நானும் 2018ம்...

2018ல் மிக முக்கியமான ஒரு காரியம் செய்திருக்கிறேன். சுற்றிலும் நடக்கும் அபத்தம், சகிக்க முடியாத கண்றாவிகளையெல்லாம் பார்த்தவுடன் ஜிவ்வ்வ்வுனு ஒரு கோபம் வரும் தெரியுமா...! அதை எழுதி, பேசி என எதுவும் செய்யாமல், அதற்காகவே இருக்கும் இரண்டு வாட்ஸப் குழுமங்களில் பகிர்ந்துவிட்டு அமைதியாகி விடுகிறேன். அந்த குழுக்களில் தலா 8 மற்றும் 5 பேர் மட்டுமே! குழுமங்களின் பெயரை வெளியில் சொல்வதில் சில சட்டச் சிக்கல்கள் உண்டு என்பதால்.... ஆமாம் அதில் ஒரு வக்கீல் அண்ணன் இருக்கிறார்.
மற்றபடி...
இத்தனை வேகமாய் ஒரு ஆண்டு கடக்குமென்றால் எத்தனை ஆண்டுகளையும் வாழ்ந்து கடக்கலாம் எனத் தோன்றும் ஆண்டு 2018.
2018 என்னளவில் அற்புதமான ஆண்டு...
பேரன்பு தளும்பும் மனிதர்களை இந்த ஆண்டும் இனம் கண்டு கை பற்றிக் கொண்டேன்.
சாலைப் பயணத்தில் அற்புத அனுபவமாக ஒரு நாள், காலை ஈரோட்டில் புறப்பட்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைந்தது என இடை தங்காமல் பயணித்தது குறிப்பிடத்தகுந்த ஒரு அனுபவம். அதிலும் அஜந்தா குகை விசிட்...ம்ம்ம்... என்றும் மறக்க முடியா தருணம்.
உடற்பயிற்சியில் 100 நாட்கள் அதிலும் 100வது நாள் 21 கி.மீ ஓடியது கெத்து என்றால், அதன்பின் தொடர்ந்து ஏமாற்றி சோம்பேறியா இருப்பதற்கு என்னை நானே மொத்திக் கொள்ளலாம்.
ஏறத்தாழ 22 ஆண்டுகளாக இருந்த ஒரு துறையிலிருந்து வெளியேறிய திடமான முடிவு ஒன்று எடுத்திருக்கிறேன். அதேபோல் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஆர்வம் காட்டிய அமைப்புகளிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்திருக்கிறேன்.
எழுத்தில்... புதிய தலைமுறை கல்வியில் 25 வாரங்கள் தொடர் எழுதியது மிக மகிழ்வான பணி. அயல்சினிமா, மின்னம்பலம் என உறவெனும் திரைக்கதையின் அடுத்த பாகத்தை சற்றே மெதுவாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எழுத்தில் இன்னும் சில இலக்குகளை நானே கைவிட்டது குறித்து வெட்கப்படுகிறேன்.
பேச்சு மற்றும் பயிற்சியில் குறிப்பாக இலங்கைக்கு மேற்கொண்ட அனுபவத்தில் என்னை நானே பெருமையாக உணர்ந்தேன். தொடர்ந்து ஐந்து நாட்களில் 9 அமர்வுகளில் ஏறத்தாழ 35 மணி நேரம் பயிற்சியளித்த ஆற்றல் பெரும் தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி தொடங்கி டிசம்பர் 30 தேதிக்குள்ளாக 102 மேடை மற்றும் அரங்குகளில் பங்கெடுத்திருக்கிறேன். அதன்வாயிலாக ஏறத்தாழ 30,000ற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 22,000+. இதற்காக சுமார் 227 மணி நேரம் பேசியிருக்கிறேன். வெறும் 18 பேர் முதல் 2900 பேர் வரை என இரண்டு எல்லைகளுக்குமான கூட்டத்தை இந்த ஆண்டு சந்தித்தேன். சிறப்பு விருந்தினராகச் சென்று, ஒரு கூட்டத்தில் வெறும் 2 நிமிடம் மட்டுமே பேச வேண்டிய சவாலான அனுபவமும் இந்த ஆண்டில் நிகழ்ந்தது. அந்த சவாலை சரியாக கடந்ததாலே சில கூட்ட வாய்ப்புகள் கிடைத்ததையும் மறுக்க முடியாது.
வாசிப்பு என்று எடுத்துக்கொண்டால்.... @#$%@#%@#$% தட் மீன்ஸ்..... த்த்தூ....த்த்தூ....
இந்த ஆண்டில் வருத்தமானது, துன்பமானது எதுவும் இல்லாமலா இருந்திருக்கும். நான் அதை நினைவில் கொள்ளவோ, மீட்டிப் பார்க்கவோ விரும்புவதில்லை என்பதாலேயே அவற்றில் பகிர எதுவும் இல்லை.
மற்றபடி எங்கள் ஈரோடு வாசல் குழுமத்தில் கணிசமான நேரம் மற்றும் பங்களிப்பை செய்திருக்கிறேன். அதிலிருந்து அற்புதமான பலரை அடையாளம் கண்டது பெருமையளிக்கிறது. ஈரோடு வாசல் தம்மளவில் சமூகத்திற்கான உடனடிப் பங்களிப்பாக கஜா புயல் நிவாரணத்தில் 2.20 லட்சம் ரூபாய்க்கு உணவுப் பொருட்களை வழங்கியிருப்பதில் பெரும் நிறைவு கொள்கிறேன்.
நிறைவான அன்பைத் தருவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் யோசித்ததேயில்லை. என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் காட்டும் அன்பிற்கு என்ன பிரதியன்பு செலுத்தப்போகிறேன் எனும் வினாக்களோடுதான் எப்போதும் இருக்கிறேன்.
எவர் மீதும் பெரிய புகார் இல்லை, வெறுப்பு இல்லை, வன்மம் இல்லை. சில தருணங்களில் சிலரிடம் கோபம் வரும், அதுவும் இப்பொழுதெல்லாம் குறைந்து வருகிறது.
இந்த வாழ்வை அதன் இயல்புகளோடு இனிதே வாழ்ந்திடும் கனவு அனுபவமாகவும் தொடர்கிறது. இனியும் தொடரும். இன்னும் கூடுதல் அன்பினையும் பிரியங்களையும் தேடிக்கொண்டே..

செம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்


நாவாற்காடு பிள்ளைகளின் உற்சாகமான வழியனுப்புக் கையசைப்பை மனது முழுக்கச் சுமந்தபடி கல்லடிக்குத் திரும்பினேன். நான்கு நாட்கள் கனவுபோல் கடந்திருந்ததை ஆச்சரியமாய் நினைத்துக் கொண்டேன். இது எனக்கான மிகப் பெரிய சுய பரிசோதனை. தொடர்ந்து நான்கு நாட்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் 6-7 மணி நேரப் பேச்சு என்பது என்னால் இயலுமெனத் தெரிந்துகொண்ட தருணம் இது. திட்டமிட்ட ஒன்பது நிகழ்ச்சிகளில் எட்டு நிகழ்ச்சிகளை முடித்த நிறைவு பெரும் உற்சாகம் கொடுத்தது. இதுவரை மட்டக்களப்பில் நட்புகள் என யாரையும் சந்தித்திருக்கவில்லை. ஒருநாள் சிவகாமி-சுந்தர் வீட்டுக்கு சென்று வந்ததோடு சரி.

முந்தைய நாளே சந்திக்கத் திட்டமிட்டு முடியாமல் போயிருந்த நண்பர் டேனியலை அழைத்தேன். 2015ல் முதன்முறையாக மட்டக்களப்பு பயிலரங்கில் சந்தித்தது. மற்றொருமுறை கொழும்பு அலுவலகத்தில் சந்தித்திருந்தோம். மூன்றாம் முறையாக இந்தச் சந்திப்பு. நிறுவனச் செயல்பாடுகள் குறித்து தொடங்கிய உரையாடல் பொருளாதாரம், இலங்கை அரசியல் என்று மாறி இறுதியாக இறுதிக்கட்ட போரில் நீண்ட நேரம் தொடர்ந்தது. ஈழத்தில் இருக்கும் மக்களோடு போர் குறித்து உரையாடும்பொழுதெல்லாம் எப்படியும் மனது கனத்துவிடும். இந்தமுறையும் கனத்துப் போனது.



சற்று நேரத்தில் நண்பர் கோமகன், நண்பரோடு வந்திருந்தார். இருவரும் ஆசிரியர்கள் என்பதால் அதுவரை  நடந்த பயிலரங்குகள் குறித்தும், அதன் பின்னூட்டங்கள் குறித்தும் துவங்கிய உரை இறுதியாக அடுத்த நாள் செல்லவிருக்கும் புனித மைக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை குறித்துத் திரும்பியது. அவர்களும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். அவர்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பில் நான் சந்தித்தவர்களும், வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களும்கூட மைக்கேல் பாடசாலையில் படித்தவர்கள். தமிழ்நாட்டிற்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், மறைந்த திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா படித்த பாடசாலை.

மைக்கேல் குறித்த அறிமுகங்களில் தவறாமல் இடம் பெற்றவை அருமையான பள்ளி, நன்கு படிக்கும் புத்திசாலிப் பிள்ளைகள் ஆனால் அடங்க மாட்டார்கள், அவர்களிடம் பயிலரங்கு நடத்துவது பெரும் சவாலாய் இருக்கும் என்றே அனைவரும் எனக்குத் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக கோமகனும், அவர் நண்பரும் சிரித்தபடியே.... ’சென்ட்ரல்தானே பார்த்திருக்கீங்க, மைக்கேல்ஸ் பாருங்க!’ அப்பத் தெரியும் என்பதுதான் மென்மையாய் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.

விடிந்ததும் நிகழ்ச்சிக்கு தயாராகும் முன்பு கொழும்பிற்கு மதியம் கிளம்புவதா அல்லது இரவு கிளம்புவதா என மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன். மதியம் ஒரு மணிக்கு இ.போ.ச பேருந்து இருப்பதாகச் சொன்னார்கள். மீண்டும் இ.போ.ச பேருந்து என்பதுதான் மிரட்சியாய் இருந்தது. சரி நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தை வைத்து முடிவு செய்துகொள்ளலாம் என்று ஆயத்தமானேன்.

இந்த நிகழ்ச்சிகளின் பின்னால் இரண்டு முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க வேண்டும் எனும் திட்டமிருந்தது. அதில் ஒருவர் திருமதி. சக்தி அருட்ஜோதி. ஓய்வுபெற்ற முன்னாள் பாடசாலை அதிபர். என்னைக் குறித்தான அறிமுகமும், என் பயண விபரமும் கிடைத்த கணத்தில் அவர்தான் இங்கிருக்கும் பிள்ளைகளுக்கு இப்படியொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய இயலுமா என மட்டக்களப்பு வலையகக் கல்வி பணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களிடம் பரிந்துரை செய்ய, அவர்தான் ஏழு நிகழ்வுகளை அட்டவணையிட்டு ஒழுங்கு செய்தவர். அவர்களை முடிந்தவரை நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு அதன் பின்னூட்டங்களுடன் மட்டுமே சந்திக்க நினைத்திருந்தேன். அதனாலாயே சந்திப்பைத் தள்ளி வந்தேன். ஒருவேளை மதியம் கிளம்புவதாக இருந்தால், காலையிலேயே சந்தித்துவிடுவோம் என்று முதலில் சக்தி டீச்சரிடமும், வலையக கல்வி பணிப்பாளரிடமும் நேரம் கேட்டேன். நிகழ்ச்சிக்கு முன்னதாகவே நேரம் ஒதுக்கினார்கள்.

நான் இருந்த இடத்திலிருந்து மிக அருகில் இருந்த சக்தி டீச்சரின் வீட்டிற்கு முதலில் சென்றேன். ஓய்வுக்காலத்தை பேரக்குழந்தையோடு கழித்துக் கொண்டிருந்த சக்தி டீச்சர்அருட்ஜோதி சார் தம்பதியினர் அன்பாக வரவேற்றார்கள். பின்னூட்டங்களைக் கொடுத்ததும், மாணவிகளின் பின்னூட்டங்களை மேலோட்டமாக வாசித்தவர், மெதடிஸ்த மத்தியக் கல்லூரியின் பின்னூட்டங்களை ஊன்றி வாசித்தார். அவரின் எண்ணவோட்டம் புரிந்தது. திருப்தியாய் தலையசைத்தார். பாராட்டினார். சென்ட்ரல் காலேஜ் ஓகே, மைக்கேல் சற்று கவனமாக கையாளுங்கள் என அவரும் அறிவுறுத்தினார். நேற்று கோமகன் இன்று சக்தி டீச்சர்.... எனக்குள் பொறுப்பும் சவாலும் கூடியது. அதற்குள் அருட்ஜோதி சார் அருமையான காபி ஒன்றை தயாரித்து அளித்தார். மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தபடியாக வலையகக் கல்வி அலுவலகத்திற்குச் சென்றேன். வலையகக் கல்வி பணிப்பாளர் திரு.பாஸ்கரன் மிகுந்த உற்சாகமாக வரவேற்றதோடு, நிகழ்ச்சிகள் குறித்து நிறையக் கேட்டறிந்தார். அந்த குறுகிய இடைவேளையிலும் இந்திய விவசாயம் குறித்தும் நிறையக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நடந்த நிகழ்ச்சிகள் குறித்துக் கேட்டு மகிழ்ந்ததோடு, மைக்கேல்ஸ் சற்று சவாலாக இருக்குமென அவர் பங்குக்கும் தெரிவித்தார்.

கோமகன், சக்தி டீச்சர், பாஸ்கரன் சார் என்று மட்டும் நின்றிருந்தாலும்கூட ஓகே, அங்கிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில், என்னை அழைத்துக் கொண்டு சென்ற ஆசிரியர் திரு. மணிமாறன் அவர்களும் அதையே சொல்ல... எனக்குள் அழுத்தம் கூடத் தொடங்கியது. லோக்கல் லாங்வேஜ்ல சொல்லனும்னா... சற்று டரியல் ஆகியிருந்தேன்.




மைக்கேல்ஸ் பாடசாலைக்கான பயிலரங்கிற்கு, அருகில் உள்ள சிசிலியா கான்வென்டிற்கு மாற்றப்பட்டிருந்தது. சிசிலியா அரங்கில் மற்றொரு நிகழ்வு இருந்த காரணத்தால், எட்டு மணிக்குத் துவங்க வேண்டிய நிகழ்வு தாமதமாகத்தான் துவங்கும் எனத் தெரிவித்திருந்தார்கள். சிசிலியா சென்று அரங்கிற்குள் நுழையும்போது அருட்சகோதரி. மேரி சாந்தினி இருந்தார். இரண்டாம் முறையாக சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.



மாணவர்களை அமர்த்தி வைக்க சற்று நேரம் பிடித்தது. அப்போது ஒரு ஆசிரியை வந்து இராமகிருஷ்ணா மிஷன்நிர்வாகி என்னை சந்திக்க அழைப்பதாகக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா எனக் கேட்க, காலையில் சிசிலியாவில் நடந்தது இராமகிருஷ்ணா மடத்தின் நிகழ்ச்சிதான் எனச் சொன்னார். அவர் அழைத்துச் சென்ற இடத்தில் ஒரு இளம் துறவி நின்று கொண்டிருந்தார். வணக்கம் சொன்னேன். கல்லடியில் இருக்கும் மடத்தின் நிர்வாகியாக இருப்பதாகத் தெரிவித்தார். ஏறத்தாழ என் நாக்கில் மட்டக்களப்புத் தமிழ் ஒட்டியிருந்தது. சட்டென அவர் இப்பத்தான் மூன்று மாதம் முன்பு சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். இன்னும் இங்கத்தைய தமிழ் புழங்கவில்லையெனச் செல்ல ஒருவாரத்திற்குப் பின் தமிழகத் தமிழில் எனக்குப் பேச்சு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கட்டுரை ஒன்றை இராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளியிட்ட வகையில் சுவாமி விமுர்த்தானந்தா அவர்களோடு அறிமுகம் கிடைத்ததைச் சொல்லி, அவர் குறித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விடைபெற்றேன்.




அரங்கில் மாணவர்கள் தயார் நிலையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் குறித்து நான்கு முனைகளிலிருந்தும் எனக்குச் சொல்லப்படிருந்தது அழுத்தமாய் மாறியிருந்தது. உண்மையில் இவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றே நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது.

திங்கட்கிழமை சிசிலியா அரங்கு மைக் சரியாக வேலை செய்யாததால், இந்தமுறை நன்றாக இருக்க வேண்டும் என முன்பாகவே வேண்டியிருந்தேன். ஆனாலும் அது சரிவர இயங்கவில்லை. பலமுறை முயற்சித்தும் திருப்தி ஆகாததால், தங்கள் கல்லூரிக்கே சென்று அதை எடுத்து வர ஆசிரியர் மணிமாறன் ஏற்பாடு செய்தார். அதற்காக அவர் மிகுந்த பிரயத்தனம் எடுத்தார்.

மாணவர்கள் ஒருவித குறுகுறுப்போடு, சற்று கூச்சலும் குழப்பமுமாக அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் நிகழ்ச்சியைத் தொடங்காமல் அமைதியாகக் காத்திருந்தேன். மெல்ல எழுந்து மாணவர்களைச் சுற்றிவர ஆரம்பித்தேன். என்னைப் பார்ப்பதும் அவர்களுக்குள் பேசுவதுமாய் ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அரட்டை ஓய்வதாகத் தெரியவில்லை. ஒரு குழு வெகு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தது. அவர்களின் மத்தியில் ஒரு காலி இருக்கை இருக்க, அதில் அமர்ந்தேன்.

கிண்டலும் சிரிப்புமாய் சட்டென என்னை ஓட்ட ஆரம்பித்தார்கள். ‘யார், எங்கிருந்து, எதுக்கு வந்திருக்கீங்க!?’ எனும் கேள்விகள் பறந்தன இந்தியா என்றதும் ‘விஜய் தெரியுமா சார்!?’ என்றான் ஒருவன். ‘எனக்குத் தெரியும், அவருக்குத் தெரியாது!’ என்றேன். ’அப்ப என்னை உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே!’ என்றான். எப்படி எனக் கேட்க, ”போக்கிரி படத்தில் விஜய் கூட டான்ஸ் ஆடுறது நான் தான், என்னைப் பார்க்காம படத்தில் அப்படியென்ன பார்த்தீங்க!” என்றான். இன்னொருவன் அனுஷ்கா தெரியுமா சார். அவ என் அக்கா சார்!’ என்றான். இப்படி அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

நானும் அதற்காகத்தான் காத்திருந்தேன். எனக்கான நுழைவை அவர்களே ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்களை மேலும் கவனிக்க ஆரம்பித்தேன்.. முடிந்தவரை அவர்களைப் பேச விட்டு, கொட்ட விட்டு ஓரிரு வார்த்தைகளில் அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவழியாக மைக் ஏற்பாடாகி பயிலரங்கு தொடங்கியது. ஆசிரியர் மணிமாறன் அவர்கள் வரவேற்புரை, அறிமுகவுரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.

மைக்கேல்ஸ் பிள்ளைகள் குறித்து அத்தனைபேரும் கூறியிருந்ததை மனதில் வைத்துக் கொண்டு ஆரம்பித்தேன். எல்லோரும் மைக்கேல்ஸ் மாணவர்கள் குறித்து அறிமுகப்படுத்தும்போது, மிக நன்றாகப் படிப்பவர்கள், அதற்கு நிகராகக் குறும்பு செய்பவர்கள் என்பதையே வலியுறுத்தியிருந்தனர். எந்த அளவுக்கு குறும்போ அதற்கு நிகரான தேடலும் அவர்களிடம் இருந்தது.  குறும்பை எனக்கான ஒத்துழைப்பாக மாற்றிவிட வேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன்.

இந்த அரங்கு எப்படியிருக்கும் என்பது குறித்து தீர்க்கமாக முன்னோட்டம் தெரிவிக்கும்போதே, அமைதியானர்கள். அனுஷ்காவின் தம்பியும், விஜயின் நண்பனும் குனிந்த தலை நிமிரவில்லை. இடைவேளையில் தனித்தனியே உரையாடினேன். நிகழ்வின் நிறைவில் நெகிழ்வான சில பின்னூட்டங்களை கையளித்தார்கள். அவர்களின் விஜய் தெரியுமா, அனுஷ்கா தெரியுமா!?’ என ஆரம்பத்தில் ஓட்டிக் கொண்டிருந்தவர்கள்தான் “வீ வில் மிஸ் யூ / ஐ மிஸ் யூ சார்!” என எழுதிக் கொடுத்திருந்தார்கள். ஆசிரியர் மணிமாறன் நிகழ்ச்சி குறித்து பெருமகிழ்ச்சி கொண்டிருந்தார். அன்போடு என்னை அறைக்கு அழைத்து வந்து விடைபெற்றார்.






நிகழ்ச்சியை முடித்து அறைக்குத் திரும்பியதும், தொடர்ந்து நிகழ்ச்சிகளின் மேல் அக்கறையாய் இருந்தவர்களுக்கு I have done it! எனும் செய்தியை அனுப்பிவிட்டு ஐந்து நாட்களின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு மெல்ல மிதக்க ஆரம்பித்தேன். காலையில் சந்தித்திருந்த இராமகிருஷ்ணமட நிர்வாகி, நேரம் இருப்பின் மாலை சந்தியுங்கள் எனச் சொல்லியிருந்தார். மாலை நான்கு மணிக்கு அவரைச் சந்தித்தேன். அரை மணி நேரம் எனத் திட்டமிட்டிருந்த சந்திப்பு ஏறத்தாழ இரண்டு மணி நேரங்களை எடுத்துக் கொண்டது.

மீண்டும் சக்தி டீச்சரை சந்தித்து மைக்கேல்ஸ் பிள்ளைகளின் பின்னூட்டங்களை அளித்து, வாசித்துவிட்டு பாஸ்கரன் சாரிடம் கொடுத்துவிடச் சொல்லி வேண்டினேன். நான் எவ்வளவோ மறுத்தும் இரவு உணவிற்கு அருட்ஜோதி சார் என்னை சரவண பவன் உணவகத்திற்கு வலிந்து அழைத்துச் சென்றார். நிறைவான மனதோடு, அன்பு நிறைந்தவர்களோடு சாப்பிடும்போது உணவும் அமுதம் அமைகிறது. திரும்புகையில் என்னை அறையில் விட்டுவிட்டு, பேருந்துக்கு புறப்படும் நேரத்தைக் கேட்டுவிட்டுப் போனார். மிகச்சரியாக நான் அறையைவிட்டு கிளம்பலாம் என நினைத்த நேரத்தில் அறையின் வாசலில் காத்திருந்தார். என் தந்தை வயது கொண்டிருப்பவர். எனக்கு பதட்டமானது, ஏன் சார் இப்படி சிரமப்படுறீங்க என்றேன். அதெல்லாம் பரவாயில்லை என என்னோடு பேருந்து நிறுத்தம் வரை உடன் வந்து, என்னோடு இருந்து பதிவு செய்திருந்த பேருந்து வந்ததும் ஏற்றி வழியனுப்பிச் சென்றார்.




// Yes... I have done it!
மட்டக்களப்பில் ஏறத்தாழ 117 மணி நேரம்...
ஆயிரக்கணக்கான நட்புகள்...
பல நூறு கை பற்றுதல்கள்...
அரிய சில சந்திப்புகள்...
கொண்டாட்டம்
ஏக்கம்
நெகிழ்வு
சிரிப்பு
கண்ணீர்
பிரியம்
மரியாதை
பேரன்பு...
லவ் யூ மட்டக்களப்பு 
நன்றி நல் உள்ளங்களே! :)
சென்று வருகிறேன்
// என்று அன்றிரவு பேருந்தில் இருந்தபடி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது அந்த ஊர், மண், கட்டிடங்கள், காற்று, கடலுக்கு மட்டுமல்ல. அங்கே அந்த ஐந்து நாட்களில் நான் கடந்து வந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கும்தான்.

இந்த நிகழ்வுகளின் பின்னால் அன்பிற்கினிய மஞ்சுபாஷினி, சஞ்சயன் செல்வமாணிக்கம், கோபி ஆகியோரின் உதவி என்றைக்கும் அன்பிற்கும் நன்றிக்கும் உரியது.

மிகவும் சொகுசான பேருந்து மிதந்தபடி விரைந்து கொண்டிருந்தது. சாமி-2 ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையில் இருந்து திருநெல்வேலிக்குத் திரும்பியிருந்த, ராவணப் பிச்சையும் இராம்சாமியும் சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு சிரிப்பாக இருந்தது. பின் இருக்கையில் காத்தான்குடியில் ஏறியிருந்த இருவரில், ஒருவர் தன் அருகில் இருந்தவருக்கு எல்லா வசனங்களையும் ஐந்து விநாடிகள் முன்கூட்டியே சொல்லிக் கொண்டிருந்தார். “யோவ் ஹரீஈஈஈஈஈ” என்று எழுந்த இயலாமைக் குரலை அமுக்கிவிட்டு, இதுவும் ஒரு அனுபவமென, கடந்திருந்த ஐந்து நாட்களை அசை போட ஆரம்பித்தேன்.

குறைந்தபட்சம் தொட்டுவிடும் தேடல் அது - வின்சன்ட், நாவற்காடு பாடசாலைகள்


ஆசிரியர்களுக்குமான இரண்டாவது பயிலரங்கும் நிறைவடைந்த திருப்தி, தொடர் அடை மழை என இரவு மிக நெகிழ்வாய் அமைந்தது. காலையிலும் மழை தொடர்ந்து கொண்டிருந்தது.

வின்சென்ட் மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கான பயிரலரங்கு. நண்பர் உமா சங்கர் அழைத்துச் சென்றார். மழை சாரலாக மாறி மெல்ல அடங்கத் தொடங்கியிருந்தது. பள்ளியை நெருங்கும்போதுதான் கவனித்தேன், அகலமான சாலையில் சில தற்காலிக குறியீடுகள் வைக்கப்பட்டிருந்தன. அது பள்ளி நேரத்திற்கான சமிஞ்சைகள். U-Turn கூடாது என்பதும் அவற்றில் ஒன்று. சாலையில் யாரும் இல்லை, எனினும் விதிகளை மிகக் கச்சிதமாக மதித்து வாகனத்தை நிறுத்தினார். இப்படி பள்ளிகள் முன்பு காலையும் மதியமும் மட்டும் சிக்னல்கள் வைப்பது ஒரு நல்ல யோசனையாகப் பட்டது. அதை நேர்த்தியாக மதிக்கும் இலங்கை மக்களின் குணம் கற்றுக்கொள்வதற்கு உரியது.




பயிலரங்கு தொடங்கியது. பிள்ளைகள் பெரும் வீச்சு காட்டினார்கள். உரையாடலை ஊக்குவிக்கும் வண்ணம் ஏதேனும் சாக்லேட் தருவது வழக்கம். காலையில் பள்ளியில் என்னிடம் கொடுத்திருந்த சாக்லெட்களை மொத்தமாய் கபளீகரம் செய்துவிடுவது போல ஒவ்வொருவரும் ஆர்வமாய் பங்கெடுக்கத் தொடங்கினர்.

மிக ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தினர். தரம் வாய்ந்த பிள்ளைகள் தாம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் முனைப்போடு வெளிப்படுத்தினர். சிறிதும் அவர்களிடம் நான் தயக்கத்தைக் கண்டிருக்கவில்லை. நேரம் கடக்க கடக்க நான் உற்சாகம் ஆனேன். உண்மையில் மூன்று மணி நேரம் அதற்குள் நெருங்கிவிட்டதா என நான் நினைக்கும் அளவிற்கான ஒத்துழைப்பு.





மதியம் நாவற்காடு  பள்ளியில் ZOA  அமைப்பினர் ஏற்பாடு பயிலரங்கு இருப்பதால் வின்சென்ட் பள்ளியில் குறித்த நேரத்தில் முடித்தே தீர வேண்டியிருந்தது.

நிகழ்வை முடித்து அதிபர் திருமதி.சுபாஹரனை சந்தித்து விடைபெறவும், நண்பர் ஜெயந்தன் வந்து சேரவும் சரியாக இருந்தது. மதிய உணவை முடித்துவிட்டு நாவற்காடு நோக்கி பயணித்தோம்.

*

கரடியனாறு அளவிற்கு தொலைவு இல்லையென்பதே எனக்கு முதல் ஆறுதலாக இருந்தது. ஆனால் அதே வழியில்தான் பயணித்தோம். செல்லும் வழியில் மழையடிக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் நின்றது. மாணவர்களும், மாணவிகளும் வெள்ளைச் சீருடையில் குடைகளைப் பிடித்தவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். பள்ளியை நெருங்குகிறோம் எனச் சொன்னார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கு வரும் பிள்ளைகள் எனத் தெரிந்தது. கடக்கும் பொழுதெல்லாம் வாகனத்தில் இருந்து அவர்களை எட்டிப் பார்த்தபடியே கடந்தேன். அவர்கள் அதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி என்றார்கள். இன்னுமே மீண்டிடாத இடம் போன்றுதான் தோன்றியது. பள்ளி மிக எளிமையாகத் தென்பட்டது. எளிமையாக என்பதைவிட ஏழ்மையாக என்றுதான் சொல்ல வேண்டும்.

வகுப்பறைகள் மிக எளிமையாக இருந்தன. கலையரங்கத்திற்கான கட்டிடம் மட்டும் புதிதாக கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் இருந்தது. அதில் தான் பயிலரங்கிற்காமாணவ மாணவிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். லைட், ஃபேன் இருந்தும், கட்டிடத்திற்கு இன்னும் மின் இணைப்பு வந்திருக்கவில்லை.



இரண்டு பள்ளிகளைச் சார்ந்த A-Level இரு பாலர் பிள்ளைகள் கலந்து கொண்டிருந்தனர். சிவப்பு மற்றும் நீலக் கழுத்துப்பட்டையை வைத்தே இரு பள்ளிக்குமான வேறுபாட்டினைத் தெரிந்து கொண்டேன்.

பயிலரங்கு நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக தற்காலிக மின் இணைப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். பேசுவதற்கு வசதியாக ஒரு மைக்செட்காரரையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் திருவிழாவிற்கு தயாராவது போல் சினிமா பாடலை ஒலிக்கவிட்டு ஒலியை பலவாறு சரி செய்து கொண்டிருந்தார். எனினும் நிகழ்வு தொடங்கியதும், மைக் சொதப்பியது. மைக் இல்லாமலே பேச முயற்சித்தேன். ஒவ்வொன்றிலும் மூன்று மணி நேர பேச்சு என எட்டாவது நிகழ்ச்சி என்றளவில் நானும் களைத்திருந்தேன். சப்தமாக பேசுவது மிகச் சிரமமாக இருந்தது. ஆனாலும் மைக் செட் தம்பி ஏதேதோ செய்து மைக்கை சரி செய்து கொடுத்தார்.



இடைவேளையில் அனைவருக்கும் Refreshments வழங்கப்பட்டது. பிள்ளைகள் அங்கும் இங்கும் உலவ, நான் பள்ளியைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தேன். பயிலரங்கில் இருந்த ஒரு பத்தாம் வகுப்பைச் சார்ந்த சிறிய மாணவன், அவனுடைய பையை எடுத்துக்கொண்டிருந்தான். “என்ன தம்பி வீட்டுக்கு போறியா!?” எனக் கேட்டேன். இல்லை என்றவன் கையில் அமைப்பினர் வழங்கிய குளிர் பானம் இருந்தது. ”அது ஏன் இங்கே கொண்டு வந்திருக்கே, அங்கேயே குடிக்க வேண்டியதுதானே!?” ”வீட்ல தம்பிக்கு கொண்டு போறேன் சேர்என்றான். ஒரு கணம் விக்கித்துப் போனேன். ”சரி அதை பேக்ல வச்சுட்டு வா, இன்னொன்னு வாங்கி நீ குடிஎன்றேன். மறுத்தான். “நானே வாங்கித் தர்றேன் நீ குடி, இதை வீட்டுக்கு கொண்டு போ!” என்றேன். கடுமையாக மறுத்தான். “ஏன் இந்த ட்ரிங் உனக்கு பிடிக்காதா!?” எனக் கேட்டேன். “பிடிக்கும், ஆனா வேணாம் சேர்என்றான். என்னால் இயன்றவரை வற்புறுத்தியும், நான் தோற்றுத்தான் போனேன்.



பயிலரங்கு தொடர்ந்தது. பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டு பங்கெடுத்தார்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு பயிலரங்கை நிறைவு செய்தேன். எல்லாம் எடுத்து வைக்கும்போது மைக் செட் தம்பி வந்து மைக் எடுத்துக்கட்டுமா எனக் கேட்டார். பெயரைக் கேட்டு கை குலுக்கி, ரொம்ப சிரமப்பட்டு, நல்லா செஞ்சு கொடுத்தே தம்பிஎன்றேன். எதோ சொன்னார். விளங்கல என்றேன். குனிந்துமைக் சரியா இல்லாதத்துக்கு மன்னிச்சிடுங்க. அடுத்தமுறை சரியா இருக்கும் என்றார். நெகிழ்வோடு அணைத்துக் கொண்டேன்.

வெளியேறி வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்தேன். ஒன்பதில் எட்டு நிகழ்ச்சிகள் செய்து முடித்த திருப்தி. அலையலையாய் வெளியேறிய பிள்ளைகள் கும்பலாய் வந்து கை பற்ற முயற்சித்தார்கள். குறைந்தபட்சம் தொட்டுவிடும் தேடல் அது. மேலும் நெகிழ்ந்து புறப்பட்டோம்.

எங்களுக்கு முன்பாக புறப்பட்ட பிள்ளைகள், நாங்கள் செல்லும் பாதையில் வரிசையாக சைக்கிளில் நீண்ட தூரம் வரைக்கும் சென்று கொண்டிருந்தனர். எங்கள் வாகனம் ஒதுங்கும்போது அடையாளம் கண்டு “சேர்என விதவிதமாக கத்தியபடி மலர்ச்சியோடு கை ஆட்டியதெல்லாம் வாழ்நாளின் மிக நெகிழ்வான நிகழ்வுகள். ஏறத்தாழ 25 தினங்களைக் கடந்து இதை எழுதும் கணத்திலும்கூட நெகிழ்ந்து குழைகிறேன்.


மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு


மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளுக்காக விடியலே உற்சாகமாக இருந்தது. இன்றைய தினத்தை நிறைவு செய்தால் பாதிக்கும் மேல் தாண்டிவிட்ட திருப்தி வந்துவிடும். காலையில் மெதடிஸ்மத்திய ஆண்கள் கல்லூரி இலங்கையின் கிழக்கில், கொழும்பில், வெளிநாடுகளில் வசிக்கும், தொடர்பில் இருக்கும் பல்வேறு இணைய நட்புகள் படித்த கல்லூரி. கல்லூரியின் அதிபர் திரு.பாஸ்கரன் அவர்கள் சரியான நேரத்தில் வந்து அழைத்துக் கொண்டார்.



கல்லூரிக்குள் நுழையும்போதுதான் அதன் துவக்க வருடத்தைப் பார்த்தேன். 1814 துவங்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் 204 ஆண்டுகளான கல்லூரி. கட்டிடங்கள் முழுமையாக மாறிவிட்டிருந்தாலும், இரண்டு நூற்றாண்டுகளின் வரலாறு என்பது மிரட்டத்தான் செய்தது

முதன்முறையாக மாணவர்களை மட்டும் சந்திக்கும் நிகழ்வு. காற்றோட்டமும் வெளிச்சமும் நிரம்பியிருக்கும் நீள் அரங்கில் மாணவர்கள் நிரம்பியிருந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களை அமைதிப்படுத்த அவ்வப்போது முயற்சியெடுத்தபடியே இருந்தனர். .  ஆனாலும் மாணவர்கள் என்றாலே கொஞ்சம் அப்படித்தான் என்பதும் அங்கும் பொதுவானதாகவே இருந்தது. அதிபர் திரு.பாஸ்கரன் சிறப்பானதொரு தொடக்க உரை நிகழ்த்தினார்.



பயிலரங்கு தொடங்கியது. ஒருமுனையில் ஒத்துழையாமை இருந்தாலும், இன்னொரு முனையில் மாணவர்கள் பேரார்வம் காட்டினர். பல்வேறு கிராமப் புறங்களில் O-Level தேர்வில் தேர்ச்சியடைந்து, மட்டக்களப்பில் இருக்கும் முக்கியக் கல்லூரியான மத்தியக் கல்லூரிக்கு வந்திருப்பதை சில மாணவர்கள் உணர்த்தினர். சிலர் படிப்பில் மிகத் தீவிரமாக இருந்தனர். இவர்களுடனேயே பயணித்து தேவையானதை உணர்த்துகையில் மற்றவர்களும் மெல்ல வழிக்கு வந்தார்கள். இடைவேளைக்குப் பிறகு முழுவதும் ஒன்றிப்போனார்கள். ஆரம்பத்தில் சேட்டையெனக் கருதிய பிள்ளைகளும் உத்வேகத்தோடு பங்கெடுத்தார்கள்.





நிகழ்வு முழுக்க உடனிருந்த வேதியியல் ஆசிரியர் திரு.உமா சங்கர் அவர்கள் வேண்டிய அனைத்தையும் சிறிதும் தயங்காமல் செய்து கொடுத்தார். அத்தோடு எனக்கு இனிய நண்பராகவும் மாறிப்போனார். நிகழ்விற்கு பின் என்னை அழைத்துக் கொண்டு அறையில் விட்டது மற்றும் மாலை ஆசிரியர்கள் பயிலரங்கிற்கு பொறுப்பெடுத்துக் கொண்டது என ஒரு முன் மாதிரியாக அவர் இருந்ததைக் கண்டு வியந்தேன். அந்த நட்பும் பெருமைக்குரிய நட்பாகக் கருதுகிறேன்.

அறைக்குத் திரும்பி இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்க கிடைத்தது. முதன் முறையாக மட்டக்களப்பில் மழையைக் கண்டேன். சடசடக்கும் பகல் மழை. கடற்கரையோர நிலப்பரப்பில் வாழ்வோருக்கு இது பழக்கப்பட்டிருந்தாலும், என்னைப் போன்றவர்களுக்கு கடலோர மழையென்பது ஒரு பேரதிசயமே.

மாணவர்களின் பின்னூட்டங்களை மேலோட்டமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அங்கு கலந்து கொண்ட ஒரு மாணவன் தன்னுடைய சொந்த ஊரான திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேசத்தில் இருக்கும் சேனையூர் மத்தியக் கல்லூரியிலும் சென்று இதே போன்று வகுப்பு நடந்த வேண்டும் எனக் கேட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. தனக்குக் கிடைத்தது தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பெருந்தன்மை மனம் அது.  





மதியம் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு வின்சென் மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது. மழையைப் பொருட்படுத்தாது மத்தியக் கல்லூரி மற்றும் வின்சென்ட் பாடசாலை ஆசிரியப் பெருமக்கள் திரண்டிருந்தனர்.

பயிலரங்கு தொடங்கியது முதலே உற்சாகமும், சிரிப்புமாய் அவர்கள் பங்கெடுத்த விதம் பெரும் ஊக்கம் கொடுத்தது. தொடர்ந்து அமர்ந்திருப்பது ஒரு சவால் என்றாலும்கூட, அதைப் பொருட்படுத்தாது உற்சாகமாக பங்கெடுத்தனர். வெளியில் சடசடக்கும் மழை, உள்ளே அவர்களோடு உற்சாகமான உரையாடல் என அந்த மூன்று மணி நேரம் மிக வேகமாய்க் கடந்து போனது.



பணி நேரம் முடிந்து தொடர்ந்து மூன்று மணி நேரம் அவர்களை இருக்கப் பணிப்பதைவிட, வேலை நாளின் வேலை நேரத்தில் வைப்பதே இது போன்ற பயிலரங்குகளுக்கு உகந்ததாக இருக்கும் எனும் குறிப்பையும் ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறேன்.

நிகழ்வை முடித்து விடைபெறும்போதும் நன்கு இருள் சூழ்ந்திருந்தது. மனதிற்குள் பிரகாசமாய் இருந்தது. மழை மெலிதாய் சடசடத்துக் கொண்டிருந்தது. அழைத்து வந்த ஆசிரியர் உமா சங்கர் அவர்களோடு இனிதாய் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அறைக்குத் திரும்பும்போது மழை சற்று வலுத்திருந்தது மூன்று நாட்களை மிக எளிதாகக் கடந்திருந்த தெம்பு பெரும் ஆசுவாசம் கொடுத்தது.

-


சேர்... என்னையெல்லாம் மறந்துடுவீங்கதானே!?


முந்தைய தினம் மாணவிகளிடம் பெற்றிருந்த பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் எனும் தெம்பு வந்தது. அதுவே உறக்கத்தைத் தள்ளிப்போட்டது, அதுவே பின் ஆழ்ந்த நித்திரையைக் கொடுத்தது. அதுவே விரைந்து நித்திரை கலைய ஆணையிட்டது

செவ்வாய் காலை  கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் மதியம் ஒரு மணிக்கு கரடியனாறு மகா வித்தியாலத்தில் இருக்க வேண்டும் என்பதால் முடிந்தவரை காலை நிகழ்ச்சியை முன்கூட்டியே முடிக்க நினைத்திருந்தேன். பள்ளி அதிபர் திருமதி.பிரபாஹரியிடம் நான் ஏழு மணிக்கே தயாராக இருப்பேன், முடிந்தவரை 11 மணிக்கு முன்னதாக முடிக்க விரும்புகிறேன் எனக் கூறியிருந்தேன்.

அழைத்துச் செல்ல இரண்டு ஆசிரியர்கள் ஆட்டோ ஒன்றில் வந்திருந்தார்கள். கல்லடி பகுதியில் அன்று வழமையான பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் என்பதால் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்வு 8.30க்கு தொடங்கியது.


வரவேற்கும் விதமாக இரண்டு மாலைகளை அணிவித்து அழைத்துச் சென்றதில் சற்று மிரண்டுதான் போனேன். மட்டக்களப்பு செல்லும் முன்பே அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து சில காணொளிகளைத் தேடிப் பார்த்ததில், விழாக்களில் இப்படி மாலையிடுவதை அறிந்திருந்ததால், அதனை ஒருவகையில் புரிந்துகொண்டாலும், கூச்சம் வழிந்தோடியது. உடனே கழட்டி விடலாமா என அனுமதி கேட்டேன். சிரித்துக் கொண்டே மறுத்தார்கள். அரங்கினுள் நுழைந்து அதிபர் திருமதி.பிரபாஹரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தும் வரை கழுத்தில் வைத்திருந்து கழற்றியதும் அப்பாடா என்றானேன்.



Advanced Level தேர்வுக்கு தயாராகும் உற்சாகமான மாணவிகள் மிகுந்த உத்வேகத்தோடு பங்கெடுத்தார்கள். உரையாடல்களில் உடன்பட்டனர். கேள்விகளைத் தொடுத்துவிட்டு ஒருவரை எதிர்பார்த்தால், நால்வராக முன்வந்தனர். இடைவேளையின்றி மூன்று மணி நேரம் ஒரே வேகத்தில் நகர்ந்தது அமர்வு. நிறைவடைந்ததும் தானாக ஒரு மாணவி முன் வந்து மைக் வாங்கினார். “என்னம்மா விசயம், நன்றியுரை கூற உங்களைப் பணித்திருக்காங்களா!?” என்றேன். ”இல்லை, நானாகத்தான் வந்திருக்கேன்என்றபடி நிகழ்ச்சி குறித்த தம் கருத்தைச் சொல்லத் தொடங்கினார். தேர்ந்தெடுத்த சொற்களில் நிதானமாய் தான் உள்வாங்கியதை மொழிந்தார்.



விடைபெறும் பொழுதுஅந்தப் பள்ளியில் படிக்கும் A-Level மாணவியொருவர் கல்லடி பாலத்தின் அருகே நீரில் இறந்து கிடந்ததாககனமாக செய்தியொன்றைப் பகிர்ந்தார்கள். உயிரோடிருந்திருந்தால் அவளும் இன்றைய அமர்வில் இருந்திருப்பாள் என்பது எனக்கு கனம் கூட்டியது. அந்தப் பெண் கரடியனாறு பகுதியைச் சார்ந்தவர் என்பதால் அதே செய்தி அங்கும் உரையாடப்பட்டது.

மதியம் கரடியனாறு பள்ளி நிகழ்விற்கு அழைத்துச் செல்ல ZOA தொண்டு அமைப்பைச் சார்ந்த நண்பர் ஜெயந்தன் காத்திருந்தார். நேரத்தின் அருமை கருதி, வேறொரு கூட்டத்தில் இருந்த அதிபரைக்கூட சந்திக்காமல் அவசரமாக விடைபெற்றேன்.

மட்டக்களப்பில் மதிய உணவை முடித்து கரடியனாறு நோக்கிப் பயணம் தொடங்கியது. உள்ளடங்கிய கிராமப் பகுதி. 2009ல் இறுதிக்கட்டப் போரில் பாதிக்கப்பட்ட பகுதி. எங்கு நோக்கினும் வயல்வெளி. சாலைகளில்  மனிதர்கள் அரிதாகவே தென்படுகிறார்கள். செல்லும் வழியில் ஓரிடத்தில் தொல்லியில் துறையினர் ஏதோ ஆய்வு மேற்கொண்டிருந்தது தெரிந்தது.

நூற்றாண்டுகளைக் கடந்த கரடியனாறு மகா வித்தியாலம் பள்ளியை அடைந்தோம். அங்கே Advanced Level பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவென்பதால், மட்டக்களப்பு மேற்கு வலையத்தில் உள்ள மற்றொரு பள்ளியிலிருந்தும் பிள்ளைகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆர்வத்தில் 9,10ம் வகுப்பு பிள்ளைகளும் அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளி நேரம் முடிந்தபிறகு, சிறப்பு நிகழ்வாக பிள்ளைகள் அழைத்து அமர வைக்கப்பட்டிருந்தனர். Advanced Level பிள்ளைகள் மட்டுமே இலக்கு என்பதால், மற்ற வகுப்பு பிள்ளைகளை அனுப்பிட வேண்டினேன். ஒரு வழியாக 9ம் வகுப்பு பிள்ளைகளை அனுப்பி வைக்க மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் பறந்தனர். முதன்முறையாக இருபால் பிள்ளைகளை இங்கு சந்திக்கிறேன்.

ZOA சேவை அமைப்பினர் பெரும் பிரயத்தனம் எடுத்து மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். Projector, Audio, பிள்ளைகளுக்கான Refreshments என அனைத்தும் சிறப்பாக இருந்ததால், அதுவே பெரும் துணையாய் அமைந்தது. கிராமப்புற பிள்ளைகள் எப்போதும் தயக்கங்களை உடைத்து முன்வருவார்கள். எதையும் பற்றிக்கொள்ளும் தகிப்பு அவர்களிடம் பலம். அவ்விதமே இரண்டு பள்ளிகளின் பிள்ளைகளும் உத்வேகத்தோடு பங்கெடுத்தனர். தொடர்ச்சியான இரண்டாவது நாள், கல்லடியிலிருந்து பயணித்து வந்தது என அனைத்து களைப்பையும் அந்தப் பிள்ளைகள் தம் உற்சாகமான பங்கேற்பால் முறியடித்து இனிய பொழுதாக்கினர்.



உண்மையில் பள்ளி நேரம் மதியம் 1.30க்கு முடிய அதன்பின் ஒரு பயிலரங்கில், யார், எதற்கு, எவ்வளவு நேரம் என்றெல்லாம் தெரியாமல் முதன்முறையாக அமர வைக்கப்படுவது சலிப்பேற்படுத்தக்கூடியதே. எனினும் அவர்கள் அமர்ந்திருந்தனர், நிறைய உரையாடினர், குதூகலமும் கொண்டாட்டமுமாய் கொண்டு சென்றனர்.

விடைபெறும்போது ஒவ்வொருவரும் ஓடி வந்து கை பற்றி பேசத் தொடங்கினர். ஒரு மாணவன் புன்னகையோடு தயங்கித் தயங்கி வந்தான். ”என்ன தம்பி உள்ளதான் இருந்தியா... முகமே காட்டல!” என்றபடி கை நீட்டினேன். கைகளெங்கும் தழும்பு. ”என்னது... இத்தனை தழும்பு?” என்றதற்கு, ”இதெல்லாம் விழுப்புண்கள் சேர்!” என அழுத்தமாய் புன்னகைத்தான். ”நல்லா படி... உயரத்துக்குப் போ!” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. மகள் வயதொத்த ஒரு பெண் ஓடி வந்தாள், “சேர்... என்னையெல்லாம் மறந்துடுவீங்கதானே!?” ஏக்கம் தொணிக்கும் கேள்வி. ஆயிரங்களில் பிள்ளைகளைச் சந்தித்துக் கடப்பதால் மறந்துவிடுவது வெகு இயல்பானது. என்ன சொல்ல? “தொடர்பில் இரு மா... நினைவு வச்சிருப்பேன்!” ன்றேன். இணையத்தின் வழி தொடர்பில் இருக்கிறாள். அனைவரிடமும் நெகிழ்ந்து விடைபெற்றேன்.




வாகனம் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டது. ஓட்டுனர் போர் நிகழ்ந்த கால வாழ்வு குறித்த சில நினைவுகளை, இடங்களைச் சுட்டி சொல்லிக்கொண்டே வந்தார்.

கல்லடியை அடைந்தபோதும் மனம் கனத்தே இருந்தது. ஆனால் சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் எனும் நிம்மதியும் அந்த கனத்தினூடே கலந்திருந்தது.

இரண்டு நாட்களின் நிறைவில் திருப்திக்கு நிகரான களைப்பு இருந்தது. இதுவரை இப்படி இரண்டு நாட்கள் மட்டுமே தொடர்ந்து இயங்கிய அனுபவம் உண்டு. மூன்றாம் நாள் தொடரும்போது குரல் பாதிக்கப்பட்டிருக்குமா? மூன்றாவது நாளும் சுமார் ஏழு மணி நேரம் நின்று பயிலரங்கு நடத்தமுடியுமா என்றெல்லாம் லேசான சந்தேகம் இருந்தாலும், இரண்டு நாட்களைக் கடந்த மகிழ்ச்சி, எடுத்த பொறுப்பில் பாதியை நெருங்கியிருக்கும் தெம்பு அடுத்த நாளை எதிர்கொள்ள ஆயத்தமாக்கியது.