தூரத்து கட்டைவிரல்தயங்கி நிற்கையில்
மென் அழுத்தத்தில்
முன்தள்ளுவதும்
தடுமாறித் துவளுகையில்
தன் திறன் கூட்டி
மேலேற்றுவதும்
மனக் காயங்கள் மீது
மயிலிறகு கொண்டு
மருந்திடுவதும்
திகைத்து விழிக்கையில்
திசை கண்டு
நம்பிக்கையூட்டுவதும்
மேடையில் நிற்கையில்
தூரத்திலிருந்து
கட்டைவிரல் உயர்த்துவதும்
ஒடுங்கி நிற்கும்போது
ஒரு வாய்ப்பளியுங்குள் என
யாசிப்பதும்
நடுங்கும் விரல்களில்
பிரியத்தின்
கதகதப்பைப் பகிர்வதும்
மூழ்கியதிலிருந்து மீள்கையில்
வலித்தும்கூட பற்றிய கை
விடாமலிருத்தலும்
அவர்களே யோசிக்காதபோது
அவர்களுக்காக
யோசிப்பதும்
மிக எளிதுதான்!
யோசித்துச்
சொல்ல வேண்டுமெனில்...
சற்றுக் கடினம் தான்!
இன்னும்....
உண்மையாகச்
சொல்ல வேண்டுமெனில்
நட்பில் அது சாத்தியம் தான்!

சேவலும் கெண்டகி வறுத்த கோழிக்கறியும்

இருள் வடிந்துபோகப் போகிறது
அடுக்ககச் சாளரப் பொத்தல்களில்
ஆங்காங்கே சில வெளிச்ச அருவிகள்
ஒரு சேவல் கூவுகிறது
அடுக்ககத்தில் எங்கனம் இக்குரல்

பிசிறில்லா சேவல் மொழியில்
நேர்த்தியிருந்தென்ன
உயிர்ப்பில்லையே
ஒருவேளை ஏதோ ஒரு வீட்டின்
எழுப்பு மணியாக இருக்கலாமோ
அவ்விதமாயினும் பிழையன்று
சேவலும் கோழியும்
யாருக்கும் அந்நியப்பட்டுவிடவில்லை

இந்த அடுக்ககத்தின்
ஏதோவொரு வீட்டின்
குளிர்ப் பெட்டிக்குள்
நேற்றிரவு மிஞ்சிப்போனதால்
நடுங்கிக் கிடக்கும்
கெண்டகி வறுத்த கோழிக்கறியை
நித்திரையிலிருந்து எழுப்பாமல்
எவ்வளவு வேண்டுமானாலும்
கூவிக்கொள்ளட்டும்!