4000 வடைகள்

எங்கள் டீ கடைக்காரர் ஒரு கட்சியின் தீவிரத் தொண்டர். தேர்தலுக்கு முன்பிருந்தே தம் கட்சி குறித்து தீவிரமாக கருத்துச் சொல்வார். தேர்தல் முடிந்ததிலிருந்து வாக்கு எண்ணிக்கை வரைக்கும் தினமும் தம் கட்சி கூட்டணி இருபது இடங்கள் பிடிக்கும் என்பார். வழக்கமாக டீ கடைக்கு வந்து போகும் மக்கள் பேசும் அரசியலே சூடாய் சுவாரசியமாய் இருக்கும். இந்த லட்சணத்தில் டீ கடை முதலாளி பேசும் அரசியல் கூடுதல் சுவாரசியம் தரத்தானே செய்யும்.

காலையும் மாலையும் நாங்கள் அந்த இருபது என்பதை சீண்டிக் கொண்டேயிருப்போம். ஒரு கட்டத்தில்இருபது சட்டமன்றத்திலாச்சும் அதிக ஓட்டு வாங்குவாங்களா!?” எனச் சீண்டியதில், தம் கட்சிக் கூட்டணிஇருபது இடங்கள் வந்தால் பத்தாயிரம் தர்றீங்ளா!? எனப் பந்தயம் கட்டினார்.  எப்படியும் இருபது வராது என்று தெரிந்தாலும் பந்தயம் என்பது பேச்சிற்கும், பொழுது போக்கிற்கும் மட்டுமே இருக்கட்டுமென பேச்சளவில் மட்டுமே வைத்துக் கொண்டோம்.

வாக்கு எண்ணிக்கையன்று காலை 9.30க்கு அவரைப் பார்த்து சிரித்தேன். மத்யானம் பாருங்க தெரியும் என்றார். 12 மணிக்கு டீ குடிக்கப் போன போது மனம் சுருங்கி உணர்வுகளற்று நின்றிருந்தார். பத்தாயிரம் லாபம்னு சந்தோசப்படுங்க என்றோம். மதியம் லீவு விட்டவர் அதை அடுத்த இரண்டு நாட்களுக்கும் நீட்டித்துவிட்டார்.

இன்று நான்கு நண்பர்களாக கடைக்குச் சென்றிருந்தோம். அதில் இந்த அரசியல் பஞ்சாயத்து, பந்தயம் என்பதெல்லாம் தெரியாத நண்பரும் வந்திருந்தார். பாதி டீ  குடித்துக் கொண்டிருக்கும்போது சுடச்சுட வந்த மசால் வடையை நாங்கள் வேணாம் என மறுத்தாலும் பிடிங்க... பிடிங்க” எனக் கட்டாயப்படுத்தியதில் மூன்று பேரிடம் திணித்து விட்டார்புதிதாய் வந்த நண்பர் ஆச்சரியப்பட்டார் அடேங்கப்பா.... கடக்காரண்ணன்  யேவாரம் பண்றதுல தீயா வேலை செய்றாரே!, வேணாங்க வேணாங்க வடையைத் துணிக்கிறாரே... பொழைக்கத் தெரிஞ்ச மனுசரப்பா!” என்றார்.

ஆமாமாம்… பயங்கரமாப் பொழைக்கத் தெரிஞ்சவர்ங்க….. ஏற்கனவே அவரு ஒரு பத்தாயிரம் லாபத்தில்தான் இருக்கார்” என்றேன்

கடைக்காரர் அடிக்கண்ணில் எங்களைப் பார்த்து புன்னகைத்தார். மனதிற்குள் அந்தப் பத்தாயிரம்அப்படிப்போடு…. போடு… போடு!” என ஒரு குத்தாட்டம் போட்டிருக்க வேண்டும். பத்தாயிரம் லாபம் சம்பாதிக்க சுமார் 4000 வடைகளாவது விற்றிருக்க வேண்டுமில்லையா!?

அவர் மனதிற்குள் குத்தாட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது எங்கள் மனதிற்குள் ஒலித்த வடிவேலுவின் ”வட போச்சே!” குரல் டீ கடைக்காரருக்கு கேட்டிருக்க நியாயமில்லை!

-

இடமாறு தோற்றப்பிழைசுடுகாட்டுக்குப் போகும் வழி
பூவரச மரத்தில்தான்
செத்துப்போனான் கோகுல்
அம்மாவின் உழைப்பறிந்த
அப்பா இல்லாப் பிள்ளை

வெளிக்கிருக்கப் போன
முத்தாயி பாட்டி சத்தத்தில்
ஊரே ஓடிப்பார்த்திருக்கிறது
அறுத்துப்போட்டபோது
அடிநெஞ்சு கதகதத்ததாம்
மரத்தடி வரப்பிலிருந்து
பள்ளத்தில் தொங்கியதாய்ப்
பேசிக்கொண்டார்கள்
ஆடோட்டிப் போய் வந்த
கோகுலம்மாவுக்கு அடிவயிறெல்லாம்
அமிலத்தில் வெந்தது

பத்தாவது பெயிலாயிடும்
பயமென பக்கத்து வீடும்
அம்மாகாரி திட்டுவதாலெனும்
அப்பா வழியுறவுகளும்
ஒரு தலையாய் லதாவைக்
காதலித்ததாலெனும்
லதாவைக் காதலிப்போரும்
பேசிப்பேசி கலைந்ததொரு தினத்தில்

ஆடு கட்ட நிழலுக்கென
அக்கம் பக்கம் நினைக்க
அவனுக்கொரு ஊஞ்சல் கட்டவென
வாசலில் ஒரு பூவரசஞ்செடி நட்டு
நீரூற்றினாள் கோகுலம்மா

எதிர்வீட்டு மெக்கானிக் கனவில் மட்டும்
ஒரே நாளில் வளர்ந்து கிளைத்த
பூவரசுக் கிளையில்
தனக்கெனத் தொங்கும்
தூக்குக் கயிறொன்று தெரிந்தது!

-


வறுமைக்கோடு

லட்டு, ஜிலேபி
அல்லது
சர்க்கரையையேனும்
தேடி வந்திருந்த
எறும்புக் கூட்டமொன்று
வேறு வழியின்றி
ராகிவடை மேல்
மொய்த்துக் கொண்டிருந்தது

கொஞ்சம் சர்க்கரையை
கோடை மழைபோல்
வீசிவிட்டு வந்திருக்கிறேன்
வறுமைக்கோடு
கரைந்தழியுமென
ஒரு கவிதையெழுதும்
விருப்பத்தோடு!

கீச்சுகள் - 47சில தருணங்களில் மௌனம் உணர்த்துவதை, சொற்களால் உணர்த்திட இயலுவதில்லை!

-

கொதிக்கிற வெயில்ல போய், கொதிக்கிற டீ குடிக்கிறதுக்குப் பேரும்அடிமை புத்திதான்! :)

-

ரோட்ல மற்றவர்கள் எப்படி வண்டி ஓட்டக்கூடாதுனு நினைக்கிறமோ, அப்படி நாம ஓட்டாமல் இருக்கிறது ரொம்ப முக்கியம்!

-

மக்களே....
டீ கடையில அரசியல் பேசுங்க... ஆனா..... டீ மாஸ்டர்கிட்ட அரசியல் பேசாதீங்க...!

விளைவு....
த்த்த்த்தூ.... நீயெல்லாம் டீ-க்கு உப்புப் போட்டுக்குடிக்கிற மனுசனானு வரலாறு ஏசும்!


-

காதில் விழுவதும், கண்ணில் படுவதும் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை கண், காதோடு நிறுத்துவது, மூளைக்கு எடுத்துச் செல்வது, மனதிற்குள் அனுமதிப்பது நம் கட்டுப்பாட்டில் இருப்பதே!


-

பதிலளிக்கவியலா நிலையில் இருக்கையில், கேள்வி தொடுக்காமலிருப்பதும் பேரன்பின் ஒரு நிலைதான்!

-

பதட்டமாக இருக்குறதுக்குப் பேருபதட்டம்தான், அதை நீங்களாக சுறுசுறுப்புனு நெனைச்சிக்கிட்டா அதுக்கு கொம்பெனி பொறுப்பாகாது பாஸ்! :)

-

கரெண்ட் போறதுக்கு முன்ன சட்னி அரைக்கிறதிலேயும், கடை லீவுனா முந்தின நாளே சரக்கு வாங்கி ஸ்டாக் பண்றதிலேயும் தமிழன் ரொம்பவுமே முன்னேறிட்டான்

-

அவன் ஏமாளியாகத் தெரிவதில் அவனுடைய குறையோ, குற்றமோ மட்டுமல்லாது, உங்களின் அறிவுக்குருடு அல்லது பார்வைக்குறைபாடும் காரணமாய் இருக்கலாம்!

-

தன்னைக் குடிக்கச் சொல்லி என்னைக் குடிக்கிறது வெயில்! #சியர்ஸ்

-

முத்தக் காயங்களுக்கு மருந்து முத்தம்தான்! பிடி சாபம்!


 -

நேற்றைத் தொலைத்துவிட்டு நாளையைச் சேமிக்க ஓடுவது எல்லா நேரங்களிலும் புத்திசாலித்தனமல்ல!
பிசியா?” என யாராவது கேட்கும்போது, பெரும்பாலும் கேட்பவருக்கு ஏற்பஆமாம் / இல்லைஎன்பதில் எதாவது ஒரு பொய்யையே தேர்வு செய்கிறோம்!

-

வேதனையால் சிந்திடும் கண்ணீருக்குச் சற்றும் குறைவானதல்ல, உறவுகளில் அன்பின் பெயரால் சிந்தும் கண்ணீர்!

-

ஒவ்வொரு தினமும் எனக்களிக்கப்படும் 24 மணி நேரத்தை சல்லடையில் கொடுத்தால் என்ன செய்வதாம்!?

-

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இயலாமையில் பொங்கும் கோபத்தை உறவுகளிடம் கொட்டுவதை அன்பு, அக்கறைனு சொல்லி ஏமாற்றப்போகிறோம் எனத்தெரியவில்லை

-

அங்கிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பெண் சட்டென அம்மாவாகிட முடியுது. ஒரு ஆண் அப்படி அப்பாவாகிவிட முடிவதில்லை

-

குறை சொல்லி என்னாகப்போகிறது. இந்தக் கம்மங்கூழ், கடலைக்காகவேணும் இந்தக் கோடையைக் கொஞ்சம் கூடுதலாய் நேசிக்கலாம்!

-

அவர்கள் ஊரில் மழையென மகிழ்பவர்களுக்குத் தெரியப்போவதில்லை, இப்போது நமக்கு வயிறும் சேர்ந்து எரிவது!

-

அடிக்கிற வெயில்ல கொதிக்கிற டீயைக் குடிக்கிறதெல்லாம் இந்தஜென் நிலை சேராதா!?

-

100 ரூவாக்கு வேலை கொடுத்துட்டு 150 வாட்டி போன் பண்ணி படுத்துறவங்களைச் சமாளிக்க ஒரே வழி அடுத்த பில்லுல அதை 200 ரூபாயாக்கிடறதான்! :) Cheers

-

தேர்தல் வந்தா எல்லா ஊர்லயும் ரோடு போடுவாங்க, பாலம் கட்டுவாங்க எங்கூர்ல கொசு மருந்துனு புகை போட்டு வீதில இருந்தத வீட்டுக்கு முடுக்குறாங்க!

-

கண்கள் கிறங்கியவாறு, பித்துகொண்ட நிலையில்...
காதலித்துக்கொண்டே செத்துடனுங்ண்ணாஎன்பவனிடம் சொன்னேன்..... ”காதலித்துக்கொண்டே வாழ்ந்துடேன்

மைண்ட் வாய்ஸ் :
பயபுள்ள.... இவம் மட்டும் எப்படி நல்லாருக்கலாம்..... நல்லா படட்டும்!”

-

எதைப் பார்த்தாலும் எனக்குள் கவிதை சுரக்குது. வெயிலில் உச்சி காயும்போது இப்படியும் சுரந்து தொலைக்கும் போல! :)

-

 
மழலைகளை அடிப்பதுபோல் நாம் பாவனை செய்து கை ஓங்கும்போது 'பளார்'னு ஒன்னுவிடுமே, அதுதான் நாம வாங்குறதிலேயே மிகப்பெரிய "பல்பு"-

பின்னிரவுகளில் மட்டுமல்ல, நல்ல கசகசக்கும் வெயில் பொழுதிலும் இளையராஜாவின் 80s-90s பாடல்களைக் கேட்க இனிக்கவே செய்கின்றது!

-

உறவுகள் மலர்வதும், உதிர்வதும் நிதர்சனம் என்றாலும், சில உறவுகள் அழுத்தமாய் மனதில் சிம்மாசனமிட்டு காலம் முழுதும் அமர்ந்திருக்கும்!
அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரமாக ஒரு சின்னத்தை அளிக்காமல், தேர்தலுக்குத் தேர்தல் புதிது புதிதாக சின்னம் கொடுத்தால் என்ன!?

-

யாராச்சும் நம்மகிட்ட இந்தியில பேசும்போது இந்தி தெரியாதுங்கிறதஹிந்தி மாலும் நஹினு சொல்றது தெனாவட்டா பாஸ்!?குழந்தைகளால் அவர்கள் நினைத்த நேரத்தில் நம்மைக் குழந்தையாக மாற்றவும், தங்களைப் பெரியவர்களாக மாற்றிக்கொள்ளவும் முடிகிறது.-

எத்தன டெக்னாலஜி வந்து என்ன புண்ணியம், போன் நெம்பர், மெயில் ஐடியை SMS செய்யமாட்டோம், சொல்றேன் எழுதிக்கோங்ற மக்கள்தான் நிறைய இருக்காங்க!

-