பசலை படர்ந்த பந்தல்












வர்ணங்கள் தேய்ந்து வலியோடு
உதிர்ந்து கொண்டிருக்கிறது
நாம் சந்திக்காத நாட்களின்
நாள்காட்டி காகிதங்கள்....

மெதுவாய் என்னை மூடும்
கனவு வலையின் துளைகளில்
கசிந்து வருகிறது சுகந்தமான
உன் நினைவு வெளிச்சம்...

பளபளவென கூர்தீட்டிய
மௌன கத்திகளின் ரசலில்
அறுந்து தொங்குகின்றது
நம் சந்தோசச் சங்கிலி...

சாலையோர பூக்கடையின்
உறங்காத மல்லிகை வாசம்
வெறுமை கனக்கும் மனதில்
உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது...
___________________________________________________

நான் ரசித்த….. அங்காடித் தெரு

ஏழ்மையின் பொருட்டு ஊருவிட்டு ஊரு வந்து நேர்த்தியான சீருடையில் கொத்தடிமையாய்(!!!!) வேலை பார்க்கும் ஒவ்வொரு சாதாரண மனிதர்களுக்கும் பின்னால் இருக்கும் வலியை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததிற்காக வசந்த பாலனுக்கு மிகப் பெரிய வணக்கம்.



பரபரப்பான அந்த பேருந்து நிறுத்தத்தில் தினசரி மிகச் சாதாரணமாக பார்க்கும் இரண்டு முகங்களோடு படம் துவங்குகிறது. துவங்குகிறது என்று
சொல்வதைவிட மனதுக்குள் ஒரு புழு போல் நெண்டி நெண்டி உள் நுழைகிறது என்றே சொல்ல வேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்து நின்ற பிறகு ‘பஸ் வந்துருச்சு” என்று ஒரு முறை சொல்லிவிட்டு பேருந்தை நோக்கி ஓடும் போது மட்டுமே அந்த இரண்டு வார்த்தை வசனம் வீணடிக்கப்பட்டதாக உணர்ந்தேன், மற்றபடி படம் முழுக்க வசனம் மிக ஆழமாக ஆட்சி செய்வதை மறுக்க முடிவதில்லை.

பயிற்சி நிமித்தமாக, துணிக்கடையில் வேலை செய்யும் நபர்களை சந்தித்தபோது அவர்களுடைய உலகம் பற்றி ஏற்கனவே அறிமுகம் இருந்திருந்தாலும்... ஒரே வண்ண உடையில், அழகழகாய் கடைகளில் சிரித்து சிரித்து நம்மிடம் எப்படியாவது ஒரு துணியை விற்று விட வேண்டும் என மல்லுக் கட்டும் விற்பனை பிரதிநிதிகளின் சிரிப்புக்கு பின்னே இத்தனை வலி இருக்கும் என்பதை ஒரு போதும் யோசித்ததேயில்லை. இனி அவர்களை பார்க்கும் போதெல்லாம் காலும் கூடவே மனதும் வலிக்கவே செய்யும்.



பையன்களும், பெண்களும் தங்கும் அரங்கில் நெருக்கிக் கொண்டு, குவியலாய் தூங்குவதைப் பார்க்கும் போது, உடலெல்லாம் வெம்மையில் எரிகிறது. அண்ணாச்சிகளின் கடைகளில் நெல்லைத் தமிழோடு உழைத்துக் கொட்டும் சிறுவர்களுக்கு அப்பா இல்லாமல், அக்கா தங்கைக்கு கல்யாணம் செய்யவேண்டும் என்ற வேட்கை என்பதுதான் தகுதி என்பது கசக்கிறது. உண்மை பெரும்பாலும் கசக்கவே செய்கிறது.

சூப்பர்வைஸர் கதாநாயகியை மறைப்புக்குள் தள்ளி அடித்தபின், கன்னிப்போன உதடோடு வெளியே வந்தவளிடம் கதாநாயகன் கேட்க “மாரப் பிடிச்சு கசக்கினான்” என்ற வசனம், கடைசிவரை மார்பில் வலியாகவே தங்கியிருந்தது.

வயதுக்கு வந்த பெண்ணுக்கு நீர் ஊற்றி தீட்டுக்கழிக்க வேண்டிய சிக்கலான நேரத்தில் ”இந்த சாமிக்கு தீட்டுங்குறதே கெடையாது” என்ற வசனம் கேட்கும் போது, அந்த சாமியைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.

அந்த குள்ள மனிதரின் மனைவி தன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு பேசும் வசனத்திற்குத் தான் திரையரங்கில் அதிகமான கைதட்டலைக் கண்டேன். ஆனாலும் அந்த உண்மை மிக மோசமாக கசந்தது. அந்த கைதட்டல் நம் ஒவ்வொருவரின் கன்னத்திலும் விழுந்த அறையாகவே பட்டது.

கழிவறைத் தொழிலதிபர் பாத்திரம்... ஆஹா.... போட வைக்கிறது....

ஓயாத அலையாய் மனிதர்கள் பொங்கும் வீதியில், ”மனிதர்களை நம்பி ஆரம்பித்தேன், இது வரை மனிதர்கள் கைவிடவில்லை” என்ற அந்தக் கண் தெரியாத மனிதரின் வசனம் வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு வரி என்றே சொல்லலாம்.



கதைக்கான பாத்திரங்கள் மிக மிகப் பொருத்தமான தேர்வு. படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் வீணடிக்கப்பட்டதாக உணர முடியவில்லை.

குறிப்பாக கனி – அஞ்சலியைப் பாராட்ட புதிதாய் சில வார்த்தைகளைத்தான் நான் தேட வேண்டும், கருங்காலி – வெங்கடேஷ்... சபாஷ் இனி அவர் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். பழ.கருப்பையா நிஜ மனிதர்கள் பலரை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை, அதுவே அந்த பாத்திரத்தின் வெற்றியும் கூட.

மனிதர்களை நம்பி படத்தை இயக்கிய வசந்த பாலனையும், ஐங்கரன் நிறுவனத்தையும் மனிதர்கள் கைவிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

______________________________________

அகம் மறைத்த புறம்












கோபத்தோடும் பயத்தோடும்
யாருக்கும் தெரியாத
பாதி மண் மூடிய கிணற்றுக்குள்

காமம் கொல்லாத சாமியார்
மக்கள் நலன் பாரா மன்னன்
மோகம் கிளறும் நடிகை
கொள்ளைக்கார மந்திரி
நாய் நக்கும் குடிகாரன்
விலை போகும் தலைவன்
மிரட்டும் போக்கிரி
கெட்டுப்போன தண்ணீர்
நாற்றமடிக்கும் காற்று
மண்ணைத் தின்ற இராசயனம்
நியாயம் இல்லா தொலைக்காட்சி
லஞ்சம் வாங்கும் காவல்துறை

எல்லோரையும் சாடி
வெண் காகிதத்தில்
கருப்பு மையில்
கடிதம் எழுதுகிறேன்

இப்படிக்கு என
என் பெயர் இட துளியும்
துணிவின்றி

தனித்தனியே உறையிலிட்டு
முகவரி சரி பார்த்து
வில்லை ஒட்டி அனுப்பி
நெஞ்சு நிமிர்த்தி வீடு செல்கிறேன்

விழித்துப்பார்க்கிறேன்
எல்லாத் தபாலும்
இறைந்து கிடக்கிறது
என் வீட்டு முற்றத்தில்

எழுதும் போது உணராத
என் பேனா மையின் புளித்த நாற்றம்....
இப்போது நாசி நிரடுகிறது...
என் மன நாற்றத்தோடு சேர்ந்து

சுடும் வெம்மை

கடந்த ஐந்து வருடங்களாக பெங்களூருக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், பிப்ரவரி மாத இறுதியில் சென்ற போது நான் சந்தித்தவர்கள் அத்தனை பேரும் கேட்ட ஒரே கேள்வி. “என்ன சார் உங்க ஊரிலேயேயும் இப்படித்தான் கொளுத்துதா வெயில்!!!” கடந்த ஐந்து வருடத்தில் நான் நூறு முறைகளுக்கு மேல் பெங்களூரு சென்றிருப்பினும் ஒரு முறைகூட யாரும் கேட்காத கேள்வி

சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சகோதரி தேவகி, நண்பர் அமரபாரதியோடு பேசும் போதும் அவர்கள் கேட்ட பொதுவான கேள்வி
“ஊர்ல என்னங்க விஷேசம்?” இருவரிடமும் நான் சொன்ன முக்கியமான ஒரே பதில் “பிப்ரவரி இறுதியிலேயே எப்போதும் இல்லாத அளவு வெயில் சகிக்க முடியாத அளவு கொளுத்துகிறது“ என்பதுதான்.

வெயில் குறித்து இது வரை என்னிடம் புகார் ஏதும் இருந்ததில்லை, ஆனால் இந்த முறை வரும் கோடை காலத்தில் நாம் சந்திக்கப் போகும் வெயில் மிகக் கடுமையாக இருக்குமென்றே தோன்றுகிறது. வெயில் குறித்து வரும் தகவல்களும் இதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன.

//அதிக அளவிலான கரியமில வாயு வெளியேற்றமே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிற நிலையில், மீத்தேன் வாயு வெளியேற்றமும் முக்கிய காரணியாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் எதிர்பார்த்ததைவிட மீத்தேன் வாயு அதிக அளவில் வெளியேறி வருவதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 8 மில்லியன் டன் மீத்தேன் வாயு இங்கிருந்து வெளியேறுவதாகவும், இதனால் புவி வெப்பம் மேலும் அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கிழக்கு சிபேரியன் அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் உறைந்து கிடக்கும் மீத்தேன் வாயு படிமங்களில் இலேசான பிளவு ஏற்பட்டால் கூட, அதிலிருந்து வெளியேறும் வாயுவினால் புவி வெப்பம் உடனடியாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

புவி வெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நாடுகளின் தலைமை அது குறித்து எந்த விதமான அக்கறையும் காட்டத் தயாரில்லை என்பது கண்கூடு. அதை மிக அழுத்தமாக தென்னாப்பிரிக்காவில் நடந்த கூட்டத்தில் நிரூபித்துமிருக்கிறார்கள்.

இன்னும் 30 ஆண்டுகளில் இமயமலை உருகிவிடும், 40 வருடங்களில் உலகின் மொத்த வெப்பம் 3-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கையில் கடல் மட்டம் குறைந்தது 4-6 அடி வரை உயரும்.அப்படி உயரும் போது கடலோர நகரங்களின் நிலை என்னவாக இருக்கும்? 

இதுபோல் அடிக்கடி சுவாரஸ்யமின்றி துணுக்குச் செய்திகளாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். இது போல் எத்தனையோ பயமுறுத்தல்களை மிக அநாயசமாக இதனால் எனக்கென்ன வந்துவிடப்போகிறது என்ற மனோநிலையோடு கடந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆனால், புவி வெப்பம் மிகக் கடுமையான தாக்கத்தை பருவ நிலையில்தான் ஏற்படுத்தப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பருவ நிலையில் குளறுபடியாகும் போது, பருவ மழையை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் நம் போன்ற நாடுகளின் விவசாயம் என்னவாகும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. மாறிவரும் பருவ மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கும் போது, இத்தனை கோடி மக்களுக்கான உணவுத் தேவையை எது கொண்டு ஈடு செய்யப்போகிறோம்.



இருக்கும் நிலையை கொஞ்சம் அனுசரித்து இந்தத் தலைமுறை எப்படியோ முட்டி மோதி கடந்து போய்விடலாம். ஆனால் பாராட்டி, சீராட்டி, கொண்டாடி வளர்க்கும் நம் வாரிசுகளுக்கு எந்த வித உலகத்தை கையளித்துச் செல்லப்போகிறோம்.

இது குறித்து சலிக்கச்சலிக்க பேசி ஓய்ந்த போது மனதில் வலியோடு படிவது “எல்லாம் காலம் கடந்து விட்டது, இனி நாம் பேசி என்ன செய்து விடப்போகிறோம்” ”தலைக்கு மேலே வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது, என்ன செய்யப்போகிறோம், இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோம்” என்ற கையலாகத்தனத்தின் கசடுகள் மட்டுமே. எப்போதெல்லாம் இது குறித்து பேசுகிறோமோ, சிந்திக்கிறோமோ அப்போதெல்லாம் ஒரு அயர்ச்சி மனதில் கனமாய் வந்தமர்கிறது.

இது உண்மைதானா... காலம் கடந்து விட்டதா? இனி எதுவுமே செய்ய முடியாதா? அல்லது இதற்காக எதுவுமே செய்ய நமக்கு விருப்பம் இல்லையா? மனதில் குடியேறும் அயர்ச்சியை துரத்தியடிக்க என்ன செய்யவேண்டும்.

விடை தேட எந்த நிலத்தில் விதை போடுவது?, இதற்கான நியாயமான கோபக் கனலை எந்தப் பொந்தில் யார் வைப்பது?.
___________________________________________________

பரண் (BARAN) ஈரான் திரைப்படம்


ஈரானின், தெஹ்ரான் நகரத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடம்தான் கதையின் களம். ஈரானியர்களான கட்டிடப் பணியின் ஒப்பந்தக்காரர் மேமர் (Memar). தேநீர் பையன் லத்தீப்(Lateef), ஆப்கானிஸ்தான் அகதிகளான நஜாப் (Najaf), சுல்தான்(Soltan), ரகமத்(Rahmat) இவர்கள்தான் கதையின் முக்கியப் பாத்திரங்கள்.

ஈரானில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை பணியில் அமர்த்த முக்கியக் காரணம் மிககுறைவான சம்பளத்தில் ஈரானியர்களை விட அதிக நேரம் வேலை செய்வதுதான். (நம் ஊரில் இருக்கும் பீகார் தொழிலாளிகள் நினைவுக்கு வருகின்றனர்). ஆனால் ஆப்கானிகளை வேலைக்கு வைப்பதை அரசு அனுமதிப்பதில்லை. அடிக்கடி ஆய்வுக்கு அதிகாரிகள் வருவதும், அப்படி வரும்போது ஆப்கான் அகதிகளை அந்தக் கட்டிடத்துக்குள் ஒளித்து வைப்பதும் வாடிக்கை.

கட்டிடத்தில் வேலை செய்பவர்களுக்கு தேநீர் தயாரித்து தருவதும், உணவுகளை விநியோகிப்பதும் லத்தீப்பின் வேலை. கட்டிடப் பணியில் தவறிவிழுந்த ஒரு காலை இழ்ந்த நஜாப்பின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு சுல்தான் கெஞ்சிக் கேட்டதையொட்டி சிறுவனாக இருக்கு நஜாப்பின் மகன் ரகமத்துக்கு மேமர் வேலைதர, ஏதோ காரணத்தால் அவனை லத்தீப்புக்கு பிடிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் லத்தீப்பின் தேநீர் தரும் வேலை பறிக்கப்பட்டு ரகமத்திடம் கொடுக்கப்பட்டு, லத்தீப்புக்கு கட்டிட வேலை தரப்படுகிறது. வேலையாட்கள் அனைவரும் ரகமத்தின் தேநீரை கொண்டாடுகின்றனர். வேண்டா வெறுப்பாக வேலை செய்யும் லத்தீப், ரகமத்திடம் இருந்து வரும் தேநீரை வாங்கிய வேகத்தில் கீழே கொட்டுகிறான். ரகமத்தின் சமையல் கட்டில் இருக்கும் பொருட்களை உடைத்து எறிகிறான்.

அலட்டிக் கொள்ளாத ரகமத் சமையல்கட்டை புதிதாக நிர்மாணிக்கிறான். மிக நேர்த்தியாக உணவு பரிமாறுகிறான். ரகமத் மேல் கடும் வெறுப்பும் கோபமும் லத்தீப்புக்கு வருகிறது. எதேச்சையாய் சிமெண்ட் மூட்டை தூக்கும் போது கணநேரத்தில் மின்னலாய் கவனிக்கிறான், சமையல் அறையின் கண்ணாடியில் ஒரு பெண் தலைவாரிக் கொண்டிருப்பதை, அதிர்ச்சியில் ஆடிப்போகிறான், அப்போதுதான் உணர்கிறான், நஜாப்பின் மகள் பரண் (Baran) தான் ரகமத் என்ற பெயரில் ஆண் வேடத்தில் குடும்ப சூழ்நிலையின் காரணமாய் வேலைக்குவருவதை. உடனே விடலைத்தனமான ஈர்ப்பு பரண் மேல் ஏற்படுகிறது. அடுத்த நாள் கட்டிட வேலைக்கு வரும் போது மிக நேர்த்தியாக வண்ண உடை, ஷூவென கதாநாயகன்(!!!) போல் வருகிறான். பரணை தொடர்ந்து கவனிப்பதே அவன் வேலையாகப் போகிறது.
ஒரு கட்டத்தில் கட்டிடத்திற்கு ஆய்வு செய்ய வரும் அதிகாரி பரணை ஆப்கானி என அடையாளம் கண்டு  துரத்தி பிடிக்க, பின்னால் துரத்திவரும் லத்தீப் அந்த அதிகாரியைத் தாக்கி பரணை தப்பிக்க வைக்கிறான். பரண் அதோடு காணாமல் போகிறாள்.

அபராதம் கட்டி வெளியில் வரும் லத்தீப் பல இடங்களில் தேடி சுல்தானைக் கண்டுபிடித்து, பரண் (ரகமத்) இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடிக்கிறான். அங்கு பரண் ஓடும் நீரில் இருந்து கல் மற்றும் மரங்களை எடுத்து வரும் மிகக் கடுமையான வேலை செய்து வருகிறாள். அதைக்காண முடியாத லத்தீப் அந்தக் குடும்பத்திற்கு உதவ முடிவு செய்து தான் இதுவரை வாங்காமல் வைத்திருந்த சேமிப்பு பணத்தை முதலாளி மேமரிடம் பொய் சொல்லி வாங்கிச் சென்று சுல்தானிடம் கொடுத்து நஜாப்பிடம் கொடுக்கச் சொல்கிறான். நஜாப் இதை வாங்கமாட்டார் என்று சுல்தான் சொன்னபோதும் வற்புறுத்தி கொடுத்து அனுப்புகிறான்.

நஜாப்பை மகிழ்ச்சியோடு சந்திக்கச் செல்லும் லத்தீப்புக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நஜாப் அந்தப் பணத்தை தான் வாங்கவில்லையென்று தன்னைவிட மிக மோசமான குடும்ப சூழ்நிலையில் இருக்கும் சுல்தானை ஆப்கானிஸ்தான் போவதற்காக வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டதாகக் கூறி சுல்தான் கொடுத்த ஒரு காகிதத்தை லத்தீப்பிடம் கொடுக்கிறார். லத்தீப் பிரித்துப்பார்க்கிறான் “கடவுள் மீது ஆணையாக உன் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று இருக்கிறது

இந்நிலையில் மிக மோசமான குடும்ப சூழ்நிலையின் காரணமாக நஜாப் மேமரிடம் பணம் கேட்க, தன்னிடம் பணம் இல்லாததால் மேமர் உடனடியாக பணம் கொடுக்க இயலாத நிலையைச் சொல்கிறார்.

மீண்டும் உதவ நினைத்த லத்தீப் தன் அடையாள அட்டையை விற்று அந்த பணத்தை மேமர் கொடுத்ததாக நஜாப்பிடம் கொடுக்கிறான். அடுத்த நாள் நஜாப் வீட்டிற்கு செல்லும் போது தான் வாகனம் ஏற்பாடு செய்துவிட்டதாகவும் அடுத்த நாள் குடும்பத்தோடு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிச் சென்று விடுவதாகவும் கூறுகிறார்.

வீட்டில் உள்ள பொருட்களை வண்டியில் ஏற்ற லத்தீப் உதவிசெய்கிறான். கடைசியாக வீட்டிலிருந்து அழகிய தேவதையாக கிளம்புகிறாள் பரண். கையில் வைத்திருந்த பை கைதவறி விழுந்து, காய்கறிகள் சிதறுகிறது. லத்தீப்பும் கீழே குனிந்து பொருட்களை எடுத்து கூடையில் போடுகிறான். ஒருகணம் பரண் முகம் பிரகாசிக்கிறது, லத்தீப்பை பார்த்து அழகாய் புன்னகைக்கிறாள், லத்தீப் நிமிர்ந்து பார்க்கும் முன்னர், சட்டென தன் பர்தாவால் முகத்தை மூடிக்கொண்டு, வண்டியை நோக்கி நகர, ஒரு கால் ஷூ சேற்றில் புதைந்து கொள்கிறது, லத்தீப் அந்த ஷூவை சேற்றில் இருந்து எடுத்து துடைத்து அவள் காலின் கீழ் வைக்கிறான், சூவை அணிந்து கொண்டு வண்டியில் ஏறுகிறாள் பர்தா மூடிய முகத்தோடு அந்த பழைய வண்டி வளைந்து வளைந்து செல்வதோடு படம் நிறைவடைகிறது.

பிடித்த காட்சிகள்:
ரகமத் கொடுக்கும் தேநீரை வாங்கிய வேகத்தில் கீழே கொட்டும் காட்சி
சமையலறைக் கண்ணாடியில் ரகமத்தை பெண் என உணரும் காட்சி
சுல்தான் கொடுத்த கடிதத்தை லத்தீப் படிக்கும் காட்சி.
லத்தீப் ஓடும் ஒரு நீண்ட காட்சி
ஊன்றுகோல் வாங்கி வரும்போது காரில் லிப்ட் கேட்பது......  இது போல் பல காட்சிகளைச் சொல்லலாம்


மிக மெல்லிய காதல் கதையும், அகதிகளின் பின்புலத்தில் இருக்கும் வலியுமே இந்த படத்தின் பலம்

பரண் BARAN என்ற 94 நிமிடம் ஓடும் இந்த படத்தை இயக்கியவர் ஈரானின் மிக முக்கிய இயக்குனரான மஜித்மஜிதி. படம் வெளியான ஆண்டு 2002.
 _____________________________________________________________________________

பொறுப்பி : சாட்டில் எப்போது வந்தாலும் உலகப்படங்கள் பார்த்தீங்களா என அன்பாய் கும்மும் பதிவர் கும்க்கி மற்றும் உலகப்படங்களின் மிகப்பெரிய ரசிகர் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி
 _______________________________________________________

நிம்மதி சூழ்க..

தாங்க முடியாத இழப்பான மரணத்தை எதிர்கொள்ளும் கொடிய தருணத்தில் மனதில் நிம்மதி சூழ்ந்திட வைரமுத்து எழுதிய இந்த பாடல் மனதின் சோகத்தை நிறைய கரைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடல் சேர்க

எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக

எச்ச்ங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன் !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மயிலிறகு குரலால்
மனப்புண்ணுக்கு மருந்திடும்
மயக்கும் சுதாவின் குரலில் அஞ்சலி இதோ:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெஞ்சு நிறைக்கும்
கண்ணிய அஞ்சலி
விஜய் யேசுதாஸின் வெண்கலக் குரலில் இதோ:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: வைரமுத்து, பாடகர்கள் விஜய் யேசுதாஸ், இசை: இனியவன்.
நன்றி : ஆத்மா அமைப்பு 


_____________________________________

ஒரு வெற்றியும் தோல்வியும்


அது ஒரு வழக்கமான செவ்வாய்கிழமை, பணி முடிந்து கிளம்பும் போது, ஒரு செய்தி என் அரட்டை பெட்டியில் விழுந்தது

“அண்ணா, சாரு உங்களுக்கு பிடிக்குமா
எனக்கு சுத்தமா பிடிக்காது, ஏன்?
“அந்த ஆளு ஒரு சாமியாருக்கு சொம்பு தூக்குனாராம், அந்த சாமியார் இப்போ ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டாராம், சன் நியூஸ் பாருங்க

அப்பொழுது ஆரம்பித்த ஒரு வித போராட்டம் கிட்டத்தட்ட ஓய்ந்த நிலையில் யோசிக்கிறேன்.

தொலைக்காட்சியில் பார்த்து, அதை வாய் கொள்ளாச் சிரிப்போடு முடிந்த வரை அனைவரிடமும் பகிர்ந்து, அதன் பின் இணையத்தில் தேடி இன்னும் கூடுதல் காட்சிகள் பார்த்து, முதல் நாள் முகம் மறைந்திருந்த பெண்ணின் முகம் தெரிந்த போது கூடுதல் ஆர்வத்துடன் பார்த்து (ரசித்து), அடுத்தடுத்து நிறைய பதிவுகளைப் படித்து, சிலவற்றிற்கு பின்னூட்டமும் போட்டு ஒருவழியாய் திருவிழாவைக் கொண்டாடிய மனநிலையோடு ஓய்ந்து மனம் அமைதிப் பட்ட நேரத்தில், எனக்குள் ஏன் இத்தனை போராட்டம் என நினைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் வெட்கமாய் இருக்கிறது.

அந்த சாமியாரை ஒரு போதும் நான் வணங்கியதில்லை, போதனையை கேட்டதில்லை, ஆனாலும் அந்த மனிதன் மாட்டிக்கொண்டபோது மகிழ்ச்சி, குதூகலம், கோபம், வெறுப்பு என சகலமும் என்னுள்ளே வந்து போனது. அது எதன் பொருட்டு என்னுள்ளே நிகழ்ந்திருக்கும்.

என்னை விட குறைந்த வயதில் மிகப் பெரிய அளவில் சொத்தும், புகழும் சேர்த்ததின் விளைவாகவோ அல்லது ஒரு சினிமா நடிகையுடன் கொண்ட உறவின் மேல் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத பொறாமையின் வெளிப்பாடாக என் உணர்வுகள் வர்ணம் மாறியிருக்குமோ?

அடுத்து ஊரில் உள்ள பணக்காரர்கள் கொண்டாடிய ஒருவன், வெறும் ஐந்து நிமிட படத்தில் சிதறுண்டு போனதை நினைக்கும் போது, ங்கொய்யாலே ஒரு மனிதனின் பேச்சு பற்றும் சில சித்து விளையாட்டுத் தனத்தை எந்தக் கேள்விக் குட்படுத்தாமல் புனிதப்படுத்தி, என்னமா ஆட்டம் போட்டீங்கஎன்று நினைத்து ரௌத்திரம் கொண்ட மனதின் மாய ஆட்டமாகவும் இருக்கலாம்.

எழுத்து (அ) பேச்சுக்கும் தன்னுடைய செயல்பாட்டிற்கும் அதிக இடைவெளி கொண்டிருக்கும் மனிதர்களோடு நெருங்குவது எனக்கு இயலாத ஒன்று. அந்த நிமிடம் வரை அந்த சாமியாரை கொண்டாடிய எழுத்தாளன், அடுத்த சில மணி நேரங்களில் தன் நிலைப்பாட்டை திருப்பிப் போட்டதை நினைக்கும் போது, மனக்குரங்கு அந்த எழுத்தாளனை ஓங்கி ஓங்கி குத்தி எக்காளமாகச் சிரித்தது...

ஒரு வழியாய் எல்லாம் இப்போது அடங்கிப் போயிருக்கிறது. அவர்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் இதழோரம் ஒரு குறும் புன்னகையோடு கடக்க முடிகிறது. இதில் வென்றது மனதா, உள்ளே ஆடிய உணர்வா? என்று பார்த்தால் அது இரண்டும் இல்லை, காலம்தான் மௌனமாய் அதன் போக்கில் இதையும் இப்போது கடந்து செல்ல துணை புரிகிறது.
_____________________________________________

பகிர்தல் (08.03.2010)

குட்டு:
உத்திரப் பிரதேசத்தின் ஒரு ஆசிரமத்தில் இலவசமாக அளிக்கப்பட்ட உணவு மற்றும் பாத்திரங்களை வாங்க ஏற்பட்ட நெரிசலில் 65 பேர் இறந்தது மிக மோசமான சம்பவம். அதைவிட மோசமான நிகழ்வு, அப்படி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசிடம் நிதியில்லை என முதல்வர் மாயாவதி பெருமையாகத்(!!!) தெரிவித்துள்ளார்.

இதே முதல்வர் பெருந்தகைதான் தன்னுடைய உருவச் சிலையையும், தன் கட்சி சின்னமான யானை சிலையையும் வைக்க பல கோடி ரூபாய் செலவு செய்தது யாருக்கும் மறந்திருக்காது.

....ம்ம்ம் என்ன செய்யப்போகிறோம்.... இதையும் மவுனமாக கடந்து செல்வோம்


ஜொள்ளுதுர:
விஜய் தொலைக்காட்சியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள், வித்தியாசமாக அமைவதுண்டு. சமீபத்தில் ஒளிபரப்பாகும் ”வாங்க பேசலாம்” நிகழ்ச்சியும் அப்படிப்பட்ட ஒன்றே. குறிப்பாக சில வாரத்திற்கு முன் ஒரு நிகழ்ச்சியில், மென்பொருள் துறையில் மாதம் 70,000 சம்பாதிக்கும் ஒருவர் கோடீஸ்வரராக முடிவதில்லை, அதேசமயம் 70,000 ரூபாய் சம்பளமாகப் பெரும் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் எப்படி சில ஆண்டுகளில் கோடீஸ்வரராக முடிகிறது என்ற நேரிடையான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் மழுப்பியதை மிக அழகாக ரசிக்க முடிந்தது.

அதே நிகழ்ச்சியில், இந்த வாரம் நடிகை ஷகீலாவை விருந்தினராக வைத்துக்கொண்டு டெல்லி கணேஷ்ம், பெரியார்தாசனும் ஜொள்ளு என்ற பெயரில அடித்த லூட்டி சகிக்கமுடியவில்லை. இருவருக்குமே ”ஜொள்ளுதுர” பட்டம் கொடுக்கலாம். ”ங்கொய்யாலே! கொடுத்த காசுக்கு மேல ஜொள்ளுராங்கடா”


யூத்து:
நித்தியானந்தா-ரஞ்சிதா குறித்த ஆபாச காணொளி குறுந்தகடுகள் விற்பனையில் சக்கை போடு போட்டதாக தகவல். குறுந்தகடுகளை மிக ஆர்வமாக வாங்கி பார்த்தவர்களில் அதிகப்படியானவர்கள் 45-60 வயது நபர்கள் என்பது (என்ன நியாயப்படுத்தினாலும்) எனக்கு ஆச்சரியமாக இருந்த செய்தி. ஆனால், இதற்கெல்லாம் கூடவா கணக்கெடுப்பார்கள். அப்போ! இணையத்துல நேரிடையாக பார்த்து, மின்னஞ்சல் மூலம் இணைப்புகளை பகிர்ந்துகொண்ட நம்மை மாதிரி(!!) யூத்துகள் இந்த கணக்கெடுப்பில் வரவில்லையோ!

அடர்கருப்பு:
தவறவிடாமல் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பூக்களில் முக்கியமான ஒன்று, தோழர் காமராஜ் அவர்களின் அடர்கருப்பு வலைப்பூவும் ஒன்று.

 

வாசிக்கும் பொழுதெல்லாம் முழுக்க முழுக்க யதார்த்தம் மட்டுமே மனதில் மிஞ்சி நிற்கும். சாதா(ரணமான) மனிதர்களின் வாழ்க்கையை மிக எளிதாக, மிக இயல்பாக போகிற போக்கில் பதிவு செய்து போகிறார். வாக்கிய சங்கிலிக்கும் தேர்ந்தடுக்கும் வார்த்தைகள் புதிதாய் இருந்தாலும் அந்நியப்படாத தன்மை இவருடைய பலம். வாசிக்கும் பொழுதெல்லாம் கரிசல் மண்ணின் வாசம் நம் நாசி நெருடுவது தவிர்க்க இயலாத ஒன்று.

________________________________________________________________

தெரிந்தும் தெரியாதது


தெரிந்தும் தெரியாதது....
எனக்குத் தெரியும் இரு நாளாய்
இடைவிடாத பணி உனக்கு

மாலைப் பேருந்தில் கவனித்தேன்
களைத்துத் துவண்டு தூங்கிச்சென்றதை...

எதையும் நினைக்க நேரமில்லா உனக்கு
என்னையும் நினைக்க நேரமில்லை

எனக்கு இன்னொன்றும் தெரியும்
எதைவிடவும் என்னை அதிகம் நேசிப்பது

இருந்தாலும் ஏனோ...
அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்
நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?


தடுமாறும் கோடு....
இடதில் நீ வலதில் நான்
ஆளுக்கொன்றென இணையாய்
வரைந்தோம் இரு கோடுகள்...

இணையாய் இருந்தும்
இணையாத கோடுகளாய்
நானும் நீயும்....

எங்கோ நீ இருந்தாலும்
இடதுபக்க கோடு கிடக்கிறது
இணையாய் அழிபடாமல்

அழிக்கமனமில்லை, ஆதலால்
வலது கோட்டினை மட்டும்
வளைத்து நீட்டித்துக் கொள்கிறேன்

எல்லோரும் என்
முதுகு தட்டுகிறார்கள்
நீளமாய், நளினமாய் இருப்பதாய்

எனக்கு மட்டும்தானே தெரியும்
நீட்டித்த புள்ளியில் முடிச்சாய்
கோடு கொஞ்சம் தடுமாறியிருப்பது...

____________________________________________