உன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”



“சரி... ‘வியாபாரம்’ செய்யத் தெரிஞ்சவன், பொழைக்கத் தெரிஞ்சவன் யாராச்சும் இப்படி ஒரு படத்தை மெனக்கெட்டு டைரக்ட் செய்வானா? தயாரிப்பானா?” எனும் கேள்வி இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றது. வியாபாரத்தைத் தாண்டி, தான் நேசிக்கும் ஒன்றிற்காக செய்யும் தியாகமே உன்னதங்களைக் கொடுத்திருக்கின்றன. உன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”
ஜுங்கா படத்திற்காக விஜய் சேதுபதி மேல் அயர்ச்சி கொண்டதும், கிண்டல் அடித்ததுமான அதே மனநிலையோடுதான், அந்த மனநிலைகளுக்கு கொடுத்த ஆற்றலின் ஆயிரம் மடங்கு ஆற்றலோடு விஜய் சேதுபதியை “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்திற்காகப் பாராட்டத் தோன்றுகிறது.
அந்த ஆயிரம் மடங்கு பாராட்டை இரட்டிப்பாக்கி இயக்குனர் லெனின் பாரதியின் கைகளில் சமர்ப்பிக்கத் தோன்றுகிறது.


அந்த விடியல் மழைக் காட்சிக்கும், காற்றை வலிமையோடு அறுக்கும் அந்த நீள் தகரத்தின் உறுத்தும் ஓசையோடு உச்சிக்கு நகரும் பொட்டல் வெயில் காட்சிக்கும் இடையேதான் எத்தனை கனமானதொரு வாழ்வு.
விரிந்து கிடக்கும் மலையையும் விட கனக்கும் வாழ்வுதான் ரங்கு முதல் கேத்தர வரை அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும். படம் என்னவோ ரங்குவின் வாழ்க்கையைச் சொல்வதாய் இருக்கலாம். ஆனால் மனம் என்னவோ அடிவாரத்துக் கிழவி தொடங்கி, பத்திரிக்கை கொடுக்க மலையேறுபவர், லோகுவின் தக்காளிக் கூடையை ஏற்றிக்கொள்ளும் மாட்டு வண்டிக்காரர், கிறுக்குக் கிழவி, கழுதைக்காரர், வனகாளி, கணக்குப் பிள்ளை, கங்காணி, சாக்கோ, அத்தா, குதிரை பாஞ்சான் மேட்டு காப்பி கடைக்காரர், ஊத்துராசா என அத்தனை பேரின் வாழ்க்கையும் ஏதோ இரண்டு பருவநிலைகளுக்கு இடையே என்னவாக இருக்கும் என ஓட்டிப் பார்க்க வைக்கிறது.
எத்தனையோ மொழி சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். இதோ இந்தக் கணத்தில் இந்த மேற்கு தொடர்ச்சி மலை எதனினும் சிறந்த படம் எனத் தோன்றுகிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கருதும் ஒன்றாகவும் இது இருக்கலாம். இருக்கட்டுமே! இந்த மனநிலையைக் கரைக்க, இந்த இடத்தைப் பிடிக்க இன்னொரு படம் என்னில் நுழையும் வரை உணர்ச்சிவயப்பட்ட இந்தக் கணத்தை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்.
பார்த்துவிடுங்கள். ஒரு அசல் வாழ்க்கையை பார்த்த... இல்லையில்லை வாழ்ந்த அனுபவம் கிட்டும்.
மிகக் கூடுதலாக நேசிக்கும் அந்த எளிய மனிதர்கள் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து நம்மை சற்றேனும் மீட்டெடுப்பார்கள். சக மனிதர்கள் மேல் நம்பிக்கை கூட்டுவார்கள். மேலே சொன்ன பாத்திரங்களில் எவர் ஒருவரைப் போலும், இன்னொருவரைக் கண்டாலும் நேசிப்பில் நெகிழ்வீர்கள்.
❤️