போஸ்ட் ஆபீஸ் பரிதாபங்கள்

இந்திய தபால்துறையை எந்த அளவுக்கு பாராட்டுகிறேனோ அதே அளவுக்கு அதில் பணி புரியும் சிலர் நம்மை சோதிப்பதில் இருந்தும் தவறுவதில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே புத்தகங்கள் அனைத்தையும் Registered Parcel என்ற முறையில் மட்டுமே அனுப்பி வருகிறேன். இதுவரை அனுப்பியிருக்கும் சுமார் 1000 பார்சல்களில் மொத்தமாக ஒன்று மட்டும் முகவரியில் பெறுபவர் இல்லாததால் திரும்பி வந்தது.


இன்னொன்று தவறாக அவர்களே அவசரமாகத் திருப்பி அனுப்பிவிட்டு, ட்விட்டரில் ஒரு புகார் தெரிவித்ததும் கதறியடித்து அவர்களே நேரில் வந்து பெற்றுக்கொண்டு, மீண்டும் அதை சேர்ப்பித்தார்கள். மற்றபடி கடந்த ஆண்டில் ஒருமுறை வழக்கமாக கொடுக்கும் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் விடுப்பில் இருந்ததால், தற்காலிகமாக ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். பார்சல் அனுப்புவதற்காகச் சென்றபோது அவருக்கான ஐடி வரவில்லை என்று திருப்பி அனுப்பினார். அடுத்த நாள் சென்றபோதும் அதே பதில் சொல்ல, இது குறித்து மேலிடத்திற்கு புகார் அனுப்ப என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். அவர் அதைப் பெரிதும் பொருட்படுத்தவில்லை. நீங்களே செய்து கொள்ளுங்கள் என்றார்.


தலைமை தபால் நிலைய எண்ணை கூகுளில் எடுத்து அழைக்க, மறுமுனையில் எடுத்தவர்கள் ஒவ்வொருவராக மாறி இறுதியாக ஒருவர் பேசினார். அனைவரிடமும் அதே கதைகளைச் சொல்லி அலுத்துப் போயிருந்தேன். இறுதியாகச் சொல்லி ஓய்ந்தபோது, ”கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!என்றவர் ரிசீவரை அப்படியே வைத்துவிட்டுவிட்டார். நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு இணைப்பைத் துண்டித்துவிட்டு அழைத்தால் ரிசீவர் வைக்கப்படாத காரணத்தால் அடுத்த சில மணி நேரங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவை யாவற்றையும் குறிப்பிட்டு ட்விட்டரில், இந்திய தபால் துறை, அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா ஆகிய கணக்குகளில் ஒரு புகார் தெரிவித்ததும், அடுத்த நான்கைந்து நாட்களுக்குள் பெரும் பிரளயம் நடந்தது. கண்காணிப்பாளார் ஒருவர் நேரிடையாக வந்து புகார் எழுதி வாங்கிச் சென்றார். இறுதியாக அந்தப் புகாரையொட்டி ஒருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.

 

*

 

சமீபத்தில் இலங்கைக்கு புத்தகங்கள் அனுப்ப வேண்டியிருந்தது. திண்டல் அல்லது வாசவிக் கல்லூரி தபால் நிலையம்தான் எனக்கு வசதி. ஒருமுறை சிங்கப்பூருக்கு அனுப்ப தலைமைத் தபால் நிலையம் சென்று பட்ட அவஸ்தையை https://www.facebook.com/erodekathir/posts/1094002680634594 இதில் வாசிக்கலாம். ஆகவே துணைத் தபால் நிலையங்களையே இதற்காக நான் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

 

முதலில் வாசவிக் கல்லூரி தபால் நிலையத்தில் இலங்கைக்கு புத்தகம் அனுப்ப வேண்டும், என்ன எடைக்கு என்ன கட்டணம் வரும் எனக்கேட்டேன். போஸ்ட் மாஸ்டர் எதா இருந்தாலும் நேரில் கொண்டு வாங்க, அப்பத்தான் சொல்ல முடியும்!என்றார். சமீபத்தில் திண்டல் போஸ்ட் மாஸ்டராக வந்திருப்பவர் அடிக்கடி பார்சல் கொடுப்பதால் பழக்கமாகியிருந்தார். கூட்டமாக இருப்பின் கொடுத்துட்டுப் போங்க என்று பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு மாலை பதிவு செய்வார். நெட்வொர்க் பிரச்சனை என்றாலும் நாளைக்கு அனுப்பிடுங்க என்று சொல்லி காசு கொடுத்துவிட்டு வந்துவிடலாம். ஆகவே அவர் வாயிலாக அனுப்புவது எளிதாக இருந்தது. இலங்கைக்கான கட்டணம் குறித்துக் கேட்டேன், கணினி திரையைத் திருப்பிக் காட்டி, ஒவ்வொரு எடைக்கும் எவ்வளவு வரும் எனும் பட்டியலையே குறித்துக் கொள்ளச் சொன்னார். அந்த அடிப்படையில் எடையைக் கணக்கிட்டு பார்சலைத் தயார் செய்து வைத்திருந்தேன்.

 

அனுப்பலாம் என நினைத்துச் சென்றபோது அவர் விடுப்பில் சென்றிருந்தார். தற்காலிக பொறுப்பில் இருந்தவர் சார் ஐடி இல்ல. அடுத்து வெளிநாட்டுக்குனா அவர் இருந்தாதான் வசதி, நீங்க ஹெட்போஸ்ட் ஆபீஸ் போயிடுங்களே!என்றார். ஹெட்போஸ்ட் ஆபீஸ் கதையைச் சொன்னேன். அவர் தடுமாறினார்.

 

திரும்பவும் ட்விட்டரில் இதைத் தட்டிவிட்டால் அவர்களுக்குப் பெரிய பிரச்சனை ஆகும் எனத் தெரியும். சரி பொறுத்துப் போவோம் என்றிருந்த சூழலில் வீடு மாற வேண்டிய வேலை வந்ததது. இரண்டு நாட்கள் கழித்து வாசவி கல்லூரி போஸ்ட் ஆபீஸ் போனேன். என் நேரம் அல்லது அங்கு வழக்கமாக இருக்கும் போஸ்ட் மாஸ்டர் நேரம், அவர் விடுப்பில் செல்ல, தற்காலிகப் பொறுப்பில் ஒருவர் இருந்தார். வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றதுமே, பீதியடைந்தவராகத் தெரிந்தவர், ”இன்னிக்கு டைம் முடிஞ்சுதுங்களே!என்றார்.இல்லை நேரம் இருக்கு!எனச் சொன்னேன்.போஸ்ட் மாஸ்டர் லீவு, நான் டெப்டேசன்ல வந்திருக்கேன்!என்றார்.அதனால் என்ன?” என்றேன்.எனக்கு ஐடி வரவில்லை!என்றார். நான் முன்பே இங்கு கட்டணம் விசாரித்த கதை, பிறகு திண்டலில் விபரங்கள் பெற்ற கதை, தலைமை தபால் நிலையம் 2015ல் படுத்திய கதை, திண்டல் போஸ்ட் மாஸ்டர் விடுப்பில் சென்றிருப்பது, திரும்பத் திரும்ப பார்சலைத் தூக்கிட்டு அலைய முடியாது என்பதையெல்லாம் பலவிதமாகச் சொல்லிப் பார்த்தேன்.

 

இறுதியாக நாளை வாங்க அனுப்பிக்கலாம்!என்றார். அப்படின்னா பார்சல் இங்கே வச்சுட்டுப் போறேன், நாளைக்கு டைம் சொல்லுங்க வந்து அனுப்பிக்கிறேன்!என்றேன். அப்படி இங்கே வைக்கக்கூடாது!என்று மறுத்தார்.

 

இறுதியாக ஏற்கனவே இதேபோல் ஐடி இல்லை என்ற காரணத்தால், ட்விட்டர் வழியே புகார் தெரிவித்ததைச் சொன்னேன். ட்விட்டர்ல அனுப்பியெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது!என்றார் அப்போது வந்த போஸ்ட் மேன் ஒருவர். அந்த டிவிட்டர் புகாருக்கு நடந்த விளைவுகளைச் சொன்னதும் அவர் பீதியடைந்து அமைதியானார். இப்பவும் உங்களை மிரட்டனும்னு எனக்கு ஆசையில்லை. திரும்பத் திரும்ப தூக்கிட்டு அலையமுடியாது என்பதால் நான் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தத்திற்குள் ஆளாக வேண்டியிருக்கிறது!என்று மட்டும் சொன்னேன். இறுதியாக அருகில் வேறு எங்கு அனுப்ப முடியும் எனக் கேட்டேன். பவானி ஹெச். போயிருங்கஎன்றார். இல்ல சப் போஸ்ட் ஆபிஸ் சொல்லுங்க!என்றேன். சித்தோடு என்றார். அப்ப நீங்களே சித்தோடுக்கு அழைத்து, இங்கே போஸ்ட் மாஸ்டர் இல்லை, அங்கே வந்தா அனுப்ப முடியுமானு கேட்டுட்டு சொல்லுங்க என்றேன். என்னென்னவோ சொல்லி மறுத்து பிறகு சித்தோடு எண் இல்லை என்றார். நான் கூகுளில் எடுத்து தரவா எனக் கேட்டேன். பிறகு அவராகவே அழைத்தார். அழைக்கும்போதே, இது இலங்கைக்கு அனுப்ப வேண்டியதுனு அவங்ககிட்ட சொல்லிடுங்க என்று மூன்று முறையும் சொல்லியும், அதைச் சொல்லாமல் அவர் தவிர்த்து அழைப்பை முடித்தார்.


நான் அங்க போகல, இங்கேதான் அனுப்பனும், முடியாதுனா ஏன் முடியாதுனு எழுத்தில் கொடுங்க!என்றேன். பதறியவர் ஏன்?”னு கேட்டார். அதுதான் இலங்கைக்குனு சொல்லுங்கனு அத்தனை வாட்டி சொல்லியும் சொல்லாம விட்டிருக்கீங்க, திரும்பவும் அங்கே போய் முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா!?” என்றேன். கொஞ்சம் கடுப்பாக மீண்டும் அழைத்து இலங்கைக்கு என்று சொல்லிவிட்டு வைத்தார்.

 

அடுத்து சித்தோடு நோக்கி புறப்பட்டேன். கதவு மூடியிருந்தது. தட்டினால் சாப்பிடுறேன் வெய்ட் பண்ணுங்க!என்றது ஒரு பெண் குரல். நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு கதவு திறந்தது.

 

தபால் நிலையம் வழியே அனுப்பும்போது முழுவதும் பார்சல் செய்து எடுத்துச் செல்லக்கூடாது. அவர்கள் உள்ளே என்ன இருக்கின்றது என்பதைச் சரிபார்க்க வேண்டுமாம். ஆகவே அவர்கள் பார்த்த பின்தான் முழுமையாக பார்சல் செய்ய முடியும். ஆதார் ஜெராக்ஸ் ஒன்று இணைக்க வேண்டும்.

 

ஒருவழியாக அவர் பார்சலில் என்ன உள்ளது என்பதை சரிபார்த்த பிறகு, எடை பார்த்து முற்றிலும் பார்சல் செய்து விபரங்கள், அதற்கான கட்டணம் கொடுத்தேன். (கட்டணம் முதல் 250 கிராமிற்கு 560 ரூபாய் அடுத்த ஒவ்வொரு 250கிராமிற்கும் 50 ரூபாய். இதைச் சொல்லத்தான் வாசவி கல்லூரி போஸ்ட் மாஸ்டர் நீங்க கொண்டு வந்ததாதான் சொல்ல முடியும் என்றார். இது இணையத்திலேயே தெளிவாக இருப்பதை பிறகு தேடிக் கண்டறிந்தேன்). நான் அனுப்பிய பார்சலுக்கு செலுத்திய கட்டணம் ரூ.2410

 

எல்லாம் பெற்றுக் கொண்டவர் இரண்டு நிமிடத்தில் அனுப்பவதற்காக தகவல்களைப் பதிந்து முடித்தார். அதற்கான ரசீது மட்டும் ஒரு A4 காகிதத்தில் எடுக்க வேண்டியிருந்ததால், வழக்கமான பிரிண்டரில் கொடுக்காமல் மற்றொரு பிரிண்டரில் கொடுத்தார். அது வேலை செய்யவில்லை. ஏறத்தாழ பதினாறு முறை தட்டியதும், மூன்று பிரதிகளை வெளியில் தள்ளியது. அவற்றை பார்சல் உடன் இணைக்க வேண்டும். அதையும் நாம் தான் செய்ய வேண்டும்.

 

ஆக மொத்தத்தில் வெளிநாட்டிற்கு நீங்க ஏர் மெயில் ரெஜிஸ்டர்ட் பார்சல் அனுப்ப வேண்டுமென்றால், தபால் நிலையத்தில் அவர்கள் செய்ய வேண்டியது, பார்சலில் என்ன என்பதை சோதித்துவிட்டு, விபரங்களை இரண்டு நிமிடம் உள்ளீடு செய்துவிட்டு, அதற்கான பிரிண்ட்ரை மட்டும் சுமார் பதினாறு முறை தட்ட வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது.

 

*

 

பி.கு :

இப்படி மொட்டையா ஒரு ரசீது இருக்குமா என யோசிக்காதீர்கள். பதினாறு முறை தட்டி எடுத்த ரசீதில் இந்திய தபால் துறை எனும் முத்திரை மற்றும் விபரங்கள் பிரிண்டருக்குள்ளேயே உதிர்ந்துடுச்சு போல