அற்றவன்


வழிந்தோடும் இருளில்
பதட்டமின்றிப் பயணிக்கிறான்
பார்வையற்றவன்

~~

தோல்விப் பட்டியலில்
முதலிடம் பிடிக்கிறான்
நம்பிக்கையற்றவன்

~~

வயிற்றுக்குப் பசியை
தின்னக் கொடுக்கிறான்
காசற்றவன்

~~

மரணத்தில் இடுகாட்டில்
இடம் பிடிக்கிறான்
நிலமற்றவன்

~~

தேடலில்
புதைந்து போகிறான்
தேவையற்றவன்

~~
நேசிப்பை நேசிக்க
மறந்து போகிறான்
காதலற்றவன்

~~
பூக்களின் அழகை
வாசத்தால் ரசிக்கிறான்
பார்வையற்றவன்

~~

ஊளமூக்கி

சுளீர்னு” முதுகுல வுழுந்தபொறவுதான் விருக்குனு முழிச்சுப் பார்த்தேன். சீலையத் தூக்கிச் செருகிட்டு அம்மா நின்னுக்கிட்டிருந்துச்சு, ”ஏண்டி எழுப்பயெழுப்ப என்றி தூக்கம் இப்புடி, இந்தா குண்டால பாலு ஆற வச்சிருக்கேன். சின்னக்கண்ணு எந்திரிச்சா பாட்டல்ல ஊத்திக்குடு”

தூக்கம் தூக்கமா வந்த கண்ணக் கசக்கிட்டு முழிச்சுப் பார்த்தேன், தூக்கு போசி தூக்கிட்டே அம்மா சொன்னா ”அலேய், பொசுப்பா ஒழுங்கா ஊட்லய இரு, அங்கயுமிங்கயும் அவள இழுத்துக்கிட்டு சுத்தாத. எங்யாவது சுத்துனேனு தெரிஞ்சுது, தோலு உறிஞ்சுபோயிருமாமா” படல சாத்திட்டு அம்மா கெளம்பிக்கிட்டிருந்துச்சு.

படல் சாக்கு ஓட்டையில வர்ற வெளிச்சத்துல சின்னக்கண்ணு, போர்வய சுருட்டிக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு சுருண்டு தூங்கறது தெரிஞ்சுது. ஊளமூக்கிக்கு சளி உதட்டுமேல காஞ்சு போயிருந்துச்சு. புசுபுசுன்னு மெதுவா மூச்சுவுடற சத்தம் கேட்டுச்சு. சின்னக்கண்ணு என்ன மாதிரியேதான் கப்புக் கலரு, கண்ணு மொட்டுமொட்டா அழகா இருக்கும். இப்பத்தான் கொஞ்ச நாளாத்தான் ”க்கா க்கா”னு பேச ஆரம்பிச்சிருக்கா, தத்தக்கா பித்தாக்கனு கூடக்கூட ஓடியாந்திக்கிட்டே இருப்பா. சின்னக்கண்ணு அக்கான்னு கூப்பிடறப்பெல்லாம் எனக்கு மல்லீக்கா நெனப்பு வந்துரும்.

சின்னக்கண்ணு வவுத்துல இருக்கும் போதெல்லாம், வெடியறதுக்கு முன்னாலயே எழுப்பியுட்டு, அம்மா தர்ற வெறுங்காப்பியில ரவுண்டு பன்ன தொட்டுத் தின்னு முடிச்சவுடனே, தூக்குப்போசி சோத்தோட என்ன தோள்ல வச்சிக்கிட்டு அப்பன் பெரியவூட்டு பண்ணயத்துக்கு தூக்கிட்டுப் போயி வுட்ருவாறு.

பண்ணையத்து ஆடு மாடுகள மலையடிவாரத்துக்கு நானும் கோணக்காலு மல்லிகாக்காவும்தான் ஓட்டிக்கிட்டுப் போவோம். பண்ணையக்காரவூட்ல எஞ்சோட்டுக்கு இருக்குற தர்ஷினி பள்ளிக்கோடம் போறதுக்கு, நாங்க மாடோட்ற சமயத்துலதான் பள்ளிக்கோட வேனு வரும். வேனு வந்துட்டுப்போறப்போ அடிக்கிற பொக வாசம் எனக்கு ரொம்ப புடிக்கும்.

மல்லிகாக்காவ மல்லீக்கானுதான் நான் கூப்புடுவேன். அக்கா ஒருத்திதான் ”புஷ்பா”ன்னு என்ன கூப்புடும், மத்தவிங்க ”பொசுப்பா, பொசுப்பா”ன்னுதான் கூப்புடுவாங்க. அக்கா விந்திவிந்தி மேச்சக்காட்டோரம் இருக்குற பயிறுபச்சையக் கடிக்கப் போற மாடுகள முடுக்குறதுக்கு ஓடுறத பாக்குறப்போ பாவமா இருக்கும்.

மல்லீக்கா பள்ளிகோடம் போனதேயில்லியாம், என்ன ”நீ பள்ளிக்கோடம் போடி புஷ்பா”ன்னு சொல்லிக்கிட்டேயிருக்கும். மத்யான சோத்துக்குக்கு கட்டுத்தரைக்கு ஓட்டியாந்துருவோம், சோறு தின்னுட்டு, அஞ்சாங்கல்லு ஆடுவோம், புளியங்கொட்ட இருந்தா, ஒரு பக்கம் ஒரசி வெள்ளையாக்கி, தாயக்கரம் ஆடுவோம்.

திடீர்னு ஒரு நாள் அம்மாக்கு வலி வந்து ஆஸ்பத்திரிக்கு போயிட்டாங்கன்னு பக்கத்தூட்டு ஆயா சொல்லி, அவுங்கூட்லியே படுக்க வச்சுக்கிச்சு. ரெண்டு நாள் ஆயாவூட்லதான் இருந்துட்டு பண்ணயத்துக்குப் போனேன். மூனாம் நாள் மத்தியானப் பஸ்சுக்கு அம்மாலும் அப்பனும் வந்துருவாங்கன்னு ஆயா சொல்லுச்சு. மாடு மேச்சுட்டு மத்தியானச் சோத்துக்கு வரும்போது அப்பன் வர்றது தெரிஞ்சுது. மூனு நாளா பாக்காத அப்பன பாத்தவுடனே அழுகாச்சி வந்துருச்சு. ஓடிப்போயி கட்டிப்புடிச்சுக்ட்டு அழுததுல தங்கச்சியா, தம்பியான்னு கேக்க மறந்து போயிட்டேன்.

வூட்டுக்குள்ளே நொழையும் போதே அம்மா “அலேய்.. பொஸ்சுப்ப்ப்பான்னு” ஓடியாந்து தூக்கிக்கிச்சு. அம்மா தூக்கவும் எனக்கு திரும்பியும் அழுவாச்சி வந்துருச்சு. அப்பவும் கேக்கல தங்கச்சியா, தம்பிப் பாப்பாவானு. பாப்பாவ பாருன்னு பக்கத்துல கூட்டிக்கிட்டுப் போனப்போத்தான் துணியத்தான் இழுத்துப் பார்த்தேன். அப்போத்தான் தெரிஞ்சுது தங்கச்சின்னு. என்னமோ தெரியல அப்போயிருந்தும் அவ மேல பாசம்னா பாசம்.

அடுத்த நா காத்தால பண்ணையத்துக்கு எழுப்புனப்போ அழுவாச்சி வந்துருச்சு. பாப்பாவ வுட்டுட்டு போக மாட்டேன்னு அழுதேன், செரின்னு அப்பன் வுட்ருச்சு. அப்படியும் ரெண்டு நாள் கழிச்சு அழுவுறப்பயே தூக்கிட்டுப்போயி வுட்டுருச்சு அப்பன். மேச்சக்காடு முழுசும் அழுதுக்கிட்டேயிருந்தேன். மல்லீக்காதான் கண்ணத் தொடச்சு மடிமேல உட்கார வச்சுக்குச்சு. அடுத்த நாளும் அழுதேன், அம்மாதான் ”பாவம் பொசுப்பா, வூட்டலதான் இருக்குட்டுமேனு” சொல்லுச்சு.

எந்நேரமும் சின்னக்கண்ணுகூடவே இருப்பேன். சின்னக்கண்ணு சீக்கிரமே பால்குடிய வுட்டுட்டா, பால்குடிய வுட்ட பொறவு அம்மாளும் பண்ணையத்துக்கு வேலைக்கு போவ ஆரம்பிச்சிருச்சு, பெறகு நான் தான் சின்னக்கண்ணுக்கு காவல்.

ராசகுமாரி மண்ணுல கால் வெக்கிறதுன்னாவே கத்துவா, எங்க போனாலும் ”பொஸ்க்காக்கா… தூத்க்கோ”னு துணியப்புடிச்சு புடிச்சு இழுக்குறா. சின்னக்கண்ணு ”க்கா”ன்னு கூப்பிடறப்பல்லாம், எனக்கு மல்லீக்கா நெனப்பு வந்துரும். தர்ஷினிய பார்த்து ரொம்ப நாளாச்சு. வேனு வந்துட்டுப்போற வாசம் மட்டும் மனசுக்குள்ளே அப்டியே இருக்குது.

தர்ஷினி மாதிரியே சின்னக்கண்ணுக்கு துணி போட்டுப் பாக்கனும். என்னய எப்போ பள்ளிகோடத்துக்கு வுடுவாங்கன்னு தெரியல, கரட்டுப் பக்கம் கல்லொடைக்கப் போற அப்பன் வாங்குற காசு, சந்தச் செலவுக்குத்தான் செரியா இருக்குதாம். அதுனால தர்ஷினி போற பள்ளிக் கோடத்துக்கெல்லாம் போவ முடியாதாம்.சாவடிப் பள்ளிக்கோடத்துக்குத்தான் போவனுமாம், அடுத்த வையாசி மாசத்துல கொண்டுபோய் வுட்ரலாம்னு அப்பன் சொல்லுச்சு. அம்மாதான் இப்பவே ஒரு வருசம் கூடிப்போச்சு வர்ற வைகாசிலீயே வுட்றலாம்னு சொல்லுச்சு. எனக்கும் எப்படா வையாசி மாசம் வரும்னு ஆசையா இருந்துச்சு. பக்கத்தூட்டு ஆயாகிட்ட கேட்டப்போ, நாலு மாசம் இருக்குதுனு சொல்லுச்சு. ”சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரனும்"னு சாமி கும்பிட்டேன்.

அன்னிக்கொரு நாள், நான் பள்ளிக்கோடம் போயிட்டா, சின்னக்கண்ணுவ அம்மாயி வூட்ல வுடனும்னு அம்மா சொன்னப்போ அழுவாச்சு வந்துருச்சு. பள்ளிக்கோடத்துக்கு சின்னக்கண்ணுவ தூக்கிட்டு போய்க்றேனதுக்கு, அம்மா பள்ளிக்கோடத்துல வுடமாட்டாங்கன்னு திட்டுச்சு.

சின்னக்கண்ணு சிணுங்க ஆரம்பிச்ச சத்தம் கேட்டுச்சு.. ஓடிப்போய் பாட்டல்ல பால ஊத்திக்கொடுத்தேன். ”மொச்சுக்.. மொச்சுக்”னு குடிக்கிற சத்தம் கேட்டுச்சு. மூடுன கண்ணுக்குள்ளே கண்ணுமுழி அசையறது தெரிஞ்சுது. குடிச்சுப்போட்டு பாட்ல பக்கத்துல போட்டப்போ, வவுறு குண்டாத் தெரிஞ்சுது. தூரத்துல எங்கியோ வேனு ஆரன் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு, சின்னக் கண்ணு தூக்கத்துல சிரிக்கிற மாதிரி ஒதட்ட சுழிச்சா. தூக்கத்லயும் ஊளமூக்கி அழகாத்தான் இருக்குறா.

மனசுக்குள் சாமி நெனப்பு வந்துச்சு 
சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரக்கூடாது சாமி

____________________
தாமதமான பொறுப்பி: கதையின் இடையே உள்ள குழந்தைகளின் படம் சமீபத்தில் நான் எடுத்தது. அந்தப் படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் கவிதையொன்று மனதுக்குள் துளிர்த்துக் கொண்டேயிருந்தது. கவிதை முழுதாய் வடிவம் பெறாததால் கதையாக முயற்சி செய்தேன்.  கதைக்கு கிடைக்கும் பாராட்டுகள், ஆர்வமாய் கேமராவை உற்றுப் பார்க்கும் அந்த நான்கு விழிகளுக்கே வாழ்த்துகளாகச் சேர வேண்டும்.


___________

பகிர்தல் (22.09.2010)

நேசிக்க நிறையக் காரணங்கள்
ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சிக்கான நேர்காணல் ஒளிப்பதிவில் கடந்த திங்கட்கிழமை கலந்து கொண்டேன். (நிகழ்ச்சி ஒளிபரப்பும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிகிறேன்.) இந்த நிகழ்ச்சியில் என் பங்கேற்பிற்கு மிக முக்கியக் காரணம் பதிவுல நண்பர்கள் ஆரூரன் மற்றும் உண்மைத் தமிழன். பதிவர் உண்மைத் தமிழனிடம் இதற்கு முன்பு ஒரு முறை சில நொடிகள் மட்டுமே கைபேசியில் பேசியிருக்கிறேன். ஆனாலும், நான் இந்த முறை சென்னை சென்ற போது என்னை பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்று, எல்லா உதவிகளையும் செய்து உபசரித்து அனுப்பிய நண்பர் உண்மைத் தமிழன் சரவணனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

நிகழ்ச்சி நிறைந்து, வானம்பாடிகள் பாலண்ணாவை சந்திக்கச் செல்லும் போது கடும் பசியில் வயிறு துடித்தது. அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்த போது, குளிர்ச்சியான குடி நீரோடு சரவண பவன் சாப்பாடு தயாராக இருந்தது. பசிக்கும் நேரத்தில் எதிர்பாரமல் கிடைக்கும் உணவு அமுதமே. இந்த அன்பும், உபசரிப்பும் எனக்கொரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.

வஞ்சம், கோபம், குரோதம் போன்ற காரணங்களை புறந்தள்ளி, பதிவுலக நண்பர்களோடு நேசம் பாராட்ட பல காரணங்கள், தருணங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது மீண்டும் மீண்டும் மனதில் பளிச்சிடுகிறது.

------------------------

உறுத்தும் உணவு
சரவண பவனின் பார்சல் சாப்பாடு அருமையாகவே இருந்தது. ஆனாலும் சாப்பாட்டோடு கொடுக்கப்படும் சாம்பார், கூட்டு, ரசம், பாயாசம் என ஒவ்வொரு பதார்த்தங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தருவதை ஜீரணிக்க முடியவில்லை. பசியும், வாங்கி வைத்த நண்பரின் அன்புமே அந்த உணவை அந்த இடத்தில் சாப்பிட வைத்தாலும், மனதுக்குள் நெருடிக் கொண்டேயிருந்தது, ஒரு வேளை சாப்பாட்டுக்கு நாலு பிளாஸ்டிக் டப்பாக்களை வீணடிக்க வேண்டியிருக்கே என்று. இதற்கான மாற்றுகள் மிக அவசரமாகப் புகுத்தப்பட வேண்டும்.

------------------------

சட்டம் யார் கையில்
போடிநாயக்கனூரைச் சொந்த ஊராகக் கொண்டிருக்கும், நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்ன தகவல், போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் முழுக்க முழுக்க பிளாஸ்டிக்குகளை தடை செய்திருப்பதாகவும். தற்போது போடி பிளாஸ்டிக் இல்லா நகரமாக இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களால் பின்பற்றப் படுகிறது. பிளாஸ்டிக்கு எதிராக சாட்டையை சொடுக்கும் அதிகாரிகள் வணக்கத்திற்குரியவர்கள். சட்டம் சரியாக இயங்கினால் எல்லாம் சாத்தியம் தான்.

------------------------

போலீஸ் Vs பன்றிக் காய்ச்சல்
காவல் துறையினர் இரவு நேரச் சோதனைகளில், வாகனம் ஓட்டுபவர் மது அருந்தியிருக்கின்றனரா என்பதை சோதிக்க வாயை ஊது என்று சொல்லும் பரிதாபமான போக்கே இன்னமும் இருக்கிறது. பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கும் நபரின் வாயை ஊதச் சொன்னால், சொன்னவருக்கும் சங்குதான் ஊத வேண்டியிருக்கும். பாவம் இவர்களுக்கொரு விடிவுகாலம் வராதா?

------------------------

போடுங்கம்மா ஓட்டு!
இனிய நண்பர் கருவாயன் (எ) சுரேஷ் பாபு அவர்கள் PIT தளத்தில் மிகப் பிரபலமான புகைப்படக் கலைஞர் மற்றும் ஆசிரியர் என்பதை அனைவரும் அறிவார்கள். EPSON நிறுவனம் நடத்தும் இந்த வருடத்திற்கான சிறந்த புகைப்படக்காரர் போட்டியில் அவரையும் ஒரு வேட்பாளராக அறிவித்து, அவரது இரண்டு படங்கள் தேர்வாகியுள்ளன. அதுகுறித்த சுட்டி. புகைப்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள் சுரேஷ் பாபுவிற்கு வாழ்த்துகளையும் வாக்குகளையும் அளியுங்கள். வாழ்த்துகள் சுரேஷ் பாபு.

______________________

கங்கணம் – வாசிப்பு அனுபவம்இலக்கியத்தின் பெரும்பான்மையான வெளிப்பாடுகள் பெண் சார்ந்து, அவர்களுக்கு நிகழும் மனச்சிக்கல்கள் என்பதையொட்டி வரும் படைப்புகளில் தவிர்க்க முடியாத ஒன்று முதிர்கன்னிகள் குறித்த படைப்புகள். முதிர்கன்னிகளுக்கு நிகராக ”பேரிளம் ஆண்கள்” இருக்கிறார்கள் என்பதை இலக்கியம் பெரும்பாலும் மறந்து மௌனத்தோடு இருப்பது இயல்பான ஒன்று.


முதல் முறையாக திருமணம் என்ற பந்தத்துக்குள் ஆட்பட விரும்பும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் கைகூடி வராத ஒரு கிராமத்து இளைஞனுக்காக நானூத்தி சொச்ச  பக்கங்களை ஒதுக்கிய பெருமாள் முருகன் அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து, நகரச் சக்கரத்தின் பற்களாக மாறிவிட்ட நமக்கு, கிராமத்தின் கீதங்கள் எட்டாமல் போய்விடுவதில் ஆச்சரியமேதுமில்லை. கிராமத்துக் கீதங்கள் கேட்க மறந்த காதுகளில் கிராமத்தை விட்டுப் பிரியத் தெரியாததாலே திருமணம் எட்டாக் கனியாக இருக்கும் தண்டுவன்களின் (திருமணமாகாத இளைஞர்கள்) மனம் எழுப்பும் குரல் கேட்கவா போகின்றது.


20 வயதில் பெண் பார்க்கத் துவங்கி 35 வயதாகியும் திருமணமாகாத, கதையின் நாயகன் மாரிமுத்து எனும் விவசாயி முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை நிறைந்து கிடக்கின்றான். அப்பா வழி பாட்டியும், அம்மா வழி அம்மாயியும் அச்சு அசலான மனிதர்களாக விரவிக்கிடக்கிறார்கள். கதைகளிலும் நாடகங்களிலும் வரும் பாசமான அப்பா அம்மாக்கள் இல்லை மாரிமுத்துவிற்கு. ஒரு கிராமத்தின் தவிர்க்க முடியாத அடையாளங்களாக மாரிமுத்துவின் அப்பாவும் அம்மாவும் உண்மையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.


திருமணத்திற்கு தயாரான காலத்திலிருந்து, பெண் பார்ப்பதும், பார்த்த பெண்கள் எப்படியிருந்தாலும் பிடித்துப் போவதும், அப்படிப் பிடித்த பெண்ணோடு சொத்தைக் காரணங்களால் திருமணம் நடக்காமல் போவதும் என மாரிமுத்துவின் வாழ்க்கையில் நிலவும் வறட்சி வாசிக்க வாசிக்க மனதை வாட்டுகிறது.


ஒவ்வொரு அத்தியாயங்களிலும் நெற்றிப்பொட்டில் அடிப்பது போன்ற வரிகள் நிறைந்து கிடக்கின்றன. அத்தியாயங்களைக் கடக்க கடக்க 35 வயதுகளைத் தாண்டியும் திருமணமாகாமல் நைந்து போன நம்பிக்கை நூலை பிடித்துக் கொண்டிருக்கும் கிராமத்து நண்பர்கள் மின்னலாய் ஒளிர்ந்து, சூடாய் விழிகளுக்குள் அமர்ந்து அடுத்த அத்தியாயத்தை வாசிக்க விடாமல் விட்டேத்தியாய் உட்கார வைத்து விடுகிறார்கள்.


காடே கதியென்று கிடக்கும் மாரிமுத்துவிற்கு காசு பணம் இல்லாமல் இல்லை. இருக்கும் பணத்திற்கு ரிக் வண்டி வாங்கி வடமாநிலங்களுக்கு போகமுடியாது என்றோ, இருக்கும் நிலத்தை ரியல் எஸ்டேட்டாக மாற்ற முடியாது என்றோ இல்லை, ஆனாலும் அங்கேயே வாழ்ந்து கிடக்க முக்கியக் காரணம் அந்த மனிதனை விவசாயம் நேசிக்கிறது என்பதே.


உயர் சாதிக்காரனான மாரிமுத்துவிற்கு தாழ்ந்த சாதிக்காரனான ராமனால் தான் திருமணத்திற்கு தீர்வு கிட்டுகிறது. பங்காளிச் சண்டையில் சும்மா கிடக்கும் நிலம் ஒரு கட்டத்தில் தீர்வுக்கு வருகிறது, திருமணத்திற்கு உதவும் ராமனுக்கு அந்த நிலத்தை விவசாயம் செய்து கொள்ளத் தருவதாக சொன்னாலும், ராமனைக் கழட்டி விடும் மனப்போக்கும் மாரிமுத்துவிற்கு இருக்கிறது. ஒரு கட்டத்தில் மாரிமுத்து கல் குவாரியில் டிராக்டர் ஓட்டும் போது கல் உடைக்கும் பெண் மேல் காதல் கொண்டு அலையும் போது பாராத சாதி, பகையான பங்காளி மகன்களில் நட்பாய் இருக்கும் தம்பி செல்வராசு, தாழ்ந்த சாதிப் பெண்ணை காதலிப்பதைக் கண்ட போது மனது சாதியுணர்வோடு பங்காளிப் பகையில் குரூரமாய் மகிழ்கிறது, இது போன்ற இடங்களில் ஒரு மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் குரூரத்தை மாரிமுத்துவின் வாயிலாகவும் மிக அழகாக கோடிடுகிறார் பெருமாள் முருகன்.


பெருமாள் முருகன்

திருமணம் என்ற பந்தத்தின் மூலம் காமத்தை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞனின் காமம் குறித்த வெளிப்பாடுகளை  சிறிதும் பூசி மெழுகாமல், அந்த வெப்பம் சிறிதும் கரையாத வண்ணம் அப்படியே எழுத்தில் அடைகாத்து தந்திருக்கிறார்.


விவசாய பின் புலங்களைக் கொண்டதாலேயே பெண் கிடைக்காமல் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் சாதிகளையும், வரதட்சனையையும் சுக்குநூறாக உடைத்து திருமணத்திற்கு பெண்களைத் தேடி படையெடுப்பதை ”கங்கணம்” மிக நேர்த்தியாக நியாயப்படுத்துகிறது.


நமக்குத் தெரிந்து பெண் கிடைக்காததால் திருமணமாகாமல் இருக்கும் ஒரு மனிதன் இருந்தால், அவனுடைய மனப்போராட்டத்தை அறிய வாசிக்க வேண்டிய சரியான புத்தகம் – கங்கணம்.


வாசிப்புக்குப் பின், இன்னும் திருமணமாகாத என் சமகாலத்து நண்பர்களின் மேல் இருந்த அலட்சியம் சிதைந்து, வாஞ்சை கூடியிருக்கிறது.


குறிப்புகள்:
  • எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் திருச்செங்கோடுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் கதை, நான் புழங்கும் மொழியிலேயே வடிக்கப்பட்டிருப்பது வாசிக்கும் போது கூடுதல் ஈர்ப்பை உண்டாக்குகிறது
  • அரிமா சங்கத்தின் சுவடுகள் இதழுக்காக எழுதிய விமர்சனம்
  • பெருமாள் முருகன், அடையாளம் பதிப்பகம். 422 பக்கங்கள் விலை ரூ.235

______________________________


அந்த நாள்

எப்போதாவது காவலுக்கு நிறுத்தப்படுகின்ற போலீஸ்காரர்கள், இரண்டு மூன்று நாட்களாகவே காவலுக்கு நிறுத்தப்படிருந்ததை காணும் போது கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்தது. ஆண்டு முழுதும் பறவைகள் போடும் எச்சத்தை அவ்வப்போது கனமழைதான் கழுவி விட்டுக் கொண்டிருந்தது. ஆனால் நேற்று சீருடை அணிந்த ஆட்கள் தண்ணீர் பாய்ச்சி கழுவிடும் போதுதான் உரைத்தது ”அடடா! நாளைக்கு நம்ம பிறந்த நாளாச்சே”

எல்லா நாளையும் போல் வழக்கமாய்த்தான் விடிந்தது அந்த நாளும், ஆனாலும் ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலையிலேயே வெள்ளைவெளேரென ஒரு பெரும்படை திரண்டு வந்தது. தளதளவென கழுத்தை வலிக்கச்செய்யும் கனமான ரோஜா மாலையை போட்டார்கள், வரிசையாய் ஒவ்வொருவராய் பூவை அள்ளிப் போட்டு கும்பிட்டார்கள். நிதானமாய் மின்னும் கேமாராக்களுக்கு போஸ் கொடுத்ததோடு, பெயரைச் சொல்லி கூடவே புகழ் என்ற வார்த்தையையும் இணைத்து ஒரே குரலில் ஓங்கி ஒலித்தார்கள். மெதுவாய் கலைந்து போனார்கள். அடுத்த அரை மணியில் முதலில் வந்தது போலவே வெள்ளைவெளேர் உடையில் வேட்டி கரைகளில் மட்டும் கொஞ்சம் வேறுபாடோடு அடுத்த படை வந்தது, முதலில் செய்ததையே திரும்பவும் கிட்டத்தட்ட செய்தார்கள்.

இங்கு சிலையாய் வந்த ஆரம்ப காலம் நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் இத்தனை ஆர்பாட்டம் இல்லை. நாள் முழுதுக்கும் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு குழுக்கலாய் வருவார்கள். ஆண்டுகள் கடக்க கடக்க அணிகள் கூடியது. இந்த வருடம், எத்தனை அணிகளாய் வருவார்களோ என்று நினைக்கும் போதே வந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஒரு கையின் விரல்கள் தீர்ந்து விட்டிருந்தது.


நேரம் கடக்க கடக்க வெயில் ஏறுவதுபோலவே வந்த அணிகளின் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டேயிருந்தது. எத்தனையாவது அணி என்பதற்கு கைவிரல்கள் தீர்ந்து போய் கால்விரல்களில் எண்ணிக்கை ஓடிக்கொண்டிருந்தது. உடைகளும், ஆட்களும் புதிதுபுதியாய் தென்பட்டார்கள். எங்கிருந்து வந்தது இத்தனை அணி என்பது மட்டும் குழப்பமாகவே இருந்தது. கூடவே அந்தக்காலத்தில் தானும் புதிதாய் அணி துவங்கியது நினைவிற்கு வந்தது.

மாலையைப் போடுவதும் கழட்டுவதுமாய் இருந்ததால் கழுத்து வலிக்கவே செய்தது. தூவிய பூக்கள் பாதத்தின் மேல் கனக்கத் துவங்கியது. வெயில் இறங்கும் நேரம் மிகுந்த களைப்பாக இருந்தது. வாசமாய், புத்துணர்வாய் இருந்த பூக்கள் இப்போது கசகசப்பாய் இருப்பதாக தோன்றியது. வெயிலில் கருகிய மலர்களின் வாசம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. வெயில் தணிய ஆரம்பிக்கும் பொழுது அணிகளும் ஆட்களும் அற்றுப்போய்விட்டனர்.

இருள ஆரம்பிக்கும் முன்பே, மூன்று நாளாய் காவலுக்கிருந்த போலீஸ்காரர்கள் கூட தங்கள் மூட்டைகளைக் கட்டுவதை காணும் போது வெறுமையாய் இருந்தது.

”அப்போ, இன்றைய மகிழ்ச்சி இவ்வளவுதானா, இனிமே அடுத்த ஆண்டுதானா?” என மனது வருத்தப்படத் துவங்கியது. ஏனோ, தேர்தலில் ஓட்டுப்போடும் ”மிஸ்டர் பொதுஜனம்” நினைவுக்கு வந்தது.

”ஓட்டு வாங்கி நாட்டை ஆண்டு செத்துப்போய் சிலையாய் வருடத்திற்கு ஒரு முறை மாலை, மலர், கோசம், சூளுரை, இனிப்பு எனக் கொண்டாடப்படும் நம்ம பொழப்பும், ஐந்து வருடத்துக்கு அம்போன்னு விடப்பட்டு, தேர்தல் நாட்களுக்கு மட்டும் போற்றுதலுக்குரிய குடிமகன்களாய் ம(மி)திக்கப்படும் பொது ஜனங்களின் பொழப்பும் ஒன்னுதானோ” என்று ஒரு விநாடி மின்னலாய் தோன்றிய போது, இருள ஆரம்பித்திருந்தது, கண்களில் வெளிச்சம் தீர்ந்து போனது.

______________________ஈரோடு கலை இரவு


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) நடத்தும் கலை இரவுகள் பற்றிக் கேள்விப்பட்ட நாளில் இருந்து அதுவும், திருப்பரங்குன்றத்தில் விடிய விடிய நடக்கும் கலை இரவு குறித்து நண்பர்கள் சிலாகித்துப் பேசும் போது, அந் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தீராமல் மனதில் கனமாய் கிடந்து வந்தது. ஈரோட்டில் தமுஎகச-வின் கலை இரவு குறித்த அறிவிப்பைப் பார்த்தபோது மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. கலைஇரவு நிகழ்ச்சியில் இயக்குனர் சிம்புதேவனுக்கு பாராட்டு விழா, வில்லிசை, உரைவீச்சு, புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சியென பட்டியல் ஈர்ப்பு மிகுந்ததாகவே இருந்தது.நிகழ்ச்சிக்கு வழக்கம் போல் தாமதமாகவே சென்ற போது சாத்தூர் லட்சுமணப் பெருமாள் அவர்களின் வில்லிசை நிறைவடைந்திருந்தது.அடுத்ததாக திரு. நந்தலால உரை நிகழ்த்தினார். மிகச் செறிவான உரை. ஒரு சிறு தடுமாற்றம் கூட இல்லாமல், ஒரேயொரு ஆங்கில வார்த்தைகூட கலப்பில்லாமல் மிக நேர்த்தியாக, மிகச் செறிவாக பாரதியின் நினைவு தினத்தையொட்டி பாரதி குறித்த பல தகவல்களோடு அருவி போல் வார்த்தைகள் கொட்டித் தெறித்தது.எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிம்புதேவன் குறித்த பாராட்டு உரை சிறிதும் ஆர்பாட்டம் இல்லாமல், அறிவார்ந்த, நிதானமான, தற்காலத் திரையுலகத்தின் போக்கினையொட்டி ஒட்டியதாக இருந்தது. சிம்புதேவனின் வித்தியாசமான முயற்சிகளை மிக நேர்த்தியாக பாராட்டினார். சமகாலத்தில் நடக்கும் அவலங்களை நையாண்டியாக சிம்புதேவன் சுட்டிய காட்சிகளை பாராட்டிப் பேசினார்.பாராட்டிற்கு ஏற்புரை நிகழ்த்திய சிம்புதேவன் குறிப்பாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் எடுக்க தனக்குத் தேவையாக இருந்த காரணங்களில் முக்கியமாக சின்ன வயதில் படித்த காமிக்ஸ் கதைகளும், கௌபாய் படங்கள் தமிழில் அதிகம் வராததுமே என்றார். மிக எளிமையாக சக மனிதனிடம் உரையாடுவது போன்றிருந்தது சிம்புதேவன் அவர்களின் உரை.தொடர்ந்து இசையும் பாடல்களும் என கருணாநிதி மற்றும் திருவுடையான் ஆகியோர் கூட்டத்தை முழுக்க முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். திருவுடையான் அவர்களின் குரலும் நயமும் இன்னும் காதுகளின் ஓரத்தில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.ஒரு வழியாக புதுகை பூபாளம் குழு பிரகதீஸ்வரனிடம் மேடை ஒப்படைக்கும் போது நேரம் இரவு 11.55 மணி.  அதுவரை மேடைக்கு பக்கவாட்டில் ஒரு வீட்டு வாசலின் சுவரோரம் கிடந்த கல்லின் மேல் ”இந்தப் பூனையும் பால் குடிக்குமா” என்பது போல் சாதாரண பார்வையாளன் போல் அமர்ந்திருந்தார்.மேடை ஏறிய விநாடி தொட்டு களை கட்ட ஆரம்பித்தது நிகழ்ச்சி. இதுவரை பார்த்திராத, கேட்டிராத நையாண்டி வெள்ளமாய் பெருக்கெடுத்தோடியது. இடைவிடாமல் நையாண்டியில் இப்படி அடித்து நகர்த்த முடியுமா என்ற ஆச்சர்யமே மேலோங்கியிருந்தது. உடன் பங்கேற்ற செந்திலும் சளைக்காமல் பங்கெடுத்தார். நிகழ்ச்சி நிறைவடைந்த போது, அதற்குள் நிறைவடைந்துவிட்டதே என்றுதான் தோன்றியது. கிட்டத்தட்ட நூறு நிமிட நிகழ்ச்சியில் குறைந்தது நான் நூற்றைம்பது முறையாவது சிரித்திருப்பேன் என நினைக்கிறேன். அதே நூறு நிமிடத்தில் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்ப நினைத்து, முன்னூறு தடவைக்கு மேல் எனக்குப் பின்னால் ஒரு நடுத்தரவயது பெண்மணி இடைவிடாமல் சிரித்துக் கொண்டேயிருந்தார். சிரித்ததோடு மட்டுமல்லாமல் பக்கத்தில் இருந்த கணவரை தொடையில் ஓங்கி அடித்து அடித்து சிரித்தார், அவரும் வலிதாங்காமல் மனைவியை திட்டிக்கொண்டு, கூடவே சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் அதிகபட்சம், அதிக நேரம் சிரிக்க வைத்த பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு நன்றிகளை கட்டாயம் பதிவு செய்யவேண்டும்.முக்கியமான செய்தி நிகழ்ச்சியின் போது நீண்ட நேரம் பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.________________________
டவுட்டு மக்கா டவுட்டுகரண்ட கண்டுபிடிக்காத காக்கா குருவியெல்லாம் கரண்டு கம்பியில ஒய்யாரமா ஊஞ்சலாடுது...
கஷ்டப்பட்டு கரண்ட கண்டுபிடிச்ச மனுசனால ஆசைக்கு ஒருதடவ தொட்டுப்பார்க்க முடியுதா?

-000000-


ஈரோட்ல இருந்து கோயமுத்தூருக்கும், கோயமுத்தூர்ல இருந்து ஈரோட்டும் ஒரே தூரம்தான்....  
அதுக்காக இருட்டுல இருந்து வெளிச்சத்த பாக்குறதும், வெளிச்சத்துல இருந்து இருட்ட பாக்குறதும் ஒன்னா!!!!!!!????

-000000-


எப்பவோ கடிக்கிற சிங்கம் புலியை கூண்டில் அடைக்க தெரிஞ்சவனுக்கு தெனமும் கடிக்கிற கொசுவை கூண்டில் அடைக்கத் தெரியலையே


-000000-

 
இமாமி பேர்ணஸ் கிரீம் தமிழ் விளம்பரத்துல ஷாருக்கானுக்கான குரல் சகிக்கல,
டப்பிங் பேசின ஆள் அந்தக் கிரீமை பூசியிருப்பாரோ

-000000-

வராத மழைக்கு,  
பில்டப்புங்ற பேர்ல மண்ணை வாரி அடிக்கிற காற்றை எதால் அடிப்பது?

-000000-

ரெண்டு மீட்டிங் நடத்துனத்துக்கே அம்மாவுக்கு நாப்பது நாள் ஓய்வாம்,
அப்போ ஓய்வில்லாம சண்ட போடுற பதிவர்கலெல்லாம் க்ரேட் தானுங்களே?


-000000- 

குற்றத்தை நிரூபித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்வேன்-உமாசங்கர்.(செய்தி)
நிரூபிக்கக் கூடாதா? அல்லது நிரூபிக்க முடியாதா?

-000000-


ஹீரோவோட நண்பனை வில்லன் கத்தியால குத்திட்டா, ஹீரோ கிறுக்கு தலைய தடவி வசனம் பேசுறானே தவிர, ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டுபோறதில்லையே, ஏன்

-000000-

எந்த அட்டுப் பட டைரக்டரும், டிவி பேட்டியில இதுவரை வராத வித்தியாசமான கதைங்கிறாங்களே, மன சாட்சிய மண்ண தோண்டி பொதைச்சிடுவாங்களா

-000000-

கோத்தபயா ராஜபக்சேவைக் கொலை செய்ய முயன்ற 3 பேர் இலங்கை போலீசால் கைது...(செய்தி)
கொல்லாம ஏண்டா விட்டீங்கன்னு கைது பண்ணியிருப்பாங்களோ!!!!

-000000- 

வடிவேலுவோட வட்டக்கெணறு, வத்தாத கெணத்துக்கும் இலவச மோட்டர் தருவாங்களோ!!!!???

-000000- அரட்டைகளில், "ம்ம்ம்.. அப்புறம் சொல்லுங்க / வேறென்ன" என்ற வார்த்தை வந்துட்டா, அதுக்கு மேல பேச உருப்படியா ஒன்னுமில்லதானே!!??

-000000-


யூத்துங்க யாராவது வயசானவங்க மாதிரி காட்டிக்கிறாங்களா?
வயசானவங்க மட்டும் யூத்து மாதிரி காட்டிக்கிறாங்களே... இது ஏன்!!!??
(விகடனில் வந்த ட்விட்)

-000000-

தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலைக்கு 2000 ரூவா கொடுத்தாகூட மொத்தம் 8000 கோடி ரூவாதானே!!!

-000000-

யார் மேலேஷூவை வீசினாலும், வீசியவர் மேல் கோபம் வரவில்லை என்கின்றனரே ...  
இதை பெருந்தன்மைன்னு எடுத்துக்கிறதா?  
அல்லது சூடு சொரணையே இல்லாம போச்சுன்னு எடுத்துக்கிறதா?

-000000-
தண்ணீரை பனிக்கட்டியாக உறைய வைக்கலாம், பனிக்கட்டியைத் தண்ணீராக உருக்கலாம்....
அதுக்காக....  வெண்ணையை நெய்யாக உருக்கி, நெய்யை வெண்ணையாக உருமாற்றம் செய்ய முயற்சிக்கிற அலும்புக்கு என்ன பேர் வைக்கலாம்?

-000000-


பொறுப்பி:
டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது

____________________________