இன்னும் என்னிடம் எனக்குப் பிடிக்காத பத்து


1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.


2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.

3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.


4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.


5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.


6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில வலைப்பூ புகழ்னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.


7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது பிடிக்கலை.

8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.


9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல வலைப்பூ சிங்கம்னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.


10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.


11. பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.


12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல மொக்கைனு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை

13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல

___________________________________

விடை தெரியாத கேள்விகள்

கோடை காலம் முடிந்தும் கொளுத்துகிறது வெயில். தார் சாலையில் பிரதிபலிக்கும் வெயிலில் கண்கள் கூசுகிறது. அரசு மருத்துவமனை சிக்னலில் பைக்கை நிறுத்துகிறேன். எனக்கு முன்னும் பின்னும் வாகனங்கள் நெருங்கி நிற்கின்றன. யாருக்கும் அந்த வெயிலில் நிற்க விருப்பமே இல்லை. சிக்னலில் இன்னும் பச்சை விழவில்லையே என்ற எரிச்சல் எண்ணையில் பொரியும் கடுகாய் எல்லோர மனதிலும் தெறிக்கிறது. வெயில் தலைவழியே உள்ளிறங்குகிறது. சிந்தனை ஒருமுகப்படாமல் சுழற்றி அடித்துக் கொண்டேயிருக்கிறது.

வலதுபுறமாய் சாலையின் நடுவே இருக்கும் சிறிய தடுப்பு சுவர் ஓரம் நிற்கிறேன். எனக்கு இடது புறம் ஒரு இன்னோவா கார் நிற்கிறது. கருப்பு தாள் ஒட்டப்படாத குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே ஒரு பெண் குழந்தை இருக்கை மேல் ஆடிக்கொண்டிருக்கிறது. நான் பார்ப்பதை கண்டு லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே தொடர்ந்து ஆடிக் கொண்டேயிருக்கிறது. என்னையறியாமல் என் உதடு புன்முறுவல் பூக்கிறது.

வலது புறச் சாலை காலியாக இருக்கிறது. சுமார் 13 வயதிருக்கும் ஒருபெண், வலது புறச்சாலையிலிருந்து தடுப்பு சுவர் தாண்டி என் பைக் முன் குதிக்கிறாள். அவளுடைய கோலத்தை பார்த்தவுடனே பளிச்சென தெரிகிறது அவள் பிச்சையெடுக்கும் பெண் என்று.

கையில் இருக்கும் சிறிய தகர டப்பாவை குலுக்குகிறாள். உடை மிக மோசமான அழுக்கோடு இருக்கிறது, குளித்தே ஓரிரு நாட்கள் இருக்கலாம். தலை முடி மிக மோசமாக பிசுக்கேறி சிக்குபிடித்திருக்கிறது. அணிந்திருக்கும் உடை தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு அழுக்கேறியிருக்கிறது. கால்களில் செருப்பு கிடையாது.

இடது புறம் காருக்குள் விளையாடிய குழந்தையும், வெயிலில் சலனமின்றி பிச்சை எடுக்கும் பெண்ணும் தராசுத் தட்டில் மேலும் கீழும் ஊஞ்சல் ஆடுவதுபோல் உணர்கிறேன்.

அதிக பட்சம் 2 நிமிடம் நிற்க வேண்டிய எனக்கே அந்த வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. எப்படி அவளால் தாங்க முடிகிறது. கொதிக்கும் தார் சாலை அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.....

என் மனதிற்குள் ஏதேதேதோ ஓடுகிறது. காசு போடலாமா, வேண்டாமா என மனதில் ஒரு ஊசலாட்டம். மேல் சட்டைப்பையில் இருந்த ஒரு நாணயத்தை எடுத்து போடுகிறேன். பின்னால் நிற்பவர் ‘இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று சலித்துக் கொள்வது கேட்கிறது. அவர் என்னை சொன்னாரா? அல்லது அந்த பிச்சைக்கார பெண்ணை சொன்னாரா? என தெரியவில்லை, திரும்பி பார்க்கிறேன் அவர் நான் திரும்புவதை உணர்ந்து வேகமாய் என்னை பார்ப்பதை தவிர்க்க வேறு பக்கம் பார்ப்பதாய் எனக்கு தொன்றுகிறது.

சிக்னலில் பச்சை விழுகிறது, தலையில் இறங்கிய வெயிலை விட மனது புழுங்குகிறது. முந்தைய நாள் பள்ளியில் தன் புத்தகத்தை காணவில்லையென ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் போனில் அழுத போது, அந்த அழுகைக்கு நான் துடித்தது நினைவிற்கு வருகிறது.


சில கேள்விகள் மனதிற்குள் உறுத்த ஆரம்பிக்கிறது. . . . . ..

• எதன் பொருட்டு இவளை அவளுடைய பெற்றோர் பெற்றெடுத்திருப்பர்.

• பிச்சையெடுக்கும் தொழில் மட்டுமே இவளுடைய எதிர்காலத்தை தீர்மானித்துவிடுமா?

• இவள் குழந்தையாய் கருவுற இவளுடைய தாயும், தந்தையும் காதலோடு கலவியில் ஈடுபட்டிருப்பார்களா? அல்லது வெறும் காமத்தின் எச்சிலா?

• இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்...... ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா?

• என்னுடைய கடமை ஒரு சில்லறைக் காசைப் போட்டுவிட்டு, வார்த்தைகளைத் தேடி வலைத்தளத்தில் எழுதி விட்டு பின்னூட்டத்திற்கு
காத்திருப்பதா?

விடை தெரியாத கேள்விகள் மனதிற்குள் பாரமாய் சுருண்டு கிடக்கிறது.

__________________________________________

இப்படியும்


என்றோவரும் மழை ஏமாறாதிருக்க
உயிரைக் கையில் பிடித்து
ஒற்றைப் பனை


*

நெருப்பாய் வெயில்
வெந்து விழுகிறது நிழல்
எப்போதும் குளிர்ச்சியாய்


 **


யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்


 ***


இளமை நீர்க்கும் மீசையில்
தேடி வெட்டும் வெள்ளையோடு
தேடாமலே கறுப்பாய் சிலவும்

****

நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!

ரோட்ல எப்ப வண்டில போனாலும், எதுத்தாப்ல வர்ற பெரீபெரீய் வண்டிக்கெல்லாம் பயப்படறதவுட, ரெம்பப் பயப்படறது ரெண்டு டைப்பு ஆளுகளுக்குத்தானுங்க....

அதுல ஒருத்தரு பாத்தீங்னா....

அவுரு பாட்டுக்கு முன்னால புர்ர்ர்ர்ர்ர்.........னு போயிக்கிட்ருப்பாரு, அந்தாளுக்கு பொறத்திக்காண்ட, ஊட்டுப்பிரச்சன, ஊர்ப் பிரச்சனைனு எதையோன்னு நெனைச்சிக்கிட்டு செவனேன்னு போய்க்கிட்டிருப்போம், திடீர்னு ராத்திரி கெனாக்கண்டு விலுக்குனு திரும்பி படுக்கறாப்ள, நெனைச்ச பக்கம், ஒரு கைய ஆட்டிக்கிட்டே வண்டிய திருப்புவாரு பாருங்க.....

ஹ்ஹ்ஹும்ம்.... எங்க போய் பாக்குறது, அய்யோன்னு அலறியடிச்சு எங்கியாவது நொடிச்சோ, இல்ல அந்தாளு மேல இடிச்சோ, கீழவுழுந்து..... போன வேகத்துல, சறுக்கியுட்ட நாய் மாதர, தரதரன்னு இழுத்துட்டு போய், எது மேலையாவாது முட்டி மோதி, மூஞ்சி மொவறையெல்லாம் ஒடைச்சிக்கிட்டு, கண்ணு முழிச்சு கொஞ்ச நஞ்ச தெம்பு கிம்பு இருந்து, முன்னால போன கெனாவுல முழிச்ச மாதிரி விலுக்குனு திரும்புனவன பார்த்தம்னாக்க, சொல்லுவாம்ம்ம்ம்ம்ம்பாருங்க “நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”

அடுத்து இவுங்க ஒரு டைப்பு இருக்றாங்க...

இந்தாளுக, ரோட்ல ஒரு பக்கத்துலருந்து இன்னோரு பக்கம் போவோனும்னு முடிவு பண்ணீட்டாங்னா, ரோட்ல கீட்ல வண்டி எதுனாச்சும் பக்கத்துல வருதா, இல்ல தூரத்துல வருதானெல்லாம் பாக்கமாட்டாங்க.

இவிய கிராஸ் பண்ணோணும்னு முடிவு பண்ணீட்டா ஒருத்தனும் ரோட்ல வண்டீல வரமாட்டங்களாம் அல்லது வரப்படாதாமா. என்ன பண்ணுவாங்னு பாத்தீங்னா, பிரிவு ரோட்ல நிக்கிற போலீசுக்காரய்யா கையக்காட்ற மாதர, இவிய சோத்தாங்கைய சைடுல தூக்கி காட்டிட்டே, பெரிய ஜம்பமா, தெனாவெட்டா அவங்கபாட்ல போவாங்க. இருக்கிற பிரச்சனையில, அடிக்கிற வெயில்ல இந்த ஆளுக கை காட்டுனத, நம்ம வண்டீல கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பிரேக்கு கட்ட தானாவே கணிச்சு வண்டிய நிறுத்திறனுமாம்.

அப்படிக்கிப்பிடி நிக்காட்டி, பைக்காயிருந்தா நாமலும் உழுந்து பல்ல ஒடைச்சிக்கோணும்.  அதே காரு, வேனுன்னா... அந்த ஆளுக்கு சங்கு ஊதிருவாங்க.

ஒரு வேள, நல்லநேரம் ஒன்னும் நடக்காமையோ அல்லது ஏதாச்சும் நடந்தோ பொறவோ அந்த ஆளப் பார்த்தோம்னா, சொல்லுவாம்பாருங்க...  “நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”

”அடப் பாழாப் போறவனே, நீ பொசுக்கு கையக் காட்டுனா, எம்பட வண்டி எப்படிய்ய்யா நிக்கும்?

நீ காட்ற கைய, எம்பட கண்ணு பாத்து, அது மூளைக்குச் சொல்லி, தீவாளிக்குத் தீவாளி காத்தால பதனோரு மணிக்கு, கருத்த ஆளு ஒருத்தரு பல்லு மட்டும் வெள்ளவெளேர்னு, நெம்ப கிண்டலும் கேலியுமா பேசுவாறே, அது மாதர.......

எம்பட மூளை அய்யோ அம்மான்னு பதறிப்போயி பிரேக்க புடிக்கலாமா, இல்ல............. படுவா ராஸ்கோல, அடிச்சு தூக்கிறாலாமன்னு ஒரு பஞ்சாயத்த வச்சு,....

ம்ம் ச்ச்சேரி எதுக்குடா வம்பு, செய்கூலி சேதரம்மெல்லா வேண்டாம்னு பயத்துல பிரேக்க அமுத்துடான்னு காலுக்கோ, கையிக்கோ சொன்ன பொறவுதானே, வண்டி நிக்கும்”னு சொல்ல நெனைக்கறத வழக்கம்போல சொல்லாமையே

“ம்ம்ம்.. என்னமோ போ.... நல்லாருந்து தொலை”ன்னு வாழ்த்திப்போட்டு(!!!) வேற வழியில்லாம கம்முனு போறதுதான் நல்லதுன்னு ஊருக்குள்ளே சொல்லிக்கிறாங்க.

__________________________________________

கரிய தினத்தைக் கடந்து போகிறேன் கனத்த மனதோடு


சென்ற ஆண்டின் இதே மே மாதத்தில் தான்....

தமிழகத்திலும் இந்தியாவிலும் எல்லாக் கட்சிகளும், வாக்குறுதிகளை வாரி வழங்கி வாக்குகளைப் பெற்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தங்களுக்கான இடங்களை தக்க வைக்க போராடி, வெற்றி தோல்விகளின் விகிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்திய தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் வாய் பிளந்து பார்க்கும், தேசத்தின் விடிவெள்ளிகளான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், தேசத்தின் பொதுத் தேர்தலில் கூட வாக்களிக்காமல், (உள்நாட்டில் பாதுகாப்பு கொடுக்க மறுத்த அரசுக்கு சவாலாக)) வெளிநாட்டில் சென்று ஐபிஎல் விளையாட்டுப் போட்டியில் கலந்து தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில்...

இந்த தமிழ் தேசத்தின் கூப்பிடு தூரத்தில் இருக்கும் ஈழத்தில் புலிகளை அழிக்கிறேன் என்ற போர்வையில், ஒரு இனத்தையே கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி, சில(??) நாடுகளின் வியாபார தந்திரத்தோடு கை கோர்த்து, பல லட்சம் உயிர்களைக் குடித்து மிகக் கொடூரமானதொரு இன அழிப்பை, மிக வெற்றிகரமாக கோரப் பற்களில் வழியும் இரத்ததோடு இலங்கையின் கொடிய அரசு நிறைவேற்றியது.

ஆறு கோடிக்கும் மேல் வசிக்கும் தமிழர் இனத்தில் மிகமிகக் குறைந்த சதவிகித மக்கள்தான் அந்த கொடிய இன அழிப்பு குறித்து துடித்துத் துவண்டு, அழுது, ஆர்பரித்து தங்கள் சோகத்தை கரைத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு இன அழிப்புக்கு எதிராக, உலகம் அதிரக் குரல் கொடுக்க வேண்டிய ஒட்டு மொத்த தமிழகத் தமிழர்களிடம் ஒரு அடர்த்தியான மௌனம் பாசிபிடித்து படிந்து கிடந்தது. ஒத்த சிந்தனையும், ஈழத்தின் மேல் பற்றும், ஈழத்தமிழர்கள் மேல் அக்கறையும் கொண்டிருந்த நண்பர்கள் மட்டும் இணையங்களிலும், பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தேடித் தேடி ஒரேயொரு நல்ல செய்தி கிடைக்காத என்று மனதில் வலியோடு, மிகப் பெரிய பயம் கவ்வ பார்த்துக்கொண்டிருந்த காலத்தில்….

புலிகள் இயக்கத்திலிருந்து “இனி எங்கள் துப்பாக்கிகள் மௌனிக்கும்என்ற செய்தி வந்ததாக தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்த, கொடிய அந்த மே 18 திங்கட்கிழமையின் விடியலிலிருந்தே மிக மோசமான கெட்ட செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சரணடையச் சென்ற போது புலிகள் இயக்கத்தின் மிக முக்கியத் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக, அந்தத் தலைவர்களின் உடல்களும் காட்டப்பட, விரக்தியான மனநிலையில் அங்கே செத்தொழிந்து கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நடுங்கும் மனதோடு இணையத்தில் புதுசுபுதுசாய் விழுந்து கொண்டிருந்த இரத்தக் கவிச்சை வழியும் படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது “டேய் பிரபாகரனை போட்டுத் தள்ளிட்டாங்களாம், டிவியில் காட்றாங்கஎன்று ரோட்டில் போகும் ஒருவன், யாரிடமோ எக்காளமாக போனில் பேசிக் கொண்டு போனதை கேட்ட விநாடிதான், வாழ்நாளின் மிகக் கொடிய விநாடி. அதை நினைக்கும் போதெல்லாம், இப்போதும் கூட அந்தக் கோரக்குரல் என்னுள் ஒலித்து ஒரு கணம் உடலை நடுங்க வைக்கிறது.

உண்மையாக இருக்கக் கூடாதே என்று இணையத்திலும், தொலைக் காட்சிகளிலும் தேடித் தேடிக் களைத்து, துவண்டு அந்த நாளைக் கடத்துவதே நரகமாக இருந்தது. ஈழம் வேண்டிப் போராடிய புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. நச்சுக்குண்டுக்கும், பாஸ்பரஸ் குண்டுக்கும் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்து கிடக்கும் சக தமிழனின் உடலை இணைய வழிப்புகைப் படங்களில் பார்த்த வேதனை ஒட்டு மொத்தமாக சுழற்றியடித்தது, எல்லாம் ஒரு கொடுங்கனவாய் இருந்து விடக் கூடாதா என மனம் ஏங்கித் தவித்தது. முதல் நாள் விமானத்திலிருந்து இறங்கி மண்ணை மண்டியிட்டு வணங்கிய ராஜபக்சேவின் புகைப் படத்தை மனது அடிக்கடி நினைத்துப் பார்த்து, நடந்ததெல்லாம் நிஜமாகத்தான் இருக்குமோ என்ற பயம் கூடுதலாய் மனதை அலைக்கழித்தது. சவக்களையோடு முகம் இருந்ததை பார்த்தவர்களெல்லாம் என்ன ஆச்சு எனக் கேட்டபோது குரல் உயர்த்தி கோபத்தோடு ஒன்னுமில்லை என உரக்கப் பேசியது மட்டும் நினைவிலிருக்கிறது. உள்ளுக்குள் கோபமும், இயலாமையும், அழுகையுமான ஒரு வலி மிகுந்த, அதுவரை உணராத ஒரு தோற்றுப் போன மனநிலை.


துவண்டு கிடந்த மனது நாட்கள் நகர, வாரங்கள் கழிய, மாதங்கள் முடிய கொஞ்சம் கொஞ்சமாக நிலைபெறத் துவங்கியது. ஆனாலும் மனது முழுக்க வலியும், அனாதைகளாக்கப்பட்ட சக மனிதனுக்கு கிடைக்காத நீதி மேல் ஒன்றும் செய்ய கையாலாகாத கடும் கோபமும் தளும்பிக் கொண்டிருந்தது. அதே நேரம், ஆறு கோடிப் பேருக்கும் மேல் வசிக்கும் இந்த தமிழகத்தின் ஒட்டு மொத்த தமிழர்கள், இன உணர்வோடு ஒன்று திரண்டிருந்தால் மிக நிச்சயமாக அந்த இன அழிப்பை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்க முடியாது என்பதும் புரிந்தது.

மக்களை ஒன்று திரட்ட விடாமல், இந்தியாவின் அத்தனை ஊடகங்களும், அத்தனை அரசியல் அமைப்புகளும் ஒட்டு மொத்தமாக பார்த்துக் கொண்டன, அதில் வெற்றியும் கண்டன. ஈழம் தொடர்பான அத்தனை நிகழ்வுகளிலும் தமிழக அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள துடித்தனர். யார் செத்தால் என்ன, தான் எதைச் சொன்னால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

தனித் தமிழ் ஈழத்திற்கான நீண்ட போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், முழுக்க முழுக்க இன அழிப்பு போராட்டமாக மாற்றி கொன்று குவிக்கப்பட்ட மனித உயிர்கள் பற்றி, மூன்றாவது தெருவில் சாக்கடை அடைப்பு என்பது போல் மிகச் சாதரணமான் செய்திகள் போல், தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி ஊடகங்கள் இருட்டிப்பு செய்தன. பத்திரிக்கைகள் புலிகள் இயக்கத் தலைவர்கள் குறித்து காற்றில் வந்த செய்திகளை அனைத்தையும் இடவலமாக மாற்றி மாற்றி, புதிய புகைப்படங்களை வடிவமைத்து கணினி வடிவாக்கங்களோடு வாரந்தோறும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தங்கள் வியாபாரத்தை மிக நேர்த்தியாக, எதிர் பாராத அளவில் பெருக்கிக் கொண்டனர். சில எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் ஈழத்தின் தோல்வி மற்றும் பாதிக்கப்பட்ட மனித அவலங்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு பல வழிகளில் பணம் ஈட்டினர். இதில் அனைவரின் நோக்கமும் பணம் சார்ந்த வியாபாரம் மற்றும் அரசியல் என்பதாகவே இருந்தது.

அதே நேரத்தில் உண்மையான இன உணர்வோடு, சகமனிதனுக்காக கண்ணீர் விட்ட, ஏதாவது செய்ய நினைத்த தமிழர்களும் இருக்கவே செய்தார்கள், துரதிருஷ்டவசமாக மிகக் குறைந்த தொகையில்.

மக்கள் தொடர்ந்து அறிவு பெறாதவர்களாகவே வைத்திருக்க பார்த்துக் கொள்ளப்பட்டனர். நம்பி வாசிப்பவர்களை வகை தொகையின்றி பொய்யான, கற்பனை செய்திகளை வெளியிட்டு தங்கள் வியாபாரத்தை கவனமாக பார்த்துக் கொண்ட ஊடகங்கள், போர் முடிவுக்குப் பின் முள் வேலிகளில் விலங்குகளை விட மிக மோசமாக அடைக்கப் பட்ட மனித சமூகம் பற்றி, ஒட்டு மொத்தமாக மறக்கடிக்கும் பணியில் மிகத் தெளிவாக தங்கள் பயணத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு இனத்தின் போராட்டத்தை, இன அழிப்புப் போராக மாற்றி, வெற்றி கண்ட இந்தக் கரிய தினத்தில்...


கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும், தெரியாமலும் தங்கள் உயிரை, உறுப்புகளை, கற்பை, உறவுகளை, உடமைகளை இழந்த அத்தனை ஆத்மாக்களிடமும், கையலாகத்தனம் மிகுந்த சக தமிழனாக மானசீகமாக மன்னிப்புக் கோரி, உயிர் துறந்த ஆத்மாக்கள் அமைதி அடைய மனமுருக வேண்டி, என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.

______________________________________

பகிர்தல் (17.05.2010)



துண்டுச் சீட்டு

தனியார் பள்ளிகள் புத்திசாலித்தனமாக, அடுத்த ஆண்டின் முதல் பருவக் கட்டணத்திற்கான ஓலை கொடுத்து, அதற்கான கெடு விதித்து பல பெற்றோர்களை ஏற்கனவே பணம் செலுத்த வைத்துவிட்டன. இந்நிலையில் தமிழக அரசு, இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும் என புதிய கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய கல்விக் கட்டணத்தை அறிவிக்கவிருந்த அரசாங்கம், தாங்கள் அறிவிக்கும் வரை, எந்த பள்ளிகளும் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று ஆணையை ஏன் பிறப்பிக்கவில்லை?. கட்டணத்தை வாங்கிய பள்ளிகள் நிச்சயமாக தாங்கள் வசூலித்த அதிக கட்டணத்தை திருப்பித் தருவார்களா? இன்னும் சில பள்ளிகளில் செலுத்தும் கட்டணத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ரசீதும், மீதித் தொகைக்கு துண்டுச் சீட்டும் தருவார்களாம்.


ஈர்க்கும் வெள்ளை

தமிழனால் கோயில் கட்டிக் கும்பிடப்பட்ட அந்த நடிகை, வண்ணமயமாக, ஆளும்கட்சியில் இணைந்த கையோடு, அமைச்சர்கள் முன்னிலையில் அளித்த பேட்டியை ஆங்கிலத்தில் வழங்கி பெருமைப் படுத்தினார். செம்மொழி மாநாடு குறித்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசும் போதும் கூட ஆங்கிலத்தை மிக அதிக அளவில் பார்க்க முடிகிறது. வெள்ளத் தோலுனாலும் சரி, வெள்ளக்காரன் மொழியினாலும் சரி ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது போலும்.


படியும் கரி

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துரையாடும் போது, ஒரு போக்குவரத்துக் காவலர் சொன்ன வலியான செய்தி நெரிசல் மிகுந்த சந்திப்பில், பகல் நேரங்களில் பணியாற்றிவிட்டு ஓய்வறைக்குச் சென்று ஒரு வெள்ளைக் காகிதத்தை விரித்து, சட்டையைக் கழற்றி உதறினால், காகிதத்தில் கரித்துகள்கள் படிவதை கண்கூடாக பார்க்க முடியும், அந்தக் கரித்துகளையே நாங்கள் தினம் தோறும் பல மணிநேரம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

கொதிக்கும் கோடையின் மதியங்களில் அலையலையாய் அடிக்கும் வெப்ப அலையில் காய்ந்து கருகும், போக்குவரத்துக் காவலர்களைக் காணும் பொழுதெல்லாம் கண்ணுக்குள் அந்த கரித்துகள்கள் உதிர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

அழகும், அழுக்கும்

கோவை நோக்கும் அனைத்துச் சாலைகளில் புத்தம் புதிய தாழ்தள அரசுப் பேருந்துகளும், மரங்களை சிரைத்து மொட்டையடிக்கப்பட்ட நகர சாலைகளும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டிய புதிய அடையாளங்களாக  கோவையில் மாறியிருக்கின்றன.
அதிக குழந்தைகளின் தவிர்க்க முடியாத புகலிடமாகப் போன ஆங்கிலப் பள்ளிகளில், குழந்தைகள் தாய் மொழி தமிழில் பேசுவது குற்றம் என தண்டனை வழங்கப்பட்டு வரும் நேரத்தில், நகரையும், பேருந்தையும் இன்னபிறவற்றையும் அழகு படுத்த பலகோடி செலவு செய்து ஒரு மாநாட்டை நடத்துவது மட்டும் தாய்மொழி மீது புதிய ஆர்வத்தை எப்படி ஊட்டும் எனத் தெரியவில்லை.

 

இளவேனில் - வலைப்பக்கம்

வலிமையாக, அழுத்தமா மனதில் பதியும் வண்ணம் தனது இளவேனில்.. வலைப்பக்கத்தில் எழுதிவருபவர் பதிவர் தமிழ்நதி. சமீபத்தில் அவர் எழுதிய காணக் கிடைக்காத யாழ்ப்பாணம் படித்த பின், அதிலிருந்து மீண்டு வர நெடு நேரம் ஆனது. அன்னிய வாசம் படியும் யாழ்பாணத்திற்குச் சென்று வந்த அனுபவத்தை வலியோடு பதிவு செய்திருக்கிறார். வாசிக்க வாசிக்க மனம் கனத்தது.

கதறியழும் போது சிந்தும் கண்ணீர்த் துளியை படம் பிடிப்பவனாய் அந்த எழுத்தையும் மனசு வலியோடு ரசித்தாலும், தொடர்ந்து ஒரு வலியை மனதிற்குள் தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றது அந்த இடுகை

________________________________

இயல்பு…. இன்மை

இறுகப் பூட்டிய மனதை
எளிதாய்த் திறக்கிறது மழலை
சிந்தும் ஒற்றைப்புன்னகை


****


அக்னி சிரித்த மூங்கில் காட்டில்
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
புல்லாங்குழல் தேடும் காற்று


****

செருப்பில்லாதவன் பாதம்
பசியாறுகிறது தார்சாலையில்
வழியும் வெயில் குழம்பில்

________________________

விபத்துகளும், விளங்காத பாடங்களும்


ரவு ஒன்பதரை மணி, அடங்காத நகரத்தைக் கடந்து, அந்த சாலை வழியாக சென்று கொண்டிருந்தேன். அந்தக் குறிப்பிட்ட ஊரைத் தாண்டி சில நூறு அடிகள் கடந்திருப்பேன், சாலையின் இடது பாதியில், வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் தேங்கிக் கிடந்தன, வாகனம் எதுவுமில்லாமல் வலது பக்க சாலை காலியாக இருக்க, நான்கைந்து வாகனங்களைக் கடந்த போது அந்த நகரப் பேருந்து ஒரு பக்கமாக திரும்பி, தாறுமாறாக நின்று கொண்டிருந்தது.

வலது பக்க இருளில் பரபரப்பான மக்கள் கூட்டம், கடக்கும் போது “ஓய்எனக் கூச்சல், வேகத்தை முற்றிலும் மட்டுப்படுத்தி என்ன ஆச்சு என்று கேட்க, பேருந்து மோதியதில் பைக்கில் வந்த இருவர் இறந்து விட்டதாக சொன்னார்கள். விபத்து நடந்து ஓரிரு நிமிடங்கள்தான் இருக்க வேண்டும். அடிபட்டவர்கள் தெரிந்தவர்களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தில் வண்டியை கொஞ்சம் தள்ளி நிறுத்திவிட்டு இறங்கி வந்தேன்.

கொதிப்போடு ஒரு கூட்டம், பேருந்து ஓட்டுனரை உலகத்தில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் திட்டிக் கொண்டிருந்தது. பேருந்து காலியாக இருந்தது. நடத்துனர்கள் இருவரையும், பயணிகளையும் காணவில்லை. ஓட்டுனர் மட்டும் பதட்டத்தோடு, ஸ்டியரிங்கை இறுகப் பற்றி வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அருகில் உள்ள குடியிருப்பைச் சார்ந்த இளைஞர் படை நிறைய மதுவாசனையோடு ஓட்டுனரை டேய் இறங்குடா கீழே உன்னைக் கொல்லாம விடப்போறதில்லைஎன உருட்டி மிரட்டி கீழே இழுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. ஓட்டுனர் பக்க கதவை தட்டுவதும், கல்லை எடுத்து பக்கவாட்டு கண்ணாடிகளில் குத்துவதுமாக தறிகெட்டுப்போயிருந்தது கூட்டம். அந்த கூட்டத்தில் பெரும்பாலான நபர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்ற நிலை புரியாத போதையில் இருப்பதையும் உணர முடிந்தது.

அதற்குள் அருகிலிருந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வர, அடிபட்டுக் கிடந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்ற முயற்சி செய்யும் போதுதான் தெரிந்தது, இரண்டு பேரிடமும் லேசான அசைவு இருப்பது. மனது திக்கென்றது. அடிபட்டுக் கிடந்தவர்களை இறந்துவிட்டதாக சட்டென முடிவு செய்து, உயிர் இருக்கின்றதா என பரிசோதித்து தூக்குவதற்குக் கூட முயற்சி செய்யாத கும்பல் பேருந்து ஓட்டுனரை தாக்குவதில்தான் கவனம் செலுத்தியது. அடிபட்ட நபர்கள் யாரென்று தெரியுமா என்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.

ஆம்புலன்ஸ் சென்ற பின், மொத்தக் கூட்டமும் மீண்டும் ஓட்டுனர் பக்கம் திரும்பியது. ஓட்டுனரை கீழே இறங்கச் சொல்லி தொடர்ந்து கூச்சலிட்டது. ஓட்டுனர் கீழே இறங்கினால் எலும்புகூட மிஞ்சாது என்று அனைவருக்கும் தெரியும். என்ன கூச்சலிட்டும் இறங்காத ஓட்டுனர் மேல் சில வீரர்களுக்கு(!!!) கோவம் பொங்கி வர பேருந்திற்குள் ஏறி அடிக்கத் துவங்கினர். ஒருவன் உதைத்ததில் முன்பக்க கண்ணாடி முழுதாக கழன்று கீழே விழுந்து நொறுங்கியது. அருகிலிருந்த குடியிருப்பு பெண்கள் ஓடிவந்து “போக்கத்த நாயே போலுசு வந்தா, தெண்டமழுவறது ஆரு என்று தங்கள் கணவன், பிள்ளைகளைத் திட்டி வீட்டுக்கு இழுத்துச்செல்ல முயற்சி செய்தனர்.

அதற்குள் 108 ஆம்புலன்ஸ் வர கூட்டம் அங்கே திரும்பி, அவசரம்னு கூப்பிட்டா செத்த பொறவுதான் வருவியாடா என அந்த ஓட்டுனரிடம் சண்டை போட ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் ஏய்... போலீஸ்டோய் என்ற குரல் வர, வீரர் மறவர் கூட்டம் வழக்கம்போல் இருந்த இடம் தெரியவில்லை.

*****

விபத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும், அது முழுக்க முழுக்க, பேருந்தின் கட்டுக்கடங்கா வேகத்தின் காரணமாக நிகழ்ந்திருக்கிறதென்று. இது போல் தினம் தினம் சாலைகள் தோறும் தவறாமல் விபத்துகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

நெருங்கிய வட்டத்தில் நிகழும் இழப்பு மட்டும் இழப்பாகத் தோன்றுவதும், நமக்குத் தொடர்பில்லாத நபர்கள் சந்திக்கும் விபத்துகள் வெறும் செய்தியாக மட்டுமே நமக்குப் படுவதும் இயல்பாகிப் போய் விட்டது. விபத்தில் மரணங்களின் எண்ணைக்கையில் சுவாரசியம் கூடவோ குறையவோ செய்வதைத் தவிர அந்த செய்திகள் எந்தவொரு படிப்பினையும் கொடுக்கவில்லை.

அந்த விபத்தில், அடிபட்ட இரண்டு மனிதர்களின் குடும்பங்களையும் நினைக்கும் போது, ஒரு கனம் மனம் ஆடிப்போகின்றது. ஒருவேளை அந்த நபர்கள் இறந்து போகும் பட்சத்தில், அதுவரை இயல்பாக போய்க்கொண்டிருந்த அந்த குடும்பம் சிதைந்து சீரழிந்து மீண்டு வருவதே பெரும்பாடாகப் போய்விடும். இறந்தவர்களின் இழப்பை எதைக் கொண்டு நிரப்ப முடியும். இறந்தவர்கள்தான் குடும்பத்தின் பொருளாதார ஊற்றாக இருந்தால், அடுத்த மாத செலவுகளை அந்த குடும்பம் எப்படி சமாளிக்கும் என எண்ணற்ற கேள்விகள் மனதிற்குள் குடைய ஆரம்பித்தன.

*****

விபத்து நடந்த இடத்தில், முழுக்க முழுக்க பேருந்து ஓட்டுனரை மட்டுமே குறை சொல்லி தாக்க முற்பட்ட வீரம் மிகுந்த அந்தக் குழுவிற்கு, இரண்டு பேர் அடிபட்டுவிட்டார்களே என்ற கவலை பெரிதும் காரணமாக இருந்ததாகத் தெரியவில்லை. இதற்கு முன், தாங்கள் கை காட்டியபோது நிற்காமல் போன பேருந்து, சில்லறை இல்லாததிற்கு திட்டிய நடத்துனர், சாலைகளில் மோதுவது போல் உரசிச் சென்ற பேருந்து என சில பல காரணங்கள் ஒன்று கூடி ஒரு வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்த தூண்டியிருக்கிருக்கலாம். ஓட்டுனரை அடிக்க துடித்த, பேருந்து கண்ணாடியை கல்லில் அடித்த ஒருவன் கூட அடிபட்டுக் கிடந்தவன் என்ன நிலையில் கிடக்கிறான் என்று பார்க்க தயாரில்லை. தன்னுடைய எதிர்ப்பை மட்டுமே காட்ட நினைத்து, அடிப்படை மனித நேயத்தைக் காட்ட மறந்து போனான்.

*****

கர்புறங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் கணிசமான விபத்துக்களை ஏற்படுத்துவது தனியார் பேருந்துகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதே சமயம் அந்த ஓட்டுநர்களின் பாவப்பட்ட பிழைப்பின் மறுபக்கம் பரிதாபமானதுதான்.

எல்லாப் பேருந்துகளுக்கும் ஒரு இடத்தில் புறப்பட்டு மற்ற இடத்தை அடைய குறிப்பிட்ட நேரக் கெடு இருப்பதை அறிவோம். இந்தப் பயண நேரம் நிர்ணயிக்கப்பட்டது, குறைந்த பட்சம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து 18 கிலோமீட்டர் கொண்ட இரு நகரங்களுக்கான பயண நேரம் 60 நிமிடங்கள். இந்த நேரம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அந்தப் பேருந்து நின்று சென்ற, பேருந்து நிறுத்தங்கள் பத்துகூட இருந்திருக்காது. ஆனால் தற்பொழுது அதே நகரப் பேருந்து, குறைந்த பட்சம் முப்பது இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டியிருக்கிறது. முப்பது வருடங்களுக்கும் முன்பு பயண நேரம் நிர்ணயித்த காலத்தில் இருந்த வாகனங்களைவிட, இன்று சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும், நெரிசலும் பல மடங்கு அதிகம்.

ஒருவகையில் பேருந்துகளின் தரம் மேம்படுத்தப் பட்டிருப்பதால், நிறுத்தங்களில் செலவிடும் நேரத்தை வேகத்தின் மூலம் சரிகட்டுகின்றனர். அரசுப் பேருந்துகளுக்கு வசூல் பற்றிய அழுத்தம் இல்லாததால் அவை மிதமான வேகத்தில் சில நிறுத்தங்களில் நிறுத்தாமல் கூட சென்றுவிட முடிகிறது. தனியார் பேருந்துகளில் நிலவும் போட்டியும், வசூல் குறையும் பட்சத்தில் முதலாளிகளின் விரட்டலும், ஒரு பேருந்து ஓட்டுனரை தறிகெட்டு ஓட்ட வைக்கிறது. எங்கள் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நகரப் பேருந்தைப் பற்றிச் சொல்லும் போது “அந்த வண்டிக்கு ட்ரைவரா போயிட்டா ஒன்னுக்கிருக்கக்கூட நேரம் கிடைக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்த தறிகெட்ட வேகம் குறித்து, தனியார் பேருந்து முதலாளிகளுக்கு சற்றும் கவலையில்லை, உயிரைப் பணயம் வைத்து, பலசமயம் உயிரைப் பறித்து தினம்தினம் வயிற்றுப் பிழைப்பிற்காக ஓ(ட்)டிக் கொண்டேயிருப்பவர்கள் ஓட்டுனர்கள்தான். பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பேருந்து ஓட்டுனர் அடிக்கடி வண்டியில ஏறின பிறகு, இறங்கி வந்தாத்தான் நிஜம் என்பார்.

*****

வீறு கொண்டு பேருந்தையும், ஓட்டுனரையும் தாக்கியவர்களின் கோபம் அடுத்த சில மணி நேரங்களில் அடங்கிப்போய் விட்டது, அடுத்த ஓரிரு நாளில் அந்தப் பேருந்து புதிதாய் கண்ணாடி அணிந்து கொண்டு மாற்று ஓட்டுனரோடு தன் பயணத்தைத் துவங்கிவிட்டது. அன்று அடிக்கத் துடித்த வீரர் படை அதே பேருந்தில், படியில் தொங்கிக் கொண்டு, புதுப்பாட்டு போடுங்கண்ணா என்ற கூச்சலோடு, ஓடும் பாட்டுக்கு ஏற்றார் போல தலையசைத்துக் கொண்டு தன் வழியில் பயணப் பட்டுக் கொண்டிருக்கிறது.
 
எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. சாலைகள் தோறும் எமன் அடங்காப் பசியோடு அமர்ந்து கொண்டிருப்பது உட்பட.




*****

மூன்று முடிச்சு

ரெல்லாம் ஒரே பேச்சு, எங்கும் நடக்காத அதிசயம். இப்படியும் நடக்குமா? என ஆளாளுக்கு பேசிக்கொண்டார்கள். அந்தச் செயல் ஒவ்வொரு பகுதியாக பரவிக் கொண்டேயிருந்தது. அந்தச் செய்தியை காசாக்க ஊடகங்கள் போட்டி போட்டன. 

அந்த நகரத்தின் தலைவரிடம் அந்த செய்தி உண்மையா எனக் கேட்ட போது, ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், ஆனால் உண்மைதானா என உறுதியாகத் தெரியவில்லை என்றார். 

அந்த வீதியில் இருக்கும் மற்ற மனிதர்களிடம் விசாரித்த போது அவர்களும் அது உண்மை போல்தான் தோன்றுகிறது என்றார்கள். 

கடைசியா அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணை விசாரித்த போது ஆமாம் உண்மைதான் என ஒப்புக்கொண்டார். 

அந்த செய்தி “ஒரு பெண் நாயை திருமணம் செய்து கொண்டார்” என்பதே.. 

ஆச்சரியுமும் அதிர்ச்சியும் தாக்க அந்த பெண்ணிடமே “இது உனக்கே நல்லாயிருக்கா?, போயும் போயும் ஒரு நாயைக் கல்யாணம் பண்ணியிருக்கியே, அப்படி என்னதான் காரணம் ஒரு நாயைக் கல்யாணம் செய்ய?என கேட்டார்கள். 

அமைதியான, அழுத்தமான புன்னகையோடு காரணங்களைச் சொன்னாள் அந்த பெண்மணி......


* நான் திருமண செய்த நாளன்று இந்த நாய் எப்படி அன்பாக வாலாட்டியதோ, அது போலவே, வாழ்நாள் முழுதும் என்னிடம் வாலாட்டிக் கொண்டிருக்கும்.

* எந்த உணவைப் போட்டாமலும் லொள்ளு பேசாமல் சாப்பிட்டுக் கொள்ளும், தினமும் ஒரே உணவைப் போடுகிறாயே என்றோ, ஏன் அத சமைக்கலை, இத சமைக்கலை என்று ஒரு போதும் சண்டைக்கு வராது


* தண்ணியடித்து விட்டு, ஃபுல் மப்பில், இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஒரு போதும் கதவைத்தட்டாது.


பொறுப்பி: சொந்தச் சரக்கல்ல, ஒரு கூட்டத்தில் கேட்ட மொழிமாற்றுக்கதை. 
__________________________________________________

மறதி?

வரிவரியாய் வழியும் வெயில் குளம்பில்
வறண்டு கிடக்கும் வெற்று நிலத்தில்
உயிர்த்துளியாய் சொட்டும் மழையின்
முதல்த் துளியில் பிறக்கும் மண்வாசம்

ஊருக்குத் தெற்கே அத்திப்பழம்,
பொறுக்கப்போகும் ஓடைக் கரையோரம்
பச்சைப்பாம்புகள் பாதுகாப்பில்
பறிக்காமல் கிடக்கும் தாழம்பூ வாசம்

தடுமாற்றத் தோரணங்கள் அணிவகுக்க
துவண்டுகிடக்கும் கனமான நேரங்களில்
தத்திவந்து தோள் பற்றும் மழலையிடம்
பூத்துக்கிடக்கும் பால்வாசம்

நெரிசல் பிணைந்த சாலையில்
எரிச்சலோடு நகரும் வேளையில்
சட்டென கடக்கும் யுவதியின் கூந்தல்
வழியவிடும் மல்லிகை வாசம்

எந்த வாசனை பிடிக்கும் எனக்கேட்ட
பிள்ளையிடம் பட்டியல் இட்டேன்
ஏனோ சொல்ல மறந்தேன், மறுத்தேன்
பாட்டியின் மடி வாசனையை

_____________________________

பகிர்தல் (03.05.2010)


விவசாயம்:
வெயில் வெளுத்துக் கொண்டிருந்தாலும் கிராமங்களும் அதைச் சார்ந்த விவசாய பூமிகளும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கின்றன. கிணறுகள் இல்லா விவசாய பூமிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும், கிணறுகளைக் கொண்ட நிலங்கள் கொண்ட விவசாயிகள் கரும்பு, மஞ்சள் என மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். கரும்பு டன் ரூபாய் ஆயிரத்து எழுநூற்றம்பது, மஞ்சள் மூட்டை பதினான்காயிரம் என சற்றே நெஞ்சு நிமிர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சுவாரஸ்யமான தகவல் ஆங்காங்கே விவசாய பூமிகள் வீட்டு மனையாக்கப்பட்டு வரும் நிலையிலும், விவசாயம் சார்ந்த மக்கள் விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சொந்த நிலமில்லாதவர்கள் மற்றவர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயம் செய்ய குத்தகைக்கு நிலம் கிடைக்கவில்லை என்பதுதான் எங்கள் ஊர் பகுதியில் பலருக்கு வருத்தம்

தலைக்கவசம்:
விபத்தில் அடிபட்ட நண்பனை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றேன். கல்லூரிகால நட்பு, இன்றும் நெருங்கிய நண்பன், சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்குள் விளையாட்டும் சண்டையுமாகவே இருக்கும், பார்ப்பவரெல்லாம் எங்களை கிண்டலடிப்பார்கள். இரவு பத்தரை மணிக்கு பெருந்துறை சாலையில் ஈஸ்வரமூர்த்தி மஹாலில் இருந்து கிளம்பி சாலையை கடந்திருக்கிறான், ஏதோ வாகனத்தின் வெளிச்சம் தன் மேல் அதிகம் படுவதாக உணர்ந்த விநாடி ஒரு பேருந்து அடித்து தூக்கியிருக்கிறது. இவன் தூக்கி எறியப்பட்டிருக்கிறான். சுமார் இருநூறு அடி பைக்கை இழுத்துச்சென்ற பேருந்தின் ஒரு வழியாக நின்ற போது, பேருந்தின் ஒரு சக்கரம் பைக்மேல் ஏறி நின்றிருந்திருக்கிறது. உடலில் ஆங்காங்கே நிறைய காயம், தலையின் பின்பக்கம் 12 தையல் முன்பக்கம் 7 தையல் என என் நண்பனைப் பார்க்க வேதனையாக இருந்தது. மீண்டு வர இன்னும் சில மாதங்கள் ஆகும். கிளம்பும் போது சீக்கிரம் வாடா எனக்கு சண்டைபோட ஆள் வேணும் என்றபோது அவனுடைய மனைவி அத்தனை வருத்தத்திலும் சிரித்தார்கள். இந்த பாழாய்போன சட்டம் கடுமையாக இருந்திருந்தால் கட்டாயத்தின் பேரிலாவது இவன் தலைக்கவசத்தை அணிந்திருந்திருப்பானோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

சலிப்பு :
தமிழகத்திற்கு தரவேண்டிய அரிசியின் அளவைக் கூட்டவும், மாநாட்டுக்கு அழைக்கவும் என முதல்வரின் டெல்லிப் பயணம் புளித்துப்போன ஆச்சர்யம். தலை போகும் அவசரங்களுக்குக்கூட தந்தியும், கடிதமும் அனுப்புபவர், தன் கட்சி மந்திரிகளைக் காக்க, மேலும் ஒருமுறை டெல்லி விரைந்திருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. மொழியின் சாவும், அதையொட்டிய இன உணர்வின்  சாவும் ஆள்பவர்களுக்கு காலம் காலமாய் வசதியாகவே இருக்கின்றது.

ஆச்சர்யம்:
நேற்று ஊரில், உறவினர் வீட்டில் சாப்பிடும் போது, கொஞ்சம் தயக்கத்தோடு அந்த சோற்றினை இலையில் வைத்தார்கள். சோறு கேரளாவில் பயன்படுத்தும் அரிசி போல் கொஞ்சம் குண்டாக இருந்தது, அதே நேரம் பொன்னி அரிசி சோற்றைவிட சுவையாக இருந்தது. என்ன அரிசியென்று கேட்டேன் கொஞ்சம் வெட்கத்தோடு சொன்னார்கள், ஒரு ரூபாய் ரேசன் அரிசியென்று. ஆச்சர்யமாக இருந்தது, இவ்வளவு நல்ல அரிசியா என்று. இதனால்தான் ரேசன் அரிசியை இவ்வளவு தூரம் கடத்துகிறார்களா எனவும் தோன்றியது. அங்கிருந்த புறப்பட்டு வரும்போது அரிசிக்கடை நண்பரை அழைத்து பொன்னி அரிசி என்ன விலை கேட்டேன் கிலோ 38 ரூபாயாம்.

____________________________

வெட்க வாசனை


இரவு இரண்டு மணி, ஒருவழியாய் வேலையை முடித்துவிட்டு அலுத்துப்போய் கிளம்பினான் இவன். வழக்கத்திற்கு மாறாய் நான்கு உதை சேர்த்து வாங்கிய பைக்கை விர்ர்ர்ரென விரட்டினான். மதியத்தில் பரபரக்கும் சாலை, குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தது.

நீண்ட நெடும் பயணத்திற்குப் பின் ஜி.எச். நிறுத்தத்தில் அவனை துப்பிவிட்டு போன பேருந்து கக்கிவிட்டுச் சென்ற புகை மட்டும் வாசனையாக மிஞ்சி நின்றது. ஆள் அரவம், ஆட்டோகூட இல்லை. மூனு கிலோ மீட்டர் நடக்கனுமே. முதுகை அழுத்திய பையோடு பெருந்துறை சாலையில் நடக்கத் துவங்கினான் .

இவன் ஜி.எச் கடக்கும் போது, பேண்ட் சர்ட், பேக், ஷூ என லிப்ட் கேட்பவனை ஏனோ தவிர்க்கத் தோணவில்லை. வண்டியை நிறுத்தி, விரைப்பாய் புருவம் உயர்த்தினான்.

சார்! டீச்சர்ஸ் காலனி வரைக்கும்

……ம்

இரண்டு மணி இரவும் கூட கசகசப்பாகவே இருந்தது.

பர்சில் இருந்த இருபத்திநாலாயிரமும், கழுத்தில் கிடக்கும் ஐந்து பவுன் செயினும், அவன் மேல் இனம்புரியா சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி மனதைப் புரட்டியது. அஞ்சு பவுன்னா... அறுபதுக்கு மேல வருமே... கத்தி, எய்ட்ஸ் ஊசி என என்னென்னவோ ஞாபகம் வர வண்டியை வேகமாக முறுக்கினான் இவன்.

இப்படி முறுக்குறானே வண்டியை, நடந்தே போயிருக்கலாமோ, அவசரப்பட்டு ஏறிட்டமோ, வசூல் பணம் நாற்பத்தியேழாயிரமும், காஸ்ட்லி போனும் அடிவயிற்றில் உருவமில்லா ஒரு காற்று உருண்டையை புரள விட்டது. ஓடும் வண்டியில் இருந்து எட்டிக் குதித்து, குட்டிக்கரணம் போட்டு தப்பிப்பது போல் மின்னலாய் ஒரு சினிமாத்தன கற்பனையோடியது அவன் மனதில்.

கேம்.எம்.சி.ஹெச், ரவி தியேட்டர், பழமுதிர்நிலையம், லோட்டஸ் ஷாப்பிங்... கடக்கக் கடக்க மனதில் எதுவோ கரைந்தது.

கலெக்டர் ஆபீஸ் தாண்டும் போது, கொஞ்சம் தெம்பு கூடியது.

“எங்க எறங்கனும்

“டீச்சர்ஸ் காலணி ஸ்டாப்ல விடுங்க சார்

“நான் உள்ளதாம் போறேன்

“அப்ப உள்ளேயே விடுங்க சார்

எந்த வீதி

“சார் தண்ணி டேங்கிட்ட

“தண்ணி டேங்கிட்ட எங்க

“இன்ஸ்பெக்டரம்மா அபார்ட்மெண்ட்ல, நாலாவது மாடி மேல இருக்கிற ரூம் சார்

இறக்கிவிட்டுவிட்டு, ஒட்டியிருந்த அபார்ட்மெண்ட்க்குள் வண்டியை நிறுத்தினான் இவன்.

அந்த வீதி முழுக்க ஏனோ வெட்க வாசனை காற்றில் அடித்தது.

______________________________________________