அவங்களாப் பெத்தாங்க....!


நேற்று பகல் முழுவதும் சேலத்தில் ஆறு மிக முக்கியமான சந்திப்புகள், நீள் உரையாடல்கள். அதன்பின் ஒரு திருமண வரவேற்பில் அவசரமாக கலந்து கொண்டுவிட்டு, அடித்துப் பிடித்து அங்கிருந்து நாமக்கல்லிற்கு விரைந்து, டாடா மோட்டார்ஸ் வழங்கும் கல்வி ஊக்கத்தொகை நிகழ்வில் உரை.

வண்டியிலிருந்து இறங்கிய வேகத்தில் அரங்கிற்குள் ஓட, நான் வந்ததை அறிந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அந்த நொடியே பேச அழைக்க.... ஒரே ஒரு நிமிடம்கூட சுதாரிக்க அவகாசமில்லாத நிலை.

பெற்றோர், பிள்ளைகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இருக்கும்அரங்கு என்பது மட்டுமே மனதில் இருந்தது. நாள் முழுக்க அலைந்து மிக அவசரமாக பயணித்து வந்ததால் மனதிற்குள் தயாரித்து வைத்திருந்தவை யாவும் கலைந்து போயிருந்தன.
ஆனாலும் சமீபத்தில் ஹலோ எஃப்.எம் பேட்டியில் குறிப்பிட்டிருந்த இன்றைய மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்என்பதில் துவங்கி நூல் பிடித்தேன். என்னளவில் எனக்கு சற்று திருப்தி தராத சமாளிப்பு உரைதான் என்றாலும். பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது.

கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு நிகழ்வுகள் நிறைவடைந்ததும், உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் ஓடி வந்து, “அங்கிள் ஒரு செஃல்பி எடுத்துக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

கண்ணு எந்த க்ளாஸ் படிக்கிறே!

லெவன்த் அங்கிள்

எந்த ஸ்கூல்?”

இப்ப ________ ஸ்கூலில் படிக்கிறேன்

இப்ப இந்த ஸ்கூல்னா... புரியலையே!

அதையேன் கேக்குறீங்க. நான் படிக்காத ஸ்கூலே இல்ல!

அந்தப் பெண் அவ்வளவாக படிப்பு வராத மாணவியாக இருக்க முடியாது. முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்களுக்கே, இந்தக் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுவதால், அவள் நன்கு படிக்கும் மாணவியாகத்தான் இருக்க வேண்டும்.

ஏம்மா அத்தன ஸ்கூல்!?”

எனக்கென்ன தெரியும் அங்கிள், அவங்களாப் பெத்தாங்க, அவங்களா இங்க படி, அங்க படினு மாத்துனாங்க! அவங்களா அது படி, இது படினு சொல்றாங்க

ஒரு பெண் எங்கள் அருகில் புன்னகைத்தபடி வந்தார். இதா... எங்கம்மாக்கு நானு சி.ஏ தான் படிச்சே ஆவனுமாம்குழந்தைத்தனம் மாறாத அந்தப் பெண் சிரித்தபடியேதான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அம்மாவைப் பார்த்து ஏனுங்க... நீங்க சி.ஏ படிக்க ஆசைப்பட்டிருந்தீங்களாக்கும்!என்றேன்

மென்மையான வெட்கத்தோடு ஆமாங் சார்.... அதான் பாப்பாவையாச்சும் படிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா இன்னிக்கு உங்க பேச்சு கேட்டதும் மாத்திக்கிட்டேன், இனிமே அப்படி சொல்லப் போறதில்ல. நல்லாப் படிக்கிறவதான். அவ இஷ்டத்துக்குப் படிக்கட்டும்னு விட்றப்போறேன்என்றதும், அந்த மகள் அம்மாவை தாவியணைத்தபடி அம்மா.... நெசமாத்தான் சொல்றியா!என ஆச்சரியத்தில் இறுக்கிக் கொண்டிருந்தாள்.

மீண்டதும் அந்தப் பெண்ணோடு உரையாடல் தொடர்ந்தது.

சரிம்மா... செஃல்பி எடுத்துக்க, ஆனா நான் அழகாத் தெரியனும்என்றேன்.

அங்கிள் நீங்க அழகு அங்கிள்!என்றபடி என்னருகில் நெருங்கி, பதின் வயதுப் பெண்கள் செல்ஃபி எடுக்கும்போது செய்வதுபோலவே, ஒரு மாதிரி கண்களைச் சுருக்கி, உதடு இறுக்கி சுழித்தபடியே படம் எடுத்தாள்.

பாருங்க அங்கிள் சூப்பரா இருக்கீங்க!என என்னிடம் காட்டினாள். காலையில் இருந்து கழுவாத முகம் என்னுடையது. உண்மையில் அந்தப் பெண் மிக மிக அழகாக அந்தப் படத்தில் தெரிந்தாள்.

அலைச்சல், பதட்டம், விரைந்த பயணம், அவகாசமின்றி ஏறிய மேடை, மேடையில் எனக்கிருந்த திருப்தியின்மை ஆகியவையெல்லாம் காணாமல் போய், என்னவோ தெளிவாக, அமைதியாக, நிதானமாக குறிப்பாக நிறைவாக இருப்பதுபோல் அந்தப் படத்தில் நான் தெரிந்தேன்.