எங்கே வெளையாடிக்கிட்டிருந்தாலும்
”மலர்ர்ர்ரூ”னு கூப்பிட்ட கொரலுக்கு
போவாட்டி மண்ட வீங்கிப்போயிடுது
படீர்னு கொட்ற கொட்டுல
தங்கக்கட்டி என் செல்லக்கட்டின்னு
அம்மா பாசமா இருந்ததும்
அப்பா அம்மாவும் சேர்ந்து சிரிச்சதும்
எப்போன்னு மறந்தே போச்சு
குடிச்சுப்போட்டு வர்றன்னிக்கு மட்டும்
போத மாதிரியே அப்பனுக்கு மீறுன பாசம்
சவுக்காயித்தில சுருட்டின கார முறுக்க
தின்னு தின்னுனு வாயில திணிப்பாரு
குப்னு அடிக்கிற நாத்தத்துல
கொமட்டிக்கிட்டு வந்து வேணாம்னு சொன்னா
அட தின்னுன்னு இடிக்கிற கன்னத்துல
வெடியவரைக்கும் நிக்கிறதில்ல எரிச்சல்
பாழாப்போறவனெ இன்னிகாச்சும்
காசு கொண்டாந்தியா இல்ல
எவகிட்ட வுட்டுட்டு வந்திட்டியான்னு
ஒடுங்குன போசிய தூக்கி வீசுவா
எச்சி ஒழுக தொங்குன தலையோட
திண்டாடுற அப்பன் விருட்டுன்னு
எட்டி ஒதைக்கிற ஒதையில
ஓரத்துல பொத்துனு வுழுவுறா
ஒதைக்க வர்ற அப்பங்காலப் புடிச்சு
பொத்துன்னு வுழுந்த அம்மாவ இழுத்து
வுழுந்து பொறண்டதுல கசங்கிக்கெடந்த
பொஸ்தக பைய அவசரமா சரிபண்ணி
தமிழ் பொஸ்தகத்த தடக்குனு உருவி
முப்பதேழாம் பக்கம் தொறந்தா
முருகேசன் கொடுத்த மயில் எறகு
அழாகாத் தூங்குது கொழந்தையாட்டம்
இந்த அப்பாம்மாக்கு பொறந்ததுக்கு பதிலா
முருகேசமூட்ல ஒரு மயில் எறகா பொறந்திருந்தா
இன்னேரம் பொஸ்தகத்துள்ள தூங்கியுமிருக்கலாம்
எந்தக் கவலையும் இல்லாம
குட்டியும் போடாம…..
_____________________________
ஓரம்போ.. ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது
எழுதியது
ஈரோடு கதிர்
கிராமங்களில் எல்லாப் பருவத்திலும் விளையாட ஏதோ ஒன்று கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதில் கிடைக்கும் நிறைவு இதமான ஒன்று. ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் உருவாக்க ஒரு குறிப்பிட்ட யுக்தியும், உழைப்பும் தேவைப்படும்.
வெயில்காலம் துவங்கும் காலத்திற்கு முன்பே, பனை மரங்களில் குறும்பைகள் விடத் துவங்கியிருக்கும். அப்போதே ஆளாளுக்கு இது என் மரம், இது உன் மரம் என்று நானும் அண்ணனும் பங்கு பிரித்துக்கொள்வோம். அடிக்கடி பார்த்துப் பார்த்து எத்தனை குலை விடுகிறது என்பது குறித்து தோராயமாக ஆராய்ச்சி நடக்கும்.
நாட்கள் நகர ஒரு சுபயோக சுப ஞாயிற்றுக்கிழமை நொங்கு வெட்ட நிர்ணயிக்கப்படும். காலையிலிருந்தே கூடையோடு பரபரப்பாக காத்திருந்து, ஆள் மேலே ஏறி வெட்டிப்போடும் போது தூரமாய் ஒதுங்கி நின்று, கீழே விழுந்தவுடன் குலையிலிருந்து சிதறியோடும் நொங்குளைப் பொறுக்கி, இப்படியாக ஒவ்வொரு குலைக்கும் சிதறிய காய்களை கூடையில் சேர்க்க, பெரியவர்கள் குலைகளைச் சுமந்து வர, அதிக குலை, இளம் நொங்கு என யார் மரம் சிறந்தது என்று ஒரு தீர்ப்பு வழங்கப்படும்.
வாகாய் ஒரு இடத்தில் எல்லாவற்றையும் குவித்து, பளபளவென தீட்டிய அரிவாளால்,பதமான நொங்கை எடுத்து, சரக்கென சீவித் தர, கைகள் பரபரக்கும். கட்டை விரலால் வேகமாய் பளபளக்கும் நொங்கை குத்த வெதுவெதுப்பா தண்ணீர் பீச்சியடிக்கும் முகம் முழுதுக்கும். அப்படியே உதட்டோடு ஒட்டி உறிஞ்சி, அடுத்த சில மணி நேரங்களில் வயிறு கனக்க அடுத்த பணி ஆரம்பிக்கும்.
சீவிப் போட்டு, உறிஞ்சி வீசிய காய்களில் ”இது உனக்கு, இது எனக்கு” கையகப்படுத்துவதில் போட்டி நிலவும். ஒரு வழியாய் வட்டமாய், அழகாய் சீவப்பட்ட நொங்கை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, அரிவாளாடு நொச்சி மரத்துக்கோ, கொய்யா மரத்துக்கோ ஓடி ஒரு நீளமான, அதுவும் மிக நேர்த்தியாக கிளை பிரியும் குச்சியை வெட்டி அதை அழகாக கத்தரித்து, கூடவே ஒரு அடி நீளத்திற்கு ஒரு குச்சியை வெட்டி எடுத்துக்கொண்டு வருவோம்.
அடுத்து வண்டி தயாரிக்கும் பணி சிரத்தையாக நடைபெறும். சமமான அளவில், ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு காலி நொங்கு காய்களை எடுத்து, அந்த ஒரு அடி குச்சியை அச்சாக வைத்து இரண்டு நொங்குகளின் முதுகில் இரு சிறு துளை போட்டு, அச்சின் இரண்டு பக்கமும் சக்கரமாக பொருத்தப்படும்.
அடுத்து கவட்டியாக இருக்கும் நீண்ட குச்சியின் தலையில் ஒரு நொங்கு ஸ்டியரிங்காக பொறுத்தப்படும். அடுத்து ஸ்டியரிங் பொறுத்தப்பட்ட குச்சியின் மறுமுனையிலிருக்கும் கவட்டி அச்சின் மையத்தில் வைக்கப்பட்டு, கவட்டி பிரியாமல் இருக்க சின்ன கம்பியின் துணையோடு கட்டப்பட்டவுடன் நொங்கு வண்டி தயாராகிவிடும்.
அடுத்த விநாடி முதல் வீடு, வாசல், காடு மேடு, களத்து மேடு என எங்கு சென்றாலும் நொங்கு வண்டி முன்னே செல்ல, பின்னால்தான் பயணம். சில சமயம் வீட்டில் கிடக்கும் பழைய இரும்பு முறத்தையோ அல்லது தகரத்தையோ முறம் போல் வளைத்து ஒரு கம்பியால் கட்டி வண்டிக்கு ட்ரெய்லர் செய்வதும் உண்டு.
வீட்டில் எப்போதும் வேலை சொன்னால் பிடிக்காது, ஆனால் நொங்கு வண்டி செய்த பின் வண்டியோடு சென்று செய்யும்படியான வேலைகள் மிகவும் பிடித்ததாக மாறிவிடும். நொங்கு வண்டியின் வாழ்நாளும் சில நாட்கள்தான். அடுத்த சில நாட்களில் நொங்கு காய்கள் சுருங்க ஆரம்பிக்க, அச்சில் இருந்து சக்கரம் கழண்டு போக ஆரம்பிக்கும். மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த வாரம் வெட்டப்படும் நொங்கிற்காக காத்திருக்க ஆரம்பிக்கும்..
நொங்கு வண்டியைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வெறும் ஒரு பிம்பமாக மட்டுமே நினைவில் புகைபடிந்த உருவமாய் இருக்கின்றது. கிராமத்தில் குலையாய் வெட்டி வந்து சீவிச்சீவி வயிறு புடைக்க நொங்கு தின்று எத்தனை வருடம் ஆகிறது என்பதுவும் நினைவில் இல்லை.
நெடுஞ்சாலைகளில் சாலையோரம் கேரி பேக்குகளிலோ அல்லது பச்சை பனை ஓலைகளிலோ தொல்லியோடு (நொங்கு ஓடு) தோண்டி எடுத்து விற்பனையாகும், முற்றிய நிலையில் இருக்கும் கடுக்காய் நொங்குகளை வாங்கித் தரும் போது, ஒரு மாதிரியாக சுவைத்துத் தின்னும் குழந்தையை பார்க்கும் போது, கொஞ்சம் குற்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆசையாய் வாங்கி அடுத்த சில நாட்களில் திகட்டிப் போகும் விளையாட்டுப் பொருட்களைக் காணும் போதெல்லாம் சுயமாய், இயந்திரவியலோடு உருவாக்கி விளையாடி மகிழ்ந்த நொங்கு வண்டிகள் மனதுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடுவதை என்ன செய்தாலும் நிறுத்த முடிவதில்லை.
வலைப்பூ கருத்தரங்கு – கொங்கு பொறியியற் கல்லூரி, பெருந்துறை
எழுதியது
ஈரோடு கதிர்
தினமும் கனிணியிலும், இணையத்திலும் புழங்கும் மாணவர்கள் கூட, இணையம் அளிக்கும் உன்னதமான வாய்ப்புகளை பல சமயம் ஏதோ சில காரணங்களால் தவறவிட்டு விடுகின்றனர். இதைச் சற்றே மாற்றவும், மாணவர்களை வலைப்பூக்களை பயன்படுத்த வைக்கவும் நடத்திய ”வலைப்பூக்கள் துவங்குதல் – கருத்தரங்குகள்” நிகழ்வையொட்டி, மாணவர்களிடம் வலைப்பக்கங்களை எடுத்துச் செல்லும் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் ஒரு வாய்ப்பு பெருந்துறை கொங்கு கல்லூரியில் வழங்கப்பட்டது.
மாணவர்கள் தங்கள் திறனை முழுதும் வெளிப்படுத்த வலைப்பக்கங்களை எப்படி பயன் படுத்துவது என்பது குறித்தும்…..
வலிமை வாய்ந்த வெகு ஜன ஊடகங்கள் தொடர்ந்து தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டொதுக்கும், நம்மைச் சுற்றி நடக்கும் அரிய விசயங்களை வலைப்பக்கங்கள் மூலம் ஆவணப்படுத்துவது குறித்தும்…
இணையத்தில் தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகளை வாசிப்பதும், அதுகுறித்த வெட்டி, ஒட்டி வரும் கருத்துக்களைப் பதிவு செய்வது குறித்தும்….
இணையத்தில் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மனதிற்குள் தோன்றும் கருத்துக்களை இணையத்தில் பயன்படுத்துவது குறித்தும் நாற்பது நிமிடங்களை உரை நிகழ்த்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, Power Point உதவியுடன் வலைப்பக்கம் துவக்குதல், இடுகைகள் எழுதுவது, பின்னூட்டம் இடுவது, திரட்டிகளை பயன்படுத்துதல், தமிழ் எழுதிகளை நிறுவுதல் ஆகியவை 50 நிமிடங்கள் மிக விரிவாக விளக்கப்பட்டது.
பல்வேறு தளங்களில் சமூகத்திற்கும், பொதுமக்களுக்கும் பயன்பட்டு வரும் வலைப்பக்கங்கள் உதாரணத்துடன் விளக்கப்பட்டது.
மிக ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்களைக் காணும் போது, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
மாணவர்களுக்கு நல்ல விசயங்களை பகிர வாய்ப்பளித்த துறைத்தலைவர் முனைவர். பிரியகாந்த், மூத்த விரிவுரையாளர்கள் திருமதி.கலைச்செல்வி, திரு.வெங்கடேஷ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்த துணையிருந்த மாணவியர்கள் பிரிவு செயலர் செல்வி.பவித்ரா அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வழக்கத்திற்கு மாறான கூடுதல் குளுமையோடு விடிந்த இன்றைய பொழுது, நாள் முழுதும் மகிழ்ச்சியை மனதிற்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டேயிருந்தது. அந்த விடியலின் குளுமையை நிகழ்வு நிறைந்த போது இன்னும் கூடுதலாக இதயத்திற்குள் உணர முடிந்தது.
இன்னும் விதைகளைத் தொடர்ந்து விதைப்போம், ஒரு நாள் விருட்சங்கள் நம்மை சுற்றி நிற்கும்.
மேலும் நன்றிக்குரியவர்கள் பதிவர்கள் பழமைபேசி, ச.செந்தில்வேலன், கார்த்திகை பாண்டியன் மற்றும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்.
___________________________________
என்ன சொல்ல?
எழுதியது
ஈரோடு கதிர்
உடல் முறுக்கி உயிர் வலிக்க
எதையோ புரட்டுகையில்
பூக்கும் வியர்வைத்துளியில்
புரளும் காற்றின் சிலுசிலுப்பில்
சுகமாய்ப் பிறக்கும் இதமான கவிதை…
வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்
===========
அடர் வீச்சமாய் அடிக்கிறது
வெட்டப்பட்ட மரத்தின் வாசம்
பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…
எதையோ புரட்டுகையில்
பூக்கும் வியர்வைத்துளியில்
புரளும் காற்றின் சிலுசிலுப்பில்
சுகமாய்ப் பிறக்கும் இதமான கவிதை…
வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்
===========
அடர் வீச்சமாய் அடிக்கிறது
வெட்டப்பட்ட மரத்தின் வாசம்
பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…
===========
ரயில் பயணங்களில்
எழுதியது
ஈரோடு கதிர்
உறக்கத்தின் துவக்கத்தில்
கிழக்கு நோக்கி தொடங்கிய
தொடர்வண்டிப் பயணம்
இடவலமாய் மாறிமாறி நிறைகிறது
இடையிடையே விழிக்கும் மனதில்
இறுதிவரை நிகழவேயில்லை
திசை மாற்றம்
பயணத்தின் துவக்கத்தில்
இருக்கையின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
இறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
எந்தச் சலனமுமின்றி
<><><><><><><><>
எல்லாப் பயணத்தின் நிறைவிலும்
இறங்குவதில் பரபரப்பு வியாதியாய்
இந்த முறையாவது எல்லோரும்
இறங்கியபின் இறங்கவேண்டும்
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
வழக்கம்போல் முட்டி மோதி
இறங்க யத்தனிக்கும் நேரத்தில்
<><><><><><><><>
பாவம் சுமக்கும் சந்ததி
எழுதியது
ஈரோடு கதிர்
நாளுக்கு நாள் கரைபுரளும் பொருளாதாரத்தின் நீட்சியாக, தனிமனித விழாக்கள் வண்ணமயமாக, வெறித்தனமான ஆடம்பரத்தோடு கொண்டாடப்படுவதை கண்டும் காணாமலும் ரசித்தும் ரசிக்காமலும் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். அதேசமயம் இத்தனை ஆடம்பரம் தேவைதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
நடுத்தரக் குடும்பங்களில் கூட சர்வசாதரணமாக மூன்றாயிரம் நபர்களை ஒரு திருமணத்திற்கு அழைப்பதை கௌரவமாக நினைக்கின்றனர். மேல் தட்டு மக்களின் திருமணக் கூட்டத்தை சொல்லவே வேண்டியதில்லை.
அவர்களின் தனிப்பட்ட சொந்த ஆடம்பரங்களைக் கண்டு கொஞ்சம் முகம் சுழித்து சகித்துக் கடந்தாலும், சகிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம், விருந்துகளில் ஒவ்வொரு இலையிலும் குடிப்பதற்காக தனித்தனியாக தண்ணீர் பாட்டில்களை வைக்கும் விபரீதங்களைக் காணும் போதுதான்.
எவ்வளவு பேரை அழைத்தோம் என்ற எண்ணிக்கையை கௌரவமாக நினைப்போர், தாங்கள் உணவுக்கூடத்தில் வழங்கும் பிளாஸ்டிக் டம்ளர் அல்லது பிளாஸ்டிக் பாட்டில் மூலம் பல ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை மலடாக்குவது குறித்து சற்றும் குற்ற உணர்வு கொள்வதேயில்லை. இது எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் அல்லது என்ன நடந்தால் எனக்கென்ன என கண்டும் காணாமல் போகும் மனப்போக்கின் விபரீதம்.
கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் இந்த பிளாஸ்டிக் பூதம் வெறித்தனமாக நிலத்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளது. அதுவரை விருந்துகள், விழாக்களில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர்கள் மட்டுமே முழுக்க, முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு பந்தி முடிந்தவுடன் எடுத்து, கழுவி மீண்டும் அடுத்த பந்திக்கு வைக்கும் வழக்கம் சிதைந்தது, எளிது, சுகாதாரம்(!) என்ற அற்ப காரணங்களையொட்டி யூஸ் அன் த்ரோ டம்ளருக்கு புலம் பெயர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக இலைக்கு இலை குட்டி தண்ணீர் பாட்டிலை வைப்பது வாடிக்கையாகிப் போனது. இது நாகரிகத்தின்(!) அடையாளமாகவும், விழா நடத்துவோரின் அந்தஸ்த்தை(!) வெளிக்காட்டும் ஒரு வித மனவியாதியாகவே மாறிப்போனது.
இன்னும் சில விழாக்களில் விருந்து கூடத்திற்கு வெளியே தண்ணீர் வைத்திருக்கும் இடத்தில் மையமாக நின்று கொண்டு சுற்றிலும் இருக்கும் மேசைகள் மேல் டம்ளர்களை அடுக்கி, ஒரு ஆள் தொடர்ந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருப்பார். தண்ணீர் குடிக்கச் செல்பவர் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி டம்ளரை அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, அடுத்த டம்ளரை எடுத்து குடிப்பார், இப்படியாக ஒரே நேரத்தில், ஒரே ஆள் மூன்று நான்கு டம்ளர்களை நசுக்கி எறியும் போது, பூமியின் ஜீவாதார நரம்புகள் நசுங்கிப்போவது குறித்து விருந்துக்கு செலவு செய்பவருக்கும், ஊற்றுபவருக்கும், குடிப்பவருக்கும் என யாருக்குமே துளியும் கவலையேயில்லை.
விருந்துகளில் இலைகளில் பரிமாறப்படும் 300 மி.லி தண்ணீர் பாட்டிலை உடைத்து விரித்தால், ஏறத்தாழ ஒரு சதுர அடி பரப்பு அளவுக்கு விரியும். விழாவில் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களில் சராசரியாக நாற்பது சதவிகிதம் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக பயன்படுத்தப் படுவதில்லை. மீதி யாவும் குப்பைகளோடு குப்பைகளாக கள்ள மௌனத்தோடு மண்ணை தொடர்ந்து தொடர்ந்து மலடாக்கும் பணியினை செவ்வனே செய்து வருகின்றது.
திருமணங்களின் நோக்கம் பலவாக இருந்தாலும், சந்ததிகளும் ஒரு முக்கியக் காரணம். ஒரு திருமணத்தால் விதைக்கும் பிளாஸ்டிக் விருட்சத்தை வேரறுக்கும் பாரத்தையும் வருங்கால சந்ததிமேல் சுமத்துகிறோம் என்ற எண்ணம் மெலிதாய் அடிமனதில் குறுகுறுக்க ஆரம்பித்தாலே, மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு விழா, மண்ணின் கருவறைக்கு சாவு மணியடிப்பதை நிறுத்திட முடியும்.
____________________________________________________
சாணென்ன மொழமென்ன?
எழுதியது
ஈரோடு கதிர்
அடங்காப் பசியிலும் அவிச்சு திங்காம
கைபடாம காத்துப்படாம பத்திரப்படுத்தி
அடைகாத்த வெதப்பயறு
ஆடி மாசம் வராத தண்ணியால
பூச்சி புழுவுக்கு சோறாப்போச்சு...
வாரக்கணக்குல கருக்கிய மானம்
வழியவுட்ட ஒத்த மழைய நம்பி
ஏமாந்து வெதச்ச சோளம்
மறு மழை பேயாம போனதுல
மண்ணோட புழுங்கிப்போச்சு...
தப்பித் தவறி மொளைச்சு கிளைச்சு
தழைச்சு நின்னு தலைநிமிர்ந்து சிரிக்கையில
ஐப்பசியில வந்த அடைமழை
பேய் மழையா நின்னு பேஞ்சதுல
மூழ்கி அழுகிப்போச்சு...
வெள்ளைக்காரன் போடற துணிக்கு
வெளிநாட்டுக்கார் வாங்குன முதலாளி
வெளியேத்துன சாயத்தண்ணியில
கொஞ்ச நெலமும் செத்துப்போச்சு
குடிதண்ணியும் வெசமாச்சு...
தலைக்கு மேல அட சாணென்ன மொழமென்ன
போனது போவட்டும் நடப்பது நடக்கட்டும்
எல்லா ஊருக்கும் கொடுத்துட்டாங்களாமே
கரியில்லாத கேஸ் அடுப்பும் கலர் டிவியும்
எப்படா கொடுப்பாங்க நம்மூருக்கு?
___________________________________________
புத்தகத் திருவிழா- சகாயம் – நேர்மை
எழுதியது
ஈரோடு கதிர்
கொங்கு மண்டலமே கொண்டாடும் ஈரோடு புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் கடும் உழைப்பில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று மாலை நான் சென்றிருந்த போது பதிவுலக நண்பர்கள் மதுரையிலிருந்து கார்த்திகை பாண்டியன், மதுரை சரவணன், திருப்பூரிலிருந்து முரளிகுமார், ஈரோடு குழுமத்தூண்கள் ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு, கார்த்திக் ஆகியோர் வருகை புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாலை நேரம் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. நேற்றைய விழாவின் பேச்சாளர்கள் விஜய் டிவி விஜயன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம். மழைச்சாரல் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சாளார்கள் பேசத் துவங்கும் முன்பே ஒரு கட்டத்தில் மழையின் மிரட்டலுக்குப் பயந்து மக்கள் களைந்து, ஆனாலும் சகாயம் அவர்களின் உரை கேட்க சற்று ஒதுங்கி மீண்டும் அமர்ந்தனர். விழாவிற்கு எஸ்.கே.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.
அகல்விளக்கு, க.பாலாசி, நான், மதுரை சரவணன், கார்த்திகை பாண்டியன் |
முதலில் விஜயன் உரையைத் துவங்கினார். அருமையான குரல் வளம், கட்டிப்போடும் பேச்சுத்திறன், இருந்தும் என்ன செய்ய, மனதில் ஒன்றும் பதியவில்லை. ”தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கனக்கான பல்கழைக் கழகம்” என்ற போது சிரிப்பு வந்தது. பேச்சில் இன்னும் பக்குவம் கைவரவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. (ஓராண்டுக்கு முன் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பேசியதும் இது போன்றே).
புத்தகத் திருவிழாவில் கல்லூரி அளவில் நடந்த பேச்சுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் தலா நான்கு நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
எல்லாம் நிறைந்து திரு. சகாயம் அவர்கள் ஒலி வாங்கியைப் பிடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததற்கு மிகச் சரியான தீனியாக அமைந்தது உரை.
உரை நிகழ்த்தும் திரு. சகாயம் |
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் இ.ஆ.ப. – உரை ஒரு பார்வை
நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம், எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய உரை மிகத் தெளிவாக காட்டியது. நேர்மையாக இருப்பதால் நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. எதிரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது எனவும், தன்னுடைய உறவுகளும், நட்புகளும், உடன் பணி புரியும் அதிகாரிகளும், கீழே பணிபுரியும் அலுவலர்களும் இவருடை நேர்மையின் பொருட்டு விலகிப்போவதைச் சொல்லும் போது வலியாய் உணரமுடிந்தது. தான் நேர்மையாக இருப்பதற்கு தன்னுடைய பெற்றோரின் வளர்ப்பு ஒரு காரணம் என்றாலும், இன்று மனைவியின் முழு ஒத்துழைப்பே அதற்கு முக்கிய காரணம் என்றார். அதில் இருந்த உண்மை அவருடைய துணைவியார் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது.
பத்து வருடங்களுக்கு முன்பு, உலகத்தின் சர்வ வல்லமை படைத்த பெப்சி(Pepsi) நிறுவனத்தின் குளிர்பானத்தில் பாட்டிலில் மாசு படிந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தி, இறுதியாக நிரூபித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருக்கும் பெப்சி ஆலையை சீல் வைத்து மூடிய செய்தி பற்றிக் கூறும் போது, அந்த ஆலையை சீல் வைத்து இழுத்து மூட வேண்டிய முடிவினை எடுக்க வெறும் பனிரெண்டு பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் தயார் செய்து அளிக்கக்கூடிய அறிவு மட்டும் போதாது, தன் பணியில் துளியும் கறைபடியாத நேர்மை தந்த துணிவுதான் மிக முக்கியம் என்று சொன்னபோது, பெருமிதத்தில் மனம் சிலிர்த்தது.
அரசு பள்ளிகள் மேல் தான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக தொடர்ந்து தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய தான் பெரும் முயற்சியெடுப்பதை சில உதாரணங்களுடன் விவரித்தார்.
பெற்றோர்களுக்கான ஒரு தனிப்பட்ட குடும்பச் சண்டையில், பள்ளியில் படிக்கும் மகன், தன்னைத் தேடி மனு அளிக்க வந்த சம்பவம் குறித்து பேசும் போது, மாணவனை ஊக்குவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கயெத்தனித்த நேரத்தில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறுக்கிட, அதே சமயம் தன் கீழ் உள்ள அதிகாரியை அதற்கு நியமித்தும், அந்த மாணவனின் தாய் தீர்வுக்கு ஒத்துவராத நேரத்தில் அந்தத் தந்தை தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள, தன்னால் தீர்வு வழங்கமுடியாமல் போனதை கனத்த இதயத்தோடு, வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.
தேசம் போலிகளின் தேசமாய் மாறிப்போனதை மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் போலிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில் போலி டீத் தூள், போலி உணவுப் பொருட்கள், போலி மருந்துகள், போலி மருத்துவர்கள் இறுதியாக போலி வாக்காளர் அட்டை மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் வரை சிக்கியதாகக் கூறினார்.
குவிந்து கிடந்த மக்களில், ஆட்சித் தலைவரின் உரை கேட்க பலநூறு பள்ளிக் குழந்தைகளும் பள்ளி சீருடையுடன் குவிந்து கிடந்தது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, அதே சமயம் பெரு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
வலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்
எழுதியது
ஈரோடு கதிர்
அழகிய தருணங்கள், ஒரு கவிதையாய், சாரல் மழைத்துளியின் சிணுங்கலாய், மிக எளிதாய்க் கைகூடும் என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. என்னையும் இத்தனை நண்பர்களையும் இணைத்து வைத்த வலைப்பக்கத்தை நம்மையொத்த மனிதர்களிடம் திணிப்போம் அல்லது ஊட்டுவோம் என்பது நீண்ட கால ஆசை…
அப்படிப்பட்ட அற்புத தருணம் இன்று கைகூடியது. நண்பர் பதிவர் பழமைபேசியின் ஈரோடு வருகையை வித்தியாசமாக அமைக்க விரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இரு வேறு பொறியியற் கல்லூரிகளில் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்களிடம் தனித்தனியே பேசும் போது, தங்கள் கல்லூரியில் எதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நண்பர் பழமைபேசியிடம் இசைவு பெற்றுத் தர இயலுமா என வினவ, நான் வலைப்பதிவுகள் குறித்து உங்கள் மாணவர்களிடம் அவரை வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என்று கூற, ஒரு வழியாக நிகழ்ச்சி கை கூடி வந்தது.
பெருந்துறை கொங்கு பொறியியற் கல்லூரி
ஆனாலும், பொறியியற் கல்வியில் மூழ்கிய மாணவர்களிடம் ஆங்கிலம் அதிகமாய்க் கோலோச்சும் காலத்தில் தமிழ் பதிவுகள் குறித்த கருத்தரங்கம் எந்த அளவுக்கு வெற்றியைத் தன்வசம் கொள்ளும் என்ற சந்தேகம் மனதில் கனத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது.
ஒரு வழியாய் திட்டமிட்டபடி 07.08.2010 காலை பத்து மணிக்கு பெருந்துறை கொங்கு பொறியற் கல்லூரிக்கு சென்றடைந்தோம்.
கணினி தொழில் நுட்பத் தலைவர் முனைவர். ஜெயபதி, கணினி பிரிவுகள் முதன்மைத் துறைத் தலைவர் முனைவர். பாலமுருகன், இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கௌசல்யா மற்றும் பேராசிரியை. ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) உறுப்பினர்கள் (கணினி அனைத்துப்பிரிவுகளையும் சார்ந்தவர்கள்) சுமார் 260 பேருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நண்பர். பழமைபேசி அவர்கள் முதலில் வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து சிறிது உரையாற்றியபின் தமிழில் வலைப்பக்கங்களின் அவசியம், அதை உருவாக்குதல், அதில் இடுகைகள் மூலம் பங்கேற்பு என்பது குறித்து மிக விரிவாக கருத்தரங்க உரையாற்றினார். பொறியியற் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த விளக்கங்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
கருத்தரங்கில் குறிப்பிட்ட சில வலைப்பக்கங்கள், திரட்டிகள், ஈரோடு குழுமம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலைப்பக்கங்களில் என்னுடைய பங்கு என்ற தலைப்பில் நானும் சிறிது உரையாற்றினேன்.
நிகழ்ச்சியில் மிகவும் அசந்து போன துறைத்தலைவர் முனைவர். ஜெயபதி நிகழ்ச்சி நிறைவிற்குப் பின் கொங்கு வளாகத்தில் இயங்கும் கொங்கு பண்பலையில் உடனடியாக ஒரு செவ்விக்கு (பேட்டி) ஏற்பாடு செய்து பழமைபேசி மற்றும் என்னிடம் செவ்வி எடுத்து பதிவு செய்யப்பட்டது. சட்டென திட்டமிட்ட நிகழ்வில் எந்த முன் தயாரிப்புமின்றி செவ்விக்காக கேள்விகளை வீசிய இரண்டு மாணவிகளின் திறமை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.
சென்னிமலை
எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரி
எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரி
நிகழ்ச்சியின் நிறைவில் கொங்கு வளாகத்தில் திளைத்த மகிழ்ச்சியுடன், அடுத்த நிகழ்ச்சியை நடத்த சென்னிமலைக்கு கிளம்பினோம். நிகழ்வு சென்னிமலையில் இருக்கும் எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) சார்ந்த 263 மற்றும் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.
தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன், முதல்வர் (பொறுப்பு) பேரா.சண்முகசுந்தரம், மிகுந்த முன்னேற்பாடுகளுடன் திட்டமிட்டிருந்த துறைத்தலைவர் பேரா. பார்த்திபன், விரிவுரையாளர்கள் திரு.மோகன், திரு. கோபி, திரு. மகேஷ் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.
உரிய நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நண்பர். பழமைபேசி அவர்கள் அந்த மாணவர்களிடமும் வெளிநாட்டுக் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து உரையாற்றிய பின் தமிழ் வலைப்பதிவுகள் குறித்து மிக நேர்த்தியாக, மிக அற்புதமாக, தெளிவாக கருத்துரை வழங்க, ஆங்காங்கே மாணவர்களிடமிருந்து கேள்விக்கணைகள் பறந்தன. மாணவர்களிடையே ஊடுருவி, ஒன்றாய் கலந்து நண்பர் மிக அற்புதமாக நிறைவு செய்தார்.
நிகழ்ச்சி தொகுப்புரையை வழங்கிய ஐந்து மாணவ, மாணவியர்களின் தயாரிப்பு மெச்சத் தகுந்த அளவில் இருந்தது.
ஒரு மனிதனின் சமூகக் கடமை மற்றும் அதில் என் வலைப்பக்கங்களின் பணி என்ற தலைப்பில் முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்தி, கனவுகளை வீரியமாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்திடம் நிதானமாக விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளன. அரவணைத்து வளர்ப்போம், நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தாய்மொழி சார்ந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்புவோம்.
இரு நிகழ்ச்சிகளும் சிறப்புற நிறைவடைந்த மகிழ்ச்சியோடு இன்றைய பொழுது மிகப் பயனுள்ளதாக நிறைந்தது.
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர் பழமைபேசி, முனைவர், கௌசல்யா மற்றும் பேராசிரியர் பார்த்திபன்.
இந்த நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டபோது தட்டிக்கொடுத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்கே இந்த மகிழ்ச்சி சமர்ப்பணம்.
___________________________________________________________________
நாணல்கள்
எழுதியது
ஈரோடு கதிர்
இளம்காலை நேரம் கோவை செல்ல வாகனத்தில் நண்பரோடு கிளம்பினேன். அவிநாசியை கடக்கும் போது ”இங்கேயே சாப்ட்றலாம்” என நண்பர் பேருந்து நிலையம் தாண்டி, ஒரு டீக்கடையோரம் நிறுத்தினார் . ”என்ன இங்கியா” எனக் கேட்க, ”நிக்கிற கார் எல்லாம் பாருங்க, அப்புறம் சாப்ட்டுச் சொல்லுங்க, எப்படின்னு” என்றார்
முன் பக்கம் கூரை வேய்ந்த உள்ளே பனிரெண்டுபேர் மட்டும் சாப்பிடும் அளவுக்கு ஒரேயொரு அறை. அதுவும் நிரம்பியிருக்க, காத்திருப்பு பட்டியலில் ஏற்கனவே நிற்கும் மனிதர் பின்னால் ஒரு மாதிரி கூச்சத்தோடு நிற்கத் துவங்கினோம். சில நிமிடங்கள் கழித்து வந்த மனிதர் வரிசையைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், சடசடவென உள்ளே போய் சாப்பிடும் ஒரு ஆள் பக்கத்தில் இடம் பிடிக்க நின்று கொண்டார், நாங்கள் இருவரும் இயலாமையில் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்ள மட்டும் செய்தோம்.
அடுத்த சில நிமிடங்களில் எங்களுக்குப் பின் கூட்டம் அதிகமானது, நண்பரிடம் கேட்டேன் “இப்படி நின்னு வேற சாப்பிடனுமா”ன்னு. ”இல்ல, ஒரு வாட்டி சாப்பிட்டு பாருங்க” என்றார்.
சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் முடிப்பது போல் தெரிய, உள்ளே சென்று வழக்கமான இந்தியக் கலாச்சார முறையில் இடம் பிடித்தோம். அப்போதுதான் கவனித்தேன் இலை போட்டு தண்ணீர் தெளித்து, வைத்து, பரிமாறி, கடைசியாய் இலையடுத்து, காசு வாங்குவது வரை அறுபது வயது மதிக்கத் தக்க ஒரே ஒரு ஆள் மட்டும் பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்.
நான் வழக்கம் போல் “என்ன சொல்லலாம்” என்று நண்பரைக் கேட்க, “ஒன்னும் சொல்ல முடியாது, முதல்ல இட்லி வரும் அப்புறம் தோசை குடுப்பாங்க, அவ்வளவுதான்” “அடப்பாவி மக்கா இதுக்குத்தான் இந்தப் பில்டப்பா, அதுதான் தினமும் வீட்ல போடறாங்களே”ன்னு நினைச்சிக்கிட்டேயிருக்கும் போது இட்லி வைக்கப்பட்டது, பரபரப்பாய் சாம்பார், சட்னி ஊற்றப்பட்டது.
இதற்குள் அந்த சிறிய அறைக்குள் இன்னும் சிலர் வந்து இடம் பிடிக்க நின்று கொள்ள கிடைத்த இடைவெளியில் மிக லாவகமாய் அந்த நபர் புகுந்து புகுந்து பரிமாறினாலும் சாப்பிடும் அனைவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
சாப்பிடுவோருக்கோ சட்னி போதவில்லை, சாம்பார் போதவில்லையென கை காய்ந்து கொண்டிருக்க, நிற்கும் நபர்களுக்கு சாப்பிடுவோர் சீக்கிரம் எழ வேண்டும், பொறுத்துப்பொறுத்த பார்த்த சாப்பிட வந்து காத்திருந்த நபர் அருகில் இருந்த சட்னி, சாம்பார் வாளியை எடுத்து காய்ந்த கையோடு இருக்கும் இலைக்கு பரிமாற ஆரம்பித்தார், இதைப் பார்த்த காத்திருக்கும் இன்னொரு நபர் “சார் உங்களுக்கு என்ன வேணும் (மனசுக்குள் ”யோவ் சீக்கிரம் எந்திரிய்யா”)” எனக் கேட்டு தட்டில் இருந்த தோசை, இட்லியை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பசியோடு வந்து கால் கடுக்க நின்று, காத்திருந்து, ஒரு கட்டத்தில் யாருக்காகவோ யாருக்கோ பரிமாறி, யுக்தியோடு இடம் பிடித்து தன் பசியாறிச் செல்லும் அந்த நபர்கள் வந்த கார்களின் விலை ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் 3 முதல் 15 லட்சம் வரை இருக்கும்.
உணவின் சுவையோ, அவர்களின் நண்பர்கள் பெருமையாக அல்லது மிகைப்படுத்திச் சொன்னதோதான், அந்த மனிதர்களை அவ்வளவு தியாகங்களைச்(!) செய்து, காத்திருந்து சாப்பிடத் தூண்டியிருக்கலாம், அதேசமயம் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்ற உலகத்தில் பணக்காரர்களை சட்டினியும், சாம்பாரும், இட்லியும், தோசையையும் முன்பின் தெரியாத ஒரு நபருக்கு பரிமாற வைத்த சனநாயகத்தை ஒரு நிமிடம் சிரிப்போடு வணங்கவே தோன்றியது
சுவையின் பொருட்டோ, பெருமையின் பொருட்டோ இவ்வளவு தூரம் இறங்கி வரும் ஒரு (பணக்கார) மனிதனின் நாணல் மனோ நிலையில், இதே வேறு ஒரு சராசரியான உணவுவிடுதியில் இவ்வளவு பொறுமையும், சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் போவது ஏன்?
ஏதோ கவனக்குறைவில் தனது பணியில் தடுமாறும் உணவு விடுதிப் பணியாளனை ஆங்காங்கே இன்னும் அடித்தோ, திட்டிக் கொண்டுதானே இருக்கின்றோம்.
தனக்குத் தேவை அல்லது வேறு வழியேயில்லையெனும் போது சட்டென பணம், பகட்டு என எல்லாவற்றையும் விலையாய் கொடுத்து, சகித்துக் கொள்ளும் மனோபாவம் எல்லா சமயங்களிலும் நிகழாமல் போவது ஏன்?
இதற்கு முழுக்க முழுக்க மனிதனின் மனோநிலை மட்டுமே காரணமா, வாய்ப்புகள் மட்டுமே காரணமா? விடை தெரியாத கேள்வியோடு சற்றுக் கட்டிப்புரள்வோம்..
_____________________________________________________
Subscribe to:
Posts (Atom)