அப்பாவை ஏன் கொண்டாடுவதில்லை?

து ஒரு முதிர் காலைப் பொழுது. குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்குள் மிகச் சுமாரான கூட்டம்தான். அப்போதுதான் முகூர்த்தம் நிறைவடைந்திருக்க வேண்டும். பெண்ணின் அப்பா மட்டுமே எனக்குப் பழக்கமானவர். குறைந்தபட்சம் அவரிடம் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு வணக்கம் அல்லது கை குலுக்கல் போதும்.

மணமேடையில் மணமக்களைச் சுற்றி நிற்கும் நெருங்கிய உறவினர் கும்பலில், அவரைத் தேடினேன். நாதஸ்வரக்காரர் தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்துவாசித்துக் கொண்டிருந்தார். கூட்டமில்லாத சூழலும் குளிர் அரங்கும் அந்த நாதஸ்வரத்தை லயித்துக் கேட்க அனுமதித்தது. மேடைக்குக் கீழே அமர்ந்தவாறு பெண்ணின் அப்பாவைக் கூர்ந்து தேடினேன். அவர் மணவறைக்குப் பின்பக்கமாய், ஓரமாய்க் கண்ணாடியைக் கழட்டி கண்களைத் துடைத்தபடி இருந்தார். 

வன் என் வயதொத்த உறவுக்காரன். பிறப்பு இருவருக்கும் ஒரே நிலத்தில் என்றாலும், நாற்பதாண்டுகளாக என் நிலமும், வளர்ப்பும் வேறு. கோயில் திருவிழா, விருந்து மற்றும் நல்லது கெட்டதுகளில் மட்டும் எப்போதாவது சந்திப்பதுண்டு. அவன் பள்ளிப் படிப்பையே நிறைவு செய்யவில்லை. விவசாயத்தில் நிலைபெற்றுவிட்டான். அறுபதுகளைக் கடந்திருக்கும் தந்தையும், மகனும், ஒத்துவரவில்லையென நிலத்தைப் பிரித்துத் தனித்தனியே விவசாயம் செய்கிறார்கள். அப்பாவுக்கு ஓரளவு மதுப் பழக்கம் உண்டு. 

மகனுக்குப் புகை, மது இரண்டும் உண்டு. இம்முறை சந்தித்தபோது தன் அக்காவின் பேரன் பார்வையில் படாதபடி மறைவாய் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய தந்தை அவ்வழியே கடந்து சென்றார். அவரைக் கண்டு எந்தவித உணர்வும் காட்டாமல் மிக இயல்பாய்ப் புகைத்தபடியிருந்தான். சிறுவயதில் துண்டு பீடி குடித்ததற்காக அவன் அடித்து வெளுக்கப்பட்டது நினைவிற்கு வந்துபோனது. 

பொதுவாக அம்மா குறித்துப் பேசும், நினைக்கும், கொண்டாடும் அளவிற்கு அப்பா குறித்துப் பேசுவது, நினைப்பது, கொண்டாடுவது இல்லையெனும் மனக்குறை எப்போதும் எனக்குண்டு. நானும் அப்பாவாக இருப்பதால் அந்த மனக்குறையா என்றால் இல்லையென்பேன். நானே என் அம்மாவோடு காட்டும் நெருக்கத்தை அப்பாவிடம் காட்டுவதில்லை என்ற குற்றவுணர்வால் ஏற்படும் மனக்குறையென்றும் எடுத்துக் கொள்ளலாம். 

கேரளாவின் ஒரு அழகிய கிராமத்து வீட்டில் முதிர்ந்த அப்பாவும் பிள்ளையும் வசிக்கிறார்கள். அருகிலிருக்கும் ஊரில் அப்பாவின் ஸ்டுடியோவை மகன் தொடர்ந்து நடத்துகிறான். ஒருநாள் இரவு உணவும், கொஞ்சம் மதுவும் பரிமாறிவிட்டு சாப்பிட அப்பாவை அழைக்கையில் அவர் காணாமல் போயிருக்கிறார். தேடி அலுத்து காவல் நிலையம் செல்கிறார்கள்.

உடன் வந்தவர்கள் அப்பாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம்என்றும், ‘காபரே நடனம் காண பெங்களூரு சென்றிருக்கலாம் என்றும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அருகிலுள்ள கிணறுகளில் பார்த்தீர்களா?’ எனக் காவல் அதிகாரி கேட்க, பதைபதைக்கிறான் மகன். மலை மீதிருக்கும் ஆலயத்திற்கு ஐம்பத்தொரு கிலோ எடையுள்ள சிலுவையைச் சுமந்து வருவதாகப் பிரார்த்தனை செய்கிறான்.

கவலையோடு வீட்டுக்குத் திரும்புகிறவன் பார்வையில், முன்பக்கமிருக்கும் வாழைத் தோட்டத்திலிருந்து ஒரு ஃப்ளாஷ் வெளிச்சம் படுகிறது. தேடி ஓடுகிறான். கையில் கேமராவோடு வாழைத் தோட்டத்தில் இருளில் அமைதியாக அமர்ந்திருக்கிறார் தந்தை.

உறங்க முயலும் தந்தையிடம், ‘‘வாழைத்தோட்டத்தில் என்ன செய்தீர்கள்?’’ எனக் கேட்க, ‘‘அங்கு வரும் கிளிகளைப் படம் எடுக்கப் போனேன்’’ என்கிறார். விளக்கை அணைத்துவிட்டு வெளியே சென்றவன், ஓடி வந்து அப்பாவின் அருகே ஒட்டிப் படுத்து, அவரின் முதிர்ந்த விரல்களைப் பிடித்துக் கொள்கிறான். 

எதிர்பாராத ஒரு சூழலில் அடிதடியில் மகன் சிக்கிக்கொள்கிறான். இவனை எதிராளி துவம்சம் செய்து வீழ்த்துகிறான். வீழ்ந்து கிடந்தவனை நோக்கி தாக்குவதற்காகக் குனியும்போது அவன் முதுகைத் தட்டி, ‘‘அதுதான் அடிச்சு வீழ்த்திட்டியே! இன்னும் என்ன... போ!’’ என்கிறார் அந்த முதிய தந்தை. 

காதலியைப் பார்க்க ஆனந்தமாய் வரும் மகன், அமர்ந்திருக்கும் தந்தையைக் கடக்கையில் நிதானமாய்க் கடந்து, படியிறங்கி பரவசமாய் ஓடுவதை ஒரு கவிதை போல் ரசிக்கிறார். 

அதே காதல் தோற்றுப்போனதும் மௌனமாய் ஆனால் ஆதரவாய் இருக்கிறார். மழையில் கிளம்பும் மகனை ‘‘எங்கே போறே’’ எனக் கேட்க, ‘‘கடைக்கு’’ என்கிறான். ‘‘மழை விட்டதும் போ! கடைனு சொல்லாதே, ‘ஸ்டுடியோனு சொல்’’ என்கிறார். 

தனக்குப் புகைப்படத்தைக் கலையாய் எடுக்கத் தெரியவில்லை என்பதை மகன் உணரும் தருணத்தில், அதை ஒரு கலையாய் சில வரிகளில் புரிய வைக்கிறார். ‘‘படம் பிடிக்கும்போது மிக அருமையான தருணங்கள் வாய்க்கும் கணத்தை சற்றுமுன் உணர்ந்து க்ளிக் செய்யக் காத்திருக்கணும்’’ என்கிறார். விளக்கம் கேட்பவனிடம், ‘‘உணவை ஊட்ட முடியும், வாயிலிட்டு மென்று தரமுடியாது’’ என்கிறார். ‘‘புகைப்படக் கலையென்பது கற்றுத் தருவதல்ல... தானே கற்றுக்கொள்வது!’’ என்றும் பாடம் புகட்டுகிறார். 

மகேஷிண்டெ பிரதிகாரம்என்ற மலையாளப் படத்தில் பெண்ணற்ற ஒரு வீட்டில் அப்பாவுக்கும் மகனுக்குமான பிரத்யேகமான அழகியதொரு வாழ்க்கையை வாழ்கின்றவர்கள் இவர்கள். அழகிய இடுக்கி, மகேஷின் இரு காதல்கள், வெகு இயல்பாய் நீண்டு மகேஷின் மீது வன்மமாய் முடியும் ஒரு சம்பவக் கோர்வை, மகேஷின் எட்டாம் நம்பர் லூனார் செருப்புச் சப்தம் என ஒவ்வொருவருக்கும் படத்தில் ரசிக்க, லயித்துப் போக ஏதோ ஒன்று இருக்கலாம். 

எனக்கு அந்தத் தந்தைக்கும் மகனுக்குமான உறவு, பிரியமான பல கேள்விகளையும், பாசமான பல பதில்களையும் தெரிவு செய்து தருகிறது. 
பொறுப்பு, கட்டுப்பாடு, பொருளீட்டல் எனும் பல நிலைப்பாடுகள் தந்தையைச் சார்ந்ததாக இருப்பதால், இயல்பாகவே தந்தையெனும் உறவு சற்று கண்டிப்பான பிம்பமாகவே அமைந்து விடுகிறது. 

சுமந்து, வலி தாங்கி ஈன்றெடுப்பதால் தாய்க்கான உறவும், உரிமையும், பிரியமும் இயல்பாகவே கூடுதலாய் இருப்பதை மறுக்க முடியாது. இரண்டையும் ஒப்பிடுவதும் பொருத்தமாகாது. ஆனாலும் தந்தை என்ற உறவு பிள்ளைகளிடம், தாய் அளவுக்கு ஒட்டாமல் இருப்பது மெல்லிய ஒரு குறையாக இருப்பதை மறுக்க முடியாது. 

இங்கு தந்தை-மகன்(ள்) உறவு காலத்திற்கேற்ப கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டே வந்திருக்கின்றது. பேசிக்கொள்ளாத அப்பாவையும் மகனையும் கண்ட நினைவிருக்கிறது. எதிரியாகத் தந்தையைப் பாவித்தவர்களும் உண்டு. பயம் அல்லது மரியாதையின் காரணமாய்த் தந்தையோடு இடைவெளி கொண்டிருந்தவர்களையும் கண்டதுண்டு. சமீப ஆண்டுகளில் பிள்ளைகளிடம் அதீதமாய் நட்பு பாராட்டும் மனநிலைக்கு தந்தைகள் வளர்ந்திருப்பதையும் காணமுடிகிறது. விஞ்ஞானத்தின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல், பிள்ளைகளிடம் கற்றுக்கொள்ளும் மனநிலைக்கும் பதப்பட்டிருக்கிறார்கள். 

தந்தையோடு ஒட்டாமலும் ஒட்டமுடியாமலும் இருந்த பிள்ளைகள், திருமணம் முடித்து தந்தையானவுடன் தம் பிள்ளைகளிடம் அதீதமாய் இழைந்து ஒட்டி நெகிழ்ந்திருக்கும் அழகிய முரண்களையும் காலம் வழங்கியிருக்கிறது. பிள்ளைகளோடு ஒரு அப்பாவாக இழைந்திருக்கும் நேரத்தில், தம் அப்பாவை நினைத்து மனதிற்குள் நெகிழ்ந்து, இப்படி நம் அப்பாவோடு ஒட்டமுடியவில்லையே எனக் கசங்கிய மனதோடு மருகுபவர்களும் இங்குண்டு. 

தாய் அதீத பாசத்தையும், நெகிழ்வையும், பிரியத்தையும் உணர்த்திவிடுவதுபோல் தந்தைகளால் உணர்த்த முடியாமல் இருப்பதன் பின்னால் ஏதேனும் உளவியல் காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை அது ஆண் எனும் வடிவின் தன்மையாகவும் இருக்கலாம். அப்பான்னா இப்படித்தான்என அவர்கள் அதுவரை கண்டிருந்த பிம்பங்களின் தாக்கமாகவும் இருக்கலாம். இந்த இருக்கலாம்கள் ஏதோ ஒரு புள்ளியில் உடைக்கப்படுவது அல்லது உடைபடுவது அவசியமென்றே தோன்றுகிறது. அதீத பாசத்தையும், நெகிழ்வையும், பிரியத்தையும் உணர முடியாமல் இருப்பதில் என்ன பெருமை இருந்துவிடப் போகிறது! 

மண மேடைக்குப் பின் கண்களைத் துடைக்கும் அப்பாவாய், பீடி பிடித்தற்காக அடித்து வெளுக்கப்பட்ட மகன் தம் கண் முன்னே சிகரெட் பிடிப்பதையும் கடந்து செல்லும் அப்பாவாய், சினிமாவில் காட்டப்பட்டது போல் நிதானத்தோடும் பேரன்போடும் வழிநடத்தும் அப்பாவாய், தன் வாழ்நாளுக்குள் பிள்ளையாகவும், தந்தையாகவும் அந்த உறவுக்குள்ளேயே முரண்பட்டிருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தவனாய் என ஒரு ஆண் கடந்து வரும் நிலைகள் பேசவும், நினைக்கவும், கொண்டாடவும் தகுதியானவைதான் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் சற்று கூடுதல் அன்பும் பிரியமுமான பார்வை தந்தைகள் மீது படிய வேண்டியது மட்டும் இப்போதைய அவசியம்.

-
 
குங்குமம் இதழில் உறவெனும் திரைக்கதை தொடரில் வெளியான கட்டுரை.