பல இரவுகளில் ஓர் இரவுஇரவின் நிறம் கூடக்கூட அழுத்தமும் கூடத்தொடங்கியது. ஏன் உடைந்ததென்று தெரியவில்லை, அந்தக்கணத்தில் அது உடைந்திருக்கலாமாவென்றும் தெரியவில்லை. ஆனாலும் மனது சுக்கு நூறாய் உடைந்து சிதறிக் கிடந்தது. தோல்வி தோல்வி தோல்வி என எல்லாவற்றிற்கும் மனது அரற்றிக் கொண்டேயிருந்தது.

இதுவரை அணிந்திருந்த முகமூடிகள் மீது சொல்லொணா வன்மம் வந்து குடியேறியது. எப்படியேனும் முகமூடியை அணிந்து, யாரும் அறியாவண்ணம் முடிச்சிட்டு நேர்த்தியாய் மறைத்த உழைப்பு மறந்துபோனது. அப்படியே கூரிய நகங்களை இருபக்க கன்னப்பகுதியில் அழுத்தி முகமூடியை பிய்த்தெறியும் வெறியோடு இழுத்தான். சற்றும் முகமூடி அசையவில்லை, நகங்களை அழுந்த அனுமதிக்க மறுத்து கெட்டித்துக்கிடந்தது. நகங்கள் மட்டும் மடங்கி, நகக்கண்ணில் வலி பூத்தது.

முகத்தை அழுந்த தடவிப்பார்த்தான், கொஞ்சம் சுருக்கம் பாய்ந்திருந்தது. என்ன வேடம் இப்போது அணிந்திருக்கிறோமென்று புரிபடவில்லை. பூண்ட வேடங்களும், அணிந்த முகமூடிகளும் ஒன்றா இரண்டா!? எந்தக்கணத்தில் சுயம் தொலைந்ததென்பது மறந்துபோயிருந்தது. எப்போதிலிருந்து முகமூடிகள் சுயத்தை சிதைக்கத் துவங்கின என்பதும் மறந்துபோய்விட்டது. முகத்தைத் தடவிய விரல்களில், இப்போது எந்த வேடம் புனைந்திருக்கிறொமென்பதை உணரமுடியவில்லை. நெற்றி ஒரு வேடத்தை, புருவம் ஒரு வேடத்தை, கன்னம் மூக்கு மூக்கு பிரிதொரு வேடத்தை நினைவூட்டியது. கண் இமைகள் இமைக்க மறந்துபோய் விரைத்திருந்தது. உதடுகளிலொரு நிரந்தரச்சிரிப்பு அப்பிக்கிடந்தது. சிரிக்கும் உதடுகளை விரல்கள் கடக்கும் போது, உள்ளுக்குள் இருந்து பொங்கிவந்தது ஒரு குமட்டல். உள்ளுக்குள் சொல்லொணாத் துயரோடு சுமக்கும் ரணங்களில் வழியும் சீழ் குமட்டி வெளிவந்து, நிரந்தரமாய் பொய்யாய் சிரிக்கும் உதடுகளில் வழிந்தது. சீழின் நாற்றமும், உதடுகளில் படிந்திருக்கும் சிரிப்பின் போலிப்புரட்டும் சேர்ந்து அதீத அயற்சியைப் புகட்டியது.

”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற வாசகம் ஒரு கணம் மனதிற்குள் வந்துபோனது. ”எவண்டா இதச் சொன்னது” என்ற ஓங்காரக் கோபம் வந்தது. ”வாழ்வேமாயம்” என்ற வாசகம் மனதிற்குள் வந்து ”வாழ்க்கை வாழ்வதற்கே” வாசகத்தை துரத்தியடித்தது. ஏன் இப்படியொரு வாழ்க்கை வாழவேண்டும் எனத்தோன்றியது, உடன் இலவச இணைப்பாக ”ஏன் வாழக்கூடாது” என்ற கேள்வியும் வந்தது. இரண்டுமே செயற்கைத்தனமான கேள்விகளாகத்தோன்றியது. சினிமாவும் இன்னபிற பொழுதுபோக்குகளும் இது போன்ற நாடகத்தனமான பல சொற்றொடர்களை, கேள்விகளை தனக்குள் திணித்திருப்பதை உணரும் போது, எது நிஜம், எது நாடகத்தனம் என்பதே குழப்பமாய் இருந்தது.

எதை நோக்கிய பயணம் இந்த வாழ்க்கை என்பதில், ஒன்றேயொன்று மட்டும் விடையாகத் தெரிந்தது. அது மரணம். மரணம் என்பதை நினைக்கும்போதே அது அபசகுணம் என்ற உணர்வு வந்தது. அது எத்தனை நிஜமாய் இருந்தாலும் அது பற்றிச் சிந்திக்க மனதில் வலுவிருப்பதில்லை. விருப்பமுமிருப்பதில்லை. மரணிப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நினைக்கும்போதே வறட்டுப் புன்னகையொன்று உதட்டில் வந்துபடிந்தது.

மரணத்தை நோக்கிய பயணத்திற்காக மட்டுமே பிறக்கிறோம், அதை நோக்கி கடிகாரத்தின் நொடிமுள்போல், ஒவ்வொருநொடியும் ’டிக்டிக்’கென நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனத்தோன்றியது. இப்படித் தோன்றுவதும்கூட நாடகத்தனமோ எனவும்பட்டது. அவன் மேலேயே அவனுக்கு சொல்லொணாக்கோபம் கொப்பளித்து. ’எதுதாண்டா நிஜம்’?, ’எல்லாமே நாடகமோ?’ எனத் தோன்றியபோது அவன்மேலேயே அவனுக்கு அயற்சியும் அலுப்பும் கூடியது.
சிந்தனைகள் பின்னிக்கிடந்த மூளை எதையும் புதிதாய் சிந்திக்கமறுத்தது. எதைச் சிந்திக்கத் முனைந்தாலும் சிந்தனை சிக்கலையும், மரணத்தையுமே மையப்படுத்தியது. வாழ்வது வீணென்று சொன்னமனதே சாவதும் எளிதன்று எனவும் சொன்னது. மூளைக்குள் ஏதோ ஒன்று நெளிவது போலவும், அந்த ஒன்று இரண்டாகி நான்காகி எட்டாகி பதினாறாகி என நினைக்கும்போது இதுதான் பைத்தியத்தின் முதல்கட்டமென்றோ எனவும் தோணியது. சிந்தித்து சிந்தித்து மூளை களைத்துப்போய், சிந்தனைகளைத் தொலைத்து மௌனித்துக்கிடந்தது. மௌனம் சூழ்ந்திருக்கிறதென நினைக்கும்போது விழிப்புத்தட்டியது. விழிப்பெது, சிந்தனை தொலைந்த உறக்கமெது எனவும் குழப்பம் குடிபுகத் தொடங்கியது!

சிந்தனை ஊறல்கள், விழிப்பு எரிச்சல், உறக்க மௌனம் என ஒவ்வொன்றாய்க் கடந்து, வெதுவெதுப்பும், வெளிச்சமும் படியப்படிய அது விடியல் எனத்தோன்றியது. எப்போது தூங்கினோம், என்ன நடந்தது, இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா, பைத்தியம் பிடித்துவிட்டதா என்ற குழப்பத்தோடு கண்ணில் கட்டியிருந்த பூளையைத் துடைக்க, விழிகள் விடுதலையடைந்தது போன்ற உணர்வு படிந்தது.

மெதுவாய் எழுந்து கதவு திறக்க, காற்றும் வெளிச்சமும் குபீரெனப் புகுந்தது. வீதி அதன்போக்கில் கிடந்தது, தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரவர் போக்கில் நடமாடிக்கொண்டிருந்தனர். அடிக்கடி கண்ணில்படும் ஒற்றைக்கால் இல்லாத அந்த தெருநாய் ஒரு ரிதத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. முதன்முறையாக அந்த நாய்க்கு சாப்பிட எதாவது போட வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

--------------------------------------------------------------------------------------------------


 வல்லமைhttp://www.vallamai.com/blog/archives/7148/ மின்னிதழில் வந்த இடுகை. நன்றி வல்லமை.

தீர்ந்துபோகும் உலகம்துணி மாட்டும் கவ்விகளில்
முனைப்பாய் தன் நேரத்தை
விதைக்கிறது அந்தக் குழந்தை
ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து
வீடு கட்டி மகிழுந்து ஓட்டி
அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி
எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து
தம்பிப் பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து
பறவைக்கு இறக்கை பொருத்தியென….

நிமிடங்களுக்கு நிமிடம்
மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது
அதற்கானதொரு அழகிய உலகத்தில்…

அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு
விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும்
உலரும் துணி உதிராமல் இருக்க
அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்

-0-

21ஆகஸ்ட் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை. நன்றி திண்ணை!

.

புவியியல் வரலாறு


வரிகொடுத்த சாமானியன்
குறைந்த காசுக்கு நிலம் இழந்தவன்

திட்டம்வகுத்த பொறியாளான்
கல்லுமண்ணெடுத்த சித்தாள்
கட்டிய ஒப்பந்தக்காரன்
எவர் பெயரும் வடிக்கப்படுவதில்லை
எந்தப் பாலத்தின் முகப்பிலும்

ஓரிரு இரத்தத்துளிகளோடு
ஓங்கியோங்கி அடிவாங்கும் உளிநுனியால்
பளபள கருங்கல்லில் வெள்ளிப்பூச்சில்
துரதிருஷ்டவசமாய் பொறிக்கப்படுகிறது
குறுக்கே பூட்டப்படும் வண்ணநாடாவை துண்டிக்க
கோலாகலமாய் வருபவர் பெயர் மட்டும் 

-0-

திரு.சகாயம் அவர்களின் தாயாருக்கு அஞ்சலி

மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்களின் தாயார் சவுரியம்மாள் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தில் செவ்வாய்கிழமை தனது 87வது வயதில் இயற்கை எய்தினார்.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

“இறுதி நிகழ்ச்சியில் பெரும் மக்கள் கூட்டம் இருந்ததாகவும்” அஞ்சலி செலுத்தச்சென்ற தன் நண்பர்கள் கூறியதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் தெரிவித்தார். பெருமாள்முருகன் அவர்கள் தற்சமயம் திரு.சகாயம் குறித்து ஒரு புத்தகம் எழுதிவருகிறார் என்பது கூடுதல் தகவல்.

கடந்த ஆண்டு ஈரோட்டில் நாங்கள் அழைத்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்த திரு.சகாயம், வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்தார். அதற்கான காரணமும் கூட அன்று அவர் நாமக்கல்லிருந்து புதுக்கோட்டை சென்று தனது வயதான தாயாரை சந்தித்துவிட்டு பின்னர் ஈரோடு வந்ததுதான் என்பதை பின்னர் அறிந்தோம்.

திரு.சகாயம் தன் நேர்மை குறித்து பேசும்போது அது, தன் தாய் புகட்டியது என அடிக்கடி சொல்வார். மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாதுஎன்று தன் அம்மா சொன்னவார்த்தையே அவருடைய நேர்மையின் அடிப்படை.


நாடு போற்றும் ஒரு நேர்மையாளனை ஈன்றெடுத்த அந்தத் தாயின் வாழ்க்கைப் பயணம் இனிதே நிறைவடைந்திருக்கிறது. தன்னை நெறிப்படுத்திய தாயை இழந்து வாடும் திரு.சகாயம் அவர்களுக்கு கூடுதல் மன பலம் கிடைக்கவும், தன் மகனை சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்த அந்த தாயின் ஆன்மா அமைதியடையவும் மனமுருகி வேண்டுகிறேன்.

-0-

உங்களுக்கும் இப்படித்தானா!?


மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி குணாதிசயம் கொண்டவர்கள் என்பது பொய்த்துப்போகிறது. அதுவும் ஃபேஸ்புக் அரட்டைப்பெட்டியில் முதல் தடவை பேசும் புதிய ந(ண்)பர்கள் ஒரே மாதிரி கேள்விகள்தான் வைத்துள்ளனர்.

He : Hi
Me : hi
He : How r u
Me : fine
He : Enna pannreenga
Me : (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்ப்ப்பா – மனசுக்குள்)
Me : எதுக்கு கேக்குறீங்க?
.
.
.
அம்புட்டுத்தான்…. அத்தோடு எஸ்ஸ்ஸ்ஸ்கேப்

புதுசா அரட்டையில் வர்றவங்களும், வந்த வேகத்தில் எஸ்கேப் ஆகுறவங்களுக்கு சற்றும் குறையவில்லை!

அரட்டைப் பெட்டியில் பெயர் மின்னுவதைப் பார்த்தவுடனே முதல் அரட்டையில் hi சொன்ன பிறகு how r u / what u do போன்ற பல கேள்விகளை அடுக்குறாங்களே.....
இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சு என்ன பண்ணுவாங்களாயிருக்கும்.

-----x-----

சில நாட்களுக்கு முன்பு gmail அரட்டைப் பெட்டியில் வந்தார் அவர்.

“நீங்க கணக்குல பெயிலானவர்தானே” என்றார்.

ஓரளவு புரிந்தது. ஆனாலும்….. ”ஏன் கேக்குறீங்க” என்றேன்

இந்த இடுகையைப் படித்தாராம்.

”அதில் ’வகை’னு தலைப்பு பக்கத்தில் இருக்கும் பாருங்க” என்றேன்

புனைவு, மரணமொக்கை போட்டிருக்கீங்க”

நான் மௌனமாக இருந்தேன்

”சாரி….. முதல்ல நான் அதைப்படிக்கல”

அப்பவும் நான் மௌனமாகவே இருந்தேன்

அப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டே…. (நான் இல்ல அவருதான்)

இரண்டு நாள் கழித்து மீண்டும் வரே ….

திடீரென....
“தமிழில் மட்டும் எழுதுங்க” என்றார்

”எனக்கு தமிழ்லதாங்க எழுதத் தெரியும்” என்றேன்

”நோம்பினு எழுதியிருக்கீங்க, அது தமிழா?” என்றார்

”வேற என்ன மொழி” என்றேன்

”அது கலோக்கியல் லேங்குவேஜ்” என்றார்

அந்தக் கட்டுரையை படிச்சீங்களா, நோம்பினா என்னனும் எழுதியிருக்கேன்” கேட்டேன்

”இல்ல, தலைப்பு மட்டும்தான் படிச்சேன்”

நற நற நற….. (இல்ல பல்லை கடிச்சப்போ இப்படி சத்தம் வரல, வேற மாதிரி வந்தது, எனக்கு அந்த சப்தத்தை எழுத்தில் கொண்டு வரத் தெரியவில்லை)

“எங்க ஊர் வட்டார வழக்குங்க அது, நீங்க எந்த ஊர்” என்றேன்

“ஈரோடுதான்” என்றார்

அப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டே…. (இப்போ நானு)

-----x-----

அவர் தென் தமிழகத்தைச் சார்ந்த, வளைகுடாவில் இருப்பவர்….

He : வணக்கம்
Me : வணக்கம்
He : எப்படி இருக்கீங்க
Me : நல்லாருக்கேங்க
He : ஈரோட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?

அப்படியே இடி என் தலையில விழுந்த மாதிரி இருந்துச்சு, ஈரோட்ல இருக்கிற மக்கள் எப்படியிருக்காங்கன்னு கேக்குற பாசத்த நினைச்சு ஒரு விநாடி திக்னு ஆயிடுச்சு…

மனச திடமாக்கிட்டு

Me : ஈரோட்ல இருக்கிற எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?

He :  ஈரோட்ல எதும் அசம்பாவிதம் நடக்கலன்னா, எல்லாரும் நல்லாருக்காங்கன்னு அர்த்தம்

பல படங்களில் அழும் காட்சியில்வரும் கமலின் அழுகை நினைவிற்கு வந்தது.

Me : சன் நியூஸ்ல ஒன்னும் சொல்லலைங்க

இந்தத் தடவை நான் ஃபேஸ்புக்கை மூடிவிட்டு ஓடத்துவங்கினேன்

-----x-----


கீச்சுகள் – 4

அம்மா கடித்துத் தருவதை பிள்ளை எச்சில் என புறந்தள்ளினாலும், பிள்ளை கடித்துத்தருவது அம்மாவுக்கு எச்சிலாய் இருப்பதில்லை!

-0-

ஒன்னுமில்ல... ப்ளீஸ் விடுஎனச் சொல்வதில் நிறைய இருக்கிறது என்று பொருள் # முரண்

-0-

சில நேரங்களில் நிஜங்களைச் சந்தேகப்படுவதும், பல நேரங்களில் பொய்களை நம்புவதுமாய் நகர்கின்றன நாட்கள்

-0-

கடுமையாக மெல்லும் சூயிங்கங்களில் யாரையோ, எதையோ மெல்கிறோம்!

-0-

எப்பவும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாய் இருக்கவே விரும்புகிறோம்

-0-

ஒட்டு மொத்த மக்களோடு தன்னையும் முட்டாளாக நினைக்கும் வல்லமை கை தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது

-0-

ஆண்டு முழுதும்வீடு வாடகைக்குஎன அட்டை தொங்க விட்டிருக்கும் வீட்டுக்காரர்களிடம் வாடகை விசாரிப்பவர்கள் மட்டுமே வந்து செல்கிறார்கள்

-0-

விளம்பரம் போடும்போதெல்லாம் ரிமோட் பொத்தான்கள் தேயத்தேய சானல் மாற்றுகிறோம் எனத்தெரிந்தும், ஏன் விளம்பரம் போடுகிறார்கள்?


-0-

இருக்கும் அதே உடலுக்குத்தான் வெவ்வேறு வர்ணங்களில் விதவிதமாய் ஆடைகள் பூணுகிறோம் அன்றாடம்!

-0-

வீட்டில் ரொம்ப அடங்கியிருக்கும் ஆண்கள்டூர்களில் கொஞ்சம் ஓவர் ஆட்டம் போடுகிறார்கள் # அவதானிப்பு

-0-

ஒற்றை பெண் குழந்தை வைத்திருக்கும் எல்லா தந்தைகளும் சொல்வது, “பெண் குழந்தைதான் வேணும்னு நினைச்சேன்!”

-0-

எல்லாக் குற்றங்களோடும், இலவச இணைப்பாக ஒரு நியாப்படுத்துதல்  இருக்கிறது !

-0-

சிலரைப் பிடிக்காமல் போவதற்கு, அவர்கள் மட்டுமே காரணம் அல்ல!


-0-

பொய்யைப் போல் எதுவும் சுவைப்பதில்லை # தற்காலிகமாக

-0-

சில இரவுகளை அழகாக்குவது நிலவு, பல இரவுகளை அழகாக்குவது இளையராஜா!

-0-

ஒரு காலத்தில் கனவாய் இருந்தவை இன்னொரு காலத்தில் பிணைக்கும் விலங்காய்!

-0-

நட்பாய் இருந்து எதிரியாய் இடம் பெயர்வோரிடம் இரட்டை மடங்கு ஆபத்து எப்போதுமே!

-0-

யுத்தம் வெறும் வெற்றி தோல்விகளை மட்டும் தருவதில்லை

-0-

நம்மை அழகாகக் காட்டுவதற்காக நம்முன் வைக்கப்படும் கேமரா படும்பாடு இருக்கே.... அப்பப்ப்பா...... # அந்தப்பாவம் சும்மாவிடாது!

-0-

செருப்பை சில இடங்களிலும், செருக்கை பல இடங்களிலும் கழட்டித்தான் ஆகனும் # முடியலத்துவம்!

-0-

அடுத்த நாளுக்காக பட்டியலிடும் வேலைகள் எதுவும் அதுபோலவே முடிவடைவதில்லை. இனிமே ஒழுங்கா இருக்கனும் # பட்டியல் எதும் போடாமல்

-0-

டிவியில் அவர் போலவே அதிகம் வேசம் கட்டப்படும் நடிகர் வடிவேலு. ஆனா என்ன, கொஞ்சநாளா, அவருதான் வேசமே கட்ட முடியறதில்ல! :)

-0-

விட்டதைப் பிடிக்கும் வீர விளையாட்டில்தான் இருப்பதும் புட்டுக்கிட்டு போறது # சூதாட்டம்

-0-


மழை பெய்யாத நேரங்களில் நனைய இருக்கும் ஆசை, மழை தூறும் நேரங்களில் இருப்பதில்லை # வாழ்க்கை

----------------

பொறுப்பி: அவ்வப்போது ட்விட்டரில்கிறுக்கியகீச்சுகள்’.

-0-