தும்….. சங்கமம்–2010

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.


இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.

வெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ்
வணக்கம்
*வரவேற்புரை

*பதிவர்கள்
அறிமுகம்
*கூட்ட
துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
*சிறுகதைகளை உருவாக்குவோம் - 
எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக
மொக்கையர்களே ஒன்று படுங்கள் - 
எழுத்தாளர். பாமரன்
*குறும்படம்
எடுக்கலாம் வாங்க - 
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில்
நேர்த்தி - 
கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள்
ஒரு பார்வை -  
சிதம்பரன்.கி

மதியம்
01-30 – 02.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் - 
ஓசை செல்லா
*
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் - 
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
*பதிவர்கள் கலந்துரையாடல்
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை

மாலை
05.00 மணி நிகழ்ச்சி நிறைவுகுழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

சுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.

நிகழ்ச்சியை நடத்துவது மட்டும்தான் நாங்கள்…. இது நமக்கானதொரு பொதுக்கூடல்… இதன் வெற்றி முழுக்கமுழுக்க உங்களின் பங்கேற்பில் மட்டுமே! உங்கள் வருகை மட்டுமே இப்போதை அவசரமான அவசியம்! இது  வரை பயண ஏற்பாடு செய்யாதவர்கள் கூட இப்போது நினைத்தாலும் திட்டமிட்டு ஈரோட்டிற்குப் பயணப்பட முடியும்..

உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன…

ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம், நம்பிக்கைதானே எல்லாவற்றையும் நடத்திச்செல்கிறது.
 -0-

அடைகாத்த கூடு

பள்ளிக்கூடம் கூடும் காலை நேரங்களிலும், ஒன்னுக்குத்தண்ணிக்கு விடும் இண்டெர்வல் நேரங்களிலும், மத்தியான சோத்துக்கு எனும் மதிய இடைவெளியிலும், மாலை பள்ளி முடிந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர் எல்லையைத் தாண்டும் வரைக்கும் கிடைக்கும் நேரங்களில் தான் அத்தனை விளையாட்டுகளையும் ஆடித்தீர்க்க வேண்டும். ஊருக்குள் வீடு இல்லாமல், தனித்த தோட்டத்தில் வளர்ந்ததால் எந்நேரமும் சகவயதுப் பையன்களோடு விளையாடும் வாய்ப்பு அமைந்திருந்ததில்லை. ஊர் எல்லையைத் தாண்டி தோட்டத்துக்கும் போகும் வண்டித்தடத்தில் நுழையும் போது விளையாட்டுகளுக்கான வாய்ப்புகள் தீர்ந்துபோய்விடும்.

வீட்டைச் சுற்றிச்சுற்றி விளையாடும் வாய்ப்புகள் மட்டுமே இருந்த, அந்தச் சிறுவயது காலகட்டத்தில் நான் அதிகம் அடைகாக்கப்பட்டது தோட்டத்தில் கிணற்றுக்கு கிழக்கோரம் இருந்த படர்ந்த ஒற்றைக் கொய்யா மரத்தில் தான். வீட்டையும், கிணற்றையும் சுற்றி இருந்த நொச்சிமரம், வேப்பமரம், பாலமரம், கொய்யாமரங்களில் வழுவழுத் தன்மையோடு, கிளைகள் பரப்பி வசதியாய் இருந்தது கொய்யா மரம் மட்டுமே. கூடுதல் ஈர்ப்பு பருவங்களில் கொத்தும் குழையுமாய் காய்த்துத் தொங்கும் கொய்யாக் காய்கள். பிஞ்சிலிருந்து கனிந்த கொய்யாவரை எதையும் உண்ண முடியும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனிச்சுவை உண்டு.


விவரம் புரிந்தும் புரியாத வயதில் கொய்யா மரத்தோடு கொண்ட பந்தத்தில், ஏதோ ஒரு கிளை மேல் சாகசம் செய்ய முயன்று, தவறி விழுந்ததில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த புண்ணியத்தில் முனியப்பசாமிக்கு கிடா வெட்டுவதாக நேர்ந்து விட்டு பல வருடங்கள் ஆடி மாதத்தில் கெடா வெட்டி விருந்து நடந்ததுண்டு.

வயதுகள் கடக்க, கல்வியைக் கைக்கொள்ள எல்லைகளை நீட்டிக்க வேண்டியதானது. நினைவுகளும் மூப்படைந்து எல்லாம் மறந்தும் போனது, மரமும் விழுந்தது. வருடம் தோறும் இருந்த கெடா வெட்டு, காலப்போக்கில் இரண்டு வருடத்துக்கு ஒன்றாகி, அப்புறம் மூன்று வருடத்துக்கு ஒன்றாகி, இப்போது  கடைசியாய் எப்போது நடந்ததென மறந்தும் விட்டது.

சில வருடங்களுக்கு முன்பு, தோட்டத்துக் கிணற்றுக்கு மேற்குப் புற வாய்க்கால் ஓரம், தப்பிப் பிறந்த செடியாக ஒரு கொய்யா முளைத்து வளர ஆரம்பித்தது. வாய்க்கால் செதுக்கும் போது ”சரி இருந்துட்டு போகட்டுமே” என்று ஒதுக்கி விட்டதில் நெடுநெடுவென வளர்ந்த செடி, கிளைகள் விரித்தது மரமாக நிமிர்ந்து நின்றது. படர்ந்த உறுதியாக கிளைகளோடு, ஒவ்வொரு பருவத்திலும் மரம் கொள்ளா அளவு காய்களால் கனத்து நிற்கிறது. கைக்கு எட்டியதை எளிதில் பறித்து, எட்டாததை கொக்கி கட்டி இழுத்துப் பறித்து என எப்படிப் பறித்தாலும், இயற்கையின் மாயமாய் இலைகளுக்குள் மறைந்திருந்து, பழுத்துச் சிவந்து, வாசம் வீசி பறவைகளையும், அணில்களையும் விருந்துக்கு அழைத்து தன்னை திண்ணக் கொடுத்து, எஞ்சியவையாய் அவ்வப்போது பழத்தின் மிச்சம் விழுவதுமுண்டு.ஒவ்வொரு முறை தோட்டம் போகும் போதும், கிணற்றைச் சுற்றி வருகையில், தவறாமல் கொய்யா மரத்தினடியில் சென்று கீழாக எட்டும் தூரத்திலிருக்கும் கிளையில் ஒரு முறை தொங்கி விட்டுப்போவது வழக்கம். 

இம்முறை பருவம் முடிந்து கிட்டத்தட்ட காய்கள் தீர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், கொய்யா மரத்தினடிக்குப் போக, ஆங்காங்கெ தென்பட்ட திரண்ட பச்சைக் கொய்யாவிலிருக்கும் கொஞ்சம் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு கலந்த சுவை நாவில் எச்சிலை ஊற வைக்க, பல வருடங்கள் கழித்து தட்டுத் தடுமாறி மரத்தில் தாவி(!) ஏறினேன். ஏறிய பிறகு மரம் இறங்கவிடவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், இலைகளுனூடாக மிதந்து வந்து தழுவிப்போன குளுகுளு காற்று, பாரத்திற்கேற்ப தொட்டிலாட்டிய கிளை, காதோரம் அவ்வப்போது கிசுகிசுக்கும் இலைகள் என நேரம் போனதே தெரியவில்லை.


”என்னப்பா இது, மரத்து மேலேயே உட்காந்திருக்கீங்க” என்ற பாப்பாவின் குரலும், “இதென்னது, கொழந்தையாட்ட மரத்துமேல ஏறிட்டு, எறங்கி வா” என்ற ஆயாவின் குரலும், மனதிற்குள் வெட்கத்தை வரவழைத்தாலும், ஆசை வெட்கத்தை மறந்து மேலேயே தங்க வைத்தது.

அவ்வப்போது அழைத்த கைபேசி அழைப்புகளுக்கும் அங்கிருந்தே ஆடியபடி பதில் சொல்லிக்கொண்டும். வேண்டும் போதெல்லாம் எட்டியெட்டி விதவிதமாய் கிடைத்த காய்களை, பழங்களை பறித்துத் தின்று தீர்த்ததில் கிட்டத்தட்ட 25-30 வருடங்களுக்கு முன்பான காலத்தை கொஞ்ச நேரம் மீட்டெடுத்த மகிழ்ச்சி மனது முழுதும் திரண்டு கிடக்கிறது இன்னும்.

விஞ்ஞானத்திற்கு ஆப்பிள் மரம் போல், ஞானத்துக்கு போதி மரம் போல், மகிழ்ச்சிக்கு(!) ஒரு கொய்யா மரம். 

அடைகாத்த கூடுகளின் இதம், மெதுமெதுப்பு, வெதுவெதுப்பு காசு பணத்திலோ, கண்ணுக்கு முன் விரிந்து கிடக்கும் அறிவியல் தொழில் நுட்பங்களிலோ ஒரு போதும் கிடைத்து விடுவதில்லை.

-0-

பகிர்தல் (18.12.2010)


தூவும் நன்றி விதைகள்:
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் வேண்டுகோளுக்கிணங்க நடத்தவுள்ள சங்கமம் 2010 நிகழ்ச்சி இலைச்சினையை முகப்பில் வெளியிட்டு, சுட்டி கொடுத்துள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம் திரட்டிகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு, பங்களிப்போடு இணைந்து நடத்தவுள்ள சங்கமம் திரட்டிக்கு நன்றிகள்.

சங்கமம்-2010 நிகழ்ச்சி குறித்து, தங்கள் வலைப்பக்கத்தில் இடுகை எழுதி, இலச்சினையை வெளியிட்டுள்ள சேர்தளம் குழுமம், பதிவுலக நட்புகள், பழமைபேசி, ச.செந்தில்வேலன், சீனா, வானம்பாடி, ராமலஷ்மி, பிரபாகர், ஸ்ரீதர், கார்த்திகை பாண்டியன், சேட்டைக்காரன், காமராஜ், சே.குமார், செ.சரவணக்குமார், விஜி, முனைவர் ப.கந்தசாமி, முனைவர். குணசீலன், டி.வி.ஆர் ராதகிருஷ்ணன், தேனம்மை, ஷம்மிமுத்துவேல், தமிழ்மலர் (யார் பெயராவது விடுபட்டிருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்) மற்றும் குழுமத்தின் அனைத்து தூண்களுக்கும் நன்றி!


நினைவுக்கு வருகிறதா?
பொருளாதார வளர்ச்சி உண்ணும் உணவில் கூட ஆடம்பரத்தையும் அந்தஸ்த்தையும் திணிப்பதை தொடர்ந்து உணர முடிகிறது. விருந்துகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்ட உணவுகளை அதிகம் என்று வீணடிப்பதை விட, தானே எடுத்துப் போட்டு (Buffet) சாப்பிடும்போதும், விலையுயர்ந்த உணவங்களில் கேட்டு வாங்கி வீணடிக்கும் உணவுகளும்தான் மிக அதிகம்.

உணவு சாதாரண கடைகளில் வீணாவதைவிட, விலையுயர்ந்த நட்சத்திர உணவங்களில் வீணடிக்கும் உணவுகளே அதிகம். சமீபத்தில் நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ, விலையுயர்ந்த உணவகத்திற்குச் சென்று வீணடித்த உணவு எவ்வளவு என்று நினைவுக்கு வருகிறதா?

அதுவரைக்கும் உள்ளத்தை உலுக்கிப் போடும் இந்தக் குறும்படத்தைக் கொஞ்சம் பாருங்களேன்!
தமிழ்மணம் விருதுகள்:
தமிழ்மணம் அறித்துள்ள விருதுகளுக்கு…..
 
  • அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் – பிரிவில் கோடியில் இருவர்  
  • பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்பிரிவில் ஒரு பயணமும், பெரிய பாடமும்
  • ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் – பிரிவில் வவுனியாவுக்குப் போயிருந்தேன் இடுகைகளைச் சமர்பித்துள்ளேன்.

பொறாமையிலும் பெருமை:
கொஞ்ச நாட்களாகவே நான் எழுதும் கவிதைகளுக்கு வரும் பின்னூட்டங்கள், வாக்குகளைவிட எதிர் கவிதைகள்தான் அதிகம் வருகின்றன. அதிலும் கொடுமை என்னவெனில், எதிர் கவிதைகள் எல்லாமே நேர்(!) கவிதைகளைவிட நன்றாக இருப்பதுதான். இதுக்குப் பொறாமைப்படுறதா இல்ல எதிர்கவிதைங்கிற பேர்ல நல்ல கவிஞர்களை உருவாக்கும் (!!!!நோ….நோ திட்டாதீங்க….) என்னை நினைத்து நானே பெருமைப் படுவதா (நோ….நோ…….நோ….. பேட் வேர்ட்ஸ், மீ பாவம்……) எனத் தெரியவில்லை!.

எரியும் விலைவாசியில் ஊற்றிய பெட்ரோல்:
இது வரை இல்லாத அளவாக ஒரே தடவையில் மூன்று ரூபாய் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்ட விடியலில்தான், மத்திய புலனாய்வுத்துறை வரலாற்றுச் சாதனையாக 34 இடங்களில் சோதனை போட்டு சாதனை படைத்துக் கொண்டிருந்தது. (இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ!). எது நடந்தாலும், பொத்திக் கொண்டு மௌனமாக கடந்து போகும் இந்திய மனோபாவம் பெரு முதலாளிகளுக்கும், இந்தியாவை குருதி, வியர்வை சிந்தி கட்டமைத்து(!) வரும் அரசியல்வாதிகளுக்கும் வெகு வசதியாகப் போய்விட்டது! (கொசுறு: எட்டிப்பிடிக்கிற தூரத்துல இருக்கிற இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நம்மூர் காசுல 45 ரூபாய்தான் என நினைக்கிறேன்)

-0-

காணாமல் காணும் ஓவியம்


எதிர்திசையில் அமர்ந்து
ஏதோ ஓவியம் வரையத்
துவங்கினாள் அந்தச் சிறுமி
என்பார்வையில் படாதபடி

என் பார்வைப் பசிக்கு
அவள் கண்களின் அசைவு
மட்டுமே தீனியாகிக்கொண்டிருந்தது

சிறுபூவின் கருவிழிகள்…
எதிர் திசைகளில் நகரும் போது
குறுக்கு நெடுக்குக் கோடுகளையும்…

வளைந்து சுழலும் போது
வட்டத்தையும் வளைகோடுகளையும்

இடவலமாய்த் தாவும் போது
வேண்டாததை அழிப்பதையும்

மினுமினுக்கும் போது
பட்டாம் பூச்சிகளையும்…

பூவாய்ச் சிரிக்கும் போது
குழந்தையின் புன்னகையும்

களைத்துச் சோர்வுறும் போது
ஏதோ ஏக்க வயிற்றையும்

வண்ணங்களைக் கசியவிடும்போது
வானவில்லையும்
......எனக்குள் வரைந்து முடித்திருந்தது.

”வரைஞ்சு முடிச்சாச்சு
வந்து பாருங்க” என அழைத்தாள்

”பார்த்துட்டேன்” என்ற என் பதிலுக்கு
ஆச்சரியத்தில் திறந்த அவளின் கண்கள்
அடுத்த ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தது.

-0-

வரையாத புள்ளி


பாதங்களில் கலைந்து போகும்
அலைகளில் கரைந்தும் கூட
தெரிந்தும் கட்டுகிறோம்
மணற்கோட்டைகள்!

-0-

நிதமும் பழகிய ஒத்திகை
இறுதியாய் அரங்கேற்றம்
மரணிக்கும் நொடிகளில்
நீள் உறக்கமாய்!

-0-

கிட்டாத மதுச்சொட்டு
ஏக்கப் போதையாய்!
தள்ளாடுகிறது 
நாவிலும் மனதிலும்

-0-

முடிவாய் வைத்த புள்ளியை
உற்றுப் பார்க்கிறேன்
என்னை எட்டிப் பார்க்கின்றன
புள்ளிக்குள் நான் வைக்காத புள்ளிகள்!

-0-