மனிதம் விற்ற சில்லரை பாக்கி

அறுவெ‌ருக்கும் பார்வை வீச்சால்
சிதைக்க‌ப்ப‌டும் திருந‌ங்கை...
தன் கையால் நம் ம‌லத்தை அள்ளும்
நாசியறுந்த ச‌க‌ம‌னித‌ன்...
நாம் வாங்காத‌ ஊதுப‌த்தியை விற்கும்
குருட்டு தன்னம்பிக்கையாளன்...
பச்சிளம் குழந்தையின் பாலை
வாடிக்கையாளனிடம் களவு கொடுத்த வேசி....

..... இது நமக்கான உலகம் அல்ல என்ற
கொஞ்ச‌ம் குழப்ப‌த்துட‌ன் கூடிய‌ தெளிவான மனநிலை...

சுயநலம் சுகமாய் மனிதம் தின்கிறது...

மனிதத்தை விற்ற சில்லரையின்
மிச்ச பாக்கிக்காக மனது
கலங்கிக் கொண்டேயிருக்கிறது