ஒரு விதை போட்டால்

கிராமங்களில் பெரு, சிறு, குறு விவசாயி என யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் எப்போதும் ஓர் அறியாமை நிரம்பிய வீம்பு இருப்பதுண்டு. தம் நிலங்களில் விற்பனை செய்வதற்கான பயிர் வகைகள் மட்டுமே விளைவிக்க வேண்டும் எனும் வீம்புதான் அது.

பயன்பாட்டில் இருக்கும் நிலம் முற்றிலும், தாம் காலம் காலமாகச் செய்து வரும் முறையில், அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப, நீர் வசதிக்கேற்ப விவசாயம் செய்து விடும் பழக்கம் தவறில்லை. பெரும்பாலான விதைப்பு என்பது காலங்காலமான பழக்கம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றது. மொத்தத்தில் எதையாவது விதைக்க வேண்டும், பாங்கு பார்க்க வேண்டும், விளைந்ததை அறுவடை செய்து என்ன விலைக்குப் போகின்றதோ அப்படியே விற்றுவிட வேண்டும். உதாரணத்திற்கு சில தருணங்களில் வெங்காயம் கிலோ நூறு ரூபாய்களைக் கடந்து பறக்கும். அதே நாட்களில் தக்காளி ஓரிரு ரூபாய்க்கு விற்பனையாகும். எது எப்போது, என்ன விலைக்கு விற்றது, என்னென்ன காலங்கள், என்னென்ன காரணங்கள் எனும் தரவுகள் 99% பேரிடம் கிடையாது.

நீர் செழித்திருக்கும் நிலமென்றால் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, பாக்கு, கொய்யா. ஓரளவு இருந்தால் குச்சி, மக்காச்சோளம், எள், கடலை, தானிய வகைகள். வானம் பார்த்த பூமியாக இருந்தால் அதற்கேற்ற விவசாயம். சில பகுதிகளில் முற்றிலும் பணப் பயிர்கள், பூ வகைகள், ஏற்றுமதி வாய்ப்புள்ள விவசாயம் அல்லது தோப்பு வகை விவசாயம்.

இதில் வீம்பு என்று எதைச் சொல்கிறேன்? தன் குடும்பத்தினரின் சத்தான உணவுத் தேவைக்கு தம் நிலத்தில் இருந்து எதையெல்லாம் விளைவித்து எடுத்துக் கொள்ள முடியும் எனும் தெளிவு பெரும்பாலும் கிடையாது. மொத்தமாக விதைப்பதும், விளைவிப்பதும், அறுவடை செய்வதும் விற்பனை நோக்கத்திற்காக மட்டுமே எனும் வீம்புதான், விவசாயிகளை சத்துள்ள ஒன்றைச் சாப்பிடக்கூட விடாமல் வெறும் இயந்திர பாணியில் இயக்குகின்றது.

பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை எருமை மேய்ப்பு, கட்டுத்தரை வேலை, வண்டி ஓட்டுதல், குப்பை அள்ளுதல், வயல்களில் வேலை என எல்லாம் செய்ததுண்டு. செய்துதான் ஆக வேண்டும். எல்லோரும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, நாம் மட்டும் சும்மா இருக்க முடியாது. அதனால் வயல்களில் விதைத்தது என்ன, எந்த நிலையில் இருக்கின்றது, எப்போது அறுவடை என்றெல்லாம் தெரியும். அதிகாலையில் மார்கெட்டுக்கும், வாரச் சந்தைக்கும் சைக்கிள்களில் மூட்டை சுமக்க வேண்டும் அல்லது உடன் துணைக்குச் செல்ல வேண்டும். பதினொன்றாம் வகுப்பு விடுதி வாழ்க்கை, பிறகு கல்லூரி, வேலை, தொழில், நகரத்திற்கு இடப்பெயர்வு என இந்த முப்பது ஆண்டுகளில் வயலில் என்ன விதைத்திருக்கிறார்கள், எந்த நிலையில் இருக்கின்றது, எது எப்போது அறுவடை எதுவும் தெரியாது என்கிற அளவுக்கு மாறிப்போனேன். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை கிராமத்திற்குப் போனால் போதும், திரும்பி வரும்போது என்னவெல்லாம் இருக்கின்றதோ அவற்றில் தேவையானவற்றை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.

இந்த நிலையில்... அவ்வப்போது நகர்ப்புற மாடித் தோட்ட விவசாயிகள்(!) தம் தோட்டங்களில் அறுவடை செய்த காய்கறிகளை ஃபேஸ்புக், ட்விட்டரில் காட்சிப் படுத்துவதைப் பார்க்கும்போது, அடச்சே... இந்த மாதிரி நாமெல்லாம் எத்தனை செய்யலாம் எனப் புகை வரும். தோணினா மட்டும் போதுமா, அதற்கு மண்ணில் கால் வைக்க வேண்டுமே.

இந்தச் சூழலில்தான் பெருந்தொற்று முடக்கக் காலம் வந்தது. ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரம் கிராமத்திலேயே தங்க வேண்டிய கட்டாயம். அப்போதுதான் வீட்டருகே இருபது வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத நீளமான ரிட்டயர்ட்வயல் கண்ணை உறுத்தியது. ஒரு பக்கம் வேலி, மற்ற பக்கம் கட்டுத்தரை, வீடு, வாசல் பயன்பாட்டு ஆக்கிரமிப்பு என்று ட்ராக்டர் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாத மூலை அது. ஒரு ஓரத்தில் பெரிய மா மரம் மட்டும் உண்டு. ஆகஸ்ட் முதல் வாய்க்கால் தண்ணீர் வந்து, மழையும் பெய்து இணைந்து மேலே இருக்கும் வயல்களிலிருந்து வரும் உபரி நீர் மூன்று நான்கும் மாதங்கள் அதில் குளம் போல் தேங்கி நிற்கும்.

ஏப்ரலில் வறட்சிதான். எனினும் அக்டோபர் மாதத்தில் வரும் தண்ணீரைக் கணக்கில் கொண்டு, வேலி ஓரமாக வாய்க்கால் ஒன்றை ஏற்படுத்திவிட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா கிடந்த நிலத்தை மண்வெட்டியால் வெட்டினேன். பல வருடங்களுக்குப் பிறகு என்பதால் கை காப்புக் காய்த்தது, இரண்டு நாட்கள் ஒடம்பு அடித்துப் போட்டது போல் அசந்துபோனது. நிலத்தைக் கொத்தி, பண்படுத்தி ஆறேழு வகைக் கீரை மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்கான காய்கறிச் செடிகள் என விதை தூவியதில், இந்த ஆறு மாதங்களாக கீரை, காய்கறிகள் தேவைக்கு பெரும்பாலும் கடையை நாடவில்லை. சில காய்கறிகளுக்கு கடையைத் தவிர்க்க முடியாது. அத்தோடு மனது ஓயவில்லை. சும்மா கிடக்கும் நிலமெங்கும், அதை வைக்கலாமே, இதை வைக்கலாமே எனும் யோசனைகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. வைத்துக் கொண்டும் இருக்கின்றேன்.


கிராமத்தில் இருக்கும் விவசாயக் குடும்பங்களில் இப்படி பயன்பாட்டில் இருந்து கை விடப்பட்ட நிலம் என்று குறைந்தபட்சம் பல நூறு அல்லது சில ஆயிரம் சதுர அடிகள் சீண்டப்படாமல். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் சில சென்ட் நிலம். கிணற்று மேடு அருகே, வண்டித் தட திருப்பத்தில், குப்பைக் குழி அருகே, கொட்டகைக்குப் பின்புறம், கட்டுத்தரைப் பக்கம் என்று எங்கேனும் நிச்சயம் இருக்கும்., மீண்டும் சொல்கிறேன், இந்த நிலக் கணக்கு நகர்ப்புறத்தில் இல்லை. கிராமத்து விவசாய நிலங்களில் மட்டுமே.

சரி இப்படியெல்லாம் சொல்லிவிட்டால் விவசாயக் குடும்பங்கள் செய்து விடுமா? செய்யாது. ஏனென்றால் அவர்களின் இரத்தத்தில் ‘எதையும் வெட்டு வெட்டென்று வெட்டி வியர்வை சிந்துவது மட்டுமே விவசாயம். விளைவிப்பது என்பது விற்பதற்குத்தான். அதை அப்படியே தின்னும் பழக்கமில்லை. இதில் ஸ்மார்ட் வொர்க் என்பதற்கே வேலையே கிடையாது!’ எனும் நம்பிக்கை நஞ்சு கலந்திருக்கின்றது. காய்கறி, கீரை வகை, பழம் உள்ளிட்டவற்றின் தேவை மற்றும் பயன்கள் அறிந்த, விவசாய நிலம் வைத்திருந்தும் நகரத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கும் இன்றைய தலைமுறையினர் இதைச் செய்ய வைக்க வேண்டும். வீட்டருகே நிலமிருக்கும் யாவருக்கும் இது பொருந்தலாம்.

திடீரென இந்த முடிவெடுத்தால், வீட்டுத் தேவைகளுக்கு எதையெல்லாம் பயிரிடலாம், எப்படிப் பயிரிடுவது எனும் குழப்பம் வரும். Youtube எனும் கடலில் தேடுங்கள். அத்தனையும் குவித்து வைத்திருக்கிறார்கள். ஒன்றைப் பார்த்தால் அடுத்தடுத்து என உங்களை மிகச் சுவாரஸ்யமான களத்திற்கு அது அழைத்துச் செல்கிறது.

மிகச் சரியாகத் திட்டமிட்டால் குடும்பத்திற்குத் தேவையான பெரும்பாலான காய்கறி, கீரை, பழ வகைகளை சுயமாக ஒவ்வொருவரும் பயிர் செய்து கொள்ள முடியும். நகரத்தில் செலவு செய்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும்தான். ஆனால் தம் பார்வையில், தானே பயிரிட்டு வளர்த்து, சுத்தமாக, சுகாதாரமாக உண்ணும் சாத்தியமிருந்தும் நேரமில்லை, மண்ணுல கால் வைக்கனுமா எனும் கூச்சத்தோடு தவற விடுவதால் மண்ணுக்கு எந்த இழப்புமில்லை. இப்படியான முயற்சிகள் என்பது உடற்பயிற்சிக்கான மிகச் சிறந்த வாய்ப்பும் கூட. சமீப மாதங்களில், வாரத்தில் ஒரு நாள், வயலில் கடினமாக உழைப்பதன் வாயிலாக இரண்டு மூன்று நாட்கள் நடை, ஓட்டத்தில் கிட்டும் பலன்களை எட்டிவிடுகிறேன்.

விதையிட்டோ, பதியனிட்டோ ஒரு செடியை, மரத்தை வளர்த்தெடுப்பதில் வாழ்வின் மிக முக்கியமான பல்வேறு பாடங்களை செலவில்லாமல், ஆசான்கள் இல்லாமல் கற்க முடியும். ஒரு விதை போட்டால், அது ஒரு தானியத்தை, ஒரு காயை, ஒரு கனியை மட்டுமே தந்து விடுவதில்லை, ஒரு குடும்பத்தின் பசியாற்றும்.