தோற்றுப்போகும் ருசி மொட்டுகளும் அன்பும்

சுவாரசியமான அரட்டையையும் மீறிப் பசித்திருந்த வேளை. நண்பர் வீட்டில் தேநீரோடு, மென் சிவப்பு நிறத்தில் வட்ட வடிவ க்ரீம் பிஸ்கெட்கள் சிலவற்றை ஒரு தட்டில் நிரப்பிப் பரிமாறினார்கள். பசியின் உணர்வில் பிஸ்கெட்கள் கவர்ச்சிகரமாத் தெரிந்தன. தொலைக்காட்சி விளம்பரங்களில் தூள் பறத்தும் பிஸ்கெட் வகை அது. எடுத்துச் சுவைத்தேன். நீட்டி முழக்கிச் சொல்ல வேண்டியதில்லை, ஒற்றை வரியில்இதையெல்லாம் மனுசன் திம்பானா!?” னக் கேட்கலாம் போன்ற சகிக்க முடியாதொரு சுவை.

அந்த நெருடலை என் உடல் மொழியிலிருந்து கவனித்துவிட்ட நண்பர் என்னாச்சு?” என்றார். விருந்தோம்பல் இங்கிதம் என்பதையும் தாண்டி... புரிதல் உள்ள நட்பு என்பதால்என்னங்க டேஸ்ட் இது... கொடுமையால்ல இருக்கு!?” என்றேன். அந்தப் புள்ளியில் நாங்கள் இன்னும் நெருங்கிப்போனோம். “நமக்கு சகிக்கல, ஆனா புள்ளைங்க இதத்தானே திங்குதுங்கஎன்றார்

நண்பரின் பத்து வயது மகனின் மிகப் பிடித்தமான பிஸ்கெட் அது. எது இல்லையென்றாலும் பிரச்சனையில்லை, அந்த பிஸ்கெட் இல்லாவிடில் வீடு ரணகளமாகிவிடும். அன்பு எனும் நிலைப்பாட்டில் குடும்பம் அஞ்சுகிறது. பிள்ளைகளுக்கு பிடித்தது என்றால், எதையும் வாங்கித் தந்துவிடுவது என்பதே அன்பென்றாகி வெகுகாலமாகி விட்டதுஇப்படியான சகிக்க முடியாத சுவையில் பிஸ்கெட் தயாரிப்பது யாருடைய தேர்வு. அதுவும் குழந்தைகளை இலக்காக வைத்து ஒரு பிஸ்கெட்டை எந்த அடிப்படை அறத்தோடு தயாரிக்கிறார்கள்? உண்மையிலேயே பிள்ளைகளின் நாக்குகள் காலப்போக்கில் இந்த மாதிரியான ருசியை விரும்பும் அளவிற்கு மாறிப்போய்விட்டனவா? அல்லது தங்கள் வியாபாரத்திற்காக பிள்ளைகளிடம் விளம்பரங்கள் மூலம் அந்த ருசியைக் கொண்டு சேர்ப்பித்துவிட்டனரா?

ஓடிவந்து தட்டிலிருக்கும் பிஸ்கெட்டை எடுத்து இரண்டாகப் பிரித்து க்ரீமை நாக்கில் அப்பி, கைகளில் எச்சில் வழிய ருசித்து ண்ணும் நண்பரின் மகனைப் பார்க்கிறேன். ‘ருசியில் தலைமுறைகளுக்கு இடையே எப்படி இத்தனை பெரிய வேறுபாடு எனும் சிந்தனையின் நீட்சியாய் என் பால்யத்திற்குள் பயணப்படுகிறேன்.

கால் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய நகர்ப்புற வாழ்வியலில் பிள்ளைகளுக்குக் கிடைத்த நொறுக்குத் தீனிகள் எவையென்று நான் அறிந்திருக்கவில்லை. கிராமம் சார்ந்த வாழ்க்கையில் எங்களுக்கு கிடைத்த ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. இப்போது போன்ற சந்தைப்படுத்தல்கள் அப்போது கிடையவே கிடையாது.

சந்தைக்கோ, திருவிழாவிற்கோ சென்றால் மட்டுமே குறிப்பிட்ட சில உணவுப் பண்டங்கள் வாங்கி வருவார்கள். மற்றபடி வீட்டில் இருப்பது, வயலில் கிடைப்பதையொட்டியே தேவைகளைச் சமாளித்துக்கொள்ள வேண்டும்

எண்ணெய் வித்துக்களாக இருப்பினும், அவற்றில் ஒவ்வொருவரையும் கவர்ந்திருப்பது கடலையும் எள்ளும்தான். கடலை என்பது எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வேர்க்கடலை அல்லது நிலக்கடலை. கடலையின் ருசியில் போதுமென நிறைவடைந்து திருப்தியடைவது இன்றளவும் எனக்குச் சாத்தியப்படவேயில்லை. கடலையை எல்லாப் பதங்களிலும் நம்மால் ருசிக்க முடியும்.

விளைந்து முதிர்ந்து இருக்கும் பருவத்தில் செடியோடு பிடுங்கி பச்சைக் காய்களை நெருப்பில் சுட்டு ருசிக்கலாம். காய்கள் எரிந்தும் எரியாமலும் இருக்க, உள்ளே புழுங்கி வெந்து புகை மணக்கும் பச்சை கடலையின் ருசி நினைத்தாலே நாவில் எச்சில் சுரக்க வைக்கும். பறித்த காய்களை வேக வைத்துச் சாப்பிடலாம். வேக வைத்த கடலை சூடாக சாப்பிட்டால் ஒரு சுசி;, ஆற வைத்து தின்றால் வேறு ருசி; அடுத்த நாள் சற்று உலர்ந்த நிலையில் சாப்பிடும்போது இன்னொரு ருசி.

உலர்த்தி, பதப்படுத்திய காய்களை இரண்டு விதங்களில் சுவைக்கப் பயன்படுத்தலாம். ஒன்று இரும்பு வாணலியில் வறுப்பது. மற்றொன்று நெருப்பில் கொட்டி எரிந்து போகாமல் பதமாக எடுப்பது. அடுத்தது பருப்பினைத் தனியாகப் பிரித்து பச்சையாகவோ, வறுத்தோ உண்ணலாம். கடலையுடன் கடித்துக்கொள்ள வெல்லமோ, கருப்பட்டியோ கிடைத்து விட்டால் வயிறு நிரம்பும் வரை உலகம் மறந்துபோகும்

நல்லெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் எள்ளும் ருசி மிகுந்த ஒரு பொருளே. வறுத்த எள்ளுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து உண்பது ருசியின் இன்னொரு உச்சம். இதில் எள்ளு மாவு என்பது கிராமத்தினருக்கே உரியதொரு சிறப்புத் தயாரிப்பு. அதுவொரு கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடு. வறுத்த எள்ளை செக்கில் இட்டு, வெல்லம் சேர்த்து உலக்கையால் மாவாக இடிக்கப்பார்கள். இடிக்கும்போது எழும் மணமே அக்கம்பக்கத்திற்கு எள்ளு மாவின் வருகையை உணர்த்திவிடும்.  எள்ளுமாவுடன் ராகிக்களி இணைத்தால் அல்வா போன்ற பதத்தில் ஒரு இனிப்பு வகை கிடைக்கும். அதன் ருசி குறித்தெல்லாம் சொற்களில் விளக்கிவிடமுடியுமென எனக்குத் தோன்றவில்லை

புளியில் இருந்து எடுத்துக் குப்பையில் போடப்படும் புளியங்கொட்டைகூட ஒரு  நொறுக்குத் தீனிதான். புளியங்கொட்டைகளை தண்ணீரில் ஊற வைத்து, உலர்த்தி அதை வறுத்து உடைத்து தோல் நீக்கினால் சற்று கடினமான பதத்தில் மணக்க மணக்கக் கிடைக்கும். பொழுது போகாத தருணங்களின் தீனி அது.

தேங்காய்த் துண்டுகளுடன் வாழைப்பழம் அல்லது வெல்லம், கருப்பட்டி இணைந்து சீரிய நொறுக்குத் தீனியாகவும், பசிப் பொழுதின் ஆபத்பாந்தவனாகவும் அமையும். பொரியுடன் பொட்டுக்கடலை, மிக்சர், வறுத்த நிலக்கடலை கலந்த கலவை திருவிழாக்காலத் தீனிகள்.

பருவங்களில் பனை மரங்களில் கிடைக்கும் நொங்கு அமிர்தத்தின் பிறிதொரு வடிவமென்றே தோன்றுகிறது. பனங்காய்கள் முற்றிப் பழுத்து விழும் காலைப் பொழுதுகள் கவர்ச்சிகரமானவை. அவற்றைத் தீயில் சுட்டுஉறைந்து கிடக்கும் கமகமக்கும் சாற்றினை உறிஞ்சிச் சுவைக்கலாம். பனம் பழத்தின் கொட்டைகள் வீணாகும் பொருளல்ல. ஒரு ஒழுங்கில் அடுக்கிப் பொறுத்திருந்தால், முளைப்பு துளிர்க்கும். அந்தப் பருவத்தில் வெட்டி உடைத்தால் ருசி மிகுந்த சீம்பு கிடைக்கும். முளைப்பு விட்ட பன்ங் கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்தால், வேர்விட்டு சில வாரங்களில் பனங்கிழங்காக விளைந்து திரண்டிருக்கும். அவற்றைப் பிடுங்கி தனித்தனியாக தீயில் சுட்டு அதன் மணத்தோடு சாப்பிடலாம். வேகவைத்து நார் உறித்து நாட்கணக்கில் சுவைத்துக் கொண்டேயிருக்கலாம்.

வயல்வெளிகளில் பயிர்களுக்கு எப்போதும் தொந்தரவாக, களையாக இருக்கும் கோரைப்புற்களின் கிழங்குகள்கூட குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மணக்கும் ஒரு இணை உணவுதான். விளைந்து நிற்கும் கம்பு, ராகிப் பூட்டைகள், எப்போதாவது வெட்டப்படும் தென்னை மற்றும் பனை மரத்தின் இளங்குருத்துகள் என ஏதேனும் ஒன்று, அதையண்டி இருக்கும் மனிதர்களின் பசி மற்றும் ருசிக்காக தம்மை ஈந்து தருவதில் வஞ்சனைகள் செய்வதேயில்லை.

இவையுள்ளிட்ட இன்னும் எத்தனையோ பதார்த்தங்கள், பொருட்கள் கிராமத்து மனிதர்களின் அன்றாடங்களில் இன்றளவும் அனைவருக்குமான  இணை உணவுகளாக, நொறுக்குத் தீனி வகைகளாக இருந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ருசி இருந்தது, தனித்த சத்துகள் இருந்தன. அவற்றை உண்பதற்கென நம்மிடம் தேவைகளும், காரணங்களும் இருந்தன. இங்கு பட்டியலிடப்படாத, இக்கணத்தில் என் நினைவுகளில் தொலைந்து போன இன்னும் எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன்.

இவை எல்லாமே ‘கால் நூற்றாண்டு காலத்திற்குள்மற்றொரு தலைமுறையின் முன்னால் காணாமல் போய்விட்ட அல்லது காணாமல் போக்கப்பட்ட பதார்த்தங்கள் என்றும் பட்டியலிடலாம். இவற்றின் இடங்களை வணிகம் சார்ந்த தயாரிப்புப் பொருட்கள் மிக எளிதாக, அதேசமயம் மிக வலுவாகப் பிடித்துவிட்டன. பெரு நிறுவனங்கள், பன்னாட்டுத் தயாரிப்புகள், விளம்பர யுக்திகள், பெரும் ஆளுமைகளின் பரிந்துரைப் பாசாங்குகள் எனும் கூட்டு வலைப்பின்னல், நம்மிடமிருந்த பொருட்களிலிருந்து நம்மையும், நம் பிள்ளைகளையும் அந்நியப்படுத்திவிட்டனநம் பிள்ளைகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை, நாம் நம் அக்கம்பக்கம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தீர்மானிக்க முடிவதில்லை. யாரோ தாங்கள் விரும்பிய வண்ணம் தீர்மானிக்கிறார்கள். தங்கள் நோக்கத்தில் நம் வீட்டுப் பிள்ளைகளின் வாயிலாக யார் யாரோ வென்றெடுக்கிறார்கள். அதற்காக இடைவிடாது திறம்படச் செயல்படுகிறார்கள். தம் மண்ணில், தம் சுற்றத்தில் கிடைத்த எல்லா நல்லவற்றைகளையும் தொலைத்த இந்தத் தலைமுறைக்கு எது ருசி, எது ஆரோக்கியம் என்பதிலேயே தெளிவின்மை நிரப்பட்டிருக்கிறது.

பெற்றவர்களும்கூட தங்கள் இயலாமையைச் சமாளிக்க, பிள்ளைகளின் வாய்களை அடைக்க, பிள்ளைகளின் அசட்டு விருப்பத்திற்கேற்ப கவர்ச்சியான ஒரு நொறுக்குத் தீனியை, ஒவ்வாச்சுவை கொண்ட ஒரு பிஸ்கெட்டை, காற்றுப் பையில் அடைக்கப்பட்ட உப்பும் எண்ணையும் மிகுந்த ஒரு பதார்த்தத்தைக் கொடுத்து, அந்தச் சூழலை வென்று விடுகிறார்கள்.

தோற்றுப் போவதென்னவோ, சாயமேற்றப்பட்ட சந்தோசத்தில், மகிழ்ந்து விடுவதாய் கற்பனை செய்துகொள்ளும் பிள்ளைகளின் ருசி மொட்டுகளும், ஆரோக்கியமும் மற்றும் நம் பொருளாதாரமும், உண்மையான அன்பும் தான்!

**

நம்தோழி நவம்பர் 2016

மரபணுவில் மிச்சம் வைத்திருக்கும் குரங்கின் பிரியம்


னிதர்களுக்கிடையே உறவுகள் பூக்கும் தருணம் எத்தனை அழகானது என்பது அந்தத் தருணத்தைச் சரியாக உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும். விதையொன்று தன் உடல் பிளந்து, மண் கிழித்து, வான் நோக்கி வரும் தருணம் போல், மொட்டொன்று மலராகத் தன் உடல் விரிக்கும் தருணம் போல், மகத்தானது அந்தத் தருணம். சிந்தனையில் ஒத்திருப்பவர்கள், ஒரே திசையில் நாட்டம் மிக்கவர்கள், விவாதங்களில் இனம் காண்போர், தனிப்பட்ட தம் திறன் மூலம் வியப்பேற்படுத்துபவர், ஒரே இனம் மற்றும் மண்ணைச் சார்ந்தோர் என்பதுள்ளிட்ட எத்தனையோ காரணங்கள் ஒருவரையொருவர் இணைக்க இங்கிருக்கிருக்கின்றன.

இந்த தொழில்நுட்ப யுகம் மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கிறது என்ற குற்றச்சாட்டு இங்குண்டு.மனிதர்களின் பங்களிப்பை, தேவையைத் தவிர்க்கும் வகைகளில் இப்படிப்பட்ட தொழில்நுட்பங்கள் மனிதர்களை வெகுவாகத் தனிமைப்படுத்துகின்றன என்பதற்குப் பலவிதமான வாதங்கள் வைக்கப்படுவதுண்டு.இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படாமல் போயிருந்தால் சிலரின் விரல்களோடு இருந்த பிணைப்பை, நாம் தவற விட்டிருக்க மாட்டோம் என்ற வாதம் ஒரு வகையில் சரியென்பது போலவும் தோன்றும்.

அதே நேரம் பலரின் விரல்களோடு கொண்டிருக்கும் பிணைப்பை இந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் போயிருந்தால் அடைந்திருக்கவே மாட்டோம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத அளவிற்கு வெகு எளிதாக மனிதர்களோடு மனிதர்களை இணைத்து வைக்கின்றது. தெரியாத திசைகளிலிருந்து, அறியப்படாத ஊர்களிலிருந்து இந்த யுகம் நமக்கு அளித்திருக்கும் உறவுகளை இதனின்றி எப்படி நாம் அனுபவப்பட்டிருக்க முடியும்?!.

விமானப் பயணமொன்றில் பணியாளர்களாய் இருந்த இருவருக்குமிடையே நட்பு பூத்த தருணம், அது காதலாகக் கனிந்த தருணம், அதை உணர்ந்த விதம், காத்திருந்து அதைப் பகிர்ந்துகொண்ட தருணம் குறித்து மும்பையின் மாந்தர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசித்த பதிவொன்றினை இங்கு பகிர விரும்புகிறேன்...

”2013ம் ஆண்டில் விமானமொன்றில் பணியாளர்களாய்ப் பறந்து கொண்டிருந்தபோது நாங்கள் சந்தித்தோம். நான்கு மணி நேரப்பயணமாக இருந்தாலும் அது சிறப்பானது. இறங்கும்போது அவளிடம் தொடர்பு எண் கேட்டேன். பேசத் துவங்கினோம், அதன்பின் நிறையப் பேசினோம். அவளோடு உரையாடுவது இலகுவானது. இரவு உரையாடல்கள் விடியல்வரை நீண்டதை உணர்ந்ததில்லை. அவள் மீது காதல் கொண்டிருப்பதை உணர்ந்த தருணத்தில் நான் கத்தாரிலும், அவள் மும்பையிலும் இருந்ததால், அடுத்து நாங்கள் எப்போது சந்திப்போம் என்பது கூடத் தெரியது

அதனால் எப்போதாவது சந்தித்துக்கொள்ளலாம் என்ற முடிவில் வேலையில் மூழ்கிப்போனோம். சமீப காலமாய்ப் பேசாதிருந்த சூழலில் கடந்த ஆண்டு அவளை நான் ஃபேஸ்புக்கில் கண்டு, மும்பைக்கு நான்கு நாட்கள் வருவதாகவும் அப்போது சந்திக்க விரும்புவதாகவும் செய்தி அனுப்பினேன். சந்திக்கப்போகிறோம் எனும் நினைப்பு மகிழ்ச்சியூட்டியது. சந்தித்து இரண்டாண்டுகள் இருந்தாலும், அவளை நெருக்கமாக உணர்ந்தேன். நான் நான்கு நாட்கள் மும்பையிலிருந்தாலும், அவளுக்கு விமானம் பிடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், ஐந்து நிமிட நேரத்திற்கேனும் சந்திக்க விரும்பினேன்.

அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். இரண்டு ஆண்டுகள் கழித்து முதன்முறையாக அவளைச் சந்தித்த ஐந்து நிமிட அவகாசத்தில்எதையும் சிக்கலாக்க விரும்பவில்லை, உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்என்று சொன்னேன். அவள் அதிர்ச்சியடைந்தாள், இதையெல்லாம் கடந்துவிட்டதாக நினைத்திருந்தாள். அப்போது அவள் அதிகம் பேசாமல் சென்றாலும் விமானம் ஏறும்முன் தன் ஒப்புதலைச் சொன்னாள். எங்கள் பயணத்தில் இடைவெளி நீண்டதாக இருந்தாலும், யாரையும் இவ்வளவு நெருக்கமாக உணர்ந்ததில்லை. அடுத்த முறை சந்தித்தபோது, எங்கள் முதல் பயண இருக்கைகளைக் குறிக்கும் வகையில்எல்2 லவ்ஸ் ஆர்3” எனச் செதுக்கப்பட்ட மோதிரத்தை பரிசளித்தேன். நாங்கள் மீண்டும் இந்த வாரம் விமானங்கள் பிடிக்க வேண்டும், ஆனால் ஏரோபிளான் மோடில் தான் இப்போதைக்கு இருக்க வேண்டும். இந்த இடைவெளி நிரந்தரமான ஒரு முடிவையெட்ட வேண்டுமென்றால்லாம் நான் காத்திருக்க முடியாது....”   
இந்தப் பகிர்வினூடே அவர்களின் ஒவ்வொரு தருணங்களையும் மனதில் காட்சிப்படுத்தும்போது, மனித வாழ்க்கை தன்னுள் வைத்திருக்கும் சுவாரஸ்யங்கள் குறித்த பிரமிப்பு அகன்று விரிந்தது. இதுபோல் நம் பார்வைக்கு எட்டாமல், பகிரப்படாமல் விடுபட்டிருக்கும் உறவுகள் குறித்த கதைகள் கோடானு கோடி இருக்கலாம்.

இது தகவல் தொழில்நுட்ப யுகம் என்பது போலவே, உறவுகளுக்கான யுகமென்றும் கருதத் தோன்றுகிறது. இப்படி எட்டும் நட்புகளில் வயதுக்கும், சூழலுக்கும் ஏற்ப சில ரசங்கள் கூடியோ குறைந்தோ இருப்பதுமுண்டு. அறிதல்களில், பழக்க வழக்கங்களில், விருப்பு வெறுப்புகளில், கொள்கைகளில் இணங்கவும், முரண்படவும் பல தருணங்கள் அமையும்.

மனித உறவின் கதகதப்பு இளைப்பாறலுக்கான களம். இளைப்பாறல் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருத்தல் இயலுமா, இயலாதா என்பதைவிட அதற்கான அவசியங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்தல் நலம்.

இந்த யுகம் மனிதர்களை எளிதாக எட்டிப்பிடிப்பதற்கும், வெட்டிவிடுவதற்குமான காலம். அன்பினைப் பகிர்ந்துகொள்ள நளினமான ஆயிரமாயிரம் வழிகள். விதவிதமான மனிதர்களை, அவர்களின் மனநிலைகளை, குணங்களை வாசிக்க மிக நிறைவான வாய்ப்புகளும் ஏராளம்.

இப்படியாக உருவாகும் உறவுகளில் தீபத்தின் உள்ளேயிருக்கும் இருள் போலே, மிக நுண்ணிய கசப்பான அனுபவங்கள் எப்போதாது ஏற்படுவதை நாம் தவிர்க்கவும் முடியாது. திட்டமிட்டுக் களம் கண்டு மற்றவரை வஞ்சிக்கவும் இந்த மெய்நிகர் உலகம் ஏராளமான வாய்ப்புகளை மிக எளிதாக அள்ளித்தருகின்றது. நம்புதவதற்கு நிகராகக் கவனமாக இருப்பதும், சந்தேகிப்பதற்கு நிகராக மனிதத்தின் மேல் நம்பிக்கை கொள்வதும் அவசியம்.  எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமமூட்டக்கூடியது. அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும்.

உறவுகள் துண்டுபடும், துண்டிக்கப்படும் நேரம் எத்தனை வாதை நிரம்பியது என்பதையும் அனுபவிக்கிறவர்கள் மட்டுமே அறிவர். உறவுகளுக்குள் பிரியமும் பிணக்கும் போட்டி போட்டுக் கொண்டேயிருக்கும், சில பிணக்குகள் உறவினைப் பலப்படுத்தும், சில பிணக்குகள் உறவினைத் துண்டாடும். பிணக்கின் பொருட்டு, பிரிதலின் பொருட்டு உறவினைக் கொச்சைப்படுத்துவது என்பது இந்த யுகம் வழங்கியிருக்கும் மிக எளிமையான சாபங்களில் ஒன்று. மனிதம் ஆழக் குழி தோண்டி புதைக்கப்பட்டு, அதன் மேல் வெறுப்பின் விதைகள் தூவி, உணர்வுகளை உணவாய்ப் படைத்து கொழுத்துச் செழித்து வளர்க்க வைப்பதும் எளிது.

*

ரபரப்பைச் சற்றும் தொலைக்க மறுக்கும் ஒரு வார நாளின் மாலைப் பொழுது. எதிரெதிரே நெருக்கியபடியும், உரசியபடியும் வாகனங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட் ஹோட்டல் வாசல் முன்பு பரபரக்கிறது கூட்டம். இரு சக்கர வாகனங்களில் நின்றபடியே சிலர், நெரிசல் குறித்துக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத பலர் என சரசரவென கூட்டம் குவிகிறது. கூட்டத்தில் பல கைகள் தங்கள் அலைபேசியை உயரப் பிடித்து நிழற்படமும், காணொளியும் பதிவு செய்வதில் முனைப்பாய் இருக்க, கூட்டம் நோக்கும் திசையை நானும் பார்க்கிறேன், முகப்புச் சுவரின் மீது ஒரு குரங்கு அமர்ந்திருக்கின்றது.

பரபரப்பான இந்தப் பகுதியில் குரங்கிருக்கிறதா!?’ எனும் ஆச்சரியத்தோடும், ‘ஒரு குரங்கைப் பார்க்கவா இத்தனை கூட்டம் கூடுகிறது!?எனும் யோசனையோடும் கைபேசிகளில் பிடிபடும் குரங்கைக் கவனித்தேன். குரங்கின் அடிவயிற்றோடு ஒட்டிப்பிணைந்தபடி ஒரு கறுப்பு நாய்க்குட்டி. அதை இந்தக் கணத்தில் நாய்க்குட்டியாகக் காண்பதைவிட, குழந்தையென்றே பாவிக்கத் தோன்றுகிறது. மனிதர்களையும், அவர்கள் கையில் நடுங்கியபடி தன்னை நோக்கும் கைபேசிக் குவியலையையும் சற்றும் பொருட்படுத்தாமல் ஒரு கையைச் சுவற்றில் ஊன்றியபடி, வயிற்றோடு ஒட்டியிருக்கும், நாய்க்குட்டியை மறுகையால் தடவிக் கொண்டிருக்கிறது அது.

மனிதனுக்குக் கொடுத்தனுப்பியது போக, தன் மரபணுவில் பிரத்யேகமாக மிச்சம் வைத்திருக்கும் குரங்கின் சேமிப்பிலிருந்து வழியும் அந்தப் பிரியத்தைக் காண ஆச்சரியத்தில் மனம் மலர்கிறது. மன மலர்ச்சியை உணரும் தருணம் சிலிர்ப்பூட்டும் ஒன்று. பார்க்கும் எவருக்கும் தானொரு நாய்க்குட்டியாக மாறி குரங்கின் வயிற்றோடு அப்பிக்கொள்ள மாட்டோமா எனும் ஏக்கமூட்டும் தருணம்

அன்பும், உறவும் வழக்கமான வழியோ, மெய்நிகர் வழியோ.... எவ்வழிப்பட்டதாயின் என்ன...!? வாழ்நாளில் ஒரே ஒருமுறையேனும், அப்படியான அன்பை, வருடலை, அதைக் கோரும் யாரிடமேனும், நாய்க்குட்டியை வருடும் குரங்குபோல் நான் வழங்கிவிட்டால் போதுமென அந்தக் காட்சி நினைவுக்குள் வரும்பொழுதெல்லாம் தோன்றுகிறது.

-

”நம்தோழி”அக்டோபர் இதழில் வெளியான கட்டுரை

.