கம்பி வேலி தாண்டுவதில்லை

சிலந்தி வலையை
விரல் கொண்டு கலைப்பது போல்
நம்பிக்கை அனைத்தையும்
விதி கலைத்துக்கொண்டு போய்விட்டது

எந்த மல்லிகை மணம் வீசும்..?
ச‌தை க‌ருகும் வாசனையை சுவாசித்த‌பின்

எந்த‌ குயில் பாடும்..?
கன்ன‌த்தில் கண்ணீர் கோடுகளோடு
கதறும் தாயின் குர‌லுக்குப் பின்

எந்த‌ உண‌வு ருசிக்கும்..?
இற‌ந்த‌ தாயின் மார்பில்
பால் தேடிய‌ குழ‌ந்தையை க‌ண்ட‌ பின்

இடிந்த கூரைகளை
எவர் வந்து வேயப்போகிறார்?

பிணம் மூடிய பள்ளங்களை
யார் வந்து தூர் வாரப்போகிறார்?

இழந்த கற்பை
எங்கே திரும்பப் பெறுவது?

கதறியழுதாலும்
கம்பி வேலி தாண்டுவதில்லை குரல்கள்

54 இருள்களும் 108 வெளிச்சங்களும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதுவும் குருடராய் இல்லாமல் பிறத்தல் மிகப்பெரிய வரம்...

அதுவும் இருண்ட உலகிலேயே வாழும் அவர்களை நினைக்கும் போது மனது கல‌ங்கும்...

அவ‌ர்க‌ளுக்கு வ‌ர்ண‌ம் தெரியாது, வ‌டிவ‌ம் தெரியாது...

ஆனால் நாம் முய‌ற்சி செய்தால்..
முழு ம‌ன‌தோடு உத‌வி செய்தால்... என்ற‌ எண்ண‌த்தோடு

எங்கள் சுப்ரீம் அரிமா சங்கத்தில் கண் தான திட்டத்திற்கு தலைவராக 2008 ஜூலை முதல் 2009 ஜூன் முடிய ஒரு வருட காலத்திற்கு... பணிபுரிய வலிய நானே முன்வந்தேன்...

ஒரு சேவை அமைப்பில் வெறுமென உறுப்பினராக மட்டுமே இல்லாமல், சுவாசிக்கும் காற்றுக்கு நன்றிக் கடனாய் சமூகம் நோக்கிய சேவை எண்ணம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியான பிடிமானம் என்னை உந்தியது...

கடந்த ஒரு ஆண்டில் குறைந்தது 100 ஜோடி கண்களாவது பெற வேண்டும் என்ற முழக்கத்தோடு துவங்கினேன்.... முந்தைய வருடங்களில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே கண் தானம் பெற்று வந்திருந்தோம். இலக்கு 100 ஜோடி கண்கள் என்றபோது எனக்கே கண்ணை கட்டியது. நாட்கள் நகர, நகர உடன் இருந்த உறுப்பினர்களும் ஒத்துழைக்க ஆரம்பித்தனர்...

ஒருவர் இறந்து 6 மணி நேரத்திற்குள் கண்களை தானமாக எடுக்க வேண்டும். ‌பெரும்பாலும் நள்ளிரவில்தான் அழைப்பு வரும். அதுவும் குளிர்காலத்தில் அர்த்த ஜாமத்தில் தான் அழைப்பு வரும். உடனே அரசன் கண் வங்கிக்கு தகவல் சொல்லி, செவிலியர்களை நடு நிசியில் எழுப்பி, மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு சென்று கண்களை எடுத்து வரவேண்டும்.

குறிப்பாக எங்கள் உறுப்பினர்களில் தர்மராஜ், சசிகலா தனபாலன் மற்றும் தனவேல் முருகன் ஆகியோர் அதிக அளவில் கண்தானம் பெற உழைத்தனர். தங்களுக்கு தெரிந்து ஒரு மரணம் நிகழ்ந்திருந்தால் உடனடியாக அந்த குடும்பத்தினருக்கு கண் தானத்தின் தேவையை புரிய வைத்து (சில சமயம் கடும் போராட்டம் மற்றும் தமாஷ்கள் நடக்கும்) கண்களை தானம் கொடுக்க வைத்தனர்.

மிக பெரிய சுவாரஸ்யம் சில சமயம் நடக்கும், ஒருமுறை ஒரு பாட்டியின் கண்களை அந்த குடும்பத்தினரை ஒருவழியாக ஒத்துக்கொள்ள வைத்து கண்களை தானமாக எடுத்து வந்தோம், அடுத்த நாள் இறந்து போன பாட்டி தன் பேத்தியின் கனவில் வந்து "அடப்பாவிகளா! ஒரு கண்ணையாவது விட்டிருக்கக்கூடாதா? ரெண்டு கண்ணையும் அந்த பாவிங்க (நான் தான்)புடுங்கிட்டு போயிட்டானுங்களேனு" சொல்லுச்சாம், அதனால அந்த பேத்தி பயந்து போய், காய்ச்சல் கண்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அடுத்த முறை அந்த குடும்பத்தினரின் உறவினர் வீட்டில் மரணம் நிகழ்ந்த போது கண் தானம் எடுக்க போக.... நல்ல வேளை என்னை பிடித்து கட்டிவைக்கவில்லை, ஆனாலும் பேசிப்பேசி அங்கேயும் கண்களை தானம் பெற்று விட்டோம்.

குறிப்பாக திருமதி. சசிகலா தனபாலன் அவர்கள் தான் வசிக்கும் பகுதியில் மரணத்திற்காக ஒரு வீட்டில் பறை சத்தம் கேட்டாலே, தானே அந்த வீட்டிற்கு வலிய சென்று தன்னை அரிமா சங்க உறுப்பினர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கண் தானத்தின் அருமைகளை எடுத்துகூறி தானமாக கண்களை பெற்றதும் உண்டு.

இப்படியாக போராட்டம், புரியவைத்தல், சுவாரஸ்யம் என இலக்கு வைத்த 100 ஜோடிகளில் 54 ஜோடி கண்களை இதுவரை எடுத்துள்ளோம். கண் தானம் பெற்றுத்தந்த உறுப்பினர்களை பாராட்டி ஈரோட்டில் பிரபலமான டிப்டாப் செலக்ச‌ன் நிறுவன பங்குதாரர் அரிமா.சண்முகம் அவர்கள் தன் சொந்த செலவில் விலை மிகுந்த பரிசுகளை 54 தடவையும் வழங்கினார்.

கண் தானம் பெறுவதில் அதிக எண்ணிக்கையோடு முன்னிலையில் இருந்த தர்மராஜ் அவர்களின் தந்தையாரின் கண்கள் தான் 54வது ஜோடியாக இந்த ஆண்டு இறுதியாக எடுக்கப்பட்டது.

எங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற 54 ஜோடி கண்களை நப‌ருக்கு தலா ஒன்று வீதம் 108 நபர்களுக்கு பொருத்தியதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வெளிச்சம் கண்டிருக்கிறது. தானம் கொடுத்த 54 ஆத்மாக்களும், பார்வை பெற்ற 108 குடும்பங்களில் குலதெய்வமாக வணங்குதலுக்குரியவை.

ஊர் கூடி தேர் இழுத்தோம்.... சிறிது தூரம் கடந்திருக்கிறோம். இதுவொரு நெடிய பயணம்.

எங்கள் கைகளோடு உங்களின் உறுதியான உள்ளமும் சேர்ந்தால் புதியதொரு உலகம் விடியும்....

கண் தானத்திற்கு உதவுங்கள். தயவுசெய்து.......

இன்னொரு 37 ரூபாய் 40 காசு தள்ளுபடி

இன்னைக்கு காலைலே.... ஒரு 11 மணியிருக்கும்...

நம்ம வடிவேலு கணக்கா தேமேனு வேலையப்பார்த்துக் கிட்டிருந்தேன். ஒரு போனு வந்துதேனு நாம்பாட்டுக்கு பேசிக்கிட்டிருந்தேன். கொஞ்சம் டிப் டாப்பான ஒரு ஆளு வந்து கண்ணாடி கதவ தட்டி "எக்ஸ்கியூஸ் மீ சார்" னான். நானும் டிப் டாப்பா இருக்கானே, நல்லவனாத்தான் இருப்பானோன்னு நம்பி "உள்ள வா" னு தலைய ஆட்டிட்டேன். சடக்குனு உள்ள வந்தவன், படக்குனு என் கைய புடிச்சு குலுக்கிப்புட்டு, "குட்மார்னிங் சார்" னான். அவன் படக்குனு கைய புடிச்சதுல டபுக்குனு எஞ்செல்போனு கீழ உளுந்துடுச்சு....

நாமதான் கோவப்படக் கூடாதுனு பதிவு போட்டிருக்கமேனு.... பல்லு, நாக்கு எல்லாத்தையும் கடிச்சிக்கிட்டு...

"என்ன" என்றேன்...

திரும்பவும்.... "எக்ஸ்கியூஸ் மீ சார்..... என்று ஆரம்பித்தான்...

அடங்கொய்யால... திரும்பவும் ஆரம்பிக்கிறானேனு நினைச்சுக்கிட்டே..

"ம்... என்ன சொல்லு" னேன்

"நாங்க‌ பென்டகன் கம்பெனியிலிருந்து வர்றோம்... ஒரு ஸ்பெசல் ஆஃப்பருக்கு உங்கள சூஸ் பண்ணியிருக்கோம், பார்த்தீங்கனா சார்... இந்த புக்க 70 சத ரேட்ட குறைச்சு உங்களுக்கு 2300 ரூபாக்கு தர்றோம், அதுவும் நீங்க ஏற்கனவே ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி (ஏற்கனவே ஏமாந்து போயி வாங்கி அலமாரியில வச்சிருந்தத பயபுள்ள அதுக்குள்ள எப்படி பார்த்தானோ?) வச்சிருக்கிறதனாலே உங்களுக்கு இன்னொரு 37 ரூபாய் 40 காசு தள்ளுபடி கெடைக்கும் சார்" னு தெளிவா தான் கத்து கிட்ட மேட்டரை எங்கிட்ட விவசாயம் பண்ணிப் பார்க்க‌ ஆரம்பித்தான்....

"கைப்புள்ள... கன்ட்ரோலா இரு, ஏமாந்திராத" னு நானும் ஆன வரைக்கும் சமாளிச்சு.... போராடி கடைசியா அந்த புக்க வாங்காமலேயே திருப்பியனுப்பிச்சிட்டு... அப்பாடானு நிம்மதியா உட்கார்ந்தா

போன் அடிச்சது, எடுத்துப்பார்த்தா தங்கமணி. எடுத்து என்னனு கேட்டா... "எப்போ சாப்பிட வருவீங்கனு" ரொம்ப அக்கரையா கேட்டுது அம்மணி... என்ன‌டா என்னைக்குமில்லாமா இன்னைக்கு புதுசானு நினைச்சிகிட்டே ப‌தில் சொல்லும் போதே...

அந்த பக்கம் "ஏங்க‌... நான் ஒன்னு வாங்கியிருக்கேனே"னு ரொம்ப சந்தோசமா சொல்லுச்சு. லேசான‌ ப‌ய‌த்தோட‌ "என்ன‌" னு கேட்டேன்.

"ஒன்னுமில்லீங்க‌... நம்ம ஏரியால ஒரு பொண்ணு புக்ஸ் எல்லாம் சேல்ஸ்க்காக கொண்டு வந்திருந்துச்சு, பக்கத்தில எல்லாரும் வாங்கினாங்க.... நானும், நீங்க துணியெடுக்க‌ குடுத்த‌ ப‌ண‌த்தில‌... ரொம்ப‌ யூஸ்புல்லா இருக்குமேனு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி ஒன்னு வாங்கியிருக்கனுங்க"

இடுங்கிய‌ க‌ண்ணை இன்னும் கூடுத‌லாக‌ இருளாக்கிய‌து...




வீதியோரம் நின்று
விழிகள் வீதியில் மேய
நண்பனோடு அரட்டையில்
ஆழ்ந்திருந்த அந்தி நேரம்...

காலையில் எடுத்துச்சென்று...
இன்னும் விற்காத முறுக்கு
பாறாங்க‌ல்லாய் கூடைக்குள்
கிழ‌வியின் த‌லைமேல்....

"சாமீ....
கொஞ்சம் முறுக்கெடுங்கப்பா..
ந‌ல்ல‌ முறுக்கப்பா.."
ஒடுங்கிய‌ க‌ண்ணில்
ஒரு நம்பிக்கை ஒளி


என் நாக‌ரீக‌ வெளிச்ச‌ம்
இடுங்கிய‌ க‌ண்ணை இன்னும்
கூடுத‌லாக‌ இருளாக்கிய‌து...

தளராத நம்பிக்கையோடு
தளர்ந்த நடையோடு நகர்கிறாள்....

கிழவியின் கூடையில்
விற்காத முறுக்கு அப்ப‌டியே..

வாங்காத‌ முறுக்கு
என் மனதில் பிசுபிசுப்பாய்
செரிமானம் ஆகாமல்...

உங்கள் வாழ்க்கை மீது புகார் உள்ளதா.....?

எனக்கு வாழ்கையில் எதுவும் திருப்திகரமாக அமையவில்லை என்ற புகார் உள்ளதா?

வாழ்க்கையையே களவு கொடுத்த இவர்களுக்கு.....

என்னுடைய இணைய முகவரிக்கு வந்த படங்கள் இவை....









ஒரு வெறுமையை ஆழ மனதில் பதிய வைக்கிறது....

சுதந்திர இந்தியாவில் இவர்களின் சுதந்திரத்தை திருடியதாக‌
யாரை நோக்கி விரல் சுட்டட்டும்....

ஒரு விரல் சுட்டும் போது....
மூன்று விரல்கள் என்னையே குறுகுறுப்போடு குறிபார்த்து
"இதற்காக நீ என்ன கிழித்தாய்" என்று வன்மையாக கேட்கிறது

குளிர்சாதன அறையிலிருந்து மடிக்கணினி மூலம் என்ன தீர்வை நாம்
கொடுத்துவிட போகிறோம்.

கற்கை நன்றே.... கற்கை நன்றே....பிச்சை புகினும் கற்கை நன்றே....

கற்றால் தானே பிச்சை எடுத்தாவது கற்க வேண்டும் என்பது தெரியும்....
கற்காததால் பிச்சை எடுத்தாவது கற்க வேண்டும் என்பது தெரியவில்லையே (சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் லாஜிக்..... கீப் இட் அப்)....