மோகம் கொண்டதொரு பெருமழைமழைச்சத்தம் கேட்கிறது. சமீப மாதங்களில் காதில் விழும் முதல் மழையோசை. ஊரில் இல்லாத நாட்களில் இரண்டு முறை பெய்துபோன அடையாளங்களைப் பின்னர்தான் கண்டிருந்தேன். வாசலுக்குச் செல்கிறேன். மழை சிதறித் தெறிக்கும் அளவிற்கு இன்னும் பெய்திருக்கவில்லை. நனையும் திட்டம் ஏதுமில்லை. திட்டமிடுவதற்கான யோசனை கூட இல்லை. விரும்பி நனைந்த மழைகளைவிட, தவிர்க்க முடியாமல் நனைந்த மழைகளே அதிகம். மழை பேரிறைச்சலாய் சடசடத்தபடி இருக்கிறது. எதிர்வளாகத்திற்குள் காற்றுகேற்ப மழை ஆடுவது தெரிகிறது. சாலையின் மையத்திற்குச் சற்று விலகி ஒரு கார் நிற்கிறது. கண்ணாடிகளில் கருப்புத்தாள் ஒட்டப்படவில்லை என்பதால் மழை கழுவிய கண்ணாடியின் உள்ளே பளிச்செனத் தெரிகிறது. முன்னிருக்கையில் ஒரு பெண் சாய்ந்திருக்கிறார். மடிமேல் ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

பகல் மழையில் கண்ணாடிக்குள் இருப்பது அலாதியான அனுபவம். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பெண் மழையை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இருக்கலாம். குழந்தை துள்ளிக் கொண்டிருக்கிறது. தன் உடலை வளைத்து கழுத்தை மடக்கி மழைத் துளி அம்புகளாய்ப் பாயும் கண்ணாடியில் முகம் பதித்து தன் முகத்தில் மழைத்துளியை வாங்கிக் கொள்கிறது. அந்த அற்புதமான காட்சி, அந்த நொடியிலேயே எனக்கும் அப்படியொரு கண்ணாடி வேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகிறது.

இரவு மழையில் கார் பயணம் வாய்த்தால் முன்னிருக்கையில் அமர்ந்து, குனிந்து முகத்தை திருப்பி கண்ணாடியில் வைத்துப் பாருங்கள். விரையும் காரின் வெளிச்சத்தில் வந்து மோதும் மழைத்துளிகள் தரும் பரவசமும் பேரானந்தமும் வார்த்தைகளில் வெளிப்படுத்தவியலாதது. எங்கிருந்தோ இருளில் முளைத்து கணப்பொழுதில் கண்ணாடிக்கு வெளியே அம்பு போல் பாயும் மழையை நேரம் கரைவது தெரியாமல் ரசிக்கலாம்.

கண்ணாடியில் முகத்தின் மீது மோதும் மழை குறித்து மனக்காட்சிகள் விரியத் தொடங்குகையில் மழை சட்டென ஓய்ந்து போகிறது. ஏமாற்றத்துடன் திரும்புகிறேன். வெயிலற்ற பின் மதியப்பொழுதில் வேகமெடுத்து வந்திருந்த பெருமழையொன்று சற்று நேரத்திலெல்லாம் தன்னைச் சிறு மழையெனவாக்கி காணாமல் போயிருப்பதை நான் ஒப்புக்கொள்ள மறுப்பதெப்படி? யாரைத் தேடி வந்த மழையெனத் தெரியவில்லை. யாருக்கு அந்த மழை தேவைப்பட்டதென்றும் தெரியவில்லை. ஆனால் அந்த மழை விட்டுச் சென்றிருக்கும் உருக்கம், நீங்கள் எந்த மனநிலையிலிருந்தாலும் உங்களைப் பதம் பார்ப்பவை. கூடவே தார் சாலையிலிருந்து எழும்பிவரும் தேய்ந்த டயர் அழுக்குடன் மழை ஈரமும் கலந்த வாடை முகம் சுழிக்கவும் குமட்டலை ஏற்படுத்தவும் செய்பவை. செம்மண் நிலத்தின் வாசனை வேண்டுமென மனம் ஏங்குகிறது. நகரச்சாலை வாசனை மறுக்க மறுக்க நிரம்புகிறது.காத்திருந்த காலத்தில், கணப்பொழுதில் ஓரப்பார்வை காட்டிவிட்டு கரைந்து போகும் மழை தரும் வெறுமையை உணர்தல் ஒரு கொடுமையான அனுபவம். எவருக்கேனும் அழவேண்டும் எனும் மனநிலையிருந்தால் அவர்களுக்கென பிரத்தியேகமான ஒரு சூழ்நிலையை அந்தச் சிறு மழை பரிசளித்துவிட்டுச் சென்றிருக்கிறது. அறையில் சூழ்ந்திருக்கும் கசகசப்பு உடலை அழுத்தமாய்ப் பற்றிக்கொண்டு விட மறுக்கிறது. முருங்கை மரத்தில் அப்பியிருக்கும் புழுக்களைப் போல் அதன் அழுத்தம். இன்னும் சொல்லப்போனால் உடல் முழுக்க மென் அசைவுகளோடு நெளியும் புழுவாய் இறுமாப்போடும், அழுத்தத்தோடும் அப்பியிருக்கிறது வெக்கை.

கோடை நாட்களில் தவிர்க்க முடியாத விருப்பம் மழையை வேண்டுதல்.  மழைக்கான அறிகுறிகளற்ற நாட்கள் வாழ்வின் மீதான நம்பிக்கைகளையே பதம் பார்ப்பவை. வெயில் தணிந்து மேகம் கறுத்து, மெல்ல காத்து வீசும் நாட்களில் வந்து பரவும் புதுநம்பிக்கை வாழ்க்கையில் பூக்கும் ஒரு அழகிய மலர். வருவதற்கான அனைத்துக் குறிப்புணர்த்தல்களையும் காட்டிய அந்த மழை வாராது போனாலும் கூட அப்போது பூத்திருந்த புதுநம்பிக்கையானது எளிதில் வாடிப்போகாத ஒன்று.

இன்றைய மழையோடு பிணக்குக் கொள்ள ஏதுமிருப்பதாக தோன்றவில்லை. எந்தச் செடியின் வேருக்கும் இந்த மழை தன்னைப் பங்கிட்டுக் கொடுத்திருக்காதெனினும் தலை துவட்டலாய் இலைகளை வருடியிருக்கலாம். ’எனக்கு வழியொன்றும் மறந்து போகவில்லை, வந்து போகும் உறவில்தான் இருக்கிறேன்’ என்பதை நினைவூட்டவும்கூட வந்திருக்கலாம்.

ஆழத்தோண்டும் கிணற்றில் ஏதோ ஒரு பாறை உடைவில் மெல்லத் தெரியும் ஈரமாய் இந்த மழை காட்சியளித்துப் போயிருக்கின்றது. வெம்மையில் கொதித்தடங்கும் உழுத செம்மண் நிலத்தின் வரிக்கோடுகளில் புள்ளி வைத்துக் கோலம் போட வந்தவளாய் மழையாய் கருதிக்கொள்கிறேன். செம்மண் தொட்ட கணத்தில் மேழும்பிய வாசனையொன்று, பிரியத்துக்குரியவரின் வாசனை போல் மனம் முழுக்க நிரம்புகிறது. மனதிற்குள் ஒரு சாரல் மழை தொடங்கியிருக்கிறது.

இனி மண் நனைக்க மோகம் கொண்டதொரு பெருமழை வருமென காத்திருக்கலாம்!

-

மீனாகும் கருவாடு

கருணையின்றிப் பொழியும் வெயிலை
வேம்பின் கிளையொன்று தழுவும்
மதிற்சுவர் மேலிருக்கும் பூனை
தம் முன்னங்காலால் புறந்தள்ளுகிறது

இன்று தயிர்சோற்றில்
புளிப்பு கூடுதலாய் இருந்ததை
நினைத்துக் கொள்கிறது
விழி திறத்தலையும் இமை மூடலையும்
செல்லமாய்ப் போராடிக் கையாள்கிறது
கொழுத்த கருவாடொன்று நினைவில் மோத
மீசையில் உரசும் வண்ணம் நா சுழற்றுகிறது

மதிற்சுவரோரம் அமர்ந்திருப்பவனை
ஒரு மியாவ் அனுப்பி
அச்சுறுத்தவோ சிநேகிக்கவோ முயல்கிறது
மேலெழும்பும் பீடிப் புகையிலிருக்கும்
கஞ்சா மணம் கிறக்கமூட்டுகிறது

அருகாமைச் செடிக்கு ஒருவர்
தண்ணீர் வார்த்துப் போகிறார்
மலரும் செடியின் மூச்சுக்காற்று
பூனையின் சுவாசத்தில் சேர்கையில்
நினைவில் கிடந்த கருவாடு
மீனாய்த் துள்ளிக்குதித்து
வேரடி நீரில் பிரியம் பகிர்கிறது.

-

சட்டத்திற்குள் அடங்க மறுக்கும் பிரியம்

வெயிலை அறுத்தோடும்
இந்தப் பகற்பொழுது ரயில்
எந்த நிலையத்தைக் கடந்திருக்கிறது
நீ எங்கு ஏறினாய்
எந்தத் தருணத்தில் நான் இடம்பெயர்ந்தேன்
எதுவும் மனதில் தேங்கவில்லை

பின்னோடும் அடர் வனத்திலிருந்து
ஏதோ ஒரு செடியின் மலர் பறித்து
காற்றில் சரியும் கூந்தலில் சூட்டி
இதுவரையறியா மொழியொன்று பழகி
கவிதையாய் ஒப்பந்தமெழுதி
பிரியத்தின் முத்திரையிடுகையில்
இரைச்சலோடு எதிர் திசையிலிருந்து
ரயிலொன்று சீறிக் கடக்கிறது

இப்பயணம் நம்முடையது
என்பதை மட்டும் அறிகிறேன்
ஏதோ ஒரு நிலையத்தில்
நம்மில் யாரோ இறங்கியாக வேண்டும்
அதுவரையில்
ரயில் சிநேகம் என்ற சட்டத்திற்குள்
அடங்க மறுக்கும் இந்தப் பிரியத்திற்கு
என்ன பெயர் சூட்ட!?

-