இறக்கி வைக்கும் கணம்


விடியல் மிகப் பிடித்தமான ஒன்றெனக்கு. காலை 4.57க்கே விழிப்பு வந்துவிட்டது. அப்படியே உருண்டபடி கை பேசி வழியே உலகத்தோடு உறவாடிவிட்டு, எழுந்து பல் துலக்கி தொலைக்காட்சியை முடுக்கியபோது வாசிக்கலாமே எனத் தோன்றியது. பின்னர் படித்துக்கொள்ளலாம் என அவ்வப்போது மடிக்கனிணியில் சேமித்து வைக்கப்பட்டதில் தொடங்க விரும்பினேன்.

இதுதான் என்றில்லாமல் எதையாவது படிப்போம் எனச் சொடுக்கினேன். வண்ணதாசனின் “தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள்” சிறுகதை திரையில் நிரம்புகிறது. வாசிக்க வாசிக்க அந்த காந்தி டீச்சர் மனதுக்குள் நிரம்புகிறார். யானை கண்டு மிரளும் நமசு.... காந்தி டீச்சர் என அழைக்கும் நமசு அப்பா, காந்தி டீச்சர் வீட்டில் மறந்தும்கூட டீச்சர் என அழைக்காமல் காந்தி என்றே அழைப்பது. ஒரு இக்கட்டான தருணத்தில் நமசுவின் அக்கா சரசு காந்தி டீச்சர் வீட்டிலிருந்து வெங்காயச் சருகு புடவையோடு வருவதும், ஊஞ்சலில் தன் அப்பா அணைப்பில் சரசு சுருளும் தருணத்தில், சாப்பிடுகிற கையோடு நமசு அம்மா காந்தி டீச்சர் மடியில் படுத்து அழுவதுமென நெகிழ்ந்து குழைய எத்தனையெத்தனை தருணங்கள் அந்தக் கதையில். முடித்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சோடு இலக்கற்று வெறித்துக் கொண்டிருக்கிறேன்.

படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும் தம்பியின் மகள் உருண்டு காலைத் தூக்கி என் மகள் மேல் போட்டுக்கொள்கிறாள். முந்திய இரவு தம்பி மகள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. இன்னும் மழலை இழையோடும் குரலில் மெல்லிய குரலில் அருகில் படுத்திருந்தோரிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு விட்டுவிட்டுக் கேட்டது. கதை கேட்டவர்கள் வெடித்துச் சிரித்து அவள் சொன்ன கதையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். வெட்கத்தில் தலையணைக்குள் புதைந்துகொண்டாள்.

கதை வேறொன்றுமில்லை ”ஒரு ஊரில் பூசணிச் செடி ஒன்று இருக்கிறது. அந்த வழியாக பாரி மன்னன் தேரில் போகிறான். போகும்போது பூசணிச் செடி தளதளப்பாய் இருக்கிறது. பாரி மன்னன் போய்விட்டு திரும்பிவரும்போது பூசணிச் செடி வாடிப்போய்விடுகிறது. அதைப் பார்த்த பாரி மன்னன் தேரை அந்த பூசணிச் செடிக்கு கொடுத்துவிட்டு பஸ் பிடிச்சு ஊருக்கு வந்துவிடுகிறான்”.

காபி கொண்டு வந்த மனைவியிடம், ”பாவம் அந்த பூசணிச் செடி, பாவிப்பய பாரி மன்னன் தேர் கொடுத்ததுக்குப் பதிலா ஒரு போர் போட்டுக் கொடுத்திருக்கலாம்” எனச் சொல்கிறேன். கதை நினைவுக்கு வர உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மெல்லமாய் தலை கலைத்து முத்திவிட்டுச் செல்கிறார். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைவிட பூசணிச் செடிக்குத் தேர் கொடுக்குமாறு பாரியைப் பணிய வைத்தவளின் பெருங்கருணை மகிழ்ச்சியளிக்கிறது.

காந்தி டீச்சரிடமிருந்து மெல்லிய தலையசைப்பில் விடைபெற்று அடுத்த சுட்டியைச் சொடுக்குகிறேன். அதுவும் வண்ணதாசன் கதை. ஏற்கனவே நெகிழ்ந்திருக்கும் நான் இன்னும் நெகிழ்ந்துபோகத் தயாரில்லை. வேறு எதாச்சும் தேடலாமா என நினைக்கிறேன். இல்லை… வாசி என வண்ணதாசன் இழுக்கிறார். எப்படி இந்த மனிதனுக்கு மட்டும் இப்படிப்பட்ட மனிதர்கள் வாய்க்கிறார்கள். ஒவ்வொருமுறை அவருடைய கதை வாசிக்கும்போது, அதில் நான் அவரையும் தேடுவேன். இதில் யாராக இந்த மனுசன் இருப்பாரெனத் தேடுவேன்.

ஒரு பறவையின் வாழ்வு. பால்காரர் என நினைத்துக் கதவு திறக்கும் நீலாவுக்கு முன் இரு கைகளையும் அணைத்துக்கொள்ளும் ஆவலோடு விரித்து நிற்கும் ஜானகி நிற்கிறாள். அவளோடு நாமும் அந்த வீட்டுக்குள் நுழைகிறோம். சுந்தரம், சீலன் என எல்லோரையும் ஆச்சரியமாய்ப் பார்க்கிறோம். அந்தக் கடிதம் சுமந்து வரும் சேதிகளின் கனம் எப்படி நம்மை மட்டும் அழுத்தாமல் விட்டு வைக்கும். அந்த இறகு மனதை வருடிக் கொண்டேயிருக்கிறது. பயந்ததுபோலவே மனதை நெகிழ்த்தவும், கனத்துப்போகவும் செய்துவிடுகிறார் வண்ணதாசன்.

வண்ணதாசனின் மனிதர்கள் மட்டும் கூடுதல் ஈரத்தோடே இருப்பதாக உணர்கிறேன். எப்போது வாசித்தாலும் அவரின் கதை மாந்தர்களில் ஒருவராய் நாம் மாறிவிடயியலுமா என நினைப்பதைத் தவிர்க்க முடிவதில்லை.

நேரம் கரைகிறது. மகள் ஓடி வந்து ஏதோ ஒன்றைச் செய்து வைத்திருப்பதாகவும் அதை உடனே பார்த்தாகவேண்டுமென்று இழுத்துச் செல்கிறாள். ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி மூன்று காசுகளை வைத்து அதன் மேல் நீரோடு கவிழ்த்து வைத்து தம்பி மகளிடம் எதோ வித்தை காட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். எனக்கும் விளக்குகிறாள். புரிந்த மாதிரி தலையாட்டுகிறேன். சற்று நேரம் கழித்து இன்னும் சற்று மெனக்கெட்டு புரிந்து கொண்டிருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எத்தனையெத்தனை நிகழ்வுகளை புரிந்தும் புரியாமலும் கடந்துபோக இப்போதிருக்கும் காலம் நம்மை பழக்கிவைத்து விட்டது.

அலுவலக வாயிலில் நின்று சாலையை நோக்கிக்கொண்டிருக்கிறேன். வழக்கத்தை விட மனது நெகிழ்ந்திருக்கிறது. நேராக வந்த கார் ஒன்று வலது ஓரமாக ஒதுங்கிறது. பின்னால் வந்த பைக் நபர் தடக்கெனத் தடுமாறி நிற்கிறார். பக்கவாட்டில் வந்து கார்காரரைக் கண்டபடி திட்டுகிறார். கை காட்டாமலோ விளக்குப் போடாமலோ திரும்பிவிட்டார் போலும். நொடிப்பொழுது நிகழ்வுதான். இத்தனைக்கும் மெதுவாக வந்த கார்தான். அத்தனை திட்டுமளவிற்கான பெரிய குற்றமில்லையென என் புத்தி நினைக்கிறது. திட்டும் நபருக்கு விடியலிலிருந்து சேர்ந்த வேறு காரணங்களும் இருக்கலாம். முன் இடது பக்க இருக்கையில் இருக்கும் சிறுமி அதிர்ந்து போய் பைக் ஆளைப் பார்க்கிறாள். பைக் ஆள் நகரும் வரை ஒருவரும் இறங்கவில்லை. 
கதவைத் திறந்துகொண்டு சிறுமி முதலில் இறங்குகிறாள். அவள் முகம் இருண்டிருக்கிறது. ஓட்டுனர் இருக்கையிலிருந்து முதிர் இளவயது நபர் இறங்கிறார். அப்பட்டமான கிராமத்து நபராய்த் தெரிகிறார். சிறுமி கண்ணாடி மூடப்பட்ட பின்பக்கக் கதவைத் திறந்துவிடுகிறாள். ஒரு பாட்டி வயிறு புடைத்த வயர் கூடையோடு இறங்குகிறார். முன்பக்கக் கதவு கண்ணாடியை காலை உதைந்துகொடுத்துக்கொண்டு ஏற்றுகிறாள். அவர் பாட்டியிமிருந்து பையை வாங்கிக்கொள்கிறார். பையில் பிளாஸ்க் ஒன்று நீட்டிக்கொண்டிருக்கிறது. புரிந்துவிட்டது, அருகிலுள்ள மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அநேகமாக அந்தச் சிறுமியின் அம்மாவுக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கலாம், இவர்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்திருக்கிறார்கள் என நானாக கற்பனை செய்துகொள்கிறேன். கற்பனையிலும் கூட ஒரு குழந்தைப் பிறப்பையே மனம் நினைக்க விழைகிறது. ஒருவேளை அந்தச் சிறுமியின் தாய் வேறு ஏதாவது காரணத்திற்காகவும் கூட மருத்துவமனையில் இருக்கலாம். இந்த கற்பனைகளுக்கு அடங்காத ஏதாவது ஒன்றாகவும் அல்லது அப்படி எதுவுமே இல்லாமலும் கூட இருக்கலாம்.

வண்ணதாசனின் பாத்திரங்கள் விடைபெற இந்த மூவரும் மனதில் இடம் பிடித்துக்கொண்டார்கள். அந்த நபர் திட்டிவிட்டுச் சென்றதை அந்தச் சிறுமி, அந்த நபர், அந்த பாட்டி மூவரும் இந்த தினத்தின் எந்தக் கணத்தில் இறக்கி வைப்பார்கள்.

-


கிரஹாம் பெல்லின் ஹலோ!அந்தக் குழந்தை
போன் செய்யும் பாவனையில்
”ட்ரினிங்..ட்ரினிங்...
அலோ..அல்லோ..!” என
எவரையோ
விளித்துக்கொண்டிருக்கிறது
மறுமுனையில்
கிரஹாம் பெல்
ஒரு ‘ஹலோ’
பதில் உரைப்பாரென
நானும் காத்திருக்கிறேன்!

கீச்சுகள் - 46கடந்து போகும்... மறந்தும்கூட...! . அப்புறமென்ன...!?

-

1992 காலேஜ் படிச்சப்போ 2வது செமஸ்டர்ல அரியர் வெச்சஸ்டேட்ஸ்டிக்ஸ்பரிட்சைக்கு நேத்து ராத்திரி கனவில் படிச்ச கொடுமைய எங்கபோய்ச் சொல்லுவேன்!

-

இதுவும் ஒரு நாளாக இருக்கும்எனத் துவங்கும் நாளில் ஒரு சொல் ஒரு குரல் ஒரு சம்பவம் போதும்இது ஒரு நாள்என மாறிட!

-


வெயில் வெளுக்கும் இந்தப் பகலை இரவின் மடியில்தான் உலர்த்த வேண்டும்!

-

ஒரு கவிதை எழுதுவதைவிடச் சுகம் அவள் துவைக்கும் துணியை முறுக்கிப் பிழிந்து கொடியில் உலர்த்தச் செய்தல்! :)

-அணையில் தளும்பும் நீரின் பெரும்பான்மைகூட சொட்டுச் சொட்டாகத்தானே சொட்டியிருக்க வேண்டும்

-

கரைந்தோயும் கதிரோன்
களிப்பூட்டும் கவிதை
தித்திக்கும் தேநீர்
திகட்டாமல் நீ.....
போதும்! போதும்!!

-

வெயிலுக்கேது வேலி. நீ காய்ச்சு மச்சி!

-

நிலநடுக்கமே என்றாலும் பாதிப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அதன்மேல் பயமும் மரியாதையும்!

-

ஏற்றுக்கொள்ள ஒரு காரணம் இருப்பதாக நீங்கள் சொல்வதைப்போலவே, மறுப்பதற்கு என்னிடம் ஒரு காரணம் இருக்கலாம் () காரணமே இல்லாமலும்கூட இருக்கலாம்

-

என்னிக்கு ட்ரைவிங் லைசன்ஸ், வோட்டர் ஐடியில் எங்க படத்தை எங்களை மாதிரியே போடுறீங்களோ, அதுக்குப்பிறகுதான் இந்த நாடு வல்லரசாகும்! #சாபம்

-

ஒரு வேட்பாளர் இரு தொகுதியில் நின்று வெற்றிபெற்று, ஒன்றில் பதவி விலகினால் வரும் மறுதேர்தல் செலவை அவர் செய்யவேண்டும்னு சொல்லனும்!

-

அழத்தைரியமற்ற யாரோ ஒருவர்தான் சொல்லியிருக்க முடியும் அழுகை கோழைத்தனமென.

-

ஞாயித்துக்கெழமையும் 'பிசி'யாக இருப்பது புத்திசாலித்தனமா, முட்டாள்த்தனமா!?

-

சனிக்கிழமைனா 3 மணிக்குத்தான் பசிக்குது, ஞாயித்துக்கிழமைன்னா 12 மணிக்கே பசி பின்னுது. இஅநீயா - பசி வயிற்றை சார்ந்ததல்ல.. சோற்றை சார்ந்தது!

-மழலை அள்ளிக் கொஞ்சுகையில் புதுமணத் தம்பதியினர் கொஞ்சம் கூடுதலாய் வெட்கம் பூக்கிறார்கள்!

-

நினைத்த நொடியில் ஃபேஸ்புக்கை Logout செய்வதும் ஜென் நிலையே! :)

-

2009ல் தோண்டிய பாதாளச் சாக்கடையை 2011 தேர்தலுக்கு மூடினாங்க. 2011க்கு பிறகு தோண்டியதை 2014ல் மூடுறாங்க. 2016லும் மூடுவாங்க, ரோடு போடுவாங்க

-

கனவு மறந்து போறதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது பாஸ். காசா பணமா!?

-

நம் பிறந்த நாளில் பிறந்தவர்களை எப்போதும் பிடிக்கிறது. இப்போது நம் குழந்தையின் பிறந்த நாளில் பிறந்தவர்களையும் கூடுதலாகப் பிடிக்கி்றது!

-

ஒரு கதை, கவிதையில் இருக்கும் ருசியை நம் மனநிலை, பசிக்கு ஏற்ப ருசித்தலுக்கும், அதைப் படைத்தவரின் மனம் வழியே, விழி வழியே, சொற்கள் வழியே உணர்ந்து ரசித்து ருசிப்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. அதுவும் அந்தப் படைப்பாளி எவ்வித செருக்குமின்றி, அதைப் படைத்த நொடியில் தானிருந்த மனநிலையைச் சொல்லச்சொல்ல அதையும் எட்டிப் பார்த்தவாறே அனுபவித்தல் அதனினும் இனிது! :)

-

பந்திக்கு லேட்டா வர்றது தப்புதான் பாஸ்... நீங்க ரொம்ப நேரம் பரிமாறி களைச்சிருப்பீங்க. அதுக்காக சோறு போட்டவுடனே, மோர் பக்கெட் எடுத்துட்டு வந்து மோர் போடட்டுமானு வயித்துல அடிக்கிறதெல்லாம் நல்லாயில்லைங்க

-

இந்த வாழ்க்கையில் நமக்கே நமக்குனு கொஞ்சம் பொழுதேனும் வாழ்ந்து பார்த்துடனும்!

-

அப்போது பேனா! இப்போது பென் ட்ரைவ்! தொலைப்பதில் முன்னேறிவிட்டோம்!

-


சூழல்களிலிருந்து மீண்டுவிடமுடியும் எனும் நம்பிக்கையும், இந்தச் சூழலை இப்போதோ, இதற்கு முன்னரோ எவரேனும் கடந்திருக்க முடியும் என்கிற நினைப்பும் மட்டுமே அவசியமாயிருக்கிறது.


பறந்து ஓயும் இறக்கையின் சிறகுகளுக்கு சொடுக்கெடுப்பது யார்!

-

கத்துக்குட்டி ஒன்னு ட்விட்டர்னா என்ன? எப்படி யூஸ் பண்றது? ஃபாலோயர்னா என்ன?னு கேக்குது. அவ்ளோதான் இனி கட்டை விரலும் கண்ணும் தேய்ஞ்சுடும்

-

கவிரயங்மொன்றில் உறங்குபவனின் கனவில் அரங்கேறுகிறது கவிதையொன்று! #தட்_செத்தாண்டா_சேகரு_மொமண்ட்

-

நேசிக்கவே இந்த வாழ்வு :)

-

சங்கீதா தியேட்டர் முக்குல ஸ்கூட்டியில ட்ரிப்பிள்ஸ்ல வந்து மினி பஸ்சப் பார்த்துப் பெப்பரக்கானு பயந்து, மத்தியான சோத்துக்கு பசியோட போனவன் மேல உரசி உயிர் பயத்தைக் காட்டிய மூனு மகராசிகளுக்குஸ்பெஷல் மகளிர் தின வாழ்த்துகள்’ :)

-


அட பக்கிகளா உங்களுக்கு பாட்டு புடிச்சா நீங்க கேளுங்க. செல்போன் ஸ்பீர்க்கல போட்டு பக்கத்தில இருக்கிறவன் காதுல ஏன் ஈயத்த காய்ச்சி ஊத்துறீங்க!

-

துக்கத்தில் பெரும்துக்கம் தந்தை மரணம் குறித்து மகளிடம் துக்கம் விசாரித்தலே! :(

-

அதெப்படிங்க எசமான்.... கூட்டணிக்குள்ளே இருக்கிற வரை சீட்டுக்கு கெஞ்சுறீங்க. வெளியே(த்திய) வந்தவுடன்விடுதலை விடுதலைனு கூவுறீங்க!

-

நெல்லுக்குப் பாயுறது புல்லுக்குப் பாயுறமாதிரி வீட்ல மிஞ்சுற குழந்தைங்க பூஸ்ட், ஹார்லிக்ஸ் வயித்துக்கு பாஞ்சிடுது #சீக்கிரம் வளர்ந்துடனும்

-

பிரியத்தை மொழியாக்கும் உறவுகளின் சொற்கள் மெல்லத் தலைகோதும், விரல்பிடித்து சொடுக்கெடுக்கும், கால்களை மடிமீது போட்டு அமுத்திவிடு எனக்கேட்கும்

-

பகை முடித்தல் பேரானந்தம்!

-

ஏற வேண்டிய ரயில் சரியான நேரத்திற்கு வருவதும், இறங்க வேண்டிய ரயில் தாமதமாகப் போவதும் விதிப்பயனென்க!

-

நம் இல்லாமையையும், தேவையையும் யாரோ உணர்த்துகையில், நெகிழும் உயிரின் காம்புகளில் பீறிடுகிறது அன்பு!

-

அது நமக்கு தேவையான ஒரு சாதாரணப் பொருள்தான். எப்போதாச்சும் வாங்கிக்கலாமென கண்டுகொள்ளாமல் விட்ட பொருளாகவும் கூட இருக்கலாம். அதை வாங்குவதற்குப் பயன்படுவதும் நம்ம காசுதான்.

ஆனால் அதை நாமே வாங்குவதற்கும், நம்மிடம் எதற்கோ எனச் சொல்லி காசு பெற்று ரகசியமாக வாங்கிவந்து மகள் பரிசாக அளிப்பதற்கும் கோடி வேறுபாடுகளுண்டு. அந்தக் கணத்தில் உணர்வோம் மகளும் ஒரு தாய்தான் என்பதை! :)

-

பல வருட தொப்பையைக் கரைக்க முயல்வது, பலூன் வாயை ஊசி கொண்டு தைக்கிறது மாதிரி!

-

எல்லா மீன்களும் பிடிபடுவதில்லை-