இருள்


சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, நடுஇரவிலும் பரபரப்பாய் இயங்கும் நகரத்தின் மற்றொரு முகமாய் அமைதி நீண்டு கிடந்தது. நிலவில்லாத வெளுத்தவானம். குறை இயக்கத்தில் இருக்கும் நீண்ட சாலையைப் பார்க்கும்போது அந்த அமைதி சலனமில்லாமல் உறங்கும் ஒரு குழந்தையைப் போலிருந்தது.

ஓசை போன்றே வெளிச்சமும் அமைதியைத் தின்றுவிடுவதாகத் தோன்றியது. வெளிச்சம் மிகு இடத்தைவிட குறை வெளிச்சத்தில் அதிக அமைதியை உணரமுடிவதாகத் தோன்றியது. அது மனதுக்குள் தோன்றுவது மட்டும்தான், உண்மையாக இருக்க முடியாது. வெளிச்சம் இருக்கும் இடத்தில் பரபரப்பு மிகுவதால் மட்டுமே அமைதி இருப்பதில்லை என்பதை புத்தி திரும்பத் திரும்பச் சொன்னாலும் மனதிற்குள் மட்டும் அப்படியே தோன்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் அடர்த்தியான இருளே பெரும்பாலும் அமைதியை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இருள் எப்போதும் மிரட்சியை கொடுக்கிறது, அதே இருள்தான் அற்புதமான தனிமையையும் கொடுக்கிறது.

பரபரக்கும் சாலையும், என்னேரமும் இடமும் வலமும் மனிதர்களாலும், வாகனங்களாலும் மிதிபடும் வீதியும் தன்மேல் மென்மையைப் போர்த்திக் கொண்டதுபோல் தோன்றியது. சட்டென மின்சாரம் தொலையும் பொழுதுகளில், மனிதர்கள் சுதாரித்து தங்கள் இயக்கத்தைத் தொடரும் வரையிலான அமைதியென்பது அலாதியானது, கனமானது, சிற்சில நேரம் பயமூட்டுவதும் கூட. மின்சாரம் தொலைந்த பின்னிரவு நேரத்து நகர்புறத்தின் அமைதி அழுத்தமானது.

வாகன வெளிச்சத்தில் மட்டும் எப்போதாவது முகம்பார்க்கும் அந்தச் சாலையில் திரும்பினேன். இருபக்கச் சாலையின் ஒருபக்கத்தில் தடுப்பு வைத்து மூடி, ஒருபக்கச் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டிருந்தன. சிறிது தூரம் கடந்தபின் புரிந்தது, மூடப்பட்டிருந்த சாலையில், சாலை செப்பனிடும் பணி விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. மின்சாரம் தொலைந்ததின் சுவடு ஏதுமில்லை அங்கு. சரக்குந்தின் முகப்பு வெளிச்சத்தில் பரபரப்பாய் இயந்திரங்களும், மனிதர்களும் எல்லோரிடமிருந்தும் தனித்து, இருளிலிருந்து வெகுதூரம் தங்களைப் பிரித்து, தங்களுக்கான உலகத்தில் வெகுவாய் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது.



பயமுறுத்தும் இருளை விடிய விடிய ஒளியேற்றி பசியாற்றிக் கொண்டேயிருக்கின்றோம். இருளில் சுழலும் மர்மங்களும் சளைக்காமல் ஒளியைத் தின்று தீர்க்கின்றது. இருள் நிரந்தரமானது, அவ்வப்போது ஒளி தோன்றுகிறது அல்லது எதாவது ஒரு வகையில் ஏற்றிக்கொண்டிருக்கிறோம் என மனதிற்குப்பட்டது.

நினைவோ, புனைவோ எதை எழுத்தில் கொண்டுவர நினைத்தாலும், அதற்கு இரவுகள் பெரும்பாலும் உகந்த நேரமாக அமைந்துவிடுகின்றன. முன்னிரவிலிருந்து படியும் இருள் தன்னோடு அமைதியையும் துளித்துளியாய் படியச்செய்கிறது. அமைதி தவழ்ந்தோடும் மனதில் சிந்தனைகள் ஆனந்தமாய் விளையாடத்துவங்கும். விளையாடும் எண்ணங்கள், மனதிற்குள் தளும்பித்தளும்பி விரல்கள் வழியே எழுத்தாகச் சிந்துகிறது.

அதே சமயம் இரவுகளில், உறக்கம் சூழும் தருணத்திற்குச் சற்றுமுன்பாக பளிச்செனத் தோன்றி, காலையில் எழுதிக்கொள்ளலாம் என தன்னம்பிக்கையோடு(!) எழுதாமல், குறிக்காமல் விட்டு, உறக்கம் தின்றதில் இழந்த அற்புதமான வரிகள் நிறைய உண்டு. விடிந்து எழுந்து யோசிக்கும்போது, இரவு தோன்றியதன் சுவடுகள் அற்றுக்கிடக்கும்.

இருளில் தொலைவதுமுண்டு, மீள்வதுமுண்டு. தொலையத் தூண்டிய இருள் மிரட்டி மீட்டுக்கொடுத்த சுவாரசியமும் உண்டு. ஏதோ ஒரு மனநெருக்கடி எரிக்கும் துன்பத்தில், சுற்றங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள ஓடமுயல்கிறார். அடர்த்தியாய் சூழ்ந்திருந்த இருள், தனக்குள் பதுக்கி வைத்திருக்கும் அச்சப் பேய்கள் மூலம் எழுப்பிய ஓசையில், மிரண்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்புகிறார். எந்த இருள் தன்னைச் சுற்றம் நட்பிலிருந்து தனித்துக்கொள்ளத் தூண்டியதோ, அதே இருள்தான் வேறொரு ரூபத்தில் மீட்டும் கொடுத்திருக்கிறது.

இருள் குறித்து அடர்த்தியாய்ச் சிந்திக்க, எப்போதோ எழுதிய இருட்டு கவிதையொன்று நினைவிற்கு வருகிறது.

பழகிச் சலித்த இடமெனினும்
கோரப்பல் கூரிய நகமென
எதையாவது மனக்குகையில்
நிரப்பித்தான் வைக்கிறது
புதிதாய் புகுந்தாளும் இருள்...

மெதுவாய் பாதம் பாவி
கலைக்காமல் கைகள் துழாவி
இருளில் சுற்றும் மாயப்பிசாசை
கண்கள் தின்று தீர்க்க
கரைகிறது அச்சக்குன்று...

இருளே ஆதியும் அந்தமும்
கருவறையோ கல்லறையோ
உடனிருப்பது இருளேயெனினும்
இடைவந்த வெளிச்ச மோகம்
இருளைத் தின்று வாழ்கிறது!

இருளைப் புரிந்துகொள்ள, பழகிப்பார்க்க, அனுபவிக்க, ஓடியலைந்து தேடித்திரிய வேண்டியதில்லை. இன்று இரவு நிச்சயம் இருள் வரும். வந்த இருளை வரவேற்க ஏற்றிய விளக்கை எட்டி அணைத்துவிட்டால் போதும். இருள் இறுக அணைத்துக்கொள்ளும். இருளோடு கூடலாம், கொஞ்சலாம், சண்டையிடலாம், சவால் விடலாம், விழித்திருக்கலாம், உறங்கலாம், சிந்திக்கலாம், சிரிக்கலாம்.

இன்னும் சில மணிகளில் இன்றைய தினத்தின் இருள் ஒட்டுமொத்தமாக வடியப்போகிறது. இரவை உறங்கித் தீர்க்கும் நாமும் இன்னொரு தினத்திற்கு இன்னொருமுறை விழிப்பை நோக்கி நகரலாம். நகர்தல் வெளிச்சத்திலும் நிகழும். எவ்வளவு நகர்ந்தாலும் அது அந்த தினத்தின் இருளை நோக்கித்தான்.

நகர்வோம்.


~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நன்றி திண்ணை

 .

வினை




சொகுசுக் காரின்

பளபளக்கும்
பக்கவாட்டுக்
கண்ணாடியில்

அழகு பார்க்கும்

அழுக்குப் பிள்ளையை

விரட்டுகையில்



முகப்பு விளக்கருகே

கால்தூக்கி

மூத்திரம் பாய்ச்சுகிறது

தெருநாயொன்று!


-()-


ஈட்டிய களிப்பில்
மாலைகள் சுமக்கும்  

ஓங்கி நிற்கும்
கட்
-அவுட்நோக்கி
காறி உமிழ்கிறான்
தான் புழங்கிய இடத்தின்
ஆக்கிரமிப்பைச் சகிக்காத
மனம் பிறழ்ந்தவன்!
 

விண்மீன்கள் பூத்த நிலவு


கைகளில் ஏந்தும் முகத்தில்
நிலவின் பொலிவு

கூர்ந்து நோக்கும் விழிகளில்
நட்சத்திரங்களின் மினுமினுப்பு

சிறகடிக்கும் இமைகளில்
படபடக்கும் உள்ளம்

மூச்சுக்காற்றின் கதகதப்பில்
குளிர்காயும் உயிர்


ஊஞ்சலாடும் காதணிகளில்
தூளியாடும் மனது

புன்னகைக்கும் இதழ்களில்
வழிந்தோடும் கவிதை


நீ இல்லா பொழுதுகள்
நிலவில்லா இரவுகளாய்...

நெருங்கியருகில் வருகையில்
விண்மீன்கள் பூத்த நிலவாய்
கூடவே குளிராய், குதூகலமாய்!

படம் : இணையம்
~

போகிறபோக்கில்... சில விநாடிகள்



தேர்தல் மற்றும் திருவிழா நெருங்கும் நேரத்துப் பரபரப்பு சாலைகளில். எட்டு மணிக்கு மேல் இருக்கும். பெரும்பாலான நபர்கள் நான்கு சாலைப் பிரிவில் பரபரப்பாய் போக்குவரத்தை சீர்படுத்திக்கொண்டிருக்கிறார் அந்த காவல் ஆய்வாளர். வர்ணம் மாறும் சமிஞ்சை விளக்குகளுக்கு ஏற்ப வாகனங்களை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அவர் உடையைப் பார்த்தபோது, அவர் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளராக இருப்பார் எனத் தோன்றவில்லை. அந்த எல்லைக்குள் வரும் காவல் நிலைய ஆய்வாளராக இருக்கலாம். சாலையின் திருப்பங்களில் மற்ற காவலர்கள் நின்று கொண்டிருந்தனர்.

pic : girithar sathyanarayanan

கொஞ்சம் போக்குவரத்து சீரடைந்த நிலையில் சாலையில் மையத்திலிருந்து நகர்ந்து, ஓரத்திற்கு கடக்க முற்பட்டார். அந்தச் சாலையில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்ததால் வாகனங்கள் சீறிக் கொண்டிருந்தன. என்ன அவசரமோ தெரியவில்லை. வாகனங்களுக்கு இடையில் புகுந்து ஓரத்திற்கு நகர முற்பட்டார். நேர்த்தியாய் கடக்கமுயன்றவரை அருகில் வந்தபோதுதான் அந்த இருசக்கர வாகன ஓட்டி கவனித்திருக்க வேண்டும். அந்த ஆய்வாளர் மிக லாகவாமாக முதுகு தலையை பின்னால் வளைத்து, இடுப்பு, மற்றும் கால்களை முன்பக்கம் வளைத்து இடிபடுவதிலிருந்து தப்பிக்க முனைந்தார். வேகத்தைக் கட்டுப்படுத்தியும், கொஞ்சம் ஒதுங்கியும் கூட தவிர்க்க முடியாமல் அவரின் பின்பக்கம் உரசிக் கடந்தது. அந்த இருசக்கர வாகனம். அதைக் கவனித்த அந்தச் சாலையின் முகப்பில் இருந்த காவலர் அந்த இரு சக்கர ஓட்டியை மடக்க முற்பட்டார்.

சட்டென நேராக நிமிர்ந்த ஆய்வாளார், அவரைப் பார்த்துக் கொண்டிருந்த வாகனஓட்டிகளைப் பார்த்து பெரிதாக புன்னகைத்துவிட்டு ஓரத்திற்கு நகர்ந்த அதேநேரம், தன்னை உரசிக் கடந்த இருசக்கர வாகனத்தை மடக்க முற்பட்ட காவலரைப் கவனித்தவர், “ஏ.....ஏ... விடப்பா….! நாந்தானே குறுக்க வந்துட்டேன்… நீங்க போங்க சார்” என்றார் சத்தமாக!. எல்லாம் சில விநாடிகளில்...

---- ***** ----

பாதாளச் சாக்கடைக்கு தோண்டி மூடியதில் குத்துயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறது அந்த வீதி. தொலைந்து போன மின்சாரம் அந்தப்பகுதி முழுதும் இருட்டை நிரப்பி வைத்திருந்தது. மின்சாரம் தொலைந்தால் மட்டுமே வீட்டு வாசற்படிகளில் அமர இயலும் மனித சமூகம் விதவிதமான வடிவங்களில் வீட்டு வாசற்படிகளிலும், வீதியோரத்திலும் தெரிந்தன. அதிசயமாய் குழந்தைகள் அந்த இருட்டிலும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஒரு வீட்டின் வாசற்படி நிலவுகால்மேல் ஒரு காலை மடக்கி அமர்ந்தவாறு ஒரு காகிதத்தை பரப்பி, கைபேசி முகப்பு விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார் சேலையணிந்திருந்த ஒரு பெண். அருகில் கடக்கும்போது தெரிந்தது அது ஒரு கட்சி வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி விளம்பரத்தாள் என்று. அந்தக் கட்சியின் அபிமானியா இருப்பாரோ என நினைத்துக்கொண்டேன். ஒருவேளை இதுபோல் வாசிக்க, அந்த வீட்டுத் தொலைக்காட்சி அல்லது வீட்டு வேலைகள்(மனிதர்கள்) இதுபோன்ற சூழலில்தான் அனுமதிக்குமோ எனவும் தோன்றியது

ஆனாலும்… அந்த சில விநாடிகளில்....
அந்த இருளும், நெலவுகால்மேல் ஒரு கால் மடக்கியவாறு அமர்ந்து, குனிந்தவாறு குவிந்த வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்த காட்சி, ஒரு ஓவியன் கண்ணில் பட்டிருக்குமேயானால் மிக அழகிய காட்சிப்படுத்தலாக அமைந்திருந்திருக்கும். நீண்ட நேரம் இருளில் மிதந்த அந்தக் காட்சி, மனதிற்குள்ளும் நெடுநேரம் மிதந்துகொண்டேயிருந்தது.

---- ***** ---- 

கறை



படம்: இணையத்திலிருந்து



உடற்போர்வையை
அடித்துத் துவைத்த பின்னும்
அகலவில்லை காமக்கறை

கையறு நிலையில்
உற்றுப்பார்க்க தெரிந்தது
அது கறையல்ல…

காமமே சாயமாக
ஏற்றப்பட்ட நூலில்
நெய்த மனமென!
 

எங்கேயும் எப்போதும் – நிரம்பி நீடிக்கும் வலி

விபத்து நடவாத சாலைகளும், மரணம் நிகழாத வீடுகளும் இங்கே உண்டா. ஆனாலும் ஒவ்வொரு விபத்தும், ஒவ்வொரு மரணமும் சொல்லொணாத் துயரத்தை திணித்துவிட்டே செல்கின்றது.

இயற்கையாய் நிகழும் விபத்துகள் தவிர, கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளில் நிகழ்த்தப்படும் மரணம் சந்தேகமின்றி கொலைக்கும் தற்கொலைக்கும் சமம்.

அதிகம் சினிமா பார்க்க முனையாத என்னை, ”எங்கேயும் எப்போதும்” படம் குறித்து வந்த விமர்சனங்கள் படம் பார்க்க தொடர்ந்து தூண்டிக்கொண்டேயிருந்தது.


இதுவும் ஒரு படம்தானே என பார்க்கத்துவங்கிய எனக்கு, இது படம் அல்ல பாடம் எனப் புரியும் போது நான் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அறிந்தேன்.

தனியார் மற்றும் அரசு என இரண்டு சொகுசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதுவதை தத்ரூபமாகக் காட்டும் காட்சியோடு படம் துவங்குகிறது. அதில் பயணப்படும் இரண்டு ஜோடிகளின் பயணம் குறித்த காரணம் கவிதையாக இருக்கிறது. முக்கால்வாசிப்படம் கவிதைபோல். கவிதைகளில் லாஜிக் மீறல்கள் இருப்பது குறித்து பேசவேண்டிய அவசியம் இருப்பதாயும் தெரியவில்லை.

பயணங்களில் பலவிதமுண்டு. பெரும்பாலும் இரவு நேரப் பயணங்களையே தெரிவு செய்கிறோம். பேருந்தில் ஏறும்போது உறங்கும் உலகம், காலையில் இடம் அடைந்து இறங்கும் போதுதான் விழிக்கிறது.

ஆனால் பகல்நேரத்துப் பயணம் அதுபோல் அல்ல. அது மனிதர்களை வாசிக்கும் ஒரு புத்தகம் போன்றது. இரவுப் பயணங்கள் பெரும்பாலும் தடங்கள்களின்றி சென்றுகொண்டிருக்கும், பகல் நேரத்து தொலைதூரப் பயணங்களில் எதிர்பார்த்தததைவிட போக்குவரத்து நெருக்கடியால் பயண நேரம் நீண்டுகொண்டேபோகும், அடுத்து வண்டி முழுதும் நிரம்பாததால் ஆங்காங்கே தென்படும் பயணிகளை ஏற்றி இறக்குவதுமுண்டு. இதன் பொருட்டு பயணம் முழுதும் புதிதுபுதிதாய் மனிதர்களைச் சந்தித்துக்கொண்டேயிருப்போம். 

பயணம் நயமாகவும் அலுப்பாகவும் இருக்கும். அலுப்பாய் நீளும் பயணத்தில் நம்மை இலகுவாக்குவது, அலுப்பிலிருந்து மீட்பது சக பயணிகளிடமிருந்து கசியும் சுவாரசியமே என்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்டதொரு பயணத்தில் ஏற்படும் விபத்தையும், அதையொட்டி நிகழும் வலியின் உச்சம் குறித்த பதிவுதான் ”எங்கேயும் எப்போதும்”.

பகல் நேரப் பயணங்களில் கவனித்து ரசித்த, கவனிக்கத்தவறிய பல மனிதர்களை இந்தப் பயணம் முழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

தன்னை அழகாய் இருப்பதாய் சொல்லும் சின்னப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்கிறாயா எனக் கேட்கும் புது மனைவியைப் பிரிய முடியாத கணவன், வெளிநாட்டில் பணியாற்றி அதுவரை பார்த்திராத மகளிடம் தான் வந்துகொண்டிருப்பதை ஆதாரத்தோடு சொல்ல வேண்டி பக்கத்து இருக்கைப் பெரியவரிடம் போனை நீட்ட, அவர் கடுப்பாய் போனை வாங்க, அப்போது அந்தக்குழந்தை “சாப்ட்டீங்ளா” எனக்கேட்பதில் ஏற்படும் நெகிழ்வு, தொந்தரவு செய்யும் குழந்தையை அப்படியே வாரி தன்மேல் போட்டுக்கொள்ளும் பயணத்தூக்கத்தை தொலைக்க விரும்பாத அம்மா, கடுகடுப்போடு வேக முடுக்கியை அழுத்தும் அரசுப்பேருந்து ஓட்டுனர், பஞ்சர் ஆன சக்கரத்தை மாற்றிவிட்டு முட்டிக்கையால் பாட்டிலைக் கவ்விக்கொண்டு கைகழுவும் நடத்துனருக்கு உதவும் ஜெய், அரசூரில் நிறுத்த மாட்டேன் என மறுத்த நடத்துனரின் மனமாற்றம், முதலில் நிறுத்த மறுத்து பின்னர் நிறுத்த முன்வரும் நடத்துனரிடம் வீம்பு பேசும் அரசூர் தலைவர், மீனப்பாக்கத்திலிருந்து விழுப்புரத்தை தாண்டிவிட்டேனா எனக் கேட்டுப் படுத்திய பயணி விழுப்புரத்தைத் தாண்டியும் தூங்கியதால் அரசூரில் இறங்கிக்கொள்ள நிர்பந்திக்கப்படும் நிலை, விளையாட்டுப்போட்டி சீருடை மற்றும் கோப்பையோடு கும்மாளமிடும் பள்ளி மாணவிகள், எதிரெதிர் பேருந்தில் பயணப்படும் நாயக காதல் இணை, இடையில் பேருந்து நிலையத்தில் வாங்கிய மல்லிகைப்பூ….. என எல்லாமே பகல் நேர தொலைதூரப்பயணங்களில் அன்றாடம் நாம் சந்தித்த மனிதர்களாகவோ அல்லது பிறர் சந்தித்த நாமாகவோ இருப்பதை மனம் முழுக்க நிரப்பும் போது, அங்கு நிகழும் விபத்து நமக்கே நேரிடையாக நிகழ்வதாக அமைகிறது.

மோதும் விநாடியில் கண்ணாடி வழியே துளைத்து முந்திக்கொண்டு விழும் ஆளை இரண்டு பேருந்துகளும் சேர்ந்து நசுக்கும் கணம், இரண்டு பேருந்தும் நேருக்குநேர் மோதியதை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்க்கும்போது அதன் கோரம் மனதை அறுத்தெடுக்கிறது. அரசுப்பேருந்தின் மேலிருந்து அப்படியே சரிந்து பரவி சிதறும் இலைக்கட்டு, இரண்டு பேருந்தின் முன்சக்கரங்கள் மோதிக்கொண்டு நிற்பதில் உணரப்படும் வேகத்தின் விபரீதம், துண்டிக்கப்பட்ட காலோடு ஒருவர் கதறும் கதறல், ”ரிங்கடிக்குதுப்பா போனெடுங்கப்பா” என செல்லமாய் போன் அழைப்பு ஓசையில் குழந்தை அழைப்பதை எடுத்துப்பார்த்து கதறும் அந்தப் பெரியவர், மருத்துவமனையில் உடல்தானத்திற்கு கதறிக்கதறிப்பேசும் அஞ்சலி  என ஒவ்வொன்றுமே விபத்தின் வலியை அப்படியே மனதில் அப்புகிறது.

விபத்து நடந்த கணத்தில் கடந்துசெல்லும் பேருந்தில் அதிர்ச்சியாய்ப் பார்க்கும் முகங்கள், அக்கம் பக்கத்திலிருந்து ஓடிவரும் மனிதர்கள், டேங்கர் லாரியிலிருந்து இறங்கி ஓடிவரும் ஓட்டுனர் பேருந்து அருகே எம்பியெம்பிக் குதித்து காப்பாற்ற முனைந்த கணத்தில் செல்போனை எடுத்து 108க்கு தகவல் சொல்வது, பெரும் விபத்தை தலைப்புச் செய்தியாக்க விரும்பு ஊடகம், பேருந்துகள் அகற்றப்பட்ட பின் எச்சங்களாய் கிடக்கும் இலைகள், அடுத்தநாளில் அழிந்துபோகும் அந்தக் கோரத்தின் சுவடு, எச்சரிக்கைக்காக நடப்படும் பலகை  என வெகு யதார்த்தமான காட்சியமைப்புகள்.

“மரணத்தைக்கொல்ல ஒருவரும் இல்லை” எனும் அந்தப்பாட்டு ஆறுதலாய் இருந்தாலும் அது ஆறுதல் இல்லையென்பதே உண்மை.

ஆங்காங்கே நெடுஞ்சாலைகளில் அவ்விடத்தில் நிகழ்த்தப்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை  தெரிவிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பலகைகள் குறித்து பெரிதாய் நாம் அலட்டிக்கொண்டதாய்த் தெரியவில்லை. உண்மையில் ஊடகம் முதற்கொண்டு அது ஊட்டும் செய்திகளை (சு)வாசிக்கும் மனிதர்கள் வரை விபத்து என்பது ஒரு சுவாரசியப் பண்டமே. பண்டமாற்று செய்யமுடியாதா பண்டம். 

விபத்தில் சிக்கிய அந்தஸ்துமிகு நபர்கள், விபத்தின் கோரம், விபத்தில் மரணத்தின் எண்ணிக்கை என்பதனையொட்டி சுவாரசியம் கூடுவதும் குறைவதுமுண்டு. வெகு சிலநேரத்தில் மட்டுமே வலிப்பதுண்டு. நம், சுற்றம், நட்பின் பங்கு இருப்பதைப் பொறுத்தும் சில நேரங்களில் சுவாரஸ்யமும், வலியும் மிகுவதுண்டு

விபத்து ஒருபோதும் வசதி வாய்ப்புகளை, காதலை, அந்தஸ்த்தை, கதாநாயகத்தனத்தை, மிஞ்சியிருக்கும் கடமையை என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. விபத்தின் கோரப்பசி அகோரமானது என்பதை ஆழ்ந்து நோக்கினாலோ அல்லது பட்டாலோதான் புரியும்.

இது படமல்ல, பாடம்…. விபத்தின் வலியறியாதவர்களுக்கு, விபத்தை ஏற்படுத்துவது குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாதோருக்கும்.

எனக்குத் தெரிந்து எந்தச் சினிமாவிற்கும் நான் இவ்வளவு கலங்கியதில்லை, எந்தச் சினிமா குறித்தும் ”இதைக்கட்டாயம் பாருங்கள் ”என எவருக்கும் குறுந்தகவல் அனுப்பியதாக நினைவில்லை, இந்தப் படம் பார்த்தபோது எல்லாம் நிகழ்ந்தது.

துணிவான, நேர்மையான, பொறுப்பான முயற்சிக்கு படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அனைவரையும் பாராட்டுவதைவிட வணங்கவே தோன்றுகிறது.

-0-