கீச்சுகள் - 16


சிந்தனையற்று இருப்பது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

~

மனதால் பேச எளிதாகயிருக்கிறது விட்டு விடுதலையாதல் போலே. புத்தியால் பேச மலைப்பாகயிருக்கிறது, “என்னவெல்லாம் பேசித்தொலைப்பமோ” எனும் அயர்ச்சியோடு.

~

கோடியில் அடிச்சவன விட்டுட்டு 5000 ரூவா லஞ்சம் வாங்றவனையா கைது பண்றது”- பொதுபுத்தி
#5000 கொடுக்க முடியாமத்தானே அவன் புகார் கொடுக்கிறான்.

~

கல்வி என்ற பெயரில் பிள்ளைகள்மேல் ஏவி விடப்படும் வன்முறைகளைக் காணும்போது ஒன்று புரிகிறது - இந்த நாடு நாசமாகப் போகப்போகிறது :(

~

எதிர்பாராமல் சந்திக்கும் யாரோ ஒருவர்தான் நமக்குள் ஏராளமான கேள்விகளை நிரப்பிவிட்டுச் செல்கின்றனர் #வாழ்க்கை விசித்திரமானது!

~

எதிரிகளோடுயிடும் சண்டை கனப்பதில்லை, நண்பர்களுடனான சண்டைபோல்.

~
ஃப்ளெக்ஸ் பேனர்ல பளபளனு மின்னுறதலைங்க, ரெண்டு நாள் கழிச்சு அந்த பேனர் விழும் இடத்தைப் பார்த்தா, பேனரே வெக்காதீங்கனு கும்புடு போடுவாங்க!

~

வீட்டில் ஒட்டடை அடிக்க வேண்டிய தருணங்களில், உயரமான ஆண்களுக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கிறது!

~

கொட்டாவி விடும் குழந்தை ஒரு கூடை உறக்கத்தை ஊட்டுகிறது எனக்குள்

~

எழுதத் துவங்கும் வரை வார்த்தைகள் பிடிபட மறுக்கின்றன. எழுதத் துவங்கிய பிறகு வார்த்தைகள் தீர மறுக்கின்றன # நீளமான கட்டுரை :(

~

நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது - வடிவேலு
#ஆமா, இவர வேற ஆயிரம் பேரு அணைபோட்டுத் தடுக்குறாங்களாக்கும்!

~

ஞாயிறு மாலை டாஸ்மாக் போகிறவர்கள், மதியம் நன்றாகத் தூங்கி, குளித்து, நல்லதாக உடையுடுத்தி, நெற்றியில் பட்டைதீட்டி கொஞ்சம் பழமாக போகிறார்கள்.

~
இந்த விஜய் டிவிக்காரங்க வெச்சிருக்கிற நாலஞ்சு சினிமா பட டிவிடியை புடுங்கிட்டு வந்துடலாமான்னு இருக்கு # திரும்பத் திரும்ப போடுறே நீ! :)

~

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்தமிழ்கூறும் நல்லுலகில் இத யாருய்யா கண்டுபிடிச்சது #முடியல :)

~

இந்தியாவைபோலியோஇல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது # ஒரு விநாடிபோலிகள்இல்லாத நாடுனு படிச்சுஷாக்ஆயிட்டேன். :)

~

எளிதில் கடந்துபோக வேண்டியவைகளை, கடந்துபோக முடியாத 'நோய்மை' மனோபாவத்திற்குள் அடைபட்டுக் கிடக்கின்றோம்.

~

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும் - கருணாநிதி
# அவங்க எல்லார்த்தையும் குளிர்காலத்துல கொடைக்கானல் அனுப்பிடலாம் விடுங்க! :)

~

கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது - அன்புமணி.
# அண்ணே குஷ்பு அக்கா பேரைச் சேர்க்காம விட்டுட்டீங்க! :)

~

தலை கனத்திருப்பதால்தான் ஆணி அடி வாங்கிக் கொண்டேயிருக்கிறதோ? #தத்துப்பித்து டவுட்டு :)

~

அன்பு வலி(மை)யானது

~

இன்றையிலிருந்து கடை பிடிக்க வேண்டும் என நினைக்கும் எதுவுமே, அன்றைக்குள்ளாகவே அதன் அடர்த்தியை இழந்து விடுகின்றது!


~

அவர்களை அவமானப்படுத்த அவர்களிடம் ஒருபோதும் அனுமதி பெறுவதேயில்லை!

~

எங்கெங்கு எப்போது 'கரண்ட் கட்' செய்யலாம்?” லிஸ்ட் போடும் மின்வாரியம்! # எப்போது கரண்ட் விடலாம்னு


~

எழுதிவிட்டு ENTER தட்டிய ட்விட்டுகளைவிட, ”செரி வேணாம் விடுஎன அழித்தவைகளே அதிகம்!

~
வாடா போடாகல்லூரித் தோழனை 17 ஆண்டுகள் கழித்து இணையம் வாயிலாக மீட்டு, பேசினோம் பேசினோம் கடந்தகாலம் கரையக்கரையப் பேசினோம் #வாழ்க இணையம்

~
ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை முற்றிலும் ஒழிப்போம்னு சத்தியம் செய்து தேமுதிக, மதிமுக ஏன் பாமக / காங்கிரசோ கூட அடுத்த முறை ஆட்சியமைக்கலாம்

~

அன்பு இகழப்படும் தருணங்கள் கொடிது

~
இனிமேபெரிய்ய்ய்ய்ய அளவுலகொள்ளை அடிக்கிறவங்கதான் தலைப்புச் செய்தியா இருப்பாங்க போல #அரசியல் கொள்ளையர்களுக்கு இது பொருந்தாது!

~

நம்மை நாமே ஏமாற்றுவதைவிட, மற்றவர்கள் ஏமாற்றுவது குறைவுதான்

~

பொய் ஒரு (ளை)லை

~

இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள்
#
நல்லவேளை, ஆளுநர் ரோசய்யாவை பட்டியலில் சேர்க்காம விட்டாங்களே!

~
மனதுக்கு உகந்தவர்களுக்கென ஒரு மணத்தை மனமே தக்கவைத்துக்கொள்கிறது!

~

தன்னை வணங்க வரும் பக்தனைச் சமமாக நடத்தும் வரம் கூட கடவுள்களிடம் இருப்பதில்லை

~

மீசைஆம்பள சிங்கம்ங்ற உணர்வைத் தருதாமே - விஜய்டிவி நீயாநானா
#காடுகளில் ஆம்பள சிங்கம் என்ன வேல பண்ணுதுன்னு பாருங்க, பொழப்பு நாறிடும் :)


~
எது சந்தோசம் என்பதில்தான் எல்லாருக்கும் பெருங்குழப்பம்

~

பகிர்தல் (25.04.2012)


 வாசிப்பற்ற வீண் பொழுதுகள் 
 
‘சமீப காலமாய் இணையப் பேய் என்னை ரொம்பவும் பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதால், வாங்கி அலமாரியில் அடுக்கிய புத்தகங்களில் சிலந்தி கூடுகட்டத் தொடங்கிவிட்டது. சிலந்தி இழை கண்ணில் மின்னும்போது, நாசூக்காய் விரல்களால் துடைத்தழிப்பது அவ்வப்போது அரங்கேறுவதுண்டு. அலமாரி தட்டுகளில் அடுக்கப்பட்டுக் கிடக்கும் புத்தகங்களின் பாரம் மெல்ல மெல்ல மனதிற்குள்ளும் சேர ஆரம்பித்துவிட்டது. வாசிக்காமல் வடிவாய் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களைக் காணும்போது மெலிதான குற்ற உணர்வு படியத் தொடங்கிவிட்டது. முதலில் மெலிதாய் படர்ந்த குற்ற உணர்வு, மெல்ல மெல்ல அடர்த்தியாகி வருவதைப் பார்த்தால், அது புத்தகங்கள் மீதான ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தி வெறுப்பினைத் திணித்துவிடுமோ என்றும் பயமாக உள்ளது. 



வாசிப்பைத் தவிர வேறெதிலும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாகவே அறிந்திருந்தாலும், ஏதோ ஒன்று அதை தடுத்தாட் கொள்கிறது. ஆனாலும் அதை உடைத்துத் தகர்த்து, மீண்டும் புத்தகங்களை விரல்களுக்கிடையே திணித்து, பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்திருக்கின்றேன்.

”எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்” எத்தனை முறை உணர்ந்தாலும், உரைப்பதில்லை.

   
 சாதிகள் உள்ளதடி பாப்பா 

சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியதில் அதிகப் பயனடைவோர் செய்தித்தாள்கள் என்றே தோன்றுகிறது. தினந்தோறும் குறைந்த பட்சம் அரைப்பக்க அளவிற்காவது, பல உட்பிரிவுகளைக் குறிப்பிட்டு, இவைகளைச் சார்ந்த நீங்கள், உங்கள் சாதியென ‘இதை’ மட்டும் சொல்லுங்கள் எனத் தொடர்ந்து விளம்பரம் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.


சமீபத்தில் செய்தித்தாளில் வந்த ஒரு படத்தைப் பார்த்ததைப் பார்த்து நொந்துபோய் சிரித்தேன். ஒரு சாதி அமைப்பின் விழா. அரங்கில் அந்தச் சாதி சார்ந்த தலைவர்களின் படம் வரிசையாக இருந்தது. அதில் கடைசியாக வைக்கப்பட்டிருந்த படம், ஈழத்தில் போர் நிறுத்தம்கோரி தன்னை மாய்த்துக்கொண்ட “முத்துக்குமார்” படம். உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரை தங்கள் சாதி என அடையாளப்படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தை என்ன சொல்ல!?.

 சட்டம் ஒரு இருட்டறை 
சமீபத்தில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு வந்திருந்த நண்பர், தலைக்கவசத்தோடு வந்திருந்தார். விசாரித்தபோதுதான் தெரிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாம். ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியவேண்டிய அவசியமில்லை. ஈரோடு – பள்ளிபாளையம், பவானி – கொமாரபாளையம் ஆகிய ஊர்களைப் பிரிப்பதே காவிரிதான். ஈரோட்டிலிருப்பவர் எதேச்சையாக பள்ளிபாளையம் சென்றாலோ, பவானியில் இருப்பவர் கொமாரபாளையம் சென்றாலோ தலைக்கவசம் இல்லாது போனால், குற்றமாகக் கருதப்பட்டு, அபராதம் செலுத்த வேண்டும்.



அதுவும் பவானிக்கும் கொமாராபாளையத்திற்கும் இடையே வெறும் பாலம் மட்டும்தான் குறுக்கே அமைந்துள்ளது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் சர்வசாதரணமாக வந்துபோவது வாடிக்கை. சில நூறு அடிகள் இந்தப் பக்கம் இருக்கும் பவானியில் குற்றமாக இல்லாத செயல, சில நூறு அடிகளில் இருக்கும் கொமாரபாளையத்தில் குற்றமாக பாவிக்கப்படுகின்றது

ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரே சட்டத்தை கண்டிப்பாக அமல் படுத்த இயலாத அரசின் கீழ் இருக்கும் மக்கள் பைத்தியம் பிடித்துத்தான் திரியவேண்டும் போல் இருக்கின்றது.

 ரயில் பயணங்களில்  
சென்னையிலிருந்து ஈரோடு வரும் ஏற்காடு விரைவு வண்டியில் இரவு பயணம். என்னுடையது 17ம் எண் கீழ்பக்க படுக்கை இருக்கை. வாட்டும் வெப்ப புழுக்கத்தில் புறப்பட்டத்தில் இருந்து உறக்கமே வரவில்லை. ஒருவழியாக உறங்கலாம் என நினைத்த நேரத்தில், திருவள்ளூரில் வண்டி நிற்க 20ம் எண் படுக்கைக்கு ஒரு புண்ணியவான் வந்து சேர்ந்தார். அரைக்கால் சட்டையும், அலைபேசியுமாக ஏறியவர், தமிழை கடித்துகடித்துத் துப்பியவாறு, யாரிடமோ குடும்பப் பஞ்சாயத்து குறித்து அலைபேசியில் உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்தார் என்பதைவிட ஜோலார்பேட்டை வரை முழங்கிக் கொண்டேயிருந்தார்.

”மாப்ள நம்ம சொந்தத்திலேயே சரசு அக்காவுக்குத்தாண்டா வசதியேயில்ல.ஆனாடா, மாப்ள சரசு அக்கா மாதிரி நல்லவங்க யாருமேயில்லடா” யாரோ ஒரு சரசு அக்கா குறித்த வடிவத்தை நான் கேட்காமலேயே என்னுள் திணித்துக்கொண்டிருந்தார்.


ஜோலார்பேட்டை தாண்டியும் முழங்கினாரா எனத் தெரியவில்லை. நான் உறங்கிவிட்டிருந்தேன். திடீரென யாரை காலைச் சுரண்டுவதாய் உணர்ந்து விழித்தபோது, 

“சார் சேலம், நீங்க எறங்கனுமா” என்றார் ஒருவர். திடுக்கிடலிலும் வந்த கோபத்தை அப்படியே மென்றுகொண்டு, இடவலமாய் தலையாட்டி விட்டு படுத்தேன். சரி எதோ ஆர்வத்தில் எழுப்பினாலும் நல்லது செய்யவே நினைத்திருக்கிறார் என்ற சமாதானத்தோடு உறக்கத்தை தொடரும் முன் 20ம் எண் படுக்கையைப் பார்த்தேன். அந்த அரைக்கால் சட்டை ஆள் ஆழ்துயிலில் இருந்தார். பொறாமையாய் கண்ணை மூடினேன்.

மீண்டும் விழித்தபோது ஈரோட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தது. நான் எழுந்து புறப்படும்போது, ஒரு முறை 20ம் எண் படுக்கையைப் பார்த்தேன், ஜோலார்பேட்டை வரை கொலையாய்க் கொன்ன அந்தப் புண்ணியவான் கவிழ்ந்து படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.

“ங்கொக்காமவனே, அப்படியே தூங்கு, வண்டிய ஒதுக்குப்புறமா போடுவாங்க, ராத்திரி யாராச்சும் வந்து எழுப்பட்டும்” என கவுண்டமணி பாணியில் நினைத்துக்கொண்டே நகர்ந்தேன்.

”நல்ல தூக்கத்துல இருக்கும்போது, ஒருத்தர எழுப்புறது பாவமாமே சார்… நிஜமாவா!?”

-0-