விடிந்தும் கூட வெளிச்சக் கீற்றுகள் வேகமாய்ப் பரவாத பவித்ரமான அதிகாலை அது. சுவாசிக்கும் மூச்சில் கனமாய் உணரமுடிந்தது காற்றில் மிதக்கும் பனியின் குளுமையை. சம்பத் நகரின் அந்த குறுகிய வீதியின் திருப்பத்தில் உழவர் சந்தையின் மறுபுற வழி வழியே மக்கள் உட்செல்வதும் வெளிவருதும் என ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. கருணாநிதி இது வரை உருவாக்கியதில் என்றும் நினைத்துப் பார்க்கவேண்டிய ஒரு திட்டம் உழவர் சந்தை என்பதில் எனக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்து இல்லை.
திருப்பத்தின் இரு பக்கமும் குப்பைத் தொட்டி என்ற பெயரில் தரகப் பெட்டிகள் நிரம்பி கிடந்தன. வழியும் பெட்டிகளுக்கு பக்கவாட்டில் அடர்த்தியாய் கிடந்தன அள்ளப்படாத குப்பைகள். குப்பைகளின் நீள் உறக்கம், அவை இன்றோ நேற்றோ அல்ல, பலநாட்களாய் அங்கே படுத்திருப்பதை உணர்த்தியது. சந்தையின் அந்த வழிப் பக்கம் நிறைய இரு சக்கர வாகனங்கள் நிற்பதும், கிளம்பும் வாகனத்துக்கு நிகராய் மீண்டும் அந்த இடங்களை நிரப்புவதுமென பரபரப்பாக இருந்தது. சந்தையின் உள்ளிருந்து வெளிவந்து வாகனங்களை நிமிர்த்துபவர்கள் தூக்கி வரும் காய்கறி மூட்டைகளை நோக்கும் போதே தெரிந்தது, நிச்சயம் அவர்கள் தங்கள் மளிகைக் கடைகளுக்காகத்தான் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் என்பது.
|
இணையத்தில் சுட்ட படம் |
நிற்க ஆரம்பித்த சில நிமிடங்களில் வேட்டியை மடித்துக் கட்டி, கக்கத்தில் பை இடுக்கிய அந்த மனிதர் என் கவனத்தை முழுதும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். சிறிது நேரத்தில் புரிந்தது, அங்கே நிற்கும் இருசக்கர வாகனங்களை கவனித்துக் கொண்டு அதற்கு தலா ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது. பெரும்பாலான நபர்களை அவருக்கு மிகுந்த பரிச்சயம் இருப்பது அவருடைய நடவடிக்கையில் புரிந்தது. வாகனங்களை நிறுத்தும் அனைத்து மனிதர்களிடமும் மிக இயல்பாக நட்பாக பேசிக் கொண்டேயிருந்தார்.
முன்பக்கமும் பின்பக்கமும் மூட்டை முடிச்சுகளோடு வண்டியைக் கிளப்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் மட்டுமே கொஞ்சம் கடிந்த நிலையில் பேசுவதைக் கவனிக்க முடிந்தது. ஒரு வழியாய் அந்த நபர் வண்டியோடு நகர்ந்த பிறகு, இன்னொருவரிடம் பேசியதிலிருந்து 47 நாட்களுக்கு இதுவரை 28 ரூபாய் மட்டுமே அந்த நபர் தந்திருப்பதாகவும், அதற்குதான் அந்த கடிந்த பேச்சு எனவும் புரிந்தது.
முகம் கூட கழுவாத, இலகுவான இரவு உடையோடு மேலே ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வெகு இயல்பாய் அருகாமைப் பெண்கள் கையில் ஒரு பையோடு உள்நுழைவதும், காய்கறிகளோடு கீரை, கறிவேப்பிலை வகைகள் பை நிறைந்திருக்க வெளியேறுவதுமென அதன் போக்கில் இயங்கி கொண்டிருந்தனர். பருமனான வயதுப் பெண்கள் உள்வளைந்த கால்களோடு இடவலமாய் அசைந்தசைந்து நகர்வதைப் பார்க்க கொஞ்சம் வேதனையாய் இருந்தது. நோய்வாய்ப்படும் முதுமை ஒரு நரகம்தான். கண்ணாடி அணிந்த சுருள்முடிப் பெண் அந்த அதிகாலை நேரத்திலேயே தன் அலைபேசியில் கலகலவென சப்தமாக சிரித்துக்கொண்டே கடந்தார்.
நடை பயிற்சிக்கு சென்ற மெதுமெது காலணிகளோடு, நகரத்தின் அடையாளம் தெரிந்த முக்கியஸ்தர்கள் சிலரும் காய்கறி வேட்டைக்கு உள்ளே செல்வதையும், கையில் தொட்டிலாடும் பருத்த ஒரு பிளாஸ்டிக் கேரி பேக்குடன் வெளியேறுவதையும் காண முடிந்தது.
கனக்கும் மூட்டைகளோடு வேகமாய் நடந்து வந்து, சாய்ந்து நிற்கும் வாகனத்தின் இருக்கைமேல் வைத்து மூச்சு வாங்கிக் கொண்டு, பெரும்பாலானோர் வாகன கவனிப்பாளரிடம் ”தீப்பெட்டி குடுண்ணா” என சிநேகமாய் கேட்டு, பீடியையோ, சிகரெட்டையோ பற்ற வைத்து, விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதிலேயே, புகையை மிக நிதானமாய் அனுபவித்து உள்ளிழுத்து சுயமாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்,. வாகன கவனிப்பாளரும் சிநேகச் சங்கிலியின் முடிச்சாய் “ஆமா, இன்னிக்கு வெங்காயம் எப்படி, தக்காளி எப்படி” என ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தார். சிற்சில நிமிடங்களுக்கென அவர்களுக்குள் நடக்கும் உற்சாகமான பேச்சு அதிகாலை வெயில் போல் கொஞ்சம் கதகதப்பாகவே இருந்தது.
வெளிச்சம் மிக அடர்த்தியாய் பரவத் தொடங்கியது. உழவர் சந்தையின் அந்தச் சுவரோரம் அதுவரை கவனிப்பில் சிக்காமல் உறங்கி கொண்டிருந்த அந்த ஆள் எழும்போதுதான் கவனத்தை ஈர்த்தான். வெறும் முப்பதடி தூரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த நபரை இது வரை எப்படி கவனிக்காமல் இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. எழுந்தவன் கசங்கிப்போய், கையில் தொடமுடியாத அழுக்கோடு கிடந்த தன் துணிகளை ஒருவாறு சுருட்டி வைத்தான். நிதானமாய் எழுந்து அருகில் கிடந்த தன் இரண்டு பாட்டில்களை எடுத்துக் கொண்டு உழவர் சந்தைக்குள் நுழைந்தான். தண்ணீர் பிடிக்கப் போகிறான் என்பதை உணர முடிந்தது. அணிந்திருந்த துணியின் வர்ணம் அழுக்கால் மூடிக் கிடந்தது. எண்ணை காணாத தலை காய்ந்த சக்கையாய் முள்முள்ளாய், தாறுமாறாய்க் கிடந்தது. மனிதர்களின் உலகத்திலிருந்து இன்னொரு வட்டத்திற்குள் எதன் பொருட்டோ ஒதுக்கப்பட்ட அல்லது ஒதுங்கிவந்த மனிதன் என்பது புரிந்தது. மனநிலை பிறழ்ந்து நகரத்தில் ஆங்காங்கே சுற்றித்திரியும், அடிக்கடி காணும் மனிதச் சித்திரங்கள் மனதுக்குள் வந்து போனது.
சிந்தனைகள் ஒரு மாதிரி இறுகிக் கொண்டிருக்கும் போது, ஒரு இரு சக்கர வாகனம் சீரான வேகத்தில் என்னைக் கடக்க, பட்டென ஒரு சத்தமும், என் கால்களில் ஏதோ ஈரமாய்ப்படுவதையும் உணர்ந்தேன். என்ன என குனிந்து பார்க்கும் போது மஞ்சள் வர்ணத்தில் குழம்பாய் பாதத்திலும் செருப்பிலும் வழிந்து கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் என்னவென்று தேட, யாரோ வீசியெறிந்த சாம்பார் பாக்கெட் பார்சல் அப்போதுதான் கடந்து சென்ற இரு சக்கர வாகனத்தின் புண்ணியத்தில் உடைந்து, அக்கம் பக்கம் தன் மூச்சை பரவவிட்டு உயிர் துறந்து கொண்டிருந்தது.
யாரை நோக, அதை அலட்சியமாய்ப் போட்டுவிட்டுப் போன புண்ணியவானையா?, மிகச் சரியாய் அதைக் கொலை செய்த இருசக்கர ஓட்டியையா? அல்லது அங்கே பராக்குப்பார்த்து நின்று கொண்டிருந்த என்னையா? என்ற பட்டிமன்றத்தின் இடைவேளையாய், அதை எப்படித் துடைக்கலாம் அல்லது கழுவத் தண்ணீர் குழாய் தென்படுகிறதா என எனக்குள் போராடிக் கொண்டிருந்த போது, காய்கறிப்பையை வண்டியின் இருக்கைமேல் வைத்துவிட்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டு மனைவி நின்று கொண்டிருந்தார்.
ஒரு திடுக்கிடலோடு நான் பார்த்ததே காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்!
”கால்ல என்னங்க அது”
உயிர் வடிந்து சாலையில் வதங்கிக் கிடந்த சாம்பார்ப் பையைக் காட்டினேன்.
தலையில் அடித்துக் கொண்டு “ஒரு நல்ல எடமாப்பார்த்து நிக்கக்கூடவா தெரியாது!?” என முனகியது, காதில் மிகச் சப்தமாகவே விழுந்தது.
அதுவரை அவதானித்த அத்தனை விசயங்களும் கீச்மூச்..கீச்மூச்வென எனக்குள் ரீவைண்ட் ஆகும் படமாய் வேகமாய் பின்னோக்கி ஓடத்துவங்கியது.
-0-