யாரோ ஒருவனாக...

வளர்வதும், தேய்வதும் மாற்றமே. வாழ்க்கையில் ரசிக்கத்தக்க மாற்றம் என்பது இருக்கும் நிலையில் இருந்து ஒரு அங்குலம் அளவேனும் உயர்வதுதான். அப்படி உயர்வை நோக்கிய மாற்றம் வேண்டுமென்று நினைத்தால், இதுவரை செய்து கொண்டிருந்த செயல்களை, இதுவரை செய்தது போலவே தொடர்ந்து செய்தால் உயர்வு என்பது வெறும் கானல் நீரே. செய்து கொண்டிருந்த செயல்பாடுகளில் இருந்து, இயங்கிக் கொண்டிருந்த தளத்தில் இருந்து புதிய செயல்களைத் துவக்குவதும், புதிய தளத்தில் தடம் பதிப்பதும் மிக மிக முக்கியம்.

ஆனால், இயங்கும் தளத்தில் இருந்து, புதியனவற்றிற்கு தடம் மாறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாழ்க்கையில் மிக அதிகமான மனப்போராட்டங்களைச் சந்திப்பதும், ஆர்வமும் மற்றும் தோல்வி குறித்த பயமும் இயல்பாய் மனதில் எழுவதும் ஒரு புதிய செயலைத் துவங்கும் போதுதான். சில நேரங்களில் தடம் தீர்ந்துபோய் முட்டுச் சந்தில் நிற்பது போல் உணர்வதும் உண்டு.







அதே சமயம் கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால் நாம் எடுத்த பெரும்பாலான முயற்சிகளில் தோல்விகளை விட வெற்றிகளையே அதிகம் சுவைத்திருப்போம், ஆனாலும் தோல்வி குறித்த பயமே மீண்டும், மீண்டும் மனதில் புதிய முயற்சிகளின் போது மேலோங்கி நிற்பதும் தவிர்க்க முடியாதது.

இது மாதிரியான நேரங்களில் மிக முக்கியத் தேவையாக இருப்பது, மிகத் தெளிவாக அலசும் குணம்.




  • செயலைத் துவங்கும் காரணம்

  • செயல் குறித்த அறிவு

  • முதலீடு (பணம், உழைப்பு, நேரம்)

  • வெற்றி தோல்விக்கான சதவிகிதம்

  • எதிர்கொள்ள வேண்டிய பாதகம் (ரிஸ்க்)


இதை அடிப்படையாகக் கொண்டே புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை.



செயலை எந்த நேரத்தில், எந்த இடத்தில் எதன் பொருட்டு துவங்குகிறோமோ, அதை ஒருவேளை நாம் தொடங்காவிட்டால், அந்த செயல் துவங்கப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்பதை அலசி ஆராய்தல் மிக முக்கியம்.


ஒரு வேளை நாம் அந்த காரியத்தை செய்யாமல் விட்டு விட்டால், வேறு யாரும் அதை செய்யவே மாட்டார்கள் எனில், ஒன்று அந்தக் காரியம் நிறைவேற்ற முடியாத அளவு கடினமானதாக இருக்கும் அல்லது அந்த காரியத்தால் மிகப் பெரிய பலன் ஏதும் இருக்காது.

அதே சமயம் நாம் தயங்கித் தவிர்க்கும் காரியத்தை, இன்னொருவர் நிச்சயம் துவங்க வாய்ப்புண்டு என்பது உறுதியாக தெரிந்தால் அந்த காரியத்தை தவிர்ப்பது மிகப் பெரிய முட்டாள்தனம்.

ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”

(விகடன் முகப்பிலும், இளமை விகடனின் சமூகம் பகுதியிலும் வெளிவந்த கட்டுரை)

ஒரு தற்கொலை

விதைக்கப்பட்டோ அல்லது
வேண்டாமென எறியப்பட்டோ...
தன்னையே விதையாக்கி
பூமித்தாயின் புழுக்கத்தை தாங்கி..

சுவாசிக்க காற்று தேடி
பூமி பிளந்து புதிதாய் முளைவிட்டு
சூரியனின் சூட்டிலே கண் விழித்து
பனித்துளியிலே பசியாறி...

எவர் காலிலும் மிதி படாமல்
எவை வாய்க்கும் உணவாகாமல்
வரப்போரம் வாழ்க்கைப் பட்டு
வேலிக்குள் சிறைப்பட்டு...

நீர் தேடி வேர்பாய்ச்சி
நிலத்திற்குள் நரம்புகள் இறுக்கி
காற்று ஆடிய நடனத்திற்கு
காதலோடு இசைந்தாடி...

வளர்ந்து வாலிபமாகி
வண்டுக்கடி தாங்கி
உதிர்ந்த பாளையை உரமாக்கி
எஞ்சிய பாளைக்கு உயிர் கொடுத்து

பிஞ்சாக பிரசவித்து
திருடிக்குடித்த நீரைக்கொண்டு
திரட்சியான இளநீர் ஆக்கி
சந்தைக்கனுப்பி காத்திருந்த தென்னையிடம்

மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில்
தங்கள் தாகம் தீர்க்கும்
தறிகெட்ட தலைமுறையால்...

நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது...

மனம் ஒடிந்து மட்டைகளை இழந்து
குலை நடுங்க குரும்பைகளை உதிர்த்து
அடி வயிற்று வேர் அனைத்தையும் அறுத்து
ஆடிக் காற்றின் துணையோடு அமரராகிப் போனது...


---------------------------------------------------------------------------
பொறுப்பி: மீள் இடுகை

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

எதையோ படிக்க இணையங்களில் தேடியபோதுதான் இப்படியும் எழுத வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து, 2008 ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி ஒரு வலைப்பக்கத்தை துவக்கி எழுத ஆரம்பித்து 23.11.2009 அன்று ஒரு வருடத்தை நூறாவது இடுகையோடு பூர்த்தி செய்கிறேன். வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், தங்கள் வலைப்பக்கங்களில் சுட்டி எழுதிய தோழர்களுக்கும், இந்த எழுத்தின் மூலம் மிகப் பெரிய சொத்தாக மாறியுள்ள உங்கள் ஒவ்வொருவரின் நட்புக்கும் சிரம் தாழ்த்தி வணக்கத்தோடு, நன்றியையும் சமர்பிக்கிறேன்.

நூறு என்ற எண்ணிக்கை இயல்பாகவே ஒரு செல்லமான சிலிர்ப்பை மனதுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. நூறாவது இடுகையாக எழுத மனதுக்கு பிடித்த பல தலைப்புகளும், வகைகளும் எண்ணத்தில் இடைவிடாமல் ஓடினாலும்... இந்த இடுகை என் மனதிற்கு பிடித்த, ஒரு நேர்மையாளர் பற்றியது என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி...

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ.சகாயம் இ.ஆ.ப அவர்களை ஒரு முறை மட்டுமே சந்திக்கும் வாய்ப்பும், அவர் உரையைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. இன்னும் கூட அவர் பற்றிய பிரமிப்பிலிருந்து நான் வெளியில் வரவில்லை. சமீபத்தில் எனக்கு பிடித்தவர்கள் பற்றிய ஒரு இடுகையில் அவர் பெயரைக் குறிப்பிட்டதை மிகப் பெருமையாக கருதுகிறேன்.

இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பற்றி இணையத்தில் படித்த இந்த படைப்பு மனதை முறுக்கேற்றி நெகிழச் செய்தது. எனவே அதே படைப்பை என் வலைப் பக்கத்தில் என் நூறாவது இடுகையாக வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
------------------------------------------------------------------------------

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்





''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''


சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.


''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.


''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.


காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.


நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.


நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.


''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!


நன்றி........ ஆனந்த விகடன்

தடம் புரண்ட வரிகள்


வளைந்தோடும் உன் கழுத்தோர
முடிக்கற்றைத் தூரிகையில்
ஆசையாய் தீட்டிப் பார்க்கிறேன்
அழகான என் காதலை

பின்னிப்பிரியும் கால் விரல்களில்
பிரித்தெடுத்துக்கொள்கிறேன் கொஞ்சம்
இளம் சூட்டினை நரம்புகளில் மிதக்கும்
இரத்த திசுக்களுக்காக

உன் பூவுடல் இறுகத் தழுவிய
முந்தானையின் ஒரு முனை
புயலாய் வந்து மெலிதாய் தடவிப்போகிறது
என் புறங்கழுத்து வியர்வைத் துளி இரண்டை

கைகளில் ஏந்தி, மடி மீது தாங்கி
பாதத்தில் மெலிதாய் பூட்டிய கொலுசு
செல்லமாய் சிணுங்குகிறது
இன்னும் கொஞ்சம் இறுகப் பூட்டச்சொல்லி

குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோடுகள்
எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் தடம் புரண்ட வரிகளாக



(விகடன் முகப்பிலும், இளமை விகடனிலும் வெளிவந்த கவிதை)

இந்த ஆட்டம் போதுமா

தொலைக்காட்சியில் சினிமா பாடல்களுக்கான நடனங்களை பாடலின் சப்தம் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா...? ஒலி இல்லாத பாடல்களில் கதாநாயகனும், கதாநாயகியும் ஆடும் காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாகவே பெரும்பாலும் இருக்கிறது. பாடலோடு கேட்கும் போது பாடல் வரிகளில் மனம் லயிக்கும் போது இந்த ஆபாசம் மட்டுப்பட்டே தெரிகிறது.

  • அதென்னவோ... இந்த ஜீரோ...... சாரிங்க ஹீரோ, ஹீரோயினை கண்ட படி கட்டிப்பிடிச்சு கசக்கி பிழிஞ்சு வெறிநாய் மாதிரி மொச்மொச்னு முத்தங் கொடுக்க பாயறது...


  • அந்தப் போண்ணு பாதி இருட்லயும், பாதி வெளிச்சத்திலயும் இரையெடுத்த மலைப்பாம்பு மாதிரி நெளிய, இவரு அரையிருட்ல கடற்கரையில நடந்து எங்கியோ இருக்கிற பாலத்து மேல பட்டன் கழட்டின சட்டைய ஸ்டைலா ஒதுக்கிட்டு இடுப்பு கை வச்சி போஸ் கொடுக்கிறது

  • ஹீரோயினோட ஆடிட்டிருக்கும் போதே, திடீர்னு சில அடி தூரம் குடுகுடுனு ஓடிப்போய் ஹீரோயின் ஒரு பக்கம் பார்த்து ஆட, இவரு மறு பக்கம் பார்த்துக்கொண்டு, சில அடிகள் தூரம் காற்றில் குதித்து, நிலத்தில் கால் ஊன்றி கொச்சையாக இடுப்பை முன்னுக்கு பின்னா ஆட்டி, பக்கவாட்டில் திரும்பி சற்றே முழங்கால், இடுப்பை மடக்கி, கைகளைக் கோர்த்து பக்க வாட்டில் இடப்பக்கம் மூன்று முறை, வலப்பக்கம் மூன்று முறையென சரக்சரக்னு இழுப்பது...

  • ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலத்தில் ஒதுங்க ஒரு இடம் இருக்குமே, அங்க ‘கெக்கபிக்க’னு பல்லைக்காட்டிக்கிட்டு இடுப்ப வளைச்சி நெளிச்சி குதிப்பது...

  • மக்கள் நடமாட்டம் இருக்கும் வெளிநாட்டு ரோட்ல தாறுமாறா விலுக் விலுக்னு குதிப்பது...

  • உடற்பயிற்சி கணக்கா வேகவேகமா கைகளையும், கால்களையும் ஒரே மாதிரியாக பத்து பத்து முறை ஆட்டுவது...

  • ரெண்டு பேரும் ஒரே மாதிரி, காக்கா வலிப்பு வந்த மாதிரி கையை காலை மடக்கி மடக்கி இழுத்து, சட்டென நேருக்கு நேர் பார்த்து கை விரல்களை குவித்து பாம்பு படமெடுப்பது போல, கொத்துவது போலக் காட்டுவது...

  • அந்தப் பொண்ணு ஒரு கல்லுமேல உட்கார்ந்திருந்தா, நம்மாளு நாலு தடவையாவது பக்கத்துல இருக்கிற பாறை மேல ஏறி ஏறி குதிப்பது...

  • கூட்டத்தோடு மூனு அடிதூரம் ஓடிவந்து, இடப்பக்கம், வலப்பக்கம் ஓரோரு அடி ஆடிவிட்டு முன்னால ஒருத்தன் குனிய வச்சித் தாண்டறது...

  • திரும்பி அந்தக் கூட்டத்துக்குள்ளேயே பலசமயம் பைத்தியகாரன் மாதிரி சுத்திச் சுத்தி ஓடுறது..

இதெல்லாம்... சில நாட்களுக்கு முன் உறக்கம் வராத நடு இரவில் ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு சேனலில் பாடல் வரியை விடுத்து வெறும் ஆட்டத்தை மட்டும் பார்த்தபோது போது கண்டு மிரண்ட காட்சிகள்...

ம்ம்ம்... இப்படி ஒன்னா ரெண்டா... பல நேரங்களில் ரசித்து பார்த்த பாடல்களின் நடனம்(!!!) கூட காமெடி பீஸ் மாதிரி ஆகிப்போச்சு. பார்த்தது கையளவு, பார்க்காதது கடலளவு (..க்ஹூம் பெரிய தத்துவமாக்கும்)

ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வந்துடுச்சி... வேற வழி தெரியாம போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்க ஆரம்பிக்கிறேன். வெடிய வெடிய என் மூடுன கண்களுக்குள் ஹீரோ, ஹீரோயின் கூட குரூப் டேன்ஸர்னு கும்முகும்முனு குதிச்சி ஆட்டம் போட்டு என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...

மகிழ்ச்சியும், எச்சரிக்கையும்...

விவசாயிகளுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம், நூறு கிலோமஞ்சளின் பதிமூன்றாயிரத்தைக் கடந்திருக்கிறது. வரலாறு காணாத விலையேற்றம். ஓராண்டுக்கு முன் இரண்டாயிரம், மூன்றாயிரம் என விற்றுவந்த மஞ்சள் பதிமூன்றாயிரம் ரூபாய் என்பது யாருமே கற்பனை செய்ய முடியாத விலை, மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகளும், இருப்பு வைத்திருக்கும் விவசாயிகளும் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெறும் அறுநூறு ரூபாய்க்கு விற்ற கரும்பு இன்று ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு தனியார் ஆலை நடத்துவோரால் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது, பருப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு வேளை இந்த ஏற்றம் நிரந்தரம் இல்லையென்றாலும், மிகப்பெரிய அளவில் விலை சரிய வாய்ப்பு இல்லை, ஏனெனில் விவசாயம் அற்றுப்போனதே இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம்.

விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார மண்டலம் என்று பட்டா போட்டுக் கொடுக்க முயன்ற அரசாங்கம், எங்காவது விவசாய நிலத்தை மேம்படுத்திட முயற்சி செய்திருக்கிறதா?

ஆட்சியாளர்களுக்கும், விவசாயத்தைப் புறந்தள்ளியவர்களுக்கும் மிகப் பெரிய எச்சரிக்கை மணி இது. இன்னும் இந்த நாட்டை ஆள்வோர் விழித்துக் கொள்ள மறுத்து, போதுமான உணவுப் பொருள் கையிருப்பில் இருக்கிறது அல்லது இறக்குமதி செய்து சமாளித்திடுவோம் என முனங்கிக் கொண்டிருப்பது ஏமாற்றுவதின் உச்சகட்டம். இறக்குமதி செய்து நம் நாட்டு மக்களின் பசியைப் போக்கிட முடியாது, நம் மக்கள் தொகை அப்படி. நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியமும் கூட. ஆளும் வரை ஏதாவது சொல்லிச் சமாளிப்போம், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், அதன்பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனத்துக்குப பழியாகப் போவது எளிய வருமானம் கொண்டவர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த எச்சரிக்கை மணியின் தேய்ந்து போன ஓசையாவது விழ வேண்டியவர்களின் காதுகளில் விழுமா?


(விகடன் முகப்பிலும், இளமை விகடனின் சமூகம் பகுதியிலும் வெளிவந்த கட்டுரை)

பகிர்தல்... (16.11.09)


கெமிஸ்ட்ரி:
அதென்ன எப்போ பார்த்தாலும் டிவியில ரெண்டு பேர் டேன்ஸ் ஆடினவுடனே பயங்கர கெமிஸ்ட்ரி, பக்கா கெமிஸ்ட்ரி இருக்குதுனு சொல்றாங்களே, நானும் +2 தேர்வில் கெமிஸ்டிரியிலதான் அதிக மார்க் வாங்கினேன்.




கெமிஸ்ட்ரினா ஃபார்முலா இருக்கும், அதை அடிப்படையா வச்சி இரண்டு வேதிப்பொருட்களை கலக்கும் போது புகை வரும், அப்புறம் பெரும்பாலும் ஒரு மோசமான வாசனை வரும். ஆமா... இவங்க ஆடுறதுல என்னங்க கெமிஸ்ட்ரி இருக்கு... இல்ல இவங்க ஏதாவது கெமிஸ்ட்ரியில டேன்ஸ் பத்தி முனைவர் பட்டம் வாங்கியிருப்பாங்களோ!!!??

@@@@

பரோட்டா:
எங்கள் நகரத்தில் கிட்டத்தட்ட எல்லாக் குடும்பமும் பரோட்டாவுக்கு அடிமையாகி விட்டது. நான்கு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை எல்லாச் சாலையோர மெஸ்களிலும் கிடைக்கிறது. இந்தக் கடைகளில் தினமும் மாலை ஏழு முதல் பத்து மணி வரை பார்சல் வாங்கிச்செல்ல கூட்டம் அலைமோதுகிறது. பரோட்டா வாங்கும் எல்லோரிடமும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரகசியம், கொஞ்சமாக பரோட்டா வாங்கிக் கொண்டு, அதற்காக கொடுக்கும் சட்னி, குழம்பை வைத்து வீட்டில் இட்லியோ, தோசையோ சுட்டுக்கொண்டால் இரவு பெரிதாக மெனக்கெட்டு சட்னி, சாம்பார் என வைக்க வேண்டியதில்லை.

கடைகளின் முன் வாசலிலேயே பரோட்டாக் கல் போடப்பட்டிருக்கும், கொடுமை என்னவென்றால் எல்லா கடைகளும் சாலையோரத்தில் மட்டுமே இருக்கின்றன. அந்தச் சாலையில் செல்லும் வாகனங்களால் பறந்து வந்து படியும் புழுதிகளுக்கும், குப்பைகளுக்கும் பஞ்சமில்லை... சரி சரி ......... பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக சொல்லப்பட்ட குளிர்பானங்களை சொகுசுக்கா குடித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்தச் சாலையோரப் புழுதியால் என்ன வந்திடப்போகுது. அப்படி ஏதாவது கெடுதல் வந்திடுமா என்ன?

@@@@

வாரஇதழ்:
ரொம்ப செயற்கைத் தனமாக வந்த விளம்பரத்தின் காரணமாகவே புதிய தலைமுறை இதழை நான் வாங்காமலிருந்தேன். கல்லூரிப் பேராசிரியையாக இருக்கும் தோழி ஒருவரின் வற்புறுத்தலினால் இந்த வாரம் வாங்கிப் படித்தேன்.
எளிமையாக அதேசமயம் தரமாக இருக்கும் படைப்புகள், நேர்த்தியான வடிவமைப்பு, தரமான, காகிதம் மற்றும் அச்சு என உண்மையிலேயே அற்புதமான இதழாகவே தொன்றுகிறது. ஒரு டீயின் விலை நான்கு ரூபாய் ஆகிவிட்ட நேரத்தில், புதிய தலைமுறை வாரஇதழ் ஐந்து ரூபாய்க்கு கிடைப்பது மிகப் பெரிய ஆச்சரியம். ஆச்சரியம் தொடரட்டும்.

@@@@

திரைப்படம்:
தொலைக்காட்சியில் பாண்டவர் பூமி படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் வெளியாகி ஒன்பது வருடம் ஆகிவிட்டது. மறக்கவே மறக்க முடியாமல் மனதில் பதிந்தது ராஜ்கிரண் மற்றும் கதாநாயகி ஷமிதா நடிப்பு.


விஷம் கலந்த நீரை குடித்து மாடுகள் ஒவ்வொன்றாய் விழும் காட்சியில் ஒவ்வொரு மாட்டிடமும் பதறியடித்து ஓடும் காட்சியில் ராஜ்கிரணும், சிறையில் இருந்து திரும்பிய ரஞ்சித் தன்னை மணந்து கொள்ள காத்திருக்கும் அக்கா மகள் ஷமிதா முகத்தை கைகளில் ஏந்தி, அதில் தன் தங்கையை பார்ப்பதாக சொல்லும் விநாடிகளில்...... இறுகிப்போயிருந்த முகத்தில் மெதுவாக கண்கள் படபடக்க ஒரு குறும்புன்னகையும், வேகமாக மூச்சுவிடுவதையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் நடித்த ஷமிதாவும் மறக்க முடியாத பாத்திரங்கள்.

மீட்டெடுக்கும் வார்த்தைகள்

வியாழக்கிழமை காலை படுக்கையிலிருந்து எழுந்த போது வலது கை கட்டை விரல் இணையும் இடத்தில் வித்தியாசமான வழியை உணர்ந்தேன், நடக்கும் போது இடது கால் முட்டியில் ஒரு இனம் புரியா இறுக்கம் தோன்றியது. காலை பதினொரு மணிக்கு உடலில் சூடு அதிகரிக்கத் துவங்கியது. மதியம் ஒரு மணிக்கு மருத்துவரைச் சந்தித்தேன். அவர் என்னுடைய உறவினர்.

சோதிக்கும் போதே சிரித்தார், “என்னப்பா நீயும் மாட்டிக்கிட்டியா? என்றார்.

“ஏங்க என்ன காய்ச்சல்ங்க ” என்றேன்

“சிக்கன்குன்யா மாதிரிதான் தெரியுது, நம்ம வீட்டு பக்கத்தில எல்லோரையும் இது பாடாப் படுத்திடுச்சு. எதுவும் பயப்படாதே, உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து வலி குணமாவதும், நீடிப்பதும். மூனு நாளைக்கு மாத்திரை எடுத்துக்கோ. ரொம்ப களைப்பாக இருந்தால் மட்டுமே ஓய்வெடு, மத்தபடி சின்னச் சின்ன வேலையை செஞ்சுகிட்டே இரு, அப்போதான் மூட்டுகளில் இருக்கும் வலி கொஞ்சம் குறையும்” என்றார்

மருத்துவமனையை விட்டு வெளியில் வரும்போதே இரண்டு தோள்ப் பட்டை மற்றும் இடது கை முழுதும் வலி பரவியிருந்தது, சரி இனி எப்படி வலித்தாலும் சமாளித்துத்தான் ஆகவேண்டும் எனத் தோன்றியது. அடுத்த நாள் காலை எழும் போது கிட்டத்தட்ட உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளிலும் வலி வஞ்சனையில்லாமல் நிரம்பி வழிந்தது.

“அடப்பாவமே சிக்கன்குன்யா-வா கொடுமையா வலிக்குமே, ஆறு மாசமானாலும் வலி போகதே” என சொல்றவங்களை சாமாளிப்பது தான் வலியைத் தாங்குவதைவிட மிகக் கடுமையாக இருந்தது. ஒரு வேளை அவர்களின் கூற்று சரியாகக் கூட இருக்கலாம், அதே நேரம் அவர்கள் சொல்வதைக்கேட்டு வலிக்கிறது என முடங்கிக் கிடப்பதும், வலியைத் தாங்கி, சற்றே அதோடு போராடி வலியிலிருந்து வெளி வர முயற்சி செய்வதும் முழுக்க முழுக்க என் கையில் மட்டுமே.

நட்போடு “எப்படியிருக்கிறது” என்று கேட்ட நண்பர்களிடம் தெளிவாகச் சொன்னேன் “காய்ச்சல் குறைந்து விட்டது, வலி தாங்க முடிகிறது, அதிக பட்சம் இரண்டே நாட்களில் மிக எளிதாக மீண்டு வருவேன்” என்று சொன்னேன்.

இப்படிச் சொல்ல முக்கியக் காரணம் “எனக்கு வலிக்கிறது, சமாளிக்க முடியவில்லை” என்று யாரிடம் சொன்னாலும் அதை முதலில் கேட்பது நானே. நான் சொல்வது எனக்கு எதிரே அமர்ந்து கேட்பவரின் காதுகளில் விழுமுன், வெறும் நாலு அங்குலத் தொலைவில் இருக்கும் என் காதுகளில்தானே முதலில் விழுகிறது. என் காதில் திரும்ப திரும்ப விழும் வார்த்தைகள் தானே என் எண்ணத்தை வழிநடத்தும்,

அப்படி நம் காதில் விழும் வார்த்தைகளுக்கு ஒரு சக்தியிருக்கிறது, அதைத்தான் Power of spoken word என்று அழைக்கிறோம். எப்படிப் பட்ட வார்த்தைகளை நாம் பயன் படுத்துகிறோமோ, அதுவாகவே நம் எண்ணம் செயல் பட முயற்சி செய்யும்.

இப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்.


_____________________________________________________
பொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்

சொல்ல மனம் கூசுதில்லையே...






றுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை...

செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...

சுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...

தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...

க்கத்துக் காட்டு வரப்போரம்
பதுங்கிப் போய் பறித்துவந்து
தீயில் வாட்டி உதடு சுடத் தின்ற
கருகிய சோளக்கருது...

காடு மேடெல்லாம் தேடி
கைவலிக்கப் பிடுங்கி வந்து
குமுட்டியடுப்பில் வேகவைத்து
தின்ற பனங்கிழங்கு...

இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என


திணிக்கப்படும் பசி

ல்லா நகரங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உயர்வகையான உணவு விடுதிகளில் நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு உணவருந்துவதின் அடிப்படை ஒருபோதும் பசி என்பதாக இருப்பதில்லை. உயர்வகை உணவு விடுதிகளில் உணவருந்தியவர்களின் தட்டுகளிலும், வசதி படைத்தவர்களின் விருந்துகளிலும் மிஞ்சி வெளியில் கொட்டப்படும் உணவு கிட்டத்தட்ட முப்பது சதவிகிதத்திற்கும் மேலே.

நான்கு பேர் சேர்ந்து நடுத்தர நகரங்களில் உள்ள உயர்வகை உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டாலே குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு மேல் கட்டணம் வருகிறது. அதில் சராசரியாக முப்பது சதவிகிதம் உணவு மீதியாக தட்டிலேயே வீணடிக்கப்படுகிறது. வீணடிக்கப்படுவது பற்றி பெரிதாக கவலையேதுமில்லை. தினமுமா சாப்பிடறோம், எப்போதாவதுதானே என்ற மேம்போக்குத் தனத்தால் இது ஒரு செலவாகவோ, வீணடிக்கப்பட்டதாகவோ அல்லது இழப்பாகவோ ஒருபோதும் உணரப்படுவதேயில்லை.

உயர்வகை உணவு விடுதிகளிலும், வசதி படைத்தவர்களின் விருந்துகளிலும் வீணடிக்கப்படுவது அவர்கள் காசாக இருந்தாலும், அந்த உணவுப்பொருட்கள் இன்னொரு மனிதனுக்கானது. நம் தேசத்தில் இன்னும் பெரும்பான்மையான மனிதர்களுக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே அரிது.

மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். தினமும் பல ஆயிரங்களில் வருமானம் ஈட்டி ஒருவேளை உணவுக்கு பல நூறு ரூபாய் செலவிடத் தாயாராக இருக்கும் மனிதனும், ஒரு நாளைக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய் மட்டும் வருமானம் ஈட்டி, அதன் மூலம் தன் குடும்பத்திற்கே சோறு போடும் மனிதனும், ஒரே மாதிரியான பொருளை வாங்க முற்படுகின்றனர். பொருளை விற்பவர்களுக்கு இரண்டு பேருடைய தேவையும் புரியும் போது, இரண்டு பேருமே கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்ற எளிய அரசியலில் விலையை உயர்த்த முயல்கின்றனர். என்ன விலையானாலும் வசதி வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை வாங்க போட்டி போடும் பொழுது, மிகச் சிறிய வருமானம் கொண்டவர் தான் வாங்கும் சக்தியை இழக்கிறார்.

உதாரணத்திற்கு இருபது ரூபாய் இருக்கும் பொருளை வாங்க ஒருவனிடம் பத்து ரூபாய்தான் இருக்கிறது, இன்னொருவனிடம் நாற்பது ரூபாய் இருக்கிறது. பத்து ரூபாய் மட்டும் வைத்திருப்பவன் எப்போதும் அதை வாங்கமுடிவதில்லை. நாற்பது ரூபாய்க்கு வாங்க மற்றொருவன் தயாராக இருக்கும்போது பொருளை வைத்திருப்பவன் முப்பது ரூபாயில் போய் நிற்கிறான்.

மூன்று ரூபாய்க்குள் கிடைக்கும் முட்டை, வெங்காயம் சேர்த்து வறுக்கும்போது சில உணவகங்களில் ஆறு ரூபாய்க்கு கிடைக்கிறது, அடுத்த வீதியில் இருபது ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இருபது ரூபாய்க்கும் வாங்கும் திறனுள்ளவர்கள் நிச்சயம் பசியின் அடிப்படையில் அந்த முட்டையை வாங்குவதில்லை. அப்படி வாங்குபவர்கள் நிச்சயம் அதை முழுதாக உண்ண வேண்டிய கட்டாயமில்லை. எனெவே ஒரு பகுதி மீதம் வைக்கப்பட்டு குப்பைக்குப் போகிறது.

அப்படி மிதமிஞ்சி வீணடிக்கப்படும் பொருள் அதை வாங்க பொருளாதாரம் இல்லாதவனை, மிக நுட்பமாக, எளிதாக பசியோடு கிடத்திவிட்டு வீணடிக்கப்படுகிறது. இதே போல்தான் தண்ணீரும், உணவும் சிறிதும் மனசாட்சியில்லாமல் தொடர்ந்து வீணடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

பணம் இருக்கிறது என்று வித விதமாய் சாப்பிடுவதில் இருக்கும் நியாயம்(!!!), என் பணம் தானேயென்று அதை வீணடிப்பதில் ஒருபோதும் இருக்க முடியாது, ஏனெனில் அது இன்னொருவனை பட்டினியில் படுக்க வைத்திருக்கிறது.

தனியொரு மனிதனிக்கு உணவில்லையெனில்... க்ஹும்... எத்தனை உலகத்தை அழித்து விட்டோம்...

தொடர்ந்து... தொடர்ந்து... சக மனிதனைத் தானே பசியில் அழித்துக் கொண்டேயிருக்கிறோம்.

அடுத்த முறை உணவை மிச்சமாக தட்டில் வைத்துவிட்டு எழும் பொழுது கால்களும், மனதும் இடற வேண்டும். பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்.

குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்!





பொறுப்பி: யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில் வெளியான கட்டுரை. மின்னிதழை தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்

சட்டெனத் தொலைந்திடும் தொடர்புகள்

வெளியே மழை சினுங்கி கொண்டிருக்கிறது. அலைபேசிகள்கும் மிகப் பிரபலமான, நவீனப் படுத்தப்பட்ட என் நண்பனின் கடை. மழையில் வாடிக்கையாளர் யாரும் வராமல் சோம்பிக் கிடந்தது. ஒரு நடுத்தர வயது மனிதர் வந்தார். மழையில் தொப்பலாக நனைந்திருந்தார். முகத்தில் இருள் அப்பிக் கிடந்தது. கையில் கொஞ்சம் விலையுயர்ந்த மாடல் போன் வைத்திருந்தார்.

கடையை நிர்வகிக்கும் வகிக்கும் நபர் வந்தவரிடம் “என்னங்கண்ணா திரும்பவும் பிரச்சனையா என்றார்” அப்படிக் கேட்டபோதே புரிந்தது சமீபத்தில் தான் ஏதோ பிரச்சனைக்காக வந்துள்ளார் என்பது.

“போன்ல இருந்த எல்லா நெம்பரும் அழிஞ்சுபோயிடுச்சுங்க, பைத்தியமே புடிச்சிரும் போலயிருக்குதே”

“ஏங்க என்ன பிரச்சனை, அன்னைக்குத் தானே உங்க போன்ல இருந்த எல்லாக் கான்ட்க்ட்சையும் சி.டில போட்டுக் கொடுத்தொம்”

“அந்தக் கருமத்த தெரியாத்தனமா, ஒடைச்சி தொலைச்சிட்னேனுங்களே”

“சரி இப்ப என்னாச்சு”

“நம்ம பையன் எடுத்து, பக்கத்தூட்டுக்காரரு போன்லயிருந்து பாட்டு ரெக்கார்ட் பண்டீருக்கான், அதுக்கப்புறம் வேலை செய்லீங்க, அங்க ஒரு நாயிகிட்ட குடுத்துப் பார்த்தேன், அவன் என்னுமோ நோண்டிப்போட்டு, எல்லா நெம்பரும் போயிருச்சுனு சொல்லிட்டான், அதுதான் இங்கியே கொண்ட்டு வந்தேன்... சாமிசாமிய இருப்பீங்க, எப்பிடியாச்சும் எல்லா நெம்பரையும் எடுத்துக்குடுத்ருங்க”

கையில் போனை வாங்கும்போதே இவர் சொன்னார், “அண்ணா, முடிஞ்சா கண்டிப்பா எடுத்துத்தர்றோம், அதுல எதுவும் இல்லீனா, எங்களாலும் ஒன்னும் பண்ண முடியாது”

“அய்யோ, சாமி அப்பிடிச் சொல்லீறாதீங்க, என்ன பண்ணுவீங்களோ, எடுத்துக் குடுத்துறுங்கண்ணா, அது இல்லீனா, எம் பொழப்பே அவ்வளவுதானுங்க”

“யாவாரம் பண்றதில முக்காவாசிப்பேர் மூஞ்சிகூட பாத்ததில்லீங்க, எல்லா அவுங்க செல்போன் நெம்பர வெச்சித்தானுங்க, வண்டி டிரைவருங்கெல்லாம் நின்னுக்கிட்டாங்க, இந்த நெம்பரு இல்லீனா, எப்பிடிபோய் வசூல் பண்ணுவேன்னு தெரியலியே”

அதற்குள் போனை கம்ப்யூட்டருடன் இணைத்துப் பார்த்த நபர் சொன்னார்
“சார், சிம் கார்டுல இருக்கிற நெம்பர் மட்டுந்தான் இருக்கும், போன் மெமரில ஒன்னுமே இல்லீங்க”

“கடவுளே...!!! அதுல எல்லா நெம்பரும் இருக்குதுங்களா”

“மொத்தம் 125 நெம்பர் இருக்குதுங்க”

“அய்யோ, 600 நெம்பருக்கும் பக்கமா அதுல இருந்துச்சுங்களே, அய்யா சாமி, எப்பிடியாவுது கஷ்டப்பட்டு எடுக்கிறக்கு பாருங்களேன், என்னங்க சோறாக்கிறத தவர எல்லா கம்பியூட்டர்ல பண்ணலாங்றாங்க, எப்பிடியாது எடுத்துக்குடுத்திருங்க, இல்லீனா அவ்வளவுதான் எம் பொழப்பே”

“ஏங்க, அதுதான் போனதடவ வந்தப்பவே சி.டில போட்டுக்குடுத்தோம், அதும் இல்லீங்றீங்க, போன்ல எடுக்க முடியாதுங்களே”

“அய்யா சாமி, காலுலகோட உழுந்தர்ரேன், எப்பிடியாவுது பண்ணிக் குடுத்துறுங்களேன்”

என் பக்கம் திரும்பி “நான் பாருங்களேன், அதுல எந்த நெம்பரையும் எழுதிவெக்கமா உட்டுட்டேன்... ... அது நம்ம புத்தி அப்டீங்க, நம்மள மீறி என்னாயிரப் போவுதுன்னு எகத்தாள இருந்திட்னுங்க, இப்பப் பார்த்த எப்படி பொழப்பு பண்றதுன்னே தெரிலீங்க, அத்தனையும் போன நம்பிப் பண்ற தொழிலாப் போச்சுங்க”தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.

என்ன தொழில் செய்கிறார் என்ற போது, ஐந்து, சிறிய நான்கு சக்கர சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு விடுவதாக சொன்னார்.

த்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு போன் என்பது அதிசயமான பொருள், புதிதாக ஒரு போன் இணைப்பு பெறுவதற்கு, அத்தனை அலைச்சல் அலைய வேண்டும். அப்பொழுது வீட்டுக்கே ஒரு போன் தான் இருக்கும், தூக்கத்தில் கேட்டால் கூட நெருங்கிய உறவு, நட்பு, தொழில் வட்டத்திலிருப்போரின் எண்கள் மனப்பாடமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 20, 30 எண்களாவது எளிதில் நினைவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் போனுக்கு அருகில் கட்டாயம் போன் எண்கள் எழுதிவைக்கும் ஒரு டைரி இருக்கும். நம் தொடர்பில் இருக்கும் அத்தனை பேர் எண்களும் அதில் குறிக்கப்பட்டிருக்கும். வேறு வழியில்லாமல் எண்களை ஒவ்வொன்றாக அழுத்தி அழுத்தி அழைக்க வேண்டியிருந்ததால் எண்களை பெரும்பாலும் மனதில் பதிந்திருக்கும்.

அதுவும் செல்போன் அறிமுகமான காலத்தில் பயன் படுத்திய சிலரின் எண்கள் மட்டும் நினைவில் இருக்கின்றன, அதன்பின் புற்றீசலாய் முளைத்த புதிய புதிய எண்கள், நெருக்கமானவர்களாய் இருந்தால் ஒன்று முதல் 10 எண்ணுக்குள் ஸ்பீடு டயலில் இருக்கிறது, மற்றவர்களின் எண்கள் செல் போனுக்குள் இருக்கும் புத்தகத்தில் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து பெரும்பாலனவர்கள் அனைத்து தொடர்பு எண்களையும் ஒரு கையேட்டில் குறித்து வைப்பதோ, புதிதாக இணைக்கும் எண்களை தொடர்ந்து எழுதிவைப்பதோ கிடையாது. அவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.

போன் தொலைந்து போனாலோ, இயங்காமல் போனாலோ, பேட்டரி முழுதும் தீர்ந்து போனாலோ தவிக்கும் தவிப்பு மிகக் கொடுமையானது. நானும் இப்படித் தவித்துப் போயிருக்கிறேன் பல சமயங்களில்... ஆனாலும் ஒருபோதும் புத்தி வந்ததேயில்லை. ஆனால் அவரைப் பார்த்த பின் முதல் வேலையாக நேற்று, என் போனில் உள்ள தொடர்பு எண்களை நகலெடுத்தேன். சந்திக்கும் நபர்களிடமும் சொல்கிறேன்.

சில சமயம் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், பல சமயம் நம் தவறுகளிலிருந்து கூட கற்றுக்கொள்ளாத பாடத்தை...

இதையும் தாண்டி


காந்தி படமிட்ட
காகிதக் கத்தையின்
கனத்திலே முடங்கிய
முரட்டு வாழ்க்கை...

பிள்ளைகள்
விளையாடாத
நாய்கள் உறங்கும்
மலட்டு வீதி...

திண்ணைகளின்
சமாதியில்
வேர்களை முடக்கிய
பூந்தொட்டிகள்...

அடிமைப்படுத்தி
கண்ணாடிச் சிறைக்குள்
அழகாய் நெளியும்
மீன் குஞ்சுகள்...

சிறுகச் சிறுக
சிறைப்படுத்திய
சின்னத்திரையின்
இடைவிடாக் கூச்சல்...

மாயவலைகளால்
விழிகளொடு விரல்களையும்
இழுத்துப் பிணைத்த
இணையம்...

இதையும் தாண்டி
எப்போதாவது வாழ்கிறோம்...

நள்ளிரவின் வெறிச்சோடிய
நகரத்து சாலைகளின் மௌனத்திலும்...

எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...



இதெல்லாம் தேவையா?

வழக்கமாக இந்த டிவியில உண்மை கண்டறியரோம்னு கோட்டு போட்டுக்கிட்டு வந்து செம பில்டப்போட பேசற ஆளுகளை நம்பி அவ்வளவா பார்க்கறதில்லை... ஏன்னா அதப் பாத்தோம்னா நமக்கே டெக்னிக்கலா ஏதாவது செய்யலாமோனு தோனுமோனு ஒரு பயம்தான்.

நேத்து பார்த்தீங்கன்னா எங்கெட்ட நேரம் ராத்திரி ஊட்டுக்கு போனப்ப சன் டிவியில் நிஜம் புரகிராம் ஓடிக்கிட்டிருந்ததுங்க... என்னவோ காசி, அகோரி அப்டீனு இந்த சன் டிவி செய்தியாளர் இருட்லயும், வெளிச்சத்திலும் சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருந்தார். அகோரி சிவனோட அவதாரம்னு தங்களச் சொல்லிக்கிட்டே, எரியற பொணத்தை தின்பாங்கன்னும் சொல்லிட்டிருந்தார்.

நானும் ஒருவேள அப்பிடி அவுங்க பொணத்த தின்னாலும், டிவியில அத காட்ட மாட்டாங்கன்னு கொஞ்சம் தெகிரியமா பாத்துக்கிட்டிருந்தேன். காசியில பொணமெல்லாம் எரிக்கிற எடத்த காட்டினாங்க, அங்க பார்த்தா நெறய்ய்ய பொணம் எரிஞ்சிக்கிட்டிருக்குதுங்க.

கேமரா காட்ற எடத்தப் பார்த்தா ஒரு சின்ன திட்டுமேல ஒரு பொணம் எரிஞ்சிக்கிட்டிருந்துது. பக்கத்தில ஒரு பெரிசு ஒக்காந்திருந்துச்சு, அந்த பெருச காட்டினாங்க...... பாத்தா ரொம்ப சாந்தமா சாமியார் கணக்கா ஒக்காந்திருந்துச்சு,

“சரி ஏதோ மந்தரம் சொல்லுவாரு, இல்லைனா அந்த பொணத்துக்கு ஏதாவது நெருங்குன சொந்தக்காரார இருப்பாரு”னு நான் பார்த்துக்கிட்டிருந்தேன்

இந்த செய்தியாளர், இந்த கிரிக்கெட்ல கமெண்ட்ரி சொல்ற மாதிரி அந்த பெருசு பக்கத்துல உட்கார்ந்து கிட்டு, “பாருங்க இவரு இப்போ பொணத்த சாப்பிட்டிகிட்டிருக்காருனு” சொல்ல எனக்கு விருக்குனு ஆகிப்போச்சுங்க...

அப்போவும் “அட இது நெசமா இருக்காதுனு” (திமிருதானே) பார்க்கிறேன்...

அந்த பாழப்போன கெழவன் கையில... தீயில கறுக்குன சின்ன கோழி சைஸ்ல (கோழி இல்லீங்க, பொணத்தோட ஒரு பகுதிதான்) வச்சிக்கிட்டு வாயில கடிச்சித் திங்கிறான்.

டிவிக்காரரு என்னமோ கேக்க அந்த ஆளு “மாசக்தி” அப்படிங்கிறான், கறிய மெல்லற வாயில எல்லாம் இரத்தம்.. இவரு என்னென்னமோ அந்த கெழவன் பத்திப் பேசறாரு, அந்த பெருசு ஜாலியா ரெண்டு வாட்டி ஏப்பம் விட்டுகிட்டிருக்கு...

அடப் பாவிகளா, இப்பிடியுமா பண்ணுவீங்க... அட நான் அந்தக் கெழவன சொல்லலீங்க, அந்த ஆளு வழக்கமா தின்பாரு போல இருக்குதுங்க. இந்த டிவிக்காரங்களத் தான் சொல்றேன்.

சின்ன வயசில பாட்டி அரக்கன் கதை சொல்றப்போ, மனுசன தின்பாங்கன்னு சொல்லி கேள்விப்பட்ருக்கோம்... அப்பறம் பள்ளிக்கோடம் படிக்கிறப்ப ஆப்பிரிக்காவுல மனுசன தின்பாங்கன்னு யாரோ சொல்லிக் கேள்விப்பட்ட மாதிரி இருக்கு...

அப்புறம் அரசல் புரசலா, அப்பப்போ இப்பிடி யாரவது சொல்லுவாங்க... ஆனா இது வரைக்கும் நெசம்னு நம்புனதில்லீங்க... எப்பிடியோ இந்த சன் டிவிக்காராங்க புண்ணியத்துல கண் குளிர அந்தக் கருமத்த பார்த்தாச்சு...

வெடிய வரைக்கும் தூக்கத்தில எந்தக் கனவும் வரல, அது வரைக்கும் சந்தோசம்

ஆமா டிவியில வர வர எத வேணாலும் காட்டாராங்களே, இவுங்கள யாருமே கேக்கமாட்டாங்களா?

சரி இந்த மாதிரி காமிக்கிறப்போ தினமும் பார்க்கிற டிவிதானேனு கொழந்தைங்க பார்த்தா நெலம என்ன ஆகும்?

இந்த மாதிரி காட்றதால என்ன மாதிரி நல்ல காரியம் நடந்திடப்போவுது?

கடைசியா நரமாமிசம் சாப்பிடறது சட்டப்படி தப்புனு டிவில சொன்னாங்களே, அப்பிடி சட்டப்படி தப்பான ஒன்ன எப்பிடி இப்படி காட்டலாம்?

சட்டப்படி தப்பானத சட்டத்தை காப்பாத்தறவங்கிட்ட சொன்னாங்களா?


ஏன் இவ்வளவு கேக்குறேன்னா...? இதுவரைக்கும் பொணத்த அடக்கம் பண்ற வரைக்கும் பார்த்திருக்கிறேன், அது கொஞ்சம் பழகிப்போச்சு, இனிமே நம்மூர்லகூட யாராவது சுடுகாட்டுல எரியற பொணத்த இழுத்துக்கிட்ட வந்து தின்னுக்கிட்டிருந்தாலும் கம்னுதான் போவோம் போல் இருக்குது, அதுதான் இதெல்லாம் சகசம்னு நம்ம ஊட்டுக்குள்ளேயே வந்து காட்டிட்டு போய்ட்டாங்களே...

எதையாவது போட்டு மனுசங்கள பார்க்க வைக்கறதுக்கு, வகை தொகையில்லாம எத வேணும்னாலும் காட்டறது எந்தவகைல நியாயமா இருக்க முடியும்...? அப்பிடி அவங்க காட்ற எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு சகிச்சுக்கிட்டு போற நம்மள என்ன சொல்றதுங்க?

சரி வருங்காலத்தில... எங்கியாவது ஒரு கொலை செய்யறதையோ, கற்பழிப்பு நடக்கிறதையோ எடுத்து டிவியில போட்டுட்டு, கடைசியா கொலை, கற்பழிப்பு சட்டப்படி தவறான செயல்னு சொல்லிட்டுப் போயிட்டா அது போதுமா? ஏன்னா.. கொலையும், கற்பழிப்பும் நரமாமிசம் தின்கிறதவிட அதிகமா நடக்கிறதுதானே!!!???

பத்துக்கு 10 பிடி (த்தவர், க்காதவர் – தொடர் இடுகை)

முதலில் இந்த தொடர் குறித்த இடுகையை மாதவராஜ் பக்கத்தில் படித்த போது... அவர் இதை விபரீத விளையாட்டு எனக் குறிப்பிட்டிருந்ததற்கு “விளையாடுங்க விபரீத விளையாட்டை, வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்” என் பின்னூட்டம் இட்டிருந்தேன்...

ஆனால் ஆதிமூலகிருஷ்ணன் என்னை களத்தில் இறக்கிவிட தமயந்தி, பிரபாகர், அரவிந்த், நாடோடி இலக்கியன் ஆகியோர் ஆதி உங்களை அழைத்திருக்கிறார் என உசுப்பேத்திவிட, அதனால் ஆடும் ஆட்டம்.

துவக்கிய மாதவராஜ், தொடர அழைத்த ஆதிக்கு நன்றிகள்

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி
பிடித்தவர் : நன்மாறன்
பிடிக்காதவர் : ஜெயலலிதா

எழுத்தாளர்
பிடித்தவர் : பாலகுமாரன்
பிடிக்காதவர் : சாருநிவேதா

கவிஞர்
பிடித்தவர் : அப்துல்ரகுமான்
பிடிக்காதவர் : கனிமொழி

இயக்குனர்
பிடித்தவர் : சேரன்
பிடிக்காதவர் : பேரரசு

நடிகர்
பிடித்தவர் : கமல்
பிடிக்காதவர் : சரத்குமார்

நடிகை
பிடித்தவர் : ‘பூ’ பார்வதி
பிடிக்காதவர் : நமீதா

இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : தேவா

மாவட்ட ஆட்சியர்
பிடித்தவர் : உ.சகாயம் (நாமக்கல்)
பிடிக்காதவர் : கா.பாலச்சந்திரன்

பேச்சாளர்
பிடித்தவர் : பாரதிகிருஷ்ணகுமார்
பிடிக்காதவர் : சுப.வீரபாண்டியன்

விஞ்ஞானி
பிடித்தவர் : அப்துல் கலாம்
பிடிக்காதவர் : மயில்சாமி அண்ணாதுரை


அழைக்க விரும்புவது
1. வானம்பாடிகள்
2. செந்தில்வேலன்
3. பிரபாகர்

4. நாடோடி இலக்கியன்
5. ஜீவன்

சகிக்க முடியா சகிப்புத்தன்மை



ஒவ்வொரு நாளும் தொலை தூரத்திலிருந்து வரும் தொடர் வண்டிகளின் மூன்றாம் வகுப்பு கழிவறையோரம் நிச்சயம் அவர்களை நாம் பார்க்கமுடியும். ஒரு கணவன், மனைவி, ஒன்றிரண்டு குழந்தைகள் இருக்கும். கணவன் மனைவி பெரும்பாலும் பேசவே மாட்டார்கள். இரவு முழுதும் பயணப்பட்டாலும் தூக்கம் ஒரு சொட்டுக் கூட அவர்களின் கண்களைத் தழுவாது. விளையாடும் குழந்தைகளை மௌனத்திலேயே அடக்குவார்கள்.

சரியாக முடிச்சிடப்படாத ஒழுங்கற்ற வெள்ளை உரச் சாக்கு மூட்டையில் வாழ்க்கையின் மிச்சம் மீதிகளை பாத்திரங்களாகவும், பண்டங்களாகவும் பதுக்கி இறுகிப்போய் உட்கார்ந்து கிடப்பார்கள்.

பயணச்சீட்டு வாங்கியவர்கள் கழிவறைப் பக்கம் செல்லும் போது அவர்களைக் கண்டு முகம் சுழிப்பதும், சில சமயம் கடிந்து கொள்வதும், அவர்களை திருடன் என்று சொல்வதும் மிக இயல்பாக நடக்கும்.

அவர்களிடம் மட்டும் மௌனம் மிக அடர்த்தியாய், மிகக் கனமாய் படிந்து கிடக்கும், பெரும்பாலும் பயணச்சீட்டு வாங்கியிருக்க மாட்டார்கள், காரணம் அதை வாங்க காசு இருந்திருக்காது. அவர்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே ஏதோ ஒரு காரணத்தினால் அகதியாக்கப் பட்டிருப்பார்கள். வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் ஏதோ ஒன்று அவர்களை வாழவிடாமல் துரத்தியிருக்கும்.

வாழ்க்கையின் மேல் முழுதும் நம்பிக்கையிழந்தவர்கள் பெரும்பாலும் தற்கொலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். ஏதோ ஒரு நுனியில் மட்டும் நம்பிக்கை மெலிதாய் தொடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் இரவோடு இரவாக பெரு நகரங்களை நோக்கிய தொடர் வண்டிகளில் சில மூட்டைகளோடு புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்டது ஒரு மிகச் சிறிய உதாரணம் மட்டுமே. இது போல் இடப்பெயர்வுகள் இந்த தேசத்தில் எல்லா நிமிடங்களிலும் தொடர்ந்து தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது.
இது எதனால்..........

இதற்கான மிக முக்கியக் காரணம் ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோரிடமும் வித்தியாசமின்றி வேரூன்றியிருக்கும் சகிப்புத்தன்மையே

ஒரு மனிதனின் வாழ்வு அபகரிக்கப்படுவது சர்வசாதாரணமா நடந்து கொண்டேயிருக்கிறது. அவனின் நம்பிக்கை திருடப்படும்போதும், அவனின் வாழ்வுரிமை அபகரிக்கப்படும் போதும் கண்டும் காணாமல் போகும் புத்தி எங்கிருந்து வந்தது.

“நமக்கேன் இது”

“சரி நம்மால் என்னதான் செய்துவிடமுடியும்”

“அவரவர் தலைவிதி” .................... என பற்பல வார்த்தைகளில் சொத்தைச் சமாதானம் குவிந்து கிடக்கிறது.

இன்னொரு மனிதனைப் பற்றி சிந்திப்பவனை, உரிமை, நியாயம் என்பதற்கு போராடுபவனை வேலையத்தவன் என எப்படி மிக எளிதாக பட்டம் சூட்டி அழைக்க முடிகிறது.

படித்த பகுத்தறிவு(!!!) கொண்ட சமூகம், வசதி படைத்த சமூகம் “ப்ச்” என்ற சின்ன சப்தத்தோடு மிக எளிதாக அவர்களைக் கடந்து, தன் வட்டத்திற்குள் சுகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டேருக்கிறது. எங்கோ விழுந்த சுருக்குக் கயிறு தன்னை நோக்கி நீளும் போது மட்டும் பலவீனமான குரலில் கத்திப் பார்க்கிறது. உடன் ஒருவரும் வராததை அப்போதுதான் பயத்தோடு உணருகிறது.

ஏன் எதைக் கண்டாலும் சகித்துக் கொள்ளும் மனோபாவம் மிக எளிதாய் நம் மனதிற்குள் குடியேறிவிட்டது. தமிழகத்தில்தான் இந்த சகிப்புத் தன்மை மிதமிஞ்சி இருக்கிறதோ?

இந்த அருவறுப்பான சகிப்புத் தன்மையிலிருந்து வெளியில் வந்து, சக மனிதனின் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலை என்று வரும்?

சரி... எப்போது நம் சகிப்புத்தன்மையின் மீது கோபம் வரும்?

வருமா....!!!???

--------------------------------------------------------------

(விகடன் முகப்பிலும், இளமை விகடனின் ஹைலட் பகுதியிலும் வெளிவந்த கட்டுரை)