நாங்கெல்லாம் ஒரு காலத்தில் 'எப்படி இருந்தவங்க!’ தெரியுமாடே!”

வங்கிக்குச் செல்ல வேண்டிய முக்கியமான ஒரு காரணத்தை முடிந்தவரை தள்ளிப்போட்டு, அது மிக மிக மிக மிக மிக முக்கியம் என்றான சூழலில் போய்ட்டு வந்துடுவோம் என்று கிளம்புகையில் இரண்டு பார்சல்கள் அனுப்ப வேண்டியது நினைவுக்கு வந்தது. #வேட்கையோடு_விளையாடு வேண்டுமென பணம் செலுத்தியவர்களுக்கு மார்ச் மூன்றாம் வாரத்தில் தயாரித்து வைத்த பார்சல்கள்.
வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவு வங்கிக்கு. அங்கிருந்து 150 மீட்டர் தொலைவு தபால் நிலையத்திற்கு.
யாருமே இருக்க மாட்டார்கள் என நினைத்த தபால் நிலையத்தில் மூன்று பேர் வரிசையில் காத்திருந்தார்கள். ஒருவர் உடனே சென்று விட, அடுத்தவர் நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின் பணம் பெற்றுக் கொண்டு நகர்ந்தார். அரசு முத்திரையிட்ட கவர்களை கத்தையாக வைத்திருந்த பெண் மாஸ்க் அணிந்திருக்கவும் இல்லை. தபால் நிலையத்தின் எந்தவொரு பாகத்தைத் தொடுவது குறித்தும் அவர் கவலைப் படவும் இல்லை. அதீத இயல்பு நிலையில் இருந்தார்.
அவரும் நகர்ந்த பிறகு என் முறை வந்தது. பார்சல் என்பதால், கதவு திறந்துதான் கொடுக்க வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பியதில் இருந்து எதையும் தொடவில்லை எனும் கவனத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.
கைப்பிடியைத் தொடாமல் லாவகமாக கதவைத் திறந்து எடை இயந்திரத்தின் மீது பார்சல்களை வைத்து, அவற்றிற்கு சரியான தொகையையும் வைத்துவிட்டு, வெளியே வரும்போது அந்தக் கதவை சாத்துவதுதான் முறை. இப்போது லாவகம் பலிக்கவில்லை. ஆகவே இடது கை ஆட்காட்டி விரலால் மெல்ல இழுத்துவிட்டு. இப்போது ‘இடது கை ஆட்காட்டி விரல்’ என்பதை நினைவில் குறித்துக் கொண்டாகிவிட்டது. வாசலிலேயே தண்ணீர் பக்கெட், சோப் வைத்திருக்கிறார்கள். பக்கெட், மக், சோப் தொடுவதைவிட விரலை நினைவில் வைத்துக்கொள்வது எளிதாகப் பட்டது.
(ஷ்ஷப்பா... இப்பத்தானே ஆரம்பம்... இன்னும் எத்தனை நாளைக்கோ)
அங்கிருந்து புறப்பட்டு வழியில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே ஒதுங்கும்போதே...
“லிஸ்ட் கொடுத்துட்டுப் போங்க, நாளைக்கு காலையில் வாங்கிக்கலாம்!” என்றார் காவலர்.
“லிஸ்ட் எதும் இல்லை, கடை இருந்தா ரெண்டு-மூணு வாங்கலாம்னு நினைச்சேன்’ என்றேன்.
“லிஸ்ட் கொடுத்துட்டுப் போனீங்னா, நாளைக்கு எடுத்து வச்சுடுவாங்க. நாளைக்கு புதுசா வந்தீங்கனா அஞ்சு பொருள் தருவாங்க. இப்ப லிஸ்ட் கொடுத்தா எச்சாக்கூடா வாங்கிக்கலாம்” என்றார்.
அஞ்சு பொருட்களுக்கு மேல வாங்குற அளவுக்கா நிலைமை இருக்கு என நினைத்தபடி... “பரவாயில்லைங்க... தேங்க்ஸ்” என நகர்ந்தேன்.
வங்கி இயங்கும் சுவடே இருக்கவில்லை. நின்று நிதானித்து ஷட்டர் திறக்கப்பட்டிருப்பதை உணர்ந்துதான் கண்ணாடிக் கதவைத் தள்ளினேன். அதே இடது கை. (ஷ்ஷப்பா...)
வங்கிக் காவலர் கையில் சானிடைஷருடன் சிரித்தபடி காத்திருந்தார். கையை நீட்ட, பாட்டிலைத் தூக்கிப் பிடித்தவாறு தாராளமாக விட்டார். நன்றாக இரண்டு கைகளையும் தேய்த்துக் கொண்டு, அப்பாடா இப்போதைக்கு கை சுத்தம் என நினைத்தபோதே, வண்டியின் இடது கைப்பிடி நினைவுக்கு வந்தது. அதற்காக அவரிடம் ‘வண்டி வரைக்கும் வாங்க’னு சொல்லவா முடியும்.
நான் காசோலையைக் கொடுக்க, அவர் வாங்கி அதன் பின்புறம் முத்திரை வைத்து விபரங்களை நிரப்பச்சொல்ல, நிரப்பி இன்னொருவரிடம் கொடுக்க... இதற்கிடையில் வங்கி எண் சரியா என்று மொபைல் எடுத்து சரிப்பார்க்க, இதற்குள் சுத்தமாக(!) இருந்த இடது வலது கைகள் இரண்டும் அசுத்தம் ஆகியிருக்குமோ எனும் சந்தேகம் வர...
(அடேய்... நானெல்லாம் சில தடவை கறி விருந்தையே கை கழுவாம சாப்பிட்டவன் டா!)
வெளியேறி, போஸ்ட் ஆபிஸ் கதவைத் தொட்ட கையால் பிடித்த வண்டியின் இடது கைப் பிடியைப் பிடித்து, வண்டியை இயக்கி, வீடு வந்து சேர்ந்து...
வண்டியை நிறுத்தி அதில் வைத்திருந்த பை ஒன்றை எடுத்துக் கொண்டு, படியேறி பையை கவனமாக வெளியில் வெயிலில் போட்டுவிட்டு, உள்ளை நுழைந்து, நம் கையாலே முகக் கவசத்தைக் கழட்டக்கூடாதுல்ல...
(இன்னொரு ஷ்ஷப்பா!)
ஆன்லைன் வகுப்பில் அமர்ந்திருந்த மகளிடம், சைகையில் மாஸ்க் கழட்டச் சொல்ல, மகள் புரியாமல் விழிக்க, ஒரு வழியாக கை, புருவம், கண்கள் ஆகியவற்றின் உதவியோடு புரிய வைத்து, கழட்டி விட்டதும், வாஸ்பேசினுக்கு ஓடி ஆசையாசையாய்(!) தும்மி...
இதெல்லாம் வாழ்நாள் உரிமை பாஸ், ஒவ்வொரு நாளும் இவ்ளோனு ‘தும்மல்’க்கு கோட்டா உண்டு. அதுவும் மாஸ்க் போட்டிருந்து கழட்டிய பிறகு தும்மும் சுகம் இருக்கே.... நல்லவேளை... போஸ்ட் ஆபீஸ், பேங்க்ல தும்மியிருந்திருந்தா தெரியும் சேதி...
குழாய்க் குமிழைத் திருகி, சோப் விட்டு கையை எப்பவோ ‘யோகி பாபு’ சொன்ன விதத்தை நினைவுபடுத்திக் கழுவி, கடைசியாக குழாய்க் குமிழைக் கழுவி... ஃபோனையும் மேலோடமாகக் கழுவித்(!) துடைத்து... MI ஃபோன் ‘வூஹான்’ மாகானம் இருக்கும் சீன தேசத்தின் உருவாக்கம் என்பதால் ஒன்பது கிரங்கங்களின் உச்சம் பெறாதவர்களும்கூட கழுவலாம்... (யெஸ்... உள்குத்துதான்)
“எச்சூஸ்மீ மிஸ்/ மிஸ்டர். கோவிட்-19... நாங்கெல்லாம் ஒரு காலத்தில் 'எப்படி இருந்தவங்க!’ தெரியுமாடே!”
இ.அ.நீ.யா-1 :
இதுக்குத்தான் படிச்சுப் படிச்சுச் சொல்றாங்க... 'வெளியே போவாதே... வெளியே போவாதே’னு...
இ.அ.நீ.யா-2 :
எங்கே கை வைத்தோம், யாரு என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தாங்க, அவங்க மாஸ்க் என்ன கலர் என்பதுள்ளிட்ட பல விசயங்களை நினைவில் கொள்வதால், நினைவாற்றல் பெருகும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது
தட் கருத்து பார்ட் :
இந்தத் தொற்று கொடுங்காலம் மனிதர்கள் மீது இத்தனை எச்சரிக்கை மற்றும் சந்தேகத்தைக் கொண்டு வந்திருப்பதுதான் பேராபத்தாகத் தோன்றுகிறது. ஊறிப்போன சந்தேகத்தில் இருந்து நாம் மீண்டுவிட ரொம்ப காலம் பிடிக்கக்கூடாது என்பதே இப்போதைய வேண்டுகோள்!
- ஈரோடு கதிர்

சாமானியனின் வெற்றி அவனுக்கானது மட்டுமல்ல


மனிதர்களுக்கு வெற்றி மீதிருக்கும் பேரார்வம் எப்போதும் அலாதியானது. அந்த ஆர்வம் இத்தகையதானது என்று எந்த வடிவத்திற்குள்ளும் அடைக்க முடியாது. ஒவ்வொருவரின் வெற்றியும் ஒவ்வொருவிதமான உணர்வுகளைக் கொடுக்கலாம். சாமானியர்களின் வெற்றி சக சாமானியர்களுக்கு சிற்சில நேரங்களில் பொறாமையைக் கொடுக்கலாம். பல நேரங்களில் தானே வென்றதுபோல் ஒருவித மகிழ்ச்சியையும், யாரும் வெல்ல முடியும் எனும் பெரு நம்பிக்கையையும் தருவதுண்டு.

சுராஜ் வெஞ்சரமூடு :

2013ல் பார்த்த ஸ்பிரிட் படத்தில் வரும் மந்திரி முரளிகிருஷ்ணனாகத்தான் எனக்கு அறிமுகம். இத்தனைக்கும் அவர் ஓரிரு காட்சியில்தான் வருவார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோகன்லாலிடம் சிக்கி திணறும் பாத்திரம். படத்தில் வரும் எத்தனையோ சில்லறைப் பாத்திரங்களில் ஒன்றுதான் அந்தப் பாத்திரமும். ஆனாலும் அப்பவே அவர் யார், என்ன, ஏதென்று தேடினேன். அவர் மலையாள திரையுலகத்தில் பிரபலமான காமெடி நடிகர் என அறிய முடிந்தது. அவரின் மற்ற படங்கள் எதையும் தேடிப் பார்க்க முயவில்லை. அதற்கான தேடலும் என்னிடம் இல்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரைப் பார்த்த்து தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும்படத்தில்தான். நாயகனுக்கு நிகரான பிரசாத் எனும் சவால் நிறைந்த பாத்திரம். இதற்கிடையே அவர் சுமார் எழுபது படங்களில் நடித்திருந்தார். அவற்றில் நான் ஹவ் ஓல்ட் ஆர் யூ, கம்மாட்டிப்பாடம் ஆகிய படங்களில் கண்டிருந்தாலும், மனசுக்குள் இருந்ததென்னவோ அந்த மந்திரி முரளிகிருஷ்ணன்மட்டுமே.

தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும் பிரசாத் முதன்முறையாக முரளிகிருஷ்ணனை மன நாற்காலியில் இருந்து அகற்றிவிட்டு இடம் பிடித்தார். மலையாள சினிமாக்கள் மீது பல தருணங்களில் ஏற்பட்ட பிரமிப்பு இந்த பிரசாத் பாத்திரத்தின் வழியாகவும் கூடியது. காலம் காலமாய் இவர்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று பட்டா போட்டிருக்கும் சூழல் நல்லவேளையாக மலையாளப் படங்களில் அவ்வளவாக இல்லை என்றே கருதுகிறேன்.

அந்த இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் எழுபது எண்பது படங்கள் நடித்திருந்த சுராஜ் வெஞ்சரமூடு, 2017ம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டுக்கு ஒற்றை இலக்கத்தில்யே நடித்து வருவதாக அவரின் பட்டியல் சொல்கின்றது. எண்ணிக்கை முக்கியமல்ல என்பதற்கு அவரும் தற்போது ஓர் உதாரணம். பலரின் பரிந்துரைகளில் இடம் பெற்ற ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன், ட்ரைவிங் லைசன்ஸ் மற்றும் விக்ருதி ஆகிய படங்களைப் பார்த்தபோது, சுரேஜ் வெஞ்சரமூடு அபாரமான வளர்ச்சியை எட்டியிருக்கிறார் என்பது புரிந்தது.

நாற்பதுகளில் இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு தந்தையைப் போல் ராணுவத்தில் சேர முற்பட்டு, முடியாமல் போக, ஸ்டாண்டப் காமெடியன் மற்றும் மிமிக்ரி கலைஞனாக மேடையேறியிருக்கிறார். மெல்ல திரைப்படம் அவரை உள்ளிழுக்க நகைச்சுவை நடிகராக ஓரிரு காட்சிகளில் தோன்றி, பிறகு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வருடத்திற்கு 25 படங்கள் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விறுவிறுவென எண்ணிக்கைகளைக் கூட்டியிருக்கின்றார். சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சுராஜ் 2000 முதல் 2010 வரை நகைச்சுவை நடிகனாகவே தன்னை வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். இதில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதுகளும் பல முறை பெற்றிருக்கின்றார்.

தனித்த பார்த்திரங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்க, எண்ணிக்கைகள் குறைந்து, தன்னை இன்னொரு கோணத்தில் மிகச் சிறப்பாக நிரூபிக்க போதிய களம் கிடைத்திருக்கின்றது. ஆன்ட்ராய்ட் குஞ்சப்பனில் வரும் பாஸ்கர பொதுவால் அவரின் வாழ்நாள் சாதனை பாத்திரங்களின் பட்டியலில் இடம் பெறலாம். ட்ரைவிங் லைசன்ஸ் மிக நுண்ணியதொரு களம். உண்மையில் ப்ருத்விராஜ் எனும் பிரமாண்டத்தை உடன் வைத்துக் கொண்டு புகழெய்துவது அத்தனை எளிதன்று. எனக்கென்னவோ, பிருத்விராஜும்கூட அந்தப் படத்தில் சுராஜ் களமாடுவதற்கு இசைவாய் இடம் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதுவேதான் தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும் படத்தில் பஹத் வாயிலாக நடந்திருக்கலாம்.
சௌபின் சாஹிர்:

அன்னயும் ரசூலும், அஞ்சு சுந்தரிகள், இயோபின்டே புஸ்தகம் உள்ளிட்ட படங்களில் கண்டிருந்தாலும், பிரேமம் படத்தில் ஜாவா சாருக்கு யோசனைகளை அள்ளித்தரும் சிவன் சார் பாத்திரம்தான் சௌபின் சாஹிரை மனதில் நுழைய வைத்தது. நுழைந்தவருக்கு நல்லதொரு இடம் பெற்றுக் கொடுத்தது மகேஷிண்ட பிரதிகாரம் கிரிஸ்பின். அதன்பிறகு அவர் எந்தப் படத்தில் தென்பட்டாலும் கவனிக்கத் தவறுவதில்லை. அந்த வரிசையில் இடம் பெற்றவர்கள்தான் களி படத்தில் வந்த பிரகாசன் மற்றும் கம்மாட்டிபாடத்தில் வந்த கராத்தே பிஜு. கூடுதலாக காம்ரேட் இன் அமெரிக்கா, பறவா, மாயநதி ஆகியவற்றில் கண்டிருந்த நேரத்தில் சூடானி ஃப்ரம் நைஜீரியாமீண்டும் மலையாள திரையுலகத்தின் மீது பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

நடிகர்களுக்கான பாத்திரம், நடிகர்களுக்கான கதை என்று வீம்பு பிடிக்காமல், கதைக்கான பாத்திரம், அந்தப் பாத்திரத்திற்கான நடிகர் என்று தயவுதாட்சன்யமின்றி இறங்கி அடிப்பதில் மலையாள திரையுலகம் முன்னணியில் இருப்பது நிரூபிக்கப்பட்டது. ஆம் காமெடியன் சௌபின் சாஹீர்ஹீரோஆக்கப்பட்டுவிட்டார். எனினும்கூட வைரஸ் படத்தில் அவர் அந்த சின்னப் பாத்திரத்தை மறுக்காமல் ஏற்று, அதுவே முக்கியப் பாத்திரம் ஆகி தனக்கென இடம் பிடித்திருந்தார். இடையில் இயக்குனராக அவர் துல்கர் சல்மானை வைத்துபறவாபடத்தையும் இயக்கியிருந்தது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது.

இந்தத் தருணத்தில்தான் சௌபின் சாஹிர் தனக்கான மிக முக்கியாமான அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்பு கிட்டியது. பஹத் ஃபாசில் தனது தயாரிப்பில் தன்னை சற்றே சுருக்கிக் கொண்டு அழகியதொரு வாய்ப்பினைகும்ப்ளாங்கி நைட்ஸ்படத்தில் சாஜி பாத்திரத்தில் சௌஃபினை பொருத்தினார். அந்த வாய்ப்பு சௌபின் சாஹிரை நல்லதொரு உயரத்திற்குக் கொண்டு செல்ல, ‘அம்பிளிஅவரை அதகளமான கொண்டாட்டத்திற்கு இட்டுச்சென்றது என்று சொல்லலாம்.
 ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25’ மற்றும்விக்ருதிசௌபின் சாஹிருக்கும் சுராஜ் வெஞ்சுரமூடுக்கும் கற்பனை செய்ய முடியாத அற்புதமான வாய்ப்பாக அமைந்தது

சௌபின் 2003ல் மலையாள திரைத்துறையில்  உதவி இயக்குனராக வாய்ப்பு பெற்று நுழைந்திருக்கிறார். இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில், ஃபஹத் ஃபாஷில் அறிமுகமான ’கையெத்தும் தூரத்துபடத்தில் சௌபின் சாஹிரும் நடித்திருக்கிறார். ஆனால் அடுத்த பத்து ஆண்டுகள் நடிப்பில் இல்லாமல் உதவி இயக்குனாராக பலரிடம் பணிபுரிந்து, 2013ம் ஆண்டில்தான் அன்னயும் ரசூலும் படத்தின் மூலம் திரைக்கு வந்திருக்கிறார்.

உதவி இயக்குனர் என்பதிலிருந்து முழு மூச்சாக நடிப்பின் பக்கம் திரும்பி சின்னச் சின்னப் பாத்திரங்கள் மூலம் தனக்கான அடையாளத்தை சில ஆண்டுகளிலேயே பிடித்துக் கொண்டார். சூடானி ஃப்ரம் நைஜீரியாவிற்குப் பிறகு ”கும்ப்ளாங்கி நைட்ஸ்வெற்றி அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்திருக்கலாம். விக்ருதி சமீர் அவரின் மறக்க முடியா பட்டியலில் முக்கிய இடம் பிடிக்குமெனக் கருதுகிறேன். அவரால் ‘மெட்ரோயில் பாம்பு’ எனப் பெயர் சூட்டப்பட்ட, எல்தோ குறித்த உண்மைகள் ஊடகங்கள் வாயிலாக உலகிற்குத் தெரிந்த கணத்தில், சமீர் பாத்திரம் சுமக்கத் துவங்கும் குற்ற உணர்வு, பதைபதைப்பு, குமைதல் உள்ளிட்டவற்றை முகத்தில் அப்பட்டமாக தரவிறக்கம் செய்து, உடல் மொழியாலும் இறுதிக்காட்சி வரை சுமந்ததில் பெரு வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 *

மலையாளத் திரைப்படங்கள் குறித்து எப்போது எழுத முனைந்தாலும், அதில் வெறும் புகழ்ச்சியும், தமிழ் மொழித் திரைப்படங்களுடனான ஒப்பீடு மட்டும் எனக்கு இருந்து விடுவதில்லை. அங்கே நிகழும் அற்புதமான சில மாற்றங்கள் ஏற்படுத்தும் வியப்புகளே எழுத்தாக உருவெடுத்து நிற்கும். மிகச் சாதாரணம் என நாம் நினைத்து கடக்கும் சம்பவங்களே அந்தத் திரைப்படங்களில் கதையாக மாறி திரைக்கதையாவடிவெடுத்து, தனக்குப் பொருத்தமானவர்களைக் கோரி நல்லதொரு படைப்பாக அமைந்து விடுகின்றன.

உண்மையில் பெரிய நாயக பிம்பங்கள் விட்டுக்கொடுக்கிரார்களா அல்லது திரைக்கதையும், இயக்குனர்களும் சமரசமின்றிக் கோருகிறார்களாக எனத் தெரியவில்லை. சுராஜ் வெஞ்சரமூடு, சௌபின் சாஹிர் போன்ற நகைச்சுவைப் பாத்திரங்களாக மட்டுமே இருந்த சாமானியர்கள், நாயகர்களுக்கான அளவீடுகளுக்குள் அடங்காதவர்கள் வெல்வதற்கான வாய்ப்பு அங்கு பிரகாசமாக இருக்கின்றது.

சாமானியனின் வெற்றி அவனுக்கானது மட்டுமல்ல, அவனைப் போன்றிருக்கும் பலருக்குமானது.

(பொறுப்பேற்றல் : நான் பார்த்த  குறைவான படங்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. முழுமையான ஆய்வு சார்ந்தது கிடையாது)

நம்பிக்கை மீது நம்பிக்கை வை!

சிலர் ‘எனக்குள்ள ஒண்ணு தோணுச்சுனா அப்படியே நடந்துடும்’ என்று தமது உள்ளுணர்வு குறித்து சொல்வதுண்டு. சில வேளைகளில் அது அச்சமாகவும் வெளிப்படும். இன்னும் சிலர் தாம் ஒன்றை நினைத்தால், சொன்னால் அப்படியே நடந்துவிடும் என்று சொல்வார்கள். இந்த இரண்டு குறித்தும் நான் கிஞ்சித்தும் கவலைப்பட்டதில்லை. காரணம் எனக்கு இதுவரை உள்ளுணர்வு இப்படி எதையும் சுட்டிக்காட்டியதில்லை. அதேபோல் நான் நினைத்தபடியோ, சொல்லியபடியோ எதுவுமே நடந்ததவும் இல்லை.
இன்னொரு வகையினர் இருக்கின்றனர். அவ்வகையினர் மற்றவர்களுக்கு ஏதேனும் சொன்னால், அந்த மற்றவர்களுக்கு அது அவ்விதமே நடந்துவிடும் என்பார்கள். எனக்கும்கூட அப்படி ஒருவர் சொல்லி, ஓரிரண்டு சம்பவங்கள் அவ்விதமே நடந்தது. நடந்தவை சவாலானவை என்பதால், ‘இனிமே எதுக்காச்சும் நீ வாய் தொறந்தேன்னா கொல வுழும்’ என்று விளையாட்டாக மிரட்டி வேறு வைக்க வேண்டியதாகிப் போனது. எனினும் இந்த மூன்று விதமான நம்பிக்கைகைகள்(!) குறித்து, எனக்கு மிக நெருக்கமான அனுபவமோ அல்லது நம்பிக்கையோ ஏற்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு மனதில் ஒரு சிந்தனையோட்ட கேள்வி எழுந்தது. ‘எல்லோரும் எல்லாவற்றையும் கைவிட்டிருக்கும் இந்தச் சூழலில், காற்று மாசு, ஒலி மாசு, நுகர்வுகள், எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட ஏதேதோ குறைந்திருப்பது போலவே மரணங்களும் குறைந்திருக்கின்றனவா? விபத்துகளுக்கு வாய்ப்பே இல்லை. மது விற்பனையில்லை. எப்போதும் மூச்சுத் திணறும் மருத்துவமனைகள்கூட பெரும்பாலும் முடங்கிக் கிடைக்கின்றன அல்லது தேவையே ஏற்படவில்லை. இந்த நாட்களில் உறவு மற்றும் நெருங்கிய நட்பு வட்டத்தில் மரணச் செய்தி எதுவும் கேள்விப்படவில்லையே!’ என்ற சிந்தனை நிழல் நினைவிலிருந்து தேய்வதற்குள் இரண்டு மரணங்கள் குறித்த தகவல் வந்து சேர்ந்தது.


இரண்டிலும் இருந்த பொருத்தம்தான் மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. இரண்டுமே மாரடைப்பு. இருவருமே 40-50 வயதிற்குள் இருந்தவர்கள். கிடைத்த மிகப் பெரியதொரு வாழ்க்கை ஐம்பது வயதிற்குள் அவசரமாக முடிந்தது போலவே, அவர்களின் அடக்கமும் மிக மிக அவசரமாக உற்றார் உறவினர்கள் இன்றி நிகழ்ந்தது கடும் வலியைத் தந்து கொண்டிருக்கின்றது.
ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தவன் ‘இந்த நாட்களில் சாவுகளைக் கேள்விப்படவில்லையே’ என ஏன் சிந்தித்தேன். சிந்தனைகள் உருளும்போது, தலையை உலுக்கி வளராமல் வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் உருவாகும் சிந்தனையை எப்படித் தடுப்பது. அந்த மரணங்கள் யதேட்சையாகவே நிகழ்ந்திருக்கலாம்கூட, எதற்காக அப்படியான சிந்தனைகள் எனும் கேள்வி மீண்டும் மீண்டும் மோதிக் கொண்டேயிருக்கின்றன. இன்றைய நிலையை ஒட்டியும்கூட அந்த சிந்தனை வந்திருக்கலாமோ?
மரணத்தை தவிர்க்கவே முடியாது, அதை கணிக்கவும்கூட முடியாதுதான். எனினும் முதுமை சார்ந்த மரணங்கள் எதையும் கேள்விப்படாத இந்தத் தருணத்தில், அடுத்தடுத்து நிகழ்ந்த வாழ வேண்டிய வயதில் நிகழ்ந்த இந்த இரண்டு அதிர்ச்சி மரணங்கள் இந்த நாட்கள் குறித்தான பயத்தையும் கூடுதலாக விதைக்கின்றன.
இது யாரும் எதிர்கொண்டு, இந்த நாட்கள் இப்படித்தான் இருக்கும் என சமாதானம் சொல்ல முடியாத வகை நாட்களே. வீட்டில் முடங்கிக் கிடப்பது, தம் தொழில் சார்ந்த துறைகள் முடங்கிக் கிடப்பது, எதிர்காலம் எப்படியிருக்கும், வரவு செலவுகள் என்னாகும், வசூலிக்க வேண்டிய தொகை, கட்ட வேண்டிய கடன், யாரையும் சந்திக்க முடிவதில்லை, எந்நேரமும் அதே செய்திகள் ஓடுகின்றன உள்ளிட்டவை குறித்து அதீதமாய் சிந்தித்து குழப்பிக் கொள்ளாமல் இருப்பதுதான் இப்போதைய முதல் தேவை.
இங்கு எது முடங்கியிருந்தாலும், எது வீழ்ந்து போனாலும், எது சிதைந்து கொண்டிருந்தாலும் அது தனக்கு மட்டுமில்லை, ஊரிலும் உலகத்திலும் உள்ள பலருக்கும் நிலை அப்படித்தான் எனும் தெளிவும் நிதானமும் தேவை.
வாழ்ந்து பழக்கமில்லாத, ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத நாட்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். தொற்று - நோய் – மரணம் என்பதைச் சுற்றியே எல்லாம் இயங்கிக் கொண்டிருப்பதாய் கூரிய மாய நகங்கள் நம்மைப் பிறாண்டிக் கொண்டிருக்கின்றன.
இந்த நாட்கள் எப்படியானதாகினும், நடந்து, ஓடி, தாண்டி, மிதித்து, தவழ்ந்து, ஊர்ந்து கடந்து சென்று விடுவோம். வேறொரு நாட்களில் நின்றபடி, ‘கடந்த அந்த நாட்கள் இருக்கே... அதை எப்படிக் கடந்தேன் தெரியுமா!’ என்று பெரும்பாலானோர் கதை பேசக் காத்திருப்போம்.
கவனமும் அதீத நிதானமும் தேவை. உடல் நலம் மிக முக்கியம், அதைவிட மன நலம், மன பலம் மிக மிக முக்கியம். ஏற்கனவே நம் மீதும், சக மனிதர்கள் மீதும், எதிர்காலத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மீது படிந்திருக்கும் தூசிகளை ஊதிவிட்டு இறுகப்பற்றிக்கொள்வோம்.
- ஈரோடு கதிர்
*
ஒலி வடிவில் கேட்க :
https://anchor.fm/erodekathir/episodes/ep-ecgea9