கேள்விகள் – கேட்டதும் கேட்கப்படாததும்!


நெத்தியில் நீண்ட ஆரஞ்சுப் பொட்டு, பழுத்த வெள்ளை வேட்டி, மடித்துவிடப்பட்ட சட்டை, பறக்கும் முடி, கழுத்தில் சில மாலைகள், தோளில் ஒரு ரெக்ஸின் பேக்... தெலுங்குத் தமிழ் நடை....

சார் கைரேகை பார்க்கலாமா?”

வழக்கமா அப்பப்ப எட்டிப் பார்க்கிற ஆளுகதான்... லாங் லாங் எகோ.... ஸோ லாங் எகோ...... ஒரு ஆளிடம் நூத்தி சொச்ச ரூபாய்  இழந்த வன்மத்தின் நாக்கு என்னை ஈரமாய் வருடியது.

அதப் பார்த்து என்னய்யா பண்ணப்போறே!?”

உங்க முகத்துல ஒரு வெளிச்சம் தெரியுது சார்

யோவ் போய்யா, கரண்ட் இல்லைனா, இருட்டு ரூம்ல,  லேப்டாப்  ஸ்க்ரீன்  வெளிச்சத்துல அப்படித்தான் தெரியும்!”

அப்போதாவது ஆள் உஷாராயிருக்கனும்ல... பாவிப்பய ஆகலையே!

அதில்ல சார், உங்களுக்கு 45 நாள்ல வெள்ளப் பேப்பர்ல ஒரு நல்ல சேதி வரும் சார்!”

ஹி..ஹி.... வாய்யா... ராசா....  எனக்கு வெள்ளப் பேப்பர்ல நல்ல சேதி வர்றது இருக்கட்டும்.... நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லுவியா?”




இல்ல சார் உங்களுக்கு நல்லது நடக்கப்போவுது சொல்லுது சார். கை ரேகை பாருங்க. நிறையப் பேர் பார்த்திருக்காங்க

ஆல்பத்தை எடுத்து நீட்டிட முற்பட்டார்....

நான் கேக்குற சந்தேகத்துக்கு பதில் சொல்லுப்பா, அது ஓகேனா அப்புறம் கைரேகை பார்க்கிறதப் பத்தி யோசிக்கிறேன்

ம்ம்ம்.. என்ன சந்தேகம் சார்

கரண்ட் எப்போ வரும்?”

@!#$!@#$@#%$%^*$%*&$%^ 

என்னவோ முனகிக்கொண்டே ஆல்பத்தை மடக்கி பையில் திணித்துக் கொண்டே ஆள் நகரத் துவங்கியது!

என் நல்ல நேரம், “இதே கேள்விய அரசாங்கத்துக்கிட்ட கேக்க தில் இருக்கா சார்!?” அந்த ஆள் என்னைத் திருப்பிக் கேட்கவில்லை

ஒரு வேளை என் முகத்தில் தெரிந்த வெளிச்சம் எனக்கு(ம்) அந்த தில் இல்லை என காட்டிக்கொடுத்திருக்கலாம்!

-0-
 

என் கேள்விக்கென்ன பதில்?



அறிவியலும், தொழில் நுட்பமும் அதுவாக அமைந்ததில்லை. அவை மனித மூளையின் வியர்வைத்துளிகள். இத்தனை வியர்வைத்துளிகளைச் சிந்,த இந்த மனிதமூளை கொஞ்சமாகவா யோசித்திருந்திருக்கும். ஏன் இத்தனை கண்டுபிடிப்புகள் மனிதனுக்குத் தேவைப்பட்டது? எதற்கு இத்தனை யோசனைகள் மனிதனுக்குள் வந்தது. யோசனை என்பதே ஒருவிதப் பேராசைதானோ?

எண்களைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்து சிரமப்படுவதிலிருந்து விடுபட, அதை எளிமைப்படுத்திட உருவாக்கப்பட்ட கையடக்க கால்குலேட்டர் எவ்வளவு பெரிய அற்புதம். ஆனால், அந்த அற்புதமே பள்ளிகளைக் கடந்த பிறகு இரண்டையும் இரண்டையும் கூட்டவும் பெருக்கவும் கூட அது இருக்கும் இடத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் வன் மாயத்தை தன் இதழோரம் சிந்துவதையும் காணத்தானே செய்கின்றோம். கணக்கிடக் கண்டுபிடித்ததற்காகப் பெருமைப்படுவதா? கணக்கிடுதலை மறந்து அதன் பிடியில் கட்டுண்டு கிடப்பதற்கு வருத்தப்படுவதா!?


இதோ இந்தக் கைபேசிகள். வரும்பொழுது இத்தனை கனவுகளை யாருக்குள்ளும் சுமத்தியிருக்கவில்லையே. ஒரு செங்கல் போல் கனத்து, நம் காசை விநாடிகளில் கரைக்கும் ஒரு வஸ்துவாக வந்து, சமூகத்தில் வசதிபடைத்தோர் என்ற குறியீட்டை சுட்டும் ஒரு காணக்கிடைக்காத அற்புதமாக வந்த இந்தக் கைபேசிகள் இத்தனை மாயங்களைச் செய்யும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லைதானே?

இன்றைக்கு எல்லாமும் எளிமைப் பட்டுவிட்டன. எதையுமே எட்டுவதற்குச் சிரமமாயில்லை. உள்ளங்கைக்குள் எல்லாம் வந்து அடங்கிவிட்டன. பேசுவதற்கு, தகவல் பெற அனுப்ப, மின்கட்டணம் செலுத்த, தொலைபேசிக்கட்டணம் செலுத்த, பணப்பரிமாற்றம் செய்ய, மின்மடல் அனுப்ப, காட்சிகளை நிழற்படங்களாக சேமிக்க, பேருந்து, தொடர்வண்டி என விமானம் வரை எல்லா பயணச்சீட்டுகளையும் பதிவு செய்ய விரல் நுனியில் பதிவு செய்துகொள்ள முடிகிறது. உலகத்தின் எந்த மூலையில் நடப்பதையும் தொடுதிரையில் வருடும் விரல்களின் நுனிகளில் மீட்டிவிட முடிகிறது.

பணப்பரிமாற்றங்கள் எத்தனையெத்தனை எளிமைப்பட்டுப்போய் விட்டன. பணத்தைச் சம்பாதிக்கவும், அதை வங்கியில் நேரிடையாக செலுத்தவும் மட்டும்தான் நமக்கு அதிக நேரமும் சிரமமும் ஏற்படுகின்றன. மற்றபடி ATMல் பணத்தை எடுக்கவும், அதைச் செலவிடவும் வெகு எளிதாகவே இருக்கின்றன.
இணையம், அடேங்கப்பாஇதன் மாயாஜாலங்களைச் சொல்ல வார்த்தையில்லை. ஒவ்வொரு சொடுக்குகளில் உலகின் எந்த மூலையை வேண்டுமானலும் மிக நெருக்கத்திற்கு கொண்டு வந்துவிடமுடிகின்றது

வரமாக வந்த கைபேசிகள் ஒட்டுமொத்தமாய் நம்மை வாரி தனக்குள் சுருட்டி வைத்துக்கொள்ளவில்லையா? சிறிது நேரம் நமது கைபேசிக்கு அழைப்பு வரவில்லையென்றால், அது இயங்குகிறதா? இயங்கவில்லையா என்று நம்மையறியாமல் பொத்தான் அழுத்திப் பார்க்க எது நம்மைத் தூண்டுகிறது? ஏன் யாருமே அழைக்கவில்லையென்று விசனப்படுகிறோம்? ஏன் அழைக்க வேண்டுமென்று கேள்வி கேட்பதேயில்லை? அதுவும் தனியாக இருக்கும் பொழுதுகளிலும், தனியாய் மேற்கொள்ளும் பயணங்களிலும் அழைப்புகள் வராத கைபேசிகள் ஏன் தான் இத்தனை கனம் கனக்கின்றனவோ!?

ஆமாம் இதெல்லாம் யார் எதற்காக எத்தனை பிரயத்தனப்பட்டு கண்டுபிடித்தார்கள். நாம் இன்றைக்கு எளிமையாகப் பயன்படுத்தும் இவற்றை நமக்காகக் கண்டுபிடித்தவன் நமக்கு சொந்தமா? பந்தமா? அவன் தேவனா? சாத்தானா?

இதுபோல் ஒவ்வொன்று குறித்தும் விதவிதமாக சிலாகித்து, குறைகூறி பக்கம் பக்கமா எழுத நினைக்கிறது மனது. ஆனாலும் வேறோ ஏதோ ஒன்று என்னை தொந்தரவு செய்துகொண்டேயிருக்கின்றது. அது என்னவென்று உற்றுக் கவனிக்கின்றேன். வேறொன்றுமில்லை அது ஒரு சாதாரணக் கேள்விதான், ஆனால் வம்புபிடித்த கேள்வி.

இத்தனை எளிமைப்பட்ட உலகில், வாழ்க்கையை எளிமையாக்க தேவைப்பட்டதும், தேவைப்படாததும் என எல்லாவற்றையும் வாங்கித் தீர்த்த பிறகு, எனக்குள் மூளையக் அரித்துக்கொண்டேயிருக்கும் அந்த ஒற்றைக் கேள்விஇத்தனை எளிமைப்பட்ட பிறகும், நாம என்ன வெங்காயத்துக்கு இத்தனைபிசியாவே இருக்கிறோம்”?

-0-