குழந்தைகளுக்கு ரசிகர்கள் தேவையில்லை

குழந்தையின் திறமையும் பெற்றவர்களின் ஆசையும் இணையும் இடம் மிக முக்கியமானது. எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படலாம். ஆனால் யார் வாயிலாக ஆசையை நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியம்.




தமிழக செய்தித் தொலைக்காட்சியின் செய்தி வடிவத்தைப் பகடி செய்து சமீபத்தில் குழந்தையொன்று நடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. செய்தி வாசிப்பாளர், செய்தி ஆசிரியர், நிருபர், களத்தில் இருக்கும் விவசாயி என அனைத்துப் பாத்திரங்களும் கச்சிதம். வசனங்களைப் பயன்படுத்திய விதமும் பெரும் வியப்பளித்தது. யார் இந்தக் குழந்தைகள் எனத் தேடியபோதுதான் மிகப் பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆண், பெண் என அனைத்துப் பாத்திரங்களிலும் நடித்திருந்தது கோவையைச் சார்ந்த ஏழு வயது குழந்தை

தொடர்ந்து தேடும்போது இணையத்தில் மேலும் சில காணொலிகள் கிடைத்தன. சில நிமிடங்கள் பார்த்தேன், அந்த நிகழ்ச்சிபோல மற்றவை ஒட்டவில்லை. அதே சமயம் லேசாக ஏதோ ஒன்று மனதில் உறுத்தத் தொடங்கியது. முதலில் பார்த்த செய்தி நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த சரண்யா - தன்ராஜ்பாத்திரங்கள் மனதில் பதிந்துவிட்டன. ஏதோ ஒரு ஃபேஸ்புக் பதிவில் இட்ட பின்னூட்டத்தில்கூட அந்தப் பாத்திரங்களை வைத்துப் பகடியாக நானும் பதிவிட்ட நினைவிருக்கின்றது. அடுத்த சில நாட்களில் இணையத்தில் அந்தக் குழந்தையிடம் எடுக்கப்பட்ட பேட்டிகள் அடுத்தடுத்து வந்தன. சரி என்னதான் நடக்கிறது என ஒரு பேட்டியை எட்டிப் பார்த்தேன்.

பேட்டி எடுப்பவர் மீடியால இருக்கக்கூடிய எங்கள, நியூஸ் ரீடர்ஸ, ரிப்போர்டர்ஸ எல்லாம் பயங்கரமா கலாய்ச்சிருக்கீங்க, என்ன வெங்காயத்துக்கு அங்க இருக்கீங்கனெல்லாம் கேக்குறீங்க... எப்படியிருந்தது!?” எனக் கேட்கிறார்.



அதற்கு ரித்விக், “எங்கப்பாதான் அதெல்லாம் சொல்லிக் கொடுத்தாரு... நா என்ன பண்றது? அவரு சொல்றதத்தான் நா கேக்கணும்என்று அளித்த பதில் சுருக்கென்று தைத்தது.

நா என்ன பண்றது? அவரு சொல்றதத்தான் நா கேக்கணும்என்னும் வரியை எத்தனை பேரால் எளிதாகக் கடந்து போக முடிந்தது என்று தெரியவில்லை. ஒரு ஃப்ளோல குழந்தை சொல்லிடுச்சு, அதை பெருசா எடுத்துக்கலாமா எனவும் தோன்றலாம். உண்மையில் என்னால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக அவருடைய அப்பா, அம்மா மிரட்டி, வற்புறுத்தி திணிக்கிறார்கள் என்றும் நான் கருதவில்லை. குழந்தையிடம் இயல்பாக ஒரு திறமை வெளிப்படும்போது, பெற்றவர்கள் அதை வெளிப்படுத்த ஆசைப்படுவதில் என்ன தப்பு, அதை ஊக்குவிப்பதுதானே பெற்றோரின் கடமை என்று பலருக்கும் தோன்றலாம்.



திறமையும் ஆசையும் இணையும் இடம்

குழந்தையின் திறமையும் பெற்றவர்களின் ஆசையும் இணையும் இடம் மிக முக்கியமானது. எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படலாம். ஆனால் யார் வாயிலாக ஆசையை நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியம். தான் என்ன செய்கிறோம், அடுத்து இது எதை நோக்கிப் போகும், இதன் விளைவுகள் என்ன என்பதையெல்லாம் உணரத் தெரியாத குழந்தையின் வாயிலாக, குழந்தை அறிந்தோ அறியாமலோ ஆர்வம் காட்டுகிறது என்பதைக் காரணம் காட்டி, தம் ஆசையை நிறைவேற்றுவதென்பதைப் பேராசையாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

உண்மையில் அந்த காணொலி மிகப் பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கிறது. குழந்தைகள் இதுபோல் நடிக்கும், பேசும் நிகழ்ச்சிகள் யாருக்குத்தான் பிடிப்பதில்லை? அதை ரசிப்பதும் பகிர்வதும் இயல்பாக நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் கண்ணில் படும் எல்லாவற்றையும் ரசிப்பேன், அதிலென்ன தவறு என்பது சரியானதா!?


நம்மிடம் இருப்பதெல்லாம் உணர்ச்சிகளும் நிலைப்பாடுகளும்தான். இது என்னை ஆச்சரியப்படுத்துகிறது, மகிழ்வூட்டுகிறது எனும் உணர்ச்சிகள்; பிடிச்சிருக்கு, பிடிக்கல எனும் நிலைப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பார்க்கிறோமே. இது சரியா, தவறா, தேவையா, இல்லையா எனும் அடிப்படையில் நோக்க நாம் அவ்வளவாகப் பழகியிருக்கவில்லை.

பொதுவாகவே குழந்தைகள் பேசுவது எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்யும். ஈர்க்கும் அனைத்துமே சரியானவைதானா? குழந்தைகள் என்ன பேசுகிறார்கள்? அவர்களாகப் பேசுகிறார்களா அல்லது அவர்கள் பேச வைக்கப்படுகிறார்களா? என்பது முக்கியமானது. பசங்க-2 படத்தில் பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்ல, கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்கஎன நடிகர் சூர்யா சொல்வது எத்தனை கனமான உண்மை.


ரித்விக் எனும் குழந்தை மிக அழகாகப் பேசுகிறது, நடிக்கிறது. மறுக்கவில்லை. ஆனால் அந்தக் குழந்தை தானாகப் பேசவில்லை, நடிக்கவில்லை. பேச வைக்கப்படுகிறது, நடிக்க வைக்கப்படுகிறது. இதைப் படிக்கும்போது இதென்ன லாஜிக் இங்கு திரையில் எல்லோரும்தான் பேச வைக்கப்படுகிறார்கள், நடிக்க வைக்கப்படுகிறார்கள், அதுபோல்தான் இந்தக் குழந்தையும் இது என்ன புதுசா? இதை ஏன் இவ்வளவு தூரம் பேச வேண்டும்?” எனும் அலுப்போ கோபமோ வரலாம்.

முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டியது குழந்தையின் வயது. இப்ப எல்லாக் குழந்தைகளும்தான் டிவி பார்த்துட்டு எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள் எனும் வாதம் முன் வைக்கப்படலாம். அது குழந்தைகளின் பிழை அல்ல. ஒட்டுமொத்தமாக நம் படைப்புகளில், ஒளிபரப்புகளில், வகைப்படுத்தப்படாத அமைப்பிலும் அதைப் பார்க்கும் நம்மிடமும் நெறி இல்லாததன் பிழை. அந்தப் பிழைகளின் விளைவை உதாரணமாகக் கொண்டு மேலும் ஒரு பிழையை சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்துச் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?


குழந்தைகள் உலக சாதனைகள் புரிவதில்லையா? இதோ ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உலகின் அனைத்து நாடுகளின் பெயர்களைச் சொல்லி உலக சாதனை புரிந்திருக்கிறதே! இரண்டரை வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறோமே, வீட்டுக்கு வரும் உறவினர்கள் முன்னிலையில் ஆடச் சொல்கிறோமே, பள்ளியில் மாறுவேடப் போட்டிக்கு அனுப்புகின்றோமே எனும் கேள்விகள் நிறைய உண்டு.

ஒன்றரை வயதுக் குழந்தை எல்லா நாடுகளின் பெயர்களையும் அடையாளம் காட்டுகிறது எனும் பெருமையின் பின்னால் தினசரி அதற்கு சுமார் 45 நிமிடங்கள் தொடர் பயிற்சியளிக்கப்பட்டது குறித்து என்றேனும் கவலைப்படத் தெரியுமா நமக்கு? சரி அந்தச் சாதனை அதன் வாழ்நாளில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அப்படி ஏற்படுத்தியது குறித்த உதாரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?


குழந்தைக்கு சாய்ஸ் இருக்கிறதா?


இரண்டரை வயது பள்ளிப் படிப்பு என்பது நம்மைப் போன்ற வளரும் நாடுகள் ஏற்படுத்திக் கொண்ட சாபம். எல்லோரும் உடன்பட்டிருக்கும் கொடுஞ்சாபம். இங்கு வாழ்க்கை என்பது பந்தயம் என்றே எல்லா மட்டங்களிலும் புகுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் மாறுவேடப்போட்டி என்பது பெரும்பாலும் குழந்தையின் சாய்ஸ் கிடையாது. கல்வி நிறுவனங்களின் தேவை, பெற்றோர்களின் தீர்மானம். பல நாட்களாகப் பயிற்சியில் பிழிந்தெடுக்கப்பட்டு, ஆண்டு விழாவில் யாரோ ஒரு சிறப்பு விருந்தினரை வரவேற்க, கூட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் சில நொடிகள் மட்டும் அணிய மிகச் சிரமமாக இருக்கும் ஆடையில் நடனமாடுகையில், நேரம் கருதி உடனடியாக மேடையை விட்டு இறக்கப்பட்டு, ஓரமாக விடப்பட்ட குழந்தைகளின் மனதுடன் யாரும் எப்போதாவது உரையாடியதுண்டா? அதற்கு எங்கே நமக்கு நேரம்? அடுத்ததை ரசிக்கக் காத்திருந்திருப்போம். அழும் குழந்தையை அமைதிப்படுத்த ஒரு சாக்லெட் அல்லது அதட்டல் போதும் நமக்கு. வெளிப்புறத்தில் விளையாட்டுக்கு மாறும் குழந்தைகளின் ஆழ்மனதில் பெய்யும் பீலிகள் சால மிகுத்து ஏற்படும் முறிவுகள் எத்தனை கொடியது என்று அறிந்திருக்கிறோமா? அந்த முறிவுகளை அவர்களும் நாமும் உணரும்போது வேறொரு உலகத்தில் இருப்போம். வலி மட்டும் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.


அப்ப, குழந்தை நட்சத்திரங்களாக திரைப்படங்களில் நடிப்பதில்லையா? கமல், சிம்பு, ஷாலினி, ஷாம்லி ஆகியோர் அப்படி வந்தவர்கள்தானே?

ஒரு குழந்தைக்கு நடிப்பு வருகின்றதே எனும் காரணத்தால் மட்டுமே திரைப்படத்தில் தோன்றிவிடுவதில்லை. அந்தத் திரைப்படத்தில் குழந்தையொன்று தேவை என்பதன் பொருட்டே பயன்படுத்தப்பட்டனர். அப்படிப் பயன்படுத்தப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானோர் ஓரிரு படங்களோடு தம் வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். தொடர்ந்து நடித்தவர்களில் ஷாலினி, ஷாம்லி ஆகியோரும் ஒரு கட்டத்திற்குப் பிறகு தொடரவில்லை. குழந்தைகளாக வந்தபோது அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்ற புரிதல் இருந்திருக்காது. புரிதல் வந்தபிறகு இருவரும் மிகச் சில படங்களோடு நிறுத்திக்கொண்டனர். அப்படி நிறுத்தியதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது காரணமாக இருக்க முடியாது.



தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் கமல், சிம்பு ஆகியோர் தம் குழந்தைப் பருவத்தில் தாமாக நடித்தனரா அல்லது நடிக்க வைக்கப்பட்டனரா? அப்படி நடித்ததன் அல்லது நடிக்க வைக்கப்பட்டதன் பொருட்டு அவர்கள் பெற்றதும் இழந்ததும் என்ன என்பது எங்கும் பேசப்பட்டிருக்கிறதா? பெற்றவைகள்கூட ஒருவேளை பேசப்பட்டிருக்கலாம். இழந்தவை குறித்து அவரவர் உள் மனம் தவிர வேறு யாரும் கவலை கொள்ளும் நிலையில் இங்கில்லை. இப்படியான திறமைகளை வெளிப்படுத்தி வெளிச்சத்திற்கு வந்த சிலரின் பட்டியல் உதாரணமாக வைத்திருப்போரிடம் கேட்க வேண்டிய எளிய கேள்வி இருக்கின்றது, கமல், சிம்பு, ஷாலினி, ஷாம்லி ஆகியோர் காலத்தில் அவர்களைப் போலவே நடித்த மற்ற குழந்தைகள் என்னவானார்கள், ஏன் தொடரவில்லை அல்லது வெளிச்சத்திற்கு வரவில்லை என்பது உள்ளிட்ட தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? அப்படி வந்து போன குழந்தைகள் அடைந்ததும் இழந்ததும் யாவை எனும் பட்டியலும் இருக்கிறதா?

அந்தந்த வயதில் கட்டாயம் ஒரு குழந்தை இழக்கக் கூடாது அல்லது அந்தக் குழந்தைக்கு மறுக்கப்படக் கூடாது என்கின்ற பட்டியல் நம்மிடம் உண்டா? நியாயமாக அந்தந்த வயதில் கிடைக்க வேண்டிய ஒன்றை இழந்ததால், கிடைக்க வேண்டாத ஒன்றைப் பெற்றதால் அந்தக் குழந்தையின் ஆழ்மனதில் நிகழ்ந்தவை என்ன, ஏற்பட்ட காயங்கள் மறைந்துவிட்டனவா அல்லது காயங்களாகவோ, தழும்புகளாகவோ நீடிக்கின்றனவா எனும் ஆய்வு ஒருபோதும் இங்கு நிகழ்ந்ததில்லை. அந்த அறியாமையின் காரணமாக மட்டுமே, குழந்தை ஆசைப்படுது, அதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம் எனும் சமாதானங்களோடும் பெருமைகளோடும், கைதட்டி மகிழ்ந்து தப்பித்துக்கொள்கிறோம்.

அப்ப குழந்தைகளின் திறமைகளை என்ன செய்வது? வெளிப்படுத்தாமல் போனால் திறமைகள் வீணாகிவிடும்தானே? குழந்தை மேதைகள் உலகில் இருக்கின்றனர்தானே? குழந்தைகளின் திறன் மீதான அக்கறை பெற்றவர்களைவிட வேறு யாருக்கு இருந்துவிட முடியும்?

குழந்தை மேதைகள் என்பது ஓர் அதிசயம். அவர்களாக யார் தூண்டுதலும் இல்லாமல் தன்போக்கில் சிலவற்றைச் செய்வார்கள். அவர்களை ஒருவேளை தடுத்தாலும் விடாது செய்ய முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களால் அதனைச் செய்யாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு ஒன்றரை வயதுக் குழந்தைக்கு முக்கால் மணி நேரம் பயிற்சியளிப்பதுபோல் தொடர் பயிற்சி தேவையில்லை. திறமை என்பது ஆர்வம், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் கண்டறித்து தொடர்ந்து அதைக் கூர்மைப்படுத்துவது. அந்தக் கூர்மைப்படுத்தல் என்பது தொடர் பயிற்சியால் நிகழும். தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், இதனால் ஏற்படும் விளைவு என்ன என்பதுள்ளிட்ட எதுவும் உணரப்படாமல் பயிற்சியளித்து மிளிரச் செய்யப்படும் திறமைகளுக்கு குழந்தை பலி கொடுப்பது தன் குழந்தைத் தன்மையை! அந்த இழப்பே பல நிலைகளில் அவர்களுக்குப் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன என நான் அஞ்சுகிறேன்.



குழந்தைகள் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறை மதிப்பு மிகுந்ததுதான். மறுக்கவில்லை. அந்த அக்கறையில் அறியாமையோ கூடுதல் ஆர்வமோ கலக்காது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? அப்படியான சூழலில் யார் வேண்டுமானாலும் அவர்களைச் சரிப்படுத்த, நெறிப்படுத்த முயலலாம். உதாரணத்திற்கு உறவுகளில் இப்படித்தான் செய்கிறார்கள், விளம்பரத்தில் காட்டினார்கள் என்று குழந்தை நன்றாக இருக்க வேண்டுமே எனும் எண்ணத்தில் சாப்பிடுவதற்காக அதையும், இதையும் ஊட்டி செரிமானம் ஆகாமல் மருத்துவமனைக்கு போனவர்களைக் கேட்டுப்பாருங்கள். மருத்துவர் நெறிப்படுத்தியிருப்பார், சரிப்படுத்தியிருப்பார்.

இதுபோல் முன்பெல்லாம் நடந்தபோது யாரும் குரல் கொடுக்கவில்லை, இப்போது மட்டும் இத்தனை பதற்றம் தேவையா என்னும் கேள்வி எழலாம். ஒருகாலத்தில் இதுதான் நடைமுறை என்று சொல்லப்பட்ட, நம்பவைக்கப்பட்டவை பின்னர் தவறானதாகத் தோன்றி நாம் மாற்றியதில்லையா? அறிவு விசாலமாகும்போது, காலத்திற்கு ஏற்ப நாம் மாறுவதுதானே மனித அறம்.

பொதுவாக நமக்கு குழந்தைகளின் செயல்பாடுகள் ஒன்று சிலிர்ப்பைத் தரும் அல்லது சிரிப்பைத் தரும். நம் போன்ற ரசிகர்களின் தேவை அவ்வளவுதான். குழந்தைகளுக்கு உண்மையில் ரசிகர்கள் தேவையில்லை. ஆகவே அவர்களை சிலிர்க்க, சிரிக்க வைக்க எதனையும் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் ஒருபோதும் குழந்தைகள் இல்லை. அவர்களுக்குத் தேவை அந்தந்த வயதில் அவர்களிடம் இயல்பாக இருக்கும் குழந்தைத்தன்மையை அனுமதிப்பதும் அரவணைப்பும் மட்டுமே!