நிகழ்வு 1:
பரந்து விரிந்த உள்ளரங்கம். அமர்ந்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரம் இருக்கும் என்கிறார்கள். அவர்களுக்கான மிக முக்கியமானதொரு நிகழ்வு. நிர்வாகத்தினருடன் அரங்கிற்குள் நுழைந்து நேராக மேடைக்குச் செல்கிறோம். அரங்கின் அருகே சென்றதிலிருந்தே உணர முடிந்தது, உள்ளுக்குள் அலையடித்துக் கொண்டிருந்த பேரிரைச்சலை.
மேடையில் அனைவரும் அமர்ந்ததும், நிகழ்வு துவங்குகின்றது. பேரிரைச்சல் அடங்கியபாடில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகின்றது. வாழ்த்து நிறைவடைந்ததும் இரைச்சல் தொடர்கின்றது. கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். இரைச்சல் மட்டுப்படவில்லை. குத்துவிளக்கு ஏற்றப்படும் நிகழ்வு. ‘ஓ’ எனும் கத்தலும், விசிலும் புதிதாக முளைக்கின்றன. கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி தலைமை உரையாற்றுகிறார். இரைச்சல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. கல்லூரி இயக்குனர் வாழ்த்துரை வழங்குகின்றார். அப்போதும் இரைச்சல் தொடர்ந்தது, அடுத்தது நான்தான் பேச வேண்டும், அதுவும் ஒரு மணி நேரம் குறிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வு 2 :
கிராமப்புறத்தில் இருக்கும் கல்லூரியின் முக்கியமான நிகழ்வு. நிகழ்வு துவங்கியதில் ஏகப்பட்ட தாமதம் ஏற்பட்டிருந்தது உண்மைதான். அமர வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மிகுந்த சலசலப்போடு அமர்ந்திருந்தனர். மாணவர்கள் இடைய பேராசிரியர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அவ்வப்போது சத்தம் போடாம இருங்க என மாணவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
எனினும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டேதான் இருந்தனர். மேடையில் பேசும் எவரையும் பொருட்படுத்தும் உடல்மொழி அவர்களிடம் தென்படவேயில்லை. நிர்வாகம் சார்ந்த பொறுப்பாளர்கள் பேசி, நான் பேச அழைக்கப்படுவதற்குள் அவர்கள் இன்னும் பொறுமை இழப்பார்கள் என்பதை உணர்ந்திருந்தேன்.
*
இங்கே பகிர்ந்தது இரண்டு உதாரணங்கள் மட்டுமே. ஆனால் சந்தித்தவைகள் ஏராளம். தொடர்ந்து எழுதினால் பட்டியல் வளர்ந்துகொண்டேயிருக்கும். அது மாணவர்கள் மீது பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தும். இடையிடையே மானே தேனே என்பதுபோல் இந்தக் காலத்துப் பசங்களே அப்படித்தான், இப்படித்தான் எனப் புகார்ப்பட்டியல் வாசித்தால், மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளையும் படித்ததில் ஏற்பட்டிருக்கும் எரிச்சலுக்கு கூடுதல் தீனியாக அமையும். கூடவே, நாம் படித்த காலத்தில் கடைப்பிடித்த(!) ஒழுக்கங்களை இணைத்தால் இன்னும் முழுமையான வாசிப்பு அனுபவம் கிட்டும்.
விதவிதமான மசாலா சேர்ப்பதுபோல், இன்றைய மாணவர்களுக்கு யாரையும் மதிக்கத் தெரியவில்லை, பொறுப்பு, பொறுமை கிடையாது, எதையும் கற்றுக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடையாது என்பதையும் இணைத்துக்கொள்ளலாம். இதன் நிமித்தமாக இவர்கள் உருப்படாத மலட்டுச் சமூகமாக மாறுவார்கள் என சபித்தல் எளிது. பொதுபுத்தியில் வாசிப்பவர்களுக்கு ஒருவகையில் அது வசதியானதும்கூட.
மாணவர்களின் நடவடிக்கையை, நான் ஒருபோதும் பிரச்சனையாக பார்ப்பதில்லை. காரணம், ‘மாணவர்கள் என்றால் அப்படி - இப்படித்தான் இருப்பார்கள்’ எனும் உள்ளார்ந்த புரிதல் மற்றும் ஒப்புக்கொள்ளல்.
இம்மாதிரியான நிகழ்வுகளில், மாணவர்கள் ‘இப்படித்தான் இருப்பார்கள்’ என முடிந்தவரை மனதை தயார்படுத்திச் சென்றிருந்தாலும்கூட, சில இடங்களில் இதெல்லாம் பத்தாது என்ற அளவிலும் இருக்கின்றார்கள். அதுவும் குறிப்பாக கோவிட் காலத்திற்குப் பிறகு, ஒரு அரங்கில் மாணவர்களை எதிர்கொள்வது எளிதானது அல்ல. அதற்காக அவர்களைச் சபிப்பது, இகழ்வது, நம்பிக்கை இழப்பது மட்டுமா தீர்வு?
பல ஆண்டுகளாக மாணவர்களோடு இணைந்து பயணிப்பதில் நான் ஓரளவு கற்றுக்கொண்டது, எந்தச் சூழலாக இருந்தாலும், அவர்களை அவர்களின் இயல்போடு ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப சொல்ல வந்ததை முடிந்தவரை கடந்த முயற்சிப்பதுதான்.
பொதுவாக அரங்கிற்குள் நுழைந்ததில் இருந்து, பேச அழைக்கப்படும் கணத்திற்குள் மனதிற்குள் நிகழ்வதெல்லாம், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் தயாரிப்பு தாண்டி, அந்தச் சூழலில் அவர்களைக் கையாளும் சொற்களுக்கான கூடுதல் தயார்படுத்தல் மட்டுமே.
அவர்களுக்கான சொற்கள் கிடைக்கும்போது, அவர்கள் நம் வசம் வந்துவிடுகின்றனர். இதைவிடவா குறைகூறுதலும் சபித்தலும் சுவாரஸ்யம் தந்துவிடப் போகின்றது..
- ஈரோடு கதிர்
No comments:
Post a Comment