உழவன்
நகர் வழியே ஒரு குறுகிய சந்தில் புகுந்து வலது பக்கம் திரும்பி, இடது பக்கம் திரும்பினால்
டீச்சர்ஸ் காலனி வந்துவிடும். மதியம் 3.30 ஆகிவிட்டது. கடும் பசி. டீச்சர்ஸ் காலனிக்கு
திரும்பும் இடத்தில் பார்த்தேன். ஒரு சிவப்பு கலர் சுசுகி பைக் நின்று கொண்டிருந்தது.
ஒடிசலான ஒரு பையனும் பெண்ணும் உரத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்தான்
பேசிக்கொண்டிருந்தாள். பார்த்தவுடனே தெரிந்துவிட்டது சண்டை என்பது. இருவருக்கும் வயது
20-25 க்குள் இருக்கலாம். அக்கம் பக்கம் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்தேன். வலது
பக்க காலி இடத்தில் நாலைந்து சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
எப்போதாவது
இதுபோல் காண்பதுண்டு. பெரும்பாலும் அக்கம்பக்கம் ஆட்கள் இருப்பார்கள். பெரும்பாலும்
நான் கடந்துபோய் விடுவதுண்டு. நின்று ஒருமுறை கூட வேடிக்கை பார்த்ததில்லை. இன்றைக்கும்
கடந்துபோய்விட்டேன். கடக்கும்போது
”என் பையனைக்
குட்றா நீ” என அந்தப் பெண் கத்திக் கொண்டிருந்தாள்.
அந்தக்
குரல் ஏதோ இம்சைப் படுத்தியது. ஒரு பத்து பதினைந்தடி கடந்துவிட்டேன். ’நிற்கலாமா? போலாமா?’
என மனது ஊசலாடியது. அந்த நொடிகளில் இரண்டு வண்டிகள் திரும்பிப் பார்த்துக்கொண்டே கடந்தன.
நின்றுவிட்டேன். மீண்டும் சுற்றிலும் பார்த்தேன் அந்த சிறுவர்களைத் தவிர யாருமில்லை.
அப்படியே நின்றுகொண்டு அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த
ஆள் பைக்கில் உட்கார்ந்த்து கிளம்ப முயற்சி செய்துகொண்டிருக்க, அந்தப் பெண் அந்த ஆளை
இழுத்துக் கொண்டிருந்தாள். நான் நின்று கொண்டு வேடிக்கைப்
பார்ப்பதைப் பார்த்தோ என்னவோ, இன்னும் இரண்டு வண்டிகளும் நின்றன. அவர்களைச் சுற்றி
ஃ வடிவில் இப்போது மூன்று வண்டிகளில் சண்டையை கவனிக்கத் துவங்கிவிட்ட மாதிரி
தோன்றியது.
யாரும் அருகில் வரவோ, என்ன ஏது என்றோ விசாரிக்க முற்படவில்லை. அந்தப்
பெண் அந்த ஆளை உலுக்கிக் கொண்டிருந்தாள். சட்டென பைக்கை சைடு ஸ்டேட்ண்ட் போட்டவன்,
”நீயே வண்டிய வெச்சுக்க” எனச் சொல்லிவிட்டு அவளின் பிடியிலிருந்து இழுத்துக்கொண்டு
நடக்க முற்பட்டான். அவள் சட்டையைப் பிடித்து இழுக்க பட்டன்கள் கழன்று வந்தன. திரும்பி
அவளைப் பிடித்து தள்ளினான். பின்வாங்கிய அவள் அவன் மீது பாய்ந்தாள். திருப்பி அவன்
அடித்தால் அவள் தாங்கமாட்டாள் எனத் தோன்றியது. சட்டென என் பைக் சாவியை எடுத்துக்கொண்டு
அவர்களை நோக்கி நடந்தேன். என்னைக் கவனித்த அந்த ஆள் கொஞ்சம் நிதானித்தான். நான் அவர்களை
நோக்கி நகர்வதைக் கண்ட மற்ற இரண்டு பைக் ஆட்களும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அருகில்
வரத்துவங்கினர். இதுதான் மனித சைக்காலஜி போல எனத் தோன்றியது.
“ஏப்பா... என்ன பிரச்சனை. ஏன் இங்கே சண்டை போடுறீங்க” என்றேன்
”நாங்க என்ன பண்ணினா, உனக்கென்ன?” என அந்த ஆள் கேட்டுவிடுவானோ என்றும்
மனதில் ஓடாமல் இல்லை.
அவன் அப்படிக் கேட்கவில்லை.
”எம் பையன வெச்சுகிட்டு தரமாட்டங்றானுங்ண்ணா?” என அழுதுகொண்டே அந்த
ஆளை இழுத்துக்கொண்டிருந்தாள்.
”அந்த ஆள் உனக்கென்னம்மா வேணும்?”
”அந்தாளு என் பொண்டாண்டிங்க” என்றாள் பதட்டத்தில்
கணவன் மனைவி எனப் புரிந்தது.
”வீடு எங்கப்பா?”
”பாசூர்ங்க” என முனகினான்
”சரி இங்கே ஏன் சண்டை போடுறீங்க”
”என் பையன வெச்சிக்கிட்டு தரமாட்டேங்கிறாங்ண்ணா... எம் பையனக் குட்றா
நான் போயிடுறேன்” அழுதுகொண்டேயிருந்தாள்
”ஒன்னோட வீடு எங்கம்மா”
”கரூர்ங்க”
”கரூரா, அவரு
பாசூர்ங்கிறாரு... அப்புறம் இங்கே என்ன பண்றீங்க”
“கரூர் இல்லை... இங்கே சூரம்பட்டிதான்” என்றான் அந்தப் பையன்
”யோவ் அடிக்கடி உங்களப் பார்க்கிறேன்... வீட்டுக்கு வண்டியை விடுய்யா”
என்றார் பின்பக்கம் இருந்துவந்த பைக்காரார்.
“அப்பா, அம்மா எல்லாம் எங்க இருக்காங்க?”
“எல்லாத்தையும் வுட்டுட்டு இவங்கூட ஓடியாந்தேனுங்க. ஏந்தான் இவன
கட்டிக்கிட்டனோ? எம் பையனக் குடுத்துட்டான்னா நான் போயிறுவேன்”
”வா.... உன்னை தொலைச்சுக் கட்டிடுறேன்” என்றவாறு பைக்கை ஸ்டார்ட்
செய்தான் அந்தப் பையன்.
”உங்கூட எவ பொழைப்பா, என் பையனைக் குடு, நான் நிம்மதியா இருந்துக்குறேன்”
என்றவாறு பைக்கின் பின்னால் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்த நொடியில் பைக்கை சீறவிட்டான்.
அந்த பைக்காரர் அவர்களை விடாமல் துரத்தினார். சில நொடிகளில் கண்களிலிருந்து மறைந்து போயினர்.
இது கொஞ்சம் நேரிடையாக பொதுவிடத்தில் கண்ட உதாரணம். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்
எத்தனையெத்தனை உரசல்கள் இப்பொழுதெல்லாம். சமீபத்தில் கணவன்-மனைவிக்கிடையேயான சண்டையின்
உக்கிரத்தில் தகித்த ஒரு குழந்தை எடுத்த முடிவு குறித்த என் கவிதையை வாசித்துவிட்டு
இது அனுபவமா என ஒரு கேட்டபோது சிரித்துக்கொண்டே ”வீட்டுக்கு வீடு வாசப்படி” என மொக்கையாகவும்
தத்துவமாகவும் சொல்லி நகர்ந்தேன்.
படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது |
எப்போதோ எழுதிய “ஆணுக்கு
பெண்ணையும்,
பெண்ணுக்கு
ஆணையும்
பிடிக்கின்றது. கணவனுக்கு
மனைவியையும்,
மனைவிக்கு
கணவனையும்தான் பிடிப்பதில்லை பாவம்!”
எனும் வரிகள் நினைவிற்கு வந்துபோகிறது.
மனிதனுக்கு ஒரு காலத்தில் விலங்குகளே அச்சமூட்டுபவையாக
இருந்தன. அதற்காகவே ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கலாம். காலம் மலையேறிவிட்டது.
மனிதனுக்கு மனிதன் எதிரியாக மாறிய காலமும் கடந்து, காதல் கொண்டு கசிந்துருகி, நேசித்து,
கலவி கொண்டு, எல்லாம் தந்து, எடுத்து எனப்பவும் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும்
எதிரிகளாக மாறிவிட்ட காலத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
வளர்ந்ததாக மெச்சிக்கொள்ளும்
சமூகம் எதையெதையோ சரிசெய்ய அறிவியலின் உதவியால் கருவிகள்
படைக்கத் துடித்து, தவித்து, செய்து கொண்டிருக்கிறது. உறவுகளை உடைத்துப்போடும் சாத்தானைத்
தகர்த்துவிட ஒரு கருவி செய்ய முனைந்திடவில்லையா அல்லது விரும்பவில்லையா என்பது புரியவில்லை.
உறவுகளின் அருமையை யாரும் உணராமல் இல்லை. அதேசமயம்
உறவுகளில் முறுக்கி முறுக்கி ஒரு கட்டத்தில் உடைத்துக்கொள்வதில் என்ன சாதிக்கப்போகிறோம்
என்றும் தெரியவில்லை. இது ஒரு மேலோட்டமான பார்வைதான். மிக மேலோட்டமான அலசல்தான். இல்லையென
மறுக்கவில்லை.
அவரவர் முடிவு அவரவர்க்கு. அவரவர் வலி அவரவர்க்கு.
ஆயினும் இனம்புரியா கேள்விகள் ஆயிரமாயிரம் துளைத்துக் கொண்டேயிருக்கின்றது. விடைதேடுதல்
புத்திசாலித்தனமா? முட்டாள்தனமா? என்பதும் அவரவர் முடிவே.
-