ஆண்டின் இறுதியில் ஒரு பெரு மகிழ்ச்சி

மாணவர்களிடம் உரை நிகழ்த்துவது என்பது ஒரு வேள்விக்கு இணையான உணர்வைத் தருவது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியொரு வாய்ப்பு இன்று கிட்டியது. சென்னிமலையில் இருக்கும் எம்.பி.என்.எம்.ஜே பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் அனைத்து மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றும் வாய்ப்பு அது. ஏற்கனவே கடந்த ஆண்டில் நண்பர் பழமைபேசி அவர்கள் அதே துறை மாணவர்களிடம் உரை நிகழ்த்த வந்தபோது, என்னையும் சிறிது நேரம் மேடையேறிப் பேசப் பணித்தார்கள்.

மீண்டும் இந்த ஆண்டின் இறுதிநாளில் கூர்படுத்திடுவோம்” எனும் தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். நிகழ்ச்சி இரண்டு மணி நேரம், ஆகவே எப்படியும் 1.30 மணி நேரம் உரையாற்ற வேண்டும் என முதலில் சொல்லும் போதே லேசான தடுமாற்றம் சூழ்ந்தது. அவ்வப்போது மேடைகள் ஏறினாலும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் என்பது எனக்கு வசதியானது. பயற்சி வகுப்புகள் எடுத்த காலகட்டத்தில், 2 மணி நேரம் வரை தொடர்ச்சியாக எடுத்ததாக நினைவிருக்கின்றது. அதில் இடையே உரையாடும் வாய்ப்பு, சின்ன சின்ன நடவடிக்கைகள் என கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால் உரையாற்றலில் 90 நிமிடங்கள் மிகப் பெரிய அக்னிப்பரிட்சை என்றே உணர்ந்தேன். அக்னிப்பரிட்சை எனக்கு என்பதைவிட கேட்கும் மாணவர்களுக்கு என்பதுதான்.
கொஞ்சம் கூடுதல் தயாரிப்போடு என்னை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தேன். துறைத்தலைவர் K.G. பார்த்திபன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எனக்கு முன்னதாக தலைமை உரையாற்றிய தாளாளர் திருமதி. வசந்தா சுந்தானந்தம் அவர்களும், வாழ்த்துரை வழங்கிய முதல்வர் முனைவர். பழனிசுவாமி அவர்களும் மிக அருமையான ஒரு தளத்தை எனக்கு அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் இருவருக்கும் வாய்ப்பிற்கும் நல்ல தளம் அமைத்துத்தந்தற்கும் நன்றிகள் சொல்லியேயாகவேண்டும்.அடுத்த 90 நிமிடங்களைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவ, மாணவியர்கள் குறித்த ஒரு சின்ன அழுத்தத்தோடே 10.27க்கு பேசத்துவங்கினேன். எப்போதும் பேச்சில் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒரு சூட்சுமம் இருக்கும். அப்படி இன்று எனக்கு கிடைத்த சில மாணவ மாணவியர்களை என்னை வெகு வேகமாக இழுத்துக்கொண்டு சென்றனர். அரங்கில் ஒரேயொரு சின்னச் சிரமம் சுவர்க்கடிகாரம் இல்லாதது மட்டுமே. ஒலிவாங்கி மேடையில் வைத்த கைபேசியை அவ்வப்போது வெளிச்சமூட்டிக் கொண்டே நான் உரையை நிறைவு செய்தபோது 11.55 காட்டியது. 

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு என்றாலும், கேட்கும் மாணவர்களுக்கு இவ்வளவு நீண்ட நெடுநேரம் என்பது கொஞ்சம் சிரமமாகவே தோன்றலாம். ஆனாலும் ஒத்துழைத்த மாணவ மாணவியருக்கு நன்றி பாராட்டியே தீரவேண்டும்.நல்லதொருநட்பின் அடிப்படையிலும், அன்பின் அடிப்படையிலும் என்னை அழைத்த துறைத்தலைவர் நண்பர் பேராசிரியர் K.G பார்த்திபன் அவர்களுக்கும், இணைப்பேராசிரியர் திரு.மோகன், விரிவுரையாளர்கள் திரு.கோபி, திரு.அருள்ராஜ், திரு. மகேஷ்வரன் உள்ளிட்ட மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள்!

மிக மகிழ்வான அனுபவத்தோடுதான் 2011 ஆண்டு இன்று நிறைவடைகிறது என்பதில் பெருமகிழ்ச்சி!

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

-

சிறகசைப்பு


மனிதர்களுக்கு ஏன் இந்த உளச்சிக்கல் என்பதுதான் புரியவில்லை! ஒரு மனோநிலையைப் எழுத்தில் சில வார்த்தைகளில் பகிர்ந்துகொள்வது என்பது ஒருவித விடுபடல். அதேசமயம் அதை ஒத்த மனோநிலை கொண்டோரின் மனதையும் சற்றே மீட்டிப்பார்க்கவும், அதை நெகிழ்ச்சியாய் அனுபவிப்பதற்குமான ஒரு வாய்ப்பு மட்டுமே. உதாரணத்திற்கு எழுதுபவரின் மனோநிலையை பிரதிபலிக்கும் எழுத்து வாசிக்கும் யாரோ ஒருவருக்கு, அதே போன்ற மனநிலை, சூழலை நினைவூட்டலாம் என்பது போல்..ஒவ்வொரு இருவரிச் செய்திக்குள்ளும், துணுக்கிற்குள்ளும், கவிதை வரிகளுக்குள்ளும் ஒளிந்து கிடப்பது,  யார் யார் என ஆவேசமாகத் தேடுவது ஒருவித நோய்மை மனோபாவம் என்றே தோன்றுகிறது. அப்படியே தேடி ஒரு ஆளின் பெயர் தெரிந்தால் மட்டும், அதில் என்னவித உணர்வு கிட்டிவிடப்போகிறது. ஒருவேளை அப்படி எவர் ஒருவரும் இடம்பெறாமல், ஒரு சூழலை வைத்து அந்த மனோநிலை சார்ந்த எழுத்து வந்திருந்தால், அப்போது எதைக்கொண்டு நிரப்பப்போகின்றோம்!

இதையெல்லாம் உற்று நோக்கும்போது அழுத்தமாக ஒன்று சொல்லத் தோன்றுகிறது… பெரிசா ஒன்னும் இல்ல “போங்கப்பா, போங்க போயி புள்ளகுட்டியைப் படிக்க வைங்க” என்றுதான்.

-0-

சமீபத்தில் ஒரு கிடா விருந்துக்கு அழைப்பு. பந்தியில் என் பக்கத்தில் ஒரு இளவட்டம் அநியாயத்துக்கு ஒல்லியாய். வந்து அமர்ந்ததிலிருந்து வலது பக்கக் காதில் அணைத்த போனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். பேசியதில் இவர் எதோ காதலுக்கு பஞ்சாயத்து செய்கிறார் என்று மட்டும் புலப்பட்டது. 

ஆட்டுக்கறி, கோழிக்கறி, தலைக்கறி, பிரியாணி எனப் பரிமாறப்பட்டிருந்தது. என்னையொத்த எல்லோரும் சுவாரசியமாய் சாப்பிடுவது தெரிந்தது. அவர் மட்டும் சுவாரசியமாய் பஞ்சாயத்து செய்துகொண்டு நுனி விரல்களால் பிரியாணியைக் கொத்திக்கொண்டிருந்தார். இடையில் ஒருவர் ஒவ்வொரு இலைக்கும் வந்து ”என்னங்க வேணும், என்னங்க வேணும், கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க” எனக் கேட்டுக்கேட்டு பரிமாறச் செய்தார். என்னைக் கேட்டபோது பந்தி நாகரீகம்(!) கருதி, ”வேண்டாங்க” எனப் புன்னகையால் அவரை நகர்த்தினேன். இளவட்டத்திடம் கேட்டதற்கு தலைக்கறி இருந்த இடத்தை மட்டும் தொட்டுத்தொட்டு காட்டினார். யாரையோ அழைத்து ”தம்பி, இந்த இலைக்கு தலைக்கறி வை” என ஆணையிட்டார்.

நான் இடைவிடாது தீவிரமாக என் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தேன். திடீரென என் இலையில் தலைக்கறி ஒரு கரண்டி அளவுக்கு விழுந்தது. நிமிர்ந்து பார்த்தபோது, கறி வைத்த பையன் வாளியோடு மேசை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். சுற்றும்முற்றும் பார்த்தேன், ஒல்லி இளவட்டம் பஞ்சாயத்து செய்துகொண்டு எச்சில் கை விரலை தலைக்கறி தீர்ந்த இடத்தில் இன்னும் தட்டிகொண்டுடிருந்தது. பிரியாணிக்குப் பிறகு சாதம், குழம்பு, ரசம், தயிர் என எல்லாம் நிறையும் நேரத்தில், ஒருவழியாய் ”ஒரு நிமிசம் மச்சி” என்று விட்டு, தயிர் ஊற்றிக்கொண்டிருந்தவரிடம் ”தலைக்கறி கேட்டேனே?” என்றது. எல்லோரும் இலையை மடக்கிக்கொண்டிருந்தனர். அந்த இலையில் பாதி பிரியாணி அப்படியே இருந்தது. பயபுள்ள ஏன் அநியாயத்துக்கு ஒல்லியா இருக்குதுனு அப்போத்தான் எனக்கு புரிஞ்சுது. நான் எழுந்து, கை கழுவ நகரும் போது, கூடுதலாய் ஒரு கரண்டி தலைக்கறியும் இருந்த என் வயிறு அவரின் முதுகுமேல் உரசி வேறு தொலைத்தது.

--0--

மகத்தான சாதனைக்கு மகிழ்வான பாராட்டு

எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு ஒரு கிராமப் பள்ளி தன்னை உயர்த்திக் கொண்டிருப்பதை ஏற்கனவே கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி இடுகை வாயிலாக அறிந்திருக்க வாய்ப்புண்டு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் இராமம்பாளையம் பள்ளி இன்றைக்கு தமிழகத்தின் பெரும்பாலான கல்வி அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. சரஸ்வதி மற்றும் ஆசிரியர் திரு.பிராங்கிளின் ஆகியோரின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. எந்தப் பிரதிபலனையும் எதிர்நோக்காமல், கல்வியை வெகு சிறப்பாக அளிக்க நினைத்த இந்த நல்லுல்லங்களை கோவை மாவட்ட நிர்வாகம் சரியான அளவில் அங்கீகரித்திருப்பதை அறியும் போது பெருமகிழ்வாக இருக்கின்றது. பள்ளி குறித்து ஒரு ஆவணப்படம் தயாராகவுள்ளது.

இந்தப் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் போல், மாவட்டத்தில் பல பள்ளிகளில் வகுப்பறைகளின் தரம் உயர்த்தப்படவேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதும் இதற்குச் சான்றாகும். அதையொட்டி ஆனைகட்டி மற்றும் பொள்ளாச்சியில் இரண்டு பள்ளிகளை மேம்படுத்த ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 

”அனைவருக்கும் கல்வி இயக்கம்” இராமம்பாளையம் பள்ளிக்கு கூடுதலாக  கட்டிடம் கட்டவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நிதி 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியான செய்திகள். சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.ப்ராங்கிளின் அவர்களிடம் வகுப்பறையை சிறப்பாக அமைத்தது குறித்த ஒட்டுமொத்தத் திட்டத்தையும் பெற்று மாநில அரசிடம் அளித்துள்ளார். சிறப்பாகச் செய்திட்ட பணி, மிகச் சரியான நேரத்தில் அதற்கான அங்கீகாரம் பெறுவது மிகுந்த சிறப்புக்குரியது.

இந்நிலையில் எப்போதும் சிறப்பானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் பள்ளி குறித்த கட்டுரையை சில மாதங்களுக்கு முன் சங்க இதழில் வெளியிட்டிருந்தது. அதையொட்டி கடந்த இயக்குனர்கள் குழுக்கூட்டத்தில் அந்த ஆசிரியப்பெருமக்களை அழைத்து பாராட்டிட முடிவெடுக்கப்பட்டு  15.12.2011 அன்று பாராட்டுவிழா நடத்தப்பட்டது.பாராட்டுக் கூட்டத்தில் இராமம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. சரஸ்வதி அவர்களும், ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை அரிமா சங்கத்தலைவர் அரிமா. S.மகேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். அன்றைய சிறப்பு விருந்தினரான முனைவர் சாரோன் செந்தில்குமார் அவர்கள் ஆசிரியர்கள் இருவரையும் பாராட்டிப்பேசி நினைவுப் பரிசினை வழங்கினார்.தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தும்போது, கல்விக்கூடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதின் பெருமை முழுக்க முழுக்க திரு. பிராங்கிளின் அவர்களையே சாரும் என அகமகிழப் பாராட்டினார். மேலும் இதுதான் முதல் பாராட்டு என்றும், அது மகிழ்ச்சி தருவதாகவும், அதே சமயம் இது போன்ற பாராட்டுகளை எதிர்நோக்கி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை என்றும் கூறினார்.உண்மையில் திரு.பிராங்கிளின் மற்றும் திருமதி. சரஸ்வதி ஆகியோரின் உழைப்பிற்கு, செய்த அரிய சாதனைகளுக்கு முன் எங்கள் சங்கம் நடத்திய பாராட்டுவிழா என்பது என்பது மிகமிகச் சாதாரணமே. அதே சமயம் அவர்களை ஈரோட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான நபர்களிடம் அடையாளப்படுத்தியிருக்கின்றோம் என்பது மிகுந்த மனநிறைவைத் தருகின்றது.

தன்னலம் சிறிதும் பாராது அவர்கள் ஆற்றிய சேவை உண்மையில் போற்றுதலுக்குரியது. மீண்டும் ஒருமுறை என் மனம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு.பிராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள... 99424-72672       franklinmtp@gmail.com,  pupsramampalayam@gmail.com 


பள்ளி தொடர்பான சுட்டிகள்:-

கடையடைப்பு

எப்போதாவது அதிசயமாய் பூக்கும் விடுமுறைதினம்போல் நீண்டு படுத்திருக்கிறது கடையடைப்பு. மார்கழியின் பகல் நேரத்தில் வீசும் தென்றல் காற்றில் மூடிய கடைகள் முழிக்கத் தயாரில்லை.

இன்றைக்கு முடிக்கவேண்டிய முக்கிய வேலைகளை முந்தைய இரவே அவசரமாய், கொஞ்சம் கடினத்தோடு முடித்துக்கொண்டு வெகு சாவகாசமாய் உறங்குகின்றன சிறுதொழிற்கூடங்கள்.”பஸ் ஓடுமா” என்ற கேள்விகளுக்கு, ”ஓடும்னு நினைக்கிறேன்” என்ற பதிலளிப்பவர்கள், ஓடும் பேருந்துகளைக் காணும்போது தன் பதிலுக்கு தானே மதிப்பெண் வழங்கிக்கொள்கின்றனர். பள்ளித்தேர்வுகளெல்லாம் முடிந்த தினங்களென்பதால் பெற்றோர்களிடம் எத்தகைய குழப்பமும் பதட்டமும் கடுகளவும் இல்லை.

எப்போதும் மூச்சையடைக்கும் முக்கியச் சாலைகள் முதல் பந்திக்கு விரித்த மாத்துத்துணி போல் ஒருவித அழகோடு வீற்றிருக்கின்றது. வரிசையாய் மூடப்பட்டிருக்கும் கடைகளின் வண்ண வண்ணக் கதவுகள் ஏதோ சுவாரசியங்களை கண்ணுக்கு எட்டாத தொலைவில் கடைபரப்பி வைத்திருக்கின்றன. இடையிடையே திறந்து வைக்கப்பட்டிருக்கும் ”அடைப்பில் விலக்கு” அளிக்கப்பட்ட மருந்துக் கடைகளைக் காணும் போதுதான் தெரிகின்றது மனிதர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாய்க் குடிகொண்டிருக்கும் நோய்களின் எண்ணிக்கை.

அடைப்புக்கு அழைப்பு விடுத்த அமைப்புகளின் முக்கியத்தலைகளும், சங்கப் பிரதிநிகளும் ஒரு பொதுமைதானத்தில் கூடுகின்றனர். சம்பிரதாயமாகயா கூடுதல் புன்னகை சிரிப்போடு அளவளாவிக் கொள்கின்றனர். அமர்ந்திருக்கும் பெரும்பாலனோரின் விரல்கள் அலைபேசி பொத்தான்களை எந்நேரமும் ஒத்திக்கொண்டிருக்கின்றன. ஒலிவாங்கி கிடைத்ததும் உதடுகளின் அருகாமையின் வார்த்தைகளைத் தோற்றுவித்து உடனுக்குடன் உதிர்த்துவிடுகின்றனர். சில நேரங்களில் வெகுண்டெழும் முழக்கமாயும் கூட வந்து விழுகின்றன வார்த்தைகள். முழங்கியவர் அடங்கியமரும்போது அருகாமையில் இருப்பவர், அவசரத்தில் கிடைத்த புறங்கையைப்பற்றி ஒருவாராக குலுக்கிவிட்டுச் சொல்கிறார்… ”சூப்பருங்க, கலக்கிப்புட்டீங்க”

சந்தடி குறைந்த குறுக்குச் சாலைகளின் சிவப்பு விளக்குகளுக்கு நின்று நிதானிப்பவன் மற்றவர்களுக்குள் ஒரு பைத்தியகாரனை நினைவூட்டுகிறான். விறுவிறுவென ஓடிக்கொண்டிருக்கும் உலகம் சந்தடியற்ற தனத்தை தனக்கான சுதந்திரமாக்கொண்டு இடவலம் மட்டும் கடனேயெனப் பார்த்துவிட்டு சில நொடிகள் முன்னாதாக கடக்க எத்தனிக்கிறது. அதுவரை பனிப்போர்வை போல் பைத்தியகாரத்தனத்தை தன் மேல் போர்த்திக்கொண்டிருந்த சாமானியனும் பொறுத்ததுபோதுமென சிவப்பு எண்கள் தீரும்முன்னே விருட்டெனக் கடக்கிறான். கடந்தவுடனே கடந்ததற்கான நிம்மதி எல்லோருக்குள்ளும் பூக்கத்தான் செய்கின்றது.

இருபத்திநாலு மணி நேரமும் மூடப்படாத தேநீர்க் கடைகளும் அதிகாரப்பூர்வமாய் மூடப்பட்டதாய்ச் சொல்லிக்கொள்கின்றன. ஆனாலும், சுருள்கதவை அரைவாசி மட்டும் திறந்துகொண்டு ஏற்கனவே வடித்து வைத்த தேநீரை வழக்கத்திற்குமாறாக கொஞ்சம் குறைந்த அளவில் கொடுத்துச் சேவையாற்றிக் கொண்டிகின்றன.

மதிய உணவு எடுத்துவராத நண்பன் அங்கிங்கென அலைந்து, யாரோ சொன்னதாய் ரயில் நிலையத்திற்குள் சென்று பொட்டலம் வாங்கி வந்ததாய் புது அனுபவம் ஒன்றினைச் சொல்கிறான்.

மாலை நெருங்கும் வேளையில் அதிசயமான பகல் உறக்கத்திலிருக்கும், நகரம் மெல்ல புரண்டுபடுக்கிறது. பின் மதிய நேரத்தில் கொஞ்சமாய்ப் போக்குவரத்துக் கூடுகிறது. ஐந்து மணி வாக்கில் ஆங்காங்கே சுருள்கதவுகள் மேலெழும்பும் கர்ணகொடூர ஓசை வந்துவிழுகின்றது. கடையடைப்பு மெல்ல தீர்ந்துபோகின்றது.

இதுபோல் எத்தனை கடையடைப்புகளைக் கடந்துவிட்டோம் என மனதிற்குள் அயர்ச்சி நிரம்புகின்றது. கடையடைப்பு, போராட்டங்கள் கூட காலத்தின் மாற்றத்தில் ஒரு நிறுவனத்தன்மையை தன்மேல் பூசிக்கொண்டிருக்கின்றன. பிரச்சனைகளை உருவாக்குபவனும், கட்டுப்படுத்த வேண்டியவனும், எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவனும், நேர்மையாய் தீர்த்துவைக்க வேண்டியவனும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் வரையில், சாமானியன் இப்படி அடைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது, வாயையும் அவ்வப்போது கடைகளையும்.

-

பிடித்த திரைப்படங்கள்

அவ்வப்போது பார்த்த சில பிறமொழிப்படங்கள் குறித்த உணர்வுகளை சில வரிகளில் பதிக்கும் முயற்சி இது. முழுமையான ஒரு பார்வையை, விமர்சனத்தை வைப்பதைவிட அது குறித்து மேலெழும்பும் உச்சபட்ச உணர்வுகளை மட்டும் பதியனிடும் முயற்சி.


------------------------------------------------------------------------------------------------------------------------


மகனைத் தொலைக்கும் தாயின் கண்ணீரும், போராட்டமும், இன்னொரு குழந்தையை மகனென திணிக்கும் கயமைத்தனத்தின் முன் வழியும் இயலாமைத்தனமும், மறுக்கப்படும் நீதியும், காவல்துறை, மருத்துவத்துறையின் அக்கிரமும், குற்றவாளிச் சிறுவனிடம் பரிவு காட்டும் அதே காவல்துறையின் கனிவும், தூக்குத்தண்டனை காட்சியில் அவனின் கதறலும்...... இன்னும் நிறைய....

இத்தனைக்கும் கதை நடக்கும் காலம் 1928-1935. பார்த்த படங்களில் சிறந்த படம் என நினைப்பவற்றில் மிக நிச்சயமாக இதுவும் ஒன்று.

------------------------------------------------------------------------------------------------------------------------தனக்குப் பிடிக்காதைச் சூழலின் பொருட்டு ஏற்றுக்கொண்டு, அதுவே தனக்குப் பிடித்ததாக மாறிவிட, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பிடிக்காமல் போகும் சூழலையும் கடந்து செல்லும் நாயகனின் நகர்வுகள்...

இங்கே பிடிக்காத எனக்குறிப்பிடும் செயல்இறந்த உடல்களை சுத்தம் செய்து, உடைமாற்றி, மிக அழகாக ஒப்பனை செய்தல்

படம் பார்க்கும் எவருக்கும், அந்த நேர்த்தியான ஒப்பனைக்காகவே செத்துப்போகலாம் என்றும் கூடத் தோன்றலாம். :)

------------------------------------------------------------------------------------------------------------------------
சூழலின் பொருட்டு கிராமத்தை, உறவைப்பிரிந்து வெளிநாட்டில் பொருந்தா வயது கணவனோடு நாட்களைக் கடக்கும் ஒரு சாமனியப் பெண்ணின் நகர்வுகளை மிகத் துல்லியமாகக் காட்டும் படம். படத்தில் இருப்பது ஒருசில பாத்திரங்களே என்றாலும், ஒவ்வொன்றையும் மிக அழுத்தமாக படைத்திருப்பது வெகு அருமை.

கதாநாயாகிதனிஷ்தா சாட்டர்ஜியின் நடிப்பும், முகபாவங்களும் எத்தனை நாட்களானாலும் மறந்து போகாதாது.

------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பாவித்தனமாய் பாலியல் தொழிலில் இறங்கும் பள்ளித் தோழிகளின் விளையாட்டு மனோபாவமும்...

பேரன்பும், பெரும் வேதனையும், பதற்றமும் சூழ்ந்த ஒரு தந்தையின் போராட்டமும்...

இறுதிப்பகுதியில்... கலங்கடிக்கும் கொடுங்கனவும் கவிதையாய் நகரும் காட்சிகளும்... என

KIM KI DUK-
ன் மற்றொமொரு சிறந்த படைப்பு!

------------------------------------------------------------------------------------------------------------------------


ஊரின் மிக அழகிய பெண் மேல் பெருங்காமம் கொண்டு அலையும் விடலைப் பையனின் பார்வையில் அந்தப்பெண்ணின் நகர்வுகளையும் அவன் மன, உடல் போராட்டங்களையும் மிக அழகாய் உன்னதமாய்க் காட்டும் படம்.


குறிப்பு:
கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டும், அதில் மிக முக்கியம் மனமுதிர்வு கொண்டோருக்கு மட்டுமே

------------------------------------------------------------------------------------------------------------------------கொட்டிக்கிடக்கும் கவிதை அள்ளிக் கொண்டாடலாம் அனுபவித்துத் திளைக்கலாம்.

தவறவிடக்கூடாத படங்களில் இதுவும் ஒன்று!  
 
------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
வாழ்க்கையைக் கடப்பதற்கான ஒரு சாமானியனின் போராட்டமும்..நேசிப்பவர்களை அடைகாக்க ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு தந்தையின் அக, புறப் போராட்டமும்... புரிந்து கொள்ளக்கூடியவர்களை அவர்களுடனே போராடச் செய்கிறது மனதில் துளிர்க்கும் வியர்வைத்துளிகளுடனே...

வண்ணவண்ணக் கனவுகளை நிரப்பிய வண்ண மீன்கள் உயிர்பிழைக்கட்டுமேயென ஒரு கட்டத்தில் ஓடும் சாக்கடையில் தள்ளிவிடும் சிறுவனோடு நாமும் சிறுவனாகிறோம்...
 
 ------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
பள்ளிப் பிள்ளைகளின் மதிய உணவை மையமாக வைத்து ஒரு கதையை மிக நேர்த்தியாக உருவாக்கியதற்காக இந்தப் படத்தை ரசித்து ரசித்துப் பார்க்கலாம்!

Amol Gupte & Partho - அப்பாவும் பிள்ளையும் அசத்தல்.
 
 ------------------------------------------------------------------------------------------------------------------------

 
சூழ்நிலையின் முன் எதன் பொருட்டோ மனிதர்கள் தோற்றுக் கொண்டே இருக்கின்றனர் என்பதையும்...

உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறதென்றாலும், தேடிய மனிதர்கள் சில அடி தொலைவில் இருந்தாலும் வாழ்க்கை அவர்களைப் பிரித்துப்போட்டே வைத்திருக்கின்றது என்பதையும்...


மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன என்பதையும்....


போகிற போக்கில் இந்தப் படம் எளிமையாகப் பதித்து விட்டுப்போகின்றது.
 
 ------------------------------------------------------------------------------------------------------------------------