பதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு


எப்பொழுதுமே கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு. காரணம் பதில்கள் நம்முடையதாக இருக்கலாம், ஆனால் கேள்விகள் கேட்பவரின் அறிவு, தேடல், அனுபவம், நிலைப்பாடு, நம்பிக்கை ஆகியவற்றில் இருந்து எழக்கூடியவவை. அந்த சேர்மானத்திற்கு உணவிடுவது அவ்வளவு எளிதல்லவே!

திடீரென்று ஒருநாள் Jayalalitha Kaleshwaran அவர்களிடமிருந்து இந்தக் கேள்விகள் கொத்தாக வந்து விழுந்தன. பொதுவாகவே அவர் எது குறித்தாவது கேள்விகள் எழுப்பிக் கொண்டேயிருப்பார். நானும் பெரும்பாலும் ஒற்றைச் சொல்லில் பதிலளித்து சமாளித்துவிடுவேன். ஆனால் தொகுப்பாக விழுந்த இந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொற்களில் தப்பிக்க முடியாததால்...

இனி நீங்களே படிங்க...

1. "எழுத்து" ஒரு எழுத்தாளரா இது பற்றி சிறுகுறிப்புச் சொல்லுங்க?
சொல், காட்சி, சிந்தனை, ஒலி இதில் ஏதோ ஒன்று மனதில் தைக்கலாம் அல்லது நம்மிடம் வழங்கடலாம். அது தானாக வளர்ந்து அல்லது நம்மால் வளர்க்கப்பட்டு, இனியும் வைத்திருக்க முடியாது என்ற தருணத்தில் வெளியேற்றினால்தான் நிம்மதி எனும் நிலையில் வாய்த்திருக்கும் பல வடிவங்களில் எழுத்தும் ஒன்று.


2. பிற புத்தகங்களை, இலக்கியங்களை வாசிப்பதும், பல்வேறு ஊர்களுக்குப் பயணப்படுவதும் ஒரு எழுத்தாளருக்கு எவ்வகையில் தம்படைப்புகளுக்கு உதவுகிறது? அல்லது உதவ முடியும்?
வாசிப்பதன் மூலம் வாசிப்பதையும், தான் எழுதியதையும் ஒப்பீடு செய்யலாம், செம்மையாக்க முயலலாம். வாசிப்பு புதிய சொற்களை, அழகியலை, நடையை, சூட்சுமத்தை நமக்கு அறிமுகப்படுத்தும்.
பயணம் எழுதுவதற்கான வாய்ப்புகளை, தேவைகளை உருவாக்கிக் கொடுக்கும்.


3. மேற்சொன்னது சாத்தியமானால் மட்டுமே ஒரு படைப்பை எழுத்தாளரால் தர அல்லது உருவாக்க முடியுமா?
பல்வேறு காரணிகளில் வாசிப்பும், பயணமும் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருக்கலாம்.


4. எழுதும் போது தங்களை கதிராகவே உணருவீர்களா? இல்லை அதன் கருவாகவே எழுத்தின் வழி கரைந்ததை எழுதி முடித்ததும் தான் உணர்வீர்களா?
அருள் வந்து சாமியாடும்போது தன்னை முற்றிலும் மறப்பதுபோல் எதுவும் இங்கு நடப்பதில்லை. நான் என்னைக் கதிராகவே உணர்ந்தபடிதான் எழுதுவேன். சில நேரங்களில் எழுதிக்கொண்டிருக்கும் பாத்திரத்தில் ஏறிக் கொண்டு, அதை உணர்ந்தபடி, ரசித்தபடி எழுதிவிட்டு, இறங்கிக் கொள்வதும் உண்டு.


5. எழுத்தாளர் பயிற்சியாளர் இதில் எந்த கதிரை தங்களுக்கு மிகவும் பிடிக்கும்? இவ்விரண்டில் எதையொன்றையாவது விடச்சொன்னால் எதை விடுவீர்கள்?
இரண்டுமே இரண்டு விதங்களில் பிடிக்கும். ஒன்று கலை, இன்னொன்று தொழில்.

இரண்டையும் நான் பிணைத்துக் கொள்வதில்லை. ஒருவேளை இரண்டில் ஒன்றை விடச் சொன்னால் ஏன் விடவேண்டுமென்று விளக்கம் கேட்பேன். அப்படிச் சொல்லப்படும் விளக்கத்திற்கு, மீண்டும் கேள்விகள் கேட்பேன். அதற்கு வரும் பதில்களுக்குள் மீண்டும் கேள்வி கேட்பேன். இது நிற்காது. சொன்னவர் சலித்துப் போய், ‘விடவேண்டுமென்று சொல்வதைகைவிடலாம்


6. தாங்கள் மிகவும் மனம் நெகிழ்ந்து, நிறைவாக உணர்ந்த ஒரு தருணம் எது?
பல தருணங்கள் உண்டு. எப்போதே எழுதி, முற்றிலுமாக மறந்திருக்கும் ஒரு சொற்றொடரை தன் வாழ்வின் மந்திரமாக வைத்திருக்கிறேன் என ஒருவர் சொல்லும் தருணங்களில். பயிலரங்குகள் சந்தித்து, காலம் கடந்தும் விடாப்பிடியாக தொடர்பில் வந்து, தம் தெளிவை, உயர்வை ஒருவர் அறிவிக்கும் தருணங்களில்.


7. எதன் பொருட்டு எழுத ஆரம்பித்தீர்கள்? எதை நோக்கி பயணப்பட விரும்பினீர்கள்? நீங்கள் விரும்பியதை அடைந்து விட்டீர்களா?
தமிழில் எழுதி, இணைய வலைப்பக்கத்தில் பகிரமுடியும் எனும் வாய்ப்பு கிடைத்ததால் மட்டுமே எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப நாட்களில் வலைப்பக்கத்தில் எப்படியாவது இருபத்து ஐந்து இடுகைகள் எழுதிவிட்டால் போதும் எனக் கருதினேன்.


8. பசங்களுடனான மறக்கமுடியாத ஒரு அனுபவம் சொல்லுங்களேன்?
கடந்த அக்டோபர் மாதம் மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் தனக்குப் பிடித்தவருக்கு ஒரு கடிதம் எழுதும் ஒரு பணியைக் கொடுத்து பத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியிருந்தேன். ஒரு மாணவி மட்டும் நேரம் போதாது என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்றுக்கொண்டு, விடாப்பிடியாக இரண்டாவது அமர்வின்போதும் தொடர்ந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை பக்கம் பக்கமாக எழுதியதோடு, நிகழ்வின் நிறைவில் தன் குடும்பத்தை நினைத்து அழுத காட்சி மறக்க முடியாத ஒன்று.


9. எழுத்தாளருக்கும் தம் ஒரு வாசகருக்குமான மறக்க முடியாத இனிப்பான, தருணம் பற்றிப் பகிருங்களேன்?
யாரையும் வாசகர் என்று கருதத் தோன்றியதில்லை, ஆகவே நானும் எழுத்தாளராய் என்னைக் கருத வேண்டி வருவதில்லை. எவரையும் நட்பாகக் கருதி இணைந்து பயணிப்பதால் கேள்வியில் எதிர்பார்த்த மறக்க முடியாத இனிப்பான தருணங்களை சற்று நீர்த்துவிடுவதற்கு நானே வாய்ப்புகள் கொடுத்துவிடுவேன்.


10. இன்றைக்கு எங்கு பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும்.. வாசிப்பு வாசிப்பு என்றும், வாசியுங்கள்... வாசியுங்கள்... என்பதுமான குரல் அதிகமாகக் கேட்கிறது. இதனால் என்ன பயன் வீட்டிற்கும் நாட்டிற்கும்? இதனால் ஏற்படும் மாற்றம் தான் என்ன?
புத்தகங்கள் வாசிப்பதால் பதிப்பகங்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், புத்தகத் திருவிழாக்கள் உயிர்ப்புடன் இருக்கும். வெறும் வாசியுங்கள் எனும் முழக்கம் ஒருகட்டத்தில் அலுப்பு ஏற்படுத்திவிடும். உண்மையில் வாசித்த அனுபவம், அதனால் ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தி வாசிப்பை ஊக்குவிப்பதே முக்கியத் தேவை. வாசிப்பதால் நிகழும் முதல் மாற்றம் அப்போதிருந்த மனநிலை மாறும். தொடர்ச்சியாக மேலும் சில மாற்றங்கள் மெல்ல மெல்ல விளையும்.


11. அன்றைய எழுத்தாளர் (ஜெயகாந்தன்) ஒருவருக்கு, ஒரு வாசகர் தட்டு நிறைய பணம் பவுன் கொடுக்க (உதவ) வந்ததாகவும், அதை மறுத்து விட்டதாகவும் அறிந்த போது வந்த ஒரு கேள்வி இது. இன்றைக்கும் அது மாதிரியான வாசகர்கள் இன்றைய எழுத்தாளர்களுக்கு கிடைக்கிறார்களா?
இருக்கிறார்கள். தட்டில் வைத்து தருகிறார்களா எனத் தெரியவில்லை, நெட்டில் அனுப்பும் கதைகள் கேட்டதுண்டு.


12. எழுத்தாளர் கதிர் ஏன் இன்னும் கதைகளை நாவல்களை எழுத ஆரம்பிக்கவில்லை?
சில சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். அடுத்த ஆண்டில் தொகுப்பாக வெளிவரும்.


13. சினிமாவிற்கு கதை எழுத விருப்பமா?
இதுவரை சினிமாவுக்கு என்று எழுதத் தோன்றியதில்லை. எழுதியதில் அல்லது இனி எழுதுவதில் ஏதாவது ஒன்று சினிமாவிற்கு பொருந்தினால் அந்த விருப்பம் வரலாம். விருப்பம் மட்டும் போதாது கடும் உழைப்பு தேவைப்படும்.


14. ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஒரு எழுத்தாளருக்கு தன் படைப்புக்கான வருமானமும் சன்மானமும் அண்டை மாநிலங்களைவிட மிகச் சொற்பமாகவே கிடைக்கிறது? அல்லது கொடுக்கிறார்கள்? இதை பற்றி ஒரு நாளாவது தாங்கள் யோசித்ததுண்டா?
அண்டை மாநிலங்களில் எப்படித் தருகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை எத்தனை சதவிகிதம், எழுத்தாளர்களை அறிந்திருப்போர் எண்ணிக்கை எத்தனை சதவிகிதம் என்பதையெல்லாம் அலசி விபரங்கள் அறிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.


15. ஒரு படைப்பிலக்கியம் எதிர்காலத்திற்கு, அச் சந்ததியினருக்கு எவ்வகையில் உதவும்? எவ்வகையில் உதவுவதாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ஏதோ ஒரு காலத்திய நிகழ்வுகளை, உணர்வுகளை, நிலைமைகளை இன்னொரு காலத்திற்கு கடத்தி உதவலாம்.


16. வேட்கையோடு விளையாடு பற்றிய தங்களின் சிறு குறிப்பு?
ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்


17. அனைத்து மொழி படங்களையும் பார்க்கும் போது, தமிழ் மொழியினை பற்றிய தங்களின் உணர்வு, நிலைப்பாடு எப்படியிருக்கும்? (இங்கு மொழி பற்றியே கேள்வி. கதை படம் பற்றியல்ல)
மலையாளம் ஓரளவு புரியும். இந்தி ஓரிரு சொற்கள் புரியும். எல்லாவற்றையும் சப்-டைட்டில்களோடு மட்டுமே பார்ப்பதால், ஆங்கிலத்தின் வழிதான் அந்தந்த மொழிகளை உணர்கிறேன், உள்வாங்குகிறேன். இறுதியாக எல்லாவற்றையும் தமிழ் மொழியிலேயே புரிந்து கொள்கிறேன்.

18. பிற எழுத்தாளருடனான நட்பு பற்றி சுருக்கமாச் சொல்லுங்களேன்.
சிலருடன் அறிமுகம், சிலருடன் மரியாதை, சிலருடன் ஆச்சரியம், பலருடன் பழக்கம் என்ற அளவில்தான் இருக்கின்றேன். மிகச் சிலருடன் நல்ல நட்பு உண்டு.


19. நாம நிறைய எழுத்தாளர்களைப் படிப்போம். பிடிக்கும்னும் சொல்லுவோம்.! ஆனா நா அவரோட எழுத்துக்கு பைத்தியம்னு யாரோ ஒருவரை அல்லது ஓரிருவரைத் தான் சொல்லுவோம். அப்படியாகத் தங்களை பாதித்தவர் யார்?
முதன்முதலில் அதாவது 1990களில் அப்படிப் பைத்தியமாக்கியவர் பாலகுமாரன். தற்போது ஒட்டுமொத்தமாக யாரும் பைத்தியமாக்கவில்லை. சில ஆக்கங்கள் கொஞ்சம் கிறுக்குப் பிடிக்க வைக்கும்.


20. ஈரோடு வாசல் இதுவரைக்குமான தம் சாதனையாக உணர்வது எது? ஆரம்பித்ததின் இலக்கு நோக்கிய பயண அனுபவங்கள் பற்றிய சுவாரசியமான (அ) கசப்பான அனுபவம் பற்றி பகிர முடியுமா?
சாதனை என்பது பெரும்பாலானோர் அது தனக்கான களம் என்று மனதாரக் கருதுவது.


படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். அது மிகச் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டமும் புதிய முயற்சிகளே. ஆகவே அவை தொடர்ந்து சுவாரஸ்யமூட்டுகின்றன.


மிகச் சொற்பமாக நிகழ்ந்த கசப்பான என்பதைவிட சவாலான அனுபவங்களை மனதிற்குள்கூட மீட்டுவதில்லை. ஆகவே பகிரவும் தேவையில்லை.


21. ஒரு படைப்பில் புனைவும் நிஜமும் எப்படி, எவ்விகிதத்தில் பிணைய வேண்டும்?
ஒவ்வொரு உணவு வகைக்கும் ஒவ்வொரு சேர்க்கையுண்டல்லவா. அது போன்றே படைப்பிற்கேற்ப விகிதங்கள் அமைவது சிறப்பு.


22. இத்தனை கேள்வியிலும் ஒன்றிரண்டுக்காவது தாங்கள் பதில் அளிக்கக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கிறதா?
இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் கேட்டிருந்த இந்த 22வது கேள்வி வரை பதில் கிடைத்த வகையில் உங்களுக்கு கிடைத்திருக்குமென நினைக்கின்றேன்.


குறிப்பு :
ஜெயலலிதா காளீஸ்வரன் : #வேட்கையோடு_விளையாடு தொகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுக்கும் தனித்தனியே தம் வாசிப்பு அனுபவத்தை எழுதியவர். புத்தகத்தில் அடங்கியிருந்த மொத்த சொற்கள் ஏறத்தாழ 20000 என்றால், அந்தக் கட்டுரைகளுக்காக அவர் எழுதிய அனுபவப் பகிர்வுகளில் இருக்கும் சொற்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12,000.

.


கொரானாவை வாழ வைப்பதா நம் இலக்கு!?


அதீத அச்சம் முதல் வித்தியாசமான வாய்ப்புகள் வரை  கொடுத்துள்ள கோவிட்-19 கிருமி பழைய சில சொற்களை புதிய வடிவில் பயன்பாட்டிற்கும் கொண்டு வந்துள்ளது. கோ கரோனா கோ தொடங்கி வீட்டிலிரு, விலகியிரு, சமூக இடைவெளி, புதிய இயல்பு வரை நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில் முக்கியமான ஒன்று கொரானாவுடன் வாழப் பழகுவோம்.

உலக சுகாதார நிறுவனம் என்ன அர்த்தத்தில் இதை அறிவுறுத்தியது என்பதைவிட, மக்கள் இதை எப்படி அணுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரே நாளில் நான்கு இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை என அறிவிக்கப்படும் தலைநகரில் வசிக்கும் ஒருவர்பார்லர் போய்ட்டு வந்துட்டேன்என செல்ஃபிகளைத் தோரணம் கட்ட, ’ஆஹா...ஓஹோ... அழகுஎனப் பின்னூட்டம் இட்ட பலருக்கும் கொரானாவுடன் வாழப் பழகிட்டோம்லஎன்று பதிலளித்துக்  கொண்டிருந்தார்.

நேற்று நடைப்பயிற்சி வழியின் மையத்தில் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள், சப்தமாகச் சிரித்தபடி சொன்னதும்கூடநாங்க கொரானாவோட வாழப் பழகிட்டிருக்கோம்என்பதுதான்.

என் அதிர்ச்சியெல்லாம் கண்ணுக்கே தெரியாத கொரானாவுடன் குடித்தனம் நடத்தும் அளவிற்கு, நம் அறிவும் கண்ணுக்கே தெரியாமல் சுருங்கியிருப்பதை நினைத்துத்தான். எப்போதுதான் நாம் எதையும் அதனதன் உண்மையான பொருளோடு புரிந்து கொண்டிருக்கின்றோம். வெறியூட்டும் உணர்வுப் பூர்வமாக அணுகுகின்றோம் அல்லது எல்லாவற்றையும் பகடி செய்து மழுங்கடிக்கின்றோம்.

முடிவெடுத்தல் மற்றும் மன அழுத்தம் தவிர்த்தல் ஆகியவை குறித்து உரையாடும்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்வது, ‘பிடிக்காத ஒன்றில் தொடர்ந்து இருக்க வேண்டாம்’. இருக்க வேண்டாம் என்றால் என்ன செய்வது? பிடித்த விதமாக மாற்றிக் கொள்வதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து பாருங்கள், அதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்காவிடில் அதைவிட்டு வெளியேறி விடுங்கள். ஒருவேளை சரி செய்யவும் இயலாது, வெளியேறவும் வாய்ப்பில்லை என்றால், ஏற்றுக்கொண்டு அதையே தொடருங்கள். மிக முக்கியமானது அப்படித் தொடர்வதாக முடிவெடுத்த பிறகு, அந்த நிலை குறித்து, புகார் எதுவுமின்றி தொடருங்கள் என்பதுதான்.

இதனை தற்போதைய சூழலுடன் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. நோய்த் தொற்று, வேலைதொழில் - வியாபார முடக்கம், பொருளாதார நெருக்கடிகள், எங்கும் போகமுடியாமல் முடங்கிக் கிடக்கும் நிலை. ஆழ்ந்து யோசித்தால் இந்த யாவுமே மனது மற்றும் உடலளவில் நெருக்கடிகளை, தாங்க முடியாமையைத் தொடர்ந்து திணிக்கின்றன. யாருக்கும் அதில் தொடர்ந்து நீடிக்கப் பிடிக்கவில்லை. அதிலிருந்து ஏதேனும் மாற்றங்களை உருவாக்க முடியுமா என்றால், அதற்கான வாய்ப்புகளும் அடைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

ஆகவே, நோய்த்தொற்று குறித்த அச்சம், தொழில் வேலை வாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, பொருளாதார நெருக்கடிகள், ஓடிக் கொண்டிருந்த பரபரப்பு வாழ்க்கையில் ஒட்டுமொத்த உள்ளிருப்பு முடக்கம் ஆகியவற்றில் உடனடியாக சரி செய்யக்கூடிய பெரும்பான்மையானவை நம் கட்டுப்பாட்டில் மட்டுமில்லை. இந்தச் சூழலில் நாம் செய்ய வேண்டியது, எது நெருக்கடியைக் கொடுத்ததோ, கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, இன்னும் கொடுக்குமோ அதை அவ்விதமே ஏற்றுக்கொள் என்பதையேவாழப் பழகிக் கொள்தல்எனக் கருதுகிறேன்.



அனைத்து முடக்கங்களின் பின்னாலும் பிரமாண்டமாய் நிற்கும் எவர் பார்வைக்கும் நேரடியாகத் தெரியாத நுண்கிருமி நமக்கு வேண்டாம்தான். வேண்டாததை வரவிடாமல் தடுக்க தடுப்பூசியும், நலமாக்க சரியான மருந்தும் இல்லை. அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளும் புதிய தன்மைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே பாதிப்புகளுக்குள் இரையாகாமல் வாழ்ந்துவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டுமே உரத்துச் சொல்வதுகொரானாவுடன் வாழப் பழகுங்கள்”. மீண்டும் சொல்கிறேன் அது கூடிக்குலாவி இணைந்து வாழ்வதல்ல. கிருமி இங்கே உலவிக் கொண்டிருந்தாலும், உரசிக் கொள்ளாமல், ஒட்டிக்கொள்ளாமல் ஒதுங்கியபடி வாழ்வதே வாழப் பழகுதல்.

உடல் உபாதைகள் இருந்தவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரை மட்டுமே வீழ்த்தும் என இதுவரை அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்று அறிகுறி துளியும் இல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கும் இளம் வயதினரையும் எளிதில் வீழ்த்துவதை அறிய நேர்கிறது. ஆனால் தொற்றிய அனைவரையும் அது வீழ்த்திவிடவில்லை. மிக மிக குறைந்த சதவிகிதம் மட்டுமே. வழக்கமான எந்த மரண எண்ணிக்கை சராசரியையும் இது தாண்டிவிடவில்லை.

அரசின் அறிவிப்புகள் முழுக்க உண்மையாகவும், முழுக்க பொய்யாகவும் இருக்க முடியாது. எந்த அடிப்படையில் இயங்குவது? அலையலையாக வரும் வதந்திகளை தெளிவாக ஒதுக்கி, உலகம் உள்ளங்கைக்குள் வசப்பட்டிருக்கும் இந்த நிலையில் சற்று மெனக்கெட்டால் ஓரளவு உண்மை மற்றும் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க முடியும்.

பாதுகாப்பாக இருப்பதென்பது முழுக்க வீட்டிலேயே முடங்கியிருத்தல் அல்ல. முடங்கியிருக்க வேண்டியதில்லை என்றால் உடனே அழகு நிலையத்திற்கும், நடைப்பயிற்சி தடத்தில் கூடிக் குலாவி அரட்டை அடிப்பதற்கும், வயல் வெளியை சமன் செய்து ஆயிரம் பேரை அழைத்து திருமணம் நடத்துவதும், பேருந்தில் நெருக்கியடித்துப் பயணம் செய்வதும் அல்ல.

முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஐநூறு என்றிருந்த தொற்று ஐந்தாம் கட்ட ஊரடங்கு என ஏறத்தாழ 90% தளர்த்தப்பட்டபோது இரண்டு லட்சத்தை நெருங்கியிருக்கின்றது. சாதாரண் சூழலில் அசாதாரணமாக முடங்கியிருந்த நாம், அசாதாரண சூழலில் சாதாரணமாக புழங்கத் தொடங்கிய முரண் தான் புரியவில்லை.  ஊரடங்கு நிரந்தரமாக நோய்த் தொற்றுக்கு வேலியோ, நமக்கு பாதுகாப்பு வலையத்தையோ அமைத்து தர முடியாது. அதுவொரு வாழ்க்கை முறையை பழக்கிக் கொடுத்தது, அவ்வளவே! வீட்டில் இரு, இருப்பதை வைத்து சமாளி, ஓடியோடி ஒன்றுகூடாதே, வெளியே செல்லாதே, தூய்மை பேணு, எதையும் தொடாதே, எவருடனும் நெருங்கி நிற்காதே, அனைவரையும் தொற்றுள்ளவராய் சந்தேகிக்கலாம் ஆனாலும் வெறுத்து ஒதுக்காதே உள்ளிட்ட பாடங்களைத்தான்.

இந்த நிலையில் தளர்வுகள் என்பது, எல்லாம் முடிந்துவிட்டது ஓடி வாருங்கள் ஒன்று கூடலாம் என்பதற்கல்ல. செயலிழந்து கிடைக்கும் சில துறைகளை காலத்தின் நியாயம் கருதி இயக்க வேண்டியிருக்கிறது, எனவே தகுந்த பாதுகாப்போடு அவற்றை நடைமுறைக்கு கொண்டு வருவதவற்கு ஒவ்வொருவரும் விலகியிருந்து ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமே தேவையேயன்றி, ஒன்றிணைவதன் மூலம் மிகப் பெரிய சிக்கல்களை வரவழைத்துக் கொள்வதல்ல.

கொரானா உலவும் சூழலில் நாமும் வாழப் பழகுவதுதான் தேவையே தவிர, கொரானாவை வாழ வைப்பது நம் இலக்காக இருக்க வேண்டாம்.

தமிழ் Quora : கேள்வி பதில்-1


தமிழ் Quora-வில் கணக்குத் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்ன செய்வதென்றும்கூட பெரிய புரிதல் இல்லை. எப்பொழுதாவது எட்டிப் பார்ப்பதுண்டு. இன்று அப்படி எட்டிப் பார்த்தபோது அங்கு பொதுவில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளும்... அதற்கான என்னுடைய அரியபதில்களும்...

மக்கள் ஏன் புகழுக்கு அடிமையாகிறார்கள்?

ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருப்பதை இயல்பான குணமாக வைத்திருக்கிறார்கள். அந்த ஏதோ ஒன்றில் புகழ் என்பது மிகவும் இனிப்பானது. மெல்லியதொரு போதையை நினைக்கும் கணம்தோறும் தந்து கொண்டேயிருப்பது. மீள முடியாத போதையாகவும் மாறிப்போயிருப்பது.

திருடன் மணியம் பிள்ளை புத்தகம் எப்படிபட்டது விமர்சனம் தாருங்கள்?

வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம். நல்லதொரு மொழிபெயர்ப்பு. ஒரு சாமானியனின் சாகசங்கள் என்பதாகத் தோன்றினாலும், ஒவ்வொரு சம்பவத்தில் இருந்தும் மிக நிச்சயமாக ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.

கிளைச்சிறையில் இருக்கும் கைதிகளிடம் பேச வேண்டிய தேவை ஏற்பட்டபோது, இந்தப் புத்தகத்தை வாசித்திருந்ததால், அவர்களைப் புரிந்து கொள்ள உதவியது. வாசிக்காமல் இருந்திருந்தால் கிளைச்சிறை கைதிகளை நான் மிகத் தவறாகவே அணுகியிருப்பேன்.

அண்மையில் உங்களை மனவேதனை அடைய செய்த செய்தி என்ன?

ஒருவன் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாய் வசை பாடுவது.
இதை வாசிக்கலாம்...

//கேரளாவில் ஊர் பக்கம் வந்த யானைக்கு ஒருவன் அன்னாசிப்பழத்தில் வெடி மருந்தை வைத்துக் கொடுக்க, அதைச் சாப்பிட முற்படும்போது வாயில் வெடித்து, அதன்பிறகு அது உணவெடுக்க முடியாமல், தண்ணீரில் நின்றபடியே உயிர் விட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது. அந்த யானை தாய்மையடைந்திருக்கின்றது.

மனிதனை நம்பிய பாவத்திற்கு, வாய் வெடித்து, சித்திரவதை அனுபவித்து, மரணத்திற்காக காத்திருந்து... என அந்த யானையின் ஒவ்வொரு தருணத்தையும் நினைக்கும்போது மனசு பதறுகிறது. சொல்லத் தெரியாத ஓர் இருண்மை சூழ்கிறது.

அதே நேரம், அந்த யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடி வைத்தவனை திட்டும் விதமாக ஒட்டுமொத்த மனித குலமே நாசமாகட்டும்என்கிற ரீதியில் சாடும் போக்கு ஆச்சரியம் தருகின்றது. கோடியில் ஒருவன் செய்துவிட்டால், அவனை, அவனையொத்தவனைப் பழிப்பதை விடுத்து ஒட்டுமொத்தமாய்ச் சாடுவதில் ஒருவித சுகம் இருக்கின்றது போலும்.

வெடி வைத்த கொடியவன் ஒரு மனிதன் என்றால், அந்த யானையின் மரணத்தை உலகிற்கு கொண்டு வந்த வனத்துறை அதிகாரி, அந்த யானையை, அது வாழ்ந்த இடத்திலேயே புதைக்க உதவியவர்கள், வழக்கு தொடர்ந்திருக்கும் காவல் அதிகாரி என அனைவரும் நாசமாகட்டும் எனும் மனித குலத்தின்அங்கமேதான்.

யோவ்... உணர்ச்சி வசப்பட்டு ரொம்ப சாபம் கொடுக்காதீங்கய்யா... ஏற்கனவே கொரானா, வெட்டுக்கிளினு திக் திக்னு இருக்கு!
//

சில மனிதர்கள் மிருகங்களிடம் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கின்றனர்?

மனிதனிடமிருக்கும் கீழ்மையான குணங்களில் தம்மைவிட எளியவரை ஏதோ ஒரு கணத்தில் வதைப்பதுவும் ஒன்று. அதை பல தருணங்களில் மனிதர்களிடமே காட்டுவார்கள்.

பாதுகாப்பான சூழலில் இருந்து விலங்குகளிடம் காட்டுவது எளிதானது. அப்படிச் செய்பவர்களை விலங்குகளால் அடையாளம் காட்ட முடியாது. அவை ஒன்று சேர்ந்து வந்து போராட்டம் செய்ய முடியாது உள்ளிட்ட பல காரணங்கள் அதில் உண்டு.

எனது வாழ்க்கையை மேம்படுத்த சுய உதவி புத்தகங்களை (self-help books) எவ்வாறு பயன்படுத்துவது?

அதில் இருக்கும் உண்மையான உதாரணங்கள் உங்களுக்குப் பயன்படலாம். உண்மையான உதாரணங்கள் தெளிவான, தீர்க்கமான நம்பிக்கையைத் தரும். அவற்றை உங்களின் இன்றைய நிலை மற்றும் எதிர்காலத் தேவையையொட்டி பொருத்திப் பார்க்கலாம்.
அதே சமயம், புத்தகத்தில் இருக்கும் அனைத்தும் உங்களுக்குப் பொருந்தாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்.

வாழ்க்கையில் மோசமான நேரங்களைக் கையாள்வதில் சிலருக்கு ஏன் சிரமங்கள் உள்ளன?

அந்த மோசமான நேரம் வாழ்வில் இதுவரை சந்திக்காத ஒன்றாக இருப்பதால் ஏற்படும் மிரட்சி.
அடுத்து அது 'நிம்மதி, நேரம், ஆற்றல், பொருளாதாரம், மகிழ்ச்சி' உள்ளிட்ட பலவற்றையும் விலையாகக் கேட்பதால், அவற்றைக் கொடுக்க முடியாமல் ஏற்படும் நிலைமையே சிரமமாகக் கருதப்படுகின்றன.

அனைத்தையும் இழந்து ஒருவனால் 30 வயதுக்குமேல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா?

எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு நிலையிலும் அனைத்தையும் இழந்து விடுவதில்லை.

இங்கே அனைத்தையும் இழந்து என்பது உறவுகள், புகழ், பொருளாதாரம் என்ற வட்டத்திற்குள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
இதை வாசிக்கலாம்...

//“ஊனம் என்பது மோசமான மனோபாவம் மட்டுமே

இதுவரை நிகழ்ந்தவைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், இதோ இந்தப் புள்ளியிலிருந்து இருப்பதை வைத்துத் துவங்குவோம். எல்லோருக்கும் அவர்களுக்கான மிச்சமிருக்கும் வாழ்க்கை இன்னும் வாழ்ந்து பார்க்கப்படாமலேயே இருக்கின்றது.

எவர் ஒருவர் தம்மிடம் இருக்கும் குறைகளையும் கடந்து, தம்மைக் கொண்டாடுகிறாரோ, அவரே நினைத்தவற்றை எட்டும் உரிமைகளைப் பெறுகிறார். சரி அப்படிக் கொண்டாட என்ன இருக்கிறதெனக் கேட்டால், தம்மிடம் இருக்கும் குணம், திறமை, திறன் ஆகிய ஒவ்வொன்றிலும் தலா மூன்றினைப் பட்டியலிட்டால் புரிந்து விடும்.

அப்படியொரு பட்டியலைத் தயாரிக்கும் தைரியம் வந்துவிட்டாலே வாழ்க்கையின் கடிவாளம் தம் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதென அர்த்தம். இது சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிதுதான். ஆனால் அப்படிப் பட்டியலிட மனதில் உரம், நிதானம், தெளிவு, ஆர்வம், நம்பிக்கை வேண்டும்.

வழங்கப்பட்டது எதுவாகினும் வாழ்ந்து காட்டுவேன் எனும் உறுதிகொண்டவர்களுக்கு, இந்த வாழ்க்கை என்பது கொண்டாட்டம் எனக் கருதுபவர்களுக்கு உரம், நிதானம், தெளிவு, ஆர்வம், நம்பிக்கை உள்ளிட்ட அனைத்துமே மிக எளிதில் கிட்டிவிடும்.

#வேட்கையோடு_விளையாடு புத்தகத்தில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளில் இதுவும் ஒன்று. கட்டுரையில் இருந்து ஒரு பகுதி...


//

எனக்கு
வயது 22, நிறைவான வாழ்க்கையை வாழ எனக்கு ஒரு அறிவுரை வழங்க முடியுமானால், அது என்னவாக இருக்கும்?

எது 'நிறைவுஎன்பதை முதலில் கண்டறிந்து விடுங்கள்.

நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை என்ன?

வாழ்தல் அறம்

*

தமிழ் Quora-வில் தொடர... https://ta.quora.com/profile/Erode-Kathir