இந்தப் பிள்ளைங்க எப்படித்தான் வாழப்போறாங்களோ!

பொதுவாகவே மனிதர்கள் வாய்ப்புக்கிடைக்கும் தருணங்களில் சக மனிதர்கள் குறித்து மீது ஏதேனும் ஒரு காரணத்தை முன் வைத்து புகார் சொல்பவர்களாவே அறியப்படுகின்றனர். தமக்கு சமமாக இருக்கும் மனிதர்களின்பால் அப்படியான புகார்கள் இருப்பதொன்றும் பெரும் ஆச்சரியம் தருவதில்லை. ஆனால் நாற்பது முதல் அறுபதுகள் வரை வயது கொண்டோர் தற்போது அடுத்தடுத்த தலைமுறைகளாக இருக்கும் பதின் பருவம் மற்றும் இருபதுகளில் இருப்போர் மீது ஏன் கை நிறைய புகார்களை வைத்துகொண்டு போகுமிடமெல்லாம் பரிமாறுவதை பல தருணங்களில் பாத்திருப்போம். என்ன வகையான புகார்கள் என்பவை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தப் புகார்களைக் கடந்து அவர்களிடம் கற்றுக்கொள்ள நமக்கு எதுவுமே இல்லையா எனும் கேள்விக்கான விடைதேட ஆரம்பித்தால் வேறொரு உலகம் நமக்கு வசப்படும்.

ஒருதலைமுறையினரை குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டவிடாமல் வைத்திருந்த சில வெற்று நம்பிக்கைகளையும், காரணமற்ற கட்டுப்பாடுகளையும், தேவையற்ற திணிப்புகளையும் எளிதில் கேள்விக்குட்படுத்தும் தலைமுறையினராக அவர்கள் இருப்பதுவே பல நேரங்களில் அவர்களிடமிருந்து முரண்பட வைக்கின்றது என்பது அவர்கள் பிழை மட்டுமே அல்ல.

இந்த முரண்பாடுகள் முளைக்கும் தருணங்களில், தம்மோடு இணக்கமாக உரையாடி புரிதலை ஏற்படுத்த முனையும் மூத்த தலைமுறையோடு எளிதில் ஒட்டிக்கொள்கின்றனர். அவர்கள் குரல் இவர்களின் செவிகளில் நுழைகின்றது. அதேசமயம்நாங்கள் சொல்வது மட்டும்தான் சரிஎனும் தலைமுறையோடு அவர்கள் பெரிதாக பிணக்கு எதுவும் கொள்வதில்லை, மிக அமைதியாகப் புறக்கணிக்கின்றனர். சப்தமின்றி அறைக்கதவையும், மனக்கதவையும் மூடி தாழிட்டுக்கொள்கின்றனர். அமைதியான புறக்கணிப்பு என்பதைப் பழக்கப்படாத மூத்த தலைமுறை இயல்பாகவே பதட்டம் கொள்கின்றது.

இப்படியாக பதட்டமடையும் தலைமுறையினரிடம் நான் தன்மையாக எடுத்துச் சொல்வது, முதலில் பதட்டத்தைக் குறையுங்கள் என்பதைத்தான். அப்படிச்சொன்னது, இயல்பாகவே இந்த வயதில் பதட்டம் வருகின்றது என்கின்றனர். புன்னகையோடு அவர்களிடம் வலியுறுத்தலாகச் சொல்வது, இந்த வயதில் பதட்டம் கொள்ளாதீர்கள் என்பதைத்தான்.




இந்த உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டேயிருக்கின்றது. இந்த உலகத்தில் உள்ளவைகளும், அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக்கொண்டே வந்திருக்கின்றன. அப்படி தகவமைக்கும் தன்மை கொண்ட எதுவும் முற்றிலுமாக வீழ்ந்துவிடுவதில்லை. மனித குலத்தின் மிகப் பெரிய சிறப்பம்சமாக நான் உணர்வது அப்படியான தகவமைப்புத் தன்மையை தன்னில் கொண்டிருப்பதுவே.

ஆகவே, தம்மிடம் இருக்கும் அளவுகோல்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ‘இந்தப் பிள்ளைங்க எப்படித்தான் வாழப்போறாங்களோ!’ என ஆரம்பிக்கத் தேவையில்லை. முந்தைய தலைமுறைகளும் இதே சொற்களை வெவ்வேறு வடிவங்களில் ஒருகட்டத்தில் பயன்படுத்தியிருக்கும் சாத்தியமுண்டு.

ஒருதலைமுறையில் மிக மிகக் கடினமாக இருந்தவொன்றை இன்னொரு தலைமுறை நொடிப்பொழுதுகளில் மிக எளிதாக கையாள்கின்றது மறுக்க முடியாத நிதர்சனம். பல தருணங்களில் நான் சொல்லும் உதாரணம் ஒன்றை இங்கு சுட்ட விரும்புகின்றேன். ஒருகாலத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்காக சில மணி நேரம் வரிசையில் நின்றிருந்தது இன்றும் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இன்று மொபைல் ஃபோன் ரீசார்ஜ் என்பது சில நொடிகளில் அந்த மொபைல் வழியாகவே நடந்துவிடுகின்றது. இதுபோல் அன்று-இன்று எனப்பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டேயிருக்கும். இந்த இரண்டு அனுபவங்களையும் தம் முதல் அனுபவமாக உள்வாங்கும் இருவேறு தலைமுறைகளுக்கான மன இடைவெளிதான் முரண்பாடுகளுக்கான முதல் விதையாக இருக்கின்றது.

எதுவும் அதற்கான நிதானத்தோடும், பொறுமையோடும்தான் நிகழ வேண்டும் என்பதை தம் கொள்கையாக வைத்திருப்போருக்கும், உடனே நிகழும் சாத்தியங்களை கைக்கொள்வோருக்கும் இடையே இடைவெளியொன்று இருந்தே தீரும் என்பதை புரிந்துகொள்ளும் பொறுப்பு யாருக்கு அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டால் போதும்.

நான் கண்ட வரையில் இளம் தலைமுறை முன் தீர்மானத்தோடு இருப்பதில்லை. தம் கோபத்தை நீண்ட நேரம் வைத்து வளர்த்துக்கொண்டிருப்பதில்லை. தம் தேவைக்குயாரும் எதும் சொல்லிடுவாங்களோஎனத் தேவையற்ற பயம் கொண்டு தயங்கிக் கொண்டிருப்பதில்லை. கால மாற்றத்தில் கிடைக்கும் அனைத்துப் புதிய மாற்றங்களுக்கும் பொருந்தும் தன்மையுடையவராக இருக்கின்றனர். உறவுகள் பேணுவதில் தேவையற்ற பசப்புத் தன்மையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கும்.

அப்போ அவர்களிடம் குறைகளே இல்லையா எனும் கேள்வி எழுந்தால் தயவுசெய்து முதல் மற்றும் இரண்டாவது பத்திகளை இன்னொரு முறை வாசிக்க  அன்போடு வேண்டுகிறேன்.

இளம் தலைமுறைகள் குறித்த பதட்டங்களிலிருந்து மீள்வதற்கு நான் பாவிக்கும் முறை, அவர்களின் உலகத்தை அறிந்துகொள்ள முற்படுவதே. அதை அத்தனை எளிதில்லை என்றாலும் தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பது மிகவும் தேவையான ஒன்று.

இணைந்து இனிதே பயணிப்போம்!