டிசம்பர் 28 முதல் டிசம்பர் 28 முடிய

உண்மையில் 2017ம் ஆண்டு எனக்கு ஜனவரி 1ம் தேதி துவங்கவில்லை.

2016 டிசம்பர் 28ம் தேதியே எனக்கான ஆண்டு துவங்கிவிட்டது எனச் சொல்லலாம். தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயிரங்கு நடத்திய நிகழ்விலிருந்துதான் பள்ளி மாணவ மாணவியர்களை நோக்கி கூடுதல் கவனம் கொடுக்க ஆரம்பித்தேன். 2017ன் முதல் நிகழ்ச்சியாக குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பிரைமரி பள்ளி ஆண்டு விழா எனத் தொடர்ந்த பயணத்தில், இந்த ஆண்டு அதே டிசம்பர் 28ம் தேதி குருமந்தூர் அருகே வெட்டையம்பாளையும் கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 14ம் ஆண்டு விளையாட்டு விழா 99வது நிகழ்ச்சி. 31ம் தேதி இரவு ஒரு குடியிருப்பு நலச்சங்கத்தின் புத்தாண்டு இரவு நிகழ்ச்சியில் பேசவுள்ளதால் எண்ணிக்கை 100ஐ அடைந்து விடும். எந்த விதத்திலும் திட்டமிடாத்து இந்த 100 எனும் எண்ணிக்கை.

இந்தப் பயணத்தில் பெரு நிறுவனங்கள், பள்ளிக்கல்வித் துறை, பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றோடு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், விவசாயக் கல்லூரி, தொழிட்நுட்பக் கல்லூரி, ஆசிரியர்கள் பயிற்சி மையம் என பல்வேறு தரப்பில் இருக்கும் பணியாளர்களையும், மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்த ஆண்டு கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக சந்தித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 18,000. மாணவர்கள், ஆசியர்கள் சார்ந்த 65 உரை மற்றும் பயிலரங்குகளின் வாயிலாக சந்தித்த மாணவ மாணவியர்கள் சுமார் 13000 பேர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 850 பேர்.

யாழ்ப்பாணம் தெள்ளிப்பளையில் சந்தித்த ஒன்பது வயது மாணவர்கள் முதல் ஈரோட்டில் ஐம்பத்தைந்து வயதில் ’நான் இப்பொழுதுதான் வாழ்க்கையைத் தொடங்குகிறேன்’ எனச் சொன்ன ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் வரை பல்வேறு வயதில், பல்வேறு நிலையில் இருப்பவர்களை இந்த ஆண்டில் கடந்து வந்திருக்கிறேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வாழ்வகத்தில் சந்தித்த பார்வைத் திறனற்ற பிள்ளைகள் எனக்குள் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர்கள்.

நிகழ்ச்சிகளின் முடிவில் வெளியில் ஓடி வந்து கை பற்றிக் கொள்ளும் பிள்ளைகள், கால் தொட்டு ஆசிர்வதியுங்கள் என உயிரை நடுங்க வைக்கும் பிள்ளைகள், ஆர்வமாய்ப் பேச ஆரம்பித்து திக்கித் திணறி கண்ணீர் சிந்தும் பிள்ளைகள், இரண்டு நாட்கள் கழித்து யோசித்து யோசித்து கை பேசியில் அழைக்கும் பிள்ளைகள், வாட்சப்பில் வந்து என்ன பேசுவதெனத் தெரியாமல் திணறும் பிள்ளைகள், உங்களை அண்ணாவென அழைக்கட்டுமா எனக் கேட்கும் வால் முளைத்த பட்டாம்பூச்சிகள் என இந்த ஆண்டு எனக்கு பிள்ளைகள் சூழ் சிறப்பு ஆண்டு.

இத்தனைக்கும் மேலாக, நான் படித்த கல்லூரிக்கு 25 ஆண்டுகள் கழித்து பயிற்சியாளராக போன அனுபவம் பெரும் தெம்பூட்டுகிறது.

கல்வி உலகம் தவிர்த்து...

என்னை வளர்த்து ஆளாக்கிய ஜேஸிஸ் இயக்கத்தில், பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மண்டல மாநாட்டிலும், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.

மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு ‘மாற்றத்தை நிர்வகித்தல்’ பயிலரங்கினை நான்கு அமர்வுகளில் நடத்தியது மிக நல்ல அனுபவம்.

உரை, பயிற்சி எனத் தீவிரமானதில் எழுத்து மிகவும் குறைந்து போயிருக்கின்றது. ஆண்டின் துவக்கத்தில் வெளியான “பெயரிடப்படாத புத்தகம்”, “உறவெனும் திரைக்கதை” கட்டுரைகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எதுவுமே எழுதவில்லை.

மகள் மழலையாக பத்தாண்டுகளுக்கு முன்பு உச்சரித்துக் கொண்டிருந்த அதே காரை இந்த ஆண்டு அவள் பிறந்த நாளன்று சஸ்பென்சாக வாங்கியது, குடும்பத்துடன் வடகிழக்கு இந்தியா, நண்பர்களோடு கர்நாடகா-கேரளா மற்றும் இலங்கை பயணங்கள் என மகிழ்வான தருணங்கள் கொண்ட ஆண்டு.

எங்க ஊர் நட்புகளை ஒன்று திரட்டி “ஈரோடு வாசல்” எனும் வித்தியாசமான வாட்சப் குழுமத்தை உருவாக்கி, அதில் எழுத்து, உடற்பயிற்சி, வாசிப்பு பேச்சு, வாசிப்பு, உரையாடல் என பல்வேறு திறமையாளர்களை இனம் கண்டது நெகிழ்வான அனுபவம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் பாஸ்போர்ட்டை தவற விட்டதன் மூலம் மிகப் பெரிய பாடம் கற்றுக்கொண்ட ஆண்டு.

நிறைவான அன்பைத் தருவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் யோசித்ததேயில்லை. எவர் மீதும் புகார் இல்லை, வெறுப்பு இல்லை, வன்மம் இல்லை. சில தருணங்களில் சிலரிடம் கோபம் உண்டு. ஒருபோதும் அதை திட்டமிட்டு வளர்க்கவோ நீட்டிக்கவோ விரும்பியதில்லை.




எல்லா வகைகளிலும் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களின் அன்பு மற்றும் நேசிப்போடு இந்த ஆண்டை மகிழ்வோடு நிறைவு செய்கிறேன்... இன்னும் கூடுதல் அன்பினையும் பிரியங்களையும் தேடிக்கொண்டே....

தகிக்கும் இளஞ்சிவப்பு

கல் நேர ரயில் பயணத்தில், பிஞ்சுக் குழந்தையொன்று அழுது கொண்டேயிருந்தது. பசி அழுகை முற்றியபடியே இருந்தது. அடங்குவதாகத் தெரியவில்லை.  முன்பதிவு பெட்டியில் பதிவு செய்யாதவர்களும் நின்றபடி கூட்டமாக. குழந்தையை சமாளிக்க முடியாத அம்மா, அணிந்திருந்த சுடிதாரின் மேலாடையை சுருட்ட ஆரம்பித்திருந்தார். குழந்தையின் அழுகை ஓய்ந்தது!

இதை முன்வைத்து ரயில் பெட்டிகளில், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக முற்றிலும் மூடப்பட்ட ஒரு இருக்கையேனும் அமைப்பது அறிவுசார் சமூகத்தின் கடமையென ஃபேஸ்புக்கில் எழுதினேன். பாலூட்டும் பெண்களுக்கு இப்படியொரு வசதி தேவைதானே? இப்படி நினைப்பதே சமூகப் பொறுப்பாகவும் கருதப்படுகின்றது.

அந்தப் பதிவின் கீழ், பாலூட்டும் அம்மாக்கள் சுடிதார் அணியக்கூடாது, ஜிப் வைத்த ஆடை அணிய வேண்டும், துண்டு, போர்வை வைத்துக்கொள்ள வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்தனர். ஒரு ஆணாக பதிவெழுதிய எனக்கும், ஆண்களாக கருத்துத் தெரிவித்த அவர்களுக்கும் அதுதான் தீர்வெனத் தோன்றியிருக்கலாம். காரணம் பெண்ணாய் யோசித்தல் ஆணுக்கு அத்தனை சாத்தியமா என்ன?

தனி அறை / மறைவான பகுதினு ஒரு குழந்தை சாப்டறத இவ்ளோ சிரமப்படுத்தனுமா எனும் கேள்வியோடு வெளிநாட்டில் வசிக்கும் லாவண்யா வந்தார். அரசு அலுவலக காத்திருப்பு அறையில் நூற்றுக்கணக்கானோர் மத்தியில் தம் மகளுக்கு பாலூட்டிக்கொண்டே அந்தக் கேள்வியை எழுதுகிறேனெனக் குறிப்பிட்டிருந்தார். அந்த குழந்தை சாப்டறதஎனும் இரண்டு சொற்கள் மனதில் ஓங்கி அறைந்தாற்போல் இருந்தது.

*

மேற்கத்திய நடனக்காரியான மினால், தோழிகள் ஆன்ட்ரியா மற்றும் ஃபலாக் ஆகியோருடன் அடுக்கக வீட்டில் வசிக்கிறாள். தோழிகள் வேலைக்குச் செல்கிறவர்கள். பெற்றோருடன் வசிக்காமல், தோழிகளோடு வசிப்பது மினாலுக்கு சில சுதந்திரங்களைக் கொடுக்கிறது. ஆன்டிரியா மேகாலயா மாநிலத்தைச் சார்ந்தவள். மூவரும் நண்பர்களோடு விருந்துக்குப் போகிறார்கள். விருந்தில் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்த முயன்றவனை மினால் பாட்டிலால் தாக்கிவிடுகிறாள். அடிபட்டவன் அரசியல் பலமுள்ளவன். மிரட்டுகிறார்கள். புகார் கொடுக்கிறாள். பாலியல் ரீதியாக ஆதாயம் தேட, மிரட்ட, அவனைத் தாக்கியதாக கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள்.

அவள்களின் அன்றாடங்கள் விசாரனைகளில் வெகுவாய்த் திரிக்கப்பட்டு முறுக்கிப் பிழியப்படுகின்றன. யாரிடமும் அவர்களின் மாநிலம் குறித்துப் பேசப்படாதபோது ஆன்ட்ரியாவின் மாநிலம் குறித்து மட்டும் கேட்கப்படுகிறது. வீதிகளில் எந்தப் பெண் அவமதிக்கப்படுவதைவிடவும் வடகிழக்குப் பெண்ணாகிய தாங்கள் கூடுதலாய் அவமதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் ஆன்ட்ரியாவின் ஒற்றை வசனமே கூடப் போதும் பொது மனநிலையைக் கூறு போட.

தனி வீடு எடுத்து தங்கியிருப்போர், வடகிழக்கு மாநிலத்துப் பெண், விவாகரத்துப் பெற்றவருக்கு காதலியாக இருப்பவள் என்பதையெல்லாம் வைத்து பெண்ணை எடை போட்டுவிடுவது சமூகத்திற்கு மிக எளிதானது. வீட்டிற்கு தாமதமாகத் திரும்புதல், வீட்டுக்கு நண்பர்கள் வந்து செல்வது, விருந்திற்குச் செல்வது, நடனமாடுவது, மது அருந்துவது, ஆண்களிடம் சிரித்துப் பேசுவது, தொட்டுப் பேசுவது போதும்தானே ஒரு பெண் இப்படிப்பட்டவள்தான் என சமூகம் முடிவெடுக்க.

இப்படிப்பட்டவள் என்பதன் அர்த்தங்களில், தம் உடலை பகிரத் தயாராய் இருப்பவள் என்பதும் அடங்கும். ஒரு ஆணின் வழியே, இந்த சமூகத்தின் பொதுப் பார்வையாய், பைத்தியகாரன்கூட அப்படியான பெண்களோடு இருக்கும்போது பலவந்தப்படுத்த நினைப்பான் எனும் வசனத்தில் உணர்த்தப்படுகிறது.



மினாலுக்காக வாதாடும் தீபக்சேகல் ஒரு பெண் தனியாகத் தங்கியிருந்தால்! அவள் வீட்டுக்கு நட்புகள் வந்து போனால்! அவள் தாமதமாக வீடு திரும்பினால்! அவள் மது அருந்தினால்! அவள் நடனமாடினால்! அவள் ஆண்களிடம் சிரித்துப் பேசினால்! அவள் நண்பர்களைத் தொட்டுப் பேசினால்! அவள் ஒரு ஆணோடு தனித்து இருக்க நேரிட்டால்! அவள் தம் உடலைப் பகிரத் தயாராக இருப்பதாய் அர்த்தமா!?” எனக் கேட்கும் நேரிடைக் கேள்விக்கு, ”இல்லைஎன்று சொல்லும்போதே, “ஆனால்என்று இழுத்துத் தொடரவே விரும்புகிறார்கள். இந்த இல்லைஎனும் பதிலுக்குள் ஆனால்எனும் வார்த்தையைப் போட இடம் கிடையாது என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

பெண் காசுக்காக தம் உடலைப் பகிர வந்திருந்தாலும், காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், அவளுக்கு விருப்பம் இல்லாதபோது இல்லைஎன்று சொன்னால் அதன் அர்த்தம் இல்லைதான். ”இல்லைஎன்கிற மறுப்புக்கு ஏன் என்பதுள்ளிட்ட எந்தக் கேள்வியையும் கேட்க முடியாது. காரணம்இல்லைஎன்பது ஒற்றைச் சொல்லல்ல. அதுவொரு வாக்கியம், ‘ஏன்?’ என எவரும் கேட்கும் கேள்விகளுக்கான பதிலைஉள்ளடக்கிய ஒரு வாக்கியம் அது.

பொழுதுபோக்கிற்காக, பொருளீட்டுவதற்காக, அதிலிருக்கும் கதாநாயகத் தன்மைக்காக என திரைப்படங்களை நினைப்பதையும், உருவாக்குவதையும் இங்கே யாருக்கும் தடுக்க உரிமையில்லை. ஆனால் பாடங்களாக விளங்கும் சில படங்கள் சவுக்கால் அடித்து உணர்த்தும் தன்மை வாய்ந்தவை. அப்படியானதொரு பாடம்தான் இந்தியில் 2016ல் தாப்சி, அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி, பல ஆனால்களை முனை முறித்துப் போட்ட பிங் (Pink) திரைப்படம்.


*

அந்த குழந்தை சாப்டறதஎனும் இரண்டு சொற்கள் செவிட்டில் அறைந்த கணத்தில் ஒருவர் இன்றைய அன்னையர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதே பெரிய ஆச்சரியம்தான். பெண்களே நாகரீக உடையால் எத்தனை சிரமங்கள்? நம் தமிழ் பாரம்பரிய உடை அணிவது அவமானம் அல்ல அது பல நேரங்களில் அவசியமானது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றனஎன்றவரின் அறிவுரை லாவண்யாவை சீண்டியதில் பெரும் நியாயமுண்டு.

ஒரு குழந்தை பால் குடிக்கும்போது மறைவாய்ப் போகவேண்டுமெனச் சொல்வோரே, நீங்க பிரியாணியோ பழைய சோறோ சாப்பிடும்போது பெட்சீட் போட்டு மூடிட்டு சாப்டுவீங்களா? இல்ல பசு மாடு பால் கறக்கும்போது உங்களுக்கு மோகம் வருமா?”

குழந்தைக்கு பாலூட்டுதல் என்பது பசி தொடர்பானது மட்டுமல்ல, நம்பிக்கையை, உறவைக் கட்டமைக்கும் செயல். பிறந்த குழந்தையின் கண் பார்வை மார்பிலிருந்து அம்மா முகம் வரை தான் பாக்க முடியும். அம்மாவுடன் மட்டுமே பார்வையால் உறவு வைத்துக் கொள்ள முடியும். அந்த நிலை, வாய்ப்பு, தாய் சேய் இருவருக்குமே முக்கியமானது. குழந்தை தூங்கிவிட்டதா, வேர்க்குமா என்பதெல்லாம் பார்க்க வேண்டும். சற்று பெரிதான குழந்தை பால் குடிக்கும் போது சுற்றிலும் இருப்பதை வேடிக்கை பார்க்கும். உண்டது பிடித்திருந்தால் அம்மாவிடம் சொல்வது போல் சிரிக்கும். இவை யாவும் இயற்கையாக நடக்கின்ற, நடக்கவேண்டிய காரியங்கள். துணி போர்த்தினால் அது இயலாது. மற்றவர்களின் பார்வைக்காக இதைத் துறக்க முடியாது.

நம்மூரில் குழந்தைப் பிறப்பென்பது நியாயமில்லா, சமனில்லாத ஒரு பொறுப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஓடியாடிக் கொண்டிருந்தவள் அம்மாவானதும், குழந்தையோடு அறைக்குள் அல்லது வீட்டிற்குள் முடக்கி அடிக்கடி பாலூட்டு எனச் சொல்கிறோம். பாலூட்டுபவளின் அருகில் அமர்ந்து பேச மனமிருப்பதில்லை. அவளுக்கு தாகம் எடுக்கும். பழச்சாறு கொடுக்க வேண்டும். குடும்பத்தில் உறவுகளோடு அமர்த்தி பாலூட்டச் செய்ய வைத்து, அதை இலகுவாக்க வேண்டும்.

தந்தைகளின் கடமை சம்பாதிப்பது, குழந்தைகளை கொஞ்வதோடு நிறைந்து விடுமா? எத்தனை பேர் தம் பிள்ளை பாலருந்துவதை பார்த்திருக்கப் போகிறார்கள், அதை சங்கடமாக நினைக்க என்ன இருக்கு? எந்நேரமும் பிஞ்சுக் குழந்தையோடு, ஒரு அறைக்குள் முடங்கி, சமூக உறவாடல் இல்லாமல் இருப்பது எளிதானதா? இது குறித்து எந்த பிரஞ்னையும் இன்றி மறைப்பு, புடவை, போர்வை என எத்தனை காலம் சொல்லப் போகிறீர்கள். பாலியல் பண்டமாக பெண்களின் மார்புகளைப் பார்ப்பதைக் கடந்து, எப்போது அது குழந்தையின் உணவின் பாத்திரமாக, குழந்தைக்கும் அம்மாவிற்குமான உறவின் மொழியென உணரப்போகிறீர்கள்?

நான் வசிக்கும் ஐரோப்பாவில் பேருந்து, ரயில், அங்காடிகள், வங்கி என எங்கும் பாலூட்டலாம். ஆனால் இந்திய நண்பர்களைச் சந்திக்கும்போது என்னவோ ஒரு மனத்தடை வருது. நான் அறைக்குள் செல்ல வேண்டும் அல்லது அவர்கள் வெளியில் செல்ல வேண்டும். அதனாலேயே சில நேரங்களில் பாலூட்டுவதைத் தவிர்க்கிறேன்.  தண்ணீர் அல்லது நொறுக்குத் தீனி கொடுக்கிறேன். பிரச்சனை எங்கேயிருக்குனு தெரியுதா!?

இவை லாவண்யாவின் கருத்து மற்றும் என்னோடு நிகழ்த்திய உரையாடல். இவற்றை வாசித்தபோதும், பிங் படத்தின் வழியே பாடம் படித்தபோதும் ஒரு ஆணாக இதுவரையிலுமான என்  முன்முடிவுகளுக்கும், அறியாமைகளுக்கும், தவறுகளுக்கும் வெகுவாய் வெட்கப்பட்டேன்.


இனி நம் எந்தச்செயலும் இம்மாதியாரியான வெட்கத்தைச் சுமப்பதாய் இருக்க வேண்டுமா என்பதைச் சிந்திப்பதே அறிவார்ந்ததாய்க் கருதும் இந்தச்சமூகத்தின் அவசியத் தேவை!

-

”அயல் சினிமா” செப்டம்பர் இதழில் வெளியான கட்டுரை

என்னைக் கட்டிக்குங்க சார்

தொன்மை மன்ற விழாவிற்கு அழைத்தபோது, யார் பங்கேற்பாளர்கள் எனக் கேட்டேன். மாவட்டம் முழுவதிலுமிருந்து 210 வரலாற்று ஆசிரியர்கள் எனச் சொன்னபோது, ”உரை வேண்டாம், பயிலரங்காக வைத்துக்கொள்ளலாமா!?” என்று நான் தான் கேட்டிருந்தேன். காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

உண்மையில் ஆசிரியர்களைச் சந்திப்பதில் கொஞ்சம் நடுக்கம் உண்டு. காரணம் அவர்கள் ஆசிரியர்கள். நாம் கருதும் வண்ணமே அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. பொதுவாக பயிலரங்கு என்றால் 30 பேர் இருப்பதுதான் வசதி. 210 பேரை வைத்துக்கொண்டு உரையாடியபடி கையாள்வது என்பது சற்று ரிஸ்க் தான். அந்த ரிஸ்க் என்பது நேரம் கரைவதுதான்.
துவக்க விழா முடிந்து என்னிடம் அரங்கு வழங்கப்பட்டபோது மதியம் 12 மணி. வேண்டுமானால் அதிகபட்சம் 1.15 வரை எடுத்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லப்பட்டது. நண்பர் ஆசிரியர் பால்ராஜ் அவர்கள் தேர்ந்த ஒரு அறிமுகம் கொடுத்தார்.
உரை என்றால் அப்படி நேரத்தைக் குறைப்பது குறித்துக் கவலையில்லை. முன்பு எவ்வளவு நேரம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இறுதியாக நான் பேச வேண்டிய தருணம் வரும்போது எவ்ளோ நேரத்தில் முடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு, சொல்லும் நேரத்தில் ஓரிரு நிமிடங்கள் முன்பின் முடித்துவிடுவது வழக்கம்.
ஆனால் பயிலரங்கு என்று வந்துவிட்டு, திட்டமிட்ட நேரத்திற்கு தயாரிப்பை வைத்திருக்கும்போது, அதில் எதையும் கைவிட மனமே வராது. ஆரம்பம் - நடு - இறுதி என ஒரு கோர்வை இருக்கும். இடையில் எதை skip செய்தாலும் திருப்தியின்மை நிரம்பிவிடும்.
பங்கெடுத்திருக்கும் ஆசிரியர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதிலிருந்து அதிகாலையிலேயே கிளம்பி வந்திருப்பவர்கள். விரும்பி வந்தவர்கள், அழைத்து வரப்பட்டவர்கள், இழுத்து வரப்பட்டவர்கள் எனக் கேட்கப்பட்டபோது, இழுத்து வரப்பட்டவர்களுக்கும் கணிசமாக கை உயர்ந்தது மனதில் இருந்தது.


மதியம் 1.12 மணிக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் முடித்துவிடத் தயாராகவே இருந்தேன். எல்லாவற்றையும் நகர்த்தி இறுதிப் புள்ளிக்கு நகர்ந்துவிடுவது ஒன்றும் சிரமமில்லை. ஆனால் சட்டென ஒரு ரிஸ்க் எடுக்க முனைந்தேன். “இன்னும் 3 நிமிசத்தில் முடிச்சுக்கனும். முடிச்சுக்கவா இல்லை இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா!?” என்றேன். சிலர் ஜெர்க் ஆவது புரிந்தது. அந்த ஜெர்க் ‘அய்யய்யோ முடியப்போகுதா!?’ என்பதுதான் என எனக்குப் புரிந்தது. எனக்கு முழுமையாகக் கொடுக்கவேண்டும். ஒருங்கிணைப்பாளர் முனைவர் தனபாக்கியம், “அய்யய்யோ லன்ச்ங்க... எல்லாரும் சாப்பிட்டு வந்து அடுத்த செஷன் இருக்கு” எனப் பதறத் தொடங்கினார்.

கூட்டத்திலிருந்து “செவிக்கு உணவில்லாத போது”, “கன்ட்னியூ பண்ணுங்க”, “எங்களுக்குப் போர் அடிக்கும் வரை போங்க” என்பது போன்ற குரல்கள் வந்தன. தனபாக்கியம் என்னைப் பார்த்து சிரித்தார். “சரி நீங்களே முடிவு செய்ங்க. மூனு நிமிசத்தில் முடிக்கவும் தயார். நேரம் கொடுத்தா தொடரவும் தயார்” என்றேன்.

“சரிங்க... 1.45 வரை எடுத்துக்குங்க!” என்று கூட்டத்திலிருந்தே குரல் வந்தது... எடுத்துக்கொண்டேன். நிறைந்த மனதோடு நிறைவு செய்தேன்.
நிறைந்தவுடன் ஆசிரியர்கள் நிகழ்ச்சி குறித்து தம் கருத்தைச் சொல்ல முன்வந்தார்கள். இறுதி வரிசையிலிருந்து ஒரு ஆசிரியர் ஓடி வந்தார். தம் பாராட்டைக் கூறியவர்... “நான் இந்த மேடையில் உங்கள் அனைவரின் முன்னும் என் நன்றியை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி வந்தார். என்ன செய்யப்போறாரோ என சற்று திடுக்கிடலோடுதான் நின்றிருந்தேன். அருகில் வந்தவர் கைகளை விரித்தபடி “என்னைக் கட்டிக்குங்க சார்!” என்றார். மேடையில் பாராட்டு பெறும் விதமாக ஒரு ஆசிரியரை அணைத்துக் கொண்டது இதுவே முதல் முறை.
கீழே இறங்கி வந்ததும். அடுத்தடுத்து ஆசிரியர்கள் சற்றே உணர்ச்சிவயப்பட்ட நிலைகளில். “இன்னிக்குத்தான் நான் வாழ்க்கையைத் தொடங்குகிறேன்” என்றார் ஒருவர். உண்மையில் நடுங்கிப்போனேன். இப்போதைய நடுக்கம் வேறு விதமானது. ஒரு ஆசிரியை நோட்டை விரித்து வைத்துக் கொண்டு ஒரு “கையெழுத்து போடுங்க” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். “அதெல்லாம் வேணாம்ங்ம்மா!” எனக் கை கூப்பி விடைபெற்றேன்.
பயிற்சித் துறையை கையில் எடுத்தற்கு நெகிழ்ந்து நிறைந்த தருணங்களில் இன்றும் ஒன்று.

Miles to go...